நேற்று சேலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய கருணாநிதி, கருத்துக் கணிப்புகளை யாரும் நம்புவதேயில்லை என்று பேசியுள்ளார். அவர் பேசியது….
“இந்த தேர்தலில் தி.மு.கழகத்தை வீழ்த்திவிட பல முனைகளிலும், எல்லா வகையான உபாயங்களிலும், எதிர் அணியினரால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்றுகூட கருத்துக்கணிப்பு வெளியிட்டு இருக்கிறார்கள்.
கருத்துக்கணிப்புகளின் லட்சணம் என்னவென்று நமக்கு தெரியும். முன்புகூட கருத்துக் கணிப்பு வெளியிட்டார்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, தி.மு.க. கூட்டணிக்கு, தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்கு 2 இடங்கள் கூட கிடைக்காது என்றுதான் கணித்தார்கள்.
ஆனால் எத்தனை இடம் கிடைத்தது என்றும், இன்றைக்கு மத்தியில் காங்கிரஸ் ஆட்சியை நிலை நிறுத்தக்கூடிய அளவுக்கு அந்த கூட்டணி அன்றைக்கு வெற்றி பெற்றதும் உங்கள் அனைவருக்கும் தெரிந்த உண்மைதான்.
எனக்கு தெரியும், எப்போதும் எந்தெந்த கருத்துக்கணிப்பாளர்கள், இந்த தேர்தலிலே, இந்த புள்ளி விவரங்களை சொல்லி, கருத்துக்கணிப்பு வெளியிடுகிறார்கள் என்று எனக்கு தெரியும். தேர்தல் முடிந்த பிறகு அவர்களுடைய பெயர்களையெல்லாம் நான் வெளியிட தயாராக இருக்கிறேன்.
தி.மு.க. கூட்டணி, வெற்றி பெறுவதற்கு வழி இல்லை என்று கருத்துக் கணிப்பாளர்களை விட்டு, எழுதச் செய்கிறார்கள், பேசச் செய்கிறார்கள். வெளியிடச் செய்கிறார்கள். நான், அவர்களை நுண்ணிய நிலையில் உணர்ந்துப் பார்த்தேன். யார், யாரை இது சம்பந்தமாக தொடர்பு கொண்டால் உண்மைகள் வெளியில் வரும் என்று அந்த வழிமுறைகளை கையாண்டு பார்த்தேன்.
ஒன்றுமில்லை, தேர்தல் களத்திலே இருக்கின்ற அந்த தலைவர்கள், எதிர்க்கட்சிகளை சேர்ந்த நண்பர்கள், தேர்தலில் பணம் செலவழிப்பது ஒரு புறம் இருக்கட்டும். தேர்தலிலே மக்களுக்கு தி.மு.க. கூட்டணி மீது ஒரு நம்பிக்கை இன்மையை உருவாக்குவோம் என்று திட்டமிட்டு, அதற்கான ஆட்களைப் பிடித்து, பெரிய பெரிய பத்திரிகையாளர்கள், ஏற்கனவே பெயர்களை கெடுத்துக்கொண்டவர்கள் ஆகியோர் எல்லாம் நம் மீது கொண்ட அன்பின் காரணமாக, நாம் ஆட்சிக்கு வந்தால், அடித்தட்டு மக்களுக்கு நன்மைகள் செய்வோம், நாம் ஆட்சிக்கு வந்தால் சாக்கடைகளில் உழன்று கொண்டிருக்கும் சாதாரண மக்களுக்கு நன்மைகள் செய்வோம், திட்டங்களை நிறைவேற்றுவோம், தீமைகளை வீழ்த்துவோம், நாம் ஆட்சிக்கு வந்தால் உயர்ந்து உயர்ந்து கொண்டே போகின்ற செல்வந்தர்களுக்கு வாழ்வளிக்க மாட்டோம்,
ஓலைக்குடிசையிலே, ஒண்ணரை சான் பாயிலே படுத்து உறங்குகின்ற உழைப்பாளிகளுக்கு வாழ்வளிப்போம். ஆகவே இவர்களுடைய ஆட்சியில் நம்மைப்போன்ற, பூர்ஷ்வாக்களை காப்பாற்றாது. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்ற இவர்களின் தாரக மந்திரம், இவர்களின் மூல மந்திரமாக இருக்கின்ற காரணத்தால், மக்கள் மனதிலே இவர்கள் பெற்றிருக்கின்ற நம்பிக்கை குலைந்து, வீழ்த்திவிட வேண்டும் என்று பஞ்சாங்கம் பார்க்கிறார்கள். பத்திரிகைகளிலே பொய்கள் எழுதுகிறார்கள்.
