இரண்டு கோடி மக்கள் என்றால் இரண்டு கோடி பெற்றோர்கள். இரண்டு கோடி பெற்றோர்களின் மனதில் பாலை வார்த்த ஒரு தீர்ப்பை இன்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கிறது.
செப்டம்பர் 14 அன்று, இதே சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி வாசுகி, ஒரு தீர்ப்பை வழங்கி, பெற்றோர்களின் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொண்டார். இன்று அதே சென்னை உயர்நீதிமன்றம், வாசுகியின் தீர்ப்பை ரத்து செய்ததன் மூலம், கோடிக்கணக்கான பெற்றோர்களை மகிழ வைத்திருக்கிறது.
சவுக்கு வாசகர்களில் பல பேர், பெற்றோர்களாக, பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புபவர்களாக இருப்பீர்கள். பெரும்பாலும், அனைவரும் தனியார் பள்ளிகளுக்குத் தான் அனுப்புவீர்கள். இந்தத் தனியார் பள்ளிகள் அடித்து வரும் கொள்ளையைப் பற்றி தாங்கள் நன்றாகவே அறிவீர்கள்.
ஒரு பள்ளி நடத்துவது மிக மிக லாபகரமான தொழிலாக இருப்பது தமிழகத்தில் மட்டுமாகத் தான் இருக்கும். ஒரு கட்டிடம் இருந்தால், அந்த இடத்தில் நர்சரி பள்ளி அமைக்கலாம் என்பதுதான், தமிழ்நாட்டில் இன்று யதார்த்தம். ஊழல் புரையோடிப் போயிருக்கும் இச்சமுதாயத்தில், பள்ளிக்கு அங்கீகாரம் தருவதில் இருந்து, கள ஆய்வு மேற்கொள்வது வரை அத்தனை இடத்திலும் ஊழல் மலிந்து கிடப்பதால், இந்தப் பள்ளிகள் அடிக்கும் கொள்ளைக்கு அளவில்லாமல் நடந்து வருகிறது.
பெரும்பாலான பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருதி, தனது பிள்ளை பள்ளியால் தனிமைப் படுத்தக் கூடாதே என்ற நோக்கத்தில் எப்படியாவது, தனியார் பள்ளிகள் அடிக்கும் கொள்ளைகளுக்கு துணை போய்க் கொண்டு இருக்கின்றனர்.
பில்டிங் பீஸ், டெவலப்மென்ட் பீஸ், லைப்ரரி பீஸ், ஆனுவல் பீஸ், டெர்ம் பீஸ், மன்த்லி பீஸ், க்வார்ட்டர்லி பீஸ், என்று பெற்றோர்களை பீஸ் பீஸாக ஆக்கும் பல்வேறு வகை வகையான பீஸ்களை வசூலித்து, கொட்டமடித்து வரும் பள்ளிகளை அடக்க எந்த ஒரு வழி வகையும் இல்லாமல் இருந்தது.
புதிதாக பணம் பண்ண ஒரு அற்புதமான திட்டம் என்றோ, அல்லது யாரோ ஒரு நல்ல அதிகாரியின் மனதில் உதித்ததோ, எப்படியோ பள்ளிக் கட்டண ஒழுங்கு முறை சட்டம் ஒன்றை திமுக அரசு கொண்டு வந்தது. அதன் படி, நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் குழு ஒன்றை அமைத்து, பள்ளிக் கட்டணத்தை சீரமைத்தது.
பள்ளிக் கட்டண ஒழுங்கு முறைச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை வழக்கு தொடர்ந்து மண்ணைக் கவ்விய பள்ளி நிர்வாகங்கள், தந்திரமாக ஒரு வழி முறையை கையாண்டன.
அது என்னவென்றால், கோவிந்தராஜன் கமிட்டி, விதிமுறைகளையும், நடைமுறைகளையும் சரி வர கடைபிடிக்கவில்லை. அதனால் கோவிந்தராஜன் கமிட்டியின் பரிந்துரைகளும் சட்டபூர்வமானவை அல்ல. எனவே அப்பரிந்துரைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தின் மிக மிக மிக நேர்மையான நீதிபதிகளில் ஒருவரான நீதியரசர் தனபாலன் முன்பு வந்தது.
