போலீஸ் ராஜ்யம்னா தெரியுமா?
செப்டம்பர் 1980. ஒரே போலீஸ் கெடுபிடி. கிராமத்து மக்கள் பேசவே பயந்தனர். நாங்கள் சென்ற நேரத்தில்தான் தர்மபுரி பாலனை கைது செய்திருந்தார்கள். விவசாய கூலிகளுக்காகவும் தலித்துகளுக்காகவும் குரல் கொடுத்தவர்.
பாலனையோ அவரது தோழர்களையோ சந்திக்கவேண்டும் என்று ஆர்வமாக இருந்த நேரத்தில் அவர் காவல் துறையினரால் அடிபட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பிறகு சென்னைக்கு கொண்டு செல்லப்பட்ட தகவல் தெரிய வந்தது.
நான் மருத்துவர்களை தாஜா செய்து, பதிவேட்டை பார்த்து எந்த நேரத்தில் பாலன் அங்கே கொண்டு வரப்பட்டார், என்ன விதமான காயங்கள் அந்த நேரத்தில், எப்போது சென்னைக்கு என்ற முக்கிய விவரங்கள் அனைத்தையும் சேகரித்தேன்.
இரண்டு நாட்கள் அலைந்து இயன்றவரை தகவல்களை திரட்டியபின், தலைமையகத்தில் இருந்து வந்திருந்த டிஐஜி குமாரசாமியை சந்திக்க திருப்பத்தூர் காவல் நிலையத்திற்கு சென்றோம். இயல்பாக பேசினார். டீயெல்லாம் வாங்கிக் கொடுத்தார். எங்கள் பின்னணி குறித்து, யாரையாவது நக்சலைட்டுகளை சந்தித்திருக்கிறோமா என்று துருவித் துருவி கேட்டார். நான் கொஞ்சம் கூடுதலாகவே பேசியதால் என்னிடம் அதிகமாகவே. பாலன் கைது பற்றிக் கேட்டதற்கு அவர்கள் பாணியில் மழுப்பினார்.
விடைபெறும் நேரத்தில், “சரி எப்போ திரும்புறீங்க?’ என்றார். “இப்பத்தான் சார் வந்திருக்கோம்…இன்னும் சிலரை பார்க்க வேண்டியிருக்கிறது,” என்றேன். ”சரி சரி போயிட்டு வாங்க, குட் லக்,” என்றார்.
வாயிலில் ஆயுதமேந்திய போலீசார் ஒரு வானில் ஏறிக்கொண்டிருந்தனர். சரி ஏதோ ஆப்பரேஷன், யார் மாட்டினார்களோ என சொல்லிக்கொண்டே நடந்தோம்.
காவல்நிலையம் ஒரு சிறிய சந்தில் அப்போது அமைந்திருந்தது. முனையில் ஒரே ஒரு பெட்டிக்கடை. மற்றபடி அங்கே அதிக நடமாட்டம் இருக்காது. பெட்டிக்கடையை கடந்து முக்கிய சாலையை தாண்டிதான் நாங்கள் தங்கியிருந்த லாட்ஜுக்கு செல்லவேண்டும். பின்னாளில் அந்த லாட்ஜ் அகில இந்திய அளவில் பிரபலமாகி இருந்தது.
நாங்கள் காவல் நிலையத்தில் இருந்து வெளியே வரும்போது முனை பெட்டிக்கடை திறந்திருந்தது, பல்ப் எரிந்துகொண்டிருந்தது. ஆனால் நாங்கள் சற்று தூரம் நடந்தபோது அவசர அவசரமாக கடையை இழுத்து மூடுவதைக் காண முடிந்தது. ஏழரை அல்லது எட்டுதான் இருக்கும், இவ்வளவு விரைவாகவா கடையை மூடுவார்கள் என்று நினைத்துக் கொண்டே மேலே நடந்து அக்கடை அருகே சென்றபோது, “ஏய் இங்க வா” என குரல். மூடப்பட்ட கடையின் முன் இருவர், கைலி அணிந்திருந்தவர்கள் நின்று எங்களை அழைத்தனர்.
“வா வேகமா போய்டுவோம்,” என்றார் உடனிருந்தவர்.
எனக்கோ அவர்களை கண்டவுடன் புது உற்சாகம்… அவர்கள் நக்சல் இயக்கத்தில் இருப்பவர்கள் என நினைத்துவிட்டேன். இரண்டு நாட்களாக தேடி அலைந்தும் அவர்கள் எவரையும் பிடிக்கமுடியவில்லையே என்ற வருத்தத்தில் இருந்த எனக்கு உற்சாகம்.
