தலைமை நிருபரின் ஒற்றர்கள்
இராம திருஞான சம்பந்தம் என்றால் பலருக்கு தெரியாது. ஆர்.எம்.டி என்ற சுருக்கம்தான் பிரபலம். சுவையான, வித்தியாசமான நபர். கண்டிப்பும் தாராளமும் கலந்த ஆளுமை.
எங்களுக்கெல்லாம் தொழில் கற்றுக்கொடுத்ததே அவர்தான். முற்போக்கு சிந்தனையாளர் என்பார்கள்.
அதெல்லாம் உண்மைதான். என் துரதிர்ஷ்டம் அவர் எனக்கு வில்லனாய் அமைந்துவிட்டார். சொந்தக் காரணங்களுக்காக பரவலாக நன்மதிப்பு பெற்றிருக்கும் ஒருவரைப் பற்றி பகிரங்கமாக விமர்சனம் செய்யலாமா என்று சிலர் வருந்தலாம்.
அந்தக் கேள்வியில் எவ்வளவு நியாயமிருக்கிறதோ அவ்வளவு நியாயம் என் மனத்தாங்கலிலும் இருக்கிறது. ஒரு விதத்தில் என் பணி முன்னேற்றம் தேங்கிப் போனதற்கு அவரே முழுமுதல் காரணம். என்மீது ஏற்பட்ட ஆத்திரத்தில் அவருக்கே உரித்தான நல்லியல்புகளையும் மறந்து, என்னை அவமானப்படுத்தி, ’ஏண்டா இங்கு வந்து சேர்ந்தோம்?’ என என்னை நோகச் செய்தார் தொடர்ந்து.
துவக்கத்திலேயே எனது முட்டாள்தனத்தால் அவருக்கு ஆத்திரமூட்டி இருந்தேன் என்பதை காலம் கடந்துதான் உணர்ந்தேன்.
பத்திரிகை என்றல்ல எந்தத் துறையில் பணியாற்றினாலும் நாவடக்கம் மிக அவசியம். மற்றவர்களை விமர்சிப்பது நல்ல பண்புதானா என்பது ஒரு புறமிருக்க, நாம் சொல்வது சம்பந்தப்பட்ட நபரின் செவிகளுக்கே சென்று நமக்கு தேவையில்லாத சங்கடங்களை உருவாக்கும். இது கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் கதைதான். ஆனால் சொல்லியாக வேண்டிய கதை.
இண்டியன் எக்ஸ்பிரஸ் சம்பந்தம், தினமணி தலைமை நிருபர் கல்யாணம் இருவருக்குமே ஏகப்பட்ட ஒற்றர்கள், அவர்களிடம் நல்ல பிள்ளை எனப் பெயர் வாங்க, அவர்களிடம் காரியம் சாதித்துக்கொள்ள மற்றவர்களை போட்டுக் கொடுக்கும் சீரிய பணியை கண்ணும் கருத்துமாக செய்தவர்கள் பலர்.
அப்படிப்பட்டவர்களுக்கு நான் எளிதில் பலியாகி விட்டேன். நான் பொதுவாகவே ஓட்டை வாய். பக்கம் பார்த்து பேசும் புத்திசாலித்தனம் போதாது. இன்றும். அன்று எப்படி நடந்துகொண்டிருந்திருப்பேன் என்பதை நீங்கள் கற்பனை செய்து கொள்ளலாம்.
சம்பந்தம் இண்டியன் எக்ஸ்பிரஸ் சென்னை பதிப்பின் தலைமை நிருபர். எத்தனை நிருபர்களை வேலை வாங்கவேண்டும், எத்தனை செய்திகளை சரி பார்க்க வேண்டும், மற்ற பதிப்புக்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பதை எல்லாம் முடிவு செய்யும் பணி. எத்தனை முக்கிய பொறுப்பு அது? அப்படிப் பட்டவருக்கு பிரமிக்கும்படி எல்லாம் வேண்டாம், இயன்றவரை பிழையில்லாமல் ஆங்கிலத்தில் எழுதும் திறன் அவசியமல்லவா?
