காவியத் தலைவன்.

karuna

தன் வாய் வீச்சால் மட்டுமே கோடிக்கணக்கான தமிழர்களை கட்டுப்படுத்தியிருந்த ஒரு மனிதன் கடந்த மூன்று மாதங்களுக்கு  மேலாக அமைதியாகியிருக்கிறான்.  தமிழகத்தில் அரசியல் என்ற பெயரில் நடந்து வரும் அவலங்களை பார்க்கச் சகியாமலோ என்னவோ, நீண்ட மவுனத்தை கடைபிடித்து வருகிறான். “என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புக்களே” என்ற அந்த கரகரத்த குரலை தமிழக மக்கள் மூன்று மாதங்களுக்கு மேலாக கேட்கவில்லை.

கருணாநிதி மேலாண்மை கல்லூரிகளில் படித்ததில்லை.   செல்வந்தர்கள் செல்லும் வெளிநாட்டுக் கல்லூரிகளில் நிர்வாகம் பயின்றதில்லை. முழுமையான கல்விப் படிப்பை முடித்ததில்லை. ஆனால் தமிழகத்தின் தலைச்சிறந்த நிர்வாகி, மிகச் சிறந்த தலைவர் என்று அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறார்.

தன் பதினாலாவது வயதில் அரசியலில் நுழைந்த கருணாநிதி இன்று வரை அரசியலை மட்டுமே சுவாசித்து வருகிறார். அவர் பேச்சு, எழுத்து, பார்வை, மூச்சு என்று அனைத்துமே அரசியல் மட்டும்தான். நாடகத்திலிருந்து திரைப்படக் கலை வளர்ந்து வந்த காலகட்டத்தில் வசனங்கள் மட்டுமே திரைப்படத்தின் முக்கிய அங்கமாக இருந்தது.  வசனங்களின் அடிப்படையிலேயே திரைப்படங்களின் தரம் நிர்ணயிக்கப்படும்.   அந்த காலகட்டத்தில்தான் தன் வசனங்களால் தமிழகத்தையே தன் பக்கம் ஈர்த்தார் கருணாநிதி.  ராஜகுமாரியாகட்டும், மந்திரி குமாரியாகட்டும், பராசக்தியாகட்டும், அவர் வசனங்களுக்காகவே மாதக்கணக்கில் அந்த திரைப்படங்கள் ஓடின. திரைப்படங்களில் வசனங்களில் ஆதிக்கம் முடிந்து விட்டது என்பதை அவர் புரிந்து கொள்ளாமல் போனது ஒரு சோகமான விஷயமே. பின்னாளில் அவர் வசனம் எழுதிய திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.  மீண்டும் தனது வசனங்களை திரையில் பார்க்க வேண்டும் என்பதற்காகவே, மார்ட்டின் போன்ற லாட்டரி அதிபர்களையும், ஜெயமுருகன் போன்ற சாராய அதிபர்களையும் அவர் ஊக்குவித்தார்.

கருணாநிதியைப் போல, அரசியலையே சுவாசித்தவர்கள் திராவிட இயக்கத்திலேயே இல்லை எனலாம்.  ராபின்சன் பூங்காவில் 1949ம் ஆண்டு திமுக தொடங்கப்பட்டபோது இருந்த முன்னணித் தலைவர்களில் கருணாநிதி கிடையாது.  அறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், ஈவேகி.சம்பத், மதியழகன், என்.வி.நடராஜன் போன்றோர் மட்டுமே முன்னணித் தலைவர்களாக இருந்தனர்.   திராவிடர் கழகத்திலும், திமுகவிலும், கருணாநிதியை விட பல மடங்கு மூத்தவர் நாவலர் நெடுஞ்செழியன்.  ஆனால், அவரால் தனது மறைவு வரை, ஒரு நடிகை தலைமையேற்ற கட்சியில் பல உதிரி பாகங்களில் ஒரு உதிரி பாகமாக மட்டுமே இருக்க முடிந்தது.

அறிஞர் அண்ணா மறைவுக்குப் பிறகு ஒட்டு மொத்த தமிழகமுமே அடுத்த முதல்வர் நெடுஞ்செழியன்தான் என்று நம்பி அறிவிப்பை எதிர்ப்பார்த்து காத்திருந்தது.  ஆனால் அடுத்த முதல்வர் கருணாநிதி என்ற அறிவிப்பு வருகையில் அனைவருக்கும் ஏற்பட்ட அதிர்ச்சி நீங்க நெடுநாட்கள் பிடித்தது.  அந்த காலகட்டத்தில் ஒட்டுமொத்த தமிழகத்தையும் தன் ஆதர்சத்தால் கட்டிப் போட்டிருந்தார் எம்ஜிஆர்.   திராவிட அரசியலையும், இலக்கியத்தையும், பார்ப்பன ஆதிக்கத்தையும், இந்தி எதிர்ப்பையும் பேசி வளர்ந்த திராவிட முன்னேற்றக் கழகம் தன் பிரச்சாரத்துக்கு பெரும் வகையில் எம்ஜிஆரை நம்பியிருந்தது. எம்ஜிஆரின் புகழ் திமுக தலைவர்களையே அச்சத்தில்தான் ஆழ்த்தியிருந்தது.    அத்தகைய எம்ஜிஆர் தனது முழு ஆதரவையும் கலைஞர் கருணாநிதிக்கே அளித்தார்.    எம்ஜிஆர் எப்படி கருணாநிதிக்கு ஆதரவு அளித்தார் என்பது பலருக்கும் புரியாத புதிர். அதுதான் கருணாநிதி.    எம்ஜிஆர் கருணாநிதிக்கு ஆதரவு என்பது தெரிந்ததுமே, திமுகவின் மூத்த தலைவர்கள் அமைதியானார்கள். அமைதியாக தங்கள் முழு ஆதரவை கருணாநிதிக்கு அளித்தார்கள்.

1_2741550g

தன் சாதுர்யத்தாலும், திறமையாலும் அன்று முதலமைச்சரான கருணாநிதியை அதன் பிறகு எதிர்க்க திமுகவில் ஒரே ஒரு குரல் கூட எழவில்லை. இன்று முழுமையாக செயலிழந்த நிலையிலும் திமுகவின் தலைவராக அவர்தான் இருக்கிறார்.    அவரை எதிர்த்து எழுந்த குரல்கள் அனைத்தையும் முளையிலேயே கிள்ளி எறிவார்.  எறிந்திருக்கிறார்.  திமுகவில் எம்ஜிஆரின் புகழ் நாளுக்கு நாள் வளர்ந்து, கருணாநிதியின் செல்வாக்கையே அசைத்துப் பார்க்கும் அளவுக்கு வளர்ந்தபோது, அதே எம்ஜிஆரை கட்சியை விட்டு வெளியேற்ற தயங்கவில்லை.  பொருளாளராக இருந்த எம்ஜிஆர் மீது கட்சியின் நிதியில் குளறுபடி என்று இரு தரப்பும் மாறி மாறி குற்றம் சாட்டிக் கொண்டது.    எம்ஜிஆர் வெகுண்டெழுந்து புதுக் கட்சி தொடங்கினார்.  அன்று எம்ஜிஆரை வெளியேற்றி அவர் செய்த தவறால் 13 ஆண்டுகள் மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியாமல் தவித்தார்.   எம்ஜிஆர் இறக்கும் வரை அவரால் ஆட்சிக் கட்டிலில் ஏற முடியவில்லை.

எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு நடந்த தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்று மீண்டும் முதல்வரானார். ஆட்சி மற்றும் அதிகாரம் இருக்கையில் கட்சியை காப்பாற்றி வழிநடத்துவது என்பது வெகு எளிது.    பதவியும் அதிகாரமும் இருந்தால் காக்கை கூட்டங்களைப் போல வந்து ஒட்டிக் கொள்வார்கள்.   ஆனால் பதவியே இல்லாமல் 13 ஆண்டுகள் கட்சியை காப்பாற்றுவது எளிதான காரியம் அல்ல.  மிகப் பிரம்மாண்டமாக ஒரு கட்சியை துவக்கி 11 சதவிகிதம் வரை வாக்கு வங்கியை வைத்திருந்த விஜயகாந்த் ஒரே ஒரு படுதோல்விக்கு பிறகு எங்கிருக்கிறார் என்பது தெரியும்.   ஒரு பெரும் பிளவுக்கு பிறகு 13 ஆண்டு காலம் ஆட்சி அதிகாரம் இல்லாமல் கட்சியை தொடர்ந்து நடத்துவதே ஒரு மிகப்பெரும் சாதனைதான்.

இந்தி எதிர்ப்பு போராட்டம், ரயில் நிலைய பெயர்ப் பலகைகளில் இந்தியை தார் பூசி அழிப்பது, ஈழத் தமிழருக்காக போராட்டம், விலைவாசி உயர்வு எதிர்ப்பு போராட்டம் என்று தொடர்ந்து கட்சியையும் அதன் தொண்டர்களையும் உயிர்ப்போடு வைத்திருக்கும் கலையை அறிந்தவர் கருணாநிதி.   அன்றாடம் வரும் செய்திகளை உடன் பிறப்புக்கு கடிதம் என்று தொகுத்து தனது கருத்தை வெளிப்படுத்துவதாகட்டும், அரசுத் திட்டங்களில் உள்ள ஓட்டைகளை சுட்டிக் காட்டி அறிக்கைகளை வெளியிடுவதாகட்டும்.  கருணாநிதிக்கு நிகர் கருணாநிதிதான்.    தான் சொல்ல விரும்பும் செய்திகளை கேள்வி பதில் வடிவில், தானே கேள்வி கேட்டு, தானே பதிலும் சொல்லி வெளியிடும் வடிவத்தை இந்தியாவில் வேறு எந்த அரசியல்வாதிகளாவது கையாண்டிருக்கிறார்களா என்பது சந்தேகமே.  அப்படி ஒரு புதிய உத்தியை தனக்கே உரிய பாணியில் உருவாக்கி இறுதி வரை அதை சிறப்பாக செயல்படுத்தி வந்தார். இவரது அறிக்கைகள் ஆட்சியாளர்களை சுள்ளென்று சுடும் என்பது மட்டும் தெளிவான விஷயம். கருணாநிதி அறிக்கை விட்டாரென்றால், அது எம்ஜிஆராகட்டும், ஜெயலலிதாவாகட்டும் உடனடியாக எதிர் வினையாற்றுவார்கள்.

தமிழக நிர்வாகத்தில் மிகப் பெரிய சீர்திருத்தங்களை கொண்டு வந்தவர் கருணாநிதி என்பதை வரலாறு தெளிவாக பதிவு செய்திருக்கிறது. அரசு நிர்வாகத்தை நன்கு அறிந்தவர்கள் சொல்வார்கள். காலங்காலமாக பல்வேறு சிக்கல் நிறைந்தவைகளாக இருந்த நடைமுறைகளை எளிமைப் படுத்தியவர். அரசு ஊழியர்கள், சத்துணவு பணியாளர்கள், சாலைப் பணியாளர்கள் என்று அனைத்துத் தரப்பினரின் நலன்களையும் பாதுகாத்தவர். ஒரு சாலைப் பணியாளருக்கு வேலை கொடுத்தால், அது குறைந்த ஊதியமாக இருந்தாலும் அது ஒரு குடும்பத்துக்கு பயன் தரும் என்பதை நன்கு உணர்ந்தவர்.   2001ம் ஆண்டில் வேலை நிறுத்தம் செய்த அரசு ஊழியர்கள் ஒன்றரை லட்சம் பேரை ஒரே நாளில் டிஸ்மிஸ் செய்தவர் ஜெயலலிதா.  கருணாநிதி ஒரு நாளும் அதை செய்திருக்க மாட்டார்.   ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது.  வேலை போனால் அந்த குடும்பம் தெருவில் நிற்கும் என்பதை நன்கு உணர்ந்தவர் கருணாநிதி.    ஜெயலலிதாவைப் போல பிறந்தது முதலே இம்பாலா காரில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தவரல்ல அவர்.   ஏழைகளின் வாழ்க்கை பற்றி நன்கு அறிந்தவர்.

கருணாநிதியோடு பணியாற்றிய பல மூத்த அதிகாரிகள் அவரின் நிர்வாகத் திறமை குறித்து இன்றும் பெருமையாக பேசுகிறார்கள்.  மக்களுக்கான திட்டம் கொண்டு வருகையில் அரசு அதிகாரிகள் எப்போதுமே முட்டுக் கட்டை போடுவார்கள்.  அரசுக்கு கூடுதல் செலவினம் என்று கூறுவார்கள்.  அரசுக்கு கடன் அதிகரிக்கும் என்று சொல்வார்கள்.  கருணாநிதி என்ன பதில் கூறுவார் தெரியுமா ?  “கவர்மென்டுன்னா கடன்லதான்யா இருக்கும்.  அதுக்காக திட்டமே போடாம இருக்க முடியுமா ?” என்று கூறுவார்.  இதையே ஜெயலலிதாவிடம் சொன்னால், அய்யய்யோ இவ்வளவு கடனா என்று உடனடியாக அனைத்து கட்டணங்களையும் உயர்த்துவார்.   இதுதான் இருவருக்கும் உள்ள பெரிய வேறுபாடு.

