இந்திய நீதித்துறை உலகின் சிறப்பான நீதித்துறைகளுள் ஒன்று. இத்தனை சிறப்பான இந்த நீதித்துறையும் சில நேரங்களில் சறுக்கத்தான் செய்கிறது. மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையத்தின் தலைவராக இருந்த கே.வி.சவுத்ரி என்பவர், அவரது தலைமையின் கீழ் நடந்த சகாரா பிர்லா நிறுவனங்களில் நடந்த சோதனைகளின்போது கிடைத்த லஞ்சம் வாங்கியது தொடர்பான டைரிகள் குறித்து உரிய விசாரணை நடத்தாமல் வழக்கை மூடினார். அந்த டைரிகளில் குஜராத், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் டெல்லி மாநில முதல்வர்கள் இந்த நிறுவனங்களில் இருந்து லஞ்சம் பெற்றதாக பதிவுகள் இருந்தன. அந்த சமயத்தில் குஜராத் முதல்வராக இருந்தது நரேந்திர மோடி. இப்படி மோடி உள்ளிட்டவர்களுக்கு ஆதரவாக உரிய விசாரணை நடத்தாமல் இருந்த கே.வி.சவுத்ரியை மத்திய அரசு, மத்திய கண்காணிப்பு ஆணையராக நியமித்தது.
அருணாச்சல் பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்த கலிக்கோ புல், 9 ஆகஸ்ட் 2016 அன்று தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் 40 பக்க கடிதத்தை எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில் அவர், அருணாச்சல பிரதேச அரசை டிஸ்மிஸ் செய்தது சரியா இல்லையா என்ற விவகாரத்தை முடிவு செய்யும வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தபோது, தற்போதைய தலைமை நீதிபதியாக இருக்கும் ஜேஎஸ்.கேஹரின் இளைய மகன் வீரேந்திர கேஹர் 49 கோடியும், அடுத்த தலைமை நீதிபதியாக உள்ள தீபக் மிஸ்ராவின் சகோதரர் ஆதித்ய மிஸ்ரா 37 கோடியும், சாதகமாக தீர்ப்பு வழங்குவதற்காக லஞ்சமாக கேட்டதாக எழுதியுள்ளார். அருணாச்சல பிரதேச ஆளுனர் ஜேபி. ராஜ்கோவா இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்தார். ஆனால் இந்நாள் வரை இந்த விவகாரத்தில் எந்த விசாரணையும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இணைப்பு
இது போல நீதித்துறையில் மாவட்ட நீதிபதிகளுக்கான தேர்வுகளை, சென்னை உயர்நீதிமன்றமே தொடர்ந்து நடத்தி வருகிறது. மாவட்ட நீதிபதிகளாக நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக ஆவதற்கான எல்லா சாத்தியக்கூறுகளும் உள்ளன. பெரும்பாலானவர்கள், உச்சநீதிமன்றம் சென்ற பிறகே ஓய்வு பெறுகிறார்கள். மாவட்ட நீதிபதி பதவி, உயர்நீதிமன்ற நீதிபதி பதவி மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதி பதவி ஆகிய அவர்களின் பதவிக் காலத்தில் பல ஆயிரக்கணக்கானவர்களின் தலையெழுத்தை தீர்மானிக்கும் பொறுப்பில் இருக்கிறார்கள். ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் உயிரோடு இருக்கலாமா வேண்டாமா என்பதையும் தீர்மானிக்கும் பொறுப்பு இவர்களுடையதே. இப்படிப்பட்ட ஒரு சூழலில் இந்த பதவிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்களை மிக மிக கவனமாக பரிசீலித்து தேர்வு செய்வது மிக மிக அவசியம். ஆனால் குற்றப் பின்னணி உள்ள இரு நபர்களை தேர்ந்தெடுத்ததோடு அல்லாமல், அந்த தேர்ச்சியை தொடர்ந்து நியாயப்படுத்தி வரும் ஒரு செயலை சென்னை உயர்நீதிமன்றம் செய்து வருகிறது என்பது மிக மிக வேதனையான ஒரு விஷயம்.