தயவு செய்து இங்கே குழுமியிருக்கிற பல்லாயிரக்கணக்கான மக்கள் இத்தகைய ஜோசியங்களை, இத்தகைய கருத்துக் கணிப்புகளை நம்பமாட்டீர்கள், நம்ப வேண்டாம் என்று உங்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.”
இதே போன்றதொரு கருத்துக் கணிப்பைத் தானே தினகரன் நாளேடு வெளியிட்டது. அதற்காகத்தானேயடா மூன்று அப்பாவி உயிர்களை கொன்றழித்தீர்கள்….. ? படுபாவிகளே…..
இது குறித்து, ஜுனியர் விகடன் வாரமிருமுறை இதழில் மே 2007ல் வந்த கட்டுரை வெளியிடப்படுகிறது.
உயிர்களைப் பொசுக்கிய வாரிசு அரசியல்… அழகிரி தாண்டவம்… ஆடிப்போன தி.மு.க.!
தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவத்துக்கு அடுத்து, மற்றுமொரு அராஜகத்துக்கு அக்னி சாட்சி யாகியிருக்கிறது தமிழகம்! கடந்த 1998&ம் ஆண்டு, ‘ப்ளஸன்ட் ஸ்டே’ ஹோட்டல் வழக்கில் அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதா குற்றவாளி என சென்னை தனி நீதிமன்றம் தீர்ப்பளிக்க, அக்கட்சித் தொண்டர்கள் மாநிலமெங்கும் வன்முறையில் ஈடுபட்டனர். இதில், தர்மபுரியில் கோவை வேளாண் கல்லூரி பேருந்து ஒன்று தீவைத்துக் கொளுத்தப்பட… மூன்று மாணவிகள் அநியாயமாக உயிரிழந்தனர். இந்த வன்முறைச் சம்பவங்கள் நடந்தபோது, ஆட்சி அதிகாரத்தில் இருந்தது தி.மு.க.!
இதற்கு சற்றும் குறையாத கொடுமையாக கடந்த மே 9ம் தேதி, ஒரு வன்முறை பயங்கரம் மதுரையில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இப்போதும் தி.மு.க. ஆட்சிதான். ஒரே வித்தியாசம், அன்று கொளுத்தியவர்கள் அ.தி.மு.க&வினர்… இன்று கொளுத்தியிருப்பவர்கள் ஆட்சிக் கட்டிலில் இருக்கும் அதே கட்சியின் உடன்பிறப்புகள்! தி.மு.க. உடன்பிறப்புகளின் அக்னிக் கோபத்துக்கு ஆளாகி, அலுவலகம் சூறையாடப்பட்டு… அநியாயமாக மூன்று உயிர்களைப் பலி கொடுத்துவிட்டுக் கதறிக் கொண்டிருக்கிறது, தி.மு.கவின் தூணாக நின்ற முரசொலி மாறன் குடும்பத்துக்குச் சொந்தமான ‘தினகரன்’ நிறுவனம். தினகரன் நாளிதழ், ஏ.சி.நீல்சன் என்ற அமைப்புடன் இணைந்து ‘கலைஞரின் அரசியல் வாரிசாக யார் வரவேண்டும்?’ என்று பொதுமக்களிடம் ஒரு சர்வே நடத்தியது. இந்த சர்வேயின் முடிவு கடந்த 9&ம் தேதி தினகரனில் வெளியானது. அதில் ‘மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக 70 சதவிகித மக்களும் மு.க.அழகிரிக்கு ஆதரவாக வெறும் 2 சதவிகித மக்களும்’ கருத்து சொல்லியிருந்ததாகக் குறிப்பிடப் பட்டிருந்தது. இந்தக் கருத்துக்கணிப்புதான் 9&ம் தேதியை மதுரையின் கறுப்பு தினமாக்கிவிட்டது!
