பசியோடு ஓட்டலுக்குள் நுழைகிறார். மெனுவை நீட்டுகிறார் சர்வர்.
ஒரு ஆனியன் ரவா.
ரவா தோசை ஆயிருச்சு சார்.
சரி, ஆனியன் ஊத்தப்பம்.
ஆனியனே வரலை சார் மார்க்கெட்டுக்கு.
அடடா, அப்ப மசால் தோசையே கொடுங்க.
ஆனியன் இல்லாம் மசாலா பண்ணினா ருசியா இருக்குமா, சார்?
அப்ப நான் என்னதான் சாப்பிட்றது? சாதா தோசையே கொடுங்க.
கரண்ட் கட்ல ஃபிரிட்ஜ் ஓடல. சட்னி புளிச்சுர்ச்சு. சாம்பார் மட்டுந்தான். பரவால்லையா?
தலையெழுத்து. அதையாவது கொண்டு வாப்பா. பசிக்குது.
இதுதான் இந்திய ஜனநாயகத்தில் வாக்காளர்களின் நிலை. அவர் சொன்னது போல் தலையெழுத்து என்றும் சொல்லலாம்.
தமிழ்நாட்டு வாக்காளர் என்றால் இன்னும் பாவம்.
பழைய தோசையை கல்லில் போட்டு சூடாக்கி தருவதைதான் சாப்பிட முடியும். காமராஜர் ஆட்சிக்கு பிறகு ஒவ்வொரு தேர்தலிலும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள் தமிழக மக்கள்.
ஆட்சியில் இருப்பவர்களை பிடிக்காமல் போய் அவர்களை கீழே இறக்கும் காரியத்தை மட்டுமே நாம் செய்து வருகிறோம். தேர்தலின் குறிக்கோள் ஒரு ஆளுங்கட்சியை தோற்கடிப்பது மட்டுமே என்று ஆகிவிட்டது.
அந்த குறிக்கோளை நிறைவேற்ற எந்த கட்சியால் முடியுமோ அதற்கு ஓட்டு போட்டு கோட்டைக்கு அனுப்புவதே வாடிக்கையாகி போனது. அவர்களிடம் நேர்மை, நல்ல எண்ணம், வாக்கு சுத்தம், செயல் திறமை எல்லாம் இருக்கிறதா என்று பார்க்கக்கூட வழியில்லை.
முதல் முறையாக மொழி உணர்வை முன்னிலைப் படுத்தி மக்கள் மனதில் காங்கிரசுக்கு எதிரான கருத்துகளை நூதனமான வழிகளில் புகுத்தி ஓட்டுகளை திசை திருப்பி திமுகவை ஆட்சி பீடத்தில் அமர்த்தினார் அறிஞர் அண்ணா என நேசிக்கப்பட்ட சி.என்.அண்ணாதுரை. எதிர்பாராத விதமாக அவர் இரண்டு ஆண்டுகளில் காலமானபோது தொடங்கியது தமிழகத்தின் புதிய அரசியல் சதுரங்க ஆட்டம்.
கருணாநிதியின் ஆட்சிக்கு முடிவு கட்ட எம்ஜிஆரை முதல்வர் ஆக்கினர் மக்கள். அந்த மாற்றத்தை முடக்க திமுகவும் இந்திராவின் காங்கிரசும் கைகோர்த்தபோது, அதை முறியடித்து மீண்டும் எம்ஜிஆரை அரவணைத்தது தமிழகம். அவர் மறைந்த பின்னர் ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் நடக்கும் கயிறு இழுக்கும் போட்டியாக மாறிப்போனது தேர்தல் களம்.
கால் நூற்றாண்டுக்கு மேலாக தொடர்கிறது இந்த விளையாட்டு. இருவரையும் விட்டால் வேறு ஆளில்லையா என்ற தேடலுக்கு விடையாக அவ்வப்போது தலை காட்டியவர்கள் எரி நட்சத்திரங்களாக கருகி தரையில் விழுந்ததுதான் மிச்சம்.
அந்த ஏமாற்றம்தான் ஒரு சகாயத்தை முதல்வர் பதவிக்கு முன்மொழியும் கட்டத்துக்கு சிலரை தள்ளியிருக்கிறது. ‘இப்படியே விட்டால் நான் முதலமைச்சர் ஆகிவிடுவேன் என்று என்னைக் கண்டு ஜெயலலிதா பயப்படுகிறார்’ என்று 85 வயது டிராபிக் ராமசாமி சீரியசாக பேட்டி கொடுப்பதன் பின்னணியும் மக்களின் அந்த ஏமாற்றம்தான்.
