கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்பார்கள். ஆனால், கெட்டவனின் புளுகு எட்டு மணி நேரத்துக்கு கூட தாங்காது அல்லவா. அப்படிப்பட்ட ஒரு பச்சைப் பொய்யைத்தான் சட்டப்பேரவையில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், உடன்குடி டெண்டர் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக பல பொய்களை கூசாமல் கூறியுள்ளார். விபரங்களுக்குள் செல்வதற்கு முன்பாக, நத்தம் விஸ்வநாதன் எதிர்க்கட்சிகளின் ஒத்திவைப்புத் தீர்மானத்துக்கு பதில் அளித்து பேசியது என்ன என்பதை பார்த்து விடுவோம்.
“தி.மு.க., ஆட்சியில், 2007ல் அறிவிக்கப்பட்ட, உடன்குடி மின் திட்டத்தை நிறைவேற்றும் பணி, ‘பெல்’ நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டது; 2011 வரை, திட்டத்தை நிறைவேற்ற, அந்நிறுவனம் எந்த பணியையும் செய்யவில்லை.
இதன்பின், 2012 பிப்., 24ம் தேதி, புதிய உடன்குடி திட்டத்தை, ஜெயலலிதா அறிவித்தார். திட்டத்துக்கான சுற்றுச்சூழல் அனுமதி, 2012 டிச., 18ல் கோரப்பட்டது. இதன்பின் நிலம் ஒதுக்கப்பட்டு, 2013 அக்., 14ம் தேதி, டெண்டர் விடப்பட்டது. டெண்டரில், ‘பெல்’ நிறுவனம், சீன நிறுவனம் உள்ளிட்ட நான்கு நிறுவனங்கள் பங்கேற்றன. இந்நிறுவனங்களின் தகுதியை ஆய்வு செய்ய, நான்கு மாதங்கள் ஆனது. சீன நிறுவனம் வெளிநாட்டு நிறுவனம் என்பதால், இந்த கால அவகாசம் தேவைப்பட்டது.
இறுதியில், ‘பெல்’ மற்றும் சீன நிறுவனங்களின் டெண்டர்கள் ஏற்கப்பட்டன. இந்நிலையில், ‘பெல்’ நிறுவனத்துக்கு, ஏற்கனவே ஒப்பந்தம் அளிக்கப்பட்டு, ரத்து செய்யப்பட்டு உள்ளது. எனவே, அந்நிறுவனத்தை கருப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என, சீன நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கால், டெண்டரை இறுதி செய்து, நிறுவனத்தை தேர்ந்தெடுப்பதில் தாமதம் ஏற்பட்டது. சீன நிறுவனம் தொடர்ந்த வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதற்கிடையே, லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டதால், நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன; இதனால், புதிய திட்டங்களை இறுதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. லோக்சபா தேர்தல் முடிந்த பின்னரே, ‘பெல்’ மற்றும் சீன நிறுவனங்களின் டெண்டர்கள் திறக்கப்பட்டன.
இந்த இரு நிறுவனங்களின் டெண்டர்களை, திட்டத்துக்கு ஆலோசனை அளிக்கும், ஜெர்மனி நிறுவனம் ஆய்வு செய்தது. அதில், இரு நிறுவனங்களின் டெண்டரிலும், பல குறைபாடுகள் இருப்பதை சுட்டிக் காட்டியது. இரு டெண்டர்களை ஏற்க வேண்டுமானால், சுட்டிக் காட்டப்பட்ட குறைபாடுகளை சீர் செய்ய வேண்டும். டெண்டரை ஏற்கும் முடிவை, தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் முடிவு செய்து கொள்ளட்டும் என்றும், ஆலோசனை நிறுவனம் தெரிவித்தது.
