ஊழல் செய்தி என்றால் அன்றும் அப்படித்தான்
சினிமா செய்தியிலிருந்து மீண்டும் மையநீரோட்டம் திரும்ப எனக்கு உதவி செய்தது இந்துஸ்தான் ஃபோட்டோ பிலிம்ஸ் (எச்.பி.எஃப்) ஊழல் தொடர்பான செய்திதான்.
திரைத்துறைக்கு தேவையான கச்சா படச்சுருள் தயாரிப்பதற்காக ஜவஹர்லால் நேரு காலத்தில் உருவாக்கப்பட்டது அந்த நிறுவனம். பல ஆண்டுகள் நஷ்டத்தில் இயங்கியது. இன்று ஏறத்தாழ மூடப்பட்டுவிட்டது.
இறுதிவரை அங்கு கச்சா ஃபிலிம் தயாரிக்கவே இல்லை. ஜம்போ சுருள்களை வாங்கி வெட்டிக் கொடுத்து வந்தது. எக்ஸ்ரே ஃபிலிம்கள் உள்ளிட்ட வேறு சில புகைப்படம் சார்ந்த பொருட்களையும் தயாரித்து வந்தது.
எப்படியெல்லாம் ஒரு நிறுவனத்தை நடத்தக் கூடாதோ அப்படி நடத்தினர். தண்டத்திற்கு ஆட்களை சேர்ப்பதிலிருந்து எல்லாவற்றிலும் வரைமுறையற்ற சுருட்டல். கேட்பாரில்லை.
சென்னையைச் சேர்ந்த எம்.எஸ்.அப்பாராவ், ஜார்ஜ் ஃபெர்னாண்டசின் நண்பர், பெரும் செல்வந்தர், ஆனால் சோஷலிச சிந்தனையுள்ளவர், பரோடா டைனமைட் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர். அவர் ஜனதா ஆட்சிக்கு வந்தவுடன் எச்..பி.எஃப் தலைவராக நியமிக்கப்படுகிறார். அவருக்கு அந்த நிறுவனத்தில் நடைபெற்று வந்த இமாலய ஊழலைக் கண்டு பேரதிர்ச்சி. நடவடிக்கை எடுக்கத் தொடங்குகிறார். ஆனால் ஜனதா ஆட்சி கலைகிறது. இவரது பதவியும் பறிபோகிறது.
எவர் மூலமாகவோ தொடர்பு ஏற்பட்டு எனக்கு அப்பாராவிடம் இருந்து அழைப்பு வந்தது. கட்டு கட்டாக ஆவணங்கள். அவருடைய பங்களாவில் இருந்தபடியே பல மணி நேரங்கள் அவற்றைப் படித்து புரிந்துகொண்டு, அவரிடமும் சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொண்டு அலுவலகம் திரும்பினேன். சங்கரும் பெருந்தன்மையுடன் என்னை அந்தச் செய்தியை எழுத அனுமதித்தார். எதையும் சரிபார்க்கவில்லை, எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. அந்த அளவு அவருக்கு என் மீது நம்பிக்கையிருந்தது.
ஸ்க்ரீனில் தலைப்புச் செய்தியாக வெளியானது. டெல்லியில் பெரும் பரபரப்பு. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். சடங்கிற்கு எச்.பி.எஃப் நிர்வாகம் ஒரு செய்தியாளர் சந்திப்பு ஏற்பாடு செய்து, வெளியான தகவல்களை மறுத்தது. என்னைத் தவிர வேறு எவரேனும் கேள்வி கேட்க வேண்டுமே, கிடுக்கிப்பிடி போட வேண்டுமே… ஊஹூம்.
