மதுரை மாவட்ட ஆட்சியராக இருக்கும், சகாயத்தைக் கண்டு, அஞ்சா நெஞ்சன் என்ற பெயரை வைத்துக் கொண்டு, அழகிரி, அஞ்சி நடுங்குவது அனைவரும அறிந்ததே. இந்த சகாயத்தின் தொடர் நடவடிக்கைகளால், அதிர்ந்து போயுள்ள அழகிரி, எப்படியாவது, சகாயத்தை மாற்ற வேண்டுமென்று, கடுமையான முயற்சிகளை எடுத்து வருகிறார். முதல் கட்டமாக, தலைமைச் செயலாளர் மற்றும், திமுகவின் மகளிர் அணித் தலைவர் மாலதியிடம் சகாயத்தை மாற்ற வேண்டும் என்று புகார் ஒன்று கொடுத்தார்.
இதற்கு ஒத்து ஊதும் வகையில், மதுரை கிழக்கு பகுதியின் தேர்தல் அதிகாரியாக பணி புரியும், சுகுமாறன் என்ற அதிகாரியை விட்டு, சகாயம் மீது பொய்ப் புகார் கொடுக்கச் செய்தார். சுகுமாறன் தனது புகாரில், சகாயம், அழகிரி மீது பொய் வழக்கு பதியச் சொல்லி தன்னை வற்புறுத்துவதாகவும், அதனால் தன்னை பணியிலிருந்து விடுவிக்குமாறும் கோரியிருந்தார்.
அழகிரிக்கு தலையில் மூளை என்று ஏதாவது இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. தேர்தல் தேதி அறிவிக்கப் பட்ட உடனேயே, அதிகாரிகளை மாற்றுவது உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் தேர்தல் ஆணையம் வசம் வந்து விடும். அவர்களின் கட்சித் தலைவி மாலதி நினைத்தால் கூட மாற்ற முடியாது. அப்படி இருக்கையில், மாலதிக்கு, சகாயத்தை மாற்றச் சொல்லி கடிதம் அனுப்புகிறார். அந்தக் கடிதத்துடன், சுகுமாறன் தேர்தல் ஆணையத்துக்கு சகாயம் அனுப்பியிருந்த, கடிதத்தின் நகலையும் இணைத்திருந்தார். தேர்தல் அதிகாரிக்கு சுகுமாறன் எழுதிய கடிதத்தின் நகல், அழகிரிக்கு எப்படிப் போனது என்பது ஒன்றும் பெரிய ரகசியம் அல்லவே ?
இந்நிலையில், இந்தப் புகார் அழகிரியின் தூண்டுதலால் செய்யப் பட்டது என்பதை நன்கு அறிந்த தேர்தல் ஆணையம், முதல் கட்டமாக, சுகுமாறனை மதுரையை விட்டு, வேறு மாவட்டத்துக்கு மாற்றுமாறு உத்தரவிட்டது. அடுத்த கட்ட நடவடிக்கையாக, சுகுமாறன் மீது, கடும் தண்டனை வழங்க வகை செய்யும், பிரிவின் கீழ் துறை நடவடிக்கை எடுக்கவும், சுகுமாறனை பணி இடைநீக்கம் செய்யவும், உத்தரவிட்டுள்ளது.