2010 டிசம்பர் 1. இதுதான் இறுதி நாள். அதற்கு முன்பாக சவுக்குக்கு முடிவு கட்டியே தீர வேண்டும். இதுதான், வெள்ளை மாளிகையில் நேற்று எடுக்கப் பட்ட முடிவு.
இந்த வெள்ளை மாளிகையின் சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்றோர் விபரம்.
1) திரு.கே.ராதாகிருஷ்ணன், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி
2) திரு.சுனில் குமார், இணை இயக்குநர், லஞ்ச ஒழிப்புத் துறை
3) காமராஜ் என்கிற குருமாராஜ், நக்கீரன் இணை ஆசிரியர்
4) ராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர ராசகுல திலக ராஜ பராக்கிரம வீர அதி உத்தம ஜாபர் சேட்
இந்தக் கூட்டத்தில் சவுக்கு குறித்து விரிவான விவாதம் மேற்கொள்ளப் பட்டு உள்ளது. குறிப்பாக சுனில் குமார், கடுமையான கோபத்தோடு, சவுக்கை ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்று கூறியுள்ளார்.
முதலில் ஆலோசிக்கப் பட்ட திட்டம், சவுக்கை ஏதாவது பெண் விவகாரத்தில் சிக்க வைப்பது. அதாவது, சவுக்கின் பெண் தோழர்கள் யாராவது ஒருவர் மேல், வழக்கு போட்டு, அதில் சவுக்கையும் சிக்க வைப்பது. இந்தத் திட்டம், சரி வர இருக்குமா என்று யோசித்துப் பார்த்ததில், இத்திட்டம், சரிப்பட்டு வராது என்று முடிவெடுக்கப் பட்டது.
அடுத்த திட்டம், யாராவது ஒரு பெண் ஒருவரை வைத்து, சவுக்கு அந்தப் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டார் என்று அந்தப் பெண்ணை வைத்து புகார் கொடுக்க வைத்து, சவுக்கை மீண்டும் ஒரு முறை கைது செய்து சவுக்கையும் அவர் குடும்பத்தினரையும் அவமானப் படுத்துவது.
அடுத்த திட்டம், சவுக்கின் மீது எடுக்கப் பட்டு வரும் துறை ரீதியான நடவடிக்கைகளை துரிதப் படுத்தி சவுக்குக்கு நெருக்கடி கொடுப்பது. இத்திட்டம் செயல்படுத்தப் பட்டு விட்டது.
அடுத்து ஜாபர் சொன்ன திட்டம், சவுக்கு சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, பைக்கில் யாரையாவது விட்டு, தகராறு செய்யச் சொல்லி, இதுதான் சாக்கு என்று, அடி பின்னி எடுப்பது. இந்தத் திட்டம், பெரும்பாலானவர்களால் ஆமோதிக்கப் பட்டு உள்ளது. இத்திட்டத்தை ஆமோதித்தவர்கள் சொன்ன விஷயம், சவுக்கை ஏற்கனவே கைது செய்தது, சரிவர வெற்றி பெறவில்லை என்பதால், யாரையாவது விட்டு, சவுக்கிடம் தகராறு செய்து, கையை காலை உடைத்து விட வேண்டும், அப்போதுதான் சரிப்பட்டு வருவான் என்பதுதான் அது.
அடுத்த திட்டம், சவுக்கின் மீது இருக்கும், தொலைபேசி ஒட்டுக் கேட்பு வழக்கையும், மதுரவாயலில் ஒருவரை “செங்கலில் தாக்கிய“ வழக்கையும் துரிதப் படுத்துவது. தொலைபேசி ஒட்டுக் கேட்பு வழக்குக்கு, நீதிமன்ற தடையாணை இருப்பதால், உடனடியாக விரைவு படுத்த முடியாது.