காலை ஏழு மணியிலிருந்தே அழகிரி ஆதரவாளர்களின் ஆவேசத்தால் கொந்தளிக்க ஆரம்பித்துவிட்டது மதுரை. ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் இரண்டு பஸ்களையும், பெரியார் பஸ் ஸ்டாண்டில் மூன்று பஸ்களையும் அடித்து நொறுக்கிப் பயணிகளை அலறடித்தபடியே நகர ஆரம்பித்தது ஒரு கும்பல். இந்த நேரத்தில் மதுரை மேயரான தேன்மொழி தலைமையில் ஒரு படை மதுரை&மேலூர் சாலையிலுள்ள தினகரன்&சன் டி.வி. அலுவலக வளாகத்துக்குப் போனது. ‘அண்ணணைப் பத்தி மரியாதையா எழுதுங்கடா டேய்!’ என்று கோஷமிட்டபடி, தினகரன் நாளிதழ்களை அலுவலகத்துக்கு முன்பு கொளுத்தியது அந்தக் கும்பல். இதேபோல் நகரம் முழுவதும் கல்வீச்சும் கலகமும் ஆரம்பமானது. காலை மணி பத்தைத் தொட்டபோது, கோரிப்பாளையம் தேவர் சிலையிலுள்ள பரபரப்பான சிக்னல் பகுதியில் மறியலை ஆரம்பித்த தி.மு.க&வினர், நடுரோட்டில் உட்கார்ந்து ‘அஞ்சா நெஞ்சன் அழகிரி வாழ்க’ என்று கூச்சல்போட ஆரம்பித்தனர். வாகன நெரிசலில் மக்கள்படும் வேதனையை அவர்கள் பொருட்படுத்தவில்லை.
யானைக்கல் பகுதியில் டூ&வீலரில் அடிபட்டு ரத்தம் சொட்டச்சொட்ட ஆட்டோவில் வந்த ஒரு பெரியவரைக்கூட ஆஸ்பத்திரிக்குச் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தியது அந்த அடாவடி கும்பல். கலகக்காரர்களின் தடையை மீறிக் கிளம்ப முயன்ற அரசு பஸ் ஒன்றின் முன்பகுதியில் தாவி ஏறிய ஒரு உடன்பிறப்பு, தி.மு.க. கொடியால் டிரைவரைத் தள்ளிவிட்டு, பஸ்ஸின் சாவியைப் பிடுங்கிக்கொண்டு நடுரோட்டில் குத்தாட்டம் போட்டார்! தொடர்ந்து அந்த பகுதி வழியாக வந்து கொண்டிருந்த பஸ்களை சேதப்படுத்தினார்கள். கோரிப்பாளையத்தில் ஏற்பட்ட வாகன நெரிசலால் மதுரை நகருக்குள் நான்கு பக்கங்களிலும் பல கிலோமீட்டருக்குப் போக்குவரத்து ஸ்தம்பித்துப் போனது. மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் பகுதியிலும் இதே நிலைதான்.
