மீனாட்சிபுரம் மதமாற்றம்
இரண்டு முறை மதுரை எக்ஸ்பிரசில் பணியாற்றினேன். முதல் கட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இன்னொரு சம்பவம் மீனாட்சிபுரம் மதமாற்றம்.
திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசி அருகே அமைந்துள்ளது மீனாட்சிபுரம். அங்கே ஆயிரத்துக்கு மேற்பட்ட பள்ளர் இனத்தவர் இஸ்லாம் மதத்தை தழுவினர். ”தேவர் இனத்தவரின் அடக்குமுறை தாங்கவில்லை, நாள்தோறும் இழிவுபடுத்தப் படுகிறோம், எங்களுக்கு ஒரே விடிவு இஸ்லாம்தான்” என்று கூறி மீனாட்சிபுரம் கிராம தலித்துக்கள் மதம் மாறினர்.
அந்தச் செய்தியை முதன்முதலில் உலகுக்கு அறிவித்தது இண்டியன் எக்ஸ்பிரசின் திருநெல்வேலி செய்தியாளர் நாராயணன். துடிப்பு மிக்க இளைஞர்.
இந்துத்துவ அமைப்புக்கள் இது இந்து மதத்துக்கு எதிரான சதி என்று கூறி, மதம் மாறியவர்களை மீண்டும் இந்துவாக்கும் முயற்சியில் இறங்கின. வாஜ்பாய்கூட அங்கே வந்து போனார். அவ்வளவு களேபரம்.
.இந்த நிலையில்தான் ஆங்கில வார ஏடு ’டைம்’ ஒரு புகைப்படக்காரரையும் நிருபரையும் அனுப்பி வைத்தது. அவர்களுக்கு மொழிபெயர்ப்பாளனாக நான் போனேன். அப்போது அவர்களிடமிருந்த வசதிகள் ஐந்து நட்சத்திர ஓட்டல், காரில் ஐஸ் பாக்சில் பீர், வேண்டியதற்கு மேல் உணவு. எனக்கு அதெல்லாம் அதிசயமாக இருந்தது.
அதைவிட அவர்களது தொழில் நேர்மை எனக்கு பிடித்திருந்தது. எதையும் சரியாகப் புரிந்துகொள்ள முயல்வார்கள். துருவித் துருவி கேள்வி கேட்பார்கள். நம்பும்படியாக இல்லாவிட்டால் ஒரு கட்டத்தில் பெருமூச்சுவிட்ட வண்ணம் எழுந்துவிடுவார்கள்.
ஏதோ ஓரிடத்தில் மதம் மாறியவர்களுக்கும் ‘ஒரிஜினல்’ முஸ்லிம்களுக்கும் இடையில் ஏதோ பதட்டம் என்று ஒருவர் சொல்ல, அதிகம் விசாரிக்காமல், அவசர அவசரமாக அதை செய்தியாக்கி தொலைபேசி வழியே கொடுத்துவிட்டேன். மறுநாள் அது பிரசுரமாகி ஆங்காங்கு அது பற்றி விவாதிக் கொண்டிருந்தனர்.
டைம் நிருபர் ஒரு பெண்மணி. எக்ஸ்பிரஸ் ரிப்போர்ட்டை படித்துவிட்டு என்னிடம் கோபமாக கேட்டார். ”எங்கே நடந்தது, யாரிடம் பேசினீர்கள், என்னிடம் ஏன் சொல்லவில்லை?” என்று. ஸ்கூப் (வேறு யாருக்கும் கிடைக்காத சிறப்புச் செய்தி) மோகத்தில் அப்படிச் செய்தேன் என்று அவரிடம் எப்படி ஒப்புக்கொள்வது? ஏதோ வழிந்தேன்.
செய்தி சுவாரசியமாக இருந்தும், போதிய ஆதாரமில்லை, திரும்பி அந்த இடத்துக்கு சென்று விசாரிக்க நேரமும் இல்லை. எனவே அப்பெண்மணி, அத்துடன் விட்டுவிட்டார். அந்த சம்பவம் எனக்கொரு பாடம். அதன் பின்னரும் அவசரத்தில் அள்ளித் தெளித்து தர்ம சங்கடத்தில் சிக்கியிருக்கிறேன். ஆனால் சற்றேனும் எச்சரிக்கையாக இருக்க கற்றுக்கொண்டேன்.
வேறு பல மேலைநாட்டு பத்திரிகைகளும் தமிழக தலித்துகளின் அவல நிலை குறித்து விரிவாக எழுதின.
குராயூர் போன்ற இடங்களில் மதமாற்றங்கள் நிகழ்ந்தன. இன்னும் சில இடங்களில் ”எங்களுக்கு பல பிரச்னைகள், சரி செய்யாவிட்டால் மதம் மாறுவோம்” என தாழ்த்தப்பட்டோர் பகுதிகளிலிருந்து எச்சரிக்கை வருவதும், அங்கே அதிகாரிகள் ஓடோடிப்போய் சிலவற்றை செய்து கொடுப்பதும், பிறகு மாற்ற முயற்சி கைவிடப்படுவதும் வாடிக்கையாயிற்று.
