உடன்குடி அனல் மின் நிலையத்துக்கான ஒப்பந்தப்புள்ளிகள் ரத்து செய்யப்பட்டது குறித்து, கண்டிக்காத எதிர்க்கட்சிகளே இல்லை. அந்த அளவுக்கு பரபரப்பாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், தமிழக அரசோ எருமை மாட்டின் மீது மழை பெய்தது போல, கவலையே இல்லாமல் இருக்கிறது. தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இது குறித்த ஆவணங்களை அழிக்கும் பணியில், தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் ஈடுபட்டுள்ளதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வந்துள்ளது. அந்த முயற்சியை முறியடிப்பதற்காகவே இந்த கட்டுரை.
மற்ற ஊடகங்களுக்கெல்லாம் முன்னதாக, அதிமுக அரசின் ஊழல்களை சவுக்கு தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறது. ஆனால், தோண்ட தோண்ட ஊழல் பூதங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
இந்த ஊழல்களுக்கெல்லாம் ஊற்றுக்கண்ணாக இருக்கும் ஜெயலலிதா, ஒரு மிகப்பெரிய அழிவுசக்தியாக உருவெடுத்து வருகிறார் என்பதையே அவரின் நடவடிக்கைகள் காட்டுகின்றன. தலைமைச் செயலக கட்டிடம், அண்ணா நூலகம், பாலங்களை நிறுத்துவது, கெயில் திட்டம் நிறுத்தம், மெட்ரோ ரயிலின் இரண்டாவது திட்டத்தை நிறுத்தியது, சென்னை மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம், போரூர் பாலம் நிறுத்தம், என தொடர்ந்து அழிவு வேலைகளில் மட்டுமே ஈடுபட்டு வருகிறார்.
2011ல் ஆட்சிக்கு வந்த உடன், திமுகவினரை கைது செய்தார். 2011 இறுதியில் சசிகலாவை விரட்டினார். 2012ல், சசிகலாவின் உறவினர்களை கைது செய்தார். 2012 மத்தியில் சசிகலாவை மீண்டும் தோட்டத்துக்கு அழைத்தார். சிறை சென்ற மன்னார்குடி மாபியா உறுப்பினர்கள் அனைவரையும் விடுதலை செய்தார். 2014 தொடக்கத்தில் சசிகலா வெளியேறியபோது, அவரை விமர்சனம் செய்த அமைச்சர்களையும், கட்சியினரையும் நீக்கினார். நான்காம் ஆண்டு முடிவில், அவரே சிறை சென்றார். தற்போது மேல் முறையீட்டில் உள்ள வழக்கோடு மல்லுக் கட்டிக் கொண்டு, தமிழகத்தில் எந்த திட்டமும் செயல்படுத்த விடாமல் தாமதப்படுத்துகிறார். தயாராக இருக்கும் மெட்ரோ ரயிலைக்கூட தொடங்க விடாமல் தாமதப்படுத்தி வரகிறார்.
சவுக்கில் இது வரை முட்டை ஊழல், பருப்பு ஊழல், இந்துஸ்தான் டெலி பிரின்டர்ஸ் நில ஊழல், ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அரசு நிலத்தை வழங்கிய ஊழல், கனிம ஊழல், எண்ணூர் அனல் மின் திட்ட ஊழல் ஆகியவற்றை அம்பலப்படுத்தியிருக்கிறோம். தற்போது உடன்குடி அனல் மின் நிலையத் திட்டத்துக்கான ஒப்பந்தப்புள்ளிகளை ரத்து செய்த இந்த விவகாரத்தில் அதிமுக அரசு வசமாக சிக்கியுள்ளது. இந்த ரத்து விவகாரம், அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒரு அணியில் இணைத்துள்ளது.
இந்த ஒப்பந்தப்புள்ளி ரத்து செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி விடுத்துள்ள கோரிக்கை, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோரை கதி கலங்க வைத்துள்ளது. கருணாநிதி தனது அறிக்கையில், மிக மிக தெளிவாக சில கேள்விகளை எழுப்பியிருந்தார்.
- ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டு மூன்று ஆண்டுகள் கழித்து ரத்து செய்தது ஏன், விலைப் புள்ளிகள் திறக்கப்பட்டு ஐந்து மாதங்கள் கழித்து ரத்து செய்தது ஏன்?
- வழக்கமாக மின் வாரிய அலுவலகத்தில் நடக்கும் கூட்டம், தலைமைச் செயலகத்தில் நடந்தது ஏன்?
- இதே போல எண்ணூரில் வழங்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகளை ஏற்றுக் கொண்டது ஏன், சீன நிறுவனத்தோடு பேரம் படியவில்லையா?
என்று நேரடியாகவே குற்றம் சாட்டியுள்ளார். இன்னும் பச்சையாக
10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத இந்த டெண்டரை ரத்து செய்யச் சொல்லி மேலிட உத்தரவா?
என்று வெளிப்படையாகவே கேட்டுள்ளார். இதற்கு நேரடியாக பதில் அளிக்க முடியாமல் நத்தம் விஸ்வநாதன், திமுகவையும் கருணாநிதியையும் கடுமையாக சாடினார். இன்று வரை, கருணாநிதியின் எந்தக் கேள்விகளுக்கும், விஸ்வநாதனால் பதில் சொல்ல முடியவில்லை. மருத்துவர் ராமதாஸும்,
தொழில்நுட்பக் குறைபாடுகள் காரணமாகத் தான் டெண்டர் ரத்து செய்யப்பட்டதாக தமிழக அரசு கூறுவது உண்மை என்றால், உயர்நீதிமன்ற நீதிபதி விசாரணை ஆணையம் அமைத்து அதை நிரூபிக்க முன்வர வேண்டும்
என்று கோரியுள்ளார்.
டெண்டர் ரத்து செய்யப்பட்டதற்கு திரை மறைவில் நடந்த பல விவகாரங்களே காரணம் என்பது வெளியுலகுக்கு தெரியாது. இந்த ஒப்பந்தப்புள்ளி தொடர்பாக சீன நிறுவன அதிகாரிகளோடு நத்தம் விஸ்வநாதன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது, சீன நிறுவன அதிகாரிகள், அவர்கள் நாட்டில் சட்டம் கடுமையாக இருப்பதால், லஞ்சமாக எதுவும் தர இயலாது என்பதை வெளிப்படையாக கூறி விட்டனர். அதற்கு நத்தம் கூறிய பதில் என்ன தெரியுமா ?
“அது சீனா. இது இந்தியா. இங்கே நீங்கள் தொழில் செய்ய வேண்டும் என்றால், எங்கள் விதிகளுக்கு கட்டுப்பட்டே ஆக வேண்டும்”
என்று கூறியதோடு, சீன நிறுவனம் கடனாக தர முன் வந்துள்ள தொகையில் 5 சதவிகிதத்தை கமிஷனாக கேட்டிருக்கிறார். இதைக் கேட்ட சீன அதிகாரி அதிர்ந்து போனார். நாங்கள் கொடுப்பதே கடன். அதில் கமிஷனா என்று பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார்.
நத்தம் விஸ்வநாதனின் மகன் அமர் பங்குதாரராக உள்ள ஒரு நிறுவனத்துக்கு பிஎச்ஈஎல் நிறுவனம் சப் கான்ட்ராக்ட் வழங்கி அதன் மூலமாக 1500 கோடி வரை லாபம் அடிக்க நத்தம் விஸ்வநாதன் போட்ட திட்டம் சீன நிறுவனம் நுழைந்ததால் நிறைவேறாமல் போனது என்பதே உண்மை. அதனால்தான் எப்படியாவது தகிடுத்தத்தம் செய்து, இந்த டெண்டரை ரத்து செய்வது வரை சென்றிருக்கிறார்.
