எரிச்சலூட்டியவர்களும் இருக்கத்தான் செய்தனர். சில இந்து மத வெறியர்கள், அந்தக் காலத்திலேயே தீவிரவாதம் பேசியவர்கள், ஏக்நாத் ரானடேயின் மென்மையான இந்துத்துவா சரி வராது, விஸ்வ ஹிந்து பரிஷத் அணுகுமுறையே சரி என நினைத்தவர்கள் இப்படிப்பட்டவர்கள்.
அவர்களில் ஒருவர் என்னிடம் விவேகானந்தரை விடவும் புட்டபர்த்தி சாயிபாபா உயர்ந்தவர் என வாதிடுவார். ”என்னய்யா இது கொடுமை. இந்த அமைப்பே விவேகானந்தரின் பெயரால் உருவாக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் ஒரு முக்கிய பொறுப்பில் இருக்கிறீர்கள்….” என்று நான் கேட்டால் அவர் பதில் சொல்வார்: ”அட போங்கப்பா …இந்த ஆஷாட பூதித்தனமெல்லாம் நமக்கு ஆவாது…காரியம் நடக்கணும்…இந்துத்துவா வளரணும்..மத நம்பிக்கைகள் ஆழமா வேரூன்றணும்… இதெல்லாம் விவேகானந்தாரால நடந்திச்சா…சும்மா ஏதோ பேசிகிட்டேயிருந்தா சரியாயிடுச்சா…எவ்வளவு பேரை இவ்ரு இழுத்திட்டு வந்தாரு சொல்லுங்க…ஆனா பாருங்க சாயி பாபாகிட்ட எவ்ளோ பெரு வந்து மண்ட்றாங்க…அவரைப் பத்தி ஆயிரம் கதை சொல்றாங்க…அதனால நமக்கென்னங்க்குறேன்…அவரை நம்புறாங்க…போய் பூஜை பண்றாங்க…மந்திரம் சொல்றாங்க…கோயிலுக்குப் போறாங்க..அவுங்க யாராவது கம்யூனிஸ்டாவாங்களா…தீவிர இந்துக்களா இருப்பாங்க அவங்க பிள்ளைங்களும் அப்படித்தான் இருப்பாங்க…பாபாவுக்கு உலகம் முழுக்க பக்தர்கள், சிஷ்யர்கள்…அவங்க ஒவ்வொருத்தரும் பாபாவைப் பத்தி பேசறபோதும் இந்து மதத்துமேல அட்ராக்ஷன் வருதா இல்லியா…அதுதான் கணக்கு.” என்றார் அந்த நபர். இன்று அவர் விஸ்வ ஹிந்து பரிஷத்தில் இருக்கிறார். . ”ஆலிவர் ட்விஸ்ட் கொஞ்சம் கூட கஞ்சி வேண்டும் எனக் கேட்டுவிட்டானே”
யுவபாரதி நாட்கள், சனாதனிகள், சில வெறியர்கள் மத்தியிலும் இனிமையாகவே கழிந்தன. விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்றோரைப் பற்றி சில விஷயங்களைத் தெரிந்து கொள்ளமுடிந்தது. சம்பளம் குறைவென்றாலும் நிறைவாக இருந்தது வாழ்க்கை.
ஆனால் நம்மால் எந்த ஆங்கில பத்திரிகையிலும் சேரமுடியவில்லையே என்ற ஏக்கம் இருந்தது. பள்ளிப் பருவத்தில் கையெழுத்துப் பத்திரிகை நடத்தியிருக்கிறேன். இரண்டே இதழ்களில் அதை முடித்துக்கொள்ளவேண்டியிருந்தது.
பி எஸ் சி பட்டப்படிப்பில் தொடர்ந்து தோல்வியுற்று வந்தாலும் ஆங்கிலத்தில் சொல்லிக்கொள்ளும் அளவு திறன் இருந்தது எனலாம். அதைப் பயன்படுத்தி இந்துவில் சேர்த்துவிட என் தந்தை நடையாய் நடந்தார். ஊஹூம் பலிக்கவே இல்லை.
ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மே மாதங்களில் இண்டியன் எக்ஸ்பிரசில் நிருபர் தேவை பட்டப்படிப்பு இறுதித் தேர்வின்போதும் மனுச் செய்யலாம் என விளம்பரம் வரும். நானும் அனுப்பிவைப்பேன். எவரும் கண்டுகொள்ளவில்லை.
ஒரு வழியாக எம்.ஏ. முடித்து சென்னையில் அல்லாடிக்கொண்டிருந்தபோது நண்பரொருவர் சம்பந்தத்திடம் அழைத்துப்போனார். ரொம்பவும் அலட்சியமாக என் பயோ டேட்டாவைப் பார்த்தவர், அதில் ஏதோ குறை சொன்னார். நான் விளக்கமளித்தேன்…இப்ப சொல்லி என்ன பண்ண, எழுதறச்சே ஒழுங்கா எழுதறதில்லியா என்றார். நான் விடாமல், திருவிளையாடல் தருமி பாணியில் என் திறமை மீது சந்தேகம் இருந்தால் சோதித்துப் பாரேன் என்பது போல சொல்லிப் பார்த்தேன். அவர் ஆர்வம் காட்டவில்லை.
அவருடைய மூட் அன்று அப்படி. அல்லது அழைத்துப் போனவர் யார் மூலமாக சிபாரிசு பெற்று வந்தாரோ அவர் மீது ஏதோ கோபமாயிருந்திருக்கும். எப்படியோ நம் கதை கந்தல். முதல் கோணல் முற்றும் கோணலாகப் போகிறது என்று அப்போது எனக்குத் தெரியாது.
