விடுதலை. இந்த வார்த்தையை வெள்ளியன்று நீதிபதி உரைத்தபோது ஏற்பட்ட மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. எட்டு ஆண்டு போராட்டம். 2008ம் ஆண்டு ஜுலை மாதம் நிகழ்ந்த அந்த கைது, எளிமையான அரசு ஊழியராக வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்த எனது வாழ்வை புரட்டிப் போட்டது.
1991ம் ஆண்டு முதல் லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். 16 வயதில் வேலைக்கு சேர்ந்தேன். ஏறக்குறைய லஞ்ச ஒழிப்புத் துறையில்தான் வளர்ந்தேன். இளம்பருவத்திலேயே கிடைத்த அரசுப் பணி, கை நிறைய கிடைத்த சம்பளம் ஆகியவை என்னை வேறு ஒரு திசையில் செலுத்தியிருக்கலாம். ஆனால், அரசு ஊழியர் சங்கமும், இடது சாரி இயக்கமும் என்னை தன்பால் இழுத்தன. பெற்ற ஊதியத்தில் பெரும் பகுதியை ஜெயகாந்தன் உள்ளிட்ட முக்கிய எழுத்தாளர்களின் எழுத்துக்களை வாங்கவே செலவிட்டேன். அந்த நூல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான தாக்கத்தை என்னுள் ஏற்படுத்தின.
1996ம் ஆண்டு. திமுக அரசு, ஜெயலலிதா என்ற ஊழல் பேயின் ஆட்சியை விரட்டி பதவியேற்றது. அது வரை தூங்கி வழிந்து கொண்டிருந்த லஞ்ச ஒழிப்புத் துறை ஒரே நாளில் பரபரப்பானது. இன்று திமுகவில் இருக்கும் டிஎம்.செல்வகணபதிதான் லஞ்ச ஒழிப்புத் துறையால் முதல் முறையாக கைது செய்யப்பட்ட நபர். அதிகாலை 5 மணிக்கு, ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த செல்வகணபதியை, கொடைக்கானல் ப்ளசென்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் கைது செய்ய காவல்துறை அதிகாரிகளோடு, ரயில் நிலையம் சென்றது இன்னும் மறக்க முடியாத அனுபவம். அதன் பிறகு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ஓய்வே இல்லை எனலாம். ஜெயலலிதா மீது பல்வேறு வழக்குகள். அவர் அமைச்சரவை சகாக்கள் மீது பல்வேறு வழக்குகள். இவற்றை விரைவாக முடிக்க வேண்டும் என்று அரசு தரப்பில் இருந்து அழுத்தம்.
இரவு பகலாக பணியாற்ற வேண்டிய நெருக்கடி இருந்தாலும், ஊழல் பேர்வழிகளை சிறையில் தள்ள உழைக்கிறோம் என்ற பெருமிதமும், ஆர்வமும் இருந்ததால், பல நாட்கள் இரவு முழுக்க உழைக்க முடிந்தது. பெரிய அளவில் அரசியல் புரிதல் இல்லாமல் இருந்த காலம். இந்தியாவில் கம்யூனிச புரட்சி நிகழ்ந்து பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் வெகு விரைவில் அதிகாரத்தை கைப்பற்றப் போகிறது என்று எண்ணிக் கொண்டிருந்த காலம் அது. அதனால் ஜெயலலிதா என்ற ஊழலின் மொத்த உருவம் இனி அரியணை ஏறாது என்று நம்பியிருந்த காலம் அது. 1998ம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதா 18 எம்பி சீட்டுகளை பெற்று வெற்றி பெற்றார். அது பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும், சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற மாட்டார் என்று நம்பினேன். 2001 தேர்தலில், ஜெயலலிதா பெருமளவில் புகார்கள் இல்லாத திமுகவை அடியோடு தோற்கடித்து அமோக வெற்றி பெற்றார்.