பள்ளிக் கட்டண சீரமைப்புச் சட்டத்தை உச்ச நீதிமன்றமே சரி என்று சொன்ன பிறகு, அது தொடர்பான வழக்கை நீங்கள் எப்படி கொண்டு வர முடியும், மேலும், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழுவின் பரிந்துரை பற்றிய வழக்கை டிவிஷன் பென்ச் விசாரிக்காமல், ஒரு நீதிபதி எப்படி விசாரிக்க முடியும் என்ற, அடிப்படை விதிகள் எதையும் பரிசீலிக்காமல், நீதியரசர் தனபாலன், பள்ளி நிர்வாகங்கள் தாக்கல் செய்திருந்த ரிட் மனுவை விசாரணைக்கு ஏற்று, உத்தரவிட்டார்.
கோவிந்தராஜன் குழு பரிந்துரைகளுக்கு இடைக்கால தடை விதிப்பது தொடர்பான வழக்கு, நீதியரசர் வாசுகி முன்பு விசாரணைக்கு வந்தது. அவர் தடையும் விதித்தார். அந்த வழக்கு விசாரணை எப்படி நடந்தது, நீதிமன்றத்தில் என்ன நடந்தது என்பதைப் பற்றியெல்லாம் சவுக்கில் விரிவாக பதிவு செய்யப் பட்டிருக்கிறது.
கருணாநிதி அரசு, நியாயமாக என்ன செய்திருக்க வேண்டும் ? இந்தத் தடையாணையை எதிர்த்து மேல்முறையீடு செய்திருக்க வேண்டுமா வேண்டாமா ? ஆனால், மேல்முறையீடு செய்வதற்கு பதிலாக தமிழக அரசு வழக்கறிஞர், அதே வாசுகியிடம் சென்று, இந்த வழக்கை இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கேட்டார். நீதியரசர் வாசுகி என்ன செய்தார் தெரியுமா ? 29 நவம்பருக்கு இந்த வழக்கின் இறுதி விசாரணையை தள்ளி வைத்தார். எதற்கு நவம்பர் என்றால், அப்போதுதானே அக்டோபர் மாதம் 3வது டெர்ம் பீசை வசூல் செய்து பள்ளி நிர்வாகங்கள் கொழிக்க முடியும்.
பிரின்ஸ் கஜேந்திர பாபு என்ற சமூக ஆர்வலர் மற்றும் கல்வியாளர், நீதியரசர் வாசுகியின் இந்த தடை உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்தார். இந்த மேல் முறையீட்டை விசாரணைக்கு நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
இந்தச் செய்தி பத்திரிக்கைகளில் வெளியானதும், கருணாநிதி அரசு, பொது மக்கள் காரித் துப்புவார்களே, என்று விழித்துக் கொண்டு, அவசர அவசரமாக மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. இந்த இரண்டு மனுக்களும், கடந்த திங்களன்று நீதியரசர்கள் இக்பால் மற்றும் சிவஞானம் ஆகேயோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது, அரசு வழக்கறிஞர் வில்சன், இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்ட பின் பள்ளி நிர்வாகங்கள் எப்படி மாணவர்களையும் பெற்றோர்களையும் துன்புறுத்துகின்றன என்பதை எடுத்துரைத்தார். கோவிந்தராஜன் கமிட்டி, எப்படி விபரங்களை பள்ளிகளிடமிருந்து சேகரித்து, அலசி ஆராய்ந்து இந்த கட்டணத்தை நிர்ணயித்துள்ளது என்ற விபரத்தை கூறினார்.
மூத்த வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, பள்ளி நிர்வாகங்களின் சார்பாக நீண்ட நேரம் தனது வாதத்தை எடுத்துரைத்தார். இடையிடையே தலைமை நீதிபதி இக்பால் குறுக்கிட்டு பல்வேறு சந்தேகங்களை கேட்டார். கோவிந்தராஜன் குழு விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றால், இப்போது பின்பற்றச் சொல்கிறோம். அது வரை அவர் நிர்ணயித்துள்ள கட்டணத்தை ஏற்றுக் கொள்கிறீர்களா என்று கேட்டார். ஆனால், கிருஷ்ணமூர்த்தி இக்கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்காமல், சுற்றி வளைத்து, மழுப்பினார்.
அடுத்து பிரின்ஸ் கஜேந்திர பாபு சார்பாக வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் தனது வாதத்தை துவக்கினார். கோவிந்தராஜன் குழுவால் பாதிக்கப் பட்ட பள்ளிகள் தனித்தனியாகத் தான் நீதிமன்றத்தை அணுகியிருக்க வேண்டும், ஒட்டு மொத்தமாக சங்கம் என்ற போர்வையில் நீதிமன்றத்தை அணுகியது தவறு, மேலும் பாதிக்கப் பட உள்ள, ஒரு கோடி மாணவர்களில் ஒருவரைக் கூட விசாரிக்காமல், தடை விதித்தது நீதிமன்ற மரபுகளுக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளுக்கும் எதிரானது என்று வாதிட்டார். ராதாகிருஷ்ணன் வாதிட்டுக் கொண்டிருக்கையில், பள்ளி நிர்வாகங்கள் சார்பாக நீதிமன்றத்துக்கு வந்திருந்த, கழுத்து நிறைய நகை அணிந்திருந்த பணக்கார மாமிகளுக்கு புளி கரைத்ததை அவர்கள் முக மாற்றத்தில் இருந்து உணர முடிந்தது.
