கார்டூனிஸ்ட் பாலாவின் கைது, நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கந்துவட்டி கொடுமையால் இசக்கி முத்து, அவர் மனைவி மற்றும் இரண்டு சிறு குழந்தைகளோடு தீயிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், மனசாட்சி உள்ளவர்கள் அனைவரையும் உலுக்கி எடுத்தது. சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவு செய்திருந்தவர்கள் பலர், இந்தக் காட்சியை பார்த்து என்னால் உறங்க முடியவில்லை என்று எழுதியிருந்தார்கள். இரண்டு பச்சிளம் குழந்தைகள் தீயில் எரிவதை பார்த்தவர்கள் அனைவரும் உடைந்துதான் போனார்கள்.
எந்த அநீதியையும் கண்டு வெகுண்டெழும் குணம் கொண்ட பாலாவும் இதை பார்த்து கொதித்துப் போய்தான் இப்படியொரு கார்ட்டூனை வரைந்தார். இந்த கார்டூனுக்காகத்தான் பாலா ஞாயிறன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதில் புகார் அளித்தவர் நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி. அவர் அளித்த புகாரின் பேரில் பாலாவின் மீது இந்திய தண்டனை சட்டம் 501 மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 67ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்தே பாலா கைது செய்யப்ட்டார்.
ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு, அது நீதிமன்ற விசாரணையில் சாட்சியங்களோடு நிரூபிக்கப்படுமா இல்லையா என்பது பற்றியெல்லாம், காவல்துறையும் அதிகாரவர்க்கமும் கவலைப்படுவதே இல்லை. இப்போதைக்கு கைது செய்து, சிறையில் அடைத்து சித்திரவதை செய்ய வேண்டும் என்பது ஒன்றே அவர்களது நோக்கம்.
கந்துவட்டி மரணங்கள் தொடர்பாக பாலா வரைந்த அந்த கார்ட்டூன் அந்த மரணங்கள் ஏற்படுத்திய வலியின் வெளிப்பாடே. கலைஞர்கள் எப்போதுமே உணர்ச்சிவயப்படுபவர்களாக இருப்பார்கள். அப்படி அவர்கள் இருந்தால்தான் கலைஞர்களாக இருக்க முடியும். எந்த சம்பவமும் பாதிக்காமல் நம்மைப் போல எருமை மாடுகள் போல இருந்தால் அவர்கள் கலைஞர்களாக இருக்க முடியாது. பாலாவைப் போல சமூக அக்கறை கொண்ட எழுத்தாளர்களை காண்பது கடினம். சமூக அவலங்களைக் கண்டு பாலா துடிப்பார், கொதிப்பார். புலம்புவார். பல நாட்கள் தொலைபேசியில் அழைத்து, “என்ன தோழர் இப்படி நடக்குதே” என்று புலம்பியிருக்கிறார்.
அப்படியொரு உணர்ச்சிமயமான தருணத்தில்தான் அந்த கார்டூனை வரைந்தார். அவரின் வலி மற்றும் வேதனையின் வீச்சு அந்த கேலிச் சித்திரத்தில் முழுமையாக வெளிப்படுகிறது.
பிரிட்டிஷார் காலத்தில், மாவட்ட ஆட்சியர் பதவி என்பது மிகப் பெரும் அதிகாரங்களை கொண்டது. மாவட்ட ஆட்சியரே நீதிபதியாகவும் இருப்பார். இன்று வரை மாவட்ட ஆட்சியரை, டிஸ்ட்ரிக்ட் மேஜிஸ்திரேட் என்று அழைப்பது இந்த காரணத்தினால்தான். அப்படி சகல அதிகாரமும் பொருந்திய பதவியாக இருப்பதால், மக்களின் குறைகளை நேரடியாக மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கும் முறை உருவாக்கப்பட்டது. மாதத்தில் ஒரு நாள் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டு, அதற்கான தீர்வு உடனடியாக கிடைக்கும் வகையில் இந்த முறை உருவாக்கப்பட்டது.
இன்று வரை, மாவட்ட ஆட்சியரை சகல அதிகாரமும் பொருந்திய கடவுளாகவே கிராமங்களில் பார்க்கிறார்கள். மாவட்ட ஆட்சியரிடம் அனைத்துக்கும் தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறார்கள்.
