சென்னை, ஏப். 6: சட்டப் பேரவைத் தேர்தலை ஒட்டி, வெள்ளிக்கிழமை முதல் வாக்குப்பதிவு முடிவடையும் தேதி (ஏப்ரல் 13) வரை இரவு நேரங்களில் மின்வெட்டு செய்யக் கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் நிலவிவரும் மின்சார பற்றாக்குறை காரணமாக, சென்னையைத் தவிர்த்து மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மின்வெட்டு அமலில் உள்ளது. மின்சாரத் தேவையைச் சமாளிக்க ஒவ்வொரு நாளும் இரண்டு மணி நேரம் மின் வெட்டு செய்யப்படுகிறது. இந்த மின்வெட்டு முறை கடந்த சில ஆண்டுகளாக அமலில் இருந்து வருகிறது.
இரவு நேரத்தில் பணப்பட்டுவாடா? நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற போது இரவு நேரங்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. வாக்காளர்களுக்கு இருளில் பணம் விநியோகம் செய்வதற்காகவே மின்சாரம் நிறுத்தப்பட்டதாக பல்வேறு கட்சிகளும் புகார் எழுப்பின.
அந்தச் சூழ்நிலையில், மின்வெட்டு குறித்து தேர்தல் ஆணையம் கேள்வி எழுப்பியது. மின்சார வாரியத்திடம் விளக்கம் கேட்டது. அதைத் தடுப்பதற்கு போதுமான நடவடிக்கையை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.
முன்பே உத்தரவு: நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்த அனுபவங்களை வைத்து, சட்டப் பேரவைத் தேர்தலில் பல்வேறு கடும் நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது.
அதன் ஒருபகுதியாக, தமிழகத்தில் இரவு நேரங்களில் மின் வெட்டு செய்யக் கூடாது என்பதாகும்.
இது தொடர்பாக, தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறுகையில், “”வாக்குப் பதிவு நடைபெறவுள்ள நாளுக்கு சில தினங்களுக்கு முன்னதாக வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் சம்பவங்கள் நடைபெறலாம்.
குறிப்பாக, இரவு நேரங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டு பணம் அளிக்கப்படக் கூடும் என தகவல்கள் வந்துள்ளன. எனவே, வாக்குப் பதிவு தினத்துக்கு ஐந்து நாட்களுக்கு முன்னதாக அதாவது வரும் வெள்ளிக்கிழமை முதல் இரவில் மின்சாரம் தடைபடக் கூடாது என மின்சார வாரியம் அறிவுறுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தனர்.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவு குறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறியது: தமிழகத்தில் தேர்வு நேரம் என்பதால் இரவு நேரத்தில் மின்சாரத்தை நிறுத்தக் கூடாது எனக் கூறியுள்ளோம்.
சென்னையைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் பகல் நேரத்தில் இரண்டு மணி நேரம் மட்டுமே மின்சாரத்தை நிறுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு ஏற்கெனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையமும் இப்போது உத்தரவை வெளியிட்டுள்ளது. வேறு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டு இரவு நேரத்தில் மின்சாரம் தடைபட்டால் உடனடியாக அதைச் சரிசெய்ய வேண்டும் என ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்” என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.