இந்தக் கட்டுரையை தொடங்குவதற்கு முன், சவுக்கு தனது வாசகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ள விரும்புகிறது. எளிமையின் உதாரணம் எலிப்பி தர்மாராவ் என்று ஒரு கட்டுரையை சவுக்கு எழுதியிருந்தது.
பகட்டும் படோடாபமும் அதிகமாக உள்ள நீதிபதிகள் மத்தியில் எளிமையாக ஒரு நீதிபதி சொந்தக் காசை செலவு செய்து, திரைப்படத்திற்கு செல்கிறாரே என்று உணர்ச்சி வசப்பட்டு எழுதப் பட்டதே அந்தக் கட்டுரை. அவர் தானாக, யார் தயவும் இல்லாமல் சென்று திரைப்படம் பார்த்தது உண்மை தான் என்றாலும், அவரைப் பாராட்டியதற்காக சவுக்கு தனது வாசகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறது. ஏனென்றால், அந்தக் கட்டுரை வெளி வந்ததற்கு பிறகு, விபரமறிந்த உயர் அதிகாரிகள் மட்டத்திலிருந்து சவுக்குக்கு கடும் கண்டனங்கள். கடும் எதிர்ப்புகள். அவர்கள் கூறிய தகவல்களைக் கேட்டு, அதிர்ந்து போனதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் ? இரு அதிகாரிகள் நேரில் அழைத்து தங்கள் கண்டனங்களை பதிவு செய்தார்கள்.
இந்தக் கட்டுரை எழுதுவதற்கான தேவை, நேற்று, சென்னை உயர்நீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பு.
தானாக முன்வந்து ஒரு வழக்கை உயர்நீதிமன்றம் நேற்று எடுத்திருந்தது. இந்த வழக்கை எடுத்த டிவிஷன் பென்ச்சில் அமர்ந்திருந்த நீதிபதிகள் எலிப்பி தர்மாராவ் மற்றும் எம்.வேணுகோபால். இந்த வழக்கை நீதிபதிகள் எடுத்தது, கருணாநிதி தேர்தல் ஆணையத்தை கண்டித்து வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், இந்த வழக்கை நீதிமன்றம் எடுத்திருக்கிறது. கருணாநிதியின் கேள்வி அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படையையே ஆட்டி வைக்கும் அளவுக்கு சில விவாதங்களை எழுப்புவதாக நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்திருந்தனர்.
நீதிபதிகளின் தீர்ப்புக்கு போவதற்கு முன்பாக, கருணாநிதி அப்படி என்னதான் திருவாய் மலர்ந்தருளினார் என்பதை பார்த்து விடுவோம்.
“14-வது சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கான பணிகளில் தமிழகத்திலே உள்ள அனைத்து கட்சிகளும் ஈடுபட்டுள்ளன. வேட்பாளர்களை அறிவித்து, வேட்புமனு தாக்கல் செய்வதும் தொடங்கிவிட்டது. ஏப்ரல் 13-ம் தேதியன்று தமிழ்நாட்டு மக்கள், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு தங்களை ஆள வேண்டியவர் யார் என்பதைத் தேர்ந்தெடுக்க தங்களது வாக்குகளை அளிக்கவிருக்கிறார்கள்.
இதுவரை நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் வாக்குப்பதிவு முடிவுற்ற இரண்டொரு நாட்களில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிடும். ஆனால் தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத ஒரு முடிவாக ஏப்ரல் 13-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற போதிலும், மே 13-ம் நாள்தான் வாக்குகள் எண்ணிக்கை நடைபெறவுள்ளது. எதற்காக இந்த இடைவெளி? ஏன் ஒரு மாதத்துக்கு முன்பாகவே அரசியல் கட்சிகளுக்கு நேரம் கொடுக்காமலே அவசரம் அவசரமாக தேர்தலை நடத்துகிறார்கள்?