அது வரை பெருமிதத்தோடு பணியாற்றிக் கொண்டிருந்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் பச்சை நிற உடையணிந்து ஜெயலலிதா காலில் விழுவதைத் தவிர்த்து மற்ற அனைத்து வகையிலும் தங்களை ஜெயலலிதாவின் அடிமை என்பதை நிரூபிக்கும் வகையில் பணியாற்றினர். திமுக ஆட்சியில் பதிவு செய்யப்பட்ட ஊழல் வழக்குகளில், இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படாத அத்தனை வழக்குகளும் ஒரே நாளில் ஊற்றி மூடப்பட்டன. 1996 ஆண்டு முதல், இரவு பகலாக இந்த வழக்குகளுக்காக பணியாற்றிய எனக்கு இந்த சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
அதிகாரிகள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு ஜெயலலிதா மற்றும் அவர் அமைச்சரவை சகாக்கள் மீதான வழக்குகள் ஊற்றி மூடி, ஜெயலலிதாவிடம் நற்பெயர் பெறுவதற்கு முண்டியடித்தனர். படித்த அதிகாரிகள் தங்கள் முதுகெலும்பை கழற்றி வைத்து விட்டு, அடிமை வேடம் போட்டது தாங்க முடியாத அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரசியல்வாதிகளை விட, மிக மிக மோசமானவர்கள் இந்த படித்த அதிகாரிகள் என்ற உண்மை புலப்பட்டது. ஜெயலலிதா மீதான வழக்குகளை கையாண்டு, அவற்றை மூட உத்தரவிட்டு விட்டு, ஜெயலலிதாவின் பரிந்துரையிலேயே, உரிய மதிப்பெண்கள் பெறாத தங்கள் பிள்ளைகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் சீட் பெற்ற அதிகாரிகளின் விபரம் கிடைக்கப்பெற்றது.
ஊழலை எப்படி ஒழிக்க வேண்டும் என்று ஊடகங்களில் பேசி உத்தமர் வேடம் போட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் கே.ராதாகிருஷ்ணன் மற்றும் நரேந்திர பால் சிங் ஆகிய இருவரும் இத்தகைய அயோக்கியத்தனங்களை அரங்கேற்றி இருக்கிறார்கள் என்பது தெரிய வந்தது. இந்தத் தகவல் பரவலாக தெரிய வந்தாலும் இது குறித்து நடவடிக்கை எடுப்பதற்கு ஒருவர் கூட முன் வரவில்லை என்பதும் தெரிந்தது. அரசுப் பணியில் இருப்பதால், நண்பர் மூலமாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பம் அளித்து, இது குறித்து தகவல்களை 2006ம் ஆண்டு ஜனவரி முதல் சேகரிக்கத் தொடங்கினேன். இதற்குள் திமுக ஆட்சி வந்தது.
அதிமுகவின் ஆட்சியை விட மோசமான ஆட்சியாக 2006 திமுக ஆட்சி இருந்தது. இது வரை திமுக வரலாற்றிலேயே இல்லாத வகையில், ஒரே ஒரு அதிகாரியின் வசம் அனைத்து அதிகாரங்களும் ஒப்படைக்கப்பட்டன. அந்த அதிகாரியின் பெயர் ஜாபர் சேட். முதன் முறையாக தமிழகத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள், அரசியல் பிரமுகர்கள், சில நீதிபதிகள் என்று அனைவரின் தொலைபேசிகளும் சட்டவிரோதமாக ஒட்டு கேட்கப்பட்ட புகார் எழுந்தது. இந்த ஒட்டுக் கேட்புக்கு முழுமுதல் காரணம் ஜாபர் சேட் மட்டுமே என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் யாராலும் சர்வ அதிகாரம் பொருந்திய ஜாபர் சேட்டை எதிர்ப்பதல்ல, எதிர்ப்பது குறித்து நினைத்தே பார்க்க முடியாத ஒரு சூழல் அன்று தமிழகத்தில் நிலவியது.
