மறக்கப்பட்ட அகதிகள்
மதுரைப் பணியில் மனநிறைவு அறவே இல்லையென்று கூறுவதற்கில்லை. தாயகம் திரும்பிய மலையகத் தமிழர் குறித்து தீர ஆய்ந்து எக்ஸ்பிரஸ் ஞாயிறு இதழில் முழுப்பக்கக் கட்டுரை வெளியிட்டது நிறைவான ஓர் அம்சம்.
இன்றளவும் அம்மக்களைப் பற்றி சரியான புரிதல் இல்லை. அவர்கள் நிலை குறித்து எவரும் போதிய அனுதாபம் காட்டுவதில்லை. இரண்டு மூன்று தலைமுறைகளாக இலங்கையிலேயே வாழ்ந்து பழகிவிட்ட மக்கள், அரசியல் காரணங்களுக்காக, அவர்கள் சம்மதமே இல்லாமல் நாடு கடத்தப்பட்டது கொடுமை. அதைவிடவும் கொடுமை, அவ்வாறு திருப்பி அனுப்பப்பட்ட மக்கள் அநாதரவாக நடுத்தெருவில் விடப்பட்டது.
முதலில் காபி தோட்டங்களுக்காகவும் பின்னர் தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றவும் ஆயிரக்கணக்கில், தென் மாவட்டங்களிலிருந்து பஞ்சை பராரிகள் இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். செல்கின்றபோதே பல்வேறு நோய்களுக்கு பலியானோர் அநேகம்.
எங்கெங்கும் அந்நியமாக்கப்பட்டவர்கள் என்ற சிறு நூலை கொடைக்கானல் சிராக் என்ற தன்னார்வக்குழு வெளியிட்டது. அதன் ஆசிரியர்களில் ஒருவர் துடிப்பான இளைஞர் சிவானந்தன் அவர் மூலமாகத்தான் நான் பலவற்றை அறிந்துகொண்டேன். அந்த புத்தகம் இப்போது எங்கும் கிடைக்கிறதா என்று தெரியாது. ஆனால் மலையகத் தமிழரின் சோக வரலாறை தெரிந்துகொள்ள அதைப் படிப்பது அவசியம்.
பிரிட்டிஷ்காரனுக்கு உழைக்க, அவனது வருவாயைப் பெருக்க அங்கே செல்பவர்கள் அங்கேயே தங்கிவிடுகின்றனர், இலங்கையின் மலையகமே அவர்கள் தாய்நாடாகவும் ஆகிவிடுகிறது.
வசதிக்குறைவு,. கொடுமைகள் இருந்தாலும் பசி பட்டினியில்லை. நாளடைவில் ஏதோ நடுத்தர வர்க்க வாழ்க்கை. சென்றவர்களில் பெரும்பாலானோர் தலித் அல்லது மிக பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். அங்கே சென்றதில் சாதி இழிவுகளிலிருந்தும் தப்புகின்றனர்.
பிரிட்டிஷாரிடமிருந்து இலங்கை விடுதலையாவதே மலையகத் தமிழர்களுக்கு பேரிடியாக அமைகிறது. ஏனெனில் முதல் தேர்தல்களில் மலையகப் பகுதிகளில் இடதுசாரியினர் பெரும் வெற்றி பெற, அந்நாட்டின் ஆளும் வர்க்கம் ”தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு வாக்குரிமையே கிடையாது ஏனெனில் அவர்கள் இந்நாட்டுக் குடிமக்களே இல்லை” என்று சட்டமியற்றுகிறது. ஒரே நாளில் ஏழு லட்சம்பேரின் குடி உரிமை பறிக்கப்படுகிறது. இச்சட்டத்திற்கு நம் அருமை தொப்புள் கொடி உறவுகளும் துணை போகிறார்கள்.
யாழ்ப்பாண மேல்தட்டினருக்கு வேலைக்காரர்கள், வேலைக்காரிகள் மலையகத்தினர்தாம். கால் தூசிக்கு சமமாக நடத்துவார்கள். ”வயிற்றுவலியை நம்பினாலும் நம்பலாம், வடக்கத்தியானை நம்பாதே” என்று தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் ஒரு சொலவடையே உண்டு.
போராளி இயக்கங்கள் கூட மிகப்பின்னால்தான் அம்மக்களின் பிரச்னையை எழுப்பின.
இலங்கை பிரதமர் சிரிமாவோவிற்கும் இந்திய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரிக்குமிடையே 1964ல் மலையகத்தார் தாய்த் தமிழகத்திற்கு திருப்பி அனுப்பப்படுவது குறித்து ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. அதன்படி மூன்று லட்சம் பேருக்கு இலங்கை அரசு பிரஜா உரிமை கொடுக்கும் 5.25 லட்சம்பேரை இந்தியா “திருப்பி அழைத்துக்கொள்ளும்.”