இந்நிலையில், மாட்டுத்தாவணி பகுதியில் திரண்டிருந்த கலகக்காரர்களில் ஒரு கோஷ்டி, மீண்டும் தினகரன் அலுவலகத்தை நோக்கிப் படையெடுத்தது. அலுவலகத்தின் அத்தனை கண்ணாடிகளையும் அடித்துத் தூள் தூளாக்கிய அக்கும்பல், பிரின்டிங் மிஷின்களையும் உடைத்துச் சேதப்படுத்தியது. இதையெல்லாம் அங்கிருந்தபடியே வெறுமனே வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தது போலீஸ். இந்த சமயத்தில், உதயசூரியன் படம் பொறித்த ஒரு வெள்ளை நிற டாடா சுமோ, வேகமாக தினகரன் அலுவலகம் முன்பு வந்து நின்றது. அதிலிருந்து உருட்டுக் கட்டைகளையும், இரும்புக் கம்பிகளையும், பெட்ரோல் நிரப்பப்பட்ட வாட்டர் கேன்களையும் எடுத்துக்கொண்டு ஒன்பது இளைஞர்கள் வெறியோடு இறங்கினார்கள். உள்ளே நுழைந்த வேகத்தில் செக்யூரிட்டியின் கன்னத்தில் அறைந்து கீழே தள்ளிவிட்டு, அருகில் நிறுத்தப்பட்டிருந்த மூன்று டூ வீலர்களுக்குத் தீ வைத்தனர். பிறகு அலுவலக ரிசப்ஷனுக்குள் நுழைந்த அவர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசித் தீ வைத்துவிட்டு, பின்புறமுள்ள கேபின் ரூமையும் பற்றவைத்துவிட்டு சுமோவுக்குத் திரும்பினார்கள்.
அப்படி திரும்பி வரும்போதே, ‘‘இந்த கருத்துகணிப்புல மத்தவங்கன்னு போட்டிருக்கியே… அந்த மத்தவங்க யாரு? தயாநிதி மாறன்தான? அத வெளிப்படையா போட்டா எதிர்ப்பு நிறைய வரும்னுதான இப்பிடி செஞ்சிருக்கீங்க? தி.மு.கல அண்ணன் அழகிரிக்கு என்ன செல்வாக்கு இருக்குன்னு தெரியுமா உங்களுக்கு? சன் நெட்வொர்க் இன்னிக்கு வேணும்னா பெரிய நிறுவனமா இருக்கலாம். ஆனா, ஆரம்பகாலத்துல எங்க அண்ணனை வெச்சுத்தானே சுமங்கலி கேபிளை தென்மாவட்டத்துல காலூன வச்சிங்க. அப்படிப்பட்டவரை கட்சியிலிருந்து ஓரம் கட்ட திட்டம் போடுறீங்களா? இந்த சதியை நாங்க எப்பிடி பொறுத்துக்க முடியும்? இப்ப இப்படி பண்ணியிருக்கீங்க… நாளைக்கி இதே மாதிரிதான அண்ணன் ஸ்டாலினுக்கும் பண்ணுவீங்க… அதுக்காகத்தான் இப்பவே பாடம் கத்து கொடுத்திருக்கோம்… இனிமேலாவது ஜாக்கிரதையா இருங்க…’’ என்று ஆக்ரோஷமாக கத்தியபடி சுமோவில் ஏறிச் சீறிச் சென்றது அந்த கும்பல். இந்த அக்னித் தாண்டவம் அத்தனையும் ஊமச்சிகுளம் டி.எஸ்.பி. ராஜாராமன் தலைமையில் நின்றிருந்த ஒரு போலீஸ் படையின் கண்முன்னே நிகழ்த்தப்பட்டதுதான் கொடுமையான விஷயம். தீ கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்ததும், அலுவலகத்துக்குள் இருந்த ஊழியர்கள் மரணபயத்துடன் அலறியபடியே வெளியே ஓடிவர ஆரம்பித்தனர். சில நிமிடங்களில் அந்த வெள்ளை நிறக் கட்டடமே கரும்புகையில் மறைந்து போனது.
வெளியே நின்ற ஊழியர்கள், திடீரென்று வினோத்குமார் என்கிற கம்ப்யூட்டர் செக்ஷன் ஊழியரைக் காணோமென்று மறுபடியும் கதவுகளை உடைத்துக்கொண்டு உள்ளே செல்ல முயன் றனர். ஆனால், தீயின் வேகத்தால் அவர்களால் உள்ளே போக முடியவில்லை. கிட்டத்தட்ட முக்கால் மணிநேரம் கழித்துத் தீயணைப்புப் படை அங்கு வந்தது. அவர்கள் உள்ளே சென்று, உணர்ச்சியற்ற நிலையில் ஒரு நபரை வெளியே கொண்டு வந்தனர். அப்போதுதான் தெரிந்தது… ‘அது வினோத்குமார் இல்லை.