நீதியரசர் வாசுகியின் நீதிமன்றத்தில் விசாரணை நடக்கும் போது, ஒரே சிரிப்பும், மகிழ்ச்சியுமாக இருந்த இந்த மாமிகளின் முகத்தில் ஈ ஆடவில்லை.
அடுத்து இந்திய மாணவர் சங்கத்தின் சார்பாக மூத்த வழக்கறிஞர் என்ஜிஆர்.பிரசாத் தனது வாதத்தை துவக்கினார். அவர் எழுந்தவுடன், பள்ளி நிர்வாகம் சார்பாக கிருஷ்ணமூர்த்தி இவர் ஆஜராகக் கூடாது, என்று எதிர்ப்பு தெரிவித்தார். உடனே பிரசாத், நான் பெற்றோர்களுக்காக ஆஜராகிறேன். நீங்கள் தொழிலதிபர்களுக்காக ஆஜராகிறீர்கள் என்று சொன்னதும், அமைதியானார் கிருஷ்ணமூர்த்தி.
அனைவரது வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி மற்றும் நீதியரசர் சிவஞானம், தங்களது தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.
மறுநாளே, பெற்றோர்களுக்கு இன்ப அதிர்ச்சியை வழங்கும் ஒரு தீர்ப்பு வந்தது.
நீதியரசர் வாசுகியின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டது சென்னை உயர்நீதின்றம்.
நீதிபதிகள் இக்பால் மற்றும் சிவஞானம், தங்களது தீர்ப்பில், “கோவிந்தராஜன் குழு ஒரு பூர்வாங்கமான கட்டண விகிதத்தை வகுத்திருந்தால் கூட, அது இயற்கை நீதிக்கு முரணானது என்று நீதிபதி (வாசுகி) குறிப்பிட்டிருப்பது தவறானது.
இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்ட பின்னர், பல பள்ளிகள் கூடுதல் கட்டணம் கேட்டு தொந்தரவு செய்வதாக புகார் வந்துள்ளது. இடைக்கால உத்தரவு இறுதி உத்தரவு போல ஆகக் கூடாது என்பதால், இதை ஏற்றுக் கொள்ள இயலாது.
நீதிமன்றத்தை அணுகாத பள்ளிகளுக்கு கூட தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருக்கிறது. நீதிமன்றத்தில் வழக்குக் கூட தொடராத பள்ளிகளுக்குக் கூட, நீதிபதி (வாசுகி) இந்த இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்திருக்கக் கூடாது என்றே நாங்கள் கருதுகிறோம்.
அதனால், அனைத்து விவகாரங்களையும் பரிசீலித்த பின்னர், இடைக்காலத் தடை உத்தரவை ரத்து செய்கிறோம். “ என்று உத்தரவிட்டு விட்டு, கோவிந்தராஜன் குழு பரிந்துரை செய்த கட்டணத்திற்கு மேல் ஒரு பைசா கூட வசூலிக்கக் கூடாது என்றும், கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் அந்தப் பள்ளிகள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கட்டண நிர்ணயத்தில் குறை இருக்கக் கூடிய பள்ளிகள் கோவிந்தராஜன் குழுவை அணுகி தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால்
நீதிபதி ட்டி.எஸ்.சிவஞானம்
இதுதாண்டா தீர்ப்பு என்று சொல்லத் தோன்றுகிறது அல்லவா ? நீதிமன்றம், சட்டம், அனைத்துமே மக்களுக்காக. மக்களுக்கான ஒரு தீர்ப்பை வழங்கியுள்ள தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதியரசர் சிவஞானம் அவர்களுக்கு சவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
இது தீர்ப்பென்றால், சட்டாம்பி சுவாமிகள் மடத்தில் ஆண்டு விழாவை துவக்கி வைத்த, நீதியரசர் வாசுகி வழங்கியது …. ….. …. ?
பின்னூட்டத்தில் சொல்ல வேண்டாம். சவுக்கு வாசகர்கள் தங்கள் மனதிற்குள்ளே நினைத்துக் கொள்ளுங்கள்.