சயீத் நக்வி – என் இதழியல் குருநாதர்
என்னடா ஓடியாடி உழைத்து பரபரப்புச் செய்திகள் கொடுத்தாலும் ஒன்றும் பயனில்லையே என்று நான் நொந்துகொண்டிருக்கும்போதே விளம்பர வருவாய் போதாது எனச் சொல்லி நிர்வாகம் 5 PM இதழையே நிறுத்திவிட்டது.
ஒரு மாலை ஏட்டைத் துவக்குகிறார்கள், யாரைக் கேட்டு என்ன விதமான ஆய்வுகளை மேற்கொண்டார்கள்…யாருக்கோ ஏதோ தோன்றுகிறது..ஆரம்பிக்கிறார்கள், பிறகு கையைக் கடிப்பதாகச் சொல்லி இழுத்தும் மூடுகிறார்கள். இதனால் எவ்வளவு பேருடைய வாழ்க்கை பாதிக்கப்படுகிறது, அதற்கெல்லாம் யார் பதில் சொல்வது? முதலாளித்துவ பொருளாதாரத்தின் பொறுப்பற்ற பரிமாணத்திற்கு இது மேலும் ஒரு எடுத்துக்காட்டு.
5 PM மாலை ஏடு நிறுத்தப்பட்ட பிறகு நான் இண்டியன் எக்ஸ்பிரசிற்கு மீண்டும் வரக் காரணமாயிருந்தவர் சயீத் நக்வி.
உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த அவரை அங்குமிங்கும் எப்போதாவது தொலைக் காட்சி சானல்களில் காணலாம். அவ்வப்போது ஏதாவது கட்டுரைகள் பத்திரிகைகளில் வெளியாகும். ஓரிரு புத்தகங்கள் எழுதியிருக்கிறார். Veteran journalist, இந்தியாவின் குறிப்பிடத்தக்க பத்திரிகையாளர்களில் ஒருவர் என்று கூட சொல்வார்கள்.
ஆனால் யதார்த்தம் என்னவெனில் அவரை விட திறமை, ஆங்கிலப் புலமை குறைந்தவர்களெல்லாம் பல மடங்கு பிரபலமாகியிருக்கின்றனர், அதிகாரம் பெற்றிருக்கின்றனர், பொருள் குவித்திருக்கின்றனர், இவரோ எந்த இதழின் ஆசிரியராகாமலேயே ஒதுக்கப்பட்டுவிட்டார். இப்போது அவருக்கு வயது 73.
ஆனால் ஒரு கட்டத்தில் அவர் இண்டியன் எக்ஸ்பிரசின் அகில இந்திய ஆசிரியராகும் வாய்ப்பிருந்தது. ஸ்டேட்ஸ்மனில் துவங்கிய பயணம் பல நாடுகளுக்கும் அழைத்துச் சென்றது. சிறப்புச் செய்திகளைப் பெற அயராது உழைப்பது, enterprise என்பார்கள், துணிச்சல். இனிமையாகப் பேசி மற்றவரைக் கவர்ந்து, நம்பிக்கையைப் பெற்று, செய்திகளைக் கறப்பது, இவை எல்லா நிருபர்களுக்கும் அவசியம். இவை அனைத்தும் நக்வியிடம் அதிகமாகவே இருந்தது. மிகக் குறுகிய காலத்தில் உயர் பதவிகளையும் பெற்றார். இண்டியன் எக்ஸ்பிரசின் தென் மண்டல ஆசிரியராகப் பொறுப்பேற்று சென்னைக்கு அவர் வந்த நேரத்தில்தான் அவர் கடைக் கண் பார்வை எனக்கும் கிட்டி நான் மீண்டும் எக்ஸ்பிரசுக்குள் வந்தேன்.
அவரது ஆங்கில வளத்தை இன்றளவும் நாம் ரசிக்கலாம். இந்திய வாடை, பஞ்சாபி வாடை சற்றும் இல்லாமல், எப்படி ஆங்கிலம் எழுதப்படவேண்டுமோ அப்படியே எழுதினார். idiomatic English என்பார்கள், ஆங்கிலத்திற்கே உரித்தான சிறப்பு நடைகளை அவர் நன்கு பயின்றிருந்தார். நம் ஊர் அருண் ஷௌரி, குஷ்வந்த் சிங் இன்னும் பலரின் ஆங்கிலத்தில் ஏகப்பட்ட குளறுபடிகள் இருக்கும்.
நானறிந்த வரை பயனீர் பத்திரிகை ஆசிரியர் சந்தன் மித்ரா, சயீத் நக்வி இவர்கள் போன்றோர் தவிர ஆங்கிலத்தை அவ்வளவு அழகாக, மொழி அறிந்தவர்களை அப்படியே அசத்தும் வண்ணம் எழுதும் திறன் பெற்ற செய்தியாளர்கள் ஓரிருவர் இருந்தால் அதிகம் எனச் சொல்லுவேன்.