கோபிநாத் என்ற மற்றொரு ஊழியர்’ என்று. அடுத்த சில நிமிடங்களில் புகையில் மூச்சுத் திணறி விழுந்துகிடந்த வினோத்குமாரை சடலமாக வெளியே எடுத்தனர். இதைக் கண்டு தினகரன் ஊழியர்கள் கதறியபடி தரையில் விழுந்து புரள ஆரம்பித்தனர். இந்த நேரத்தில் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்பட்ட கோபிநாத்தும் இறந்து போன செய்தி இடியாக வந்திறங்கியது. இதனால் கடும் ஆத்திரம் அடைந்த தினகரன் ஊழியர்கள், நடுரோட்டில் சாலை மறியலில்உட்கார்ந்தனர். இந்த நிலையில், அலுவலகத்தின் செக்யூரிட்டியான முத்துராமலிங்கம் என்பவரும் தீயில் சிக்கி இறந்துபோனது தெரியவந்தது. இதனால் பதற்றம் பன்மடங்காகக் கூடிப் போனது.
மதுரை தினகரன் அலுவலகத்தில் நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதலைத் தொடர்ந்து, சன் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் கலாநிதிமாறன் மதுரைக்கு விரைந்தார். பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு அவர் ஆறுதல் சொல்லி விட்டு, ‘இந்த கொடூரத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தலா பதினைந்து லட்ச ரூபாய் வழங்கப் படும். கூடவே, அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு சன் நெட்வொர்க்கில் வேலையும் வழங்கப்படும்…’ என்று அறிவித்தார். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஒத்தக்கடை காவல்நிலையத்தில் ‘தினகரன்’ தரப்பில் புகார் செய்யப்பட்டுள்ளது. மு.க.அழகிரி, மேயர் தேன்மொழி, அவரது கணவர் கோபிநாதன், ‘அட்டாக்’ பாண்டியன், கவுன்சிலர் அருண் ஆகியோர் முக்கிய குற்றவாளிகள் என்று புகார்ப் பட்டியலில் சொல்லப்பட்டுள்ளதாம். அதேபோல் டி.எஸ்.பி&யான ராஜாராமனை உடனடியாக சஸ்பெண்ட் செய்யவேண்டும் என்றும் அந்தப் புகாரில் வலியுறுத்தியுள்ளார்களாம். தினகரன் நிறுவனத்தினரின் கோபப் பார்வையில் சிக்கியிருக்கும் மதுரை மாநகர மேயர் தேன்மொழியின் கருத்தைக் கேட்பதற்காக அவருடைய செல்போனுக்குத் தொடர்புகொண்டோம். மேயரின் சார்பாகப் பதிலளித்த அவருடைய கணவர் கோபிநாதன், ‘‘அண்ணன் அழகிரிக்கு எதிராக அந்த நாளிதழில் தவறாக வெளியிடப்பட்ட கருத்துக்களுக்கு எதிராக மேயர் ஜனநாயக முறையில், சாந்தமாகத்தான் ஆர்ப்பாட்டம் செய்தார். ஆனால், இதை அந்தப் பத்திரிகைக்காரர்கள் வேறுமாதிரி திசைதிருப்பி விட் டிருக்கிறார்கள்.
