என்.ஜி.ஓ. அரசியல்
சிரிமாவோ-சாஸ்திரி ஒப்பந்தத்தின்கீழ் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்ட மலையகத் தமிழர் நிலை குறித்து முன் னரே குறிப்பிட்டிருக்கிறேன்.
உதவித் தொகையை இழந்து, பிழைப்பு தேடி அவர்களில் பெரும்பாலானோர் ஊட்டியை சென்றடந்தனர். ஒரு பகுதியினர் கொடைக்கானலில். சுமார் எட்டாயிரம் பேர். வாட்டில் மரத்தை வெட்டும் தொழிலில் அவர்கள் ஈடுபட்டிருந்தனர். வாட்டில் பிசின் தோல் பதனிடுவதற்குப் பயன்படும்.
மலையில் கடுங்குளிரில் அனைத்து வேலைகளையும் செய்யவேண்டும், தங்கள் தேவைகள் அனைத்திற்கும் எஜமானர்களை நம்பியிருக்க வேண்டும். அவர்கள் அமைக்கும் குருவிக்கூண்டுகளில் வாழவேண்டும், அவர்கள் கீழிருந்து எடுத்து வரும் மளிகை சாமான்கள் அல்லது காய்கறிகளை வாங்கிக்கொள்ள வேண்டும், வேலை நேரம், சம்பளம் எல்லாம் அவர்கள் நிர்ணயிப்பதுதான். பல்வேறு ‘வசதி’களுக்காக பிடித்தமும் செய்வார்கள், பாலியல் துன்புறுத்தலும் இருக்கும், எதையும் கண்டுகொள்ளக்கூடாது,
அமெரிக்காவில் கறுப்பின அடிமைகளின் அவல நிலை பற்றி Uncle Tom’s Cabin என்று ஒரு பிரபல நாவல் உண்டு. அதில் காணப்படும் கொடுமைகளில் பாதியை கொடைக்கானல் கூப்புக்களில் (குடிசைகளில்) காணமுடியும்.
சில தொண்டு நிறுவனங்களின் முயற்சியில் 44 குடும்பங்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதாக அன்றைய சப் கலெக்டர் குர்நிஹால்சிங் பிர்சாதா அறிவித்தார். கொத்தடிமைகள் விடுதலைச் சட்டத்தின் கீழ் அவர்களை விடுதலை செய்து, அவர்களுக்கு உதவித்தொகை வழங்கி, அவர்கள் புனர்வாழ்விற்கு தேவையான முயற்சிகளையும் மேற்கொண்டார். 1976 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட அச்சட்டத்தின் கீழ் அத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது அதுவே முதல் தடவை.
ஆனால் நம் நாட்டில் நல்ல காரியங்கள் நடந்துவிடலாமா, மிகச்சிறிய அளவில் என்றாலும்? அவ்வாறு கொத்தடிமைகளாக நடத்திக்கொண்டிருந்த இரண்டு நிறுவனங்களில் ஒன்றான டான் இண்டியா ஒப்பந்ததாரர்கள் எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் செல்வாக்குடன் திகழ்ந்த ஆர்.எம்.வீரப்பனை பிடித்து சப் கலெக்டருக்கு நெருக்கடி கொடுக்கத் துவங்கினர்.
அந்த கட்டத்தில்தான் செய்தி தெரியவந்து கொடைக்கானல் சென்று சம்பந்தப்பட்ட அனைவரையும் சந்தித்து விரிவாக கட்டுரை எழுத, பெரும் பரபரப்பு.
இப்போது நாடறிந்த மனித உரிமை ஆர்வலர் ஹென்றி டிபேன், மற்றும் கிறிஸ்துவ தன்னார்வ நிறுவனங்களும் தலையிட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க, விஷயம் விஸ்வரூபம் எடுத்தது. அப்போது புதிதாக தலைமை நீதிபதியானவர் பி என் பகவதி. அவரும் வி ஆர் கிருஷ்ணய்யரும்தான் பொதுநல வழக்கு தொடுக்கும் முறையினையை உருவாக்கியவர்கள்.
எந்த வழக்கென்றாலும் பாதிக்கப்பட்டவர்கள்தான் பொதுவாக நீதிமன்றங்களை அணுகமுடியும். கொத்தடிமைகள் எங்களுக்கு நிவாரணம் வேண்டும் என அவர்களாகவே வழக்கறிஞர்களை பிடித்து மனு தாக்கல் செய்யவேண்டும். இதெல்லாம் நடக்கிற காரியமா? ஆனால் அப்படித்தான் நடைமுறைகள் இருந்தன.