டெண்டர் தொடர்பாக, ஆலோசனை நிறுவனம் சுட்டிக் காட்டியவை குறித்து, 2015 பிப்., 11 மற்றும் மார்ச் 3ம் தேதிகளில் நடந்த, மின்வாரியக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ‘குறைபாடு உள்ள டெண்டரை ஏற்க முடியாது. வெளிப்படையான டெண்டர் முறை சட்டத்தை பின்பற்றும் தமிழகத்தில், இதற்கு வாய்ப்பு இல்லை’ என, முடிவு செய்து, உடன்குடி திட்டத்துக்கு அறிவிக்கப்பட்ட டெண்டர், ரத்து செய்யப்பட்டது. இவ்விவரங்கள் அனைத்தும், டெண்டர் தொடர்பான, அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது; இதில், ஒளிவுமறைவு எதுவும் இல்லை. ஆனால், கற்பனையாக, அரசின் மீது குற்றம் சுமத்த வேண்டும் என்ற நோக்கில், எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன; அதில், உண்மை இல்லை. தி.மு.க., ஆட்சியில், 2007ல், உடன்குடி திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்பின், நான்கு ஆண்டுகள் ஆட்சியில் இருந்தனர். இந்த காலகட்டத்தில், திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த, வருவாய் ஆய்வாளரைக் கூட நியமிக்கவில்லை. சுற்றுச்சூழல் அனுமதி பெற விண்ணப்பிக்க வில்லை; திட்டத்துக்கான, நிதி ஆதாரத்தை திரட்டவில்லை; திட்டத்தை அறிவித்ததோடு, அதை மறந்து விட்டனர். ஆனால், தனியார் மின் கொள்முதலுக்காக, உடன்குடி திட்ட டெண்டரை, அரசு ரத்து செய்ததாக, தி.மு.க., தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டுகிறார். தி.மு.க., ஆட்சியில் நிலவிய மின்வெட்டால், தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்ற, யூனிட் மின்சாரத்தை, 20 ரூபாய்க்கு கொள்முதல் செய்தனர். ஆனால், தற்போது மொத்த கொள்முதலில், 3 சதவீத அளவுக்கே, கூடுதல் மின் கொள்முதல் செய்கிறோம்; அதுவும், யூனிட், 15.22 ரூபாய்க்கு தான் வாங்குகிறோம். தனியார் கொள்முதலுக்காக, உடன்குடி திட்ட டெண்டரை ரத்து செய்கிறோம் என்றால், தி.மு.க., ஆட்சியிலும் இதே நடைமுறையைப் பின்பற்றி தான், உடன்குடி திட்டத்தை, நான்கு ஆண்டுகள் நிறைவேற்றவில்லையா ?”
இதுதான் நத்தம் விஸ்வநாதன் புதனன்று சட்டப்பேரவையில் அளித்த அறிக்கை.
இந்த அறிக்கைக்கு வரிக்கு வரி பதில் அளிக்க வேண்டியது எதிர்க்கட்சிகளின் பொறுப்பு. ஆனால், அவர்கள் அவ்வாறு செய்வார்களா என்பது சந்தேகமே. நாம் நமது கடமையைச் செய்வோம்.
//”தி.மு.க., ஆட்சியில், 2007ல் அறிவிக்கப்பட்ட, உடன்குடி மின் திட்டத்தை நிறைவேற்றும் பணி, ‘பெல்’ நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டது; 2011 வரை, திட்டத்தை நிறைவேற்ற, அந்நிறுவனம் எந்த பணியையும் செய்யவில்லை.
தி.மு.க., ஆட்சியில், 2007ல், உடன்குடி திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்பின், நான்கு ஆண்டுகள் ஆட்சியில் இருந்தனர். இந்த காலகட்டத்தில், திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த, வருவாய் ஆய்வாளரைக் கூட நியமிக்கவில்லை. சுற்றுச்சூழல் அனுமதி பெற விண்ணப்பிக்க வில்லை; திட்டத்துக்கான, நிதி ஆதாரத்தை திரட்டவில்லை; திட்டத்தை அறிவித்ததோடு, அதை மறந்து விட்டனர். ஆனால், தனியார் மின் கொள்முதலுக்காக, உடன்குடி திட்ட டெண்டரை, அரசு ரத்து செய்ததாக, தி.மு.க., தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டுகிறார். தி.மு.க., ஆட்சியில் நிலவிய மின்வெட்டால், தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்ற, யூனிட் மின்சாரத்தை, 20 ரூபாய்க்கு கொள்முதல் செய்தனர். ஆனால், தற்போது மொத்த கொள்முதலில், 3 சதவீத அளவுக்கே, கூடுதல் மின் கொள்முதல் செய்கிறோம்; அதுவும், யூனிட், 15.22 ரூபாய்க்கு தான் வாங்குகிறோம். தனியார் கொள்முதலுக்காக, உடன்குடி திட்ட டெண்டரை ரத்து செய்கிறோம் என்றால், தி.மு.க., ஆட்சியிலும் இதே நடைமுறையைப் பின்பற்றி தான், உடன்குடி திட்டத்தை, நான்கு ஆண்டுகள் நிறைவேற்றவில்லையா ?”//