எல்லாம் தேர்தல் ஆணையத்தின் முடிவு. அவர்களுக்கு எதிராக யாரும் வாய் திறக்கக்கூடாது. அரசியல் கட்சிகள் சார்பில் வாக்குப்பதிவு செய்யும் நாளை சற்று தள்ளிவைக்க வேண்டுமென்ற கோரிக்கை வைக்கப்பட்டபோது தேர்தல் ஆணையம் அதனை ஏற்க முடியாதென்று தள்ளிவிட்டது.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவு என்று சொல்லி மற்றும் ஒரு கொடுமையும் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டிலே கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றது. தமிழ்நாட்டில் யாரும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பணம் எடுத்துச் செல்லக்கூடாது. இதைப்பற்றி அன்றாடம் ஏடுகள் ஒவ்வொரு செய்தியைத் தாங்கி வெளிவருகின்றன. ஏன், மாலை இதழ் ஒன்றில் வந்த செய்தியிலே கூட- “தேர்தல் கமிஷன் கெடுபிடி- வாகன சோதனையில் “காமெடி” காட்சிகள்- ஆடு, கொலுசுகளைக்கூட விடவில்லை” என்று கொட்டை எழுத்துகளில் செய்திகள் வந்துள்ளன.
அந்த செய்தியில் “தேர்தல் என்றாலே தெருவுக்கு தெரு, வீதிக்கு வீதி வேட்பாளர்கள் மற்றும் கட்சிக்காரர்கள் மாறிமாறி கார்களில் வந்து பிரசாரம் செய்தபடி இருப்பார்கள். எங்கு பார்த்தாலும் ஒலிபெருக்கியில் பிரசார சத்தம் காதைப் பிளந்த வண்ணம் இருக்கும். அரசு சுவர்கள், தனியார் சுவர்களில் சின்னங்கள் தேர்தல் வாசகங்கள் எழுத முன்கூட்டியே இடம்பிடித்து விடுவார்கள். வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதும் பெயர் எழுதுவது, வாசகம் எழுதுவது மும்முரமாக இருக்கும். தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன்பே திருவிழா போல ஊரெங்கும் களைகட்டிவிடும்.
ஆனால் இந்த தேர்தலில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தேர்தல் கமிஷன் கிடுக்கிப்பிடி உத்தரவுகளைப் போட்டுள்ளது. சுவர்களில் வரையப்பட்டிருந்த சின்னம், தலைவர்களது படங்கள் எல்லாம் அழிக்கப்பட்டுவிட்டன. சென்னை நகரில் ஒரு இடத்தில் கூட சின்னத்தைப் பார்க்க முடியவில்லை. சிலைகளைக்கூட விட்டுவைக்கவில்லை.
அண்ணா, காமராஜர், ராஜீவ்காந்தி, எம்.ஜி.ஆர். சிலைகளையும் தேர்தல் முடியும் வரை மூடவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் சிலைகளை துணியால் சுற்றி மூடி வைத்துள்ளனர். கொடி தோரணங்களும் கண்ணில் படவில்லை. பொது இடங்களில் இருந்த கட்சி கொடி கம்பங்களும், கொடிகளும் அகற்றப்பட்டு வருகின்றன. போஸ்டர்கள், டிஜிட்டல் பேனர்களும் எங்கும் காணப்படவில்லை. தேர்தலுக்கு முன்பே தொடங்கும் ஆரவாரம் தம்பட்டம் எதுவும் இன்றி களை இழந்த கோவில் விழா போல் காட்சி அளிக்கிறது.
இதற்கெல்லாம் மேலாக வாகன சோதனை; வியாபாரிகளையும், பல்வேறு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களையும் முடக்கிப்போட்டு விட்டது. நகைக்கடைக்காரர்கள் அல்லது தொழில் நிறுவனங்கள் நடத்துவோர் அன்றாடம் வசூல் ஆகும் வியாபார பணத்தை வங்கியில் கட்ட எடுத்துச் செல்வார்கள். இப்போது அவர்கள் உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச்செல்ல முடியவில்லை. வாகன சோதனையில் சிக்கினால் அதிகாரிகள் பறிமுதல் செய்து விடுகிறார்கள். இதுபோல் நிலம் வாங்க- விற்க எடுத்துச் செல்லும் பணமும் பறிமுதல் செய்யப்படுகிறது. இதுவரை நடந்த சோதனையில் எந்த அரசியல் பிரமுகரிடமும் பணம் சிக்கவில்லை என்பதுதான் வேடிக்கை” என்று பிரசுரிக்கப்பட்டுள்ளது.