அந்நிலையை மாற்றி நேரடியாக ஒருவர் பாதிக்கப் படவில்லையாயினும், பொது நலனில் வழக்கு தொடுக்கலாம் என்ற புதிய முறையை அமலுக்கு கொண்டுவந்தனர் பகவதியும், கிருஷ்ணய்யரும். தபால் கார்டில் உச்சநீதி மன்றத்திற்கு எழுதிப் போட்டால் போதும், அதுவே மனுவாக கருதப்பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். நீதிமன்றமே பாதிக்கப்பட்டவர் சார்பாக வாதாட வழக்கறிஞர்களை நியமிக்கும். பல கட்டங்களில் பிரச்னை பற்றி மேலதிக விவரம் திரட்ட ஆர்வலர்கள் / நிபுணர்கள் அடங்கிய குழுவும் அமைக்கப்படும்.
இவ்வாறு இயன்றவரை நீதியை பாதிக்கப்பட்டோரின் குடிசைவாயிலுக்கே எடுத்துச் செல்லும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த பகவதிக்கு நெருக்கமானவர் என் அருமை நண்பரும் மதுரை சோகோ அறக்கட்டளை நிறுவனருமான மகபூப் பாச்சா. அவரும் ஒரு வழக்கு தொடுத்தார். அந்நிலையில் பாச்சா, சப்கலெக்டர் குர் நிஹால் சிங் மற்றும் நான் உட்பட உண்மை அறியும் குழு ஒன்றை உச்சநீதிமன்றம் அமைத்தது.
நாங்கள் பொது விசாரணை நடத்தியும், நேரடியாக சம்பந்தப்பட்ட இடங்களை சுற்றிப் பார்த்தும் அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும். பொதுவிசாரணையின் முதல் அமர்விலேயே குற்றம்சாட்டப்பட்டடான் இண்டியா பெரும் கலாட்டா செய்துவிட்டது. அதற்கு விசுவாசமான பணியாட்கள் தடதடவென்று நுழைந்து, எங்களை கண்டித்துக் கோஷமிட்டனர்.
எங்களுக்கு அதிர்ச்சி பொதுவிசாரணை மூலம் வெளி உலகிற்கு நடக்கும் அக்கிரமங்களை தெரிவிக்கலாம் என நினைத்தால் அவர்கள் கோலத்திற்குள் பாய்ந்து நாங்கள் குற்றவாளிகள் என்ற ஒரு தோற்றத்தை உருவாக்குவதில் வெற்றி பெற்றுவிட்டனர்.
தொடர்ந்து அவர்கள் உச்ச நீதிமன்றம் சென்று குர்நிஹால் சிங் நிறுவனங்களுக்கு எதிராய் நடவடிக்கை எடுத்தவர், நான் கொத்தடிமைகளுக்கு ஆதரவாக, முதலாளிமாரை கண்டித்து கொடைக்கானலில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறேன், இருவரும் பாரபட்சமின்றி பிரச்னையை அணுகுவார்கள் என்பது ஐயமே, எனவே இருவரையும் மாற்றவேண்டும் எனக் கோரினர்.
வேறு வழியின்றி பகவதி என்னை கழற்றிவிட்டார். புதிதாக இருவரை நியமித்தார். சப்கலெக்டர் என்ற முறையில் பிர்சாதா உதவலாம் என உத்தர விட்டார். வழக்கு இழுத்துக்கொண்டே போனது. பிர்சாதாவின் தம்பி ஒருவர் காலிஸ்தானி என்ற குற்றச்சாட்டில் பிர்சாதா வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார். ஆனால் சப் கலெக்டர் அசைந்து கொடுக்கவில்லை.
பின் ஒருகட்டத்தில் அவர் இடம் மாற்றப்பட்டார். ஆனால் ஹென்ரி டிஃபேன், சோகோ பாச்சா விடவில்லை. தொடர்ந்து அழுத்தம் கொடுத்து அடையாளம் காணப்பட்ட 44 குடும்பங்களை சேர்ந்த 157 பேருக்கு நிலங்கள் வழங்கப்பட்டன.
நிலத்துக்கான நீர்ப்பாசன வசதி குறித்து தொடர்ந்து மோதல்களும் பேச்சுவார்த்தையும் நடந்து தற்போது அம்மக்கள் ஓரளவு தற்சார்புடன் வாழ்வதாக கூறுகிறார் பாச்சா.