இந்த நிலையில்தான் 14.04.2008 அன்று டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழ், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் திரிபாதி மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் உபாத்யாய் ஆகிய இருவருக்கும் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடலின் சாரத்தை வெளியிட்டது. அந்த உரையாடல் வெளியான சில மணி நேரங்களுக்குள், அப்படி ஒரு உரையாடலே நடைபெறவில்லை என்று தமிழக அரசு மறுப்பு வெளியிட்டது. அன்று இரவு ஜெயா மற்றும் மக்கள் தொலைக்காட்சியில் அந்த உரையாடலே வெளியிடப்பட்டது. இந்த உரையாடல் விவகாரம், தமிழக சட்டசபையில் பெரும் அமளியை கிளப்பியது. உடனடியாக ஒரு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்து கருணாநிதி உத்தரவிட்டார். அந்த விசாரணை ஆணையத்தால் நான் அழைக்கப்பட்டேன். விசாரிக்கப்பட்டேன். அந்த விசாரணை ஆணையம், ஒரு சில தினங்களில் மற்றொரு உரையாடலை வெளியிட்ட டாக்டர் சுப்ரமணியம் சுவாமிக்கு அந்த உரையாடல் எப்படி கிடைத்தது என்பதை விசாரிக்க மறுத்தது. கருணாநிதியின் விருப்பத்திற்கேற்ப தன் விசாரணையை நடத்தினார் நீதிபதி சண்முகம்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், ஐபிஎஸ் அதிகாரிகள் குறித்து நான் சேகரித்த தகவல்கள் குறித்த விபரங்கள் அந்த ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டது. இந்த ஊழல் குறித்து தகவல் வெளியிடுவதற்காக நான் பத்திரிக்கையாளர்களோடு பேசியதன் அடிப்படையில், உரையாடல் வெளியிடப்படுவதற்கு நான்தான் காரணம் என்று அந்த ஆணையம் முடிவு செய்தது. அந்த பரிந்துரையின் அடிப்படையில் 17.07.2008 அன்று நான் கைது செய்யப்பட்டேன். அதற்கு முன்பே, விசாரணை ஆணையத்தின் காவல்துறை அதிகாரிகள் என்னை விசாரித்தார்கள். ஆனால் அவர்கள் மிகவும் பண்பான முறையில் நடந்து கொண்டார்கள்.
18 ஆண்டுகள் காவல்துறையில் பணியாற்றிய நான் மரியாதையாகத்தான் நடத்தப்படுவேன் என்று நம்பினேன். ஆனால் சிபி சிஐடி போலீசார் மிருகங்கள் போல் நடந்து கொண்டார்கள். சிபி சிஐடி டிஎஸ்பி பாலு, ஆய்வாளர்கள் வேல்முருகன் மற்றும் சரவணகுமார் ஆகியோர் மிருகங்களை விட கேவலமாக நடந்து கொண்டார்கள்.
லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்திலேயே வைத்து கைது செய்யப்பட்டு இரவு ஏழு மணியளவில் சோதனை நடத்துவதற்காக வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். வீட்டில் எனது அறையில் கதவை சாத்தியபின், கடுமையாக தாக்கப்பட்டேன். நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்குதல் தொடர்ந்தது. உண்மையை சொல்ல வேண்டும் என்று தொடர்ந்து தாக்கச் சொன்னேன். கடைசி வரை என்ன உண்மையை சொல்லவேண்டும் என்பதை அவர்களும் விளக்கவில்லை. மீண்டும் சிபிசிஐடி அலுவலகம் அழைத்துச் செல்லப்படுகையில், வடபழனி சிக்னல் அருகே நிறுத்தி ஓட விட்டு சுட்டுவிடுவேன் என்று மிரட்டினர். சைபர் கிரைம் பிரிவில் பணியாற்றுபவர்களுக்கு துப்பாக்கி வழங்கப்படுவதில்லை என்பதை 18 ஆண்டுகள் காவல்துறையில் பணியாற்றிய எனக்கு தெரியாதா என்ன ? ஆனால் அவர்கள் மிரட்டல்கள் தொடர்ந்தபடியே இருந்தன.
மீண்டும் சிபி.சிஐடி அலுவலகம் சென்றதும் அடி நிற்கும் என்று பார்த்தால் மீண்டும் புது உத்வேகத்தோடு தாக்குதல் தொடர்ந்தது. விடியற்காலை 4 மணி வரை சித்திரவதை தொடர்ந்தது. அவர்கள் கேட்டதெல்லாம் உனக்கு பின்னால் உள்ள காவல்துறை அதிகாரிகள் யார் என்பதே. அப்போதைய உளவுத்துறை தலைவர் ஜாபர் சேட்டுக்கு நெருக்கடி கொடுத்த ஒரு சில அதிகாரிகளை இந்த வழக்கில் சிக்கவைத்து, அவர்கள் வீட்டில் சோதனை நடத்தப் போடப்பட்ட திட்டமே இது. கடைசி வரை எந்த அதிகாரியின் பெயரும் கிடைக்காததால் சோர்ந்து போனார்கள்.
