சாதிக் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனதைப் பற்றி பல்வேறு விவாதங்களும், கேள்விகளும், நம் அனைவரது இதயத்திலும் தொக்கிக் கொண்டு நிற்கிறது. இந்தக் கேள்விகளுக்கு விடை தெரியலாம், தெரியாமலும் போகலாம். சாதிக் மரணம் பற்றிய தனிக் கட்டுரை விரைவில் வரும். நேரக்குறைவின் காரணமாகவே எழுத இயலவில்லை.
ஆனால், இப்போது சாதிக்கிடம் காரியம் சாதித்தவர்களைப் பற்றிய தகவல் வந்துள்ளதால், அதை சவுக்கு வாசகர்களோடு உடனடியாக பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசரம் காரணமாக உடனடியாக இக்கட்டுரை எழுதப் படுகிறது. சாதிக் பாட்சா, சிறிய அளவில் ரியல் எஸ்டேட் செய்து வந்ததும், பிறகு ஆண்டிமுத்து ராசா அமைச்சராக ஆன பிறகு, அதிகார வர்க்கம் அவருக்கு வேண்டிய காரியங்களை செய்து கொடுத்ததும், சவுக்கு வாசகர்கள் அறிந்ததே.
அதிகார வர்க்கம், ஆதாயம் இல்லாமல் காரியங்களை செய்து கொடுத்து விடுமா என்ன ? ரியல் எஸ்டேட் தொழில் என்றாலே, கட்டப் பஞ்சாயத்து, காவல்துறையை விட்டு மிரட்டுவது, ரவுடிகளை பயன்படுத்துவது என்பதெல்லாம் செய்யாமல் செய்ய முடியாது. குறுகிய காலத்திற்குள், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வளைத்துப் போட்டு, மிகப் பெரிய தொழில் அதிபரான சாதிக், காவல்துறையின் உதவி இல்லாமல் இதை சாதித்திருக்க முடியுமா என்றால் நிச்சயமாக இல்லை.
சாதிக்கின் தொழில் பெரம்பலூரோடு நிற்கவில்லை. பெரம்பலூர் தாண்டி, தமிழகமெங்கும் விரிவுபடுத்தப் பட்டதோடல்லாமல், வெளிமாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் பரவிக் கிடக்கிறது.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் நிலத்தை அபகரிக்க சாதிக்குக்கு, தமிழக காவல்துறையில் பல உயர் உயர் அதிகாரிகள் உதவி செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு கைமாறாக அத்தனை உயர்அதிகாரிகளுக்கும், சாதிக் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வீட்டு மனைகளையும், நிலங்களையும் வாங்கிக் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த உயர் உயர் அதிகாரிகள்…..
1. அனில் மேஷ்ராம் ஐஏஎஸ் கலெக்டர்
2. ஜெயந்த் கே. முரளி ஐபிஎஸ் ஐஜி
3. எம்.ராமசுப்ரமணியம் ஐபிஎஸ் ஐஜி
4. வி.ஏ.ரவிக்குமார் ஐபிஎஸ் ஐஜி
5. எம்.பாண்டியன் ஐபிஎஸ் எஸ்.பி
6. ப்ரேம் ஆனந்த் சின்ஹா ஐபிஎஸ் எஸ்.பி
7. ஐ.ராசா, ஐபிஎஸ் கூடுதல் டிஜிபி
8. பொன்.மாணிக்கவேல், ஐபிஎஸ் டிஐஜி
9. சங்கர் ஜிவால், ஐபிஎஸ் ஐஜி
10. ஒட்டக் கூத்தர் என்கிற ஜாபர் சேட் கூடுதல் டிஜிபி
எஸ்பி, ஐஜி, டிஐஜி, கூடுதல் டிஜிபின்னு பாரபட்சம் பாக்காமல் கொடுத்திருக்கிறார் சாதிக். நல்லவேளை, சாதிக் இப்போது உயிரோடு இல்லை. உயிரோடு இருந்திருந்தால், கண்ணாயிரம், சாரங்கன், சேஷசாயி, சிவனாண்டி, லத்திக்கா சரண், துக்கையாண்டி, சுனில் குமார், ப்ரமோத் குமார், துரைராஜ், பெரியய்யா, சத்தியமூர்த்தி, பன்னீர்செல்வம், ஆசியம்மாள் என்று ஒரு பெரிய படையே கிளம்பியிருக்கும்.
இப்போதும் சொல்ல முடியாது…. சாதிக்கின் பிணத்தில் ஏதாவது ஒளித்து வைக்கப் பட்டிருக்கிறதா என்று தேடினாலும் தேடுவார்கள். ஆனால், இத்தனை பேருக்கும் லஞ்சமாக இடம் கொடுத்தும், இதை விட அதிகமானவர்களுக்கு லஞ்சமாக பணம் கொடுத்தும், யாரும் சாதிக்குக்கு, நெருக்கடி நேரத்தில் உதவி செய்ய முன்வரவில்லை.
சாதிக்கிடம் இப்படி பிச்சை எடுத்தவர்கள் அத்தனை பேரும், சாதிக் சிபிஐ ஆல் விசாரிக்கப் படுகிறார் என்று அறிந்த உடனேயே, ஓடிப் போய் ஒளிந்து கொண்டார்கள்.
ஒருவர் கூட உதவவில்லை. உதவாவிட்டாலும் பரவாயில்லை… ஆறுதலாக ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை.
இந்த அத்தனை அதிகாரிகளையும், சிபிஐ விசாரித்து, சாதிக்கிடம் வீட்டு மனையும் நிலமும் பெற்றவர்களிடம் இருந்து அதை பறிமுதல் செய்து, அந்த இடங்களை அரசுக் கணக்கில் சேர்க்க தேவையான நடவடிக்கைகளை செய்ய வேண்டும் என்று சவுக்கு சிபிஐ அதிகாரிகளை கேட்டுக் கொள்கிறது.
காங்கிரஸ் கட்சியின் கைப்பாவையாக சிபிஐ செயல்பட்டாலும், சிபிஐ அதிகாரிகள், தங்களுக்கு உள்ள, அதிகாரத்திற்குள், இந்த அதிகாரிகளின் புகார்களை விசாரிப்பதில் ஒன்றும் சிரமம் இருக்காது என்றே சவுக்கு கருதுகிறது. ராமசுப்ரமணியத்தையோ, ஜாபர் சேட்டையோ, சிபிஐ விசாரித்தால், நிச்சயம் அதைப்பற்றி சோனியாக கவலைப் படமாட்டார். இன்னும் சிபிஐ அதிகாரிகள் மீது சவுக்கு வைத்திருக்கும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே இந்த கோரிக்கையை விடுக்கிறது.