பலர் என்னிடம் கேட்பார்கள் ஆங்கில மொழித் திறனை வளர்த்துக்கொள்வதெப்படி என. குறுக்குவழி ஏதுமில்லை. நிறைய படிக்கவேண்டும். அதுவும் classics, பன்னெடுங்காலமாகப் புகழ் பெற்ற படைப்புக்களைப் படிக்கவேண்டும், அவற்றின் நடையினை உள்வாங்கவேண்டும்.
மிகத் தரமான பள்ளிகளில் பயின்றிருக்கிறார், நிறைய படித்திருக்கிறார். எனவேயே அவரது பிரமிக்கத் தக்க வீச்சு.
நக்வி 1980ஆம் ஆண்டு மத்தியில் சென்னை வந்ததிலிருந்தே அவர் நிருபர்கள் பிரிவை மாற்றி அமைக்க திட்டமிட்டிருக்கிறார், அவருக்கும் சம்பந்தத்திற்கும் ஆகவில்லை என செய்திகள். அவ்வப்போது எங்கள் அறைக்குள் வருவார், சுற்றி மாற்றி பார்த்துவிட்டு, சம்பந்தத்திடம் ஏதோ பேசிவிட்டுச் செல்வார். அவர்கள் உடல்மொழியே ஏதோ சரியில்லை எனக் காட்டியது போலத் தெரிந்தது. அப்படி ஒரு நாள் வந்தபோது ஹெச் பி எஃப் செய்தி வெளியாகியிருந்த ஸ்க்ரீன் ஏட்டை இரண்டாக மடித்து, அச் செய்தி நன்றாகத் தெரியுமாறு கையில் பிடித்துக்கொண்டே இருந்தேன். அது அவர் கண்ணில் பட்டது போன்றே தெரிந்தது. சிரித்துக்கொண்டே சென்றார்.
5 பி எம்மில் என் கட்டுரைகளும் அவரது கவனத்தை ஈர்த்திருக்கவேண்டும். அந்தக் கட்டத்தில் நான் அவரை சந்தித்து எல்லாக் கதையையும் சொன்னேன். மிகுந்த கரிசனத்தோடு கேட்டார். பார்ப்போம், சென்று வா எனச் சொல்லி அனுப்பினார். 5 பி எம் நிறுத்தப்பட்ட பிறகு எக்ஸ்பிரசுக்கும் மாற்றிவிட்டார்.
ஏறத்தாழ அதே கட்டத்தில் யாரும் எதிர்பாராவிதமாக சம்பந்தமும் கணபதியும் ஓரங்கட்டப்பட்டனர். சிறப்பு நிருபர்களாக உயர்த்தப்பட்டனர் ஆனால் அவர்களுக்கும் நிருபர் பிரிவிற்கும் தொடர்பில்லை என்றானது. வேறு இரு மூத்த நிருபர்கள் இணை தலைமை நிருபர்களாயினர்.
அப்போதுதான் நக்சலைட் பிரச்சினை வடமாவட்டங்களில் வெடித்துக் கிளம்பியது. வால்டர் தேவாரம் தலைமையிலான காவல் துறையின் அதிரடியில் மோதல் மரணங்கள் நிகழத்துவங்கின.
70களில் அகில இந்திய அளவில் பெரும் வீச்சு பெற்றிருந்த நக்சல்பாரி இயக்கம் தமிழகத்தில் வேரூன்றத் துவங்கியது 1980ஆம் ஆண்டுதான். வட மாவட்டங்களில் பல இளைஞர்கள், குறிப்பாக வன்னியர்கள், ஏழ்மையையும் சுரண்டலையும் சாதி ஆதிக்கங்களையும் எதிர்த்து களமிறங்கினர். அப்போது முதல்வர் எம் ஜி ஆர். பொதுக்கூட்டங்களில் வறிய நிலையிலிருக்கும் மூதாட்டிகளைக் கட்டித் தழுவி, அவர்கள் கரங்களில் கரன்சி நோட்டுக்களைத் திணிப்பார். சினிமாவிலோ கேட்கவே வேண்டாம். விவசாயி, பாட்டாளி, கூலித் தொழிலாளி எல்லோரையும் அரவணைத்துச் செல்வார்.
ஒன்று எங்கள் ஜாதியே,
ஒன்று எங்கள் நீதியே,
உழைக்கும் மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே “
என்றெல்லாம் பாடுவார். ஆனால் அரசும், முதல்வர் பதவியும் ஏழைகளுக்காகவா என்ன? உடைமையாளர்களின் நலனைக் காக்கத்தானே.