நாளடைவில் ஆட்சியரிடம் மனு அளிக்கும் இந்த முறை ஒரு சடங்காக மாறிப் போய், தண்ணீர் தண்ணீர் படத்தில், வரும் காட்சி போல, அந்த மனு இறுதியாக குப்பைத் தொட்டிக்கே செல்கிறது. நெல்லை மாவட்டத்தின் இசக்கி முத்து, தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே ஆட்சியரிடம் மனு அளித்தார். தீர்வு கிடைக்காததால் நான்கு முறைக்கும் மேல் மனு அளித்துள்ளார். எந்த காவல்துறை தங்களை மிரட்டுகிறது என்று புகார் அளித்தாரோ, அதே காவல் நிலையத்துக்கு ஆட்சியரிடம் அளித்த புகார் மீண்டும் மீண்டும் அனுப்பப்பட்டது. செய்வதறியாது விரக்தியின் உச்சத்திலேயே இசக்கிமுத்து மனைவி மற்றும் இரு பச்சிளம் குழந்தைகளுடன் தன்னை தீயிட்டு கொளுத்திக் கொண்டார்.
சிகப்பு நாடா முறையினால் ஒரு குடும்பமே தீயிட்டு கொளுத்திக் கொண்டதில், நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு ஒரு முக்கிய பங்கு உள்ளது என்பதை மறுக்க இயலாது. இப்படி தற்கொலை செய்து கொள்வார்கள் என்பதை யாருமே எதிர்ப்பார்த்திருக்க முடியாதுதான் என்றாலும் ஆட்சியரிடம் மனு அளிக்கும் முறை சரியானபடி செயல்படுத்தப்படவில்லை என்பதை சந்தீப் நந்தூரி உணர்ந்திருக்க வேண்டும். இசக்கி முத்து தீயிட்டுக் கொண்டதும், கந்துவட்டிக்காக ஹெல்ப் லைன் அமைக்கிறேன் என்று அறிவித்த மாவட்ட ஆட்சியர், அது வரை, கந்து வட்டி விவகாரத்தை கண்டு கொள்ளவேயில்லை என்பது உண்மைதானே ?
தன் பதவியை காப்பாற்றிக் கொள்வதையும், பன்னீர் செல்வத்தையும், டிடிவி தினகரனையும் கண்காணிப்பில் வைப்பதையும் மட்டுமே 24 மணி நேரமும் செய்து கொண்டிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, அரசு நிர்வாகத்தில் கவனம் செலுத்தவில்லை என்பது அப்பட்டமான உண்மை. அரசும், ஆட்சியரும், காவல்துறையும் சேர்ந்து குடும்பம் தங்களையே தீயிட்டு அழித்துக் கொள்வதற்கு காரணமாக இருந்தார்கள் என்பதை மறுக்க முடியுமா ? இந்த அயோக்கியத்தனத்தை ஒரு ஓவியன், ஒரு கலைஞன் எப்படி வெளிப்படுத்துவான் ? நிர்வாணமாக கார்டூன் போட்டுத்தான் வெளிப்படுத்த முடியும். ஒவ்வொரு கலைஞனும், சமூக அவலங்களின் மீதான தன் கோபத்தை தனக்கான பாணியில் வெளிப்படுத்துவான். இது பாலாவின் பாணி. பாலாவோடு உடன்படலாம். வேறுபடலாம். ஆனால் அடிப்படை உரிமைகள் மற்றும் கருத்துச் சுதந்திரம் உத்தவாதப்படுத்தப் பட்டுள்ள இந்தியா போன்ற ஒரு நாட்டில் மாறுபட்ட கருத்துக்களை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இது ஷரியத் சட்டம் உள்ள இஸ்லாமிய நாடு அல்ல.
தனது முறையற்ற நிர்வாகத்தால் இரு பச்சிளம் குழந்தைகள் உட்பட ஒரு குடும்பமே தீயில் கருகியதை கண்ட ஒரு மனசாட்சி உள்ள அதிகாரி குற்ற உணர்ச்சியால் வருந்தியிருக்க வேண்டும். குமைந்திருக்க வேண்டும். ஆனால் தன்னை விமர்சித்து கார்டூன் போட்டவர் மீது புகார் அளித்து விட்டு அதை நியாயப்படுத்துகிறார் என்றால் சந்தீப் நந்தூரி எப்படிப்பட்ட அகங்காரம் பிடித்தவராக இருக்க வேண்டும் ? நேற்று பாலா கைது செய்யப்பட்டதும், அது குறித்து அவரை தொடர்பு கொண்ட பத்திரிக்கையாளர்களிடமும் சந்தீப் ஆணவத்தோடே பதிலளித்திருக்கிறார். பாலா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். நான்கு உயிர்கள் தீயில் கருகியதற்கு இவர் மன்னிப்பு கேட்க வேண்டுமா ? அல்லது இவரின் செயலற்ற தன்மையை விமர்சித்து கார்டூன் போட்டவர் மன்னிப்பு கேட்க வேண்டுமா ? மாவட்ட ஆட்சியர் என்றால் தன்னை ஒரு குறுநில மன்னராகவே நினைத்துக் கொள்ளும் அகங்காரம் பிடித்த அதிகாரிகளால்தான் தமிழகம் சீரழிந்து கொண்டிருக்கிறது.
