ஒரு ஊடகன் கோடு தாண்டுகிறான் – 22

ஊழலில் புதைந்த ஐஏஎஸ்

கொடைக்கானல் கொத்தடிமைகளை விடுவித்த குர்நிஹால் சிங் பிர்சாதா எனக்கு ஒரு கட்டம் வரை நெருக்கமானவராக இருந்தார். சிங்கம் கோடை மலைகளிடையே ராஜ நடை போட்டுச் செல்கிறது, கர்ஜிக்கிறது, தீய சக்திகள் அஞ்சி நடுங்குகின்றன என்றெல்லாம் நான் எழுதிக்கொண்டிருப்பேன்.

31 23-12--15 thiru cartoon

உண்மையிலேயே விடுவிக்கப்பட்டவர்கள் அவரைக் கடவுளாக நினைத்தனர். மேலிடத்தில் கடும் நெருக்கடி கொடுத்தும் சற்றும் மசியவில்லை. அவரை சந்திக்கவந்த தம்பியை காலிஸ்தானி என்று சொல்லி இவரையும் பலியாக்கிவிட அரசு இயந்திரம் முயன்றபோது அவருக்கு ஆதரவாக கட்டுரைகள்.

பிறகு அவர் டெல்லிக்கு மாற்றல் வாங்கிக்கொண்டு சென்றுவிட்டார். நான் தலைநகருக்கு சென்றபோது அவரையும் சந்தித்தேன். அப்போது அவர் நம்ம அருணாசலத்தின் செயலராக பணியாற்றிக் கொண்டிருந்தார்.

அருணாசலம் நீண்ட காலம் மத்திய அமைச்சராக இருந்தவர். அவர் தென்பகுதி தலித். அவர் மீது பல்வகை குற்றச்சாட்டுக்கள் உண்டு. தமாகா செல்வாக்குடன் திகழ்ந்த நேரம். மத்திய அமைச்சரவையில் இருந்து கட்சி விலகியிருந்தது. தேனாம்பேட்டையில் ஏதோ ஓர் ஆலோசனைக் கூட்டம். நாங்கள் வெளியில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தோம். எங்களுடன் அருணாசலமும் இருந்தார்.

அப்போது பரபரப்பு. மூப்பனார் அய்யா வருகிறாராம். அவரை கண்டவுடன் வேகமாக எழுந்து நம் தலித் செயற்பாட்டாளர் வேறொரு பக்கம் ஒதுங்கினார். தலைவருக்கு அப்படி மரியாதை செலுத்துகிறாராம். செய்தியாளர்களை பார்த்து ஏதோ ரெண்டு வார்த்தை சொல்லிவிட்டு நகர்ந்த மூப்பனாரின் கண்கள் அருணாசலத்தைப் பார்த்தவண்ணமே இருந்தன. சரியாக செயல்படுகிறாய் அடிமையே என்று பாராட்டுவது போலிருந்தது.

அருணாசலத்தின் மீது பல புகார்களும் உண்டு. அவரிடம் போயா இவர் உதவியாளராக இருக்கிறார் என்று நொந்துகொண்டேன். நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது, சுற்றிலும் வாட்ட சாட்டமான சீக்கியர்கள், எல்லாம் அவரது உறவினர்கள். என்னை அவர்களுக்கு அறிமுகப்படுத்திய போது அவர்கள் ஏதோ முறைத்தது போல இருந்தது.

அப்போது மேலிருந்த பச்சை விளக்கு எரிய அவசர அவசரமாக அவர் அமைச்சர் அறைக்கு ஓடினார். உடனே அவர்கள் என்னிடம் பாதி ஆங்கிலத்திலும் பாதி இந்தியிலும் கடுமையாக எச்சரித்தனர்: ‘‘நீங்கள் யாரென்று எங்களுக்கு தெரியும். உங்களை போன்ற ஆட்கள்தான் தேவையில்லாமல் ஒழுங்காக அவர் வேலையைப் பார்த்துக் கொண்டு குடும்பத்தைக் கவனித்துக் கொண்டு மேலே மேலே பிரமோஷன் பெற்று செல்ல வேண்டியவருக்கு கீ கொடுத்து தவறான வழியில் சென்று அரசுடன் மோத வைத்திருக்கிறீர்கள். அப்பாடா இங்கு வந்து விட்டார் என்று நாங்கள் நிம்மதியாக இருந்தால் இங்கு வந்தும் தொந்தரவு கொடுக்கிறீர்களே?”

அப்புறம் அங்கே இருக்க எனக்கென்ன பைத்தியமா. குர்நீ வந்தவுடன் அவசர அவசரமாக வாழ்த்து சொல்லிவிட்டு விடைபெற்றுக்கொண்டேன்.