2013 மே 2 அன்று தமிழக அரசு நேரடி மாவட்ட நீதிபதிகளை பணியமர்த்துவதற்காக அறிவிக்கை வெளியிடுகிறது. அந்த அறிவிக்கையின்படி, தகுதியுள்ள வழக்கறிஞர்கள் விண்ணப்பித்து எழுத்துத் தேர்வை முடிக்கின்றனர். எழுத்துத் தேர்வுக்கு பிறகு, தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு பரிசீலிக்கப்படுகின்றனர். இந்த பரிசீலனைகளுக்கெல்லாம் பிறகு, நியமன ஆணைகள் வழங்கப்படுகின்றன. 23 பேர் நேரடி மாவட்ட நீதிபதிகளாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவர்கள் அனைவரும் பயிற்சி முடிந்து தற்போது பல்வேறு மாவட்டங்களில் நீதிபதிகளாக பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் நேரடி மாவட்ட நீதிபதி பணிக்கு விண்ணப்பம் அனுப்புகையில் அதில் உள்ள இரண்டு கேள்விகள் முக்கியமானவை. “14 Whether the applicant is or was ever involved in any litigation civil / criminal. 15. Whether the applicant has any criminal complaint pending investigation or trial or ever convicted or acquitted in any criminal case”
மனுதாரர் எப்போதாவது சிவில் அல்லது கிரிமினல் வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கிறாரா. மனுதாரர் மீது ஏதாவது ஒரு கிரிமினல் புகார் பதியப்பட்டு நிலுவையில் உள்ளதா ? அதில் அவர் தண்டிக்கப்பட்டிருக்கிறாரா அல்லது விடுதலை செய்யப் பட்டிருக்கிறாரா என்பவைதான் அக்கேள்விகள். இந்தக் கேள்விகளுக்கு முழுமையாகவும், உண்மையாகவும் பதில் சொல்ல வேண்டியது ஒவ்வொரு விண்ணப்பதாரரின் கடமை. இந்த கேள்விகளுக்கு முழுமையான விபரங்களை தராமல், உண்மையை மறைத்த இரண்டு பேர் மாவட்ட நீதிபதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது பணியாற்றி வருகிறார்கள் என்பதுதான் அதிர்ச்சியளிக்கும் உண்மை.
லிங்கேஸ்வரன் என்பவர் இந்தத் தேர்வில் தேர்ச்சியடைந்தவர்களில் ஒருவர். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக செயல்பட்டு வந்தார். 2004ம் ஆண்டு, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையுடன் எந்த மாவட்டங்களை சேர்ப்பது, எந்த மாவட்டங்களை சேர்க்காமல் சென்னையிலேயே வைத்திருப்பது என்பது தொடர்பாக வழக்கறிஞர்களுக்குள் தகராறு நடைபெற்று வந்தது. அப்போது இது தொடர்பாக 2 ஜுலை 2004 அன்று, மனு அளிப்பதற்காக, திருச்சி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் லட்சுமணன் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றம் வருகிறார்கள். அப்போது வழக்கறிஞர்கள் சங்கத் தலைவராக இருந்த பிரபாகரன் என்பவரோடு சேர்ந்து கும்மிடிப்பூண்டி லிங்கேஸ்வரன் என்ற வழக்கறிஞர் உள்ளிட்ட ஏழு பேர், திருச்சி மாவட்ட வழக்கறிஞர்களை தாக்கியதாக பி4 உயர்நீதிமன்ற காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 147, 341, 323 மற்றும் 149 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இந்த வழக்கில் விசாரணை முடிந்து, சென்னை, ஜார்ஜ் டவுன் 7வது பெருநகர நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த வழக்கு இன்று வரையில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் கும்மிடிப்பூண்டி லிங்கேஸ்வரன் உள்ளிட்டோருக்கு நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் இது வரை வழங்கப்படவில்லை.
நேரடி மாவட்ட நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட லிங்கேஸ்வரன், இந்த விபரத்தை தனது விண்ணப்பத்தில் வெளியிடாமல் முழுமையாக மறைத்துள்ளார்.
லிங்கேஸ்வரன் மீது நிலுவையிலுள்ள கிரிமினல் வழக்கு குறித்த விபரங்களோடு, அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வெங்கடேஸ்வரன் என்பவர் ஒரு மனுத் தாக்கல் செய்கிறார். WP 23766/2014 என்ற அந்த வழக்கில் நீதிபதிகள் சத்தியநாராயணா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் 28.07.2016 அன்று தீர்ப்பளிக்கின்றனர்.