இந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டதில், நத்தம் விஸ்வநாதனுக்கு இணையாக முழு முனைப்போடு ஈடுபட்டது தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் ஐஏஎஸ், ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் வெங்கட்ரமணன். ஞானதேசிகன் மின் வாரியத் தலைவராக இருந்தபோதே சீன நிறுவனத்தின் மீது கடும் வெறுப்போடு இருந்தார் என்று தகவல்கள் கூறுகின்றன. எண்ணூர் ஒப்பந்தப்புள்ளிகளில் நடந்த முறைகேடுகள் குறித்து ஏற்கனவே சவுக்கு தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இணைப்பு அதுவும், எண்ணூர் ஒப்பந்தப் புள்ளியை பிஎச்ஈஎல் நிறுவனத்துக்கு அளித்த நாள் எது தெரியுமா ? 27 செப்டம்பர் 2014. ஜெயலலிதாவுக்கு நான்காண்டு சிறைத் தண்டனை அளித்த அதே நாளில், எண்ணூர் ஒப்பந்தப்புள்ளி தொடர்பான முடிவை எடுத்தார் ஞானதேசிகன். அப்படி அவசர அவசரமாக எண்ணூரில் முடிவெடுத்த ஞானதேசிகன்தான், உடன்குடி ஒப்பந்தப்புள்ளியை மூன்றாண்டுகள் தாமதம் செய்தார்.
28 மார்ச் 2012ல், காஞ்சிபுரத்தில் நடந்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய நத்தம் விஸ்வநாதன் 2013 ஜுன் முதல் தமிழகம் ஒளிமயமான மாநிலமாக மாறும் என்று பேசினார். அன்று அவர் பேசுகையில்
“இப்போது தற்காலிகமாக ஏற்பட்டுள்ள மின்வெட்டு, முதல்வர் ஆட்சியில் ஏற்பட்டதல்ல. கடந்த கால ஆட்சியில் மின் உற்பத்தியை செய்து முடிக்காததால் இந்த மின்வெட்டு ஏற்பட்டுள்ளது என்பது பல்வேறு ஆய்வில் தெரிய வந்துள்ளது. தற்போது எதையும் மூடி மறைக்கவில்லை.
முதல்வர் வாரந்தோறும் ஆய்வு நடத்தி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். எனவே ஓர் ஆண்டு காலத்துக்குள் மின்வெட்டு பிரச்னை முழுமையாக தீர்ந்து விடும். வருகிற ஜூன் மாதம் முதல் படிப்படியாக மின் வெட்டு குறையும். 2013 முடிவதற்குள் மின் உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு பெறும். தமிழகம் மின்வெட்டு இல்லாத மாநிலமாகத் திகழும்”
இவர்கள் தமிழகத்தை மின் உற்பத்தியில் தன்னிறைவு அடைய வைத்த லட்சணத்தைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
தற்போது நத்தம் விஸ்வநாதன் அளிக்கும் விளக்கம் என்ன தெரியுமா ? அந்த டெண்டர்களில் குறைபாடுகள் இருந்தன. குறைபாடுள்ள டெண்டரை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என்பதே. மேலும் நத்தம் தனது அறிக்கையில், இந்த டெண்டர்களை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட நிறுவனம், டெண்டர்களில் குறைபாடு இருப்பதாக தெரிவித்த காரணத்தால், டெண்டர் ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். அந்த நிறுவனம் அப்படி கூறியதா என்பதை பின்னால் பார்ப்போம்.