முதலில் உடன்குடி மின் திட்டம் பெல் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டது என்பதே ஒரு பச்சைப் பொய். உடன்குடி மின் திட்டத்தை நிறைவேற்ற பெல் நிறுவனமும், தமிழக அரசின் மின் வாரியமும் இணைந்து, “உடன்குடி மின் கழகம்” என்ற ஒரு புதிய நிறுவனத்தை உருவாக்கின. இதற்கென உருவாக்கப்பட்ட இந்த நிறுவனம் தனது பணிகளை தொடங்கியிருந்தது. உடன்குடியில் சுற்றுச் சுவர் அமைத்து, நிலத்தை சீர் செய்யும் பணியை எஸ்ஆர்சி ப்ராஜெக்ட்ஸ் என்ற நிறுவனம் மே 2012ல் முடித்திருந்தது. இந்தப் பணிக்கான மொத்த தொகை 297.70 கோடி. மார்ச் 2011ல் அண்ணா பல்கலைக்கழகம் சுற்றுச் சூழல் ஆய்வறிக்கையை தந்துள்ளது. அதன் பிறகு, தாமதமின்றி, பணிகள் நடந்து மே 2012ல் நிலம் சீர் செய்யும் பணியும் முடிவடைந்துள்ளது.
அடுத்ததாக, மார்ச் 2011 அன்று, அண்ணா பல்கலைக்கழகம், சுற்றுச் சூழல் ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அந்த ஆய்வறிக்கை மொத்தம் 112 பக்கங்களைக் கொண்டது. மே 2009 மற்றும் டிசம்பர் 2009 அன்று உள்ள தட்பவெட்பங்கள் அந்த அறிக்கையில் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அப்படியென்றால், இத்திட்டத்துக்கான பணிகள் தாமதமின்றியும், தொய்வின்றியும் நடைபெற்று வந்துள்ளன என்பதுதானே பொருள் ?
மேலும், மார்ச் 2011ல் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட அந்த ஆய்வறிக்கையில், அண்ணா பல்கலைக்கழகம், மிக மிக தெளிவாக, உடன்குடி மின் திட்டத்துக்காக 939 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன என்பதை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி இருக்கையில் நிலத்தை கையகப்படுத்த வருவாய் ஆய்வாளரைக் கூட திமுக அரசு நியமிக்கவில்லை என்பது பச்சைப் பொய்யா இல்லையா ? வருவாய் ஆய்வாளரைக் கூட நியமிக்கவில்லை என்றால், அண்ணா பல்கலைக்கழகத்தின் கடல் மேலாண்மைப் பிரிவு தயாரித்த அறிக்கையில் 939 ஏக்கர் நிலம் உடன்குடி திட்டத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்று எதற்காக குறிப்பிடப்பட்டுள்ளது ?
//இதன்பின், 2012 பிப்., 24ம் தேதி, புதிய உடன்குடி திட்டத்தை, ஜெயலலிதா அறிவித்தார். திட்டத்துக்கான சுற்றுச்சூழல் அனுமதி, 2012 டிச., 18ல் கோரப்பட்டது. இதன்பின் நிலம் ஒதுக்கப்பட்டு, 2013 அக்., 14ம் தேதி, டெண்டர் விடப்பட்டது. டெண்டரில், ‘பெல்’ நிறுவனம், சீன நிறுவனம் உள்ளிட்ட நான்கு நிறுவனங்கள் பங்கேற்றன. இந்நிறுவனங்களின் தகுதியை ஆய்வு செய்ய, நான்கு மாதங்கள் ஆனது. சீன நிறுவனம் வெளிநாட்டு நிறுவனம் என்பதால், இந்த கால அவகாசம் தேவைப்பட்டது //
பிப்ரவரி 24, 2012ல் பெல் – தமிழக மின் வாரிய கூட்டுத் திட்டத்தை ஜெயலலிதா ரத்து செய்தது உண்மையே. புதிய திட்டத்தை அறிவித்ததும் உண்மையே. ஆனால், அதன் பிறகு, 14 அக்டோபர் 2013ல் புதிய டெண்டர் கோரப்பட்டது என்று நத்தம் விஸ்வநாதன் கூறுவது மீண்டும் ஒரு பச்சைப் பொய். டெண்டருக்கான விளம்பரம் 7 ஏப்ரல் 2013 அன்று நாளிதழ்களில் வெளியிடப்பட்டது. அந்த விளம்பரத்திலேயே 24 ஏப்ரல் 2013 முதல் டெண்டர் ஆவணங்கள் விற்பனை செய்யப்படும் என்பதும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி இருக்கையில் நத்தம் எப்படிப்பட்ட பச்சைப் பொய்யை சட்டப்பேரவையில் குறிப்பிட்டுள்ளார் பாருங்கள்.