மேயர் பெயரையும் இழுத்துவிட்டால் தங்கள் புகார் வெயிட்டாக இருக்கும் என்ற நோக்கத்தில்தான் இப்படி செய்திருக்கிறார்கள். இதை நாங்கள் ஒரு பிரச்னையாகவே எடுத்துக் கொள்ளவில்லை. முன்ஜாமீனுக்கு எல்லாம் மேயர் முயற்சிக்கவில்லை. வருவது வரட்டும்… பார்க்கலாம்!’’ என்று ஒரே போடாகப் போட்டார். நடந்து முடிந்த வன்முறைகளுக்கு மௌன சாட்சியாக போலீஸ் இருந்திருக்கிறது என பல தரப்பிலிருந்தும் குற்றச் சாட்டுக்கள் எழுந்திருப்பது பற்றி மதுரை கமிஷனர் சுப்ரமணியனிடம் விளக்கம் கேட்டோம். ‘‘அதெல்லாம் தவறான குற்றச்சாட்டுக்கள்…’’ என ஆரம்பித்த கமிஷனர், ‘‘வன்முறையில் ஈடுப் பட்ட குற்றவாளிகளைப் பிடிக்க காவல்துறை அதிகாரிகள் தலைமையில் பல படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ‘இந்த வன்முறைக்குக் காவல்துறையும் உடந்தை, கைகட்டி வேடிக்கைப் பார்த்தோம்’ என்று குற்றம்சாட்டுவது தவறு. டி.ஐ.ஜி&யில் தொடங்கி சாதாரண போலீஸ் ஜீப் டிரைவர் வரை ஸ்பாட்டிலேயே பொறுமையாக் காத்துக் கிடந்து, பாதிக்கப்பட்டவர்களின் பிரச்னைகளைக் கேட்டிருக்கிறோம். ஏதோ உணர்ச்சிவசப்பட்டு சிலர் தவறாகப் பேசுவதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், சகிக்கப் பழகிக்கணும்.
தமிழக அரசின் தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் ஆகியோர் இந்த விஷயத்தை உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே இதற்குமேல் இந்த விஷயத்தில் எதுவும் சொல்வதற் கில்லை’’ என்றார். தினகரன் அலுவலகத்தில் அழகிரி ஆதரவாளர்களின் வன்முறை வெறியாட்டம் ஆரம்பித்த அடுத்த நிமிடத் திலிருந்தே தன் சேனல்கள் மூலம் அழகிரியை மிகக் கடுமை யாக விமர்சிக்கத் துவங்கிவிட்டது சன் டி.வி. தயாநிதி மாறனின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது, கலாநிதி மாறனைக் கண்டித்து கோஷம் போட்டது போன்றவை, மாறன் குடும்பத்தை மிகவும் நோகடித்திருக்கிறதாம். ஆகவே, அழகிரி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதில் அவர்கள் பிடிவாதமாக இருப்பதாகவும் செய்திகள் அடிபடுகின்றன. மொத்தத்தில், இந்த விவகாரத்துக்கு இப்போதைக்கு முற்றுப் புள்ளியில்லை என்றே தெரிகிறது. இதற்கிடையில், இந்த கோரத்துக்கு பலியானவர்கள் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் முதல்வர் நிவாரண நிதியிலிருந்து தலா இரண்டு லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார் முதல்வர் கருணாநிதி. கூடவே, இந்த மொத்த விவகாரத்தையும் சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை செய்வதாகவும் சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறார்.
அதோடு, இந்த சம்பவம் தொடர்பாக ஆறு பேரை மதுரை போலீஸ் கைது செய்திருக்கிறது. மேலும் நான்கு பேர் மேலூர் கோர்ட்டில் சரணடைந்திருக்கிறார்கள். அன்று தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவத்தில் மாணவிகளைக் கொன்ற பாதகர்களுக்கு விசாரணை முடிவில் தூக்குத் தண்டனை கொடுத்தது நீதிமன்றம். இன்று மதுரையில் அப்பாவி பத்திரிகை ஊழியர்களைப் பலியாக்கிய கொடூர கும்பலுக்கும் அதேபோன்ற கடும் தண்டனை கிடைத்தால்தான் சட்டத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும். ‘ஐம்பது உயிர்களாவது பலியாகி இருக்கும்…’ இந்தக் கொடூர தாக்குதல் குறித்து தினகரன் நாளிதழ் ஆசிரியரான ஆர்.எம்.ரமேஷிடம் கேட்டபோது, ‘‘கருத்துக்கணிப்பு வெளியிடுவது என்பது, பத்திரிகையின் உரிமை. நாங்கள் வெளியிட்டிருக்கும் கருத்துக்கணிப்பில் தகவல்களோ கருத்துக்களோ தவறு என்றால், அதனை கருத்துரீதியாகத்தான் எதிர்க்க வேண்டுமே தவிர, ரவுடிகளை ஏவிவிட்டுப் பத்திரிகை களில் பணியாற்றிக் கொண்டிருக்கும் அப்பாவி ஊழியர்களைத் தாக்குவதும், அதிகபட்சமாக உயிர்களைப் பறிப்பதும் கொடுமை யான செயல்!