பி4 காவல் நிலைய ஆய்வாளர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இறுதி அறிக்கையை பரிசீலனை செய்ததில் குற்றவாளிகளின் தந்தையின் பெயர், தெளிவான வீட்டு முகவரி ஆகியவை குறிப்பிடப்படவில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவல்களின்படி லிங்கேஸ்வரன் 9.8.2000 அன்று வழக்கறிஞராக பதிவு செய்கிறார். அப்போது அவர் அளித்த முகவரி கதவு எண் 7/21-A. நேதாஜி நகர், கோட்டகரை, கும்மிடிப்பூண்டி. பொன்னேரி அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அளித்த தகவலில், லிங்கேஸ்வரனின் முகவரி 18சி, ஜிஎன்டி ரோடு, கும்மிடிப்பூண்டி என்றும், அவர் பிறந்த தேதி 10.05.1974 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்த ஆய்வாளர், குற்றவாளிகளின் அடையாளத்தை தெளிவாக குறிப்பிடவில்லை. இதனால்தான் குற்றவாளிகளுக்கு சம்மன் வழங்க இயலவில்லை. புலனாய்வு அதிகாரி, இந்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யவோ, அவர்களை விசாரிக்கவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் காரணமாக குற்றவாளிகளுக்கு அவர்கள் மீது இருந்த வழக்கு குறித்து விபரங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகும், குற்றவாளிகளுக்கு சம்மன் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
பார் கவுன்சில் மற்றும் பொன்னேரி அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வழங்கிய தகவல்களை மட்டுமே அடிப்படையாக வைத்து, நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட லிங்கேஸ்வரன் என்ற முடிவுக்கு வர முடியாது. இதன் காரணமாக லிங்கேஸ்வரன் தன் மீதான குற்றவியல் வழக்கை மறைத்து விட்டார் என்ற முடிவுக்கு வர முடியாது. இதனால் மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்று தீர்ப்பளித்துள்ளனர்.
இந்தத் தீர்ப்பில் நீதிபதிகள் மீண்டும் மீண்டும் குறிப்பிடும் ஒரு விஷயம் என்னவென்றால், குற்றவாளிகள் குறித்த தெளிவான அடையாளத்தை குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடவில்லை. அதன் அடிப்படையில் அவர்களுக்கு சம்மனும் வழங்கப்படவில்லை. இதனால் சம்பந்தப்பட்டவர்களுக்கு அவர்கள் மீது குற்ற வழக்கு நிலுவையில் இருப்பது தெரிந்திருக்க நியாயமில்லை என்பதே.
இதே தீர்ப்பில் இந்த குற்றவியல் வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான பிரபாகரன், மாதவரம் செந்தில், பாஸ்கரன், மற்றும் தீக்காராஜ் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர்கள் மீதான குற்றப் பத்திரிக்கையை ரத்து செய்யக் கோரி Crl. O.P. 32988/2014 என்ற மனுவை தாக்கல் செய்து, அவர்கள் மீதான குற்றப் பத்திரிக்கையை ரத்து செய்து விட்டனர் என்றும் குறிப்பிடுகின்றனர்.
இதில் முதல் குற்றவாளியான பிரபாகரன், வழக்கறிஞர் சங்கத் தலைவர். அவரை அடையாளம் காண்பதில் சிக்கல் இருக்காது. மீதம் உள்ள மாதவரம் செந்தில், பாஸ்கரன் மற்றும் தீக்காராஜ் ஆகியோருக்கு குற்றப் பத்திரிக்கையில் அளித்துள்ள முகவரி என்ன தெரியுமா “வழக்கறிஞர், உயர்நீதிமன்றம், சென்னை.104”. இதே போலத்தான் கும்மிடிப்பூண்டி லிங்கேஸ்வரனுக்கும் முகவரி குறிப்பிடப்பட்டுள்ளது. காவல்துறை விசாரிக்காத நிலையில், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யாத நிலையில், அவர்களுக்கு தங்கள் மீதான குற்ற வழக்கு குறித்து விபரங்கள் தெரிய நியாயமில்லை என்று குறிப்பிடும் நீதிபதிகள், இதர குற்றவாளிகளுக்கும் சம்மன் வழங்கப்படாத நிலையில், விசாரிக்கப்படாத நிலையில் அவர்கள் மீதுள்ள கிரிமினல் வழக்கு குறித்து தெரிந்து எப்படி நீதிமன்றத்தை அணுகினார்கள் என்ற விபரத்தை ஆராயத் தவறி விட்டனர். ஒரே வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள ஒரு சில குற்றவாளிகளுக்கு தங்கள் மீதுள்ள வழக்கு விபரம் தெரிந்திருக்கிறது, மற்றொரு குற்றவாளியான லிங்கேஸ்வரனுக்கு மட்டும் இந்த விபரம் தெரிந்திருக்க நியாயமில்லை என்ற உயர்நீதிமன்றத்தின் வாதம் விசித்திரமானது.