ஒரு கட்டத்தில் வைகோ மறுமலர்ச்சி ஏற்படுத்துவார் என பலர் எதிர்பார்த்தார்கள். அவர் தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்வதைவிட உலக தமிழர்களின் (புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களின்) குரலாக ஒலிப்பதில் அதிக அக்கறை செலுத்தியதால் கோட்டைக்கு செல்லும் வாய்ப்பை கோட்டை விட்டார்.
அடுத்தொரு கட்டத்தில் விஜயகாந்த் களம் இறங்கியபோது, யாருக்கும் அஞ்சாத கேப்டன் மாற்றத்தை உருவாக்குவார் என பலரும் நம்பினார்கள். 2006 சட்டசபை தேர்தலில் தனித்து நின்று பத்து சதவீத ஓட்டுகளுக்கு மேல் பெற்ற கட்சியை அடுத்த தேர்தலில் அதிமுக அணியில் கொண்டு சேர்த்து தனது அடையாளத்தை தொலைத்தார் விஜயகாந்த். அவருக்கு லாபம் 29 எம்.எல்.ஏ.க்கள். நஷ்டம் மக்களின் நம்பிக்கை.
முந்தைய தவறுகளுக்கு இந்த தேர்தலில் பரிகாரம் தேடுவாரா என எல்லோரும் கவனித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் கொஞ்சமும் அரசியல் முதிர்ச்சியோ ராஜதந்திரமோ அடிப்படை நாகரிகமோ இல்லாதவராக தன்னை அவர் வெளிப்படுத்தி வருவது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. முரசு சின்னத்துக்கு ஓட்டளிக்க நினைத்திருந்தவர்கள் அவசரமாக தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்கின்றனர்.
வைகோ, விஜயகாந்த் நிலை இப்படி என்றால் அன்புமணி ராமதாஸ், திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சிகளின் கதி வேறு வகை.
திருமாவளவன் தன்னை முதலமைச்சர் வேட்பாளராக சொல்லிக் கொள்ளவில்லை. தன் பலம் உணர்ந்தவர். கசப்பான அரசியல், சமூக எதார்த்தம் புரிந்தவர். எனவே தன் இருப்பில் இருந்து மாறாமல், தன் இனத்துக்கு அதிக நன்மைகள் கிடைக்க என்ன வழி என்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்.
அன்புமணிக்கு இளைஞர்கள் மத்தியில் அதிகமாக கெட்ட பெயர் இல்லை. அவரது தந்தைக்கு இருக்கிறது. பெரிய மருத்துவர் சொல்லுக்கும் செயலுக்கும் ஒற்றுமை கிடையாது என்பதை அடுத்தடுத்த தேர்தலில் மக்கள் பார்த்து விட்டனர். இரண்டு திராவிட கட்சிகளோடும் கூட்டு சேர்ந்ததுதான் நாங்கள் செய்த ஒரே பாவம் என அவரும் ஒப்புக் கொள்கிறார். என்றாலும், அதே பாவத்தை மீண்டும் அவர் செய்ய மாட்டார் என்று நம்ப மக்கள் தயாராக இல்லை. ட்ரஸ்ட் டெஃபிசிட்.
கம்யூனிஸ்ட் கட்சியில் நல்லவர்கள் இருக்கிறார்கள். ஆனால் கட்சி நல்லது செய்யும் என்ற நம்பிக்கை உள்ள வாக்காளர்கள் குறைவு. ஆளுங்கட்சியுடன் ஒட்டி உறவாடும் தவறை கம்யூனிஸ்ட் கட்சிகள் செய்யாது. ஆனால், ஒன்ரிரண்டு நல்லது செய்யக்கூட அத்தகைய உறவு அவசியம் என்கிற நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஓட்டுக்கு பதில் அனுதாபமே அதிகம் கிடைக்கும்.
ஜாதி, மத கட்சிகள் தமிழக மண்ணில் வேரூன்றுவது கண்ணுக்கெட்டிய எதிர்காலம் வரை நடக்கிற சாத்தியம் இல்லை. உள்ளூற சொந்த ஜாதி அல்லது மத அபிமானம் மிகுந்தவர்கள்கூட அதை வெளிப்படையாக காட்டிக் கொள்ள கூச்சப்படும் சூழலை இங்கே ஏற்படுத்தி சென்றிருக்கிறார் ஈ.வே.ரா பெரியார். அந்த வலுவான தாக்கத்தை தகர்க்கும் சக்தி கொண்ட ஒருவன் இன்னும் பிறந்ததாக தகவல் இல்லை.