நானும் அப்படி செய்தி கிடைக்கும் போதெல்லாம், செய்தி ஆசிரியரின் தாவாங்கட்டையை பிடித்து, கெஞ்சி அனுமதி வாங்கி அங்கு சென்றுவிடுவேன். ஒரு சிலர் நான் ஏதோ மதமாற்றத்தை எதிர்த்து செய்திகள் கொடுப்பதாக நினைத்து என்னை கண்டித்தனர். இந்துத்துவ லாபிக்கோ மகிழ்ச்சி. ராம்நாத் கோயங்காவிடம் இருந்தே ஒருமுறை பாராட்டு தெரிவித்து செய்தி வந்தது. வேறொன்றுமில்லை நான் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துகிறேனாம்.
உண்மை என்னவெனில் ஒவ்வொரு நிகழ்வையும் நான் தலித் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைப் பற்றி விவரமாக எழுதவே பயன்படுத்திக்கொண்டேன்.
தொடர்ந்து தமிழகத்தின் பல பகுதிகளிலும் அத்தகைய மதமாற்றங்கள் நிகழ்ந்தன.. அன்றைய எம்.ஜி.ஆர் அரசு திகைத்துப் போனது. ஒரு கட்டத்தில் அரசு இயந்திரமே மத மாற்றங்களை தடுக்க முயன்றது. மத மாற்றத்தில் ஈடுபட்டவர் ஓரிருவர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். மத மாற்றங்களும் நின்றுபோயின.
எம் ஜி ஆர் இந்துமதத்தின் மீது தணியாத பாசத்தால் அப்படி அடக்குமுறையில் இறங்கினார் என நான் நினைக்கவில்லை. மாறாக பரவலாக மத்திய தர வர்க்கத்தினர் மத்தியில் ஒரு அதிருப்தி, அச்சம் உருவாகி வந்ததைக் கண்டே அப்படிப்பட்ட நடவடிக்கைகளில் இறங்கினார்.
அதாவது 1980 களிலேயே, எம் ஜி ஆர் போன்றோர் அஞ்சும் அளவுக்கு இந்து மதவாத சக்திகள் தலையெடுக்கத் தொடங்கிவிட்டன என்பதைத்தான் நாம் இங்கே கவனிக்க வேண்டும்.
சரி இஸ்லாம் எங்களுக்கு அந்நியம், அது வளரக்கூடாது என நினைக்கும் இந்துக்கள் எவரேனும் இதய சுத்தியோடு தலித்துக்கள் நிலைமை குறித்து அக்கறை கொண்டு , அவர்கள் நிலை மேம்பட ஏதேனும் கோரியிருப்பார்களா என்றால் அதுவும் இல்லை. ”அவலம்தான், தவறுதான், ஆனால் நாளடைவில் எல்லாம் சரியாகிவிடும், எப்படியும் வெளியேற விடமாட்டோம்” என்பதே நடுத்தர வர்க்கத்தினரின் அணுகுமுறையாக இருந்தது,
இன்றைய அளவிலும் அப்படித்தான்.
எம்ஜிஆரும் அவர்களை விரோதித்துக் கொள்வானேன் என்றுதான் தேசிய பாதுகாப்புச் சட்டத்தை எல்லாம் கையில் எடுத்தார்.
அதே நேரம் அடக்குமுறை மட்டுமே மதமாற்ற வேகம் தடைபட்டதற்கான காரணம் என நான் நினைக்கவில்லை. மாறியவர்களோ தலித்துக்கள். அந்த இனத்தில் பெண்கள் பொதுவாக சுதந்திரமாக வாழ்ந்தவர்கள். வயலில் வேலை செய்தவர்கள். அவர்களுக்கு முக்காடு போட்டு வீட்டுக்குள் உட்கார் என்றால் ஜீரணிக்க இயலவில்லை. மதம் மாறிய பல குடும்பங்களில் உள்ள பெண்களை நான் சந்தித்தபோது தங்கள் அதிருப்தியை ஜாடைமாடையாக தெரிவித்தனர்.
பிபிசி தமிழோசையில் பணியாற்றியபோது மீண்டும் ஒரு முறை மீனாட்சிபுரம் சென்றேன். அந்த ஒலிபரப்பினை ஒருவர் விவரமாக தன் வலைப்பூவில் பதிவு செய்திருக்கிறார் http://suvanappiriyan.blogspot.in/2012/12/blog-post_29.html
முதல் மதுரைப் பணி கட்டத்திலேயே ஓரளவு என்னை நிலை நிறுத்திக் கொள்ள முடிந்தது என்றாலும், அங்கும் எனக்கொரு வில்லன் இருந்தார். அவர்தான் செய்தி ஆசிரியர் எல் டி நடராஜன்.
ராம்நாத் கோயங்காவின் எக்ஸ்பிரஸ் சாம்ராஜ்யம் விநோதமானது. மாநில தலைநகரங்கள் தவிர்த்து மற்ற இடங்களில் இருந்தும் பதிப்புகளை வெளியிடும் முறையினை துவக்கியவர் அவர்தான்.
