கோபத்தில் முகம் சிவந்த பத்மா
“ஒங்களுக்கெல்லாம் என்ன தெரியும்னு பேட்டி எடுக்க வந்திட்றீங்க?”
இந்த நிருபர் பிழைப்பில் உள்ள பெரும் சங்கடம் பலதரப்பட்ட மனிதர்களையும் அனுசரித்துப் போகவேண்டியிருக்கும். தோலைத் தடிமனாக ஆக்கிக்கொள்ள வேண்டியிருக்கும். நிறைய பொறுமையும் வேண்டும்.
நாம் வேலை பார்க்கும் பத்திரிகைக்கு சமூகத்தில் இருக்கும் மரியாதையை பொறுத்துதான் நமக்கு மரியாதை கிடைக்கும். பேட்டிக்கு வரச் சொல்லுவார்கள். சிறிய பத்திரிகை என்றால் காத்திருக்க வேண்டியதுதான். ஒரு மணி நேரம் கூட ஆகலாம். சடங்கிற்காக சாரி சொல்லிவிட்டு, ’சரி சரி எனக்கும் நேரம் ஆகிவிட்ட்து. சீக்கிரம் கேட்டு முடியுங்கள்’ என்பார்கள்.
அவ்வளவு எளிதாக எடக்கு மடக்கான கேள்விகளை கேட்டுவிட முடியாது. கேட்டால், ’சரி போய்ட்டு வாங்க’ என்று அனுப்பி விடுவார்கள். ஆசிரியரிடம் வந்து வழிய வேண்டியிருக்கும்.
”ஏன்யா விவரமில்லாமல் நடந்துகிறீங்க. நிருபரானவுடனே ஏதோ ஆகாயத்துலேந்து குதிச்சவன்னு நெனப்பு வந்திடுது…. அவ்ரு யாரு… நம்ம மானேஜ்மென்ட்கிட்ட எவ்வளவு செல்வாக்கு இருக்கு… ஒரு ஃபோன் போட்டார்னா ஒன் வேலை மட்டுமில்ல, என் வேலையும் காலி ஆயிடும்யா…”
இப்படி எல்லாம் டோஸ் வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டியிருக்கும்.
ஆனால் இதன் இன்னொரு பரிமாணம் எனக்கு பிடிக்கும். செய்தியாளனாய் இருப்பதால் பிரமுகர்கள் பலருக்கு நெருக்கமாக முடிகிறதா, அதன் விளைவாய் அவர்களது கோர முகங்கள், சின்னத் தனங்கள், போலி வேடங்கள் எல்லாமே நமக்கு தெரிய வரும்.
சாமியார், அரசியல்வாதி, முதலாளி, தொழிற்சங்கத் தலைவர், கலைஞர்கள் இப்படி பல துறையின் பிரபலங்களின் உண்மை முகங்களை நாம் அறிந்து கொள்ளும்போது மற்றவர்களைவிட நமக்குக் கூடுதலாக தெரியும் என்று சற்றே கர்வம் உண்டாகிறது. அதுவும் மகிழ்ச்சிதானே.
ஒரு நிகழ்ச்சி சொல்கிறேன். நாட்டியத் தாரகை பத்மா சுப்பிரமணியம் என்றால் சாதாரணமா என்ன? அந்த நேரம் ஏதோ நிகழ்வு. அவரை பேட்டி எடுக்க போனேன். எனக்கு நாட்டியம் பற்றி எதுவும் தெரியாது, ஆனால் தெரிந்தவர் எவரும் இல்லை எங்கள் அலுவலகத்தில், எப்படியும் நுணுக்கமாக எதையும் சொல்லப் போவதில்லை, பரதக் கலை பற்றி இளைஞர்கள் மத்தியில் ஆர்வத்தைத் தூண்டுவதைத் தவிர பெரிதாக நோக்கம் இல்லை, எனவே ஒரு சிலரிடம் சில தகவல்களை வாங்கிக்கொண்டு சென்றேன்.
துவக்கத்திலிருந்தே ஒரே பந்தாவாக இருந்தது. பரிவார அமைப்பு என்பதனால் வரச்சொல்லி விட்டோம் இவர்களிடம் என்ன பேச்சு என்ற ரீதியில்தான் பத்மாவின் பதில்கள் இருந்தன. உடன் அவரது சகோதரர் பாலகிருஷ்ணனும் அமர்ந்து, ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார்.
நான் ஜாக்கிரதையாக இருந்திக்க வேண்டும். மூட் சரியில்லை என்பதை உணர்ந்து ஏதோ சடங்கிற்காக மேலும் இரண்டு கேள்விகள் கேட்டு முடித்திருக்கலாம். ஆனால் அருள்மிகு சனீஸ்வரர் குடியிருப்பதே என் நாவில்தானே.
”சரி மேடம்…ஒரு சந்தேகம்…இன்னமும் பரத நாட்டியம் பஞ்சாங்கக் கதைகளைத்தானே சித்தரிக்கின்றன…காலத்திற்கு ஏற்றாற்போல் தீம்களும் மாற வேண்டாமா? உதயசங்கர் பாலேயில் கிரிக்கெட்டையெல்லாம் கொண்டு வருகிறாரே.. நீங்களும் அப்படி ஏதாவது முயற்சி செய்யக்கூடாதா?’ என்று கேட்டு விட்டேன், தயக்கம் எதுவும் இல்லாமல்.
