நந்தவனத்தில் ஓர் ஆண்டி, அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி – மெத்தக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி என்ற சித்தர் பாடல் யாருக்கு பொருந்துமோ இல்லையோ, பன்னீர்செல்வத்துக்கு நன்றாகவே பொருந்தும். தர்மயுத்தம் என்று ஒரு பிரம்மாண்டமான ஓரங்க நாடகத்தை ஆறு மாதத்துக்கு நடத்தி விட்டு, தொடங்கிய புள்ளியை விட மோசமாக பின்தங்கிய நிலையை அடைந்துள்ளார்.
பல்வேறு பிஜேபி தலைவர்களுக்கே சந்திப்பதற்கு நேரம் ஒதுக்காமல் புறக்கணிக்கக் கூடிய ஒரு நபரான நரேந்திர மோடி, தன்னை ஒரே வாரத்தில் நான்கு முறை சந்தித்ததும், பன்னீர்செல்வம் வானத்திலேயே பறக்கத் தொடங்கினார். மோடி வாரத்துக்கு நான்கு முறை சந்திக்கும் வகையில் நாம் அத்தனை முக்கியத்துவம் பெற்றவரா என்று தன்னைத் தானே கிள்ளிப் பார்த்துக் கொண்டார். காரியம் ஆகும் வரை, எதையும் செய்ய தயங்காதவர் மோடி என்பதை இப்போதாவது பன்னீர் உணர்ந்து கொண்டாரா என்று தெரியவில்லை. 2002 கோத்ரா கலவரத்துக்கு பிறகு, மோடியை குஜராத் முதல்வர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று வாஜ்பாய் முடிவெடுத்தபோது, அந்த முடிவை மாற்ற வைத்து, கோவா மாநாட்டில் மோடியின் பதவியை காப்பாற்றுவதில் முக்கிய பங்காற்றியவர் அத்வானி. அந்த அத்வானியை கடைசியாக முதியோர் இல்லத்தில் சேர்த்த விபரத்தை பன்னீர் அறிந்திருப்பாரா என்று தெரியவில்லை. அதனால்தான், இணைப்புக்கு பிறகு பல முறை முயன்றும் பன்னீர்செல்வத்தால் அத்தனை எளிதாக மோடியை சந்திக்க முடியவில்லை. மோடியின் காரியம்தான் முடிந்து விட்டதே… பிறகு என்ன ?
மோடியின் முழுமையான நம்பிக்கையை பெற்றுள்ளதாக கருதும் எடப்பாடி பழனிச்சாமி எப்படியெல்லாம் பன்னீர்செல்வத்தை சிறுமைப் படுத்த முடியுமோ அவை அத்தனையையும் செய்கிறார். அதே நேரத்தில் மோடியை திருப்திப் படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் செய்கிறார். தன்னுடைய பெயரையே கோட்டில் எம்பிராயிடரி செய்து கொண்டு அதை பார்த்து ரசிக்கும் மனநிலை உடைய மோடிக்கு, பிடிக்கும் என்ற அற்ப காரணத்துக்காகவே டெங்கு விழிப்புணர்வு தொடர்பாக தமிழக அரசு சார்பில் உருவாக்கப்படும் அத்தனை பேனர்களையும் காவி நிறத்தில் மாற்ற உத்தரவிட்டார் எடப்பாடி. இப்படி காவி நிறத்தில் பேனர்கள் வைப்பதால் தமிழகத்தில் பிஜேபி வளர்ந்து ஒரு பிரம்மாண்டமான கட்சியாகி விடுமா என்ன ? நிச்சயம் கிடையாது. ஆனால் எடப்பாடிக்கு இப்படியெல்லாம் செய்தால் மோடியின் நம்பிக்கையை பெறுவோம் என்று உள்ளார்ந்த நம்பிக்கை.