யுவபாரதியிலிருக்கும் போது மீண்டும் மனுச்செய்ய அந்த முறை என்னைத் தேர்வுக்கு அழைத்தார்கள். நேர்முகத்தில், சம்பந்தத்தை மீண்டும் சந்தித்தேன். அவருக்கு என்னை நினைவில்லை. நானும் நினைவுபடுத்தவில்லை.
அப்போது 1980 சட்டமன்றத் தேர்தல்கள் நடக்கவிருந்த நேரம். நாடாளுமன்றத்தில் திமுக-இ.காங்கிரஸ் கூட்டணி பெரும் வெற்றி பெற்ற பின்னணியில் அஇஅதிமுக அரசு கலைக்கப்பட்டிருந்தது. யாருக்கு வாய்ப்பு எனக் கேட்டார்கள், தயக்கமே இல்லாமல் திமுக-காங் கூட்டணிக்குத்தான், எம்ஜிஆருக்கல்ல, கூட்டணி வலுவானது..” என்றேன்.
“ஏன் எம் ஜிஆருக்கு அனுதாப அலை இருக்காதா?”
“இல்லை தேர்தல்களில் செண்டிமெண்டுக்கெல்லாம் இடமில்லை. Simple arithmetic…”
முடிவுகள் என் கணிப்பைப் பொய்யாக்கின. ஆனாலும் எனக்கு வேலை கொடுத்தார்கள். சிவகுமார், வெங்கட்ராம், ஏக்நாத் ரானடே உள்ளிட்டோரிடம் சற்று கலக்கத்துனடேயே விடைபெற்றேன்.
அவர்களில் எவரும் நான் வெளியேறுவதை விரும்பவில்லை. ஆனால் இதழியல் துறையில் முன்னேறவேண்டுமானால் எக்ஸ்பிரசில் சேருவதே சரி என்றுணர்ந்து மனதார வாழ்த்தியனுப்பினர்.
Appointment Orderஐப் பெற்றுக்கொண்டுவிட்டு சம்பந்தத்தைப் பார்த்து நன்றி சொல்லிவிட்டு வரலாம் என நிருபர்கள் அறைக்குச் சென்றபோது அவருக்கு அடுத்த நிலையிலிருந்த கணபதி என்பவர் என் பின்னணி பற்றி விசாரித்தார். பிறகு எது பற்றி செய்தி சேகரிக்க ஆர்வம் எனக் கேட்டார். நான் “அரசியல்” என்றேன். சட்டென்று அவர் முகம் மாறியது.
என்னை மேலும் பேசவிடாமல் குறிப்பிட்டு கணபதி, “மிஸ்டர் கோபாலன்…ரொம்பவும் ஆசைப் படாதீங்க…இப்பத்தானே வேலைக்கே வர்றீங்க அதுக்குள்ள அரசியல் அது இதுன்னுகிட்டு…அதெல்லாம் சீனியர்ஸுக்குத்தான்…எத்தனை வருஷம் வேலை பார்க்கணும், எப்படியெல்லாம் காண்டாக்ட் டெவலப் பண்ணிக்கணும்…ஆரம்பத்தில கார்ப்பரேஷன், போலீஸ் ஸ்டேஷன் அப்டின்னுதான் பாக்கணும்…போகப் போகத்தான் முடிவு பண்ணுவாங்க…” அருகிலிருந்த ஓரிருவரும் அவரை ஆமோதிப்பது போல ஏளனப் புன்னகையுடன் என்னைப் பார்த்தனர்.
Oliver asks for more என்பது ஒரு பிரபல சொலவடை. ஆலிவர் ட்விஸ்ட் எனும் ஆங்கில நாவலில், ஆலிவர் எனும் சிறுவன் அநாதைகள் இல்லத்தில் இருப்பான். அங்கே அரைப் பட்டினி கால் பட்டினி கதைதான். ஏதாவது கேட்டால் அடி உதை. சேர்ந்த புதிது. இவனுக்கு சரியான பசி. ஒரு நாள் கஞ்சியைப் பெற்றுக்கொண்டு நகரமாட்டான். இன்னும் கொஞ்சம் ஊற்றுங்களேன் என்பான். அந்தப் பணியாளர் ஆடிப்போய்விடுவார். திருவிளையாடல் திரைப்படத்தில், சிவன் பாடுவதை நிறுத்த அகிலமே ஒரு கணம் நின்றுபோவது போலக் காண்பிப்பார்கள். அதுபோல ஆலிவர் ட்விஸ்ட் நாவலில் இன்னும் கொஞ்சம் எனக் கேட்டவுடன், பணியாளர்கள், மாணவர்கள் அனைவரும் அதிர்ந்துபோய் பிரபஞ்சமே ஸ்தம்பித்துவிட்டதைப் போன்று அற்புதமாக சித்தரித்திருத்திருப்பார் நாவலாசிரியர் சார்லஸ் டிக்கன்ஸ். அந்தக் காட்சியே என் நினைவுக்கு வந்தது. ஆனால் எதையும் காட்டிக்கொள்ளாமல், ”சரி சார், அப்டியே செய்றேன் சார்…” என்று பணிவாகவே பதிலளித்தேன்.
ஆனால் துவக்கத்திலிருந்தே எனக்கு எக்ஸ்பிரசில் ஏகப்பட்ட சிக்கல்கள். அதிலும் சொந்தக் காசில் சூனியம் வைத்துக்கொண்ட கதைகள் அதிகம்.
தொடரும்
ஐயா தங்கள் அனுபவங்களை சொல்லும் விதம் அருமை
வித்தியாசமான. எண்ணம் வெற்றியை. கொணரும்
Waiting.