பாலா வெகுஜன ஊடகம் எதிலும் பணியாற்றவில்லை. அவர் கார்டூனை வெளியிட்டது சமூக வலைத்தளத்தில். சமூக வலைத்தளங்களில் இருப்பவர்களைத் தவிர பிறரை அந்த கேலிச் சித்திரம் சென்று அடைந்திருக்க வாய்ப்பே இல்லை. ஆனால் பாலாவை கைது செய்ததன் மூலம், இன்று அந்த கேலிச் சித்திரம் உலகப் புகழ் அடைந்திருக்கிறது. இந்த கைது நடவடிக்கையால் பாலாவின் மன உறுதி சற்றும் குறையப் போவதில்லை. இதை விட வீச்சு அதிகம் உள்ள கார்டூன்களை வரைந்து, சமூக அவலங்களை இன்னும் கடுமையாக சாடத்தான் போகிறார்.
பாலா பல வருடங்கள் குமுதத்தில் கார்டுனிஸ்டாக பணியாற்றியிருக்கிறார். அப்போது குமுதத்தின் குழும ஆசிரியராக இருந்த கோசல்ராம் பாலா குறித்து பேசினார். “எந்த விதமான சமரசமும் செய்து கொள்ளாதவர் பாலா. பாலாவின் தந்தை மும்பையில் ரயில்வேயில் வேலை பார்த்துக் கொண்டிருந்தா. பாலாவும் நெடுநாட்கள் மும்பையில்தான் இருந்தார். அவர் தந்தை பணியில் இருந்தபோதே இறந்து விட்டார். பாலாவுக்கு கருணை அடிப்படையில் ரயில்வேயில் வேலை கிடைத்தது. உத்தரவாதமான அரசு வேலை. உயர்ந்த சம்பளம். ஆனால் நான் கார்டூனிஸ்டாகத்தான் ஆவேன் என்று பிடிவாதமாக அந்த வேலையில் சேர மறுத்தார்.
அவர் குடும்பத்தில் கடுமையான அழுத்தங்கள் வந்தபோதும் பாலா அந்த வேலையில் சேர மறுத்து முழு நேர பத்திரிக்கையாளர் ஆனார். கார்டூன் என் மூச்சு. அதுதான் என் வாழ்வு என்று தேர்ந்தெடுத்தார் பாலா.
எந்த அநியாயம் நடந்தாலும் அதை பொறுத்துக் கொள்ளாதவர் பாலா. கொள்கைப் பிடிப்பானவர். ஒரு முறை, ஒரு வங்கியில் நடந்த ஒரு சம்பவம் குறித்து வங்கிப் பணியாளர்களை பற்றி பேஸ்புக்கில் எழுதி விட்டார். வங்கி நிர்வாகம் நேரடியாக குமுதம் நிர்வாகத்துக்கு போன் அடித்தது. உடனடியாக பாலாவை அந்தப் பதிவை நீக்கச் சொன்னார்கள். நான் பாலாவிடம் இது பற்றி பேசியபோது உறுதியாக முடியாது என்று மறுத்தார். அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்று அவர்களை சொல்லச் சொல்லுங்கள் சார். நான் நீக்குகிறேன் என்றார். இறுதி வரை அந்த பதிவை நீக்கவில்லை.
ஈழத் தமிழர் விவகாரத்திலும், தமிழர் நலன் சார்ந்த விவகாரங்களிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தன் தனித்தன்மையை எப்போதும் விட்டுக் கொடுக்காதவர். இவையெல்லாம் தாண்டி மிகுந்த இரக்க குணம் உள்ளவர். ஒரு முறை அவர் அலுவலகம் வருகையில் சாலையில் விபத்தில் சிக்கிய ஒருவரை பார்த்து, உதவ யாரும் வராததால் இவரே அவருக்கு உதவி, அவரை மருத்துவமனையில் சேர்த்து, உறவினர்கள் வந்த பிறகுதான் கிளம்பி அலுவலகம் வந்தார். யாருக்கு எந்த உதவியென்றாலும் பாலாவை நம்பி நாடலாம் எனும் அளவுக்கு உதவும் குணம் கொண்டவர்.