அந்த டெண்டரில் மொத்தம் நான்கு நிறுவனங்கள் பங்கேற்றது உண்மையே. அவற்றுள் மூன்று சீன நிறுவனங்கள். ஒன்று பெல் நிறுவனம். இரண்டு சீன நிறுவனங்களின் விலைப் புள்ளிகள் தொழில் நுட்பக் குறைபாடு காரணமாக தள்ளுபடி செய்யப்பட்டன. மீதம் உள்ளவை ஒரு சீன நிறுவனம் மற்றொன்று பெல் நிறுவனம். சீன நிறுவனம் வெளிநாட்டு நிறுவனம் என்பதால் அதன் தகுதியை ஆய்வு செய்ய நான்கு மாதம் ஆனது என்கிறார் நத்தம் விஸ்வநாதன். வெளிநாட்டு நிறுவனத்தை ஆய்வு செய்ய அப்படி என்ன சிறப்பான காரணம் தேவைப்படப் போகிறது. அனைத்து நிறுவனங்களின் டெண்டர்களும், மின் வாரியத்தில் உள்ள பொறியாளர்களால் ஆய்வு செய்யப்படும். அவர்கள் ஆய்வு செய்து எவை தகுதியானவை, எவை தகுதியற்றவை என்பதை முடிவு செய்வார்கள். இதில் வெளிநாட்டு நிறுவனம் என்பதால் அப்படி என்ன புதிய ஆய்வை செய்யப் போகிறார் நத்தம் ?
மின் வாரியத்தின் ஆவணங்களின்படி, 11 நவம்பர் 2013 அன்று கூடிய மின் வாரிய தொழில்நுட்பக் குழு, பெல் நிறுவனம் மற்றும் ஒரு சீன நிறுவனத்தின் டெண்டர்கள் தொழில்நுட்ப ரீதியாக தகுதியானவை என்றும், மற்ற இரண்டு சீன நிறுவனங்களின் டெண்டர்களும் தகுதியற்றவை என்று முடிவெடுத்துள்ளன. மின் வாரியத்தின் எந்தக் கோப்பிலும், நத்தம் விஸ்வநாதன் குறிப்பிடுவது போல, வெளி நாட்டு நிறுவனங்கள் என்பதால், அவற்றை பரிசீலிக்க தாமதமானது என்று குறிப்பிடப்படவில்லை.
// இறுதியில், ‘பெல்’ மற்றும் சீன நிறுவனங்களின் டெண்டர்கள் ஏற்கப்பட்டன. இந்நிலையில், ‘பெல்’ நிறுவனத்துக்கு, ஏற்கனவே ஒப்பந்தம் அளிக்கப்பட்டு, ரத்து செய்யப்பட்டு உள்ளது. எனவே, அந்நிறுவனத்தை கருப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என, சீன நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கால், டெண்டரை இறுதி செய்து, நிறுவனத்தை தேர்ந்தெடுப்பதில் தாமதம் ஏற்பட்டது. சீன நிறுவனம் தொடர்ந்த வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது//
இந்த இடத்தில்தான் நத்தம் விஸ்வநாதனின் திருட்டுத்தனத்தை பார்க்க வேண்டும். பெல் நிறுவனத்துக்கு எதிராக சீன நிறுவனம் வழக்கு தொடுத்திருந்தது எண்ணூர் அனல்மின் நிலையம் தொடர்பாக. அந்த வழக்கின் எண் WP 27529 of 2014. அந்த வழக்கிலும், சீன நிறுவனம் பெல் நிறுவனத்தை கருப்புப் பட்டியலில் வைக்க வேண்டும் என்று ஒரு போதும் சொல்லவில்லை. தமிழக ஒப்பந்தப்புள்ளிகள் சட்டத்தின்படி, ஏற்கனவே அளித்த ஒப்பந்தங்களை சரி வர நிறைவேற்றாமல் தாமதம் செய்யும் நிறுவனத்தின் விலைப்புள்ளியை நிராகரிக்க வேண்டும் என்ற விதியை காரணம் காட்டி, எண்ணூர் அனல் மின் நிலைய டெண்டரில், பெல் நிறுவனத்தின் விலைப்புள்ளி நிராகரிக்கப்பட வேண்டும் என்றே கோரியிருந்தது. அதற்கும் உடன்குடி டெண்டருக்கும் என்ன சம்பந்தம் ? எதற்காக அந்த வழக்கை உடன்குடி விவகாரத்தில் இணைக்கிறார் அமைச்சர் ? இந்த வழக்கு நிலுவையில் இருந்தால், உடன்குடி டெண்டரை முடிவு செய்வதில் எப்படி