நக்கீரன் காமராஜ் ‘குருமாராஜ்’ என்ற பெயரில் சவுக்கு வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். திமுக ஆட்சியில் நடைபெற்றுள்ள ஊழல்களில் பல வகையில் பங்கெடுத்தவர். கருணாநிதியைப் போலவே, இவருக்கும் திமுக நிரந்தரமாக ஆட்சியில் இருக்கப் போவதாக ஒரு நம்பிக்கை இருந்தது.
ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட பல்வேறு ஊழல்களில் ஈடுபட்ட கருணாநிதியை விட, காமராஜ் மிக மிக மோசமானவர். ஏனென்றால், கருணாநிதி அரசு, கடந்த ஐந்தாண்டுகளாக ஈடுபட்டு வந்த பல்வேறு ஊழல்களை மறைத்து, அரசுக்கு நற்சான்று வழங்கியதோடல்லாமல், மக்கள் அந்த ஊழல்களைப் பற்றி கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு, செக்ஸ், கிளுகிளுப்பு போன்ற விஷயங்களை பத்திரிக்கையில் எழுதி, பணம் பார்த்ததோடல்லாமல், எதிர்க்கட்சிகளைப் பற்றி மட்டும் பக்கம் பக்கமாக எழுதினார். பாமக வை, திமுக கூட்டணியை விட்டு விலக்கிய போது, அதற்கு காரணமாக சொல்லப் பட்ட காடுவெட்டி குரு பேசிய பேச்சை அப்படியே வெளியிட்டு, கருணாநிதிக்கு ஜால்ரா அடித்தார்.
நக்கீரன் பத்திரிக்கை என்பது எதிர்ப்புக்களில் உருவானது. நக்கீரன் பத்திரிக்கை சந்தித்தது போன்ற அடக்குமுறைகளை, இந்தியாவில் எந்தப் பத்திரிக்கையுமே சந்தித்திருக்காது என்று உறுதியாகக் கூறலாம். இத்தனை அடக்குமுறைகளையும் தாண்டி, நக்கீரன் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறதென்றால், அதற்குக் காரணம், ஆட்சியில் நடைபெறும் பல்வேறு ஊழல்களை வெளியிட்டதுதான்.
ஆனால், நக்கீரனின் ஜெயலலிதா எதிர்ப்பு என்பது, கோபாலை நடுநிலை தவற வைத்தது. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்துக்கு, பைப் மூலம் பீர் வரவைக்கிறார்கள் என்று பொய்ச் செய்தி வெளியிடும் அளவுக்கு நக்கீரன் தரம் தாழ்ந்தது.
2006ல் திமுக ஆட்சிக்கு வந்தது முதலாகவே, காமராஜ், பணம் சம்பாதிக்கத் தொடங்கினார். காமராஜுக்கு, கருணாநிதியுடன் ஏற்பட்ட நெருக்கம் அதிகமாக, அதிகமாக, செல்வாக்கும் அதிகாரமும் பெருகியது. இந்த அதிகாரத்தை பயன்படுத்தி, சொத்து வாங்கிக் குவிப்பதிலும், கட்டப் பஞ்சாயத்து செய்வதிலும், தீவிரமாக ஈடுபட்டார் காமராஜ். ஆளுங்கட்சியின் ஊதுகுழலாக ஆகிப் போனதால், நக்கீரன் நடத்த பெரிய அளவில் மெனக்கிட வேண்டியதில்லை.
அதனால், இணை ஆசிரியராக இருந்த காமராஜுக்கு, ரியல் எஸ்டேட், கட்டப் பஞ்சாயத்து, காவல் துறை அதிகாரிகள் நியமனம், உயர் அதிகாரிகளோடு நெருக்கமான பழக்கம் என்று தன் வாழ்க்கையை மாற்றிக் கொண்டார். ஸ்பெக்ட்ரம் ஊழலில், முக்கியப் பங்கு வகித்த காமராஜ் ஆண்டிமுத்து ராசாவுக்கு உதவியாக அந்த ஊழல் பணத்தை முதலீடு செய்வதில், பெரும் உதவிகள் செய்து, தானும் ஒரு கணிசமான பங்கை அடித்தார்.