தெருவில் பிச்சைக்காரனாக படுத்துக் கிடந்த ஒருவனை, குளிப்பாட்டி உணவு அளித்து பென்ஸ் காரில் ஒருவர் அழைத்துச் சென்றால், அவன் எப்படி நெகிழ்ந்து போவான் ? ரோட்டுல பிச்சை எடுத்துக்கிட்டு இருந்த என்னை மவராசன் பென்ஸ் கார்ல கூட்டிட்டு போறான் என்று நினைப்பானா இல்லையா அப்படித்தான் தன்னை கருதிக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. தான் பதவியில் நீடிக்கும் ஒவ்வொரு வினாடியும் மோடி போடும் பிச்சை என்றே கருதுகிறார் எடப்பாடி. அதனால்தான் காவி பேனர்கள் போன்ற அற்ப விவகாரங்கள்.
பன்னீர் செல்வத்துக்கோ, இருதலைக் கொள்ளி எறும்பு போன்ற நிலை. தர்மயுத்தத்தை உடனே முடிவுக்கு கொண்டு வா என்று மோடியிடமிருந்து ஒரு புறம் நெருக்கடி. மறுபுறம் தனக்கு உண்டான மரியாதையையும் காப்பாற்ற வேண்டும். ஆனால் மான மரியாதையையெல்லாம் எதிர்ப்பார்த்தால், அரசியலில் கரையேற முடியாது என்பதை பன்னீர் உணர்ந்தார். ஜெயலலிதா இருந்தவரை, அவரின் கார் டயரை நாவால் சுத்தம் செய்து கொண்டிருந்தவர்தானே பன்னீர் ? அது மட்டுமல்லாமல் மான ரோசம் உள்ளவனுக்கு அதிமுகவில் என்ன வேலை ?
மான ரோசம்தான் வேண்டாம். பதவியுமா வேண்டாம் என்று கூறுவார் பன்னீர். சமரசமாக பன்னீருக்கு ஒதுக்கப்பட்ட பதவிதான் துணை முதல்வர் என்ற பதவி. துணை முதல்வர் பதவியோடு தனக்கு கட்சியின் பொதுச் செயலாளர் பதவியும் கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்திருந்த பன்னீர்செல்வத்துக்கு பொதுச் செயலாளர் பதவி கிடையாது என்பதே பெரும் அதிர்ச்சியாக இருந்தது. திரும்ப திரும்ப அதிர்ச்சியடைந்தால் மீண்டும் ரோசி டீக்கடைக்கே செல்ல வேண்டியதாக இருக்கும் என்பதை உணர்ந்தே தலைமை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிக்கு ஒப்புக் கொண்டார். அதன் பிறகு நடந்தவைகள்தான் பன்னீர் போன்ற தடித்த தோலுடைய நபருக்கே எரிச்சலையூட்டியது.
துணை முதல்வர் என்றதும், முதலமைச்சருக்கு அடுத்ததாக, இதர அமைச்சர்களை விட தாம் ஒரு படி மேல் என்றுதான் பன்னீர்செல்வம் நம்பிக் கொண்டிருந்தார். ஆனால், நீயும் மற்றொரு அமைச்சர் மட்டுமே. துணை முதல்வருக்கும் பிற அமைச்சர்களுக்கும் எந்த வேறுபாடும் கிடையாது என்பதை தெள்ளத் தெளிவாக உணர்த்தினார் எடப்பாடி.
பன்னீர்செல்வம் மாற்ற வேண்டும் என்று கூறிய மூன்று காவல்துறை அதிகாரிகளை மாற்ற எடப்பாடி சம்மதிக்கவில்லை. சரி, அதுதான் போகிறது முதல்வருக்கு 5 ஐஏஎஸ் அதிகாரிகள் செயலாளர்களாக இருக்கிறார்கள். தனக்கு குறைந்தது மூன்று ஐஏஎஸ் அதிகாரிகள் செயலர்களாக இருக்க வேண்டும் என்று அதற்காக மூன்று அதிகாரிகளின் பட்டியலை எடப்பாடியிடம் அளித்தார் பன்னீர்செல்வம். அந்த பட்டியலை அப்படியே வாங்கி குப்பையில் போட்டார் எடப்பாடி.