நல்ல அதிகாரிகளை தேர்ந்தெடுத்து உரிய பணிகளுக்கு நியமிப்பதில் கருணாநிதிக்கு நிகர் கருணாநிதிதான். எந்த அதிகாரி தனக்கு ஜால்ரா போடுகிறார், யார் விசுவாசமானவர் என்றெல்லாம் பார்ப்பவர் அல்ல கருணாநிதி.  எந்த அதிகாரி வேலையை திறம்பட முடிப்பார் என்பதை மட்டுமே கவனத்தில் கொள்வார்.  1996 ஆட்சி காலத்தில் ராமானுஜம்தான் உளவுத்துறையின் ஐஜி.  ராமானுஜம் அய்யா, கொய்யா என்று ஜால்ரா போடுபவர் அல்ல.   என்ன தகவலோ அதை அப்படியே சொல்வார்.  “இப்படி செய்யக் கூடாதுங்க.   கவர்மென்டுக்கு கெட்ட பேரு வருங்க” என்று வெளிப்படையாக சொல்வார்.  கருணாநிதி அதை அலசி ஆராய்ந்து சரியாக இருந்தால் ஏற்றுக் கொள்வார். போலி மரியாதைகளை எதிர்ப்பார்ப்பவர் அல்ல.   முன்னாள் டிஜிபி ஸ்ரீபால் ஜெயலலிதா கருணாநிதி ஆகிய இருவரிடமும் பணியாற்றியவர்.   அவரிடம் ஒரு முறை யாரை  சிறந்த நிர்வாகியாக கருதுகிறீர்கள் என்று கேட்டபோது தயங்காமல் அவர் திமுக தலைவர் கருணாநிதி என்று கூறினார்.   சட்டம் ஒழுங்கு போன்ற விவகாரங்களில் தயங்காமல் முடிவெடுக்கக் கூடியவர் என்று கருணாநிதியை ஸ்ரீபால் வர்ணித்தார்.

1996ல் ஜெயலலிதா மீது இருந்த ஊழல் குற்றச்சாட்டு காரணமாக ஆட்சிக்கு வந்தார் கருணாநிதி.  ஜெயலலிதா மற்றும் அவர் அமைச்சரவை சகாக்கள் மீது ஊழல் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.  அப்போது கருணாநிதிக்கு நெருக்கமாக பல அதிகாரிகள் இருந்தனர்.  ஆனால் அவர் லஞ்ச ஒழிப்புத்  துறையின் இயக்குநராக தேர்ந்தடுத்தது ஜெயலலிதாவுக்கு நெருக்கமாக அறியப்பட்ட ஆர்.கே.ராகவன்.   ராகவனின் மகன் திருமணத்துக்கு ஜெயலலிதா சென்றுள்ளார்.   ராகவன் அரசியல் கட்சிகளோடு நெருக்கம் காட்டும் அதிகாரி இல்லை என்றாலும், அவர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர் என்று பரவலாக அறியப்பட்டார்.  ஒரு பிராமண அதிகாரியை முக்கிய பொறுப்புக்கு நியமிக்கிறாரே என்று அப்போதே கேள்விகள் எழுந்தன.  ஆனால் கருணாநிதியின் தேர்வு சரியானதே என்பதை, 21 ஆண்டுகள் கழித்து, சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு கிடைத்த தண்டனை நிரூபித்தது.    இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண் விடத் தெரிந்தவர்தான் கருணாநிதி.  ஆனால் ஜெயலலிதா இதற்கு எதிர் மறையானவர். தனக்கு ஜால்ரா அடிக்கும் அதிகாரிகளை மட்டுமே பயன்படுத்துவார் எத்தனை திறமை வாய்ந்த அதிகாரிகள் என்றாலும், அவர் தனக்கு ஜால்ரா போடாதவர் என்று தெரிந்தால், அவர் ஒரு நாளும் நல்ல பதவிக்கு வர முடியாது.

உளவுத்துறையில் நீண்ட வருடங்கள் பணியாற்றிய ஒரு மூத்த அதிகாரி கருணாநிதி பற்றி பேசுகையில் “அரசு நிர்வாகத்தின் அத்தனை நுணுக்கங்களையும் முழுமையாக அறிந்தவர் கருணாநிதி.  பல நேரங்களில் உளவுத்துறையிலிருந்து தகவல்களை விசாரித்து அறிக்கை அனுப்பினாலும், அதை நம்ப மாட்டார்.  தன் கட்சியினர், பொதுமக்கள், பத்திரிக்கையாளர்கள் என்று தனக்கு தெரிந்த அத்தனை பேரிடமும் அந்த தகவலை சரி பார்ப்பார்.  அதற்குப் பின்னரே ஒரு முடிவுக்கு வருவார்.  இதன் காரணமாக இதர அரசியல் தலைவர்களை ஏமாற்றுவது போல கருணாநிதியை அத்தனை எளிதாக அதிகாரிகளால் ஏமாற்ற முடியாது.  ஒரு அடிமட்ட அரசு ஊழியரிடம் முக்கிய தகவல் உள்ளது என்று தெரிந்தால் இவரே நேரடியாக அவரோடு போனில் பேசுவார்.  பல நேரங்களில் தொலைபேசி அழைப்பு வந்து “நான் கருணாநிதி பேசுகிறேன்” என்பதை கேட்ட அதிகாரிகள், அழைப்பில் உள்ளது முதல்வர் என்பதே தெரியாமல், எந்தக் கருணாநிதி என்று கேட்ட சம்பவங்கள் பல உண்டு.

நமது எம்ஜிஆர், தீக்கதிர் உட்பட அனைத்து நாளிதழ்களையும் அதிகாலையிலேயே படித்து முடித்து விடுவார்.  அதில் வந்துள்ள ஒரு செய்தி குறித்து காலை 5 மணிக்கு உளவுத்துறை தலைவரிடம் போன் செய்து கேட்பார். 5 மணிக்கு அனைத்து செய்தித் தாள்களையும் உளவுத்துறை தலைவர் படித்து முடித்திருக்க வேண்டும்.   கருணாநிதி கேட்கும் கேள்விகளுக்கு முழுமையான பதில்களை கையில் வைத்தருக்க வேண்டும்.  இல்லையென்றால் அந்த அதிகாரி தொலைந்தார்.  இதே போல அவர் நினைவாற்றல் ஒப்பிட முடியாதது.   பல விவகாரங்களை எந்தக் குறிப்புகளையும் பார்க்காமல் நினைவிலிருந்தே குறிப்பிட்டு அதிகாரிகளை திணறடிப்பார்.

001

சமூகத்தின் அனைத்து தரப்பு தலைவர்களையும் சந்திக்க தயங்கவே மாட்டார்.   சிறுபான்மை இயக்கத் தலைவர்கள், தொழிலாளர் தலைவர்கள், விவசாயிகள் சங்கத் தலைவர்கள் என்று அனைத்து தரப்பினரோடும் நல்ல நட்பு பாராட்டியவர்.