ஊடகங்களில் ஸ்பெக்ட்ரம் பற்றிய செய்திகள் வரத் தொடங்கியவுடன், காமராஜின் கவனம் மீண்டும் நக்கீரன் பக்கம் வந்தது. ஊரே, ஸ்பெக்ட்ரம் ஊழலைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கும் போது, நக்கீரனில் மட்டும் ஆ.ராசாவுக்கு ஆதரவாக செய்திகள் வெளியிடப் பட்டது. நக்கீரனை படிப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து போனாலும், விடாமல் ஆ.ராசா நல்லவர், தலித் தலைவர், தகத்தகாய கதிரவன் என்று அள்ளி விட்டுக் கொண்டிருந்தார் காமராஜ்.
தான் கஷ்டப்பட்டுக் கட்டிய சாம்ராஜ்யம், கண் முன்னே சரிவதைக் கண்டு, கோபாலும், எவ்வித வருத்தமும் தெரிவிக்காமல், காமராஜின் அயோக்கியத்தனங்களுக்கு, ஜால்ரா போட்டுக் கொண்டிருந்தார். பத்திரிக்கையாளர் வட்டாரங்களில் விசாரிக்கையில், ஸ்பெக்ட்ரம் ஊழலில் கோபாலுக்கும் கணிசமான ஒரு பங்கு கொடுக்கப் பட்டிருப்பதாகவும், இல்லையென்றால், ஸ்பெக்ட்ரமில் ஊழலே நடைபெறவில்லை என்றும், ராசாவுக்கு ஆதரவாக எழுதப் பட்ட அத்தனை செய்திகளையும் அமைதியாக கோபால் வேடிக்கை பார்க்கும் மனிதரல்ல என்று தெரிவிக்கின்றனர். (கோபால் ஸ்பெக்ட்ரம் பணத்தை அவர் மீசையில ஒளிச்சு வச்சுருப்பாரோ ?)
தமிழ்நாட்டில், வீட்டு வசதி வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள, பல்வேறு வீட்டு மனைகளையும், நிலங்களையும், சமூக சேவகர் என்ற பெயரில் வளைக்க அதிகார மையத்தில் உள்ள ஒரு கூட்டம், திட்டம் போட்டு, பணிகளை துவக்கிய போது, அத்திட்டத்தில் முழுமையாக பங்கேற்ற காமராஜ், தனது மனைவிக்கும், திருவான்மியூரில் இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை, பாதி விலைக்கு பெற்றார். அந்த வீட்டு மனையை ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் நிறுவனத்துடன் கூட்டு ஒப்பந்தம் போட்டதன் மூலம், பல கோடி ரூபாய் லாபத்தைப் பார்த்தார். இது போல பத்திரிக்கையாளர் என்ற பெயரில், அரசியல்வாதியை விட, மிக மிக மோசமான செயல்களில் இறங்கத் தொடங்கினார்.
பகட்டும், படோடாபமும், காமராஜ் கண்ணை மறைத்தன. ஜாபர் சேட்டின் நட்பு, காமராஜை தன்னை ஒரு சக்ரவர்த்தியாகவே கருத வைத்தது. தன்னுடைய தொலைபேசி ஒட்டுக் கேட்கப் பட்ட போது மட்டும் துடிதுடித்து, ஜாபர் சேட்டை சந்தித்து கடுமையாக கோபப் பட்ட காமராஜ், கடுமையான மனித உரிமை மீறலாக, முக்கிய நபர்களின் தொலைபேசிகள் அத்தனையும், சட்ட விரோதமாக ஒட்டுக் கேட்கப் பட்ட போது, அதைத் தட்டிக் கேட்காதது மட்டுமல்ல, அந்த உரையாடல்களில் உள்ள தகவல்களை ஜாபர் சேட் பகிர்ந்து கொள்ளும் போது, அவைகளை கேட்டு திளைத்தார்.
ஜாபர் சேட்டின் அத்தனை அயோக்கியத்தனங்களுக்கும் துணையாக நின்றார். காமராஜின் நெருக்கடியான நேரங்களில் தோளோடு தோள் நின்ற பத்திரிக்கையாளர்கள் இந்த அதிகார போதை காரணமாக விலகிப் போன போது கூட காமராஜ் கவலைப் படாமல், பத்திரிக்கையாள தோழர்களை விட, ஜாபர் சேட்டின் நட்பே பிரதானம் என்று கருதினார்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் உச்சக் கட்டத்தில் இருந்த போது, அது போல ஊழலே நடைபெறவில்லை என்று நக்கீரனில் தொடர்ந்து எழுதியதோடல்லாமல் ஊடகப் பேரவை என்ற போர்வையில், ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஆண்டிமுத்து ராசா, தலித் என்பதால் குற்றம் சாட்டுகிறார்கள் என்று கூட்டம் நடத்தினார்.
