ஆக்ரமிப்பில் வேதா நிலையம் ?

போயஸ் தோட்டத்தில் உள்ள பெரிய கதவுகள் திறக்கின்றன.   பத்துக்கும் மேற்பட்ட அதிமுக கரை வேட்டி கட்டியவர்கள் நுழைகின்றனர்.   சசிகலா சோகம் ததும்பும் முகத்தோடு அவர்களை வரவேற்கிறார்.  வருகை தந்தவர்களில் பலர் காலில் விழுகின்றனர்.  காலில் விழுவதற்கு எந்த தடையும் சொல்லாமல் சசிகலா அவர்களின் வணக்கத்தை ஏற்றுக்கொள்கிறார்.      ஜெயலலிதாவின் காலில் அதிமுகவினர் விழுகையில் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றிருந்தவரின் காலிலேயே பழக்கத்தை மாற்றாமல் அதிமுகவினர் விழுகின்றனர்.   நபர் மட்டும்தான் மாறியுள்ளார்.    காட்சிகள் மாறவில்லை.    கிட்டத்தட்ட ஒரு மகாராணி தர்பார் நடத்துகையில் தன் பிரஜைகளை சந்தித்து குறைகளைக் கேட்டறிபவர் போல இக்காட்சிகள் அரங்கேறுகின்றன.    ஆனால் தர்பார் நடத்தும் இடம் மகாராணிக்கு சொந்தமானது இல்லை என்பதுதான் கேலிக்கூத்து!

ammajayalalithaa

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த 75 நாட்களும், அவரோடு மருத்துவமனையிலேயே தங்கியிருந்த சசிகலா, அந்த காலகட்டத்தில் ஓரிரு முறை மட்டும் போயஸ் கார்டன் சென்று வந்தார். மற்ற நாட்களில் மருத்துவமனையிலேயேதான்…    ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலாவோடு, மன்னார்குடியின் மொத்த உறவுகளும் தற்போது வேதா நிலையத்தில் குடியேறி உள்ளனர்.

போயஸ் தோட்டத்து வீடு, ஆர்.சரளா என்பவரிடமிருந்து, ஜெயலலிதாவின் தாயார் சந்தியா தேவி மற்றும் ஜெயலலிதா சம பங்குதாரர்களாக இருந்த ‘நாட்டிய கலா நிகேதன்’ என்ற நிறுவனத்தின் பெயரில் வாங்கப்பட்டது.    1971ம் ஆண்டு இறந்த சந்தியா தேவி, தன் மகள் ஜெயலலிதாவின் பெயருக்கு போயஸ் தோட்ட இல்லத்தை 1.11.1971 நாளிட்ட உயிலின் மூலம் எழுதி வைத்தார்.   அதன் பின்னர் தொடர்ந்து ஜெயலலிதா வசம் அந்த வீடு வந்தது.   ஜெயலலிதா அரசியலுக்கு நுழைந்தபின், அதிகாரத்தின் சின்னமாகவே அந்த வீடு மாறிப் போனது.    இப்படிப்பட்ட ஓர் அதிகாரத்தின் பீடத்தில்தான் சசிகலா தற்போது இருந்து வருகிறார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின் அவரது சொத்துக்கள் யாரைச் சேரும் என்ற விவாதங்கள் ஊடகங்களில் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன.    அவர் உயில் எழுதி வைத்துள்ளதாக இது வரை எந்தத் தகவலும் இல்லை.     இந்நிலையில், இந்த சொத்துக்கள் யாரைச் சேரும், சசிகலா போயஸ் தோட்ட இல்லத்தில் குடியிருக்க உரிமை உள்ளதா? என்று சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களிடம் விசாரித்தோம்.    பெயர் குறிப்பிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு விளக்கமாகவே பேசினார் அந்த வழக்கறிஞர்.

“ஜெயலலிதா உயில் எழுதி வைத்துள்ளதாக இதுவரை எந்தத் தகவலும் இல்லை.   அப்படி ஒரு உயில் இருந்தால், இந்த விஷயத்தில் விவாதிப்பதற்கு ஒன்றுமே இல்லை.     சென்னை மாநகரத்தைப் பொருத்தவரை, உயில் இருந்தாலும் கூட, அது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு ‘ப்ரொபேட்’ செய்யப்பட வேண்டும்.  அப்படி செய்யாதவரை அந்த உயிலும் செல்லாது. ப்ரொபேட் செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படுமேயானால், அவ்வாறு செய்யக்கூடாது என்று அந்த சொத்தில் சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்தை அணுகவும் சட்டத்தில் இடமுள்ளது.