சவுக்கு மதுரவாயல் காவல்நிலையத்தில் கைது செய்யப் பட்ட வழக்கு என்ன ஆனது என்ற அப்டேட் சவுக்கு வாசகர்களுக்கு வழங்கப் படவில்லை.
சவுக்குக்கு, பூந்தமல்லி நீதிமன்ற நடுவர், 30 நாட்களுக்கு மதுரவாயல் காவல்நிலையத்தில் கையொப்பம் இட வேண்டும் என்ற நிபந்தனையோடு பிணை வழங்கினார்.
சவுக்கு, சிறையிலிருந்து வெளி வந்த பின், மதுரவாயல் காவல்நிலையத்தில் கையொப்பம் இடச் சென்ற போது, அங்கே இருந்த காவலர்கள், “அய்யா வந்ததும் பார்த்து விட்டு போங்கள்“ என்று கூறினர். காலை 9.30 மணி முதல், 12 மணி வரை, அய்யா வரவேயில்லை. அடுத்து ஒரு பொய் வழக்குக்கு தயாரிப்பு வேலைகளை செய்கிறார்கள் என்று உணர்ந்த சவுக்கு, அங்கிருந்து வெளியேறி, அதற்குப் பிறகு கையொப்பம் இடவேயில்லை.
காவல்துறையால் கைது செய்யப் பட்டு, நிபந்தனைகளை நிறைவேற்றாத எத்தனையோ வழக்குகள், மதுரவாயல் காவல்நிலையத்திலும், பல்வேறு காவல்நிலையங்களிலும் நிலுவையில் இருந்தாலும், சவுக்கின் வழக்கில் மட்டும், கையொப்பம் இடாததால், பிணையை ரத்து செய்யுமாறு, பூந்தமல்லி நீதிமன்றத்தில், மதுரவாயல் காவல் ஆய்வாளர் தமிழ்வாணன், மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த மனு விசாரணைக்கு வந்த போது, சவுக்கு சார்பாக, நடந்த உண்மைகளை எடுத்துக் கூறி, உயர்நீதிமன்றத்தின் அருகில் உள்ள, எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் கையெழுத்திட, சவுக்கு தயார் என்றும், நிபந்தனையை மாற்றி உத்தரவிடுமாறும் மனு செய்யப் பட்டது. இந்த மனுவுக்கு, காவல்துறை இன்று வரை மனு தாக்கல் செய்யாமல், இழுத்தடித்துக் கொண்டு உள்ளனர். இதனால், வாரம் ஒரு முறையாவது, பூந்தமல்லி நீதிமன்றம் சென்று அரை நாளுக்கும் மேலாக காத்துக் கிடக்க வேண்டியுள்ளது.
ஆக, இந்த வழக்கிலும், நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பது அடுத்த திட்டம்.
சவுக்கின் கணினியை ஹேக் செய்ய பிரத்யேகமாக பிறைசூடிய மாதவன் என்ற தொழில் நுட்ப உதவி ஆய்வாளர் நியமிக்கப் பட்டுள்ளார். இந்த பிறை சூடிய மாதவனுக்கு முழு நேர வேலை அடுத்தவர் கணினியை ஹேக் செய்வது, கணினிக்கு வைரஸ் அனுப்புவது, WORM மற்றும் TROJAN அனுப்பி, கணினியிலிருந்து பாஸ்வேர்டை திருடுவது, தவறான மின்னஞ்சல் அனுப்பி அடுத்தவர்களை சிக்கலில் மாட்டி விடுவது, இது மட்டும் தான்.
இந்த பிறை சூடிய மாதவன், ஜாபரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளார். சாதாரண உதவி ஆய்வாளரான இவருக்கு, ஜாபர் சேட், குளிர் சாதன வசதி உள்ள காரை வழங்கியுள்ளார். இவர் செய்யும் சிறப்பான வேலைகளுக்காக மாதந்தோறும், 20,000 ரூபாய் ரகசிய நிதியிலிருந்து இவருக்கு வழங்கப் படுகிறது.
