ஹரே ராமா ஹரே கிருஷ்ணா
திருப்பத்தூரில் காவல் நிலையம் அருகேயே அடி, உதை வாங்கிய பிறகு அங்கே தங்கி செய்தி சேகரிப்பது ஆபத்து, சென்னை திரும்புவதே உசிதம் என சக நிருபரும், எங்கள் அலுவலக கார் டிரைவரும் கூறிவிட்டனர்.
எனக்கோ தங்கி, துவைத்து எடுக்கப்பட்டாலும் போலீஸ் கொடுமைகளை அம்பலப்படுத்தவேண்டும் என்று ஆசை.
நடந்ததை தொலைபேசியில் விவரித்தபோது, ஆசிரியர் சயீத் நக்வி, ”வெரி குட்… அதிகம் அடிபடாத வரை சரி… நீங்க அடி வாங்கியதை மட்டும் இன்னிக்கு போட்டுக்குவோம்… நாளைக்கு டீடெய்லா ரிப்போர்ட் பண்ணலாம்” என்றார்.
”அதுக்கில்லை சார்… இவங்க கிளம்பணுங்கிறாங்க…”
“சரி, எது வசதிங்கிறதை நீங்க ரெண்டு பேரும் சேந்து முடிவு பண்ணுங்க…” என்று சொல்லி கழன்று கொண்டார்.
மறுநாள் காலை இன்னொரு திருப்பம். மணி ஏழரை இருக்கும். ஒரு கான்ஸ்டபிள் லாட்ஜுக்கு வந்தார். ”இங்க யாருங்க இண்டியன் எக்ஸ்பிரஸ் டி என் கோபாலன்?”
அப்போது நான் ரிசப்ஷனில்தான் நின்று கொண்டிருந்தேன்.
”ஏன், நான்தான்…” என்றேன். கொஞ்சம் உதறல்தான். ஸ்டேஷனுக்கு கூப்பிடுவார்களோ?
“நீங்க எப்போ மெட்ராசுக்கு திரும்பப் போறீங்கன்னு இன்ஸ்பெக்டர் கேட்டு வரச் சொன்னாரு :”
அடி வாங்கியது போதாதா என கேட்டனுப்புகின்றனர் என்று புரிந்து கொண்டேன். அதற்கு மேலும் அங்கு தங்க பைத்தியமா என்ன?
எங்கள் அனுபவங்கள் இண்டியன் எக்ஸ்பிரசின் அனைத்து பதிப்புக்களிலும் வெளியாக, பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் தேவார திருவிளையாடல்கள் நின்றபாடில்லை. மேலும் உக்கிரமாயிற்று. இந்நிலையில் முன்னாள் மும்பய் உயர்நீதிமன்ற நீதிபதியும் மனித உரிமை ஆர்வலருமான தார்குண்டே தலைமையில் ஓர் உண்மை அறியும் குழு பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதில் சோவும் கலந்துகொள்ள இருந்தார். அந்த நேரம் அவர் தமிழ்நாடு சிவில் உரிமைக் கழகத்தின் செயலாளராக இருந்தார்.
உண்மை அறியும் குழுவுடன் நான் முன்னர் குறிப்பிட்ட நிருபர் சந்திரசேகர் சென்றார். அந்த இடத்திற்கு முன்பே சென்று வந்திருக்கிறேன், அடியும் பட்டிருக்கிறேன் என்ற முறையில் நான்தான் குழுவுடன் சென்றிருக்க வேண்டும். நான் ஜூனியர் என்பதால் சீனியர் எவரையாவது அனுப்பு என அருண் ஷோரி சொல்ல, சந்திரசேகரை தெரிவு செய்தார் நக்வி. எனக்கு சற்று ஏமாற்றம் என்றாலும் சந்திரசேகர் என் நண்பர் என்பதாலும், அவரும் இடதுசாரி சிந்தனையாளர் என்பதாலும் ஓரளவு மகிழ்ச்சியே. அப்போது நான் செல்லாததால் கடும் போலீஸ் தாக்குதலில் இருந்து தப்பினேன்.
இரண்டு பிரிவினராக உண்மை அறியும் குழு செல்ல திட்டமிடப்பட்டது. முதல் குழுவிற்கு கிடைத்த ‘வரவேற்பை’ பார்த்தபின் அடுத்த குழு செல்லவே இல்லை. அப்போது தப்பிய முன்னாள் நீதிபதி பின்னொரு கட்டத்தில் வசமாக மாட்டினார்.