இடைத்தேர்தலில் பொதுச் செயலாளரின் சார்பில் கையெழுத்திட வேண்டிய இடத்தில் ஜெயலலிதாவின் விரல் ரேகை வைக்கப்பட்டே படிவம் பூர்த்தி செய்யப்பட்டது.  இப்படிப்பட்ட நிலையில் ஜெயலலிதா ஒரு விரிவான உயில் எழுதியிருப்பார் என்று நம்புவதற்கில்லை.   ஜெயலலிதாவுக்கு குழந்தைகள் இல்லாத பட்சத்தில் அந்த சொத்துக்கள் யாரைச் சேரும் என்ற கேள்வி எழுகிறது.   நேரடி வாரிசுகள் இல்லாத நிலையில், அந்த சொத்துக்கள் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் மற்றும் தீபாவையே சேரும்.

போயஸ் தோட்ட வீடான வேதா நிலையம் ஒரு சாதாரண வீடல்ல.   முன்னாள் முதல்வரின் வீடு.   அதிகாரத்தின் சின்னம்.  அதை மற்ற சொத்துக்களைப் போல ஒரு சாதாரண சொத்தாக பார்க்க முடியாது.  இப்படிப்பட்ட ஒரு சொத்தை ஜெயலலிதாவின் வாரிசுகள் மட்டுமே அனுபவிக்க முடியும்.   ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை, அவரோடு சசிகலாவோ அவரின் உறவினர்களோ தங்கியிருப்பதில் தடையேதும் கிடையாது.  ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அவ்வாறு யாராவது தங்க விரும்பினால் ஒன்று அவர்கள் வாடகைதாரராக இருக்க வேண்டும்.  அல்லது குத்தகைக்கு வீட்டை எடுத்திருக்க வேண்டும்.  இல்லாவிடில் வீட்டின் உரிமையாளரின் அனுமதியோடு குடியிருக்க வேண்டும்.  இவை இல்லாத பட்சத்தில் சட்டவிரோதமாக வேதா நிலையத்தில் குடியிருப்பதாகத்தான் கருத வேண்டும்.

சசிகலா போயஸ் தோட்ட இல்லத்துக்கு எவ்விதமான வாடகையும் தருவதாகத் தெரியவில்லை. ஜெயலலிதா இறந்துவிட்ட நிலையில் அவரின் அனுமதியையும் பெற்றிருக்க இயலாது.  அவர் ஜெயலலிதாவின் தோழி என்ற அந்தஸ்தில் நிச்சயமாக அந்த வீட்டில் குடியிருக்க இயலாது.

தொடர்ந்து அந்த வீட்டில் சசிகலா குடியிருக்க வேண்டுமானால், அந்த சொத்துக்கு சட்டவூர்வமான வாரிசுகளான தீபா மற்றும் தீபக் ஆகியோரின் கூட்டு அனுமதியோடு மட்டுமே போயஸ் தோட்ட வீட்டில் குடியிருக்க முடியும்.   இவ்விருவரில் ஒருவர் அனுமதி மறுத்தாலும் சசிகலா அங்கே இருக்க முடியாது.

தீபக் தற்போது மன்னார்குடி வகையறாக்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அவரின் அனுமதியை மட்டும் பெற்றால் போதுமா என்றால் அது போதாது.  ஏனெனில், அந்த வீடு, பாகப்பிரிவினை செய்யப்படவில்லை.   பாகப்பிரிவினை செய்யப்பட்டால்தான் எந்த பகுதி தீபாவுக்கும், எந்த பகுதி தீபக்குக்கும் என்பது தெரியும்.  அது முடிவாகாத வரையில், இருவரில் ஒருவரின் அனுமதி கிடைக்காவிட்டால் கூட சசிகலா வீட்டை காலி செய்ய வேண்டும்.