மாலை இதழிலேயே இவ்வாறு செய்தி வந்திருக்கிறது என்றால் இவை அனைத்தும் உண்மை. தேர்தல் ஆணையத்தின் பெயரால் என்னென்ன நடைபெறுகின்றன என்பதைத் தான் அந்த இதழ் தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் வாகன சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 29-ந் தேதியன்று கடை அடைப்பு நடத்த வணிகர்கள் முடிவு செய்திருப்பதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா அறிக்கை கொடுத்திருக்கிறார்.
அவர் கொடுத்துள்ள அறிக்கையில் தேர்தல் ஆணைய உயரதிகாரிகள் 22-ம் தேதிக்குள் அவர்களை அழைத்துப்பேசி இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டுமென்றும், இல்லாவிட்டால் 24-ம் தேதி வணிகர் சங்க பிரதிநிதிகள் ஒன்று கூடி சென்னையில் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என்றும், அதன் பின்னரும் இந்த பிரச்சினை நீடித்தால் 29-ம் தேதி கடையடைப்பு நடத்துவார்கள் என்றும், அதற்கும் பலன் இல்லாவிட்டால் வணிகத்துறையினர் தேர்தலையே புறக்கணிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.
இதிலே இன்னும் வேடிக்கை! வாகன சோதனையில் ஆடு, கோழிகளைக் கூட விட்டுவைக்கவில்லை. வாக்காளர்களுக்கு பிரியாணி போடுவதற்காக மொத்தமாக கொண்டு போவதாக கற்பனை செய்து கொண்டு ஆடுகளையும், கோழிகளையும் ஏன் பீடிகளையும் கூட பறிமுதல் செய்துள்ளார்கள். விற்பனைக்காக எடுத்துச்சென்ற கொலுசுகளையும், நகைகளையும் கைப்பற்றியிருக்கிறார்கள். மதுரையில் ஒரு அரசியல் கட்சியினரின் வெங்காய கிடங்கில் பணம் பதுக்கி வைத்திருப்பதாகக் கூறி சோதனை நடத்தியிருக்கிறார்கள்.
தேர்தல் ஆணையத்தின் இந்த கெடுபிடிகளை எதிர்த்து தேனி மாவட்டம், ஜக்கம்பட்டியைச் சேர்ந்த தில்லை நடராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றையே தாக்கல் செய்துள்ளார்.
அதில் தேசிய நெடுஞ்சாலைகளில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் வாகனங்களைச் சோதனையிட்டு பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர், இதுபோல பணத்தை பறிமுதல் செய்ய தேர்தல் கமிஷனுக்கு சட்டப்படி அதிகாரம் இல்லை, திருமணத்துக்கு நகை வாங்கி வந்தாலும் அதையும் பறிமுதல் செய்கிறார்கள். இதனால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். நீதிபதிகள் வழக்கு விசாரணையை தள்ளிவைத்திருக்கிறார்கள். விசாரணை தொடருகிறது.
தேர்தல் ஆணையம் தனது செயல்பாட்டினை இந்த அளவோடு நிறுத்திக்கொள்ளவில்லை. இதுவரை எந்த தேர்தலிலும் இல்லாத அளவிற்கு போலீஸ் டி.ஜி.பி. முதல் மாவட்ட கலெக்டர்கள், உயர் போலீஸ் அதிகாரிகள் பல பேரை தேர்தல் கமிஷன் மாற்றம் செய்து ஆணை பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் நேர்மையாக பணிபுரிந்து கொண்டிருந்த பல அதிகாரிகளை அ.தி.மு.க.வினர் குற்றம்சாட்டினார்கள் என்ற ஒரே காரணத்திற்காக அதிலே உண்மை இருக்கிறதா என்பதைப் பற்றிக்கூட விசாரிக்காமல்- தமிழக அரசிடம் கேட்காமல்கூட தன்னிச்சையாக மாற்றி ஆணை பிறப்பித்திருக்கிறார்கள். அதிகாரிகள் அளவிலே மட்டுமல்ல, மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திலே சாதாரணமாக பணியாற்றும் மக்கள் தொடர்பு அதிகாரிகளைக்கூட மாறுதல் செய்து உத்தரவிட்டிருக்கிறார்கள்.