காமராஜைப் பற்றி, சவுக்கு தொடர்ந்து எழுதி வந்த போதெல்லாம், சவுக்குக்கு தெரிந்த பத்திரிக்கையாளர்களே, காமராஜைப் பற்றி சவுக்கு அபாண்டமாக எழுதுவதாக, கடிந்து கொண்டார்கள். காமராஜ் சவுக்கு பதிவுகளைப் பற்றி கடும் கோபம் அடைந்து, சவுக்கைப் பற்றி தனிப்பட்ட அவதூறு பிரச்சாரங்களில் இறங்கினார்.
ஆனால், இதற்கெல்லாம் விடையாக, காமராஜ் வீடு, ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக சிபிஐ அதிகாரிகளால் சோதனையிடப் பட்ட போதுதான், முதன் முதலாக, சவுக்கு அவதூறாக எழுதவில்லை என்பதை அந்தப் பத்திரிக்கையாளர்கள் புரிந்து கொண்டார்கள். ஆனாலும், தனது தவறை திருத்திக் கொள்ளாமல், காமராஜ், சவுக்கு மீதான வழக்கை துரிதப் படுத்துவதிலும், வழக்கில் எப்படியாவது தண்டனை பெற்றுத் தரவேண்டும் என்ற பழிவாங்கும் நோக்கிலும் செயல்படத் தொடங்கினார்.
சவுக்கு காமராஜ் போல, திருட்டுத் தனமாக போலி சமூக சேவகர் சான்றிதழ் தயாரித்து, வீட்டு மனை ஒதுக்கீடு பெற்றதற்காக வழக்கை சந்திக்கவில்லை. ஸ்பெக்ட்ரம் ஊழலில் பங்கு வகித்ததற்காக வழக்கை சந்திக்கவில்லை. லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரை மிரட்டி, ஒரு எதிர்க்கட்சித் தலைவர் மீது பொய் வழக்கு போட உத்தரவிட்ட ஒரு தலைமைச் செயலாளரின் உரையாடலை வெளியிட்டதாகத் தான் வழக்கு. இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருப்பதால், இது குறித்து எதுவும் கூற விரும்பவில்லை என்றாலும், இது போல ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டால், சவுக்கு இந்தக் குற்றத்தை செய்து மீண்டும் சிறை செல்ல தயாராகவே இருக்கிறது, மீண்டும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் விழும் அடிகளுக்கும் தயாராகவே இருக்கிறது என்பதை காமராஜுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறது மக்களுக்கு உண்மையை தெரிவிக்க வேண்டும் என்பது, இந்தத் துன்பங்களையெல்லாம் விட முக்கியம். உலக வல்லரசுகள் அத்தனையும், கொலை செய்ய துடித்து விரட்டு விரட்டென்று விரட்டும் போது, ஜுலியன் அசாஞ்ஜ் தொடர்ந்து கேபிள்களை வெளியிடவில்லையா ? அவருக்கு என்ன பணத்தின் மீது ஆசையா? புகழின் மீது ஆசையா ?
இத்தனையும் செய்த காமராஜை மன்னித்து விடலாம். ஆனால், சாதிக் பாட்சாவின் மரணத்தில் காமராஜ் வகித்த பங்கை மன்னிக்கவே முடியாது.
பெரிய அளவில் படிப்பறிவில்லாத சாதிக் பாட்சா காமராஜ், ஆண்டிமுத்து ராசா போன்றவர்களையெல்லாம் நம்பினார். சாதிக்குக்கு பணத்தின் மீது மிகுந்த ஆர்வம் இருந்தாலும், மான மரியாதைக்கு அஞ்சினார். தன் பெண்டாட்டி பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்பினார்.