யாரும் பாவப்பட்ட தொழிலாளர்களை ஒருவார்த்தை கேட்கவில்லை. இங்கிருந்த அரசோ அல்லது திராவிட இயக்கமோ இந்த அநீதி குறித்து எதிர்ப்பெதுவும் தெரிவிக்கவில்லை.
அவ்வாறு நாடு கடத்தப்படுபவர்கள் சில வாரங்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டு, நிதி உதவி அளிக்கப்பட்டு வெளியேற்றப்படுவார்கள். கண்ணைக் கட்டி காட்டில் விட்டதுபோல இருக்கும். உதவிப் பணத்தை ஆட்டைபோட கழுகுகள் காத்திருக்கும்.
சில நாட்களிலேயே எல்லாவற்றையும் இழந்து பலர் கொடைக்கானல் அல்லது ஊட்டி சென்றடைவார்கள். கொடைக்கானலில் தோல் பதனிடும் தொழிலில் பயன்படுத்தப்படும் வாட்டில் மரத்திலிருந்து பிசின் எடுப்பது, ஊட்டியில் படகர்களின் நிலங்களில் வேலை செய்வது இப்படிப் பிழைத்துக்கொண்டிருந்தார்கள்.
அவர்களை அரசு கண்டுகொள்வதில்லை, அரசியல்வாதிக்ளுக்கு அக்கறை இல்லை, எல்லா நலத்திட்டங்களும் வெறும் காகிதம்தான், மிக மோசமான சூழலில் அவர்கள் வாழ்ந்து கொண்டிருப்பதை நான் மேலே குறிப்பிட்ட எங்கெங்கும் அந்நியமாக்கப்பட்டவர்கள் மூலமாகவும் வேறு சில ஆர்வலர்கள் ,மூலமாகவும் அறிந்து மாநிலம் முழுதும் சுற்றிப் பார்த்து ஆய்வு செய்யவேண்டும் என்று சொல்ல, சயீத் நக்வியும் உடனே ஒத்துக்கொண்டார். சென்னையிலிருந்து ஒரு புகைப்படக்காரரையும் அனுப்பிவைத்தார்.
கொடுமைகளிலிருந்து தப்பி இலங்கைத் தமிழர்கள் வந்து சேரும் இடம் ராமேஸ்வரத்தை அடுத்துள்ள மண்டபம்தானே. அதே மண்டபத்திலிருந்துதான் தேயிலைத் தோட்டங்களுக்கு செல்லும் முன் நம் மக்கள் தங்க வைக்கப்பட்டு தடுப்பு ஊசி போடப்பட்டு அப்புறம் கப்பலில் அனுப்பிவைக்கப்படுவார்கள். சிரிமாவோ ஒப்பந்தத்திற்குப் பின் திருப்பி அனுப்பப்பட்டவர்களும் அங்குதான் வந்து சேர்ந்தார்கள். அதிகாரிகள் அவர்கள் நடத்துவதைப் பார்க்கவேண்டுமே. கண்ராவியாக இருக்கும். ”வாயைத் திறக்காதே, ஏதோ அனுப்பப்பட்டிருக்கிறீர்கள், எங்கள் தலையெழுத்து உங்களைக் கட்டிமேய்க்க வேண்டுமென்பது, கொடுப்பதை வாங்கிக்கொண்டு எங்கு வேண்டுமானாலும் போய்ச் சேருங்கள்..” இந்த ரீதியில்தான் பேசுவார்கள். ஒரு துளி அனுதாபம் இருக்காது. அவர்கள் நிலை குறித்து அந்த நேரம் வரை எச் செய்தியும் எந்த ஏட்டிலும் வரவில்லை.
சிவானந்தன் அப்போது குறிப்பிடுவார்: ”கஷ்டமோ நஷ்டமோ பசுமையின் மடியில் வாழ்ந்தவர்கள் நாங்கள். கப்பலில் வந்து காலடி எடுத்து வைக்கும்போது எங்கு பார்த்தாலும் ஒரே மணற்காடு…அதுவே எங்களுக்கு முதல் பெரும் அதிர்ச்சி…”
அந்த அதிர்ச்சி தொடங்கி, அதிகாரிகள், புரோக்கர்கள், முதலாளிகள் என்று பல்வேறு எதிரிகளை தொடர்ந்து சந்தித்து நிர்கதியாய் நின்ற அம்மக்கள் தமிழகத்தில் கணிசமான எண்ணிக்கையில் வாழும் பகுதிகள் பலவற்றுக்குச் சென்று நீண்ட நேரம் பேசிவிட்டு, பிறகு அதிகாரிகளிடமும் கருத்து கேட்டு அக்கட்டுரையினை எழுதினேன். பரபரப்பொன்றும் ஏற்பட்டுவிடவில்லை, சில ஆயிரம் பேருக்குத் தெரியவந்திருக்கும் அவ்வளவுதான்.