எத்தனை ஜாதி அமைப்புகளை மத தலைவர்களை ஒரே குடையின்கீழ் கொண்டு வந்தாலும் பாரதிய ஜனதா கட்சியால் தமிழக மண்ணுக்குள் புதைந்திருக்கும் பகுத்தறிவு வேர்களை அசைத்துப் பார்க்க முடியாது.
காங்கிரசை பொறுத்தவரை இங்கே தொண்டர்கள் இல்லை என்பதை தவிர குறையொன்றும் இல்லை. தலைவர்கள் இருக்கிறார்கள். பிரமுகர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு நகரத்திலும் கிராமத்திலும் அனுதாபிகள் இருக்கிறார்கள். அவற்றுக்கு ஈடான எண்ணிக்கையில் உறுப்பினர்களை காணவில்லை. ஆங்காங்கே முளைத்திருக்கும் இளம் தலைமுறைகள் ஜொலித்தாலும் கட்சியை கரை சேர்க்க அதெல்லாம் போதாது.
ஆக, ஹீரோ வெர்சஸ் வில்லன் கதைக்கே மீண்டும் திரும்புகிறோம். இருவருமே மாறி மாறி தங்கள் ரோலை மட்டும் மாற்றிக் கொண்டு மொத்த படத்தையும் தாங்களே ஆக்கிரமித்து வருகிறார்கள். வேறு ஹீரோவை விடுங்கள். வேறு வில்லனைக்கூட நம்மால் களமிறக்க இயலவில்லை.
இந்த தேர்தல் மட்டும் இதற்கு முந்தைய தேர்தல்களைவிட வித்தியாசமாக இருக்க முகாந்திரம் இல்லை.
இரண்டு கழகங்களுக்கு இடையில்தான் போட்டி.
வளர்ப்பு மகன் திருமண ஆடம்பரத்தாலும், உடன் பிறவா சகோதரி குடும்பத்தினரின் சொத்து குவிப்பாலும் 1996ல் ஆட்சியை இழந்தார் ஜெயலலிதா. 2016ல் வளர்ப்பு மகனோ ஆடம்பர திருமணமோ இல்லை. ஆனால் உ.பி.ச குடும்பத்தின் சொத்து குவிப்பு மீண்டும் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
அதோடு, இதுவரை ஜெயலலிதா சந்தித்திராத மிகப்பெரிய குற்றச்சாட்டான நிர்வாக சீர்குலைவு சேர்ந்திருக்கிறது. முந்தைய ஆட்சிக் காலங்களில் ஆட்சி நிர்வாகத்தை பொறுத்த மட்டில் ஜெயலலிதாவை கடுமையாக விமர்சிக்க யாராலும் முடியவில்லை. அரசு எந்திரம் சுறுசுறுப்பாக இயங்கியது, காவல்துறை சுதந்திரமாக ஆனால் ஓரளவு பயத்துடன் செயல்பட்டது. 2011-16 காலகட்டம் அப்படி இல்லை.
சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு வந்து அவர் சிறைவாசம் அனுபவிக்க நேர்ந்தது. குமாரசாமியின் தீர்ப்பை பெற்று விடுதலை ஆக பெரிதும் போராட நேர்ந்தது. அதோடு அல்லது அந்த காரணங்களால் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது.
உண்மையில் ஜெயலலிதாவுக்கு என்ன உடல்நல குறைவு என்பது நமக்கு தெரியாது. ஆனால் அவர் இயல்பான உடல்நிலையில் இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது.கட்சி அலுவலகத்துக்கும் கோட்டைக்கும் போவதை குறைத்துக் கொண்டார். வாரம் ஒருமுறை சந்திப்பதாக வாக்குறுதி அளித்த போதிலும் ஊடகர்களை ஒருமுறைகூட சந்திக்கவில்லை. அப்போதே உலா வந்தன ஊகங்கள், வதந்திகள். கலாமுக்கு அஞ்சலி செலுத்த போகவில்லை என்றதும் வதந்திகள் வலுவடைந்தன. அவதூறு வழக்குகளாலும் அவற்றை கட்டுப்படுத்த முடியவில்லை.
உடல் நிலை சரியில்லை என்பது உன்மையானால் முதல்வர் விரைவில் நலம் பெற தமிழ்நாடே பிரார்த்திக்கும்.
உடன் பிறவா சகோதரியின் குடும்பத்தினர் சரியில்லை என்றால் மக்கள் என்ன செய்ய முடியும்? அந்த தவறை அனுமதித்த குற்றத்துக்காக ஜெயலலிதாவை தேர்தலில் தண்டிப்பதை தவிர.