விறுவிறுவென்று அவர்கள் பக்கம் சென்றேன். முணுமுணுத்துக் கொண்டே நண்பரும் உடன் வந்தார்.
ஆரம்பமே மோசமாக இருந்தது. “என்னய்யா என்ன நெனச்சிகிட்டிருக்கீங்க? எங்களை வேவு பாக்க வந்திருக்கீங்களா?” என்றார் அந்த இருவரில் ஒருவர்.
நான் அவரது தோள்களை உரிமையுடன் பற்றி, “தோழர் நீங்க தப்பா நெனச்சிகிட்டிருக்கீங்க…”
சொல்லி முடிக்கவில்லை, அவருடன் இருந்தவர் பளார் என்று ஓர் அறை விட்டார்.
சுள்ளென்று இருந்தது. ஆனால் அப்போதும் நான் நம்பிக்கை இழக்கவில்லை! “கோபப்படாதீங்க…சொன்னாக் கேளுங்க….போலீஸ் அராஜகத்தை அம்பலப்படுத்தத்தானே பேப்பர்லாம்… நாங்க இண்டியன் எக்ஸ்பிரஸ்…”
அவ்வளவுதான் மரியாதை. “ஒழுங்கா வூட்டுக்குப் போற வழியப் பார்றா” என சொல்லியவாறே அடுத்தவர் விட்டார் ஓர் உதை.
பத்தடி தள்ளி இருந்த சாக்கடையில் விழுந்திருக்க வேண்டும்… ஆனால் அதை ஒட்டிய சுவரைப் பற்றி சமாளித்துவிட்டேன்… அய்யோ அய்யோ என அலறுகிறேன்… காவல் நிலையத்தின் வாயிலில் இன்னமும் ஜீப் நின்று கொண்டுதான் இருந்தது..ஹெட் லைட் கூட எரிந்துகொண்டிருந்தது. நிச்சயம் அங்கிருந்தவர்கள் நான் விழுந்ததை பார்த்திருக்க வேண்டும். ஒருவரும் உதவிக்கு வரவில்லை.
சுற்றுமுற்றும் பார்த்தேன். அந்த ஆட்களை காணோம். என் சக நிருபரையும்தான். அடுத்து என்ன செய்யலாம் என நினைத்துக் கொண்டிருந்தபோது, அவர் வந்தார்.
“ஏய், அடி பலமா?…தப்பா நெனச்சிக்காதே….உன்னை அறைஞ்ச ஒடனேயே ஓடிட்டேன்… ஆனா ரூமுக்கு போகல. தள்ளி நின்னு என்ன நடக்குதுன்னு பார்த்தேன்.” என்றார்.
அடி கொஞ்சம் பலமென்றாலும் ரொம்பவும் வலியெல்லாம் இல்லை. சாக்கடையில் விழுந்து ஜிப்பா வேட்டியை உடனே துவைக்க வேண்டிய கட்டாயம் இல்லாததே எனக்கு நிம்மதியாக இருந்தது.
உண்மையில் ஒரு ’கிக்’, அடி உதை வாங்கிவிட்டோமே, சிறிய அளவில் என்றாலும், அதுவும் போலீஸ் கரங்களில். நமக்கு இதழியலில் ஓர் இடம் கிடைத்துவிட்டது என்ற மகிழ்ச்சி.
அந்நிலையில் நண்பர் ஓடிப்போனது கூட எனக்கு அவ்வளவு பெரிய பிரச்னையாக இல்லை. சினிமாவா என்ன, எகிறிக் குதித்து சண்டை போட? கட்டிப் புரளும் மன நிலையெல்லாம் நமக்குக் கிடையாதே.
“சரி வாய்யா ரூமுக்குப் போய் நக்வியிடம் சொல்லுவோம்,” என்றேன்.
“இல்லப்பா முதல்ல போய் டிஐஜி குமாரசாமிகிட்ட போய் ஒரு கம்ப்ளெயின்ட் கொடுத்துட்டு வந்திடுவோம்.”