மிகச் சிறிய அளவிலான வெற்றி அது, 44 குடும்பங்களுக்கு மறுவாழ்வு கிடைத்துவிட்டதால் அச்சமூகமே புத்துயிர் பெற்றுவிட்டது என சொல்ல முடியாது. கொடைக்கானலில் சிக்கிய மற்ற தாயகம் திரும்பிய மலையக தமிழர் நிலை குறித்து தெளிவாக ஏதும் தெரியவில்லை. ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை.
ஆனாலும் ஓரளவு மனநிறைவை கொடுத்தவை கொடைக்கானல் கொத் தடிமைகள் தொடர்பான முயற்சிகள்.
பின்னர் தொண்ணூறுகளில் உதகை வாழ் மலையக தமிழர் பற்றி ஆங்கிலத்தில், Repatriates in Nilgiris – a saga of struggle என்ற சிறிய நூலொன்று எழுதினேன்.
கோத்தகிரியில் மலையக மக்கள் மறுவாழ்வு மன்றமொன்றை அமைத்து அம்மக்களின் உரிமை களுக்காக அயராது பாடுபட்ட சிவலிங்கத்தின் அழைப்பின் பேரில் அங்கு சென்று சில வாரங்கள் தங்கியிருந்து பலரை சந்தித்து, பல்வேறு ஆவணங்களை ஆய்ந்ததன் விளைவே அந்நூல். அதனைப் பற்றி எந்த ஊடகத்திலும் மதிப்புரை வெளியாகவில்லை. பல தலைவர்களுக்கு அனுப்பியும் அவர்களும் கருத்தெதுவும் தெரிவிக்கவில்லை.
நான் முன்னர் குறிப்பிட்டிருப்பது போன்று அங்கே ஆதிக்க சாதியின ராக கருதப்படும் படகர்களே ஏறத்தாழ அனைத்து கட்சிகளிலும் ஆதிக்கம் செலுத்துகின்றனர். மலையகத் தமிழர் என்பதால் அவர்களுக்கு சிறப்புச் சலுகை எங்குமில்லை.
இந்த நேரத்தில் ஒன்றைக் குறிப்பிட்டு சொல்ல வேண்டும். தொடக்கத்திலிருந்தே தன்னார்வக் குழுக்கள், தொண்டு நிறுவனங்களுடன் எனக்கு நெருங்கிய தொடர்பிருந்தது. அவற்றை நிர்வகித்தவர்களில் சிலர் அந்நிறுவனங்களை பயன்படுத்திதத்தம் குடும்பத்திற்கு தொண்டு செய்து கொண்டார்கள். தங்களை வளப்படுத்திக்கொண்டார்கள். அது ஒரு சிறுதொழிலாகவே ஆனது. அந்நிய நிதி பெறுவதற்கு அரசின் அனுமதி வேண்டும், உளவுத்துறையிடம் நல்ல பெயர் வாங்கவேண்டும் என்பதால், மக்களுக்காக போராடுவதாக சொல்லிக்கொண்டாலும் அரசிடம் நல்ல பிள்ளையாக காட்டிக் கொள்ளபடாதபாடுபட்டார்கள். ஓரளவுக்கு மேல் அரசை நேரடியாக எதிர்கொள்வதை தவிர்ப் பார்கள்.
மனித உரிமைகளுக்காக போராடும் நிறுவனங்களை இயக்குவோர் தங்கள் ஊழியர் களிடம் மிக மமதையுடன் நடந்துகொள்வதையும், பாதிக்கப்பட்ட மக்களைக்கூட விரட்டி வேலை வாங்குவதையும் கண்டு நான் மனம் நொந்திருக்கிறேன்.
விஐபிக்களை பயன்படுத்தி நல்ல பெயரெடுத்து வெளிநாடுகளிலிருந்து நன்கொடை பெறவேண்டிய கட்டாயம் இன்னும் சிலருக்கு. இத்தனை பிரச்னைகளுக்கப்பாலும் உண்மை உணர்வோடு செயல்படுபவர்களும் இருக்கிறார்கள்.
தவிரவும் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்வோர்கூட உருப்படியான பல பணிகளை செய்திருக்கின்றனர். ஏற்றுக்கொள்ள முடியாத அம்சங்களை ஒதுக்கிவைத்து, அவர்களுடன் நான் தொடர்ந்து பணியாற்றியிருக்கலாம்தான். அவ்வாறு செய்யமுடியாமல் போனது என் குறைபாடுகளையே சுட்டிக்காட்டுகிறது என்று சொன்னாலும் தவறில்லை.
பேசுவோம்…