இன்று காலை பள்ளிக்கரணை அருகே ஒரு அடையாளம் தெரியாத பெண்ணின் பிணம் பாதி எரிந்த நிலையில் காணப்படுவதாக வந்த தகவலையடுத்து உடனடியாக செய்தி சேகரிப்பதற்காக காலை 11.30 மணியளவில் அந்த இடத்திற்க செல்கிறார் ஜெய்சங்கர்.
ஜெய்சங்கர் உடனடியாக தன்னடைய சக மின்னணு ஊடக சகோதரர்களுக்கும் இத்தகவலை தெரிவித்து விட்டு செல்லுகிறார். தன்னுடைய கேமரா மேனோடு, சம்பவ இடத்துக்கு விரைந்து செல்லுகிறார்.
ஜெய்சங்கர் பற்றி பத்திரிக்கையாளர்கள் மத்தியில் விசாரித்த பொழுது இவர் ஒரு சுறுசுறுப்பான பத்திரிக்கையாளர் என்பது தெரிய வந்தது. குற்றம் நடந்தது என்ற தகவல் வந்தால் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று செய்தி சேகரிக்கும் ஆர்வத்தோடு செல்லுவார் என்று கூறப் படுகிறது. மின்னணு ஊடகத்தில் மிகவும் துடிப்பான ஒரு பத்திரிக்கையாளர் என்று கூறப் படுகிறது.
இவர் கவர் செய்யும் ஏரியா சென்னைப் புறநகராக இருந்தாலும் காஞ்சிபுரம் வரை இவர் செய்தி சேகரித்துத் தருவதுண்டு என்று தகவல்கள் கூறுகின்றன.
இது போலவே இன்று காலை 11 மணிக்கு சென்னையை அடுத்த பள்ளிக் கரணையில் பாதி எரிந்த நிலையில் ஒரு பெண்ணின் பிணம் கிடப்பதாக வந்த தகவலை அடுத்து, தன்னுடைய சக பத்திரிக்கையாளர்களுக்குத் தகவல் தெரிவித்து விட்டு உடனடியாக சம்பவ இடத்துக்கு கிளம்பிச் சென்றிருக்கிறார்.
சம்பவ இடத்துக்கு இவர் செல்லும் போது தான் காவல்துறையினரும் சம்பவ இடத்துக்கு வந்திருக்கின்றனர். அந்த இடத்துக்கு மடிப்பாக்கம் உதவி ஆணையர் தங்கரத்தினம் வந்திருக்கிறார்.
காவல்துறையினர் வரும் முன்பே பத்திரிக்கையாளர்கள் சம்பவ இடத்துக்கு வந்ததை பார்த்த தங்கரத்தினம் கடும் கோபமடைந்துள்ளார்.
வழக்கமாகவே துடிப்பான பத்திரிக்கையாளர்கள் யாரைப் பார்த்தாலும் காவல்துறையினருக்கு கோபம் ஏற்படுவது இயல்பு. தங்களிடம் தலையை சொறிந்து கொண்டு கவர் வாங்கும் பத்திரிக்கையாளர்களை பார்த்தால் காவல்துறையிருக்கு அன்பு பீறிட்டுக் கொண்டு வரும். ஆனால், சுதந்திரமாக செய்தி போடும் பத்திரிக்கையாளர்களைப் பார்த்தால் பற்றிக் கொண்டு வரும்.
அந்த வகையில் ஏற்கனவே துடிப்பாக இருந்த பத்திரிக்கையாளரான ஜெய்சங்கரைப் பார்த்ததும் கடும் கோபம் அடைந்த தங்கரத்தினம் வீடியோ எடுக்கக் கூடாது என்று மிரட்டுகிறார். ஜெய்சங்கர் சார் நாங்க எங்க கடமையத் தான் செய்யுறோம் என்று கூறியதற்கு மீண்டும் மிரட்டியுள்ளார் தங்கரத்தினம்.
ஒரு கட்டத்தில் வார்த்தைகள் தடித்து ஏக வசனத்தில் தங்கரத்தினம் பேசத் தொடங்க, ஜெய்சங்கர் “சார் நான் கமிஷனர் கிட்ட புகார் செய்யுவேன்“ என்று கூறியுள்ளார். தங்கரத்தினம் “எவன் கிட்ட வேணாலும் போடா மயிராண்டி“ (புறநகர் கமிஷனர் கவனிக்கவும்) என்று கூறியுள்ளார். இவ்வாறு தடித்த வார்த்தைகளால் பேசியதோடு மட்டுமல்லாமல் ஜெய்சங்கரை அடிக்கவும் செய்துள்ளார்.
அடித்து விட்டு, மீண்டும் “XXXX மவனே. யாருகிட்ட வேணாலும் போயி சொல்லுடா“ என்று மீண்டும் சொல்லி விட்டு, “லத்திய எடுடா. இவன ஒரு வழி பண்ணலாம்“ என்று கூறியுள்ளார். அருகில் இருந்த ஒரு காவல் ஆய்வாளர் தடுத்தும் மீண்டும் தாக்கியுள்ளார்.