சில பல காரணங்களால் குமுதம் நிர்வாகம், திமுகவை தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தது. அதிமுகவை எந்த காரணத்தினாலும் விமர்சிக்காது. அப்படிப்பட்ட நெருக்கடியான நேரத்திலும், தனக்கு கிடைத்த அந்த குறுகிய இடத்தில் நேர்த்தியான கார்டூன்களை வரைந்து தனக்கென்று ஒரு தனித்தன்மையை ஏற்படுத்தியவர்.
தற்போது அவர் வரைந்துள்ள கார்டூனும் அந்த வகையை சேர்ந்ததே. அதில் எந்தத் தவறும் இருப்பதாக நான் கருதவில்லை. விளைவுகளைப் பற்றி துளியும் கவலைப்படாமல் துணிச்சலாக செயலாற்றுபவர் பாலா” என்றார் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய தளத்தின் ஆசிரியர் கோசல்ராம்.
திமுக ஆட்சிக் காலத்தில், உளவுத் துறை மற்றும் கருணாநிதி அரசு பத்திரிக்கையாளர்களுக்கு கடுமையான நெருக்கடியை தந்தது. கருத்துச் சுதந்திரத்தை பறிக்கும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அப்போது கருத்துரிமை பாதுகாப்பு இயக்கம் என்று ஒரு அமைப்பை உருவாக்கி கூட்டங்களையும் கருத்தரங்கங்களையும் நடத்தியவர் பாலா. இன்று பாலாவே கருத்துரிமை பறிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலா கைது குறித்து பேசிய டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் துணை ஆசிரியர் ஷபீர் அகமது “பாலாவின் கைது அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கும் விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை. இது போன்ற கைது நடவடிக்கைகள் தொடர்கதையாகி வருகின்றன.
அமைச்சர் வேலுமணியைப் பற்றி எழுதியதற்காக இதற்கு முன்பு பத்திரிக்கையாளர் அன்பழகன் கைது செய்யப்பட்டார். அன்பழகனோடு இருந்த கருத்து வேறுபாடுகள் காரணமாக, அப்போது அன்பழகன் கைதை பத்திரிக்கையாளர்கள் பெரிய அளவில் கண்டிக்கவில்லை. சில நாட்களில் அன்பழகன் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு ஆறு மாதங்களுக்கு மேல் சிறையில் இருந்தார். அப்போது பத்திரிக்கையாளர்கள் அமைதியாக இருந்ததன் காரணமாகத்தான் தற்போது பாலா கைது செய்யப்பட்டுள்ளார். பாலாவின் கைதை அதன் தொடர்ச்சியாகவே பார்க்கிறேன்.
ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கூட பத்திரிக்கையாளர்கள் மீது அவதூறு வழக்குதான் போடப்பட்டது. தற்போது பத்திரிக்கையாளர்கள் கைது செய்யப்படுவது, மிகுந்த ஆபத்தான போக்கு. பத்திரிக்கையாளர்கள் தங்கள் மாச்சர்யங்களை மறந்து, ஒன்று கூடி இதை எதிர்க்க வேண்டிய கட்டாயம் வந்து விட்டது. இப்போதும் அமைதியாக இருந்தால், இந்தப் போக்கு தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் பணி செய்ய முடியாத ஒரு சூழல் உருவாகும் என்றார்.
மூத்த பத்திரிக்கையாளர் ஆர்.மணி, ஷபீரின் கருத்தை ஆமோதித்தார். “இந்த அரசுக்கு சகிப்புத் தன்மை அறவே இல்லை. எதிர்க் கருத்துக்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று எடப்பாடி அரசு விரும்புகிறது. பாலாவின் கைது, அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கும் விடுக்கப்பட்ட நேரடி எச்சரிக்கை. ஊடக அதிபர்களுக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை. இது மிக மிக ஆபத்தான போக்கு. பத்திரிக்கையாளர்கள் ஒன்றிணைந்து இதை எதிர்க்கத் தவறினால், விளைவுகள் கடுமையானதாக இருக்கும். ஜெயலலிதா அரசாங்கத்தை விட, மிக மோசமான சர்வாதிகார அரசாங்கமாக எடப்பாடி அரசு செயல்பட்டு வருகிறது” என்றார்.
பத்திரிக்கையாளர்கள் கருத்து சுதந்திரத்தை நசுக்கும் இந்த போக்கை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதை பொறுத்தே நாளை பத்திரிக்கை உலகின் எதிர்காலம் இருக்கிறது.
பாலாவுக்கு உடனடியாக ஜாமீன் வழங்கப்பட்டாலும், இதன் பின் நடக்கும் விசாரணை கடுமையான உளைச்சலை ஏற்படுத்தக் கூடியது. இவ்வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டால், பாலா நீதிமன்ற விசாரணைக்காக ஒவ்வொரு முறையும் நெல்லை செல்ல வேண்டி இருக்கும். அதற்கு முன்னதாக இந்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய மதுரை உயர்நீதிமன்றக் கிளையை அணுகி ரத்து செய்யப்பட்டால் மட்டுமே விடிவு.