விசுவாசத்தை நிரூபிக்க நேர்மை நியாயத்தை காற்றில் பறக்கவிடும் அதிகாரிகளை அருகில் அமரவைத்துக் கொண்டபோது ஜெயலலிதாவின் நிர்வாக ஆற்றல் முதல் முறையாக கேள்விக்குள்ளானது. ஒரு காலத்தில் வெங்கட்ராமன், நாராயணன், விஜயகுமார், கே.நடராஜன் முதலான ஆற்றல் மிக்க ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை ஊக்குவித்த ஜெயலலிதா தவறான முடிவுகளை நியாயப்படுத்த மட்டுமே தெரிந்தவர்களை ஓய்வு பெற்ற பிறகும் தொடர அனுமதித்ததை இந்திய அதிகாரிகள் உலகம் வியப்புடன் பார்த்தது. நிர்வாகத்தில் ஜெயலலிதாவின் இரும்புப்பிடி தளர்ந்து வருவதன் அறிகுறியாக அவர்கள் கருதினார்கள்.
ஜெயலலிதா ஆட்சியில் நிர்வாக சீர்குலைவு என்பது எதிர்க்கட்சிகள் இட்டுக் கட்டும் குற்றச்சாட்டு என அதிமுகவினர் நம்பினர். இயற்கையே இறங்கிவந்து அந்த நம்பிக்கையை தகர்த்தது. வரலாறு காணாத மழையும் வெள்ளமும் தமிழக அரசு எந்திரம் ஸ்தம்பித்து நின்றதை ஊர்ஜிதம் செய்தது. உலகம் முழுவதும் கண்டனம் எழுந்த பிறகு சுதாரித்துக் கொண்டு சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டது கண்ணீர் வற்றிய பின் கைக்குட்டை நீட்டியது போன்றதுதான்.
தடையற்று பாய்ந்த லஞ்ச ஊழலுடன் செயற்கை வெள்ளமும் சேர்ந்த பின் மக்கள் மத்தியில் அதிருப்தியும் கோபமும் பிரவாகம் எடுத்தன. இதிலிருந்து ஜெயலலிதா மீண்டு வருவாரா, அவரது ஆட்சி மீண்டும் வருமா என்பதுதான் விடை காண வேண்டிய கேள்வி.
உடலை பலவீனப்படுத்திய நோய் எது என்று தெரிந்த பிறகும் சிலர் அதற்கான சிகிச்சையை தொடங்காமல், வேறு தீர்வை நாடுவார்கள். உதாரணம் சொல்வதானால், புகை பிடிப்பதுதான் இருமலுக்கு காரணம் என தெரிந்தாலும், சிகரெட்டை கைவிட மனமில்லாமல் இருமல் மருந்து வாங்கி குடிப்பது போல.
அம்மா அப்பா வைத்த பெயரையே மறந்து அம்மா என்று நீங்கள் அழைக்கும் அன்பு மழையில் திக்கு முக்காடுகிறேன் என்று கேபிள் வழியே மக்கள் மீது பாசத்தை பொழியும் ஜெயலலிதா, தவறான செயல்களில் ஈடுபடும் எவருக்கும் என் அருகில் அமர உரிமையில்லை என அறிவித்து அதை நடைமுறைக்கு கொண்டு வந்தால் எதிர்ப்பு பாரம் பாதியாக குறைந்துவிடும். இன்றைய ஜெயலலிதாவுக்கு அந்த உறுதி இருக்கிறதா, தெரியவில்லை.
எதிர்ப்பு ஓட்டுகள் அதிகம் இருந்தாலும் அவை ஒரே கட்சிக்கு போகாதவரை நமக்கு ஆபத்தில்லை என்பது கருணாநிதியும் ஜெயலலிதாவும் மிக நன்றாக அறிந்த தேர்தல் சூத்திரம்.
அதோடு வேட்பாளர் தேர்வில் பெண்களுக்கும் புதுமுகங்களுக்கும் கூடுதல் வாய்ப்பு கொடுப்பது, கவரக்கூடிய சில வாக்குறுதிகளை அளிப்பது, பண பலத்தை முழுமையாக பிரயோகிப்பது ஆகியவை கைகொடுக்கும் என ஜெயலலிதா முழுமையாக நம்புகிறார்.
நம்பிக்கை பலன் தருமா என்பதை அறிய அதிக நாள் காத்திருக்க தேவையில்லை.
கதிர்
நன்றி : நம்ம அடையாளம்
Just curious – how does your position line up with the Free Methodist Church of Canada?I just read a PDF called a 60 second guide to the Free Methodist Church in Canada and they were explicitly conservative on this issue. They even called homosexuality ‘sexual deviance.’So has the Free Methodist Church in Canada changed? Do you still have a relationship with them?