சந்திரசேகர் சகாமூரி என்ற 2010 பேட்ச்சை சேர்ந்த தமிழ் சுத்தமாக தெரியாத ஒரு அதிகாரியை துணை முதல்வரின் செயலாளர் என்று நியமித்தார் எடப்பாடி. அது மட்டுமல்ல. பன்னீர்செல்வத்துக்கு தெரிந்த ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்தால் தகவல் தம் காதுகளுக்கு வராது என்பதாலேயே தமிழ் தெரியாத ஒரு அதிகாரியை நியமித்தார் எடப்பாடி.
அது மட்டுமல்லாமல், பன்னீர்செல்வம் நிர்வகிக்கும் நிதித்துறை, சிஎம்டிஏ போன்ற துறைகளின் செயலாளர்களுக்கு எடப்பாடி வழங்கிய அறிவுரை, எந்த முக்கிய முடிவுகளாக இருந்தாலும், தனது ஒப்புதல் இல்லாமல் அரசாணை வழங்கப்படக் கூடாது என்பதே அந்த உத்தரவு. பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கப்பட்ட துறைகளில் வருமானம் வரக் கூடிய ஒரே துறை சிஎம்டிஏ. இதிலும் பன்னீர்செல்வம் சம்பாதிக்க முடியாமல் முட்டுக்கட்டை போட்டார் எடப்பாடி. இது போக பன்னீர்வசம் உள்ள துறைகள் வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி, குடிசை மாற்று வாரியம், ஆகியவை. இந்த அத்தனை துறைகளிலுமே பெரிய அளவில் சம்பாதிக்க முடியாது. அரசு ஊழியர் குடியிருப்போ, இதர குடியிருப்புகளையோ ஒதுக்கீடு செய்வதற்காக யாரும் கோடிகளில் பணம் தரப் போவதில்லை. இதில் வரும் சிறு தொகையையும் பன்னீர் வாங்கிக் கொள்வார் என்பது வேறு விஷயம்.
இப்படி முதல் நாள் முதலாகவே பன்னீரை ஓரங்கட்டி சிறுமைப்படுத்தும் பணியை எடப்பாடி செவ்வனே செய்து வந்தார். அதன் பிறகு வருமானம் வரக் கூடிய சில முக்கியமான கோப்புகளுக்கு எடப்பாடி ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்தார் என்பதும் பன்னீரின் எரிச்சலுக்கு காரணமாயிற்று.
பன்னீரிடம் சிபாரிசுக்கு வந்த பல்வேறு அரசு அதிகாரிகளுக்கு விரும்பும் இடத்தை பெற்றுத்தரும் அதிகாரம் கூட பன்னீருக்கு இல்லாமல் போயிற்று. முக்குலத்தோர் அதிமுக ஆட்சி வந்தாலே மிதமிஞ்சிய அதிகாரத்தோடு இருப்பார்கள். ஆனால் இன்று நிலைமை தலைகீழ். கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த எந்த அரசு அதிகாரி என்ன உதவி கேட்டாலும் அது செய்து முடிக்கப்பட்ட பிறகே பிற சமூகத்தை சேர்ந்தவர்களின் கோரிக்கை பரிசீலிக்கவே படும் என்பதுதான் இன்று நிலைமை. தன்னைச் சார்ந்தவர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும், விரும்பிய போஸ்டிங்கை கூட பெற்றுத் தர முடியாத ஒரு கையறு நிலையில்தான் பன்னீர்செல்வம் இருந்து வருகிறார்.
கட்சி நிர்வாகிகள் நியமனம் அனைத்திலும், கவுண்டர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. பன்னீரின் ஆதரவாளர்கள் தர்மயுத்தத்துக்கு பிறகு தாய்க் கழகத்தோடு இணைந்தனர். ஆனால் இவர்களில் ஒருவருக்கு கூட கட்சியில் நல்ல பதவிகள் இது வரை வழங்கப்படவில்லை. பன்னீர்செல்வம் என்னதான் சுயநலமியாக இருந்தாலும், தன்னைச் சார்ந்தவர்களுக்கும், தன் ஆதரவாளர்களுக்கும் கட்சிப் பதவியைக் கூட வாங்கித் தரவில்லையென்றால், அவர் செல்லாக் காசாக ஆகி விடுவார் என்பதை உணராதவர் அல்ல பன்னீர்.