அவருக்கு அப்படியான திறன் இல்லை என்பதை முதல் இரண்டு மூன்று நாட்களிலேயே கண்டு கொண்டேன். பெரும் அதிர்ச்சி எனக்கு. என் ரிப்போர்ட்டை சரி பார்க்கும்போது அல்லது அவரே டைப் செய்த ஒரு ரிப்போர்டை பார்க்க நேர்ந்தபோதுதான் அவரது ஆங்கில போதாமையை அறிந்தேன்.
சரி எனக்குள் சிரித்துக்கொண்டு அதை விட்டிருக்கக்கூடாதா… அதைப் பற்றி வேறு எவரோ ஒரு செய்தியாளரிடம் பேசியிருக்கவேண்டுமா? அதுவும் எப்படி? ’இவரையெல்லாம் எப்டிய்யா சீஃப் ரிப்போர்ட்டர் ஆக்கினாங்க?’ என்ற ரீதியில்.
ஆங்கிலத்தில் ஓரளவு திறன் பெற்றிருந்தேன். ஆங்கில மொழியை கையாள்வதிலும் அலாதி மகிழ்ச்சி. வெளியில் காட்டிக்கொள்ளாத தற்பெருமை. அந்த அளவில்தான் என் விமர்சனம். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இன்றளவும் எனக்கு சந்தேகங்கள் வருகின்றன. குழப்பமாகவே சிலவற்றை விட்டுவிடுகிறேன். இலக்கண புத்தகங்களை அவ்வப்போது ரெஃபர் செய்கிறேன். எல்லாம் தெரிந்தவன் என்றெல்லாம் எப்போதும் நினைத்துக் கொள்வது கிடையாது. ஆனால் தெரிய வேண்டியவர்களுக்கு தெரியவில்லை எனும்போது எனக்கு எரிச்சல் வரும். அதன் வெளிப்பாடே சம்பந்தம் பற்றி நான் அப்படி கமென்ட் செய்தது. ஆயினும் அது தவறே. அதுவும் பகிரங்கமாக நான் பேசியிருக்கக் கூடாது.
சம்பந்தத்தை பொறுத்தவரை அவர் ரொம்ப தாராளமாகவும் நடந்துகொள்வார், பிடிக்காதவர்களிடம் கடுமையாகவும். முதல் சில நாட்கள் என்னை அவர் அதிகம் கண்டுகொள்ளவில்லை. போலீஸ் கமிஷனர் ஆஃபீஸ், கார்ப்பரேஷன் அலுவலகம் என்று சீனியர்களுடன் செல்வேன். ரிப்போர்ட் டைப் செய்து காண்பிப்பேன். ஏதோ திருத்தங்கள் செய்து கொடுப்பார்கள். அவர் என் பக்கம் வரும்போது எழுந்து நிற்பேன். தோளைப் பிடித்து உட்காரவைப்பார். “இதெல்லாம் இங்கு தேவையில்லை,” என்பார். எனக்கு மிகவும் பிடித்துப் போயிற்று. ஆனால் அவரது பலவீனமான ஆங்கிலம் எனக்கு உறுத்தலாகவே இருந்தது.
அதைப் பற்றி உளறப்போய் அடுத்த ஓரிரு நாட்களிலேயே என்னிடம் கடுப்படிக்க ஆரம்பித்தார் சம்பந்தம். காரணமில்லாமலே. எனக்கு விளங்கவில்லை. என்ன ஆயிற்று, நான் ஒன்றும் தவறாக எதையும் செய்யவில்லையே என்று மண்டையைக் குடைந்து கொண்டிருந்தேன்.
அந்தக் கட்டத்தில்தான் இத்தொடரின் துவக்கத்தில் குறிப்பிட்டிருப்பதைப் போல், நான் அலைந்து திரிந்து உருப்படியான பல தகவல்களை சேகரித்து வந்த நிலையில், அப்படிப்பட்ட செய்திகள் தரும் அளவுக்கு நீ ஒன்றும் வளர்ந்துவிடவில்லை என கடுப்படித்தார்.