தினகரன் நாளிதழுக்கு ஏற்பட்ட இந்தக் கொடூரம், உலகில் இனி எந்தவொரு பத்திரிகைக்கும் ஏற்படக்கூடாது. அத்தனை பெரிய கொடூரத்தை நிறைவேற்றி இருக்கிறார் மு.க.அழகிரி. அவரது ஆதரவாளராக இருக்கும் மதுரை மேயர் தேன்மொழி ஒரு பெண். ஆனால், அவரே களத்துக்கு வந்து ரவுடித்தனமாக அராஜகம் செய்திருக்கிறார் என்றால், இந்த அராஜகத்தை எப்படி விவரிப்பது என்றே புரியவில்லை! பெண் என்றால், கொஞ்சமாவது ஈரமும் இரக்கமும் இருக்கும் என்று சொல்வார்கள். ஆனால், தேன்மொழி போன்ற பெண்களுக்கு அதெல்லாம் எப்படி இல்லாமல் போனது என்று தெரியவில்லை! அழகிரி தூண்டுதலின் பேரில் அவரது ஆதரவாளர்கள் என்று சொல்லி, மதுரை தினகரன் அலுவலகத்துக்குள் புகுந்த அடாவடிக்காரர்கள், அங்கிருந்த ஊழியர்களைக் கொடுமையாக அடித்து நொறுக்கியிருக்கிறார்கள்.
இந்த செயலால் உயிர்பயம் ஏற்பட்டு அங்கிருந்தவர்கள் சிதறி ஓடியதில் பலர் கால்&கை உடைந்து சிகிச்சையில் இருக்கிறார்கள். அவர்கள் அப்படி தப்பிக்க முயலவில்லை என்றால், கிட்டதட்ட ஐம்பது பேர்களுக்கும் மேலாக உயிர்பலி நிகழ்ந்திருக்கும். சமீபத்தில் அமெரிக்க வெர்ஜினியா டெக் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கியை எடுத்து தாறுமாறாக சுட்டானே சோ சியாங் ஹூ… அவன் நிகழ்த்திய காட்டுமிராண்டித்தனத்தைவிட உக்கிரமானது இந்தத் தாக்குதல். நான் அரசியலுக்குப் போக விரும்பவில்லை. ஆனால், போலீஸ் அதிகாரிகளைத் தன் கட்டுப் பாட்டுக்குள் வைத்துக்கொண்டு இப்படி அடாவடி செய்து கொண்டிருக்கும் ஒரு நபரை இந்த அரசு எப்படி ஒடுக்கப் போகிறது என்பதுதான் இப்போதைய கேள்வி. இந்த விஷயத்தில் நாங்கள் எங்கள் தரப்பிலிருந்து அழகிரியின் பெயரை குறிப்பிட்டுப் புகார் செய்து, பல மணி நேரம் கடந்த நிலையிலும், போலீஸார் எஃப்.ஐ.ஆர். போடவில்லை! அதுமட்டுமல்ல, சம்பவத்தில் நேரடியாக ஈடுபட்டவர்களை ஆதாரத்தோடு அடையாளம் காட்டியும் அவர்கள் மீது போலீஸ் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆக, தனிமனித சுதந்திரம் என்பது தமிழகத்தில் இல்லை என்பதுதானே அர்த்தமாகிறது? சட்டம்&ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய போலீஸ், தனிமனிதனின் கைகளுக்குள் தஞ்சம் புகுந்து கிடப்பது வேதனை… வெட்கம்! ஒவ்வொரு தனி மனிதனும் சுதந்திரமாக வாழ வழிவகை செய்ய வேண்டியதுதான் ஒவ்வொரு ஜனநாயக அரசின் கடமையும். அதனை செய்ய வேண்டிய அரசும் இந்த விஷயத்தில் கொஞ்சமும் அக்கறையில்லாமல் இருந்து விட்டதுதான் வேதனை.