தாமதம் ஏற்படும் ? மேலும், இந்த வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது என்று நத்தம் விஸ்வநாதன் கூறுவது மற்றுமொறு பச்சைப் பொய். இந்த வழக்கில் இன்னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை. நீதிபதி ராமசுப்ரமணியம் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்து, இதில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்னமும் இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த நேரத்தில் சீன நிறுவனத்தோடு பேச்சுவார்த்தை நடந்தபோது சீன அதிகாரிகளிடம் நத்தம் விஸ்வநாதன் கூறியது என்ன என்பதை கவனித்துப் பார்க்க வேண்டும். உடன்குடி டெண்டர் தொடர்பாக பேச்சு நடந்து கொண்டிருந்தபோது, சற்றே வார்த்தைகள் தடித்தன. சீன அதிகாரிகள், எண்ணூரிலும் இதையேதான் செய்தீர்கள். இங்கேயும் இதையே செய்கிறீர்கள். உங்களால்தான் எண்ணூர் விவகாரத்தில் வழக்கு தொடுக்க வேண்டியதாயிற்று. நீங்கள் மீண்டும் இந்த விவகாரத்தில் இப்படி நடந்து கொண்டால், நாங்கள் நீதிமன்றத்தைத்தான் நாட வேண்டி வரும் என்று கூறிபோது, நத்தம் சொன்ன பதில் என்ன தெரியுமா ? “நீதிமன்றத்தைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள். வழக்குகளில் தீர்ப்பு எப்போது வரும், எப்போது வரவைக்க வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும்.” என்று வெளிப்படையாக கூறியுள்ளார். இதைக் கேட்ட அந்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நத்தம் கூறியது ஒன்றும் தவறில்லையே…. ? தமிழகத்தில் முடை நாற்றமெடுக்கும் இத்தனை ஊழல்கள் நடந்து கொண்டிருந்தும், ஒரே ஒரு வழக்கில் கூட இது வரை அரசுக்கு கண்டனம் தெரிவிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு நீதிபதிக்கும் முதுகெலும்பு இல்லையே… இப்படி முதுகெலும்பற்ற நீதிபதிகள் இருக்கையில் நத்தம் போன்ற ஊழல் பேர்வழிகளுக்கு ஏன் துணிச்சல் வராது ?
// இதற்கிடையே, லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டதால், நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன; இதனால், புதிய திட்டங்களை இறுதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. லோக்சபா தேர்தல் முடிந்த பின்னரே, ‘பெல்’ மற்றும் சீன நிறுவனங்களின் டெண்டர்கள் திறக்கப்பட்டன. //
மக்களவைத் தேர்தலுக்கான நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் டெண்டர்களை திறக்க முடியவில்லை என்று கூறியது நியாயமானதே. மக்களவைத் தேர்தலின் முடிவுகள் வெளியிடப்பட்டது 16 மே 2014. உடன்குடி டெண்டருக்கான விலைப்புள்ளிகள் எப்போது திறக்கப்பட்டன தெரியுமா ? 18 அக்டோபர் 2014. சீன நிறுவனம் வெளிநாட்டு நிறுவனம் என்பதால், அதை மதிப்பிட தாமதமானது என்று கூறிய நத்தம் விஸ்வநாதன், தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட ஐந்து மாதங்களுக்குப் பிறகு விலைப்புள்ளிகளை திறந்ததன் தாமததத்துக்கு என்ன விளக்கம் தருவார் ?