மிரண்டுவிட்டேன். வேலையை விட்டு தூக்கிவிடுவாரோ? நான் அப்போது அப்ரெண்டிஸ். நாளையிலிருந்து நீ வேலைக்கு வரவேண்டாம் எனச் சொல்லிவிடலாம். தலைமை நிருபர் சொல்லிவிட்டால் அவ்வளவுதான். யாரிடமும் போய் நியாயம் கேட்கமுடியாது.
என்னுடன் வேலைக்கு சேர்ந்த வேறு சிலருக்கு சிறப்பு அந்தஸ்து இருந்தது. ’ஹை ஆர்எம்டி!’ என்றழைத்து, அவருடன் சகஜமாக பேசுவார்கள், குசுகுசுவென்று ரகசியம் பேசுவார்கள், வெளியே சென்று வருவார்கள். எனக்கு பொறாமையாக இருக்கும்.
என் நிலை எவ்வளவு பரிதாபகரமானது என்றால் எங்கள் பிரிவு டைப்பிஸ்டே என்னை மிரட்டுவார்! அவர் தலைமை நிருபரின் செயலர் போன்று இருப்பார். அவர் வேலை ’இன்றைய நிகழ்ச்சிகள்’ பகுதிக்காக வரும் அழைப்பிதழ்களைத் தொகுத்து டைப் செய்வது, சம்பந்தம் சொல்லும் ஓரிரு கடிதங்களை டைப் செய்வது, அவருக்கு அல்லது பிரிவிற்கு வரும் தொலைபேசி அழைப்புக்களுக்கு பதிலளிப்பது, சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவிப்பது. அவ்வளவுதான். ஆனால் அவரே ஏதோ சம்பந்தத்திற்கு அடுத்த நிலையில் தானே என்பது போல ஏகப்பட்ட பந்தா செய்வார்,
அந்த செயலருக்கென தனி இருக்கை கூட அப்போது இல்லை. சம்பந்தத்தின் நாற்காலி. அவரோ அலுவலகத்திலேயே அதிகம் காணப்படமாட்டார். வந்தாலும் அங்கு இங்கு அலைந்துகொண்டிருப்பார். அவரது இருக்கையில் எப்போதுமே செயலர்தான் உட்கார்ந்திருப்பார்.
அந்த நாற்காலிக்கு முன் இருந்த மேசையில்தான் பிரிவுக்கென ஒதுக்கப்பட்ட ஒரே டைரக்ட் டயல் ஃபோன். மற்றவற்றில் ஆபரேட்டரிடம் கேட்டு கனெக்ஷன் பெறவேண்டும். எனவே சம்பந்தம் மேசை ஃபோனுக்கு தனி மவுசு. அப்போதெல்லாம் மொபைல் ஃபோன் கிடையாதே.
ஆனால் மூத்த நிருபர்கள் போக டைரக்ட் ஃபோனுக்கு ஏக சக்ராதிபதி அச் செயலர்தான். அவரிடம் போய் கெஞ்சவேண்டும் அந்த ஃபோனைப் பயன்படுத்திக்கொள்ள. அவர் இல்லையே என்று எப்போதாவது அந்த சீட்டில் உட்கார்ந்து ஃபோனை பயன்படுத்தினால், வந்தவுடன் விரட்டிவிடுவார். “ஏன் எவ்வளவோ சேர் இருக்குல்ல.. அங்க போய் உட்காரவேண்டியதுதானே?” என்பார். அவர் சம்பந்தத்திற்கு வேண்டியவரா வேண்டாதவரா என்பது தெரியாமல் அவருடன் எப்படி சண்டை போடுவது. மவுனமாக ஒதுங்கிவிடவேண்டியதுதான். அப்படித்தான் ஒதுங்கிக் கொண்டிருந்தேன்.
பேசுவோம்.
When is next post Sanker r u there…?