குறைபாடுகள் உள்ள டெண்டரை எதற்காக ஆய்வு செய்ய வேண்டும் என்பதே மிகப் பெரிய கேள்வி. இந்த குறைபாடுகள் என்ன என்பதை நீதிமன்றத்தின் முன்பு விளக்க வேண்டிய நிலைக்கு, தமிழக மின் வாரியம் ஆளாகியுள்ளது. சீன நிறுவனம் இது தொடர்பாக தொடர்ந்த வழக்கு 23 மார்ச் 2015 அன்று சென்னை உயர்நீதிமன்றம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பாக ஆஜரான தலைமை வழக்கறிஞர் சோமயாஜி, டெண்டர் ரத்து செய்யப்பட்டதற்கான எந்த காரணத்தையும் தெரிவிக்க மறுத்தார். ஆனால் நீதிமன்றம் சராமாரியாக கேள்வி எழுப்பியதை அடுத்து, 26 மார்ச் 2015 அன்று அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க சம்மத்தித்துள்ளார். இந்த இடத்தில்தான் ஆவணங்களை திருத்தும் பணி நடைபெற உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
வழக்கமாக மின் வாரிய அலுவலகத்தில் நடைபெறும் கூட்டம், இந்த முறை ஏன் தலைமைச் செயலகத்தில் நடந்தது என்று கருணாநிதி எழுப்பிய கேள்வியில் பொருள் இல்லாமல் இல்லை. இந்த கூட்டம் நடைபெற்ற அன்று அந்த கூட்ட அறையிலேயே தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மற்றும் முதல்வரின் மூன்றாவது செயலாளர் வெங்கட்ரமணன் ஆகியோர் இருந்தனர். மின் வாரிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள், இந்த ஒப்பந்தப்புள்ளியை ரத்து செய்யுமாறு மிரட்டப்பட்டனர் என்கின்றன தகவல்கள். யார் பெயரை வைத்து மிரட்டப்பட்டனர் தெரியுமா ? கைதி எண் 7402வின் பெயரை வைத்தே மிரட்டப்பட்டுள்ளனர்.
இந்த டெண்டர்களை ஆய்வு செய்யும் பணி, ஃபிக்ட்னர் என்ற நிறுவனத்திடம் வழங்கப்பட்டது. அதை முழுமையாக ஆய்வு செய்த அந்நிறுவனம், தனது அறிக்கையில் என்ன கூறியது தெரியுமா ? பிஎச்ஈஎல் மற்றும் சீன நிறுவனம் ஆகிய இரண்டு நிறுவனங்களின் டெண்டர்களிலும் குறைபாடு உள்ளது. இதில் எந்த டெண்டரை இறுதி செய்வது என்ற முடிவை மின் வாரியமே எடுக்கட்டும். ஆனால், இரண்டும் ஏற்கத்தக்கன என்ற நிலையில், சீன நிறுவனத்தின் விலைப்புள்ளியே குறைவானது. சீன நிறுவனம் ஒரு மெகாவாட் உற்பத்தி செய்ய 7.376 கோடி செலவாகும் என்று குறிப்பிட்டுள்ளது. பிஎச்இஎல் ஒரு மெகாவாட்டுக்கு 7.480 கோடி செலவாகும் என்று குறிப்பிட்டுள்ளது என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது. இதில் சீன நிறுவனத்தின் டெண்டர் மட்டும் குறைபாடு உள்ளது என்று இந்த நிறுவனம் எங்கே கூறியுள்ளது ? நத்தம் விஸ்வநாதனின் அறிக்கை பச்சைப் பொய்தானே ? மேலும் நத்தம் விஸ்வநாதன் சொல்வது படியே வைத்துக் கொண்டாலும், ஃபிக்ட்னர் நிறுவனம், டெண்டர்களை ஆய்வு செய்து அறிக்கை அளித்தது, 30 டிசம்பர் 2014. அப்படி இருக்கையில், அதன் மீது முடிவெடுக்க எதற்கு மூன்று மாதங்கள் ? நத்தம் விஸ்வநாதனின் அறிக்கை முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் காரியமே அன்றி வேறு அல்ல.

பிஎச்ஈஎல் மற்றும் சீன நிறுவனம் ஆகிய இரண்டுமே குறைபாடுகள் உடையவை, சீன நிறுவனத்தின் விலைப்புள்ளி குறைவு என்று ஃபிக்ட்னர் நிறுவனம் அளித்த அறிக்கை
மற்றொரு முக்கிய விவகாரம்.