நாங்கள் தங்கியிருந்த லாட்ஜுக்குத்தான் முதல் பிரிவும் சென்றது. காலையில் சில கிராமங்களை சுற்றிப் பார்த்துவிட்டு மாலையில் திரும்பியபோது கடுமையான அதிர்ச்சி வைத்தியம்.
பத்து இருபது பேர் கொண்ட கும்பல் தடதடவென்று லாட்ஜிற்குள் நுழைந்தது. சுற்றுப்புற கிராமத்தினர், நக்சல் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்கள் என்று சொல்லிக்கொண்டார்கள். உண்மை அறியும் குழு உடனே வெளியேற வேண்டும் என்று அந்தக் கும்பல் கூச்சலிட, பிரபல பத்திரிகையாளர் மோகன் ராம், இப்போது நன்கறியப்பட்டிருக்கும் ஜோதி புன்வானி உள்ளிட்ட ஏழெட்டு பேர் அடங்கிய முதல் குழுவினர் அவசர அவசரமாக லாட்ஜை விட்டு வெளியேறினர்.
ஆனால் அவர்கள் வேனுக்குச் செல்வதற்குள் வரிசையாக தர்ம அடி. ஆவேசமான அடி, உதை, வசவு. நிருபர் சந்திரசேகருக்கு மண்டை உடைந்து ரத்தம். அவரது பெட்டியை பிடுங்கிக் கொண்டார்கள். பின்னர் போலீசாரே பெட்டி பணம் எல்லாவற்றையும் திருப்பித் தந்தார்கள்.
அப்போது சோ கடுமையாக எம்ஜிஆர் அரசை விமர்சனம் செய்தார். காமராஜர் காங்கிரசின் பழ நெடுமாறன் அப்போது சட்ட மன்ற உறுப்பினர்.. அவரும் கடுமையாக கண்டித்தார்.
கைது செய்யப்பட்ட நக்சலைட்டுகளுக்காக வாதாடி வந்த வழக்கறிஞர் பி வி பக்தவத்சலம் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பல மாதங்கள் சிறையில் இருந்து உச்ச நீதிமன்றம் சென்றுதான் ஜாமீன் பெற முடிந்தது.
கோவாவை சேர்ந்த கிளாட் ஆல்வரசும், நம் எஸ்விஆரும் சேர்ந்து Tamil Nadu – A Police State என்று ஒரு நீண்ட கட்டுரை எழுதினார்கள். இண்டியன் எக்ஸ்பிரஸ் ஞாயிறு சிறப்பிதழில் வெளியானது. ஆனால் எதுவும் எம் ஜி ஆரையோ தமிழக அரசையோ பாதிக்கவில்லை. வேட்டை தொடர்ந்தது.
நான் தேவார அராஜகத்தை மீண்டும் ஓராண்டு கழித்து ராஜபாளையம் அருகே எதிர்கொள்ள நேர்ந்தது.
சேத்தூர் எனும் சிறு நகரில் செயல்பட்டுக்கொண்டிருந்த மச்சக்காளை எனும் இளைஞர் போலீசாரால் கைது செய்யப்பட்டு கடத்தப்பட்டுள்ளார். கொல்லப்பட்டிருக்கலாம் என்ற தகவல்.
முகுந்தன் மேனன் என்ற மனித உரிமை ஆர்வலர், நண்பர், பின்னாளில் பிரபலமான பத்திரிகையாளர் டிஎஸ்வி ஹரி, நான் மூவருமாக விசாரிக்கச் சென்றோம். முகுந்தன் ராஜபாளையத்தில் நின்றுகொண்டார். எங்களுக்கு ஏதாவது ஆபத்து என்று தெரியவந்து அவருக்கு சொல்லியனுப்பினால் அவர் நீதிமன்றங்களை அணுகமுடியும் என்று திட்டமிட்டோம்.
சேத்தூரில் மச்சக்காளை குடும்பத்தினர் உட்பட பலரிடமும் பேசியதில், அவரை கொன்று எரித்து விட்டார்கள் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்தன.