கடந்த வாரம் தனது சொந்த ஊரான வத்திராயிருப்புக்கு பன்னீர்செல்வம் சென்றார். கடந்த முறை தர்ம யுத்தம் நடத்திக் கொண்டிருக்கையிலும் சென்றார். அப்போது பன்னீர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும், சொந்த வாகனத்தை எடுத்துக் கொண்டு பன்னீர்செல்வம் பின்னால் அணி வகுத்து வந்தனர். ஆனால் கடந்த வாரம் பன்னீர்செல்வம் வத்திராயிருப்பு சென்றபோது, மூன்று கார்கள் கூட வரவில்லை. அவரை கடந்த முறை வாழ்த்திப் பேசி சம் சமூகத்தை பெருமைப் படுத்துகிறீர்கள் என்று கூறியவர்கள், இந்த முறை தலை வைத்தும் படுக்கவில்லை. மேலும், ஆட்சியில் இருந்த முக்குலத்தோரை படியிறக்கி விட்டு, கவுண்டர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்றே பன்னீர் ஆதரவாளர்களில் பலர் கருதுகின்றனர். கவுண்டர்களுக்கும், தேவர்களுக்கும் யார் உயர்ந்தவர் என்ற போட்டி பல காலமாகவே இருந்து வருகிறது.
இந்த காரணத்தினால்தான் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களாக இருந்த பலர், தினகரன் பக்கம் சாய்ந்து விட்டனர். இவையெல்லாம் பன்னீர்செல்வத்தை உறுத்திக் கொண்டேதான் இருந்தது. ஆனால் ஒரு முறை தர்மயுத்தம் நாடகம் போட்டாயிற்று. அடுத்து என்ன நாடகம் போடுவது என்பது பன்னீருக்கு புரியவில்லை.
பன்னீருக்கு நிகழ்ந்து வரும் அவமானங்களின் உச்சகட்டமாகத்தான் கடந்த வாரம் நடந்த ஆளுனர் பதவியேற்பு விழா. எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடக்கும் இடங்களிலெல்லாம் பன்னீர்செல்வம் மேடையில் எடப்பாடியோடு அமர வைக்கப்பட்டிருந்தார். இதே போல கடந்த வாரம் நடந்த ஆளுனர் பதவியேற்பு விழாவிலும் நாம் மேடையில் அமர வைக்கப்படுவோம் என்றே பன்னீர்செல்வம் எதிர்ப்பார்த்து காத்திருந்தார். ஆனால், பன்னீருக்கு மேடையில் இடம் ஒதுக்கப் படவில்லை. இதர அமைச்சர்களோடு அமைச்சர்களாக கீழேதான் அமர வைக்கப்பட்டிருந்தார். துணை முதல்வர் பதவி மரபில் இல்லை என்ற காரணம் அவருக்கு சொல்லப்பட்டது.
இவையெல்லாம் சொத்தைக் காரணங்கள் என்பதை பன்னீர் அறியாமல் இல்லை. மேடையில் பன்னீர்செல்வத்துக்கு இடம் போட்டிருந்தால், ஆளுனர் புரோகித் கோவித்துக் கொண்டு பதவியேற்காமல் போய் விடுவாரா என்ன ? இவையெல்லாம் பன்னீருக்கு நன்றாகவே தெரியும். இரட்டை இலை சின்னம், எடப்பாடி தரப்புக்கு கிடைத்தால், அடுத்த வினாடியே தாம் கட்சியிலும் ஓரங்கட்டப்படுவோம் என்பதை பன்னீர்செல்வம் நன்றாகவே உணர்ந்துள்ளார்.
பன்னீர்செல்வத்தின் இன்றைய இக்கட்டான நிலையை, ஆங்கில ஊடகத்தின் மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் அழகாக வர்ணித்தார். “பன்னீர்செல்வத்தோடு எடப்பாடி இணைந்ததற்கான முக்கிய காரணமே, நாளை இந்த அரசு கவிழ்ந்தால், தன்னை யாரும் குற்றம் சொல்லக் கூடாது என்பதற்காகத்தான். பன்னீர்செல்வம் தன்னோடு இருக்க வேண்டும் என்று அவர் விரும்பியதற்கு இரண்டு முக்கிய காரணங்கள். சசிகலா குடும்பத்தை எதிர்த்து போராட வேண்டும். ஒரு வேளை அரசு கவிழ்ந்தாலும் அதற்கு தன்னை மட்டும் காரணமாக யாரும் பழி சொல்லக் கூடாது என்பதே.