இந்த டெண்டரை ரத்து செய்ய இதற்கு முன்னர் நடந்த முயற்சி சவுக்கு தளம் மற்றும் சில அதிகாரிகளின் உதவியோடு முறியடிக்கப்பட்டது. 11 பிப்ரவரி 2015 அன்று நடந்த கூட்டத்தில் டெண்டரை ரத்து செய்யும் முடிவு, தள்ளிப்போடப்பட்டது. அந்த கூட்டம் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக, சீன நிறுவனத்துக்கு மின் வாரியம் ஒரு கடிதம் அனுப்புகிறது. அந்த கடிதத்தில், இந்த ஒப்பந்தப்புள்ளியின் காலத்தை 31 மார்ச் 2015 வரை நீட்டிக்க அனுமதி வழங்குமாறு மின் வாரியம் சீன நிறுவனத்தை கேட்டுக் கொள்கிறது. ஒரு புறம், டெண்டரை ரத்து செய்யும் பணி நடைபெறுகிறது. மற்றொரு புறம், டெண்டரின் கால அளவை நீட்டிக்குமாறு கோரிக்கை வைக்கப்படுகிறது. இது எத்தனை பெரிய முரண்பாடு ?

சீன நிறுவனத்தின் விலைப்புள்ளியின் கால அளவை 31 மார்ச் 2015 வரை நீட்டித்துத் தருமாறு கேட்டு மின் வாரியம் சீன நிறுவனத்துக்கு எழுதிய கடிதம்.
மற்றொரு குளறுபடி என்ன தெரியுமா ?
எண்ணூர் டெண்டர் தற்போது நீதிமன்றத்தில் வழக்கில் உள்ளது தெரியுமா ? அந்த டெண்டரில் போட்டியிட்ட இரண்டு நிறுவனங்கள் இதே சீன நிறுவனம் மற்றும் பிஎச்ஈஎல். இதே போன்ற டெண்டர்தான் அது. எண்ணூரில் சரியாக இருந்த டெண்டர் உடன்குடியில் எப்படி தவறானதாக ஆகும் ? ஏற்கனவே டெண்டரில் கலந்து கொண்ட ஒரு நிறுவனம், தவறாக எப்படி டெண்டர் ஆவணத்தை சமர்ப்பிக்கும் ?
மேலும் எப்படிப் பார்த்தாலும், பிஎச்ஈஎல் நிறுவனத்தின் விலைப்புள்ளியை விட, சீன நிறுவனத்தின் விலைப்புள்ளியானது மேலானது. பிஎச்ஈஎல் நிறுவனம் திட்டத்துக்கான தொகையில் 75 சதவிகிதத்தை கடனாக தர முன்வந்தது. ஆனால் சீன நிறுவனமோ, 85 சதவிகிதத்தை கடனாக தர முன்வந்தது. பிஎச்ஈஎல் நிறுவனத்துக்கு அரசு தர வேண்டிய தொகையை விட 1400 கோடியை சீன நிறுவனத்துக்கு மின் வாரியம் குறைவாக தந்தால் போதுமானது. பிஎச்ஈஎல் நிறுவனம் அது தரும் கடனுக்கு கோரிய வட்டி 12.5 சதவிகிதம். சீன நிறுவனம் கோரிய வட்டி விகிதம் 7.2. எப்படிப் பார்த்தாலும், சீன நிறுவனமே அனைத்து வகைகளிலும், சிறந்த நிறுவனமாக அமைந்தது. இந்த காரணங்களால், பிஎச்ஈஎல் நிறுவனத்துக்கு, உடன்குடி அனல் மின் நிலையம் கட்ட ஆணை வழங்க சட்ட ரீதியாக வாய்ப்பே இல்லாமல் போனது. இந்த ஒரே காரணத்தினால்தான் இந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஒரு டெண்டர் விடப்பட்டு, அதன் விலைப்புள்ளிகள் திறக்கப்பட்டு, எந்த நிறுவனம் குறைவான தொகை கோரியிருக்கிறதோ, அந்த