மேலும், தமிழ்நாடு பார் கவுன்சிலில் மூன்றே மூன்று பேர்தான் லிங்கேஸ்வரன் என்ற பெயரில் உள்ளார்கள். அவர்களில் ஒருவர் திருத்தணியை சேர்ந்தவர். 2011ம் ஆண்டு பதிவு செய்துள்ளார். மற்றொருவர் மானாமதுரையை சேர்ந்தவர். 2007ம் ஆண்டு பதிவு செய்துள்ளார். 2000ம் ஆண்டு பதிவு செய்த, கும்மிடிப்பூண்டியை சேர்ந்த ஒரே லிங்கேஸ்வரன் இவர் மட்டுமே.
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அதன் வழக்கறிஞர்கள் குறித்து விபரம் அறிந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும். ஒரு வழக்கறிஞருக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வைத்து சம்மன் வழங்கிட இயலுமா என்பது. இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள் இருவருக்குமே, இதே போல சம்மன் வழங்கவும், விசாரணை செய்யவும் வந்த காவல் துறை அதிகாரிகள் எத்தனை பேர் நீதிமன்ற வளாகத்தின் உள்ளேயே வைத்து தாக்கப் பட்டுள்ளனர் என்பதும் தெரியும். இவர்களுக்கு சம்மன் வழங்குவது என்பது நடைமுறையில் சாத்தியமே இல்லாத ஒரு விஷயம் என்பதும் இந்த நீதிபதிகளுக்கு நன்றாகத் தெரியும். அப்படி இருக்கையில் இப்படியொரு விசித்திரமான தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
லிங்கேஸ்வரனைப் போலவே மாவட்ட நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றொருவர் அப்துல் காதர். இவர் 2004ம் ஆண்டு மதுரை சட்டக் கல்லூரியில் படித்துக் கொண்டுள்ளார். அப்போது இவருக்கும் இவரோடு உள்ள சக மாணவர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறின் காரணமாக, ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த முருகன் என்பவரை, அப்துல் காதர் அவர் நண்பர்களோடு சேர்ந்து, சோடா பாட்டிலை உடைத்து தாக்கி காயம் ஏற்படுத்தியுள்ளனர். இதன் காரணமாக இவர் மீது பி.16 அண்ணா நகர் காவல் நிலையத்தில் 22 செப்டம்பர் 2004 அன்று 1891/2004 என்ற வழக்கு இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள் 147, 148, 341, 323 மற்றும் 307 ஆகிய பிரிவுகளில் பதிவு செய்யப்படுகிறது. இதில் 307 என்பது கொலை முயற்சிக்கான பிரிவு. இந்த வழக்கில் பின்னாளில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. மதுரை விரைவு நீதிமன்றத்தில் இவ்வழக்கின் விசாரணை நடைபெற்று, 22 பிப்ரவரி 2005 அன்று, இந்த வழக்கில் சந்தேகத்தின் பலனை குற்றவாளிக்கு அளித்து அனைவரும் விடுதலை செய்யப்படுகின்றனர்.
இந்த அப்துல் காதரும் அவர் மீதான குற்றவியல் வழக்கு குறித்து தனது விண்ணப்பத்தில் குறிப்பிடவில்லை. அப்துல் காதர், அவர் மீதான குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டபோது, மதுரை, கே.புதூர், சங்கர் நகர் 4வது தெரு, எண் 11 என்ற முகவரியில் வசித்து வந்தார். நீதிபதி தேர்வுக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கையில் திருச்சி, திருவெறும்பூர், சுருளி கோவில் தெரு, எண் 60பி என்ற முகவரியை அளித்துள்ளார். அப்துல் காதர் குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர் திருச்சியில் வசிப்பதால் அவர் மீது எந்த குற்றவியல் வழக்கும் நிலுவையில் இல்லை என்று அறிக்கை அளித்துள்ளனர். இதன் அடிப்படையில் அப்துல் காதர் மாவட்ட நீதிபதியாக பணியாற்றி வருகிறார்.