இந்த விஷயத்தில் முறையான நடவடிக்கை எடுத்து, இந்தப் பாதகத்தை செய்த பாவிகளைத் தண்டிக்கும் வரையில் நாங்கள் ஓயமாட்டோம். முதல்கட்டமாக, தமிழக அரசு இந்தப் பிரச்னையை சி.பி.ஐ. விசாரணைக்கு விடுவதாகச் சொல்லி இருக்கிறது. அது எங்களுக்குக் கிடைத்த வெற்றி. இருந்தாலும், இதுபோன்ற பிரச்னைகள் வேறு எந்த மீடியாவுக்கும் ஏற்படக் கூடாது என்பதுதான் எங்களது எண்ணம். தற்போதைய சம்பவத்தில் ஈடுபட்டவர்களைக் கடுமையாகத் தண்டிப்பதன் மூலம்தான் அது நிறைவேறும்’’ என்றவரிடம், ‘‘கருத்துக்கணிப்பு வெளியிட்டதில் நீங்கள் சில விஷயங்களை மறைத்து வெளியிட்டீர்கள் என்றும், கருணாநிதிக்கு வாரிசு யார் என்ற கேள்விக்கு மக்கள் அளித்த பதிலில் ‘மற்றவர்கள்’ என்று சொல்லி ஒரு தகவலை வெளியிட்டீர்கள் என்றும் சொல்லும் அழகிரி தரப்பு, இதில் உள்நோக்கம் இருப்பதாகவும் சொல்கிறதே…’’ ‘‘முதலில் கருத்துக்கணிப்பை நாங்கள் நடத்தவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
கருத்துக் கணிப்பு செய்வதில் உலக அளவில் புகழ்பெற்ற ஏ.சி.நீல்சன் என்ற அமைப்புதான் கருத்துக்கணிப்பை நடத்திக் கொடுத்தது. ஒவ்வொரு கருத்துக்கணிப்பிலுமே உதிரிகளாக இருக்கும் விஷயங்களை ‘மற்றவை’ என்று குறிப்பிடுவது வாடிக்கைதான். அப்படித்தான் இந்தக் கருத்துக் கணிப்பிலும் ‘மற்றவர்கள்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் எந்த உள்நோக்கமும் இல்லை. அவர்கள் அதனைத் தவறாகப் புரிந்து கொண்டார்கள் என்றால், அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்? மற்றபடி கருத்துக்கணிப்பு தூய்மையான எண்ணத்தோடுதான் வெளியிடப்பட்டது. சரி, கருத்துக் கணிப்பில் முரண்பாடு இருந்தால், ஆட்களைக் கொல்வதுதான் அதற்கு தீர்வா? இதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?’’ என்றார். தீயில் பலியான தினகரன் ஊழியர்கள் கோபிநாத், வினோத்குமார் இருவருமே நெட்வொர்க் இன்ஜினீயர்களாக வேலை பார்த்தவர்கள்.
மதுரை அரசு மருத்துவ மனையில் கிடத்தப்பட்டிருந்த கோபிநாத்தின் உடலைப் பார்த்து ‘‘பதினோறு மணிக்குக் கூடப் பேசினியேடா? உனக்காகத்தானடா சீக்கிரம் சீக்கிரமா சமையலை முடிச்சிட் டிருந்தேன். அதுக்குள்ளே நீ போயே சேர்ந்துட்டேன்னு சேதி வந்துடுச்சே? இனி எப்படா உனக்கு என் கையால சோறு போடுவேன்…?’’ என்று கோபிநாத்தின் தாயார் கதறியது மனதைப் பிசைந்தது.