அவரது சரிவு தொடங்கியிருந்தது. பின்னால் ஊழல் வழக்குக்களில் சிக்கி பெயர் நாறியது. சிறையில் அடைக்கப்பட்டார். இப்போது ஐஏஎஸ் பணியிலேயே இல்லை அவர். குடும்பத்தில் ஏகப்பட்ட சிக்கல்கள். ஒரு நல்ல அதிகாரி எப்படியெல்லாம் வீணாய் போகமுடியும் என்பதற்கு குர்நிஹால் சிங் பிர்சாதா ஓர் எடுத்துக்காட்டு.

மாவட்டங்களில் செய்தியாளராக பணியாற்றும் போது ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நமக்கு நன்கு பழக்கமாவார்கள். சென்னையில் குறிப்பிட்ட சிலருடன் தான் தொடர்பு ஏற்படுத்தி கொள்ள முடியும். அதுவும் ஏகப்பட்ட ஏடுகள், செய்தி நிறுவனங்கள், இப்போது தொலைக்காட்சி சேனல்கள் வேறு. எனவே நெருக்கம் ஏற்படும் வாய்ப்பு குறைவு. நான் மதுரையில் ஏற்படுத்திக் கொண்ட தொடர்புகள் நீண்ட காலம் நீடித்தன. குர்நீ போன்ற வீராதிவீரர்கள் எல்லாம் தலைநகர் செல்லும்போது மிக மோசமாக வழி தவறுகின்றனர்.

சசி சேகர் என்று ஓர் அதிகாரி. ஒன்றுபட்ட ராமநாதபுரம் மாவட்டத்தில் துணை ஆட்சியராக இருந்தவர். அப்போது துணிச்சலுக்கு பெயர் போனவர். கீழக்கரை தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் மாணவர்களுடன் மோதல் ஏற்பட, மோதலுக்குக் காரணம் என்று நிர்வாகம் சந்தேகித் தவர்கள் உள்ளங்கையில் ஸ்விட்ச் வைத்து அழுத்தி ஷாக் கொடுத்தனர். அது குறித்து நான் விசாரிக்க சென்ற போது என் பின்னால் மஃப்டியில் போலீசார் தொடருமாறு உத்தரவிட்டு, பின் உண்மைகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுத்தவர் சசி.

நீண்ட நேரம் நாங்கள் பேசிக்கொண்டிருப்போம். தனது ஆட்சித் தலைவரின் பலவீனங்களை சிரித்துக் கொண்டே பட்டியலிடுவார், பெரும் மாற்றத்தை உருவாக்கப்போவதாக பேசுவார். பின்னாளில் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமாகி அவர் மீதும் ஊழல் குற்றச்சாட்டு பதிவாகியது. இவ்வாறு துவக்கத்தில் சூராதி சூரர்களாக தோன்றுவோர் பின்னர் லஞ்ச லாவண்ய அத்துமீறல் ஜோதியில் சங்கமமாகி விடுகின்றனர்.

அரசியல்வாதிகளின் எடுபிடிகளாக முடியும் இந்த அலுவலர்களை உருவாக்க எதற்காக கடுமையான தேர்வுகள், பின் ஏகப்பட்ட பயிற்சிகள்? போதுமான அளவு ஆங்கில அறிவு இருந்தால் போதும் இன்று மாவட்ட ஆட்சியர்களாகவோ மாநில செயலர்களாகவோ பணியாற்ற.

ஹரி பாஸ்கர் ஐஏஎஸ் இவரும் ஜெயலலிதாவின் முக்கிய ஆலோசகரானவர். அவர் ரெவின்யூ துறைக்கு தலைமை ஏற்றிருந்தபோது, 1986ம் ஆண்டு இந்தியாவெங்கும் கடும் வறட்சி, பஞ்சம். தமிழகத் தென் மாவட்டங்களில் வறட்சி நிலை கண்டறிய நிபுணர் குழுவொன்று வழக்கம்போல் டெல்லியிலிருந்து வந்தது. குழுவின் பின்னாலே பத்திரிகையாளர்களும் சென்றோம்.

வறுமை தலைவிரித்தாடியதை வழியெங்கும் காணமுடிந்தது. காய்ந்த வயல்கள், ஒடுங்கிய கன்னங்கள், பரிதாபமாக தங்களைத் தாண்டிச் செல்லும் எண்ணற்ற வாகனங்களை பரிதாபமாக பார்த்த வண்னம் அமர்ந்திருப்பார்கள். ஆனால் வாகனத்தொடர் எங்கும் நிற்கவில்லை. அதற்கென்றுதான் திட்டமிட்டிருப்பார்களே.

சிவகங்கை பயணியர் மாளிகை அடைந்தவுடன், ஹரி பாஸ்கர் அவசர அவசரமாக அங்கிருந்த பொதுத் தொலைபேசிக்கு ஓடினார். தற்செயலாக நான் அங்கு நின்றுகொண்டிருந்தேன்.