2010ம் ஆண்டு இதே போல நேரடி மாவட்ட நீதிபதிகளுக்கான தேர்ச்சி நடைபெறுகிறது. அந்த தேர்வில், பாண்டியராஜன் என்பவர் தேர்வு செய்யப்படுகிறார். அவருக்கான பணி நியமன ஆணையும் வழங்கப்படுகிறது. பணி நியமன ஆணை வழங்கப்பட்ட பின்னர், அருணாச்சலம் என்பவர் ஒரு புகார் அனுப்புகிறார். அந்தப் புகாரில் பாண்டியராஜன் மீது, ஒரு குற்றவியல் வழக்கு இருப்பதாகவும், அதை பாண்டியராஜன் மறைத்து விட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு நடந்த விசாரணையில் பாண்டியராஜன் மீது பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் 147, 148, 452 மற்றும் 425 ஆகிய பிரிவுகளின் கீழ் ஒரு கோவலிலுக்குள் நுழைந்து தகராறு செய்ததாக ஒரு வழக்கு 2007ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் புலனாய்வு செய்த காவல்துறையினர், இது தவறாக பதிவு செய்யப்பட்ட வழக்கு என்று இறுதி அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். இதே போல பாவூர்சத்திரம் காவல் நிலையத்திலேயே 2007ம் ஆண்டு பதிவு செய்யப்பட் ஒரு வழக்கு, 2009ம் ஆண்டு, சாட்சிகள் விசாரணைக்கு வராத காரணத்தால் நீதிமன்றத்தால் முடித்து வைக்கப்பட்டது. இந்த இரண்டு வழக்குகள் குறித்தும் விபரங்களை மறைத்ததன் காரணமாக, பாண்டியராஜனின் பணி நியமனம் ரத்து செய்யப்பட்டது.
அதை எதிர்த்து பாண்டியராஜன் சென்னை உயர்நீதிமன்றம் செல்கிறார். அந்த வழக்கில் பாண்டியராஜன் சார்பில், வழக்கு நிலுவையில் இருந்தது அவருக்கு தெரியாது என்றே வாதிடப்படுகிறது. அந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தின் பல தீர்ப்புகளை மேற்கோள் காட்டிய சென்னை உயர்நீதிமன்றம், பாண்டியராஜனின் பணி நியமனத்தை ரத்து செய்தது சரியே என்று தீர்ப்பு வழங்கியது. இணைப்பு அதில் மேற்கோள் காட்டப்பட்டிருந்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஒன்று மிக முக்கியமானது.
தயாசங்கர் யாதவ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கை தொடுக்கிறார். மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையில் ஒரு கான்ஸ்டபிளாக அவர் பணிக்கு விண்ணப்பிக்கிறார். கிரிமினல் வழக்குகள் இருக்கிறதா என்ற கேள்விக்கு விண்ணப்பத்தில் இல்லை என்று பதிலளிக்கிறார். 2003ம் ஆண்டு அவர் பணியில் சேர்கிறார். பணிக்கு சேர்ந்து இரண்டு ஆண்டுகள் கழித்து அவரது பின்னணியை சரி பார்க்கையில் அவர் மீது 1999ம் ஆண்டு ஒரு வழக்கு நிலுவையில் இருந்ததும், அதில் அவர் விடுதலை செய்யப்பட்டதும் தெரிய வருகிறது. அவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு அவர் பணி நீக்கம் செய்யப்படுகிறார். அதை எதிர்த்துதான் அவர் உச்சநீதிமன்றம் செல்கிறார்.
அந்த தீர்ப்பில் விண்ணப்பம் பூர்த்தி செய்கையில் குற்றப் பின்னணி குறித்த விபரங்களை அளிப்பது தொடர்பாக சில தெளிவான விதிகளை உச்சநீதிமன்றம் வலியுறுத்துகிறது.
- ஒரு பணிக்கு விண்ணப்பம் செய்பவர், அவரது விண்ணப்பத்தில் அவரது குற்றப் பின்னணி குறித்த விபரங்களை பூர்த்தி செய்வதை வைத்து, அது சரி பார்க்கப்படும். அப்படி சரி பார்க்கையில் அது கீழ்கண்ட விளைவுகளை ஏற்படுத்தும்.
1) ஒருவர் தன் மீதான கிரிமினல் வழக்குகள் குறித்த விபரங்களை (அது தண்டனையோ அல்லது விடுதலையோ) அளிப்பதை வைத்து, அவருக்கு பணி வழங்குபவர், அவர் மீதான குற்றங்களின் தீவிரத்தன்மையை வைத்து, அவரை வேலைக்கு எடுக்க வேண்டாம் என்ற முடிவுக்கு வரலாம். பணியில் சேர்ந்திருந்தால் பணி நீக்கம் செய்யலாம்.