// இந்த இரு நிறுவனங்களின் டெண்டர்களை, திட்டத்துக்கு ஆலோசனை அளிக்கும், ஜெர்மனி நிறுவனம் ஆய்வு செய்தது. அதில், இரு நிறுவனங்களின் டெண்டரிலும், பல குறைபாடுகள் இருப்பதை சுட்டிக் காட்டியது. இரு டெண்டர்களை ஏற்க வேண்டுமானால், சுட்டிக் காட்டப்பட்ட குறைபாடுகளை சீர் செய்ய வேண்டும். டெண்டரை ஏற்கும் முடிவை, தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் முடிவு செய்து கொள்ளட்டும் என்றும், ஆலோசனை நிறுவனம் தெரிவித்தது. //
டெண்டரை ஆய்வு செய்த ஜெர்மன் நிறுவனம் என்று கூறுகிறாரே நத்தம் விஸ்வநாதன்… அந்த நிறுவனத்தை இந்தப் பணிக்கு அமர்த்தியது யார் ? தமிழக மின் வாரியமே. இந்த நிறுவனத்திடம், சீன நிறுவனத்தின் டெண்டர்களில் பெரும் குறைகள் இருப்பதாக அறிக்கை தருமாறு, தலைமைச் செயலாளர் ஞானதேசிகனும், நத்தம் விஸ்வநாதனும் கடும் அழுத்தம் தந்ததாக தெரிவிக்கின்றன மின் வாரிய வட்டாரங்கள். ஆனால் அதையும் மீறி, இந்த நிறுவனம் உள்ளது உள்ளபடி அறிக்கை அளித்திருந்தது.
இரண்டு நிறுவனங்களின் டெண்டர்களிலும் குறை இருந்தது. அதனால் டெண்டரை ஏற்கும் முடிவை மின் வாரியத்திடமே அந்த ஆய்வு நிறுவனம் விட்டிருந்தது என்று கூறுகிறார் நத்தம். ஆனால் நத்தம் கூறாமல் விட்டது, இரண்டு நிறுவனங்களின் டெண்டர்களிலும் குறை இருந்தாலும், சீன நிறுவனத்தின் விலைப்புள்ளியே குறைவானது என்பதையும் அந்த ஜெர்மன் ஆய்வு நிறுவனம் கூறியிருந்ததை நத்தம் விஸ்வநாதன் வசதியாக குறிப்பிட மறந்து விட்டார். மேலும், அந்நிறுவனம் டெண்டரில் நிவர்த்தி செய்ய முடியாத குறைகள், டெண்டர் ரத்து செய்யப்பட வேண்டிய குறைகள் என்று எவற்றையும் குறிப்பிடவில்லை. மேலும், டெண்டரை ஏற்றுக் கொள்வதா வேண்டாமா என்பதை மின் வாரியமே முடிவு செய்யட்டும் என்றுதானே அந்த ஆய்வு நிறுவனம் குறிப்பிட்டிருந்தது ? அப்படி இருக்கையில், டெண்டரை ரத்து செய்ய வேண்டிய காரணம் என்ன ? இந்த டெண்டர் வெளியிடப்பட்ட நாள் முதலாக, சீன நிறுவனத்தோடு மின் வாரியம் பத்துக்கும் மேற்பட்ட ஆலோசனைக் கூட்டங்களை பல்வேறு காரணங்களுக்கான நடத்தியுள்ளது. அதே போல, ஜெர்மன் ஆய்வு நிறுவனம் குறிப்பிட்டிருந்த அந்த குறைபாடுகளை மின் வாரியம், பெல் மற்றும் சீன நிறுவனம் ஆகிய இரு நிறுவனங்களோடும் பேச்சுவார்த்தை நடத்தி அந்தக் குறைகளை சரி செய்திருக்க முடியும். அப்படி செய்திருந்தால், தற்போது ஏற்பட்டுள்ள இந்த வழக்கையும், ஐந்தாண்டு கால தாமதத்தையும் எளிதாக தவிர்த்திருக்க முடியும். அரசு நிர்வாகத்தில் பரிச்சயம் உள்ளவர்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும் ஒரு விவகாரம் என்னவென்றால், ஒரு டெண்டரை ரத்து செய்து, மீண்டும் ஒரு டெண்டர் விளம்பரப்படுத்தி ஒரு திட்டத்தை செயல்படுத்த பல ஆண்டுகள் ஆகும் என்பதே. ஏற்கனவே மின் பற்றாக்குறையால் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், ஒரு டெண்டரை எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக முடிப்பதே ஒரு நல்ல நிர்வாகத்தின் முடிவாக இருக்கும். ஆனால் கைதியின் வழிகாட்டுதலின்படி நடக்கும் ஒரு நிர்வாகத்தில் நாம் என்ன எதிர்ப்பார்க்க முடியும் ?