அடுத்த நபர், சார்லஸ் என்பவர். இவர் தமிழ்நாடு சிறப்பு காவல் படையைச் சேர்ந்த ஆய்வாளர். இவருக்கு முழுநேர வேலை Surveillance எனப்படும், ஆட்களை பின்தொடரும் வேலை. இவரைப் பற்றிய கூடுதல் தகவல், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை பின் தொடர்ந்து, அவர்கள் ரகசியமாக செல்லும் இடங்களை அறிந்து, அத்தகவலை ஜாபர் சேட்டிடம் சொல்லுவது மட்டுமல்லாமல், சம்பந்தப் பட்ட அதிகாரிகளை மிரட்டி பணம் பறிப்பார் என்பதுதான் அது.
இந்த சார்லஸ், சவுக்கை 24 மணி நேரமும் பின் தொடரும் படி பணிக்கப் பட்டுள்ளார் என்று தகவல்கள் கூறுகின்றன. இந்த நபர், சவுக்கை பின் தொடர்ந்து கொடுத்த அறிக்கை நேற்று நடந்த கூட்டத்தில் விவாதிக்கப் பட்டுள்ளது.
இந்த அடிப்படையில், உயர்நீதிமன்றத்தின் விடுமுறை நாட்களுக்குள்ளாகவே சவுக்கை ஏதாவது ஒன்று செய்து, சவுக்கை ஒழித்தே தீர வேண்டும் என்று முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சவுக்கு, சவுக்கின் நண்பர்கள் என்று அத்தனை பேரின் தொலைபேசிகளும் ஒட்டுக் கேட்பு வளையத்தில் கொண்டு வரப் பட்டுள்ளன.
இவர்களின் இந்தத் திட்டங்களுக்கெல்லாம், சவுக்கின் பதில் என்ன என்பதை பல முறை சொல்லியும், ஜாபர் சேட்டுக்கு புத்தி வரவில்லை என்றால் என்ன செய்வது ?
ஜாபர்சேட்டைப் போலவும், சுனில் குமாரைப் போலவும், குருமாராஜை போலவும், ராதாகிருஷ்ணனைப் போலவும், சவுக்குக்கு கோடிக்கணக்கான சொத்துக்கள் ஏதும் கிடையாது. அதனால், அதைப் பாதுகாக்க வேண்டும் என்ற அச்சமும் கிடையாது. “காதற்ற ஊசியும் வாராதுகண் கடைவழிக்கே“ என்ற உண்மை சவுக்குக்கு நன்றாகவே தெரியும்.
ஜட்டி கூட இல்லாமல், இரவு முழுவதும் காவல்துறையினரிடம் அடி வாங்கிய பிறகு, வேறு என்ன அவமானத்தை சவுக்குக்கு செய்து விட முடியும் என்று நினைக்கிறீர்கள் ஜாபர் சேட் ?
சவுக்கிடம், வாக்குமூலம் வாங்கி, உங்கள் எதிரியான அந்த உயர் அதிகாரியை தொலைபேசி ஒட்டுக் கேட்பு வழக்கில் சிக்க வைக்கத் தான் அந்த அடி என்பது சவுக்குக்கு தெரியாதா ? அந்த அதிகாரி பேரைச் சொன்னால், அடி நிற்கும் என்று சிபி.சிஐடி போலீசார் சவுக்கிடம் பேரம் பேசவில்லையா ? அவ்வளவு அடி வாங்கிய பிறகும், எந்த அதிகாரியின் பேரையும் சொல்ல சவுக்கு மறுத்து விட்டது என்பதை, சைபர் கிரைம் டிஎஸ்பி பாலு சொல்லவில்லையா ? அதற்கு பிறகும், உண்மை கண்டறியும் சோதனை என்று பெங்களுரு அழைத்துச் செல்ல முயன்ற உங்கள் அறிவீனத்தை என்னவென்று சொல்வது ஜாபர் சேட் ? அவ்வளவு அடி வாங்கியும் சொல்லாத உண்மையையா சோடியம் பெண்டதால் சொல்ல வைக்கப் போகிறது ?