அவர் தன் உயர் அதிகாரியிடம் பேசுவதைக் கேட்கமுடிந்தது. ஹரி பாஸ்கர் குரலில் ஒரு குதூகலம். “சார் வெற்றி வெற்றி எல்லாம் சூப்பரா போயிட்டிருக்கு சார்…காலைல நல்ல பிரேக்ஃபாஸ்ட்… வழியில இடைஞ்சல் ஏதுமில்லாமல் வந்து சேர்ந்தோம்… அவர்களிடம் எங்கே போகவேண்டும் யாரிடம் கேட்க வேண்டும் என்று விவரமாக சொல்லிவிட்டேன் சார்… நோ பிராப்ளம்னு சொல்லிட்டாங்க சார்…”

இப்படி நீண்டது உரையாடல். அங்கிருந்து ஏதோ சொன்னதற்கு, ‘சார், சார், சார், எஸ் சார், ஓ அப்டியே செஞ்சிட்றேன் சார்’ என்று பதில்கள்.

வந்திருப்போரை திருப்திப்படுத்துவது அதிக நிதி உதவி பெறுவதென்பது கூட அரசின் திட்டமாக இருக்கக்கூடும். ஆனால் அந்த பயணத்தின்போது வந்திருந்த வல்லுநர்களிடமோ, அழைத்துச் சென்ற அதிகாரிகளிடமோ தத்தளிக்கும் மக்கள் மீது அனுதாபம் கடுகளவும் இருந்ததாக எங்குமே வெளிப்படவில்லை. தாங்கள் இறைத் தூதர்கள், எது செய்தாலும் அது அவர்கள் மனமுவந்து அளிக்கும் வரம், இந்த ரீதியில்தான் அமைந்திருந்தன அவர்கள் நடவடிக்கைகளெல்லாம்.

சர்தார் வல்லபாய் படேல் ஒருமுறை ஐசிஎஸ் (இந்தியன் சிவில் சர்வீஸ்) அதிகாரிகள் பற்றி சொல்லும்போது ‘‘ஜிலீமீஹ் ணீக்ஷீமீ ஸீமீவீtலீமீக்ஷீ மிஸீபீவீணீஸீ ஸீஷீக்ஷீ நீவீஸ்வீறீ ஸீஷீக்ஷீ sமீக்ஷீஸ்வீநீமீ-ஷீக்ஷீவீமீஸீtமீபீ,” (அவர்கள் இந்தியர்களும் இல்லை, மற்றவர்களை மதிப்பவர்களும் இல்லை, சேவை மனம் கொண்டவர்களும் இல்லை) என குறிப்பிட்டார். பிரிட்டன் ஆட்சியில் ஐசிஎஸ் ஆக இருந்தது பின்னர் ஐஏஎஸ் ஆக மாறியது. பெயர் மாறியதே தவிர பெரும்பாலான அதிகாரிகள் மாறவே இல்லை.

ஐஏஎஸ் என்ன, சாதாரண கீழ் மட்ட அதிகாரிகளே மகாராஜாக்கள் போலத்தான் நடந்துகொள்கின்றனர்.

சிவகங்கை மாவட்டம் உருவாக்கப்பட்டிருந்த நேரம். மதுரையிலிருந்துதான் அரசு அலுவலர்கள் பஸ் பிடித்து சிவகங்கை செல்லவேண்டும். ஒரு முறை நானும் அவர்களுடன் செல்ல நேர்ந்தபோது தாங்கமுடியாத நெரிசல். பிதுங்கிக் கொண்டுதான் சென்றோம்.

பஸ் சிவகங்கையை அடைந்தவுடன் என் பக்கத்தில் திணறிக்கொண்டிருந்த ஒருவரிடம் அதிசய மாற்றம். வேகவேகமாக கைக்குட்டையை எடுத்து முகத்தை துடைத்துக் கொண்டார். கையிலிருந்த லெதர் பாக்கிலிருந்து கறுப்புக்கண்ணாடியை எடுத்து மாட்டிக்கொண்டார்.

சுற்று முற்றும் பார்த்தவண்ணம் சில நொடிகள் நின்றார். அப்போது ஓடோடியும் ஒரு முதிய பணியாளர் அவர் அருகே வந்து, கும்பிட்டு அவரிடமிருந்த அந்த லெதர் பாக்கை பெற்றுக்கொண்டு முன்னே செல்ல அதன் பிறகே கறுப்புக் கண்ணாடிக்காரர் நடக்கத் துவங்கினார்.

ஏதோ ஒரு பிரிவுத் தலைவர். அவ்வளவுதான். நாள்தோறும் பஸ்சில் சிக்கித் தவித்து பயணம் செய்பவர். ஆனால் அலுவலகம் என்று வந்தவுடன் ஏகப்பட்ட பந்தா வந்துவிடுகிறது.

பேசுவோம்…

 

You may also like...

2 Responses

  1. Anonymous says:

    துறையூர் தொகுதி 24வது வார்டு ADMK “டிரைவர்” நாகராஜ் வீட்டில் கட்டு கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளது – SAVUKKU .. PLEASE spread the news ASAP.

  2. kalaiselvan says:

    அருமையான பதிவு.இப்போது அவர்களை விட மோசமான கலெக்டர்களை பார்த்துகொண்டிருக்கிறோம்

Leave a Reply

Your email address will not be published.