இன்று காலையில் வெளிவந்த செய்தியில் கூட, “தற்காலிக அலுவலகங்கள், பிரசார வாகனங்களில் கட்சிக்கொடி கட்டுவதற்கும், தேர்தல் அதிகாரியின் அனுமதி பெற வேண்டும்- தேர்தல் ஆணையத்தின் கூடுதல் விதிமுறைகள் அமலுக்கு வந்தன” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள செய்தியில், “தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தேர்தல் ஆணையம் தினமும் புதிது புதிதாக வெளியிட்டு வரும் உத்தரவுகளினால் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் பிரசாரத்தை எப்படி தொடங்குவது, செலவு கணக்கை எப்படி காட்டுவது என்று தெரியாமல் விழிபிதுங்கிய நிலையில் காணப்படுகிறார்கள். இந்த நிலையில் தேர்தல் ஆணையம் கூடுதல் விதிமுறைகளை அறிவித்துள்ளது. இந்த விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது” என்று எழுதி தேர்தல் ஆணையத்தின் கூடுதல் கெடுபிடிகள் எல்லாம் கூறப்பட்டுள்ளன.
தேர்தல் ஆணையம் இந்த முறை இந்த அளவிற்கு அதிக கெடுபிடிகள் செய்ய என்ன காரணம்? தேர்தல் ஆணையம் கெடுபிடியில் ஈடுபட்டிருப்பதாக நாம் குற்றம்சாட்டவில்லை. நாளேடுகள் பல அதைப்பற்றி அன்றாடம் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன.
அதைப்பற்றி தேர்தல் ஆணையம் ஏதாவது கவலைப்படுகிறதா? “மங்கை சூதகமானால் கங்கையில் மூழ்கலாம் – கங்கையே சூதகமானால் எங்கே மூழ்குவது?” என்று தேவர் திருமகன் அடிக்கடி கூறிய பழமொழிதான் நினைவிற்கு வருகிறது!” என்று முதல்வர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டிருந்தார்.
“தேர்தல் ஆணையத்தின் இந்த கெடுபிடிகளை எதிர்த்து தேனி மாவட்டம், ஜக்கம்பட்டியைச் சேர்ந்த தில்லை நடராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றையே தாக்கல் செய்துள்ளார்.” என்று கருணாநிதி தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியிருப்பதிலேயே உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர் யாருடைய தூண்டுதலால் வழக்கு தொடுத்துள்ளார் என்பது தெரிய வரும்.
தமிழ்நாட்டில் நேர்மையாக பணியாற்றிக் கொண்டிருந்த அதிகாரிகளை தேர்தல் ஆணையம் மாற்றி விட்டதாம். யார் அந்த நேர்மையான அதிகாரிகள்… ? லத்திக்கா சரண், ஜாபர் சேட், போன்ற கோபாலபுரத்து கோமான்களை மாற்றியது தவறாம். தமிழக அரசை கலந்தாலோசிக்க வேண்டுமாம். தேர்தல் அறிவிப்பு வந்த அன்றே, தமிழக அரசுக்கு எவ்வித முடிவும் எடுக்க உரிமை இல்லை என்றால் அரசு என்ற ஒன்று எங்கே இருக்கிறது ?
சரி, இப்போது சென்னை உயர்நீதிமன்றம் கண்டு பிடித்த, அந்த அரசியல அமைப்புச் சட்டம் தொடர்பான கேள்விகளை பார்ப்போம்.
அனைத்து தரப்பினரையும் கலந்தாலோசிக்காமல், வாக்குப் பதிவுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் நீண்ட நெடிய இடைவெளி இருப்பது போல தேர்தல் தேதியை நிர்ணயிக்க தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இருக்கிறதா ?
உச்ச நீதிமன்றமே, சரி என்று சொன்ன ஒரு டிஜிபியின் நியமனத்தை, மாநில அரசை கலந்தாலோசிக்காமல், தன்னிச்கையாக மாற்ற முடியுமா ?
நிலம் வாங்குவதற்கும், மற்ற விவகாரங்களுக்கும், நியாயமான காரணங்களுக்காகவும், பணம் எடுத்துச் செல்பவர்களை தேர்தல் விதிகள் என்ற பெயரில், சோதனையிட்டு பணத்தை பறிமுதல் செய்வதற்கு தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளதா ?