பத்திரிக்கையாளர்களை சகட்டு மேனிக்கு கைது செய்வதால் தனது அரசின் செயலற்ற தன்மையும், ஊழலும் மறைந்து போகும் என்று எடப்பாடி நினைக்கிறார். முதல்வர் பதவி வந்து விட்டதால் தன்னை ஜெயலலிதா என்றே எடப்பாடி நினைத்துக் கொள்கிறார். இப்படியெல்லாம் நினைத்துக் கொண்டவர்களை காலம் காணாமல் போகச் செய்திருக்கிறது. எடப்பாடியின் நாட்களும் எண்ணப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.
வரதராஜன், இறந்தவர் பல முறை போலிஸில் கந்துவட்டிகாரரின் அத்துமீறிய தொல்லையை பற்றி புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் புகார் கொடுத்தவரையே மிரட்டி, விரட்டி அடித்தார்கள். ஆகவே போலிஸ் முழு பொறுப்பு ஏற்க வேண்டும்
This cartoonist has extraordinary talent. But he did is 100% wrong. It is one form of harassment.
How can a collector or commissioner or CM be responsible for a suicide?
வரதராஜன், இறந்தவர் பல முறை கந்துவட்டிகாரரின் அத்து மீறிய தொல்லையை பற்றி போலிஸில் புகார் கொடுத்தும், அவர்கள் அதன் மீது நடவடிக்கை எடுக்காமல், மாறாக புகார் கொடுத்தவரையே திட்டி விரட்டியடித்திருக்கிறார்கள். ஒரு ஊரில், அதுவும் சிறு நகரத்தில் கந்து வட்டி, சாராயம், விபசாரம் இவை அனைத்தும் போலஸுக்கு தெரியாமல் நடப்பதில்லை,, இது ஊருக்கே தெரிந்த உண்மை .
ஆகவே போலிஸ் முழு பொறுப்பு ஏற்கவேண்டும். கைது செய்ய சொன்ன கலெக்டர் அவராகவே சர்வாதிகாரி போல் செய்தாரா இல்லை மந்திரியின் ஏவாளாலி போல் செய்தாரா என்று தெரியவில்லை
சுரேஷ் இசக்கிமுத்துவின் உறவினரின் நண்பர் போல தெரியவில்லை. கந்துவட்டிகாரரின் உறவினர் அல்லது நெருங்கிய நண்பர் போல தோன்றுகிறது
Suresh statement may be correct. In my service I saw many people made drama . PÇR compliants mostly false
over immagination regarding the problem .
பாலா நல்லவரா அல்லது கெட்டவரா என்று எனக்கு தெரியாது… ஆனால் நீங்கள் தீ குளித்து இறந்து இசக்கிமுத்து பற்றி சம்பவம் முழுக்க முழுக்க கட்டுக்கதை… ஏன் என்றால் இசக்கிமுத்துவின் உறவினர் என்னுடைய நெருங்கிய நண்பர்… இப்படி பொய் செய்தியை பரப்புவதால் உங்களுக்கு என்ன கிடைக்க போகிறது ? இசக்கிமுத்து வாங்கிய பணத்தை ஏமாற்ற நடந்த நாடகத்தில் அந்த தீ குளிப்பு அசம்பாவிதம் நடந்து விட்டது… இது தெரியாமல் என்னமோ நீங்களே எல்லா சமபவத்தையும் நேரில் பார்த்தது போல ஏன் இப்படி பொய் செய்தியை பரப்புகிறீர்கள் ?
சவுக்கின் பதிவு கருத்துரிமையை பற்றியது .நடந்த துயர சம்பவங்கள் காரணம் வேறாக இருக்க கூடும் .இதை பற்றிய அறிக்கை மாவட்ட நிர்வாகியான கலெக்டரின் பதில் என்ன ?
aAmmam aamaam… kandhuvatiyaavathu onnaavathu… thamizhnattula adhellaam onnume kidayaadhu… SAttam ozhungu ellaam evalavu arumayaa irukku…vazhga jananaayagam !!!
Sorry.. What is wrong information? I thought I saw photos of people burning.
Suresh, can you explain your statement?
சுரேஷ் கந்து வட்டி வாங்கி வயிறு வளர்பவர்களில் ஒருவன். வேறு என்ன சுரேஷிடம் இருந்து எதிர் பார்க்க முடியும்