பத்மா முறைத்தது இன்னமும் நினைவில் இருக்கிறது. கோபத்தில் முகம் சிவந்துவிட்டது. நெற்றிக் கண் இல்லையே என வருத்தப்பட்டிருப்பார். அவர் ஏதும் சொல்வதற்குமுன் அவரது அண்ணன் முந்திக்கொண்டார்.
”ஒங்களுக்கெல்லாம் என்ன தெரியும்னு பத்மாவை பேட்டி காண வர்றீங்க.. அதுக்கெல்லாம் ஒரு ஸ்டேட்டஸ் வரணும்.. பெர்லின் போயிருந்தோம். பேட்டி கேட்டாங்க, ஒத்துகிட்டோம் தயக்கத்தோடதான்… ஆனா வந்தது டான்ஸ்ல பெரிய எக்ஸ்பர்ட்…எத்தனையோ கேள்வி கேட்டார் ஒண்ணு கூட ஸ்டுப்பிடா இல்ல…அத்தனைக்கும் பதில் சொன்னோம்… ரொம்ப திருப்தியா இருந்தது… இப்படியா உதயசங்கர் பாலேன்னுட்டு…ஒங்களுக்கு பாலேயும் தெரியாது பரதமும் தெரியாது…” நிறுத்தாமல் பேசிக்கொண்டே போனார்.
ஒரு விதத்தில் அவர் சொன்னது சரிதான். பத்மா சுப்பிரமணியத்தை பேட்டியெடுக்கும் அளவு எனக்கு தகுதி இல்லைதான். ஆனால் அப்படிக் கேள்வி கேட்டதில் என்ன தவறு?
“சார் நான் எக்ஸ்பர்ட் இல்ல சார், ஒத்துக்கிறேன்…நீங்க பெர்லின் கதையெல்லாம் சொல்றீங்க… அப்படி பெரிய வல்லுநர்களை வைத்துக் கொள்ளும் அளவு யுவபாரதி போன்ற சிறிய இதழ்களுக்கு சாத்தியமா சார்…? அன்றாட பிரச்னைகளையும் பரதம் ஏன் படம் பிடித்துக் காண்பிக்கக்கூடாதுன்னு கேக்குறது அவ்வளவு பெரிய தப்பா என்ன?”
பத்மா எழுந்து உள்ளே போய்விட்டார். சகோதரர். என்னை விளாசுவதை நிறுத்தவே இல்லை. “எங்க நேரம் சார்… ஒத்துகிட்டிருக்கக்கூடாது…”
எனக்கு சலித்துப் போனது. ”சாரி சார் தேவையில்லாமல் உங்களுக்கு சங்கடம் கொடுத்துவிட்டேன்…ஒங்க சிஸ்டர்கிட்ட சொல்லிடுங்க,” எனக் கூறிவிட்டு வெளியேறினேன்.
உடன் இருந்த புகைப்படக்கார், “இப்டி செஞ்சிட்டீங்களே… கேந்திராவுக்கு இதெல்லாம் ஒத்துவருமா?” என்று கேட்டார் தயங்கிய வண்ணம்.
”எல்லாம் பார்த்துக்கலாம் பிரதர். இவுங்க ஏறி மிதிப்பாங்க…நாம எல்லாத்தையும் கேட்டுக்கிடணுமா? சின்ன பத்திரிகைன்னா அவ்வளவு இளக்காரமா?…”
அப்படி சொன்னேனே தவிர உள்ளூர நடுக்கம்தான். பத்மா சுப்பிரமணியம் மிகப் பிரபலம். காவி வட்டாரங்களுக்கு நெருக்கம். அவர் வெங்கட்ராமன் சாருக்கு ஃபோன் செய்து காச்சு மூச்சென்று கத்தினால் என்னவாகும்? வேலை போய்விடுமோ?
என்னென்னவோ அல்லல்பட்டு, பிறகு யுவபாரதியில் சேர்ந்திருந்தேன். ஓராண்டு கூட முடியவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டோமே, என மனதுக்குள் புலம்பியவாறே அலுவலகம் வந்து சேர்ந்தேன்.
நல்லவேளை பெரிதாக ஆபத்து ஏதும் நிகழவில்லை. நடந்ததைச் சொன்னபோது சிவகுமார் கொஞ்சம் வருத்தப்பட்டார். ”நீங்கள் எழுந்து வந்திருக்கவேண்டாம்,” என்று மட்டும் சொன்னார். கிடைத்ததை வைத்து பேட்டியை வெளியிடலாமா என்று கேட்டார். ”எனக்கு உடன்பாடில்லை. வற்புறுத்தினால் எழுதித் தருகிறேன்,” என்று பதிலளித்தேன். சரி வேண்டாம். அவர்கள் ஏதாவது ஃபோன் செய்தால் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டார் சிவகுமார்.
ஃபோன் ஏதும் வரவில்லை. நான் தப்பித்தேன். யுவபாரதி கட்டத்தில் அலுவலகத்திற்கு வெளியே நடந்த சில கசப்பான சம்பவங்களில் இதுவும் ஒன்று.
பேசுவோம்
சலங்கை ஒலி படத்தில் இதே போன்ற காட்சி வரும். நீங்கள் சொன்ன அனுபவத்தை வைத்து அவர்கள் காட்சியில் சேர்த்து இருப்பார்கள் என நினைக்கிறேன்.