மற்ற பத்திரிகைகள் எதுவும் அப்பிரச்னையைத் தொட முன்வராத நிலையில் அம்மக்களுக்கும் பெரிதாக லாபம் ஏதும் ஏற்பட்டுவிடவில்லை. தமிழ்த் தேசியவாதிகள் எவரும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர் குறித்து பேசுவதில்லை என்பதையும் கவனிக்கவேண்டும்.
உதகையில் வாழும் தாயகம் திரும்பிய தோட்டத் தொழிலாளர்கள் இரண்டு லட்சத்துக்கும் மேல் இருக்கலாம். குறிப்பிடத் தகுந்த வாக்கு வங்கி. ஆனாலும் எந்தக் கட்சியிலும் அவர்களுக்கு மரியாதை இல்லை. அனைத்து முக்கிய கட்சிகளிலும் நில உடமையாளர்களான படகர்கள்தான், வடுகர்கள் என்றும் சொல்வார்கள். அவர்கள் கர்நாடகாவிலிருந்து ஒரு கட்டத்தில் இங்கே குடியேறியவர்கள் என்றும் இல்லை அவர்கள் பூர்வ குடிகள் என்றும் இருவேறு கருத்துக்கள் உண்டு. எப்படியாயினும் அவர்கள் பின் தங்கியவர்கள் இல்லை. அவர்கள் எண்ணிக்கையும் தோட்டத் தொழிலாளர் அளவுதான் என்றாலும், வலுவான பொருளாதார பின்புலம் என்பதால் அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
அவர்களிடம் அடிமைகளாக ஊழியம் செய்துகொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்கள் பெரும் போராட்டங்களுக்குப் பின்னரே விடுதலை பெறமுடிந்தது. விடுதலை பெற்றார்கள் ஆனால் அந்தஸ்தை அல்ல, கட்சிப் பொறுப்புக்களை அல்ல.
இன்னொரு விநோதம் என்னவென்றால் என்னுடைய 1981 கட்டுரையில் அவர்களைப் பற்றிக் குறிப்பேதும் இருக்காது. என்னவெனில் உதகை செல்லவென கோவை சென்றடைந்தபோது, அங்கு அப்போது பணிபுரிந்துவந்த மூத்த நிருபர் ஒருவர், “அது ஒண்ணும் பெரிய விஷயமில்லை….ஏதாவதுன்னா நானே செய்தி அனுப்புகிறேன்…நீங்க கிளம்புங்க,” என்று முகத்தில் அறைந்தாற்போல் கூறிவிட்டார்.
எல்லாம் ஈகோதான். இவன் யார் சின்னப்பையன் நம்ம பகுதியைப் பற்றி எழுதுவது? மாநில அளவில் செய்தி சேகரிக்கவேண்டிய சந்தர்ப்பங்களில் அடிக்கடி இது போன்ற பிரச்னைகளை சந்திக்கவேண்டியிருக்கும்,
நக்வியிடம் முறையிட்டிருக்கலாம். ஆனால் கோவை நிருபர் மூத்தவர், திறமைசாலி, கோபக்காரர். எதற்கு வம்பு என்று ஒதுங்கிவிட்டோம்.
உதகைவாழ் மலையக மக்கள் பற்றி 90களில் சிறிய நூலொன்று ஆங்கிலத்தில் எழுதினேன். அந்த அனுபவம் பற்றியும் கொடைக்கானலில் கொத்தடிமைகளாய் உழன்று கொண்டிருந்தோர் பற்றியும் பின்னர் சொல்கிறேன்.
பேசுவோம்
Very informative.Well Done.
தாழ்த்தப்பட்ட மக்கள் , யார் தாழ்த்தினார்கள் , தன்னை தானே தாழ்த்தி கொண்டார்கள் . தினம்தோறும் குடிப்பார்கள் ஆனால் ஆளுக்கு ருபாய் 1000 போட்டு கோவில் கட்ட மாட்டார்கள். ருபாய் 50,000 கோடில் சுத்தமான இந்திய எனபது அம்பானி விட பெரிய வியாபாரம். ஏன் செய்ய மாட்டேன் என்கிறார்கள் . எவளுவு மசின் செய்யலாம், எவளுவு ஸ்க்ரப் கிடைக்கும். எந்த ஜாதி கோயில் கட்டினால் அங்கே போய் தகறாரு செய்வது, இவங்களுக்கு ஒரு தலைவர்கள் . அந்த டீ தோட்டம் வாங்க பட்டு இருக்கலாம். மிஞ்சினால் கெஞ்சுவது , கெஞ்சினால் மிஞ்சுவது போன்ற ஈன புத்தி , அதை தூண்டும் எழுத்தார்கள் , தலைவர்கள் , இவர்களுக்கு விமோசனம் கிடையாது, மதம் மாறினாலும் தான்.
comment:super
உங்கள் பதிவில் இருந்து நிறைய கற்றுக் கொள்கிறேன் –
waiting!!!
Link to download எங்கெங்கும் அந்நியமாக்கப்பட்டவர்கள்
http://noolaham.net/project/137/13613/13613.pdf
Thanks Ahmed for the Link.