நிறுவனத்தை பிடிக்கவில்லை என்பதற்காக டெண்டரையே ரத்து செய்வது ஒரு அரசு செய்யும் காரியமா ? உடன்குடி அனல் மின் நிலைய திட்டத்துக்காக இது வரை 100 கோடிக்கும் அதிகமாக மக்கள் வரிப்பணம் செலவிடப்பட்டுள்ளது தெரியுமா ? திமுக ஆட்சி காலத்தில் பிஎச்ஈஎல் மற்றும் மின் வாரியம் இணைந்து செயல்படுத்த போட்டிருந்த திட்டத்தை ஜெயலலிதா வந்ததும் ரத்து செய்தார். அப்படி ரத்து செய்ததற்காக, தமிழக அரசு பிஎச்ஈஎல் நிறுவனத்துக்கு அளித்த நஷ்ட ஈடு 64 கோடி ரூபாய். அதன் பிறகு, உலகளாவிய டெண்டர்கள் மற்றும் இதர நிர்வாகச் செலவுகள் சேர்த்து 100 கோடி தாண்டி விட்டது. இத்திட்டத்தை ரத்து செய்தபோது ஜெயலலிதா, தமிழக அரசே இத்திட்டத்தை செயல்படுத்தும். உலக அளவில் டெண்டர் கோரி, இத்திட்டத்தை செயல்படுத்தி முடிக்கும் என்றார். அவர் அறிவித்து மூன்று ஆண்டுகள் முடிந்து விட்டன.
உடன்குடி திட்டம் உரிய காலத்தில் செயல்படுத்தப்பட்டு இருந்தால் அதன் மூலம் கிடைக்கும் மின்சாரத்தால், மின் வாரியம் ஒரு நாளைக்கு 5.5 கோடியை மிச்சப்படுத்தியிருக்க முடியும். ஆனால், இந்த திட்டம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு செயல்படுத்த வாய்ப்பே கிடையாது.
உலகளாவிய அளவில், டெண்டர் விடப்பட்டு இறுதி செய்வதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பது, மின் வாரியத்தின் வேகத்தை உணர்ந்தவர்களுக்கு நன்கு தெரியும். மேலும், நீதிமன்றத்தில் இந்த வழக்கு சிக்கிக் கொண்டிருப்பதால், இது உச்சநீதின்றம் வரை இழுக்கப்பட்டு தாமதப்படுத்தப்படும்.
இந்த தாமதங்களின் காரணமாக நடக்கும் அநியாயம் என்ன தெரியுமா ? தனியாரிடமிருந்து ஒரு யூனிட் 11 முதல் 14 ரூபாய் வரை வாங்கப்படுகிறது. ஏற்கனவே மின் வாரியத்தின் கடன் 72 ஆயிரம் கோடியை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. மின் வாரிய அதிகாரி ஒருவர் இது குறித்து பேசுகையில் தனியாரிடமிருந்து ஒரு நாளைக்கு 7.5 கோடி யூனிட்டுகள் வாங்கப்படுகிறது என்றும், சராசரியாக நத்தம் விஸ்வநாதனின் பங்கு மட்டும் ஒரு யூனிட்டுக்கு 30 பைசா என்றும் கூறினார். அவர் மேலும், சராசரியாக ஒரு நாளைய வசூல் 2.25 கோடி என்றும், ஞானதேசிகன் மற்றும் இரண்டு அதிகாரிகளின் ஒரு நாளைய வசூல் 25 லட்சம் என்றும் கூறினார். இது போன்ற கொள்ளைகள் தொடர்ந்து நடக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காககே அனைத்து மின் திட்டங்களும் தாமதப்படுத்தப்படுகின்றன.