“ஹஹா நீ என்ன லூசா…போலீஸ் ஸ்டேஷன்லேந்து எவ்ளோ தூரம் இந்த இடம்… அங்க பாரு..அந்த ஜீப் நிக்குது…ஹெட் லைட் எரியுது…..அவங்க எல்லாத்தையும் பாத்துகிட்டுத்தானே இருந்திருப்பாங்க …விட்ட உதையில பத்தடி தள்ளி வந்து விழுந்திருக்கேன்…கத்தியிருக்கேன்.. ஒருத்தரும் என்னன்னு பதறிப்போய் வரல்லியே… எல்லாத்தையும் விடு போலீஸ் ஸ்டேஷனுக்கு இவ்ளோ பக்கத்திலே யாரும் ரவுடிங்க வந்து அடிப்பாங்களா….”
“அப்டின்னா…”
“ஆமாம் ஆமாம் நம்மை அடிச்சது போலீஸ் செட் அப் பண்ண ஆளுங்கதான் நக்சலைட் இல்லய்யா.. சரி சரி வா ரூமுக்கு போய் மொதல்ல எடிட்டர்கிட்ட சொல்லுவோம்” என்று அவரையும் இழுத்துக்கொண்டு நகர்ந்தேன்.
அந்த நேரத்தில் பாலன் கதி எங்களுக்குத் தெரியாது. சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாக மட்டும்தான். எவ்வளவு மோசமாக, உள்ளது அவரது உடல்நிலை, அவர் உயிர் பிழைப்பாரா எவற்றுக்கும் பதில் இல்லை. ஆனால் கைதானது, திருப்பத்தூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவரது உடலில் காணப்பட்ட காயங்கள் இவை குறித்து ஆதாரம் இருக்கிறது. குறைந்த பட்சம் ஏதோ மோதலில் இறந்துவிட்டார் என போலீசார் கதை விடமுடியாது. அதுவும் நான் தாக்கப்பட்டிருப்பதால், அதுவும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அருகேயே. எங்களை விரட்டவேண்டிய அவசியம் போலீசுக்கு இருக்கிறது. நிறையவே மூடி மறைக்கிறார்கள் என்பது தெளிவாகிவிட்டது. விடக்கூடாது. மேலும் இரண்டு மூன்று நாட்கள் தங்கி பலவற்றைக் கண்டறியலாம்.
ஆனால் அரசு இயந்திரத்தையும் சரி, சக ஊழியர்களையும் சரி குறைத்து மதிப்பிடலாகாது எப்போதுமே! நான் முன்னர் குறிப்பிட்டதைப் போல, அனுப்பப்பட்ட இருவரில் நான் தான் ஜூனியர். ஆனாலும் கொஞ்சம் சவடால் பேர்வழி. அவர் வந்ததும் விருப்பப்பட்டு அல்ல. சம்பந்தத்தின் செல்லப்பிள்ளை. அப்போது. எனவே என்னை தனியாக அனுப்ப விரும்பாமல் அவரையும் சேர்த்து அனுப்பியிருந்தார்கள் பொறுப்பிலிருந்த தலைமை நிருபர்கள். அந்த அளவில் என் விருப்பப்படி செயல்பட அவர் அந்த நேரம்வரை அனுமதித்து வந்தார். ஆனால் அடி உதை என்றவுடன், இது சரி வராது என்ற முடிவுக்கு வந்துவிட்டார். வீட்டுக்குப் போணும், ஆத்தா வையும் என்ற ரேஞ்சில் பேச ஆரம்பித்துவிட்டார்.
அதோடு மட்டுமல்ல. எங்கள் கார் டிரைவருடன் கூட்டணி வேறு அமைத்துவிட்டார். டிரைவர், “சார் நான் பிள்ளை குட்டிக்காரன்,… எனக்கு இதெல்லாம் சரி வராது… இப்போ லைட்டா அடிச்சு விட்ருக்காங்க… அப்றம் வேறெ எங்கியாவது போக சீரியசா ஏதாவது ஆச்சின்னா.. என்னை விடுங்க சார்.. அவரும் வர்றேன்றாரு… நாங்க ரெண்டுபேரும் போறோம்… வேற கார் ஆஃபீஸ்ல அனுப்பிச்சா பாத்துக்குங்க” என்று ஏறத்தாழ எச்சரிக்கையே விட்டுட்டார்.
பேசுவோம்
பரபரப்பான கிரைம் ஸ்டோரி போல் உள்ளது.உங்கள் நிஜ வாழ்க்கை சம்பவங்கள்..
Sir, lodge name please
ஒரு நிறுபரிடமே இவர்களின் அராஜகம் இப்படியென்றால் சாமானியனின் நிலமை?