ஒரு இலக்கியம் எழுத வேண்டுமென்றால், அதற்காக முழுமையான தயாரிப்பு வேலைகளில் ஈடுபடுவார். பொன்னர் சங்கர் எழுதுவதற்கு முன்பாக பல்வேறு இடங்களுக்கு பயணித்து நேரடியாக பல விஷயங்களை விசாரித்து அறிந்த பிறகே எழுதத் தொடங்கினார்.

மக்களுக்கு நன்மை பயக்கும் ஒரு விஷயத்தை செய்வதற்காக எந்த விளிம்பிற்கும் செல்லக் கூடியவர்தான் கருணாநிதி.   கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட சமயத்தில், நக்கீரன் கோபாலோடு கருணாநிதி பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்தார்.   ஆனால் கடத்தியது வீரப்பன் என்று தெரிந்ததும், உளவுத்துறை கூடுதல் டிஜிபி அலெக்சாண்டரை அழைத்து, உடனடியாக கோபாலை வரச் சொல்லுங்கள் என்று கூறினார்.  ஒரு புறம் கோபாலை வைத்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே, மூன்று நான்கு டீம்களை, ராஜ்குமாரை மீட்பதற்காக களத்தில் இறக்கி விட்டிருந்தார்.   இதர டீம்கள் செய்யும் பணியால் கோபால் தொய்வடைந்து விடக் கூடாது என்பதிலும் கவனமாக இருந்தார். இறுதியாக அவர் எடுத்த முயற்சிகள் காரணமாகவே ராஜ்குமாரை காப்பாற்ற முடிந்தது.

இத்தகைய திறமைகள் படைத்த கருணாநிதி, 1990, 1997-98, 2009-2011 ஆகிய காலகட்டங்களில் சறுக்கினார்.   1990ல், கண்மூடித்தனமாக விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தந்தார்.  புலிகள் அமைப்பினர் தமிழகத்தில் எந்த தீவிரவாதச் செயல்களிலும் ஈடுபட மாட்டார்கள் என்று நம்பினார். 1997-98ல், உளவுத் துறை அறிக்கைகள், இஸ்லாமியர்கள் தீவிரவாதச் செயல்களில் தமிழகத்தில் ஈடுபட உள்ளார்கள் என்று அளித்த அறிக்கையினை நிராகரித்தார்.   நமது ஆட்சிக்கு எதிராக இஸ்லாமியர்கள் ஒரு போதும் செயல்பட மாட்டார்கள் என்று உறுதியாக நம்பினார். கோவை குண்டு வெடிப்புகள் அவர் நம்பிக்கையை தகர்த்தன.

2009-2011ல், தெரிந்தே, ஈழத் தமிழர் படுகொலையை தடுக்கத் தவறினார்.   அவர் நினைத்திருந்தால் மத்திய அரசுக்கு ஆதரவை வாபஸ் வாங்கி, அரசுக்கு பெரும் நெருக்கடியை கொடுத்திருக்க முடியும். ஆனால், தனது அமைச்சர்களும், குடும்ப உறுப்பினர்களும், ஊழல் வலையில் சிக்கியிருந்த காரணத்தால், ஈழப் படுகொலைகளுக்கு மவுன சாட்சியாக இருந்தார்.

உரிய நேரத்தில், ஸ்டாலினுக்கு அதிகாரத்தை ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால் டெல்லி சுல்தான், எம்ஏஎம் ராமசாமி போன்றவர்களின் வரலாற்றை காரணம் காட்டி, இறுதி வரை அதிகாரத்தை ஸ்டாலினுக்கு அளிக்க மறுத்தார்.” என்றார் அந்த உளவுத்துறை அதிகாரி.

1998ல் கோவையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள், கருணாநிதியை பெருமளவில் உலுக்கியது.   இஸ்லாமியர்கள் தனக்கு இழைத்த துரோகமாகவே அந்த சம்பவத்தை கருதினார். அதன் பிறகு, அவர் இஸ்லாமியர்களை நம்பவே இல்லை.

உளவுத்துறை அதிகாரி குறிப்பிட்டது போல முதல்வராக இருக்கையில் மட்டும் செய்தித்தாள்கள் அனைத்தையும் படிப்பது அவர் வழக்கமல்ல.  எதிர்க்கட்சித் தலைவராக இருக்கையிலும் இது தொடரும்.  நல்ல கட்டுரைகள் வந்திருந்தால் சம்பந்தப்பட்ட பத்திரிக்கையாளரை அழைத்து பேசி பாராட்டும் குணம் படைத்தவர்.  ஆனால் தனக்கு எதிரான செய்திகளை வெளியிடும் பத்திரிக்கைகளை கடுமையாக தாக்கவும் தயங்க மாட்டார்.

2009ம் ஆண்டில், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலை திறப்பு நிகழ்ச்சியை முதல்வர் கருணாநிதி கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டது.  அதற்கு சில மாதங்களுக்கு முன் வழக்கறிஞர்கள் மீது நடந்த கடுமையான தாக்குதலின் காரணமாக, சில வழக்கறிஞர்கள் கருணாநிதிக்கு கருப்புக் கொடி காட்டப் போகிறோம் என்று அறிவித்திருந்தனர்.  இது குறித்து தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.   செய்தி வெளியான அன்று காலை 5.30 மணிக்கு தினத்தந்தி அதிபர் ஆதித்தனுக்கு தொலைபேசி அழைப்பு.   “ஏன்யா எனக்கு கருப்புக் கொடி காட்றதை ரெண்டு கால செய்தியா போட்ருக்க. எட்டு காலத்துல போட வேண்டியதுதானே” என்று.  சம்பந்தப்பட்ட நிருபரை ஏன் செய்தியை வெளியிட்டாய் என்று பாடாய் படுத்தி விட்டார்கள்.   இந்தியா டுடே வார இதழ் வெளி வந்து கொண்டிருந்தபோது, தமிழகத்தில் உள்ள ஈழ அகதிகள் முகாம்களின் அவல நிலை குறித்து ஒரு கட்டுரை வந்திருந்தது.  அந்த கட்டுரை வெளிவந்த ஓரிரு நாட்களில், அகதிகள் முகாமை சீரமைக்கவும், அகதிகளுக்கான உதவித் தொகையை உயர்த்தவும் உத்தரவிட்டார்.