2) அவர் தெரிவித்துள்ள குற்றங்களின் விபரங்கள் ஒரு சாதாரண வழக்காகவோ, பெருங்குற்றமாகவோ இல்லாத பட்சத்தில், அவர் வேலைக்கு தகுதியானவர் என்ற முடிவுக்கு வரலாம்.
3) ஒருவர் விண்ணப்பத்தில் தன் மீதான குற்ற வழக்குகளை மறைத்து, அது பின்னர் தெரிய வந்தால் அவருக்கு பணி வழங்க மறுக்கலாம் அல்லது பணி நீக்கம் செய்யலாம். ஏனெனில் ஒருவர் தன் மீதான வழக்கு விபரங்களை மறைப்பது ஒன்றே, அவரை பணிக்கு தகுதியில்லாதவராக ஆக்குகிறது.
4) ஒரு விண்ணப்பத்தில் குற்ற வழக்கு குறித்த விபரங்கள் தெளிவாக கேட்கப்படாமல் இருந்ததன் காரணமாகவோ அல்லது விண்ணப்பதாரருக்கு குற்ற வழக்கு குறித்து தெரியாமல் இருக்கும் சூழலில், அவருக்கு பணி வழங்குபவர், அது குறித்து முழுமையாக விசாரணை செய்த பின்னர், மேலே குறிப்பிட்ட ஒன்று அல்லது இரண்டாவது முடிவை எடுக்கலாம். இவ்வாறு விதிமுறைகளை வகுத்த உச்சநீதிமன்றம், இறுதியில் தயா சிங் யாதவை பணி நீக்கம் செய்தது சரியே என்று தீர்ப்பளித்தது. இந்த விவகாரம் ஒரு சாதாரண கான்ஸ்டபிள் பணிக்கு என்பது மிகவும் முக்கியமானது.
ஆனால் நாம் தற்போது விவாதித்து வருவது, மாவட்ட நீதிபதிகளின் நியமனம் தொடர்பானது. நாளை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட உள்ளவர்கள் குறித்தது. பாண்டியராஜனின் பணி நியமனம் ரத்து செய்யப்பட்டது சரியே என்று தீர்ப்பளித்த, நீதிபதிகள் ஜோதிமணி மற்றும் பால் வசந்தகுமார் அடங்கிய டிவிஷன் பென்ச், மாவட்ட நீதிபதிகள் நியமனம் குறித்து தங்கள் தீர்ப்பில் இவ்வாறு கூறுகிறார்கள்.
“இந்த வழக்கிலிருந்து விடைபெறுவதற்கு முன்பாக, நீதிபதிகள் தேர்வு குறிப்பாக மாவட்ட நீதிபதிகள் தேர்வு குறித்து சில கருத்துக்களை கூற விரும்புகிறோம். இந்த தேர்வில் நியமனம் செய்யப்படுவர்கள், மாவட்ட நீதிபதிகளாக, ஒரு மாவட்டத்தின் தலைமை நீதிபதியாக செயல்பட உள்ளார்கள். இதன் காரணமாக இந்த நியமனத்தை செய்பவர்களுக்கு மிக மிக அதிகமான பொறுப்பு உள்ளது. நீதித்துறை மீதும், ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கை உள்ளவர்கள், மிக மிக உயர்ந்த தகுதிகளையும், நேர்மையையும் கொண்டவர்கள் மட்டுமே இது போன்ற பதவிகளுக்கு நியமிக்கப்பட வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறார்கள். இந்த பதவிக்கு நியமனம் செய்யப்படுபவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தால் மட்டும் போதாது. அவர்கள் எந்த குற்றச்சாட்டுகளுக்கும் இடம் தராத, அப்பழுக்கற்ற வாழ்க்கை வாழ்பவர்களாக, இம்மியளவும் நேர்மை தவறாதவர்களாக இருக்க வேண்டும். நீதித்துறைக்கு வழங்கப்பட்டுள்ள அளவுக்கு அதிகமான அதிகாரம், இதை மிக மிக அவசியமாக்குகிறது.