இதுதான் அந்த அரசியல் அமைப்புச் சட்டத்தையே ஆட்டி வைக்கும் கேள்விகள். இந்த கேள்விகள் சரியா இல்லையா என்பதை பார்க்கும் முன்பாக, இந்த டிவிஷன் பென்ச்சுக்கு இது தேர்தல் தொடர்பான வழக்கை விசாரிக்க அதிகாரம் இருக்கிறதா என்பதை பார்ப்போம்.
மொஹிந்தர் சிங் கில் என்பவர் தொடுத்த வழக்கில், கிருஷ்ணய்யர் தலைமையிலான உச்ச நீதிமன்ற ஐந்து உறுப்பினர் கொண்ட அரசியல் அமைப்பு அமர்வு இது போன்ற வழக்குகள் குறித்து ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது.
Wherein Hon’ble V.R. Krishna Iyer, J in his usual prosaic style speaking on behalf of his esteemed colleagues at the Bench, Hon’ble M.H. Beg, Hon’ble P.N. Bhagwati, Hon’ble P.K. Goswami and Hon’ble P.N. Shinghal, JJ, laid down the following principles in paragraph – 91 of the report :–
“1(a) Article 329(b) is a blanket ban on litigative challenges to electoral steps taken by the Election Commission and its officers for carrying forward the process of election to its culmination in the formal declaration of the result (emphasis ours) (b) Election, in this context, has a very vide connotation commencing from the Presidential notification calling upon the electorate to elect and culminating in the final declaration of thereturned candidate.
2(a) The Constitution contemplates a free and fair election and vests comprehensive responsibilities of superintendence, direction and control of the conduct of elections in the Election Commission. This responsibility may cover powers, duties and functions of many sorts, administrative or other, depending on the circumstances.
It was further explained in the concluding portion of paragraph-
121 of the report:
“… Even if it is a wrong order it does not cease to be an order passed by a competent authority charged with the conduct of elections with the aim and object of completing the elections although that is not always decisive, the impugned order itself shows that it has been passed in the exercise of power under Art. 324(1) and Section 153 of the Act. That is also the correct position. Such an order, relating, as it does, to election within the width of the expression as interpreted by this Court, cannot be questioned except by an election petition under the Act.”
இந்தத் தீர்ப்பின் சாரம் என்னவென்றால், தேர்தலை நியாயமாக நடத்துவதற்கு தேர்தல் ஆணையத்திற்கு எல்லாவித அதிகாரங்களும் உண்டு. அதில் நீதிமன்றங்கள் தலையிடல் ஆகாது. மேலும், தேர்தல் ஆணையம் பிறப்பித்த ஒரு உத்தரவு தவறான உத்தரவே ஆனாலும், அது அரசியல் அமைப்புப் பிரிவு 324 (1)ன் கீழ் பிறப்பிக்கப் பட்டிருப்பதால், நீதிமன்றங்கள் அந்த உத்தரவை கேள்விக்குள்ளாக்க முடியாது. தேர்தல் வழக்காக, தேர்தல் முடிந்த பிறகு மட்டுமே விசாரிக்க முடியும்.
அரசியலமைப்புச் சட்டத்தில் இது போன்ற வரையறைகளை விதித்ததற்கான காரணம், ஒவ்வொரு தேர்தலிலும் யாராவது ஒருவர் நீதிமன்றம் சென்று வழக்கு தொடர்ந்தால், தேர்தலை எப்படி நடத்துவது ? அதற்காகத் தான், தேர்தல் முடிந்தவுடன் அது தொடர்பான வழக்குகளை விசாரிக்க வழிவகை செய்யப் பட்டுள்ளது. அம்பேத்கர் திரைப்படத்தை நீதிமன்றம் சென்று பார்த்த எலிப்பி தர்மாராவ், அவர் உருவாக்கிய அரசியல் அமைப்புச் சட்டத்தை மதிக்காதது, துரதிர்ஷடமே..
உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய பென்ச் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பு சென்னை உயர்நீதிமன்றத்தை கட்டுப் படுத்துமா படுத்தாதா ?