காலை நாலு மணிக்கு டிஎஸ்பி பாலு இந்த XXXXX பையனுக்கு போலீஸ் டிபார்ட்மென்டுல வேலை பாத்து பாத்து, போலீஸ்னா பயமே போயிடுச்சு என்று கடுமையான மனச்சோர்வு அடைந்து வெளியேறினார். பிறகு கை மற்றும் காலில் விலங்கு மாட்டி, அருகில் இருந்த டேபிளோடு பிணைத்து ஏசி இயந்திரம் அருகே படுக்க வைத்தனர்.
மறுநாள் மதியம் வழக்கறிஞர்கள் வந்ததும் திடீரென்று மரியாதை கூடியது. விலங்குகளை அவிழ்த்து விட்டனர். மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றனர். வழக்கறிஞர்கள் நடந்த தாக்குதல் அனைத்தையும் நீதிபதி முன்பு கூறச் சொல்லி அறிவுறுத்தினர். அதன்படியே எழும்பூர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டபோது, நீதிபதி முன்பும், பத்திரிக்கையாளர்கள் முன்பும் அனைத்தையும் கூறினேன். நீதிபதியும் பதிவு செய்தார். ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
புழல் சிறையில் இரண்டு மாதம். இரண்டு மாதம் கழித்து வழக்கறிஞர்களின் உதவியோடு ஜாமீனில் வெளிவந்தேன்.
அதன் பிறகு வழக்கு விசாரணை தொடர்ந்தது. விசாரணையின் இறுதியில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. லஞ்ச ஒழிப்புத் துறையில் இருந்து பணி இடைநீக்கம் செய்யப்பட்டேன். பரபரப்பாக பணியாற்றிக் கொண்டிருந்து விட்டு, பணி இடைநீக்கம் செய்யப்பட்டதும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. அந்த நேரத்தை வழக்கறிஞர்களுக்கு உதவி செய்வதென்று தொடங்கி, பல்வேறு என்கவுன்டர்கள் மற்றும் ஊழல்களுக்கு எதிரான வழக்குகள் ஆகியவற்றை பொது நல வழக்காக தொடுக்க முடிந்தது.
சவுக்கு என்ற ஒரு இணையதளத்தை தொடங்கி பல்வேறு போராட்டங்களுக்கு இடையே வெற்றிகரமாக நடத்த முடிந்துள்ளது. பலரால் கவனிக்கப்பட்டுள்ளோம்.
எட்டு ஆண்டுகள் கடந்தன. திமுக ஆட்சி முடிந்து 2011ல் அதிமுக ஆட்சி வந்ததும் விடிவு பிறக்கும் என்று நம்பினேன். திமுக தொடர்ந்த வழக்கு என்பதால் வழக்கை வாபஸ் பெறுவதற்கு கருத்துரு அனுப்பப்பட்டது. ஜெயலலிதா அரசின் நடவடிக்கைகளை விமர்சித்து சவுக்கில் கட்டுரை எழுதியதால் அது நிராகரிக்கப்பட்டு, முன்னை விடவும் அதிகமான வேகத்தோடு வழக்கு விசாரணை நடத்தப்பட்டது. ‘அம்மாவுக்கு எதிராவே எழுதறான் சார்’ என்று அதிமுகவினரும், அதிமுக சார்பு அதிகாரிகளும் விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணையின் இறுதியில் வெள்ளியன்று, நிரபராதி என்று கூறி நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
நீதிமன்றத்தில் வழக்கை சந்தித்து விடுதலை பெறுவது ஒரு புறம் என்றால், வழக்கு முடியும்வரை, நீதிமன்றத்தில் காத்திருப்பது ஒரு கொடுமையான விஷயம். உங்கள் நேரத்தில் பெரும்பாலான பகுதியை நீதிமன்றங்கள் எடுத்துக் கொள்ளும். ஒரு நாள் செல்லத் தவறினால் பிடி வாரண்ட் பிறப்பிக்கப்படும். அந்த பிடி வாரண்டை ரத்து செய்கையில், காலை முதல் மாலை வரை நீதிமன்றத்தின் தரையில் அமரச் சொல்வார்கள். நீதிபதிகளை பொருத்தவரை, நீங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்பு வழக்கில் கைதானீர்களா, அல்லது பிக்பாக்கெட் வழக்கில் கைதானீர்களா என்ற பாகுபாடெல்லாம் கிடையாது.
