பத்திரிகைகளின் மவுனம்
இன்ஸ்பெக்டர் அழகுவேலுவை பார்த்ததும் அதிர்ச்சியாகி விட்டது.
’வசமாக சிக்கினோம்’ என்று உள்ளூர பயந்தாலும், ’முடிந்தால் கைது செய்துகொள், எனக்கு மோகன்தாசையே தெரியும்’ என்று விவேக் பாணியில் அளக்க, இன்ஸ்பெக்டர் கண்களில் தயக்கம் தெரிந்தது.
பஸ்சில் ஏறிவிட்டோம். கையைப் பிடித்து இழுக்க காவலர்களுக்கு விருப்பமில்லை. பஸ் புறப்பட்டு விட்டது. சட்டென்று அழகுவேலும் பஸ்சில் ஏறிக்கொண்டார். “நீங்க ரெண்டுபேரும் ஸ்டேஷனுக்கு போங்க. நான் இவங்களோட ராஜபாளையம் வரை போய்ட்டு வாரேன்” என்று காவலர்களிடம் சொன்னார்.
எங்கள் அதிர்ஷ்டம். பஸ்சில் எங்கள் அருகில் அமர்ந்து பேசிக்கொண்டே வந்ததில் அழகுவேல் இனிமையாகி விட்டார், சேத்தூர் ராஜபாளையம், விவசாயம், ஹரே ராமா ஹரே கிருஷ்ணா, ஹைதராபாத் (அங்கிருந்துதான் நாங்கள் வந்திருப்பதாக சொல்லிக்கொண்டோம்). இப்படி என்னென்னவோ. ஆனால் கவனமாக நக்சலைட்டுகள் பற்றி பேசுவதையே தவிர்த்தோம்.
தப்பிவிடலாம் என்ற நம்பிக்கை வலுத்தது. ஆனால் ராஜபாளயம் நெருங்க நெருங்க வேறு ஓர் அச்சம். எங்களுக்காக முகுந்தன் பஸ் நிலையத்தில் நிச்சயம் காத்துக்கொண்டிருப்பார். சேத்தூர் பஸ் அங்கு சென்றவுடன் அவர் ஓடி வந்து தவிப்புடன் ஏதாவது கேட்க ஆரம்பித்துவிட்டால்…. அவருக்கு தெரியாதே இன்ஸ்பெக்டர் எங்களுடன் வருவது! ஆண்டவனை நம்பியிருந்தால் வேண்டிக் கொண்டிருக்கலாம். அதுவும் இல்லை. உயிரை கையில் பிடித்துக்கொண்டு பயணம் தொடர்ந்தது.
ஒரு வழியாக ராஜபாளயமும் வந்தது. சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டே இறங்கினோம். கண்ணில் பட்டவுடன் முகுந்தனுக்கு ஜாடை காட்டிவிடலாம் என்ற நம்பிக்கை.
ஆனால் முகுந்தனை காணவில்லை. அழகுவேல் எங்களை விடாமல் டீ வாங்கிக் கொடுத்தார், பேசிக் கொண்டே இருந்தார். அந்த நேரம் இளகியிருந்தார். ஒரு வழியாக அவரிடமிருந்து தப்பித்து நகரவும், எங்கள் எதிரில் தாடிவாலா முகுந்தன் மேனன் ஓடிவந்து கட்டிக் கொள்ளவும் சரியாக இருந்தது. உடனடியாக லாட்ஜை காலிசெய்துவிட்டு அடுத்த ஒரு மணி நேரத்தில் மதுரைக்கு புறப்பட்டோம்.
செய்தியெல்லாம் பரபரப்பாகத்தான் வந்தது. ஆனால் வழக்கம்போல் இண்டியன் எக்ஸ்பிரசில் மட்டும். ஹரியும் முகுந்தனும் ஏதோ வார ஏடுகளில் எழுதினர். மக்கள் சிவில் உரிமை கழகம், பியூசிஎல் அறிக்கை விட்டது. அத்தோடு சரி.
அடுத்த ஆண்டு அண்ணா விருது அழகுவேலுக்கு. அவரது பின்னணி பற்றி மீண்டும் ரிப்போர்ட் செய்தும் ஒரு பயனும் இல்லை. ஆனால் அவர் மீது பொது நலவழக்கு ஒன்று தொடுக்கப்பட்ட போது சில காலம் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தார். அவ்வளவுதான்.
இந்துவோ, தமிழ் நாளிதழ்களோ, எவையும், எந்தக் கட்டத்திலும் அழகுவேல் அல்லது மச்சக்காளை, நக்சல் வேட்டை போன்றவற்றை கண்டுகொள்ளவே இல்லை.