பன்னீர்செல்வத்துக்கு இந்த அரசு நெடு நாள் நீடிக்காது என்பது தெரிந்தே இருக்கிறது. மிகவும் தந்திரமாக ஒரு நெருக்கடியான சூழலில் வலுக்கட்டாயமாக தன்னை இணைய வைத்திருக்கிறார்கள் என்பதை ஓபிஎஸ் உணர்ந்துள்ளார். அவரது முக்கியமான கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவேயில்லை. தன்னுடைய ஆதரவாளர்களின் வலுவான எதிர்ப்பையும் மீறியே ஓபிஎஸ் இணைப்புக்கு சம்மதித்தார். அவர் எதிர்பார்க்காத ஒன்று எதுவென்றால், எடப்பாடியின் சூதும் வாதும். கட்சி மற்றும் ஆட்சியின் அனைத்து இடங்களிலும் எடப்பாடி பன்னீர்செல்வத்தை ஓரங்கட்டி விட்டார். ஏறக்குறைய கிடுக்கிப்பிடி போட்டு விட்டார் என்றே கூறலாம். இன்று ஒரு பதட்டமான மனநிலையில் ஓபிஎஸ் இருப்பதற்கு காரணம், தான் இத்தனை ஆண்டுகளாக அரசியலில் இருந்து பெற்ற பெயர் மற்றும் அனுபவம் அனைத்தையும் ஒரே நாளில் இழக்கும் சூழலை நோக்கி அவர் பயணிக்கிறார் என்பதை அவர் புரிந்துள்ளார்.
எடப்பாடி அணியில் இருந்து கொண்டே அவர் எடப்பாடியின் சதித் திட்டங்களை எதிர்த்து போராட வேண்டும். இது வரை இருந்து வந்த பனிப்போர் இப்போது உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. எடப்பாடியோ, பன்னீர்செல்வமோ என்ன நடவடிக்கைகளை எடுத்தாலும் அதன் இறுதி முடிவு மோடி மற்றும் அமித்ஷாவின் கரங்களில் என்பதை இருவருமே நன்றாக உணர்ந்திருக்கிறார்கள். இருவருமே ஒரு வகையில் சூழ்நிலை கைதிகளாகி விட்டார்கள்.
பிஜேபியை பொறுத்தவரை, மீண்டும் ஒரு பிளவு என்பது அதிமுகவில் வரவே கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது. மீண்டும் ஒரு பிளவு ஏற்பட்டால், அது ஒருவரும் காண சகியாத தெருச் சண்டையாக இருக்கும். இதில் எடப்பாடி, பன்னீர்செல்வம் மற்றும் பிஜேபி ஆகிய அனைவருமே ஏராளமான இழப்பை சந்திக்க நேரிடும்.
எடப்பாடி அணியின் பிரதிநிதியாக டெல்லி அனுப்பப்பட்ட மின்துறை அமைச்சர் தங்கமணியை கழற்றி விட்டு விட்டு, பன்னீர்செல்வம் தனியாக மோடியை சந்தித்ததே, பனிப்போர் முற்றி விட்டது என்பதை தெளிவாக உணர்த்துகிறது. ஓபிஎஸ் மோதலுக்கு தயாராகி விட்டார் என்பதையுமே இது காட்டுகிறது.
கடந்த முறை தனது தர்மயுத்தத்தில், பன்னீர்செல்வம் வென்றதற்கான காரணம், அவருக்கு மக்கள் ஆதரவு இருந்தது. ஆனால் இம்முறை பன்னீர்செல்வம் மீண்டும் ஒரு தர்மயுத்தம் நாடகத்தை நடத்தினால், அவரை ஆதரிக்க மக்கள் தயாராக இல்லை. மக்கள், இந்த ஆட்சியின் மீதும், எடப்பாடியின் மீதும், பன்னீர்செல்வத்தின் மீதும், பிஜேபியின் மீதும் கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள். இவர்கள் அடுத்து எடுக்கும் எந்த நடவடிக்கையாக இருந்தாலும் அது எதற்கும் மக்கள் ஆதரவு கிடையாது என்பது மட்டும் உறுதி” என்றார் அந்த பத்திரிக்கையாளர்.