ஊடகங்களில் வரும் செய்திகளை உடனுக்குடன் படித்து அறிந்து தேவையான உத்தரவுகளை பிறப்பிப்பார். அரசியல், சமூகம் குறித்த செய்திகள் மட்டுமல்லாமல், கவிதை இலக்கியம் என்று இவர் களமாடாத இடங்களே இல்லை. இலக்கிய விழா என்றாலும், கருத்தரங்கங்கள் என்றாலும் அந்த நிகழ்வின் கதாநாயகனாக திகழ்வார்.  நகைச்சுவை, சிலேடைப் பேச்சு என்று கூட்டத்தை கட்டிப்போடும் இவரின் திறன் அரிதிலும் அரிது.

சிறந்த பேச்சாளர்களில் பெரும்பாலானோர் சிறந்த தலைவர்களாக உருவானதில்லை.  வலம்புரி ஜான், தமிழருவி மணியன், நாஞ்சில் சம்பத், வைகோ என  பல உதாரணங்களை சொல்லலாம்.  ஆனால் சிறந்த பேச்சாளராகவும், பெருந்தலைவராகவும் உருவாகி தமிழகத்தை ஆட்டிப் படைத்தது கருணாநிதி மட்டும்தான்.

ஒரு முறை பச்சையப்பன் கல்லூரியிலே ஒரு இலக்கிய விழா.  கருணாநிதி முக்கிய விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.  அது தேர்தல் சமயம்.  திமுக ஒரு அணியிலும், காங்கிரஸ் மற்றும் அதிமுக எதிரணியிலும் இருந்தன.   அரசியல் பேசக்கூடாது என்று தெளிவாக கூறி விட்டனர். இலக்கிய உரையை நிகழ்த்தி உரையின் இறுதிக்கு வந்த கருணாநிதி, உரையை முடிக்கும் முன்பாக, “தேர்தல் வரவிருக்கிறது.  இந்நிகழ்ச்சி முடிந்ததும் அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. உணவருந்தி முடிந்ததும் அனைவரும் ‘இலையை தூர போட்டு விட்டு கையை கழுவி விடுங்கள்’ ” என்றார்.  அரங்கமே அதிர்ந்தது.  அதுதான் கருணாநிதி.

269892_2028549605764_2580740_nகருணாநிதி குறித்து கருத்து கேட்டபோது, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜோதி மணி அவர்கள் ” தமிழக வரலாற்றோடு பின்னிப் பிணைந்தவர்தான் கலைஞர். நீண்ட காலமாக அரசியலில் இருக்கும் அவர் தன் அரசியல் வாழ்வில் பல ஏற்றத்தாழ்வுகளை சந்தித்திருக்கிறார். ஆனால் ஒவ்வொரு இடத்திலும் தன் முத்திரையை பதித்திருக்கிறார்.  கடந்த மூன்று மாத காலமாக அவர் செயல்படாமல் இருக்கிறார்.  ஆனால் அவர் இல்லாத வெறுமையை நாம் அனைவருமே உணர்கிறோம்.  அவரைப பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறோம்.  அத்தகைய தலைவர் அவர்.

அவரைப் போன்ற கடுமையான உழைப்பாளியை காண முடியாது.   அனைத்து செய்தித் தாள்களையும் படிப்பதாக இருக்கட்டும், கலை இலக்கிய இதழ்களை படிப்பதாக இருக்கட்டும்.  அவரின் உழைப்பு அனைத்திலும் வெளிப்படும்.  வெறும் அரசியல் தலைவராக மட்டும் இல்லாமல் அவர் ஒரு சிறந்த இலக்கியவாதியாகவும் திகழ்ந்தார்.   இசை, இலக்கியம் என்று அவர் ஒரு பன்முக அரசியல்வாதியாக  இருக்கிறார்.  அவரின் இலக்கிய ரசனையும், அவரின் கலை உணர்வும் அவரது அரசியல் நடவடிக்கைகளிலும் பிரதிபலித்தன.   அவரோடு பல நேரங்களில் நாம் முரண்படலாம்.  ஆனால் அவரை நாம் விரும்பாமல் இருக்க முடியாது.

பல அரசியல் தலைவர்கள், சிக்கலான விவகாரங்கள் தொடர்பான கேள்விகளை பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தவிர்ப்பார்கள்.   கோபப்படுவார்கள்.  ஆனால் கலைஞரிடம் எந்தக் கேள்வியையும் உறுதியாக கேட்கலாம். எந்த கேள்விகளையும் அவர் எதிர்கொண்டு தனக்கே உரித்த சாதுர்யமான பாணியில் விடையளிப்பார்.  முதல்வராக இருக்கையில் மட்டுமல்லாமல், எதிர்க்கட்சியாக இருக்கையிலும் கடுமையாக உழைத்து தனது தொண்டர்களை சுறுசுறுப்போடு வைத்திருந்தார். உடன்பிறப்புகளுக்கு அவர் எழுதிய கடிதம், திமுக தொண்டர்களை பெருமளவில் உற்சாகப்படுத்தியது. 13 ஆண்டுகாலம் ஆட்சி இல்லாத நிலையிலும், கட்டுக்கோப்பாக கட்சியை வழிநடத்தியவர்” என்றார்.

பதவி ஒரு மனிதனுக்கு தேவையான உற்சாகத்தையும் வலிமையையும் கொடுக்கும்.   பதவியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமே என்பதற்காக முதுமையான காலத்திலும் கூடுதலாக உழைத்து அதன் மூலம் தங்களை உயிர்ப்போடு வைத்துக் கொள்ளும் அரசியல் தலைவர்கள் இயல்பு.  ஆனால் பதவி இல்லாதபோதும் தன் அரசியல் இருப்பை தொடர்ந்து பதிவு செய்து வந்தவர் கருணாநிதி.

பத்திரிக்கையாளர்களுடனான கருணாநிதியின் உறவு அலாதியானது.   ஜெயலலிதாவோ பத்திரிக்கையாளர்களை சந்திக்கவே மாட்டார்.  ஆனால் வாரம் இரு முறை பத்திரிக்கையாளர்களை சந்திக்காவிட்டால் கருணாநிதிக்கு தூக்கம் வராது.  காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜோதிமணி குறிப்பிட்டதைப் போல, கருணாநிதியிடம் எதை வேண்டுமானாலும் கேட்கலாம். எந்த கேள்வி கேட்டாலும் தயங்காமல் பதில் சொல்லுவார்.  பத்திரிக்கையாளர் சந்திப்பையே தனது சமயோசிதமான பதில்களால் நகைச்சுவை அரங்கமாக மாற்றுவார்.

cebb4723-b079-4b5e-866b-04ee0f277f87கருணாநிதியுடனான தமது அனுபவத்தை டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் தமிழக பிரிவு தலைமை ஆசிரியர் ஷபீர் அகமது பகிர்ந்து கொண்டார்.