எங்கள் சேத்தூர் அனுபவத்தை விவரமாக எழுதியும் எந்த பத்திரிகையாளர் அமைப்பும் கண்டிக்கவில்லையே. நக்சலைட்டுகள் நடமாடும் பகுதி என்பதால் அது யுத்த பூமியா என்ன? செய்தியாளர்கள் அங்கே சென்று வர உரிமை இல்லையா? அஞ்சி நடுங்கிக் கொண்டா செய்தி சேகரிக்க வேண்டும் நம் நாட்டில், நம் மாநிலத்தில்? எவரும் கேள்வி எழுப்பவில்லை.
முந்தைய ஆண்டு உண்மை அறியும் குழுவினர் தாக்கப்பட்டபோது கடுமையாக விமர்சித்த சோ இப்போது முற்றிலும் மாறியிருந்தார். மச்சக்காளை ஆயுதம் ஏந்திய போராளி, அத்தகையோரை அப்படித்தான் அரசு எதிர்கொள்ள வேண்டியிருக்கும், இவர்களுக்கெல்லாம் வக்காலத்து வாங்கினால் நாடு பற்றி எரியும் என்றெல்லாம் பேசினார். அவர் அப்போதும் தமிழ்நாடு மக்கள் சிவில் உரிமை கழக பொதுச் செயலாளராய் இருந்தார். கழக நிர்வாகக் குழுவை கூட்டமுடியாது என்று கூறிவிட்டார். மன்றாடிப் பார்த்தோம், பயனில்லை.
தேவார தாண்டவமும் நிற்கவில்லை. 1982 அக்டோபரில் மதுரையில் கண்டன ஊர்வலம் ஒன்றில் பங்கேற்கச் சென்ற தார்குண்டே தடியடிக்கு உள்ளானார். அவர் யார் என்று அறியாமலே அவரை அன்று தாக்கியது டிஎஸ்பி முகம்மது அலி. பின்னாளில் கருணாநிதி கைதினை மேற்பார்வையிட்ட டிஐஜி முகம்மது அலிதான் அவர்.
ஒட்டுமொத்தமாக நக்சலைட் எழுச்சியை அடக்கிய பிறகுதான் தேவார படலம் ஒரு தற்காலிக முடிவுக்கு வந்தது.
நக்சல் போராட்டம் அவ்வளவு கடுமையாக ஒடுக்கப்பட்டிருக்க வேண்டுமா? நக்சலைட் இளைஞர்கள் வன்முறையில் இறங்கினர், தேவாரத்தால் நசுக்கப் படாமல் விட்டிருந்தால் பல மோசமான விளைவுகளை மாநிலம் சந்தித்திருக்கும் என்பது உண்மைதான்.
ஆனால் தேவாரம் போன்ற ஒரு நபருக்கு ’நீ நினைத்ததை செய்துகொள், நக்சல்கள் அடக்கப்பட்டால் சரி’ என்று சுதந்திரம் கொடுத்தால் என்ன ஆகும்? பாலன் கதையையே எடுத்துக் கொள்வோம். அவர் வன்னிய இளைஞர். ஆனால் தலித் மக்கள் உரிமைகளுக்காக போராடியவர். அவர் காலத்தில் ஒரு சில பகுதிகளிலாவது தலித்துக்களை வன்னியர்கள் கவுரவமாக நடத்தினர். அவரது போராட்ட நோக்கங்கள் என்ன என்பதை மனதில் கொள்ளாமலே, அவர் எத்தகைய அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்தாரோ அவற்றை சரி செய்வதில் கடுகளவும் ஆர்வம் காட்டாமல் அவரை அடித்தே கொன்றிருக்கிறார்கள். விளைவு பாமக வளர்ச்சி, தருமபுரியில் தலித் மக்கள் மீது வன்முறை, இளவரசன் மரணம்…
வட மாவட்ட இடைநிலை சாதியினர்தான் அதிகம் நக்சல் இயக்கத்தால் ஈர்க்கப்பட்டவர்கள். அவர்களை அமைதி வழிக்கு திருப்பியிருக்க முடியுமா என்பதை என்னால் உறுதியாக கூற இயலாது. ஆனால் தேவாரத்தின் கண்மூடித்தமான தாக்குதலின் விளைவாக பல அப்பாவி இளைஞர்கள் உயிரிழந்தனர் என்பது மறுக்கமுடியாத உண்மை. மேலும் நக்சல் இயக்கம் ஒடுக்கப்பட்டதால் பாமக போன்ற நசிவு சக்திகள் வலுப்பெற்றன என்பது இன்னும் பெரிய சோகம்.
ஏழ்மையும் சுரண்டலும் அடக்குமுறையுமே அன்றாட வாழ்க்கையாகிவிட்ட நிலையில், ஏற்கெனவே நக்சல் தாக்கத்துக்கு உள்ளான பகுதிகளில் அவ்வப்போது ஏதோ ஒரு நக்சல் அணி தலையெடுப்பதும் போலீசார் மூர்க்கமாக அதனை ஒடுக்குவதும் வாடிக்கையாகிவிட்டது.
