கைகட்டி வாய்புதைக்கும் நிருபர்கள்
புதிதாக சேர்பவர்களை சம்பந்தம் ஏற்கனவே பணிபுரிவோருக்கு அறிமுகப்படுத்துவார். அப்போது அறிமுகமானவர்களில் ஒருவர் ஜி.சந்திரசேகர். முறைத்துக்கொண்டே வேண்டா வெறுப்பாக கை குலுக்கினார். எதுவும் பேசவில்லை. மற்றவர்கள்போல் சம்பிரதாய சிரிப்புகூட இல்லை.
ஏன் இப்படி? பிரிவுச் செயலரை கேட்டேன். “அவனோடல்லாம் எதுவும் வெச்சிக்காத… அவன் ரிபெல்… ஆர்எம்டிக்கு பிடிக்காது. தினமணி கல்யாணம் ஆளு. அவன், ரெங்காகிட்டல்லாம் அதிகம் பேச்சு வெச்சுக்காத. நல்லதில்ல…”
ஆஹா. இப்படியெல்லாமா நடக்கும்? எனக்கு மண்டைக் குடைச்சல். எவர் கண்ணிலும் படாமல் ஒரு நேரத்தில் சந்திரசேகரை பிடித்துவிட்டேன்.
“என்ன இது இப்டி சொல்றாங்க…பேசுறதுக்குக் கூட பர்மிஷன் வாங்கணுமா?’
“பிரதர் …அவ்ரு சொல்றது சரிதான்… ஏன் என்னன்னு கேக்காதீங்க… எங்களோடல்லாம் பழகினா ஒங்களுக்கு சிக்கல்தான்… நீங்க அப்ரெண்டிஸ் ஞாபகம் வெச்சிக்கிங்க… வந்தோமா வேலையைப் பார்த்துட்டு போனோமான்னு இருக்கணும்…என்னை கட்டாயம் பாக்கணும் பேசணும்னா வீட்டுக்கு வாங்க.. பின்னாலதான் பீட்டர்ஸ் காலனில இருக்கேன்… ஆனா அங்க வந்தாலும் மத்தவங்க கண்ல மாட்லாம்… சரியான நேரம் பார்த்து வாங்க,” என்றார் அவர். பின்னாளில் எனக்கு நெருக்கமானார். சம்பந்தத்திற்கு என்னைப் பிடிக்காமல் போனதால் அல்ல. கொஞ்சம் லெஃப்ட் பாலிட்டிக்ஸ். நக்சல் வேட்டையின்போது தேவாரத்தின் ஆட்களிடம் நன்றாகவே அடி வாங்கினார். அப்போது அவரது ரிப்போர்டைக்கூட நான்தான் டைப் செய்தேன்.
இண்டியன் எக்ஸ்பிரஸ் அலுவலகத்தில் எப்போதுமே ஒருவித இன்ஃபார்மாலிடி நிலவும். இதை இப்படி இன்னார்தான் செய்யவேண்டும் என கறாராக எதுவும் கிடையாது. நேற்று பணியில் சேர்ந்தவர்கூட அனைத்து பதிப்புக்களுக்கும் போய்ச் சேரவேண்டிய செய்திகளை கொடுக்கலாம். சீனியர்கள் கொண்டு வரும் தகவல்களை திறமையுள்ள இளம் நிருபர்கள் செய்தியாக்குவார்கள். சம்பந்தம் அருகில் சேரில் உட்கார்ந்து கொண்டு ’டிக்டேட்’ செய்துகொண்டிருப்பார், அதைக்கூட மாற்றி அடிப்பார்கள் மற்றவர்கள். அது சரியாக இருக்குமானால் சம்பந்தம் ஒன்றும் சொல்லமாட்டார்.
ஒவ்வொரு நேரம் சம்பந்தம் டைப் அடிக்கும் செய்தியை மற்றவர்கள் சரி பார்ப்பார்கள். அந்த அளவு எளிமையை வேறு எந்த தலைமை நிருபரிடமும் காணவே முடியாது.
அவரது ஆங்கில போதாமை எனக்கு அதிர்ச்சியையும் எரிச்சலையும் அளித்ததால் நான் உளறி மாட்டிக்கொண்டேன் என்பது வேறு. ஆனால் நான் தலைமை நிருபர், என் ரிப்போர்ட்டை மற்றவர்கள் யார் திருத்த என்ற அகங்காரம் அவரிடம் இல்லாதது நிச்சயம் பாராட்டத்தக்க விஷயம்.
ஆனால் எவ்வளவு பேர் அவரை அந்தத் தளத்தில் முன்னுதாரணமாக கொண்டார்கள்? வெளியாரை விடுங்கள், அவர் உருவாக்கியவர்கள், அவருக்கு செல்லப் பிள்ளையாக விளங்கியவர்கள்? அவர்களில் மிக மிகச் சிலரே அவரது நற்பண்புகளை சுவீகரித்துக்கொண்டனர் என்பது துரதிர்ஷ்டமே.