நீதித்துறையின் சுதந்திரம் சமரசம் செய்து கொள்ள முடியாத ஒன்று. இப்படிப்பட்ட சுதந்திரம் வழங்கப்பட்டதற்கான காரணத்தை மறந்து விடக் கூடாது. நீதி பரிபாலனத்தின் முக்கியத்துவம் கருதியே இப்படியொரு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இது போன்ற சுதந்திரம் யாருக்கு வழங்கப்பட வேண்டுமென்றால், தனிப்பட்ட வாழ்வில் கூட நேர்மை தவறாதவர்களுக்குத்தான் வழங்கப்ப வேண்டும். ஒரு நீதிபதியின் கேரக்டரில் ஒரு குடிமகனுக்கு துளி சந்தேகம் வந்தாலும். அது நீதிபரிபாலனத்தின் அடிநாதத்தையே பாதிக்கும். இதுதான் உலகெங்கும் ஜனநாயகத்துக்கான அடிப்படை தூணாக இருந்து வருகிறது. ”
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த கருத்துரை நீதிபதிகளின் நியமனத்தின் முக்கியத்துவம் குறித்து தெளிவாக விளக்குகிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்தாலோ அல்லது விதிகளை மீறினாலோ, அதில் சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்தையே நாடுகிறார்கள். அது போன்ற வழக்குகளில் ஒரு தேர்வை எப்படி நடத்த வேண்டும், நேர்முகத் தேர்வுகளை எப்படி வெளிப்படையாக நடத்த வேண்டும் என்று பல்வேறு தீர்ப்புகளை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது.
ஆனால் சென்னை உயர்நீதிமன்றமே நடத்திய தேர்வில் பல விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றே இந்தத் தேர்வில் பங்கேற்றவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். யுபிஎஸ்சி மற்றும் டிஎன்பிஎஸ்சி ஆகிய தேர்வுகளில் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்ட பிறகு, ஒவ்வொது தேர்வாளரும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அன்றே வெளியிடப்படும். ஆனால் இந்த மாவட்ட நீதிபதிகள் தேர்வில் நேர்முகத் தேர்வு மதிப்பெண்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை. மேலும் நேர்முகத் தேர்வை நடத்துபவர்களிடம், அவர்கள் முன்னால் வரும் தேர்வாளர்கள் எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் குறித்த விபரம் தெரிவிக்கப்பட மாட்டாது. இது எதற்காகவென்றால், தேர்வுக் குழுவில் இருப்பவர்கள், தேர்வாளர்கள் எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் எந்த முடிவுக்கும் வந்து விடக் கூடாது என்பதற்காகவே. ஆனால் மாவட்ட நீதிபதிகளின் நேர்முகத் தேர்வில், தேர்வுக் குழுவில் அமர்ந்த நீதிபதிகள் அனைவரிடமும் வருபவர்கள் ஒவ்வொருவரும் எத்தனை மதிப்பெண்கள் பெற்றிருந்தார்கள் என்ற விபரம் அளிக்கப்பட்டிருந்தது.
இந்த நேர்முகத் தேர்வு நடக்கையில் அதை வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும் என்ற அடிப்படையான விதி கூட மாவட்ட நீதிபதிகள் நேர்முகத் தேர்வில் கடைபிடிக்கப்படவில்லை என்பது வேதனையான விஷயம்.
நாட்டில் மக்களின் இறுதி நம்பிக்கை நீதித்துறை மட்டுமே. அந்த நீதித்துறையில் உச்சநீதிமன்றம் வரை செல்ல வாய்ப்புள்ள மாவட்ட நீதிபதிகளை தேர்ந்தெடுக்கையில் அப்பழுக்கற்ற முறையில், குற்றச்சாட்டுகளுக்கு இடம் தராத வகையில் வெளிப்படையான தேர்வு முறையை கையாள வேண்டியது மிக மிக அவசியம். அப்படி குற்றச்சாட்டுகள் எழுந்தால், எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக அதற்கான தெளிவுகளை தர வேண்டியதும் உயர்நீதிமன்றத்தின் கடமை. இந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ள விபரங்கள் அனைத்தையும் உள்ளடக்கி ஒரு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் மார்ச் 2016ல் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்க நீதிபதிகள் சத்தியநாராயணா மற்றும் ராஜா அடங்கிய சிறப்பு அமர்வு உருவாக்கப்பட்டது. ஒரு ஆண்டு கடந்த பிறகும் கூட, இந்த அமர்வு இது வரை இதை விசாரிக்கவில்லை. வழக்கை தொடர்ந்தவர் இவ்வழக்கை விசாரணை செய்ய வேண்டும் என்று கோரி, பல முறை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு கடிதம் அனுப்பி விட்டார். ஆனால் இந்த வழக்கு விசாரணைக்கு வரவேயில்லை. விசாரணை நடைபெறுமா என்பதே சந்தேகமாக இருக்கிறது.