அரசு மூர்க்கமாக தன் கடமையில் இறங்கியது. மோகன்தாஸ்தான் ஒருங்கிணைத்துக்கொண்டிருந்தார். ஆனால் வேலூர் சரக டிஐஜி வால்டர் தேவாரம்தான் அனைத்து கொடுமைகளுக்கும் முழுப் பொறுப்பு.
அன்றைய நிகழ்வுகள் முறையாக ஆவணப்படுத்தப்படவில்லை. இண்டியன் எக்ஸ்பிரஸ் பல செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வந்தது. ஆனால் இந்துவைப் பொறுத்தவரை எதுவும் நடக்கவில்லை. அரசு நடந்தது என்று தெரிவித்தால்தான் நடந்த்தெனப் பொருள். எமர்ஜென்சி கட்டத்தில் அவர்கள் அலுவலகத்திற்கெதிரே இருந்த ராஜாஜி ஹாலில்தான் காமராஜின் உடல் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. ஒரே கூட்டம். தடியடி, துப்பாக்கி சூடு வரைக்கும் சென்றது. எக்ஸ்பிரஸ் நிருபர் சந்திரசேகர் அவசர அவசரமாக அலுவலகம் வந்து டைப் அடித்து முடிக்கிறார். அதன் பிறகு இந்து நண்பரிடம் என்னப்பா முடித்துவிட்டாயா எனக் கேட்கிறார். “அடப் போப்பா. கமிஷனர்ட்ட கேட்டிருக்கோம்…போடலாமா வேணாமான்னு…இன்னும் பதில் வல்ல,..” அவ்வளவு ராஜ விசுவாசம்.
அவசர நிலை விலக்கிக்கொள்ளப்பட்ட பிறகும் இந்துவின் அணுகுமுறை ஒன்றும் அதிகம் மாறிவிடவில்லை. இந்து நிர்வாகம் ஆள்வோர் எவராக இருந்தாலும் அவர்களைப் பகைத்துக்கொள்வதில்லை என்பதில் உறுதியாக இருந்தது அண்மைக்காலம் வரை.
எனவே மோதல் மரணங்கள், இளைஞர்கள் சித்திரவதை செய்யப்பட்டது இவை குறித்தெல்லாம் மிகவும் அடக்கி வாசித்தது தமிழகத்தின் முன்னணி ஆங்கில ஏடு. மற்ற தமிழ் பத்திரிகைகளைப் பற்றி கேட்கவே வேண்டாம். எதுவுமே நடவாதது போல இருந்தார்கள்.
ஒப்பீட்டளவில் எக்ஸ்பிரஸ் பரப்பான செய்திகளை எப்போதும் கொடுத்து வந்தது. பல நேரங்களில் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகும், ஆளாளுக்கு விருப்பம்போல் எழுதுவார்கள், கட்டுப்பாடுகள் குறைவு, என்றாலும் தரமான புலனாய்வுச் செய்திகள், அரசை அதிரவைக்கும் அணுகுமுறை எல்லாம் தமிழக்த்தைப் பொறுத்தவரை நக்வியின் வருகைக்குப் பின்னர்தான்.
இந்நிலையில்தான் நானும் இன்னொரு நிருபரும் திருப்பத்தூருக்கு அனுப்பிவைக்கப்பட்டோம். எங்கள் பிரிவிலே மிக இளையவன் நான் அப்போது. இருந்தும் என்னை நக்வி அனுப்பிவைத்தார்.
பேசுவோம்.
Due to walter devaram the leftist naxalite menace was exteriminated from Tamilnadu .otherwise we would be another chatisgarh and would be suffering.This so called human rights leftist anarchist news reporters were reporting ” excesses” but MGR dismissed it with the contempt it deserved and because of that our state is peaceful
Please be frequent sir …
Chellathurai
Naqvi is no more. The writer has written as if he is alive. Saba Naqvi, formerly with Outlook, is his daughter.
நானறிந்த வரை பயனீர் பத்திரிகை ஆசிரியர் சந்தன் மித்ரா, சயீத் நக்வி இவர்கள் போன்றோர் தவிர ஆங்கிலத்தை அவ்வளவு அழகாக, மொழி அறிந்தவர்களை அப்படியே அசத்தும் வண்ணம் எழுதும் திறன் பெற்ற செய்தியாளர்கள் ஓரிருவர் இருந்தால் அதிகம் எனச் சொல்லுவேன்.
நூறில் ஒருவர் ஆங்கிலம் கூட அறியாத நாட்டில் ஆங்கில புலமை ஒரு நிருபருக்கு தேவையா .
The postings could be frequent like bi-weekly if not daily. I want to know whether the Rama . Sambandham of Dinamani a Karunanithi bootlicker– who made a colourful front page and last page coverage in Dinamani when karunanithi was ” ELECTED” as DMK party chief for the seventh or eighth time ” UNOPPOSED”–and this sambandham are one and the same?