எட்டு ஆண்டுகள் கழித்து விடுதலை என்ற வார்த்தையை கேட்டபோது, பெரும் நிம்மதி உணர்வு ஏற்பட்டது. இந்த விடுதலையை உறுதி செய்தவர்கள் ஏராளமானோர். பத்திரிக்கையாளர்கள், காவல்துறை அதிகாரிகள், நண்பர்கள் ஆகியோர் இந்த காலகட்டத்தில் செய்த உதவி மறக்க முடியாதது. அவர்கள் தங்கள் பெயர் வெளியிடப்படுவதை விரும்ப மாட்டார்கள்.
இந்த காலகட்டத்தில் குடும்பத்தினர் வழங்கிய ஆதரவு என்பது மறக்க முடியாதது. உனக்கு ஏன் இந்த வேலை, எதற்கு இந்த வம்பு என்றெல்லாம் ஒரு நாளும் கேட்டதில்லை. நேர்மையான விவகாரத்திற்காக சிறை சென்றுள்ளாய். இதை துணிச்சலோடு எதிர் கொள்ள வேண்டும் என்று ஊக்கம் அளித்தே வந்தார்கள்.
என்னுடைய இந்த வெற்றியில் வழக்கறிஞர்களின் பங்கு மகத்தானது. வழக்கறிஞர்கள் புகழேந்தி, கல்யாணி, இளவரசன், ராதாகிருஷ்ணன், ராஜாசெந்தூர் பாண்டியன் ஆகியோர் பல்வேறு நெருக்கடியான தருணங்களில் பெரும் உதவி புரிந்தனர்.
குறிப்பாக வழக்கறிஞர் என்.ரமேஷ்.இணைப்பு ஒரு மிக மிக நெருக்கடியான நேரத்தில் என் மீதான வழக்குகளை ஏற்றுக் கொண்டார். வழக்கு ஒரு முக்கிய கட்டத்தை எட்டியிருந்த நாளில் வழக்குப் பொறுப்பை ஏற்றார். குறுகிய காலத்தில், வழக்கை முழுமையாக ஆராய்ந்து, அதன் நுணுக்கங்களை புரிந்து கொண்டு, நீதிபதி முன்பு மிகத் திறமையாக வாதாடினார். சாட்சிகளை திறமையாக குறுக்கு விசாரணை செய்தார். இந்த வெற்றியின் பெரும் பகுதி திரு ரமேஷ் அவர்களையே சாரும். தீர்ப்பு நாள் நெருங்க நெருங்க, என்னை விட மிக பதட்டமாக இருந்தார். மனம் சோர்வடையும்போதெல்லாம், அச்சப்பட வேண்டாம் என்று ஊக்கப்படுத்தினார். இதர வழக்கறிஞர்கள் தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று கூறியபோதெல்லாம், நீங்கள் விடுதலை செய்யப்படப் போகிறீர்கள் என்று உறுதியாக கூறினார். உங்கள் வழக்கில் துளியும் ஆதாரங்கள் இல்லை நிச்சம் விடுதலை என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அவர் சொல்லியபடியே விடுதலை செய்யப்பட்டது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் சிக்காமல் இருந்திருந்தால், ஒரு அரசு ஊழியராக கை நிறைய சம்பளத்துடன் நிம்மதியாக இருந்திருக்க முடியும். தற்போது மனதில் இது குறித்து என்ன எண்ணங்கள் ஏற்படுகின்றன. நடந்த சம்பவங்களுக்காக வருந்துகிறேனா… அமைதியாக இருந்திருக்கலாம் என்று எண்ணுகிறேனா என்றால் நிச்சயமாக இல்லை.