மின் வாரியத்தின் சொந்த மின் நிலையங்கள் தயாரித்தால் ஒரு யூனிட்டுக்கு 3.20 க்கு பெறக்கூடிய மின்சாரத்தை 14 ரூபாய் வரை கொடுத்து வாங்கும் முட்டாள் அரசை பார்த்திருக்கிறீர்களா ?
இலவச ஆடுகளும், மிக்சிக்களும், க்ரைண்டர்களும், மீண்டும் 200 சீட்டுகளை பெற்றுத் தரும் என்று ஜெயலலிதா நம்புகிறார். ஆனால், மக்கள் தகுந்த பாடத்தை கற்பிப்பார்கள்.
பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர்
எழுபது கோடி உறும்.
தவறான வழிமுறைகளையே சிந்தித்துச் செயல்படுகிற அமைச்சர் ஒருவர் அருகிலிருப்பதை விட எழுபது கோடி எதிரிகள் பக்கத்தில் இருப்பது எவ்வளவோ மேலாகும்.
“ஒரு மோசமான அமைச்சர் இருப்பதே எழுபது கோடி எதிரிகளுக்கு நிகர்” என்கிறார் வள்ளுவர். ஆனால், அதிமுக அரசில் அத்தனை அமைச்சர்களுமே பழுதானவர்கள்தான். இவர்களை அருகில் வைத்திருக்கும் ஜெயலலிதா எப்படிப்பட்டவராக இருப்பார் ? இப்படி சுற்றி சுற்றி பழுதானவர்களை வைத்திருப்பதால்தான், பரப்பன அக்ரஹாரா சிறை வரை சென்று வந்தார்.
அரசியல்வாதிகளாவது பரவாயில்லை. ஆனால், முதியோர் இல்லங்களில் இருக்க வேண்டிய வெங்கடரமணன், ஷீலா பாலகிருஷ்ணன், ராமானுஜம் ஆகியோரை நம்புகிறார். இவர்கள் ஜெயலலிதாவை சிறையில் தள்ளாமல் ஓய மாட்டார்கள் என்பதை ஜெயலலிதா உணரவேயில்லை. உணரப்போவதும் இல்லை!!!
Super article Shankar…. proves both dmk & admk are a curse to Tamils 🙁
எல்லாம் சரி. ஊழல் அதிமுக அரசு bhel நிறுவனத்திற்கு ஆர்டர் கொடுத்து 1000 கோடிக்கு மேல் கமிஷன் பெறுகிறது தவறு.ஆனால் இதில் 2 விசயங்கள் அதிமுகவிற்கு சாதகமானவை. ஒன்று bhel நமது தேசத்தின் பொதுத்துறை நிறுவனம்.இரண்டாவது சீனா நிறுவனம் அனல் மின் நிலையங்கள் அமைத்ததில் பல குறைபாடுகள் ஏற்பட்டு அதை bhel சரி செய்து உள்ளது எனவும், கொதிகலன் போன்ற பல பொருட்கள் bhel தயாரிக்கும் பொருட்கள் போன்று தரமில்லாதது என்றும் இதனால் பல அனல் மின் நிலையங்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டபோது bhel ஊழியர்கள்தான் சரி செய்தனர் என bhel ல் பணிபுரியும் ஊழியர்கள் பேட்டி தந்துள்ளனர்.இவை இரண்டும் ஊழல் அரசுக்கு சாதகமானவை.
சுய லாபங்களுக்காக தேச துரோகம் செய்யும் இவர்கள் தான்
நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்.
மக்கள் எப்படியோ, தலைவன் அப்படி.
தலைவன் எப்படியோ அப்படியே நாடு.
பேய்கள் அரசாள ஆரத்தி எடுத்து
அழைத்து வந்தது நாம் தான்.
பேயா பூதமா என்பது போல அம்மாவா, ஐயாவா
என்ற கொடுமையான தேர்வில் தான் நாம் நின்று
கொண்டிருக்கிறோம். எல்லா கட்சிகளுக் மக்களை
முட்டாள்களாகவே வைத்திருக்க ஆசைபடுகிறது.