நிருபர்கள் பலர் தலைகால் புரியாமல் ஆடுவார்கள். இதில் நகை முரண் என்னவெனில் பெரும் புள்ளிகளைக் கண்டால் கைகட்டி, வாய்புதைத்து… ஆனால் மற்ற இடங்களில், அதிகாரிகளிடம், தொழில் பிரமுகர்களிடம், அரசியல்வாதிகளிடம்? கண்றாவியாக இருக்கும்.
இந்து ஆங்கில நாளேட்டின் தலைமை நிருபர் ஒருவர் இருந்தார். அவர் மற்ற நிருபர்களை விரட்டிக்கொண்டே இருப்பார். மேஸ்திரி என கிண்டல் அடிப்பார்கள். அவர் தலைமையில் சில நிருபர்களும், தினமணி கல்யாணம் தலைமையில் வேறு சிலரும் தலைமைச் செயலகத்தை வலம் வருவார்கள், அதிகாரிகள், அமைச்சர்களை சந்தித்து செய்தி பெற முயல்வார்கள்.
அதில் மேஸ்திரி சாரின் அணுகுமுறையே அலாதி. இந்து தலைமை நிருபராயிற்றே என்ற கர்வம் அறவே கிடையாது பிரமுகர்களை சந்திக்கும்போது… பிரமுகர்கள் என்ன, அவர்களது கிளார்க்குகள், டவாலிகளிடமும்தான். அவர்கள் அருகே சென்று கிசுகிசுப்பார்: ”என்ன, சார் இருக்காரா…” அவ்வளவு பவ்யம்.
இப்படியெல்லாம் நெளிந்து குழைந்து என்ன பெரிய நியூஸ் பிரேக் கொடுத்திருப்பார்கள்? தினமணி கல்யாணம் ஒன்றும் அவ்வளவு மோசமல்ல. அவ்வப்போது எகிறக்கூட செய்வார். ஆனால் எல்லோருமே ஆள்வோரை பகைத்துக்கொள்ளக்கூடாது என்பதில் மிகவும் கவனமாயிருந்தார்கள்.
மாறாக சம்பந்தம் தலை நிமிர்ந்து பவனி வந்தார். கருணாநிதியைக் கொஞ்சம் பிடிக்கும் அவ்வளவுதான், ஆனால் எவரிடமும் குழையமாட்டார். பேப்பருக்கு ஒத்துவராது என சில செய்திகளை அவர் நிராகரித்திருக்கலாம். ஆனால் தனக்குப் பிடிக்கவில்லை என்றோ, யாரையாவது பகைத்துக் கொள்ள பயந்தோ எந்தச் செய்தியையும் அவர் நிராகரித்ததில்லை. அதிலே அவரைப் பற்றி எனக்கு எப்போதுமே ரொம்பப் பெருமைதான். அவர் ஓரளவு பகுத்தறிவுவாதியும்கூட. இதுவும் அவர்பால் என்னை ஈர்த்தது. ஆனால் அவருக்கு என்னைப் பிடிக்காமல் போய்விட்டதே. அதையும் மீறி அவ்வப்போது உயிர் பிழைத்து வந்தேன்!
வாடர்கேட் ஊழல் தொடர்பாக வெள்ளை மாளிகை உயரதிகாரிகள் சிலர் பதவி இழந்ததை ’சாட்டர்டே நைட் மேசக்கிர்’ என்பார்கள். அது போலத்தான் நான் எக்ஸ்பிரசில் பணிக்கு சேர்ந்து இரண்டு மாதங்களிலேயே என்று நினைவு. அறைக்கு வருகிறேன் காலையில். என்னுடைய சக ஜூனியர்கள் எவரையும் காணோம்.
சம்பந்தத்தின் செயலர் வந்த பிறகுதான் சஸ்பென்ஸ் உடைந்தது. “நீ தப்பிச்சப்பா டி என் ஜி … நாலு பேரு காலி.. ஆர் எம் டி நேத்திக்கு ஈவ்னிங்கே வீட்டுக்கு அனுப்பிச்சிட்டாரு.”
அவர்களில் ஒருவரது ரிப்போர்ட், ஆங்கிலம் எல்லாம் மோசம்தான்… மற்றவர்கள்? ஒரு ஆங்கிலோ இண்டியன் நன்றாகவே எழுதுவார். கொஞ்சம் பந்தா பேர்வழி… இருக்கட்டுமே…அதற்காக? ஆர் எம் டியிடம் போய் நியாயம் கேட்கும் அளவு எனக்கு நெருக்கமில்லையே. அதைவிட எனக்கு இன்னமும் எத்தனை நாட்கள் என்று பயம் கூடியது.
வேலை தப்பியிருக்கலாம். ஆனால் நாள்தோறும் சம்பந்தத்திடம் டெய்லி டோஸ். அற்ப காரணங்களுக்காக ஏதாவது கடுப்படித்துக்கொண்டே இருப்பார். எதிர்பாராத வகையில் சம்பந்தத்தின் டார்ச்சரிலிருந்து தற்காலிக விடுதலை கிடைத்தது.
பேசுவோம்.
இது தொடர்ங்கிறதுனால, பழைய லிங்க்ஸையெல்லாம் கீழே கொடுத்தல் நலம்…