இது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான மாவட்ட நீதிபதிகள் பணியாற்றும் ஒவ்வொரு நாளும் நீதிப் பிறழ்வாகும். இதை உடனடியாக சரி செய்ய வேண்டியது நீதிமன்றத்தின் கடமை. சென்னை உயர்நீதிமன்றம் இதில் உடனடியாக தலையிட்டு நீதியை நிலைநாட்டும் என்று நம்புவோம்.
TAMIL NADU IS A STATE WHERE. EX-(Dead)CM, Present CM, Chief Secretary, Commisoiner, Medical University VC, Judges, MOST TOP Burecracy has Pending corrupt charges against them NOW. GOD SAVE TAMILNADU
JUDGEMENT IS FOR SALE SINCE DECADES.
EVERY THING SHOULD BE ONLINE AND ALL DEPARTMENTS SHOULD BE INTEGRATED ON LINE AND WITH AADHAR.
Mr.Kamalakannan Sir, The Rule is for common citizens and people like you and me. Will all MP and MLA, Ministers publish their property status every month to the public. They are so strict about linking everything to everyone. Has the IT raids or the Vigilance any of the potential criminals like Vijayabhaskar, Ram Mohan rao, Geetha Lakshmy, Kalanidhi maaran, Dayanidhi maran. Everything is linked there. people should only vote. The politicians control judiciary, law, legislation, governance, bureaucracy, education, healthcare.
One of the most silly comment in your factual article is “நாட்டில் மக்களின் இறுதி நம்பிக்கை நீதித்துறை மட்டுமே.”
Ooruke buthi solra magarasan neenga, i never thought you will be so Innocent
We can link aadhar when fir is filed in the future. Which may help identify the criminals who opt for higher posts.
thirudarkalaal, thirudarkalukkaaka nadakkum thiruttu arasu
Hi
Add me
என்ன கா்மமோ இந்த தமிழ்நாட்லதான் எல்லாம் தலைகீழாக நடந்து கொண்டு வருகிறது. ஆண்டவனே தமிழ்நாட்டை காப்பாற்றுஃ நீதியே உன் கதி இது தானா?
Savukku, your Articles are truth and bring out the facts with data and figures along with evidences. But when we look at the history, Justice Sadasivam was tipped to be a candidate fr President because he relieved Amit shah and BJP people from imporant cases. Prathiba Patil who was close associate to Congress amidst scam was made President of INdia. Now RSS candidate has been fielded for the highest position.
Judiciary is the most corrupt as per the following evidence
a. Minister Vijaybhaskar , so far not arrested
b. Ram Mohan rao, joins the duty back,
c. Mr.Pachaimuthu, SRM Founder and chairman, no action
d. Mr.Jagathrakshagan not arrested so far
e. Mr.Karthi Chidambaram not arrested so far
f. Mr.Kalanidhi and Dayanidhi let off, without any problem
g. Ms.Kanimozhi and Mr.Raja will be let off
h. Benze Vacations club Mr.Saravanan fraudulent collection of money, no case being taken up for registration
i. Rajini wife Latha caught up on many cases, arrest warrant raised but no action
j. Natham Viswanathan, no arrest so far
k. Vaigunda Rajan on Granite scam, no action so far
l. Many more…..
Judiciary states, Show me the man, I will tell you the law. There is no law common for all.
Today the country is yet to recover from demonetisation, GST again pulls back the economy. It is the Maharajas Modi, Arun Jaitley who decide the fate of 120 crore Indian fate. The education system, tax system, Revenue system, banking system, Judiciary system, Election system have all been affected by the Kingdom rule backed by the Judiciary, CBI, and central Agencies including the Election Commission.
The Media like Arnob Goswami a pro BJP person tries to impersonify the facts and figures for TRP rating.
Judiciary does not exist, Injusitce is Justice in all sectors .
நீதிபதி கர்ணன் குற்றச்சாட்டிலும் உண்மை உள்ளது; அவருக்கு ஏன் சிறை.?
இந்த நாட்டை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.
I have no faith in our judicial accountability .shame to live in India. European countries are best to live for honest man
நீதிபதிகள் லஞ்சம் வாங்குவதாக சொன்னனால் மனநலப்பாதிப்பு என்றெல்லாம் சொல்லி சிறையில் பொற்றுவாங்க இந்த நாட்டில்.