ஒரு சாதாரண குமாஸ்தாவாக முடிந்திருக்க வேண்டிய வாழ்க்கை மாற்றுப் பாதையில் சென்றது மகிழ்ச்சியே. காவல்துறை சித்திரவதைகள், சட்ட அறிவு, நீதிமன்ற நடைமுறைகள், வழக்கு நடத்தும் விதம் ஆகியவை குறித்து அறிவு விசாலமாகியுள்ளது.
இன்று பல்லாயிரக் கணக்கானோரின் அறிமுகம். பலரின் அன்பு மற்றும் வாழ்த்துக்கள். சவுக்கு என்ற ஒரு இணையதளத்தை வெற்றிகரமாக நடத்த முடிந்துள்ளது. ஒரு மாற்று ஊடகத்தை வெற்றிகரமாக நடத்த முடியும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. பல்வேறு ஊழல்களை வெளிக்கொணர முடிந்துள்ளது. சமூகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடிந்துள்ளது. பலரின் நட்பு கிடைத்துள்ளது. ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த எட்டு ஆண்டுகளில் பல சமயங்களில் மனத்தளர்ச்சி ஏற்பட்டது உண்மையே. ஆனால் அந்த சமயங்களில் கைதூக்கி விட்டு உதவ ஏராளமான நண்பர்கள் இருந்தனர். அவர்களின் ஊக்கத்தாலும், உதவியாலுமே நிலைநிற்க முடிந்தது.
இந்த அங்கீகாரத்தை கவனத்தோடு ஏற்று, தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்பதுதான் தற்போதைய எண்ணம். மன நிறைவோடு இதை எழுதுகிறேன்.
இத்தனை ஆண்டுகாலம் ஆதரவளித்த அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். உங்களின் அன்பும் ஆதரவுமே என்னை தொடர்ந்து செயலாற்ற வைத்துள்ளது.
கோடானு கோடி நன்றிகள்.
My wishes and Regards,All the very best..happy to have been in contact with you..
After a long time my eyes are watery, a brave work, a real personality, an inspiration, a real hero who deserves more than money. U r great u are an good example to live the life of an honest man. You are the example of the common man rage. We are with u no matter what.
I was saddened to hear that these things happen to a person who was part of government machinery. Even more saddened thinking about common people who are against the establishment or against powerful people. Best wishes to carry out the good work you are able to do post that. Hats off to Sir.
வாழ்த்துக்கள் சகோதரரே. அநீதிக்கு எதிராக கரம் சேர்ப்பதில் நாங்களும் உள்ளோம் என்பதில் எங்களுக்கு பெருமையே. ஊடக தர்மம் என்றால் என்ன என்று கேட்கும் நம் திருநாட்டில் ஊடகத்தால் எதையும் சாதிக்கலாம் என்று உத்வேகம் அளிக்கும் உங்கள் கட்டுரைகளை அதிகம் படித்து தெரிந்து கொண்டேன். திமுக சாதிக் பாட்சா விஷயம், ஜக்கி வாசுதேவ் விஷயம் என்று வெளி உலகுக்கு தெரியும் முன்னே அதை பற்றிய முழு விபரத்தையும் முழு ஆதரத்தோடு விளக்கி எழுதிய பதிவுகள் உங்களின் நேர்மையயும், அதற்கான மெனக்கடலையும் சொல்லியது. திரை மறைவு வாழ்க்கை, எத்துனை எத்துனை வழக்குகள், இணையதளம் நடத்துவதற்கு நீதிபதிகளிடம் இருந்தே வந்த மிரட்டல்கள் என்று பல விஷயங்கலை சந்தித்து சாதித்து இருக்கிறீர்கள்.
மீண்டும் சவுக்கை சுழற்ற வாழ்த்துக்கள்
அபு நிஹான்
வாழ்த்துக்கள் சவுக்குuuuu…. தொடரட்டும் சமூக பணி…
At last you are declared as an Innocent. Delayed Justice. Keep up the good job.
Shankar
Valthukkal …. Valkaiye poraatam
You are the best. Tamil Assange…
Vallthulal savukku
Kadumyna muyrchi vetri . Valka. Valka.
வாழ்த்துக்கள் தோழர். மனித நேய போராட்டத்தை தொடர எனது வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன்
மனோகரன்
வாழ்த்துக்கள்