இதை விட்டு விடுவோம். சமீபத்தில், தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப் பட்டிருந்த ஒரு பொதுநல வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அடங்கிய டிவிஷன் பென்ச், தேர்தலை தள்ளி வைக்க மறுத்துள்ளது குறிப்பிடத் தகுந்தது. தேர்தல் தொடர்பான ஒரு வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அடங்கிய டிவிஷன் பென்ச் தள்ளுபடி செய்த பிறகு, அதே தேர்தல் தொடர்பாக வேறு காரணங்களுக்காக, தானாக முன்வந்து அதே நீதிமன்றத்தின் மற்றொரு டிவிஷன் பென்ச், அதுவும், தலைமை நீதிபதி விடுப்பில் இருக்கும் போது எடுத்து, தீர்ப்பு வழங்கியிருப்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. சவுக்கின் நினைவு சரியாக இருக்குமானால், இதற்கு முன், எலிப்பி தர்மாராவ் தானாக முன் வந்து எடுத்த வழக்கு, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னால். உயர்நீதிமன்ற ஊழியர்களுக்கு, ஊதிய நிலுவை தொடர்பானது. அதற்கு பிறகு, இந்த வழக்கு தான். இந்த வழக்கை எடுத்த அதே நாளன்று தலித்துகள் நிலம் தொடர்பாக. தலித்துகள் நிலம் அபகரிக்கப் பட்டது தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் வந்த செய்தியை ரிட் மனுவாக எடுத்துக் கொண்டார். இந்த ரிட் மனுவும், தேர்தல் ஆணைய தடை உத்தரவை சரி செய்வதற்காகவோ என்றே தோன்றுகிறது. இதே போல 15 நாட்களுக்கு முன்பாக, இதை விட பெரிய செய்தியாக பரலிப்புதூர் கிராமத்தில் 82 தலித்துகளின் குடிசை எரிக்கப் பட்ட செய்தி, அதே இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் அரைப் பக்கத்துக்கு மேல், புகைப்படங்களோடு வெளி வந்திருந்த செய்தி நீதிபதி எலிப்பி தர்மாராவ் கண்களுக்கு ஏன் தெரியாமல் போய் விட்டது என்பது தெரியவில்லை.
இப்போது எலிப்பி தர்மாராவ் அடங்கிய அமர்வு எழுப்பியுள்ள கேள்விகளை பார்ப்போம்.
அனைத்து தரப்பினரையும் கலந்தாலோசிக்காமல், வாக்குப் பதிவுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் நீண்ட நெடிய இடைவெளி இருப்பது போல தேர்தல் தேதியை நிர்ணயிக்க தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இருக்கிறதா ?
தேர்தலை நடத்துவதற்கு, தேர்தல் ஆணையத்திற்கு அரசியல் அமைப்புச் சட்டம் வானளாவிய அதிகாரத்தை வழங்கியிருக்கிறது. இப்போது நீதியரசர் கிருஷ்ணய்யரின் தீர்ப்பு என்ன கூறுகிறது என்று பார்ப்போம்.
2(a) The Constitution contemplates a free and fair election and vests comprehensive responsibilities of superintendence, direction and control of the conduct of elections in the Election Commission. This responsibility may cover powers, duties and functions of many sorts, administrative or other, depending on the circumstances.
கிருஷ்ணய்யரின் இந்தத் தீர்ப்பு நீதிபதி எலிப்பி தர்மாராவ் எழுப்பியுள்ள கேள்விக்கு பதிலளிக்கிறது.
இரண்டாவது கேள்வி. உச்ச நீதிமன்றமே, சரி என்று சொன்ன ஒரு டிஜிபியின் நியமனத்தை, மாநில அரசை கலந்தாலோசிக்காமல், தன்னிச்கையாக மாற்ற முடியுமா ?