“திமுக தலைவர் கருணாநிதியை கடந்த 13 ஆண்டுகளாக நான் பத்திரிக்கையாளர் என்ற முறையில் சந்தித்து வருகிறேன்.   தமிழகம் மிக சிக்கலான அரசியல் சூழலை சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், அவர் இல்லாத வெறுமையை அதிகமாக உணர்கிறேன்.  நீங்கள் அவரை விரும்பலாம் அல்லது வெறுக்கலாம்.  ஆனால் அவரை ஒரு நாளும் உதாசீனப்படுத்த முடியாது. நமது காலத்தின் சாணக்கியர் என்றால் அது கருணாநிதிதான்.

2004ம் ஆண்டு நான் பத்திரிக்கை உலகில் நுழைந்தபோது மூத்த பத்திரிக்கையாளர்கள் பலர், பத்திரிக்கையாளர்களை கருணாநிதி கையாளும் முறை குறித்து பல கதைகளை கூறியிருக்கின்றனர்.  அவரிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்லியுள்ளார்கள்.   தவறான ஒரு கேள்வியை கேட்டு விட்டால் கேட்ட பத்திரிக்கையாளரை ஒரு வழி பண்ணி விடுவார் என்று கூறியிருக்கின்றனர்.

அவரது அரசியல் அறிவு, சிந்தனை போக்கு, விஷயங்களை அணுகும் முறை ஆகிய அனைத்தும் மற்றவர்களிடமிருந்து மாறுபட்டது.   2ஜி ஊழல் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில் நடந்த ஒரு சம்பவம் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. டெல்லி சென்று திரும்பிய கருணாநிதி பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.   2ஜி ஊழல் குறித்து நாங்கள் பல்வேறு கேள்விகளை கேட்டோம்.   அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்தார்.   சந்திப்பு முடிந்தது. அவரின் பதில்களை நாங்கள் அனைவரும் ஒளிபரப்பினோம். மறுநாள் உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதுகிறார் கருணாநிதி.  அந்த கடிதத்தில், பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளையும் தொகுத்து, மொத்தம் கேட்கப்பட்ட 27 கேள்விகளில், 22 கேள்விகள் 2ஜி ஊழல் குறித்து மட்டுமே.  இதிலிருந்தே ஊடகங்கள், திமுகவுக்கு எதிராக இருக்கின்றன என்பது தெளிவாக புரிகிறதா என்று கேள்வி எழுப்பியிருந்தார். ஊடகங்கள் அனைத்தையும் ஒரே நொடியில் வில்லனாக்கி விட்டார்.

மற்றொரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் இலங்கை தமிழர் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. சந்திப்பு முடியும் தருவாயில் ஜெயா டிவியின் நிருபர், “அய்யா பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா இல்லையா”  என்று கேட்டார்.  கருணாநிதியே ஒரு கணம் ஆடிப் போனார். அறிவாலயமே அமைதியானது. ஒரு நிமிடம் கருணாநிதியும் அமைதியாக இருந்தார். அவரைச் சுற்றியிருந்தவர்கள், தலைவர் வசமாக சிக்கிக் கொண்டார் என்றே நினைத்தனர். இறுதியாக கருணாநிதி “மாவீரனுக்கு மரணமே கிடையாது”  என்று கூறி விட்டு சிரிக்கத் தொடங்கினார்.  அவர் கட்சியினரும், பத்திரிக்கையாளர்களும் கரவொலி எழுப்பினர்.    அவரைப் போல, சாதுர்யமாகவும், துரிதமாகவும், சமயோசிதமாகவும், அறிவுபூர்வமாகவும் பதிலளிக்க ஒருவராலும் முடியாது என்பதை அவர் எதிரிகள் கூட ஒப்புக் கொள்வர்.  இத்தனை ஆண்டுகாலம் கருணாநிதியை தொடர்ந்து வந்துள்ள நான் உறுதியாக சொல்கிறேன்.   தமிழகம் கருணாநிதியைப் போன்ற ஒரு தலைவரை சந்திக்கப் போவதில்லை.

பல முறை அவர் நடத்தும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பங்கேற்றிருக்கிறேன்.   ஊடகங்களை கடுமையாக விமர்சித்ததும் அவர்தான்.  அதே நேரத்தில் ஊடகங்களுக்கு நண்பனாக திகழ்ந்ததும் அவர்தான்.    அவரிடம் கேள்வி கேட்ட சில நேரங்களில் எனக்கு தலைப்புச் செய்திகள் கிடைத்துள்ளன.   சில நேரங்கள் அவரின் கடுமையான ஏச்சுக்கும் ஆளாகியிருக்கிறேன்.

ஒரு முறை நான் தர்மசங்கடமான கேள்வி கேட்டபோது அவர் கோபமடைந்து எனக்கு “கற்பனைத் திலகம்” என்ற பட்டத்தை அளித்தார். இன்று வரை அவர் அளித்த அந்த பட்டம்தான் பத்திரிக்கையாளனாக எனக்கு கிடைத்த அங்கீகாரம் என்று கருதுகிறேன்” என்றார் ஷபீர் அகமது.

10444408_10202797910389410_4137174021563121745_nதி வீக் வார இதழின் தமிழக தலைமை செய்தியாளர் லட்சுமி சுப்ரமணியம் கருணாநிதி பற்றி ” ஒரு பத்திரிக்கையாளாக அவர் அளிக்கும் கூர்மையான துரிதமான பதில்கள் என்னை எப்போதுமே ஈர்த்துள்ளன. கடந்த ஐம்பதாண்டுகளாக தமிழக அரசியலை வழிநடத்தியவர் கருணாநிதிதான் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அவர் அரசியலில் இல்லையென்றால் எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றோரெல்லாம் இருந்திருப்பார்களா என்பது சந்தேகமே.  கடந்த ஐம்பதாண்டுகளாக திமுக எதிர்ப்பு என்பதை விட, கருணாநிதி எதிர்ப்பு என்ற புள்ளியே அரசியலை இயக்கிக் கொண்டிருந்தது.   இன்று அவர் அமைதியான நிலையில், தமிழக அரசியலே ஒரு தேக்க நிலையை அடைந்துள்ளது” என்றார்.

லட்சுமி கூறுவது ஒரு முக்கியமான கருத்து.    கருணாநிதி எதிர்ப்பு என்ற ஒற்றைப் புள்ளியே தமிழகத்தின் பெரும்பாலான அரசியல் நகர்வுகளுக்கு மையமாக இருந்துள்ளது.  இதை கருணாநிதியும் நன்றாக அறிந்தவர்தான்.   தமிழக சமூகத்தில் அதிகாரம் மிக்க ஒரு பகுதியான பிராமணர்கள் கண்மூடித்தனமாக கருணாநிதியை எதிர்த்து வந்துள்ளனர்.   காரணமே இல்லாமல் கருணாநிதியை எதிர்ப்பார்கள்.  அவரின் திராவிடர் கழக பின்புலம் இதற்கு ஒரு காரணமாக இருக்கக் கூடும்.   ஆனால் இந்த அதிகாரம் மிக்க பிரிவின் எதிர்ப்பையும் மீறியே கருணாநிதி அரசியல் செய்து வந்துள்ளார்.