ஏற்கனவே, மதுரவாயல் காவல்நிலையத்தில் ஒரு பொய்வழக்கு போட்டு, கடுமையான பின்னடைவைச் சந்தித்தீர்களே….. சவுக்கின் கைதுக்குப் பிறகு, சவுக்கு அடைந்த பாப்புலாரிட்டியை பார்த்தீர்களா ? முன்பு சவுக்கு என்பது தனி நபர். இன்று சவுக்கு ஒரு இயக்கம். சவுக்கின் வாசகர்கள் சவுக்கின் மீது பொழியும் அன்பைப் பார்த்தீர்களா ? இந்த அன்பை மீறி சவுக்கை என்ன செய்து விடமுடியும் என்று நினைக்கிறீர்கள் ஜாபர் சேட் ?
உங்களுக்காகவே, புனித குரானில் ஒரு அற்புதமான வாசகம் இருக்கிறது ஜாபர் சேட். நீங்கள் படித்திருக்க மாட்டீர்கள். ஏனென்றால் உங்களுக்கு உங்கள் சொத்துப் பத்திரங்களையும், அடுத்தவர் உரையாடலை ஒட்டுக் கேட்கவுமே நேரம் பத்தாது… குரான் படிக்க எங்கிருந்து நேரம் இருக்கப் போகிறது….
“நீங்கள் எங்கிருந்தாலும் மரணம் உங்களை அடைந்தே தீரும். நீங்கள் உறுதிமிக்க கோட்டைகளில் இருந்தாலும் சரியே ! “
திருக்குர் ஆன் 4: 78
சுனில் குமார்…. உங்களின் சாயம் வெளுத்துப் போய், ராஜா வேஷம் கலைந்து போனதில் உங்களுக்கு இருக்கும் கோபத்தை புரிந்து கொள்ள முடிகிறது. அதனால் மீண்டும் மீண்டும் தவறு செய்யாதீர்கள். பகவத் கீதை படித்திருப்பீர்கள். இந்த வாசகத்தை நினைவு கூறுங்கள்
“Delusion arises from anger. The mind is bewildered by delusion. Reasoning is destroyed when the mind is bewildered. One falls down when reasoning is destroyed.”
ஜாபர் சேட்….. சவுக்கு உங்களுக்கு சுட்டிக் காட்ட விரும்புவது மாவோவின் மேற்கோளை…
மரணம் பொதுவானது..
சில நேரங்களில் இறகை விட லேசானது
சில நேரங்களில் மலையை விடக் கடினமானது.
மக்களுக்காக வாழ்ந்து மடிதல் என்பது
மலையை விடக் கடினமானது.
ஏகாதிபத்தியத்திற்கும், எதேச்சதிகாரத்திற்கும்
அடிமைப் பட்டுச் சாவதென்பது
இறகை விட லேசானது.
ஆக மரணம் பொதுவானது.
மற்றொன்றையும் நினைவில் வையுங்கள் ஜாபர் சேட்.
மாற்றத்தை தவிர மாறாதது எதுவுமேயில்லை. உங்கள் பதவி உட்பட.
காமராஜுக்கும், ராதாகிருஷ்ணனுக்கும், எந்த மேற்கோளையும் சவுக்கு காட்ட விரும்பவில்லை. ஏனென்றால், இவர்கள் இருவருமே, தங்களை மிகப் பெரிய அறிவாளிகள் என்று நினைத்துக் கொள்பவர்கள். இவர்களுக்கு தெரியாதது ஒன்றுமே இல்லை என்று நினைப்பவர்கள். அதனால், இவர்கள் அழிவை இவர்களே தேடிக் கொள்வார்கள்.
சவுக்கு, சமூகத்தின் எரிதழல் . தொடுபவன் எரிவது உறுதி.