தேர்தல் ஆணையம் லத்திக்கா சரணை சட்டவிரோதமாக டிஜிபியாக்கப் பட்டவர் என்பதற்காக மாற்றவில்லை. லத்திக்கா சரண் மீது அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பிய புகார்களின் அடிப்படையிலும், மேலும் தேர்தல் ஆணையத்திற்கு வந்த பல்வேறு புகார்களின் அடிப்படையிலுமே அந்த முடிவுக்கு வந்தது. லத்திக்கா சரணின் நியமனத்தை சரி என்று உச்ச நீதிமன்றம் சொன்னதையும் தேர்தல் ஆணையத்தின் மாறுதல் உத்தரவையும் ஒப்பிடுவது என்பது, மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போன்றது. தேர்தல் ஆணையம், எந்த அடிப்படையில் லத்திக்கா சரணை மாற்றியது என்றே தெரியாமல், இவ்வாறு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது, தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தில் நேரடியாக தலையிடுவதல்லாமல் வேறு ஒன்றும் அல்ல.
நிலம் வாங்குவதற்கும், மற்ற விவகாரங்களுக்கும், நியாயமான காரணங்களுக்காகவும், பணம் எடுத்துச் செல்பவர்களை தேர்தல் விதிகள் என்ற பெயரில், சோதனையிட்டு பணத்தை பறிமுதல் செய்வதற்கு தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளதா ?
இதுதான் முக்கியமான விஷயம். தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் வாகன சோதனையை தீவிரப் படுத்தியிருப்பதற்கான முக்கிய காரணம், இந்தியாவில் வேறு எந்த இடத்திலும், இல்லாத வகையில் தமிழ்நாட்டில் தான் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் அயோக்கியத்தனம் நடைபெறுகிறது. இதை எப்படித்தான் கட்டுப் படுத்துவது ? ஒரு திமுக உறுப்பினரிடம் 10 லட்ச ரூபாய் கொடுத்து திருவள்ளுர் தொகுதிக்கு எடுத்துச் செல்லுங்கள் என்று சொல்லுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர் அதை எப்படி எடுத்துச் செல்வார் ? வாகனத்தில் தானே ? அவ்வாறு அவர் எடுத்துச் செல்கையில் இடை மறித்து அந்த வாகனத்தை சோதனை செய்யாமல், பணம் எடுத்துச் செல்வதை எப்படி தடுப்பது ? ஒரு மாநிலத்தின் முக்கியமான தேர்தல் நடைபெறும் போது, ஏற்படும் சிரமங்களை சிறிது பொறுத்துத்தானே ஆக வேண்டும் ? சரியான தகவல் வந்தால் மட்டுமே சோதனை செய்ய வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவு, எப்படி சரியாக இருக்க முடியும் ? பணம் எடுத்துச் செல்லும் நபர், தேர்தல் ஆணையத்திற்கு தொலைபேசி செய்து, நான் 10 லட்ச ரூபாய் எடுத்துச் செல்லுகிறேன் பிடித்துக் கொள்ளுங்கள் என்று கூறுவார் என்று நீதிபதி எலிப்பி தர்மாராவ் எதிர்ப்பார்க்கிறாரா ? அல்லது, தேர்தலை எப்படி நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு பாடம் எடுக்கிறாரா ?
பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாமல், சரியான தகவல் வந்தால் மட்டுமே சோதனை நடத்த வேண்டும் என்றால், அதை எப்படி நடத்துவது என்பதையும் நீதிபதி எலிப்பி தர்மாராவும், நீதிபதி வேணுகோபாலும் அவர்களது தீர்ப்பில் விளக்கியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த காரணம், கருணாநிதி குறிப்பிட்டது போல, ஜக்கம்பட்டியைச் சேர்ந்த தில்லை நடராஜன் என்பவர் தேர்தல் ஆணையம் வாகன சோதனை நடத்துவதை தடை செய்ய வேண்டும் என்று தொடுத்த வழக்கு. அந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே, திமுக வின் முன்னாள் ராஜ்ய சபா உறுப்பினரும், வழக்கறிஞருமான விடுதலை, எழுந்து, தமிழகத்தின் மீன்வளத்துறை அமைச்சர் கேபிபி.சாமியின் வீட்டில் தேர்தல் ஆணையம் அநியாயமாக சோதனை நடத்தி, அவரை அவமானப் படுத்தி விட்டது என்ற காரணத்தினாலேயே… என்றும் அதையும் விசாரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இந்த வழக்கில் நீதிபதிகள் எலிப்பி தர்மாராவ் மற்றும், வேணுகோபால் ஒரு இடைக்கால உத்தரவை பிறப்பித்தனர்.