dc-cover-j333h6ma31hl4r76cvuhfbjjl5-20161215080619-medi

சட்டரீதியாக தற்போது தீபா வீட்டை காலி செய்யுங்கள் என்று சசிகலா குடும்பத்தினருக்கு எதிரான நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியும்.   இதுவரை ஜெயலலிதா அனுமதியோடு குடியிருந்தீர்கள்.  ஜெயலலிதா இறந்து விட்ட காரணத்தால் அவரின் அனுமதி தற்போது கிடையாது. ஆகையால் வீட்டை காலி செய்யுங்கள் என்று உரிமையியல் நீதிமன்றத்தில் தீபா வழக்கு தொடுக்க முடியும்.    அப்படி வழக்கு தொடர்ந்தால், தீர்ப்பு தீபாவுக்கு சாதகமாகவே அமையும்.” என்றார் அந்த வழக்கறிஞர்.

தீபா தரப்பில் அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பது என்று வழக்கறிஞர்களோடு ஆலோசனையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரு சாதாரண வீட்டுக்கே இத்தனை சட்டச் சிக்கல்கள் உள்ள நிலையில், லட்சக்கணக்கான தொண்டர்கள் உள்ள ஒரு கட்சியின் பொதுச் செயலாளராக ஜெயலலிதாவுக்கு உரிமை உள்ளது என்பதற்கான அடிப்படையாக ஒரு நிதி நிறுவனத்தில் செய்த முதலீட்டில் நாமினி என்று சசிகலா பெயர் குறிப்பிட்டிருக்கும் ஆவணத்தை முன்னாள் அமைச்சர் பொன்னையன் காண்பிப்பது நகைப்புக்கு உரியது. அதுவும் 1991ம் ஆண்டு கையெழுத்திட்டதை காட்டுகிறார். அதன் பின்னர் இரண்டு முறை சசிகலா போயஸ் கார்டன் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். அதோடு நாமினி என்பது அந்த குறிப்பிட்ட சொத்துக்கு மட்டும்தான். ஒருவேளை பணத்துக்கு உரிமையாளர் இறந்துவிட்டால், அந்த பணத்தை குடும்பத்தினருக்கு வாங்கி கொடுக்க வேண்டுமே தவிர அவர் எடுத்துச் செல்ல சட்டத்தில் இடமில்லை என்கின்றனர் வழக்கறிஞர்கள்.

சொத்துக்கு சொந்தக்காரர் ரோட்டில், சம்பந்தம் இல்லாதோர் வீட்டில் என்ற நிலைமையில், வீடு யாருக்கு சொந்தமாகப் போகிறது என்பதை காலம்தான் முடிவு செய்யும்.

நன்றி

நம்ம அடையாளம்

You may also like...

7 Responses

 1. prabakaran says:

  really nice information. thank you

 2. வின் says:

  “ஒரு சாதாரண வீட்டுக்கே இத்தனை சட்டச் சிக்கல்கள் உள்ள நிலையில், லட்சக்கணக்கான தொண்டர்கள் உள்ள ஒரு கட்சியின் பொதுச் செயலாளராக ஜெயலலிதாவுக்கு உரிமை உள்ளது”

  சசிகலாவுக்கு பதில் ஜெயலலிதா என தவறாக அச்சாகி உள்ளதா…??

 3. shankar says:

  Our laws, legislation are not properly formulated to take the unwilled property or the property which does not have an official Legal Heir so far. If there is one which I am no aware, then I need to be corrected. Hoever ,it has to e corrected
  How shameful it is, a Person occupiying anohtr person

 4. மன்னைமைனர் says:

  போயஸ் தோட்டத்தை விட்டு அண்ணா சமாதிக்கு போன கூட, யாராச்சும் ஆக்கிரமிச்சுடுவாங்கன்னு பயம் இருக்கு. அதுனால ஒன்னுக்கும் போறதில்லை. இடத்தைவிட்டு அசைஞ்சா சொத்து போயிடும்; எல்லாமும் போயிடும். (இப்படி ஆக்கிரமிச்சு சேர்த்த சொத்துக்கள் ஏராளம்).

 5. thangamani says:

  We expect more articles savukku

 6. அருண் says:

  Nice message thank you

 7. Venkat says:

  தெளிவான தலையங்கம் நன்றி.

Leave a Reply

Your email address will not be published.