சாதிக் இறப்பதற்கு பத்து நாட்களுக்கு முன் நடந்த சம்பவங்கள், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளன. சாதிக் பாட்சாவை சிபிஐ தொடர்ந்து விசாரித்து வந்தது. சாதிக் கொடுத்த தகவல்களின் அடிப்படையிலேயே, ஆண்டிமுத்து ராசா, பல்வா போன்றவர்கள் கைது செய்யப் பட்டதாக ராசாவுக்கு நெருக்கமானவர்கள் நம்பினார்கள். இவ்வாறு நம்பியவர்களில் ராசாவின் அண்ணன் கலியபெருமாளும் ஒருவர்.
சாதிக் சிபிஐயிடம் உண்மையை சொல்லியிருக்காவிட்டால், ஆண்டிமுத்து ராசா, சிறைக்கே போயிருக்க மாட்டார் என்று முட்டாள்த் தனமாக நம்பிக் கொண்டிருந்தார்கள்.
கலியபெருமாள், சாதிக் இறப்பதற்கு ஒரு வாரம் முன்பு நடந்த சம்பவங்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.
சாதிக்குக்கு, ஒரு பக்கம் சிபிஐ நெருக்கடி என்றால், மற்றொரு பக்கம், ராசா குடும்பத்தார் மற்றும் ராசாவின் நண்பர்கள் கொடுத்த நெருக்கடி. இந்த நெருக்கடிகள் பத்தாது என்று, சாதிக்கை சிபிஐ பிடியிலிருந்து காப்பாற்றுகிறேன் என்று, சில உயர் போலீஸ் அதிகாரிகள் வேறு, போலி வாக்குறுதிகளை கொடுத்து பணம் பறித்திருக்கிறார்கள்.
சாதிக் இறப்பதற்கு முன், தினமும் அவரை தொடர்பு கொண்ட, ஆண்டிமுத்து ராசாவின் அண்ணன் கலியபெருமாள், கடும் சொற்களால் சாதிக்கை மிரட்டியுள்ளார். “உன்னையெல்லாம் என் தம்பி நம்புனதுக்கு தாண்டா இப்போ அவன் ஜெயில்ல இருக்கான். உன்னை இவ்ளோ பெரிய ஆளா ஆக்குனதே தப்புடா. மரியாதையா போயி, சிபிஐல சொன்னதையெல்லாம் மாத்திச் சொல்லு. இல்லன்னா உயிரோடவே இருக்க மாட்ட.. என் தம்பியே ஜெயிலுக்கு போயிட்டான், நீ மட்டும் இன்னும் ஒன் பொண்டாட்டியோட ஜாலியா இருக்கியாடா…… சிபிஐலே உன் ஸ்டேட்மென்ட வாபஸ் வாங்கலன்னா, என்ன நடக்கும்னே சொல்ல முடியாது” என்று கடுமையாக பேசியுள்ளார். “அண்ணே, ராஜா அண்ணணுக்கு போயி நான் துரோகம் செய்வேனா…. நான் இப்போ வச்சுருக்கறது எல்லாமே அவரு போட்ட பிச்சை.. நான் எப்படின்னே அவருக்கு துரோகம் செய்வேன்.. நான் சிபிஐ கிட்ட ஒன்னுமே சொல்லண்ணே “ என்று சாதிக் அளித்த பதில்கள், கலியபெருமாளை சிறிதும் அசைக்கவில்லை.
கலியபெருமாளின் நெருக்கடியிலிருந்து தப்பிப்பதற்கு, சாதிக் நம்பியது காமராஜ்.
குற்றவாளிகளை விசாரிக்கும் போது, அமெரிக்காவில், “குட் காப், பேட் காப்” என்று ஒரு தந்திரத்தை கடைபிடிப்பார்கள். பேட் காப் என்று அழைக்கப் படும் காவல் அதிகாரி, குற்றவாளியை அடிப்பதற்கு பாய்வார். கடும் வார்த்தைகளால் திட்டுவார். இதைக் கண்டு குற்றவாளி கலக்கமடைந்திருக்கும் போது, குட் காப் அதிகாரி, அன்பாக, நட்போடு குற்றவாளியிடம் பேசுவார். அவன் அப்படித்தான் எல்லாரையும் அடிப்பான். என்னிடம் உண்மையை சொல்லி விடு. நான் உனக்கு ஒன்னும் ஆகாம, அவன்கிட்டேர்ந்து காப்பாற்றுகிறேன் என்று வாக்குறுதி கொடுத்து, உண்மையை குற்றவாளியிடமிருந்து வாங்குவார்கள்.