//டெண்டர் தொடர்பாக, ஆலோசனை நிறுவனம் சுட்டிக் காட்டியவை குறித்து, 2015 பிப்., 11 மற்றும் மார்ச் 3ம் தேதிகளில் நடந்த, மின்வாரியக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ‘குறைபாடு உள்ள டெண்டரை ஏற்க முடியாது. வெளிப்படையான டெண்டர் முறை சட்டத்தை பின்பற்றும் தமிழகத்தில், இதற்கு வாய்ப்பு இல்லை’ என, முடிவு செய்து, உடன்குடி திட்டத்துக்கு அறிவிக்கப்பட்ட டெண்டர், ரத்து செய்யப்பட்டது. இவ்விவரங்கள் அனைத்தும், டெண்டர் தொடர்பான, அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது; இதில், ஒளிவுமறைவு எதுவும் இல்லை. ஆனால், கற்பனையாக, அரசின் மீது குற்றம் சுமத்த வேண்டும் என்ற நோக்கில், எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன; அதில், உண்மை இல்லை. //
11 பிப்ரவரி 2015 அன்று நடந்த மின் வாரிய கூட்டத்தில் உடன்குடி டெண்டர் குறித்து எவ்வித முடிவும் எடுக்காமல் தள்ளிப்போடப்பட்டது. மார்ச் மாதம் நடந்த கூட்டத்தில் இரண்டு நிறுவனங்களின் டெண்டர்களிலும் குறைபாடு உள்ளதாக ஜெர்மன் நிறுவனத்தின் பரிந்துரை பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தக் குறைகளை சுட்டிக் காட்டிய அந்த ஜெர்மன் நிறுவனம், சீன நிறுவனம் குறைந்த விலைப்புள்ளியோடு இருக்கிறது என்றும், எந்த நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்குவது என்பதை மின் வாரியம் முடிவு செய்யட்டும் என்றும், கூறியதோடு கூடுதலாக ஒரு விஷயத்தை கூறியிருந்தது. இந்த இரண்டு நிறுவனங்களில் எந்த நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கினாலும், அந்த நிறுவனத்திடம் மின் வாரியம் கேட்டுப் பெற வேண்டியவை பின் வருவன என்று அந்த ஜெர்மன் நிறுவனம் குறிப்பிட்டிருந்தது. அதாவது, அந்தப் பட்டியலில் உள்ள குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டால், அந்த நிறுவனத்தின் டெண்டர்கள் முழுமையானவை என்பதே அதன் பொருள். நிவர்த்தி செய்யவே முடியாத டெண்டர்களுக்கு ஜெர்மன் ஆய்வு நிறுவனம் வக்காலத்து வாங்க வேண்டிய அவசியமே இல்லை. அப்படி இருக்கையில், ஒரு டெண்டரை ரத்து செய்து அதை நியாயப்படுத்தி பொய்க்கு மேல் பொய்யாக கூசாமல் உரைத்துக் கொண்டிருக்கிறார் நத்தம் விஸ்வநாதன்.
அடுக்கடுக்கான பொய்களை மேலும் மேலும் அடுக்குவதன் மூலம் உண்மையை மறைத்து விடலாம் இதனால் தனது தவறை யாருமே கண்டு பிடிக்க முடியாது என்று நினைக்கிறார் நத்தம். இப்படி மறைப்பதன் மூலம் தனது பகல்கொள்ளையை தொடர்ந்து நடத்தலாம் என்று மனப்பால் குடிக்கிறார் நத்தம். கெட்டிக்காரன் புளுகே எட்டு நாளைக்கு என்றால்……. நத்தத்தின் புளுகு ?
நத்தம் விஸ்வநாதனை அப்படியே வர்ணித்துப் பாடல் எழுதியிருந்தால் எப்படி இருக்கும் என்பதை அன்றே வாலி எழுதியுள்ளார்.