இது குறித்து எந்த அரசியல் கட்சிகளும் அதிகம் கண்டு கொள்வதில்லை, ஊடக அழுத்தமும் இருப்பதில்லை.
அன்றைய தேவாரக் கொடுமைகள் குறித்த தகவல்களை எளிதில் பெற்றுவிட முடியாது. ஏனெனில் அன்றைய இண்டியன் எக்ஸ்பிரசுக்கு கணினி வடிவம் இல்லை. செய்திகள் எதுவும் ஆவணப்படுத்தப்படவில்லை.
ஆனால் மாதிரிக்கு ஒரு சில இணைய தளத்தில் மேய்ந்தால் கிடைக்கும். ஓரிரு புத்தகங்களும் இருக்கின்றன. ஆர்வம் உள்ளவர்கள் தனியே கேட்டால் விவரம் தருகிறேன்.
தமிழிலும் சில வலை தளங்களில் நக்சல் இயக்கம் பற்றி விவாதிக்கப் பட்டிருக்கிறது. ஆனால் அவற்றின் நம்பகத் தன்மை குறித்து உறுதியாக எதுவும் சொல்ல இயலவில்லை.
ஆர்வலர்களிடம் சிக்கலே இதுதான். செய்தி வேறு விமர்சனம் வேறு என்பதை அவர்கள் உணர்வதே இல்லை. ஒரேயடியாக அறச்சினம் பொங்கி எழும்போது, அவர்கள் சொல்வதில் எவ்வளவு உண்மை எவ்வளவு மிகை என்பதை பிரித்தறிவது கடினம். நம்பகத்தன்மை இல்லாத நிலையில் அவர்களின் எழுத்துக்களை எப்படி ஆதாரமாகக் கொள்வது?
ஆனால் ஏதோ மிகப்பெரிய புரட்சிப்படை உருவாகிக் கொண்டிருப்பதாக தொடர்ந்து ஒரு பிரமை, ஆர்வலர்கள் மத்தியில். அரசியல்வாதிகளும் அதனை நன்கு பயன்படுத்திக் கொண்டனர்.
ஜூலை 2006ல் பிஜேபி தலைவர் வெங்கய்ய நாயுடு நேபாளத்திலிருந்து பிகார், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், சட்டிஸ்கட், ஆந்திரா, கர்நாடகா வழியாக தர்மபுரி வரை நீண்டதொரு நக்சல் சாலை உருவாகும் ஆபத்து இருப்பதாகவும், மத்திய அரசு அலட்சியமாக இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்!
நான் மேலும் சில தடவை நக்சல் இயக்கம் குறித்து எழுத முடிந்தது. 1985ஆம் ஆண்டில் மீண்டும் தர்மபுரியில் அடக்குமுறை. அப்போதுதான் நான்கு வயது சிறுவன், தந்தையுடன் கூட்டங்களுக்குச் சென்று புரட்சிகரப் பாடல்கள் பாடுபவன், அவன் மீதும் தேசத்துரோக குற்றம். உலகிலேயே மிக இளைய குற்றவாளியை கண்டுபிடித்த பெருமை நம் போலீசுக்கு என அப்போது எழுதினேன். அவர் இப்போது வழக்கறிஞர். முகநூலில் பாவெல் தருமபுரி என்ற பெயரில் வருகிறார்.
அண்மையில் மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் குறிப்பிடத் தகுந்த கருத்தியலாளர் தேவபேரின்பனுடன் நீண்ட நேரம் உரையாடியிருக்கிறேன், ஏன் நக்சல் இயக்கம் அங்கே மையம் கொண்டிருப்பது போன்ற தோற்றம், அப்பகுதியின் பின் தங்கிய நிலை, இன்னமும் அந்த ஒலிப்பதிவை பாதுகாத்து வைத்திருக்கிறேன். ஏதாவது ஒரு கட்டத்தில் வெளியிடுவேன்.
ஆனால் முறையாக ஆய்வு ஏதும் செய்யமுடியவில்லை. ஊடகன் இறுதிவரை அரை வேக்காடாகவே இருந்து விடுகிறான்.
பேசுவோம்
Sir, Could you please mention the name of the books which have information regarding police action in the early 80’s.
ஊடகன் அமைதியாகவே இருக்கிறான்.உண்மையான வரிகள்.ஆனால் அரசுகளிடம் எதில் ஒற்றுமை இருக்கிறதோ இல்லையோ உண்மையை கூறுபவனை நசுக்குவதில் அனைவரும் ஓரே மாதிரி இருக்கிறார்கள்.இதற்கு சவுக்கு சங்கரே இப்போதைய உதாரணம்