இவனும், இலவசத்திலும், சாராயத்திலும், யாரை
தேர்ந்தெடுப்பது என்ற நியாயமான குழப்பத்திலும்
மூலை குழம்பி கிடக்கிறான். நாடு நாசமாய் போகிரது.
// முதியோர் இல்லங்களில் இருக்க வேண்டிய வெங்கடரமணன், ஷீலா பாலகிருஷ்ணன், ராமானுஜம் ஆகியோரை நம்புகிறார். //
———-
ஜெயலலிதா 16 வயது கட்டிளங்குமரியல்ல. அவரும் 67 வயதான ஒரு மூதாட்டிதான். மண்டையை போடும் முன், சுருட்டிய மக்கள் சொத்தை மக்களிடம் திருப்பித்தரட்டும். கங்கையிலே பாவங்களை கரைத்துவிட்டு, அல்லாஹ்வின் பிடியிலிருந்து தப்பமுடியாது.
as per the contractual conditions and procedures ….part A is Technical bid…..Part B is Commercial / financial bid …if a company fail to qualify in Technical bid their financial bid will not be opened , it will be treated as rejected / disqualified…once if you opened financial bid there is no question of disqualification based on Technicality …
Any way “Fichtner” said both the company tender has some fault, so the Government can easily win this case.
முதியோர் இல்லங்களில் இருக்க வேண்டிய வெங்கடரமணன், ஷீலா பாலகிருஷ்ணன், ராமானுஜம் ஆகியோரை நம்புகிறார். இவர்கள் ஜெயலலிதாவை சிறையில் தள்ளாமல் ஓய மாட்டார்கள் என்பதை ஜெயலலிதா உணரவேயில்லை. உணரப்போவதும் இல்லை!!!
“பொதுமக்கள் இவற்றையெல்லாம் உணர்ந்து அடுத்த முறை பாடம் கற்பிப்பர்களா?”
admk matum ilama dmk panuna fraud vela elathaum eluthuna romba nala irukum
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
குறிப்பிட்டிருக்கும் தரவுகள் சரிதான் ஆனால் கருணாநிதி என்ற சாக்கடை இதுபற்றி பேச தகுதி உள்ள உருப்படிதானா என்ற கேள்விக்கு சவுக்கின் அனுமானம் என்ன?
கருணாநிதி சாக்கடை (இவரின் வண்டவாளங்கள் வெளிவரும் போது சப்போர்ட் பண்ணப் போவதில்லை – இது தனி) தான். ஆனால் இந்த சாக்கடையை இந்த கொள்ளையில் பேச அனுமதிக்காவிட்டால், சங்கதி இவ்வளவு விவரமாக, தைரியமாக வெளிவராது. மொது மக்களாகிய நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இந்த பிரச்சனையில் கடைசிவரை நிலைப்பாட்டை மாற்றாமல் இருக்கின்றாரா என்பது தான். அப்புறம் யோக்கியனே இல்லாத நாட்டில் யாரும் குறையே சொல்ல முடியாமல் போய்விடும்.
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்.
//ஒரு மோசமான அமைச்சர் இருப்பதே எழுபது கோடி எதிரிகளுக்கு நிகர் என்கிறார் வள்ளுவர். ஆனால், அதிமுக அரசில் அத்தனை அமைச்சர்களுமே பழுதானவர்கள்தான். இவர்களை அருகில் வைத்திருக்கும் ஜெயலலிதா எப்படிப்பட்டவராக இருப்பார் ? இப்படி சுற்றி சுற்றி பழுதானவர்களை வைத்திருப்பதால்தான், பரப்பன அக்ரஹாரா சிறை வரை சென்று வந்தார்.// பழுதில்லை என்றால் செயா அமைச்சராக வைத்திருக்கமாட்டார். பலே குற்றவாளி தண்டிக்கப்பட்டு சிறைக்கு போனால் தான் தமிழகம் உருப்பட சிறு வழியாவது கிடைக்கும்.