சிலர் ஆசைக்கும் தேவைக்கும்
வாழ்வுக்கும் வசதிக்கும்
ஊரார் கால் பிடிப்பார்
ஒரு மானமில்லை
அதில் ஈனமில்லை
அவர் எப்போதும்
வாழ்பிடிப்பார்
http://www.financialexpress.com/article/industry/companies/madras-hc-dismisses-plea-against-power-project-allocation/61651/
nice post. who will rescue this country?
அரசியல்வாதிகள் பொறுக்கித் தின்ன அரசியல்.- தந்தை பெரியார்
அவர் எப்போதும்
வா xழ்xபிடிப்பார்
வால்பிடிப்பார்
// அடுக்கடுக்கான பொய்களை மேலும் மேலும் அடுக்குவதன் மூலம் உண்மையை மறைத்து விடலாம் இதனால் தனது தவறை யாருமே கண்டு பிடிக்க முடியாது என்று நினைக்கிறார் நத்தம். //
கல்லையும் மண்ணையும், மிருகங்களையும், லிங்கத்தையும் யோனியையும் கடவுளென புளுகி உன்னையே நீ ஏமாற்றிக் கொள்ளும்போது, அவனுடைய பொய்யை உன்னால் எப்படி தடுக்கமுடியும்?.
“எங்களுடைய பொய்க்கடவுள்கள் யாரும் எங்களை காப்பாற்ற மாட்டார் என்பது எங்களுக்கு நன்றாகத்தெரியும். உன்னுடைய அல்லாஹ்வை கூப்பிட்டால், அவன் வந்து காப்பாற்றுவானா?” என நீ கேட்கலாம்.
“உனக்காக நான் காத்திருக்கிறேன்” என திருக்குரானில் அல்லாஹ் வாக்களிக்கிறான். பாதிக்கப்பட்ட அனைவரும் அவனுடைய திருக்குரானை எடுங்கள். ஒட்டுமொத்தமாக அவனிடம் மண்டியிட்டு “அல்லாஹ் எங்களை இந்த அயோக்கியரிடமிருந்து காப்பாற்று. எங்களுக்கு நல்வழி காட்டு. எங்களுக்கு நீதிகொடு” என கதறுங்கள். நொடிப்பொழுதில் உங்களுடைய பிரச்னைகள் மாயமாய் மறைகிறதா இல்லையா பாருங்கள்.
எப்படி அநீதிக்காரனை ஆட்சியிலிருந்து அகற்றி நீதியான ஆட்சியாளனை கொண்டு வருவது?. இவன் நீதி தவறமாட்டான் என எப்படி கண்டுகொள்வது?.
நீதி வேண்டும், அயோக்கியர் தண்டிக்கப்பட வேண்டும், மக்கள் தீர்ப்பு தரவேண்டும் என்று எவ்வளவு நாள் கதறமுடியும்?. ஆளுங்கட்சி, எதிர் கட்சி, முதல்வன், நீதிபதி, போலிஸ் என மேலிருந்து கீழ்வரை அயோக்கியர் ஆட்சி செய்யும்போது, நீதியை யார் வழங்குவது?.
இது போன்ற புரட்சி மனிதசரித்திரத்தில் நடந்துள்ளதா?. அநீதிக்கெதிராக யாராவது எழுந்து நின்றாரா?. எந்த அடிப்படையில் அவர் ஆட்சி செய்தார்?. எப்படி நீதி வழங்கினார்?. எப்படி அநீதியை ஒழித்து, நீதியை நிலைநாட்டுவது என எந்த புத்தகமாவது சொல்கிறதா?. தேடிப்பார். உனது கையில் கிடைத்தால், அது சொல்வதை செய்.
This is total irresponsible answer from minister. What are the other options available to speed-up the judgement? why such a major delay? who is controlling the judges? Tamil nadu over production(GDP) is going extremely bad.
Due to alcohol people are loosing their family and family integrity, family wealth etc. we need to bring appropriate quick fix for this in-efficient leaders from both the local parties. They must be punished for their mistakes/corruptions. Not 6 years in jail; Issue the judgement like life long in jail; 35 years in jail; 45 years in jail.
திருடனே திருந்தனும்
மக்களே சட்டத்தை கையில் எடுக்க வேண்டும்
அனைத்து அதிகாரிகளும் மாற வேண்டும் இதில் ஏதாவது ஒன்று நடந்தால் மட்டுமே முடியும்
நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில் வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி
PEi Atchi SeithAl piNamthinnum sAththirangkaL