998969_723598047679229_1533205599_nமூத்த பத்திரிக்கையாளர் ஆர்.மணி கூறுகையில் “கருணாநிதியின் மிகபெரிய பலம் அனைவரையும் உள்ளடக்கி அனுசரித்துச் செல்லும் திறன் (Inclusiveness).  அனைவருக்கும் இடம் கொடுக்கக் கூடிய பக்குவம் உள்ளவர்.   இத்தனை ஆண்டு காலம் அவர் உயிரோடு இருக்க ஒரு முக்கிய காரணம், அரசிலையும் கடந்து பல்வேறு துறைகளில் அவர் காட்டிய ஈடுபாடு. ஒரு மனிதனின் ஆயுட்காலத்தை, அவனுக்கு எத்தனை விஷயங்களில் ஈடுபாடும் ஆர்வமும் இருக்கிறது என்பதை தீர்மானிக்கும். அரசியலை கடந்து, கலை, இலக்கியம், திரைப்படம், இசை, கவிதை, கிரிக்கெட் என்று கருணாநிதிக்கு இருந்த பல்துறை ஈடுபாடுகளே அவரின் ஆயுட்காலத்தை நீட்டித்துள்ளது.

கருணாநிதியின் அலாதியான நகைச்சுவை உணர்வு அனைவரும் பின்பற்ற வேண்டிய ஒரு குணம்.  அவர் உடல் நலன் குன்றும் வரை அவரின் நகைச்சுவை உணர்வு துளியும் குறையவில்லை.

ஒரு அரசியல்வாதிக்கு தேவையான அடிப்படை குணம் பதவி மற்றும் அதிகாரத்தின் மீது தீராத வெறி.   அந்த தீராத வெறி மட்டுமே ஒரு அரசியல்வாதியை தொடர்ந்து செயல்பட வைக்கும்.  ஜெயலலிதாவுக்கு அந்த வெறி கிடையாது.  அவர் தயக்கமாக எதேச்சையாக அரசியலுக்கு வந்தவர்.  ஆனால் கருணாநிதி அரசியலையே சுவாசித்தவர்.” என்றார்.

அனைவரையும் அனுசரித்துச் செல்லும் கருணாநிதியின் குணம் அவரது வாரிசான முக.ஸ்டாலினுக்கு இல்லாமல் இருப்பது ஒரு பெரும் குறை. 2016 சட்டமன்றத் தேர்தலில், ஸ்டாலின் அனைவரையும் அனுசரித்து, ஒரு பெரிய கூட்டணியை அமைத்திருப்பாரேயானால், மக்கள் நலக் கூட்டணி என்பதே உருவாகியிருந்திருக்காது. தமிழகம் இன்று இந்த அவல ஆட்சியின் கீழ் இருந்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்காது.   இன்று ஸ்டாலின் முதல்வராக இருந்திருப்பார்.

 

hqdefaultஅதிமுகவின் செய்தித் தொடர்பாளர் ஆவடி குமார், கருணாநிதி குறித்து பேசுகையில், “அவர் ஒரு கொள்கை பிடிப்புள்ள தலைவர். கடுமையான போராட்டங்களை நடத்தி தலைமையை பெற்றவர்.  அதே நேரத்தில் தன் தலைமையை தக்கவைத்துக் கொள்ள எந்த வித சமரசத்தையும் செய்யத் தயங்காதவர்.  அதற்காக எத்தகைய அரசியலிலும் ஈடுபடக் கூடியவர்.   இதுதான் அவரது வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது.  தன் குடும்பத்தினரை தொடர்ந்து முன்னறுத்தியது அவரது மிகப்பெரிய பலவீனம்.  அவருக்கு அது எதிர்மறையாக அமைந்தது.  எம்ஜிஆர் காலத்தில் கூட அவருக்கு எதிராக தனது மகன் முக.முத்துவை நடிக்க அழைத்து வந்து அவரை எம்ஜிஆருக்கு போட்டியாக முன்னிறுத்த முயன்றார்.

ஒரு கட்டத்தில் அவரது குடும்பத்தினரை அவரால் கட்டுப்படுத்த முடியாமல் போனது. குடும்பத்தினர் பல்வேறு அதிகார மையங்களாக மாறிப் போனார்கள். அவரது இந்த பலவீனம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் அவர் ஒரு மிகப்பெரிய தலைவராக உருவாகியிருப்பார்.”  என்றார்.

ஆவடி குமார் அவர்கள் கூறுவது முழுக்க முழுக்க உண்மை.  கருணாநிதி மிக மிக அதிகமாக நேசித்தது இரண்டு விஷயங்களை.  ஒன்று தன்னை.  இரண்டாவது தன் குடும்பத்தை. தன் குடும்பத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயங்காதவராக இருந்தார் கருணாநிதி.  ஆனால் தனக்கு நெருக்கடி என்றால் தன் குடும்ப உறுப்பினர்களோடே அரசியல் செய்யத் தயங்காதவர்தான் கருணாநிதி.  தான் பெற்ற பிள்ளை முதல்வராவதைக் கூட அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.  தன் பிள்ளைகளோடே அரசியல் செய்தார்.  இரு பிள்ளைகளுக்கும் இடையே இருந்த முரண்பாடுகளையும், மோதலையும் கூர்மைப்படுத்தினார்.    முதல்வர் பதவியைத்தான் விட்டுத் தர மாட்டாரென்றால், கட்சித் தலைவர் பதவியைக் கூட தன் மகனுக்கு வழங்க அவருக்கு இறுதி வரை மனம் வரவில்லை.   தள்ளாத வயதிலும், நா குழறும் நிலையிலும், தன் பதவியை யாருக்கும் விட்டுத் தர அவர் தயாராக இல்லை.