இன்று அத்தகைய செய்தி வெளியாகி இருந்தால் ஆர்னாப்பிலிருந்து குணசேகரன், பாண்டே வரை உலுக்கி எடுத்திருப்பார்கள். ஒரு சில நாட்களுக்காவது அதுவே எல்லா இடங்களிலும் பேசப்பட்டிருக்கும். பல கோடி ரூபாய் ஊழல். அப்போது தொலைக்காட்சி இல்லை. பத்திரிகைகளும் அதிக எண்ணிக்கையில் இல்லை. சென்னையில் இருந்து இயங்கிய ’இந்து’ அத்தகைய செய்திகளைக் கண்டால் காத தூரம் ஓடும். ’எக்ஸ்பிரஸ்’ புகுந்து விளையாடியிருக்கலாம், ஆனால் முதல் செய்தி கொடுத்தது நானல்லவா, எப்படி சம்பந்தம் தலைமையிலான நிருபர் குழாம் அதைத் தொடும்? தவிரவும் வணிகத் துறை நிருபர்கள் திரைப்படத்துறை செய்தியாளர்களப் போன்றுதான். தங்கள் துறையில் எவரையும் பகைத்துக் கொள்ள தயங்குவார்கள்.
இவை தவிர, எச்.பி.எஃப் விற்ற கச்சாச் சுருள்களை நம்பியிருந்த திரைப்பட துறையினரும் நமக்கெதற்கு வம்பு என பேசாமல் இருந்து விட்டனர்.
ஒட்டு மொத்த விளைவு புஸ்வாணம். பற்றவைத்த பத்தாயிரம் வாலா ஈரத்தில் நமத்துப் போய்விட்டது. ஸ்க்ரீனுக்கும் எனக்கும் இன்னும் சிலருக்கும் மட்டுமே அது வெடித்த சத்தம் கேட்டிருக்கும்.
எனக்கு பெரிய நியூஸ் பிரேக். ஸ்கூப் என நினைப்பு. செய்தி வெளியான ஓரிரு நாட்கள் மிதந்து கொண்டிருந்தேன், ஆனால் எவரும் என்னையோ, செய்தியையோ கண்டுகொள்ளவில்லை சம்பந்தத்தின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டதால் எக்ஸ்பிரஸ் நிருபர்கள் எவரும் என்னிடம் அதிகம் பேசமாட்டார்கள். நானாக சிலரிடம் வலிந்து எச்.பி.எஃப் பற்றி சொல்ல முயற்சி செய்தும் பயனில்லை. ஸ்க்ரீன் ஆசிரியர் குழுவினருக்கும் இது பற்றி மேலே விசாரிக்கவேண்டும், நான் உதகை சென்று இன்னும் பலரை சந்திக்கவேண்டும் என்றெல்லாம் தோன்றவில்லை. அந்த ஒரு வார பரபரப்போடு சரி.
அந்த நேரம் 5 PM எனும் மாலைப் பத்திரிகை ஒன்றை எக்ஸ்பிரஸ் குழுமம் கொண்டுவந்தது. அதில் பணி செய்ய முன் வருபவர்கள் பட்டியல் தயாரான போது முதல் ஆளாக என் பெயரை கொடுத்தேன்.
இந்த 5 PM மூன்று மாதங்களே ஓடியது. சில பரபரப்புச் செய்திகளை நாங்கள் கொடுக்க முடிந்தது.
அப்போது எச்.பி,.எஃப் பிரச்னையை மீண்டும் ஒருமுறை என்னால் தொட முடிந்தது. திருச்சி பி.எச்.இ.எல் (பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ்)லில் நடந்த ஒரு பெரும் ஊழலைக் கண்டுபிடித்து நாடாளுமன்றத்தில் எழுப்பி பரபரப்பை உருவாக்கியிருந்த சிபிஎம்மின் பி.ராமமூர்த்தி எச்பி எஃப் ஆலைக்கு சில்வர் நைட்ரேட் வாங்குவதில் ஊழல் நடந்ததைக் கண்டறிந்திருக்கிறார் என தகவல் வர, அவரைப் பிடித்து, நீண்ட பேட்டி எடுத்தேன். தலைப்புச் செய்தியாக வெளியானது.