அதைப் போலத்தான் சாதிக்கிடம், இந்த தந்திரத்தை பயன்படுத்தியுள்ளதாக தெரிகிறது-
கலியபெருமாள் ஒரு பக்கம் திட்ட, மற்றொரு பக்கம் காமராஜ் ஆதரவாக பேசி, சாதிக்கை தன்னுடைய வாக்குமூலத்தை வாபஸ் பெறுமாறு வற்புறுத்தியுள்ளார்.
சாதிக், இறப்பதற்கு முன் ஏழு முதல் பத்து நாட்கள், காமராஜ், தினமும், சாதிக் வீட்டிற்கு சென்றுள்ளார். காமராஜின் செல்பேசி ஆவணங்கள், காமராஜ் சாதிக் வீட்டிற்கு சென்று, சாதிக்கோடு ஒன்றாக கிளம்பி நான்கு மணி நேரத்திற்கு மேல் ஒன்றாக இருந்ததை உறுதிப் படுத்துகின்றன.
தினமும், சாதிக் வீட்டுக்கு சென்ற காமராஜ், சாதிக்கை அழைத்துக் கொண்டு, சென்னையிலுள்ள ஒரு பிரபல கிளப்பில், தினமும் சரக்கடித்துள்ளார். அப்போது, சாதிக் மனம் விட்டு, “அண்ணே… நான் சாகுறதத் தவிர வேற வழியில்லைண்னே…. சிபிஐ ஒரு பக்கம் நெருக்குது… கலியபெருமாள் அண்ணே அதப் புரிஞ்சுக்காம, ரொம்ப மோசமா பேசுறாருண்ணே…. என் வொய்ஃப பத்தியெல்லாம் மோசமா பேசுறாருண்ணே….. நீங்க கொஞ்சம் சொல்லுங்கண்ணே….“ என்று அழுதிருக்கிறார்.
காமராஜ், “அவரு சொல்றபடி, உன் ஸ்டெட்மென்ட வாபஸ் வாங்கிடு.. சிபிஐ கிட்ட, எனக்கு எதுவும் தெரியாதுன்னு சொல்லிடு… அவரு ஏன் உன்ன திட்டப் போறாரு“ என்று கூறியுள்ளார். “ கொஞ்ச நாள் சமாளிச்சுடு… அப்புறம் நம்ப கவர்மெண்ட் திரும்ப வந்துடும். தலைவர்கிட்ட சொல்லி, காங்கிரஸ்க்கு நெருக்கடி கொடுத்து, கேசை ஆறப்போட்டுடலாம்….“ என்று காமராஜ் அன்பாகப் பேசியே, மிரட்டியுள்ளார்.
ஏறக்குறைய பத்து நாட்களுக்கும் மேலாக காமராஜிடம் பேசியும், கலியபெருமாளின் வசவுகள் நிற்காததால், யாருமே நம்மை காப்பாற்றப் போவதில்லை என்பதை உணர்ந்த சாதிக், மனமுடைந்தே தற்கொலை முடிவுக்கு வந்திருப்பதாக சென்னை மாநகர காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சாதிக்கின் செல்பேசி ஆவணங்கள், காமராஜ் மற்றும் கலியபெருமாள் தொடர்ந்து சாதிக்கோடு தொடர்பில் இருந்ததற்கான ஆதாரங்களை மட்டுமல்லாமல், இரண்டு காவல்துறை உயர் அதிகாரிகள், சாதிக் இறப்பதற்கு முதல் நாள் பேசியுள்ள தகவலும் வந்திருக்கிறது.
அத்தனை விவகாரங்களும், சிபிஐ விசாரணைக்கு வழக்கு மாற்றப் பட்டதும் வெளி வரும் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது. காமராஜ் சிபிஐ யால் விசாரிக்கப் பட்டவுடன், சாதிக் மரணத்தில் அவரின் பங்கைப் பொறுத்து, தேவைப் பட்டால் கைது செய்யப் படுவார் என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உச்ச நீதிமன்றத்தில், வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், சாதிக் மரணத்தைப் பற்றிய சந்தேகத்தை எழுப்பியிருப்பதைத் தொடர்ந்து, விசாரணை தீவிரமடையும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.