அவர் குறிப்பிட்டது முக்கியமானது. தமிழகத்திலிருந்து மின்துறை அமைச்சர் தங்கமணியோடு சென்ற பன்னீர்செல்வம், மோடியை சந்திக்கையில் தங்கமணியை தவிர்த்து விட்டு, எம்பி மைத்ரேயனை மட்டுமே அழைத்துச் சென்றார். அதன் பிறகு, பத்திரிக்கையாளர்களிடம் பேசிய பன்னீர்செல்வம், எதற்காக பிரதமரை சந்தித்தீர்கள் என்றால், மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரியை கேட்டுப் பெறுவதற்காக என்றார். மின் துறை அமைச்சரை அழைக்காமல் சென்றிருக்கிறீர்களே என்று கேட்டதற்கு, நான் பிரதமரை சந்தித்தேன், அவர் மத்திய மின் துறை அமைச்சரை சந்தித்தார் என்றார். மீண்டும் வலியுறுத்தியவுடன், வேறு கேள்வி கேளுங்கள் என்றார். பிறகு உங்களோடு மைத்ரேயன் எதற்கு என்று பத்திரிக்கையாளர்களும் கேட்கவில்லை. அவரும் பதில் சொல்லவில்லை.
இது ஒரு புறம் இருக்க, எடப்பாடி பழனிச்சாமி, தான் ஒரு காலமும் இந்த முதலமைச்சர் பதவிக்கு ஏற்ற முறையில் தன்னை மாற்றிக் கொள்ளப் போவதில்லை என்பதை ஒவ்வொரு நாளும் அவர் நடவடிக்கைகள் மூலமாக நிரூபித்துக் கொண்டே இருக்கிறார். கட்சி விழாவில் என்ன பேச வேண்டும், அரசு விழாவில் என்ன பேச வேண்டும் என்பதையெல்லாம், ஜெயலலிதாவும் கருணாநிதியும் நன்கு அறிந்தவர்கள். அளவோடு பேசுவார்கள். கவனமாக பேசுவார்கள். ஆனால் ஜெயலலிதா கார் டயரை தொட்டு கும்பிடும் எடப்பாடியை திடீரென்று முதல்வராக்கினால் ? உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி ஒரு நாளும் பருந்தாகாது அல்லவா ?
ஆனால் ஆசை மட்டும் விண்ணை தொடும் அளவுக்கு இருக்கிறது. ஜெயலலிதா போலவே சாலையெங்கும் கட்அவுட்டுகள் வேண்டும் என்று விரும்புகிறார். விழாக்களில், மேடையில் அமர்ந்திருக்கும் அமைச்சர்கள் தான் வருகையில் வரிசையாக எழுந்து நின்று வணங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆளுனர் பதவியேற்பு விழாவில், தான் மட்டுமே பிரதான விருந்தினராக இருக்க வேண்டும் என்று அற்பத்தனமாக ஆசைப்படுகிறார். மோடியின் ஆதரவு இருக்கிறது என்ற துணிச்சலில், அனைத்து அற்பத்தனங்களையும் தெரிந்தே அரங்கேற்றுகிறார். டெங்கு விழிப்புணர்வு பேனர்களில் கூட தன் படத்தை போட்டுக் கொண்டு பார்த்து ரசிக்கிறார் எடப்பாடி இந்த அற்பத்தனங்களைத் எப்படி சமாளிப்பது என்று தெரியாமல்தான் பன்னீர்செல்வம் விழித்துக் கொண்டிருக்கிறார்.