தங்கரத்தினம் 79 நேரடி உதவி ஆய்வாளராக தேர்ந்தெடுக்கப் பட்டவர். இவர் இந்தப் பத்திரிக்கையாளரைத் தாக்கியது ஒரு சாதாரண நிகழ்வாக எடுத்துக் கொள்ள முடியாது. நான் கமிஷனரிடம் புகார் கொடுப்பேன் என்று கூறியும், அவதூறான வார்த்தைகளார் திட்டி, அவரை தாக்கியது “தான்“ என்ற அகந்தை பிடித்து அலையும் ஒரு மனிதராகவே இவரைக் காட்டுகிறது.
ஒரு பத்திரிக்கையாளர் என்று சொல்லியும் ஜெய்சங்கர் தாக்கப் பட்டிருக்கிறார் என்றால், ஒரு சாதாரண மனிதன் அந்த இடத்தில் இருந்திருந்தால் எப்படித் தாக்கப் பட்டிருப்பான் என்பதை சிந்தித்துப் பாருங்கள். தாக்கப் பட்டிருப்பது மட்டுமல்லாமல், காவல்துறையை கடமையைச் செய்ய விடாமல் தடுத்தது என்று ஒரு வழக்கு போடப்பட்டு அந்த நபர் இந்நேரம் புழல்சிறையில் இருப்பார்.
இந்தச் சம்பவம், பத்திரிக்கையாளர் மட்டத்தில் தீ போல பரவி, சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் மாலை 5 மணிக் கூட்டப் பட்ட கூட்டம், சம்பந்தப் பட்ட உதவி ஆணையர் உடனடியாக பணி இடை நீக்கம் செய்யப் பட வேண்டும் என்று தீர்மானம் இயற்றியது. தவறினால், புறநகர் ஆணையர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப் பட்டது.
இந்த கூட்டத்தின் முடிவில், சில மூத்த பத்திரிக்கையாளர்கள் தலைமைச் செயலாளர் மாலதியையும், உள்துறை செயலாளர் ஞானதேசிகனையும் தொடர்பு கொண்டு பேசிய போது, அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் அளித்துள்னனர்.
இந்தப் பதிவு எழுதப் படும் நேரத்தில், சேலையூர் உதவி ஆணையர், மடிப்பாக்கம் சரகத்தை கூடுதல் பொறுப்பாக கவனிக்க வேண்டும் என்றும், தங்கரத்தினம் உடனடியாக டிஜிபி அலுவலகத்தில் ரிப்போர்ட் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப் பட்டுள்ளது.
சம்பந்தப் பட்ட காவல்துறை உதவி ஆணையாளர் மாற்றப் பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப் பட்டது, பத்திரிக்கையாளர்களின் ஒற்றுமைக்கும் போராட்டத்துக்கும் கிடைத்த வெற்றியாகவே சவுக்கு பார்க்கிறது.
ஒரு காவல்துறை அதிகாரிக்கு ஒரு பத்திரிக்கையாளரை தாக்க இப்படி ஒரு துணிவு வருகிறதென்றால், உள் துறையை கையில் வைத்திருக்கும் நீரோ மன்னன் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார் என்ற துணிச்சல் தானே தவிர வேறு ஒன்றும் இல்லை.
இந்த சம்பவத்தில், ஜீ தொலைக்காட்சியில் பணியாற்றும் சக ஊழியர்களின் பணி மகத்தானதும் பாராட்டத்தக்கதும் ஆகும்.
அதே நேரத்தில் மக்கள் தொலைக்காட்சி என்ற ஊடகத்தின் செய்தி ஆசிரியர் கோமல் அன்பரசன் நடந்து கொண்ட விதமும், இந்த பத்திரிக்கையாளர் தாக்கப் பட்டதை செய்தியாகக் கூட போடாமல் இருட்டடிப்புச் செய்தி விஷயமும் கடுமையாக கண்டிக்கத் தக்கது.
ஜெய்சங்கர் தந்த பல்வேறு செய்திகளை பயன் படுத்திக் கொண்ட மக்கள் தொலைக்காட்சி நிறுவனம், அவர் தாக்கப் பட்ட போது, அதைக் கண்டு கொள்ளாமல் விட்டது மட்டுமல்லாமல், இது தொடர்பாக நடந்த கூட்டத்திற்கு மக்கள் தொலைக்காட்சியில் பணியாற்றும் செய்தியாளர்களை செல்லக் கூடாது என்று தடுத்தது, கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.
அரசன் எவ்வழியோ அவ்வழி தானே மக்கள். தமிழ்க் குடிதாங்கி எப்படி ஒரு நன்றி கெட்ட மனிதரோ, அவரால் நியமிக்கப் பட்ட அவரது செய்தி ஆசிரியரும் அப்படித் தானே இருப்பார்.
இந்தத் தாக்குதல் சம்பவம் ஒரு உண்மையை பட்டவர்த்தனமாக உணர்த்தியுள்ளது.
தொழிலாளி தொழிலாளிதான். முதலாளி, முதலாளிதான். தொழிலாளர் ஒற்றுமை மட்டுமே, முதலாளி வர்க்கத்திற்கு சாவு மணி. இதைப் புரிந்து கொண்டு, பத்திரிக்கையாளர்கள், தங்களுக்குள் உள்ள மாச்சரியங்களை மறந்து ஒரு பலம் வாய்ந்த தொழிற்சங்கத்தை கட்ட வேண்டும் என்பதே சவுக்கின் விருப்பம்.