இந்து நாளேட்டில் மதுரைப் பதிப்பு என்று சொல்லுவார்கள். ஆனால் முடிவு எடுப்பது எல்லாம் சென்னையில்தான். செய்தி மதுரையிலிருந்து அனுப்பப்பட்டு, சென்னையில் இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு, திரும்ப மதுரைக்கு அனுப்பி வைக்கப்படும். பிறகு அங்கே அச்சேறும். தரக்கட்டுப்பாடு முக்கியம் என்று சொல்லி அப்படி ஒரு நடைமுறை.
தரத்தை காப்பாற்றிக் கொள்ள முடிந்ததென்னவோ உண்மை. ஆனால் பதிப்பிடங்களில் எல்லாம் ஆசிரியர் குழு ஒன்று பணியாற்றி அதற்குக் கணிசமான சுதந்திரமும் இருந்தால் அப்பகுதி செய்திகள் பலவற்றை விரைந்தளிக்க முடியும், அந்த அளவு வாசகர்களிடம் வரவேற்பும் பெறமுடியும். அந்தக் கணக்கில்தான் ராம்நாத் கோயங்கா செயல்பட்டார். அவரது முயற்சிகளுக்கு வெற்றியும் கிடைத்தது. 80கள் வரை இண்டியன் எக்ஸ்பிரஸ் மதுரைப் பதிப்பின் விற்பனை இந்து விற்பனையை விட கூடுதல். அப்புறம் எல்லாவற்றையும் நாசப்படுத்தினர் என்பது வேறு கதை.
இத்தகைய அமைப்பின் காரணமாய் மதுரைப் பதிப்பு செய்தி ஆசிரியருக்கு குறிப்பிட்டுச் சொல்லும் அளவு அதிகாரமிருந்தது. அப்போதிருந்த ஆசிரியர் எல்.டி.என் ஹைதராபாத் டெக்கான் கிரானிக்கில் பத்திரிகையில் இருந்து வந்தவர். அனுபவசாலி. ஆங்கிலப் புலமையும் உண்டு.
என் கிரகக் கோளாறு அவருக்கும் நக்விக்கும் ஒரு நிழல் யுத்தம் நடந்து கொண்டிருந்தது. நக்வி வயதில் மிக இளையவர் 40 வயதுகூட நிரம்பவில்லை. அகில இந்திய அளவில் பிரபலமாயிருந்தார். போல்பாட் வீழ்ச்சிக்குப் பிறகு கம்போடியா சென்று வந்தவர். அப்போதுதான் மலையாய் குவிந்திருந்த மண்டையோடுகளெல்லாம் உலக அளவில் அதிர்ச்சி அலைகளை தோற்றுவித்திருந்தன.
40 வயது நிரம்பாத நிலையில் தென்னக பதிப்புக்களின் ஆசிரியராக அவர் நியமிக்கப்பட்டதில் பலருக்குக் கோபம். மதுரை எல் டி என்னுக்கும்தான். “நீ என்னவாயிருந்தால் என்ன… என் சாம்ராஜ்ஜியத்திற்கு நானே ராஜா,” என்ற ரீதியில் நடராஜன் நடந்து கொண்டார்.
நக்வி வேறு என்னை ரொம்பவும் பாராட்டி செய்தி அனுப்பிவிட்டார், யாரை அனுப்புகிறேன் பாருங்கள், கலக்கப் போகிறான் என்ற ரீதியில். பற்றிக்கொண்டது. துவக்கத்தில் இருந்தே என்னை மட்டம் தட்டுவதில் குறியாய் இருந்தார் எல்டிஎன்.
அதையும் மீறித்தான், சில சமயம் அவரிடம் நெளிந்து குழைந்தும், இன்னும் சில நேரங்களில் நக்வியின் தலையீட்டின் காரணமாகவும் சிறப்புச் செய்திகளைத் தரமுடிந்தது.
ஒரு கட்டத்தில் எல் டி என் மாற்றப்பட்டார். மாற்றலுக்கு ஒரு காரணம் நான் என்று பலர் நினைத்தனர். அந்த பின்னணியில் அடுத்து வந்த செய்தி ஆசிரியர் என் மீது சற்று அன்பு காட்டினார், சுதந்திரமும் கொடுத்தார். ஆனால் என் மகிழ்ச்சி நீடிக்கவில்லை.
பேசுவோம்…
Even anti brahmin propaganda can serve to stop Tamils progress and give edge to Gulties. I have doubt if its one of the motives. I could see Gulties has links and they help each other but Tamils dont do that. THe caste bias politicos and useless ppl create could have played a role.
Many thugs in TN think Brahmins live on their income. Totally incorrect and false propaganda. :Brahmins go abroad and do well there also. In TN only you badmouth them as you can only badmouth them only . NOt against powerful. You people are cowards.Savukku,VInavu are coward thugs. If Dalits are killed by Devars how many articles people write against Devar atrocities ? How many politicos speak?How many Christians or Muslims speak? Has Kamal spoken?Veeramani,Kolathur mani? Pure insanity to blame Brahmins for everything.You guys need lunatic asylum.
இந்த பதிவில் என்னையும் குறிப்பிட்டமைக்கு நன்றி! உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.