“தேவையற்ற முறையில் பொதுமக்களுக்கு சோதனை என்ற பெயரில் கடும் இடையூறு ஏற்படுவதால், பொதுமக்களின் (திமுகவின் என்று படிக்கவும்) நலனை கருத்தில் கொண்டு, உறுதியான தகவல் என்று திருப்தி ஏற்படாமல், தேர்தல் ஆணையம் எந்த சோதனையும் நடத்தக் கூடாது என்று உத்தரவிடுகிறோம்.
ஏதாவது உறுதியான தகவல் வந்தால், சோதனை நடத்தும் அதிகாரி, அவ்வாறு வந்த தகவலை தனக்கு திருப்தி ஏற்படும் வகையில் உறுதி செய்து கொண்டு, அந்தத் தகவலை எழுத்து பூர்வமாக பதிவு செய்த பிறகே சோதனை மேற்கொள்ள வேண்டும்.”
இதுதான் அந்த உத்தரவு. இந்த வழக்கு எடுக்கப் பட்ட சூழலை கவனத்தில் கொள்ள வேண்டும்.
தேர்தல் ஆணையத்தின் தீவிர வாகன சோதனையால், திமுகவினர் நினைத்தது போல பணத்தை தமிழகத்தின் அனைத்து தொகுதிகளுக்கும் எடுத்துச் செல்ல முடியவில்லை. மிக கடுமையான நெருக்கடிக்கு உள்ளானார்கள். இதே ரீதியில் சோதனைகள் தொடர்ந்தால், பணத்தை எடுத்துச் செல்வது தேர்தல் வரையில் சாத்தியப் படாது என்றும் முடிவு செய்தார்கள்.
தற்காலிகமாகவாவது, இந்தச் சோதனைகளை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தால் தான் பணத்தை தொகுதிகளுக்கு எடுத்துச் செல்ல முடியும் என்பது புரிந்தது.
தலைமை நீதிபதி இக்பால், திங்கள் முதல் வியாழன் வரை விடுப்பில் இருக்கிறார். அவர் விடுப்பில் இருந்தால், பொது நல வழக்குகள் அனைத்தும், அவருக்கு அடுத்த மூத்த நீதிபதியாக இருக்கும் எலிப்பி தர்மாராவ் டிவிஷன் பென்ச் முன்பு விசாரணைக்கு வரும். அவரிடம் ஒரு தற்காலிக தடை உத்தரவு பெற்றால், அந்த தடை உத்தரவை தலைமை நீதிபதி வந்த பிறகே விலக்க முடியும். அது வரை தேர்தல் ஆணையம் சோதனைகள் நடத்த முடியாது. அதற்குள் பணத்தை சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு எடுத்துச் சென்று விடலாம் என்ற நூதன சதித்திட்டத்தின் விளைவே இந்த உத்தரவு என்று சவுக்கு சந்தேகிக்கிறது.
இந்த சந்தேகத்திற்கு வலு சேர்க்கும் விதமாக, இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும் போது, தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞர் ராஜகோபாலன், வியாழனன்று விரிவான பதிலை தாக்கல் செய்வதாக தெரிவித்த கருத்தை ஏற்றுக் கொள்ளாமல், இவ்வழக்கை திங்களன்று ஒத்தி வைத்தார் நீதிபதி எலிப்பி தர்மாராவ்.
திங்களன்று ஒத்தி வைத்தால், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என்று நான்கு நாட்கள் அவகாசம் கிடைக்கிறது அல்லவா ? அதற்குள் ஊழல் பணத்தை தமிழகமெங்கும் விநியோகிக்க, திமுகவினருக்கு தெரியாதா என்ன ?
எப்படிப்பட்ட மோசமான ஊழல் சமுதாயத்தில் போராட வேண்டியிருக்கிறது பாருங்கள். நிர்வாகம், ஊடகம், காவல்துறை என்று அனைத்துமே, கருணாநிதியின் கைப்பாவைகளாக மாறிப் போனதொரு மோசமான சூழலில் கடைசிப் புகலிடமாக மக்கள் கருதும், நீதிமன்றமும் இப்படி கருணாநிதி மன்றமாக மாறினால்….. ?