ஆனாலும் என்ன? அந்தச் செய்தியையும் எவரும் தொடரவில்லை. 5 PM மில் வரும் எந்தச் செய்தியையும், அது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும், அது குறித்து விசாரித்து செய்தி வெளியிடுவதில்லை என சம்பந்தம் தலைமையிலான நிருபர்கள் குழு உறுதியாக இருந்தது.
எனவே அச்செய்தியும் புஸ்வாணமானது.
எச்.பி.எஃப். பிரச்னை தொடர்பாக பின்னர் தோழர் பி ஆர் என்னிடம் நடந்துகொண்ட விதமும் எனக்கு வியப்பையும் வேதனையையும் அளித்தது. 5 PMமில் வெளியாகிறது. எக்ஸ்பிரசே கண்டு கொள்ளவில்லை என்றால் இந்து ஏன் கவலைப்பட போகிறது? கிணற்றில் போட்ட கல்தான். மற்ற அரசியல் தலைவர்களும் தொழிற்சங்கங்களும்கூட கண்டுகொள்ள மறுத்தனர். இதற்கு நான் என்ன செய்யமுடியும்? ஆனால் நான் ஏதோ ஒரு வகையில் பொறுப்பு என பி.ஆர் நினைத்தார்.
செய்தி 5 PM மில் வெளியானதை எல்லோரும் மறந்த சில மாதங்கள் கழித்து நான் அவரை மதுரையில் சந்தித்தேன். பார்த்தவுடனே அவர் முகம் சுளித்து, “ஓ நீங்கதானா… வேணாம்பா பேட்டியெல்லாம்,” என்று மேசை மீதிருந்த எதையோ படிக்கத் தொடங்கினார்.
எனக்கு விளங்கவில்லை. “சார்…என்ன சார் என் மீது என்ன கோபம் உங்களுக்கு?”
“ஒன் மேல எனக்கென்னய்யா கோபம்… ஆனா ஒங்கிட்ட பேசி பிரயோசனம் இல்லேங்கிறேன்…. நீதானப்பா சில்வர் நைட்ரேட் பேட்டியெடுத்தே….உம்… என்னாச்சு? எவனாவது கண்டுகிட்டானா…? நான் யாருய்யா… பிஎச்இஎல் பத்தி இந்தியாவையே ஒரு கலக்கு கலக்கினவன்… அப்றம் எச்பிஎஃப் பத்தி நான் பேசினா பத்திகிட்டு எரிய வாணாமா… ஒங்களை மாதிரி சின்ன ஆளுங்ககிட்ட அவ்ளோ பெரிய விஷயமெல்லாம் பேசினா வேலைக்கே ஆவாதுன்னு தெரிஞ்சு போச்சு… என் எஃபர்ட், டைம் எல்லாம் வேஸ்ட்… நோ நோ…இப்ப ஒண்ணும் சொல்றதுக்கில்லே..”
”இல்ல சார் நான் எச்பிஎஃப் பத்தி கேக்க வர்ல… “ சமாதானப் படுத்த முயன்றேன். பலிக்கவில்லை.
”இல்லிங்க… இப்ப ஏதும் வாணாம். இன்னொரு சமயம் பார்க்கலாம்” என கத்தரித்துவிட்டார். உடன் இருந்த மதுரை தோழர்கள் எனக்கு நன்கு அறிமுகமானவர்கள், அவர்களுக்கும் தர்மசங்கடமாகி விட்டது. ஆனால் அவரிடம் வலியுறுத்தவும் பயம். கொஞ்ச நேரம் பொறுத்திருந்து, தாங்க் யூ சார் என்று சொல்லிவிட்டு வெளியேறினேன்.
பேசுவோம்
Even your savukku is no different. the reservation is based on population so all the jobs should be distributed based on population to all places in India. If there are 700 IAS officers then each district should have one post. If they want SC, BC, MBC then fill OC from many districts , then BC, move on to MBC , then SC , then ST. how many in media will support such reservations. By distributing medical seats the requirement of doctors can be easily met for rural areas.
Dear dubs
There are too many vacancies in municipality to sweep the street then clean the sewer , as you said first fill with oc then go for others. .. are you ready