2006 ஆட்சி காலம், கருணாநிதியின் வாழ்வில் கறையான பக்கங்களாக வரலாற்றில் பதிவு செய்யப்படும்.  1996ம் ஆண்டு ஒரு அற்புதமான ஆட்சியை அளித்த அதே கருணாநிதி, 2006ம் ஆண்டு, முழுக்க முழுக்க தன் குடும்பத்தின் ஆதிக்கத்தில் கட்சியையும், ஆட்சியையும் ஒப்படைத்து வேடிக்கை பார்த்தார்.   கருணாநிதியின் சிறப்பான குணங்கள் என்று பட்டியலிடப்பட்ட அனைத்தையுமே அவர் அந்த ஆட்சிக் காலத்தில் இழந்தார் என்றே கூற வேண்டும். எந்த அரசு அதிகாரியையும் நம்பாமல், தனக்கென்று தொடர்புகளை வைத்து, அதிகாரிகளை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த கருணாநிதி, ஒரு அதிகாரியின் பேச்சைக் கேட்டு அனைத்து முடிவுகளையும் எடுக்கும் நிலைக்கு வீழ்ந்தார். அந்த அதிகாரி இழைக்கும் தவறுகளை சுட்டிக் காட்டுபவர்கள் கூறுவதை காதில் கூட வாங்க மறுத்தார்.   கருணாநிதியின் நிலை எந்த அளவுக்கு தடுமாறியது என்றால், 2011 தேர்தலில், திமுக கூட்டணி 100 சீட்டுகளில் ஜெயிக்கும் என்று அந்த உளவுத்துறை அதிகாரி அளித்த அறிக்கையை நம்பும் வரை நிலை தடுமாறினார். ஒட்டுமொத்த தமிழகமும் திமுகவின் மீது கடும் கோபத்தில் இருந்ததை மூத்த அரசியல் தலைவரான கருணாநிதி உணரவேயில்லை. அந்த அதிகாரி யார் என்பதை கருணாநிதி புரிந்து கொள்கையில் காலம் ஓடிப் போயிருந்தது.

ஜாபர் சேட் மற்றும் கருணாநிதி

ஜாபர் சேட் மற்றும் கருணாநிதி

தனக்கு ஜால்ரா அடிக்கும் அதிகாரிகள், இதர முக்கிய பிரமுகர்கள் அனைவரையும் சந்தேகக் கண்ணோடு பார்க்கும் வழக்கம் கொண்டவர்தான் கருணாநிதி.   ஆனால்  அந்த காலகட்டத்தில், பொய்யான புகழுரைகளுக்கும், போலி வாழ்த்துக்களுக்கும் மயங்கினார்.   ஒரு கட்டத்தில் வாரத்துக்கு இரண்டு பாராட்டு விழாக்களில் கலந்து கொள்ளும் அளவுக்கு மாறிப் போனார்.  அந்த பாராட்டு விழாக்களில் காது கூசும் அளவுக்கு பேசப்படும் புகழுரைகளை கேட்டு அகமகிழ்ந்தார்.    ஒரு கட்டத்தில் அதற்கு அடிமையாகவே ஆனார்.    இப்படி புகழ்ந்து புகழ்ந்தே, தொடர்ந்து அவரை அனைவரும் இருளில் வைத்திருந்தனர்.  2ஜி ஊழலின் விசாரணை தன் வீட்டு வாசல் கதவை தட்டும் என்பதைக் கூட கணிக்கத் தவறினார் கருணாநிதி. அந்த வீழ்ச்சியிலிருந்து அவரால் மீண்டு எழ முடியவில்லை என்பது கசப்பான உண்மை.

கருணாநிதி மீண்டும் பழைய சுறுசுறுப்போடு கட்சிப் பணியாற்றுவார், மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்பதற்கு சாத்தியம் இல்லை.   அவர் உடல் நிலை அதற்கு இடம் தராது.   இத்தனை ஆண்டுகள் அவர் தமிழகத்துக்கு ஆற்றிய பணிகளே சரித்திரத்தின் பக்கங்களை நிறைக்கும்.

அவரது அரசியல் வாரிசாக உருவெடுத்துள்ள முக.ஸ்டாலின் அவரது இடத்தை இட்டு நிரப்புவது எளிதான காரியம் அல்ல.    அரசியல் களத்தில் அவர் இன்னும் தன்னை நிரூபிக்க வேண்டியதுள்ளது.   இதற்கு அவர் அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டியது அவசியம். வரலாற்றில் வெறும் கருணாநிதியின் மகன் என்று மட்டும் பதிவு செய்யப்படுவதை ஸ்டாலின் நிச்சயம் விரும்ப மாட்டார். கூவாத்தூரில் தொடங்கி தமிழகத்தில் தொடர்ந்து நடந்து வரும் அரசியல் கூத்துக்களைப் பற்றி பேசுவோர், கருணாநிதி உடல் நலத்தோடு இருந்திருந்தால், இந்நேரம் ஆட்சியை கவிழ்த்திருப்பார் என்றே பேசுகிறார்கள்.

நாற்பது ஆண்டு கால பொது வாழ்வுக்கு பிறகு கருணாநிதி மீது குடும்ப ஆதிக்கம் என்று வந்த குற்றச்சாட்டு ஸ்டாலின் மீது இப்போதே எழத் தொடங்கியுள்ளது. சபரீசனும், அன்பில் மகேஷும், உதயநிதியும் கட்சியில் பல முடிவுகளை எடுக்கிறார்கள்.  அவர்கள் சொல்வதை மட்டுமே ஸ்டாலின் கேட்கிறார் என்று கட்சியினரே புகார் கூறுகிறார்கள்.  அரசியல் களத்தில் தன் தடத்தை வலுவாக பதிக்க வேண்டிய ஸ்டாலினின் வளர்ச்சிக்கு இது போன்ற குற்றச்சாட்டுகள் நல்லதல்ல. தமிழக அரசியல் சூழலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தைப் நிரப்ப பொருத்தமான தலைவராக ஸ்டாலின் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.

dmk_650_080714073650_010415101640

பலரால் விரும்பப்பட்டும், பலரால் வெறுக்கப்பட்டும் இருந்தாலும் அனைவராலும் பேசப்பட்டவராக வாழ்ந்து கொண்டிருக்கிறார் கலைஞர் கருணாநிதி அவர்கள். ஒரு மனிதனைப் பற்றி பேசவும் விவாதிக்கவும் இத்தனை விஷயங்கள் இருப்பதே அவன் எத்தகைய வாழ்வை வாழ்ந்திருக்கிறான் என்பதை நிரூபிக்கிறது.  அவர் செய்த எத்தனையோ தவறுகளையும் தாண்டி, அவர் தமிழ் மொழி வளர்ச்சிக்கும், தமிழகத்தின் நலனுக்கும் ஆற்றிய பணிகளின் பட்டியல் மிகப் பெரிது. தமிழகம் எத்தனையோ தலைவர்களை கண்டிருந்தாலும், சாதிகளைக் கடந்து அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவர்களின் பட்டியல் குறைவு.  கருணாநிதி அப்படிப்பட்ட சாதிகளைக் கடந்த ஒரு தலைவன். தமிழகத்தின் தலைமகன்.    அவன் ஒரு காவியத் தலைவன்.

You may also like...

62 Responses

  1. chakrar says:

    தமிழகத்தை பிடித்த பீடைக்கு லேசில் சாவு வராது

Leave a Reply

Your email address will not be published.