போலீசாரை தொடர்பு கொள்ள முயற்சி செய்யவில்லை. கெடுபிடி அதிகம். வெளியூர் நபர் என்று தெரியாதபடி நடந்து கொண்டோம். போலீசில் அகப்பட்டால் என்ன நடக்கும் என யாருக்குத் தெரியும்? நிலைமை அவ்வளவு மோசமாக இருந்தது.
சரி, போலீசிடம் சிக்காமல் தகவல்கள் பெற்றுவிட்டோம். முகுந்தன் மேனனை சந்தித்து அடுத்து என்ன என்று திட்டமிட வேண்டியதுதான் என்று பேசிக் கொண்டே பஸ் நிலையம் சென்றடைந்தோம்.
செல்ஃபோன் கிடையாது. டெலிஃபோன் பூத் கூட அந்த சிற்றூரில் இல்லை. பஸ் வர இன்னும் ஒரு மணி நேரமாகும் என்று சொல்லிவிட்டார்கள். டீ குடித்து பொழுதை ஓட்டலாம் என்று நினைத்தபோதே, இருவர் எங்களை அணுகி, நீங்கள் யார், எதற்கு இங்கு வந்தீர்கள் என விசாரிக்க தொடங்கி விட்டனர்.
போலீஸ்தான். பத்திரிகையாளர்கள் அல்லது மனித உரிமை ஆர்வலர்கள் என்று சொன்னால் அழைத்துக் கொண்டு போய்விடுவார்கள். .
நாங்கள் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தை சார்ந்தவர்கள் என்று சொன்னேன். அது முட்டாள்தனமான பொய். எங்களிடம் நோட்டீஸ், புத்தகம் எதுவும் இல்லை. அப்போது அந்த இயக்கம் பரவலாக பேசப்பட்டு வந்ததாலும் நாங்கள் இருவருமே ஜிப்பாவில் இருந்ததாலும் அந்தக் கதை ஓடும் என நினைத்தேன்.
ஹரி இந்தி நன்றாகப் பேசுவார். எனவே அவர் பங்கிற்கு இந்தி, ஆங்கிலம் எல்லாம் கலந்து ஏதோ சத்தாய்த்தார்.
நாங்கள் சொல்வது உண்மையா சரடா என சிஐடி போலீசாராலும் ஊகிக்க முடியவில்லை. இந்த நேரம் பார்த்து நான் ஏதோ எரிச்சலுடன் ஹரியிடம் கத்த, அருகில் இருந்த அனைவரும் எங்கள் பக்கம் பார்க்க, மஃப்டி போலீசார் பயந்து விட்டதை போல் தெரிந்தது.
”என்ன சார் ஏன் இப்டி கத்துறீங்க… நம்ம பேசிகிட்டுத்தானே இருக்கோம்?’” என்றார் அவர்களில் ஒருவர்.
நாங்கள் யாரென்று தெரியாத நிலையில் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க அவர்கள் விரும்பவில்லை என புரிந்தது. அதுதான் சாக்கென்று கன்னா பின்னாவென்று ஆங்கிலத்திலும் தமிழிலும் ஹரியிடம் நான் ஏதேதோ சொல்ல, பதிலுக்கு அவர் இந்தியையும் சேர்த்துக்கொண்டு ஏதோ என்னை சமாதானம் செய்வது போல பாவ்லா செய்ய, போலீஸ்காரர்களையும் திகைக்க வைத்தது போலாயிற்று, பொழுதும் போயிற்று. ஒரு வழியாக பஸ்சும் வந்துவிட்டது.
ஆனால் த்ரில்லர் திருப்பம்போல் இன்ஸ்பெக்டர் அழகுவேலுவும் அப்போது அங்கே வந்து சேர்ந்தார். அவர்தான் மச்சக்காளையை கைது செய்தவர்.
பேசுவோம்
சங்கர் அவர்களே, முன்பு போல கருத்து பகுதியில் like and dislike buttons போடும் வசதியை செய்யுங்கள். இந்த தொடர் படிக்க சுவாரசியமாக உள்ளது. உண்மையை கண்டறிய பத்திரிகையாளர்கள் எத்தனை தியாகம் செய்கிறார்கள் என அறிய முடிகிறது.
கிரைம் நாவல் படிக்கிற திரில் வந்திருச்சு உங்கள் நிஜ கதையை படிக்கும் போது