ரோசி டீக்கடையின் உரிமையாளராக இருந்த பன்னீர்செல்வம் உள்ளாட்சி பதவி, எம்எல்ஏ பதவி, பின்னாளில் பொதுப்பணித் துறை அமைச்சர் பதவி, முதலமைச்சர் பதவி என்று படிப்படியாக பன்னீர்செல்வம் வளர்ந்திருக்கிறார் என்றால் அதற்கு சசிகலாவும், டிடிவி.தினகரனும் ஒரு முக்கிய காரணம். ஆனால் அவர்கள் முதுகில் குத்தினார் பன்னீர்செல்வம். அவர் தினகரனுக்கு செய்ததை விட கொடுமையாக இன்று எடப்பாடி பழனிச்சாமி பன்னீர்செல்வத்துக்கு செய்கிறார்.
அதனால்தான் இன்று முச்சந்தியில் நிர்கதியாக நிற்கிறார் பன்னீர்செல்வம். அவருக்கு மோடியும் உதவப்போவதில்லை. எடப்பாடியும் உரிய மரியாதையை அளிக்கப் போவதில்லை. இதுதான் காலத்தின் கோலம்.
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
சாலமன் பாப்பையா உரை:
எத்தனை பெரிய அறங்களை அழித்தவர்க்கும் பாவத்தைக் கழுவ வழிகள் உண்டு. ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்து தீமை செய்பவனுக்கு வழியே இல்லை.
Chandhrasekar sagamuri studied his higher studies in Chennai.he speaks and wrote Tamil very well.pls avoid these types of nonsense in future.
happy diwali sir
Well written article. OPS lost his credibility and cheated both Sasikala and Dinakaran and betrayed ADMK to BJP. TTV is future of ADMK due to caders support.
muthalil panneer vazhakkampola panneer thelippaar kanneer viduvaar kaalail vizhuvaar piraku kaalai vaari viduvaar venneer oorrivduvaar aam lanja aadchi oozhal aadchi enravar antha oozhal aadchiyudan uravu vaiththukkondu oozhal aadchiyil pirathaana pangum vakikkiraar
செய்யமணிமா முடிவீழ சென்ற மன்னர் எண்ணிலராம்
ஐய இதனை உள்ளத்தில் ஆழ்ந்துகாணல் அறிவாமே.
ஒபிஎஸ், இபிஎஸ் இருவருமே அயோக்கியர்கள், மிகப்பெரிய திருடர்கள்… நால்வர் அணியில் இருந்து பல ஆயிரம். கோடி கொள்ளையடித்தனர்… தற்போதும் தமிழக மக்கள் நலன் கருதி சிறுதுரும்பும் அள்ளிப்போடாத பதர்கள்… இவர்களிக்கு ஆட்சி போனாலும் பரவாயில்லை…கொள்ளையடித்த பணத்தைக்கொண்டு மோடியின் ஆசியோடு வழக்குகள் எதுவுமின்றி காலத்தை கடத்தி விடுவர்…ஜெயாவின் மரணத்திற்கு உடந்தையாக இருந்து வேடிக்கை பார்த்தவர்கள் இவர்கள்.
ரோசி டீக்கடை நடத்தவே தகுதியற்ற பன்னீரை தான் கொள்ளையடிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக சசிகலாவின் ஆலோசனைப்படி டயர்நக்கியை முதலமைச்சர் பொறுப்புக்கு நியமித்ததே மோசமான விளைவுகளின் ஆரம்பம்…
இவர்கள் மக்களை முட்டாலாக்குகின்றார்கள் என்று நினைத்துக்கொண்டு. ஒவ்வோரு கணமும் தங்களை முட்டால்கள் என்று நிருபித்துக்கொண்டிருக்கிரார்கள்.
திரு அமிர்ஷா அவர்கள் தனது மோடி வேலையை இந்த முட்டால்கள் கூட்டத்திடம் வேண்டுமென்றால் காட்டளாம். அவர்கள் அம்மா அடிமையில் இறுந்து பிரமோஷன் ஆகி. தற்போது rss களின் அடிமைகளாக வந்துவிட்டார்கள்.
நாங்கள் இன்னமும் பெரியாரின் பெரன்களாகத்தான் இருக்கின்றோம். என்பதை மரந்துவிடவேண்டாம்.
மோடி வேலையை சாமியார்கள் காட்டினால். எம்மக்கள் லேடி வேலையான மாமியார்தனத்தை காட்டுவார்கள்.
Let everybody suffer.