கடந்த ஐந்து நாட்களாக நடந்து வந்த வருமான வரி சோதனைகள் திங்களன்று மாலையோடு முடிவுக்கு வந்துள்ளன. வருமான வரித் துறையின் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மிகப் பெரிய சோதனையாக இந்த சோதனைகள் நடைபெற்றுள்ளன. 1800 அதிகாரிகள். 180க்கும் மேற்பட்ட இடங்கள். கடைசியாக வந்த தகவலின்படி, 1430 கோடி வருமானத்துக்கான வரி ஏய்ப்பு செய்யப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
வழக்கமாக இது போன்ற சோதனைகளில் பெரும் முதலைகள் சிக்கும்போது, பொது மக்களிடையே அரசின் நடவடிக்கைகளுக்கு பலத்த ஆதரவு இருக்கும். ஆனால் இம்முறை அது போன்ற எந்த ஆதரவையும் பார்க்க முடியவில்லை. இடது சாரிகள் உள்ளிட்ட பெரும்பாலான எதிர்க்கட்சிகள் இந்த சோதனைகளை கடுமையாக கண்டித்துள்ளனர். காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றே கூறியுள்ளது.
டிடிவி தினகரன் உள்ளிட்ட மன்னார்குடி மாபியாக்கள் தேவதூதர்கள் என்று யாரும் கூறப் போவதில்லை. மன்னார்குடி மாபியா கூட்டம், 1991 முதல் தமிழகத்தை அடித்த கொள்ளையை தமிழகம் கடந்த 25 ஆண்டுகளாக பார்த்து வருகிறது. ஆனால் இந்த கொள்ளைகள் அனைத்துக்கும் பின்னணி யார் ? இப்படிப்பட்ட ஒரு கொள்ளைக் கூட்டத்தை தீனி போட்டு வளர்த்து, இந்தியா, ஏன் உலகம் முழுக்க தங்களது ஆக்டோபஸ் கரங்களை பரப்ப உதவியது யார் என்ற கேள்விதான் தவிர்க்க முடியாததாக இருக்கிறது.
ஜெயலலிதா என்ற ஒரு நபர் இல்லாமல் இருந்திருந்தால், டிடிவி தினகரன் லண்டனில் 300 கோடி மதிப்புள்ள ஸ்லேலி ஹால் ஹோட்டலை 1994ல் வாங்கியிருக்க முடியாது. மெர்சிடிஸ் காரில் பவனி வர முடியாது. ஜாஸ் சினிமாஸ் மற்றும் ஜெயா டிவியின் நிர்வாக இயக்குநராக இன்று சொகுசு காரில் பவனி வரும் விவேக், ஜெயலலிதா இல்லாமல் இருந்தால் அமேஸானில் கொரியர் டெலிவரி செய்து கொண்டிருக்கக் கூடும். டிடிவி தினகரன் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்திருப்பார். புதுவையில் பண்ணை வீடு வாங்கியிருக்க முடியாது.
இந்த மன்னார்குடி மாபியா உருவானதற்கு அடிப்படையான காரணமே ஜெயலலிதாதான். எண்பதுகளின் இறுதியில் ஜெயலலிதாவின் பாதுகாப்புக்கு என்று போயஸ் தோட்டத்தில் நுழைந்த மன்னார்குடி குடும்பத்தின் வளர்ச்சி எத்தகையது என்பதை நாடே அறியும்.
மன்னார்குடி மாபியா தொடங்கிய அத்தனை தொழில் நிறுவனங்கள் குறித்தும் ஜெயலலிதா நன்றாக அறிவார் என்பதற்கான தெளிவான சான்று, டிசம்பர் 2011ல் சசிகலா உள்ளிட்ட மன்னார்குடி மாபியாவினர் போயஸ் தோட்டத்திலிருந்து வெளியேற்றப் பட்டபோது, ஜெயலலிதாவின் பினாமி நிறுவனங்கள் அனைத்திலிருந்தும், சசிகலா உள்ளிட்ட மன்னார்குடி கூட்டம் வெளியேற்றப்பட்டது. இவர்களை வெளியேற்றி விட்டு, காலம் சென்ற சோ ராமசாமியை மிடாஸ் மதுபான ஆலையின் இயக்குநராக்கினார் ஜெயலலிதா. அதே போல, மீதம் உள்ள அனைத்து நிறுவனங்களிலும், மன்னார்குடி கூட்டத்தினர் வெளியேற்றப்பட்டு, ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் மற்றும் பிஎச் பாண்டியனின் மகன் மனோஜ் பாண்டியன் போன்றோரை இயக்குநராக்கினார்.
இது குறித்து பேசிய சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் “சசிகலா ஒரு சூழ்நிலை கைதி. இப்போது இருக்கும் சசிகலாவை உருவாக்கியதே ஜெயலலிதாதான். இதில் உண்மையான குற்றவாளி ஜெயலலிதாவே.
ஜெயலலிதாவை மகிழ்விக்க, சசிகலாவும், அவர் உறவினர்களும் அவருக்கு பிடித்ததையெல்லாம் செய்தார்கள். சொகுசான வாழ்க்கை, பணம், நகை, வைரங்கள், விலை உயர்ந்த கைக் கடிகாரங்கள் என்று வாங்கிக் குவித்து, அவற்றை ஜெயலலிதாவுக்கு அளித்து, அவரை குளிர்வித்தார்கள். கொடநாடு பங்களாவில் உள்ள நீச்சல் குளம், திரையரங்கம், மாநாட்டு அரங்கம், படுக்கை அறைகளை பார்த்தால், ஆதி காலத்து மன்னர்களே வெட்கப்படுவார்கள். இவை அனைத்தும் ஜெயலலிதாவை குளிர்வித்து மகிழ்ச்சியாக வைத்திருக்கவே செய்யப்பட்டன.
இன்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் சொத்துக்கள் அனைத்தும், ஜெயலலிதாவுக்காகவே வாங்கப்பட்டவை. அனைத்தும் அவர் பணமே. அவர் இறந்து விட்டதால் இவர்கள் இப்போது சொந்தம் கொண்டாடுகிறார்கள். “ என்றார் அந்த தொழிலதிபர்.
இன்று வருமான வரித் துறையினர் சோதனை நடத்தும் அனைத்து நிறுவனங்கள் மற்றும் சொத்துக்கள் அனைத்தையும் சேர்த்தது ஜெயலலிதாதான் என்பது ஊரறிந்த உண்மை. ஜெயலலிதாவின் பினாமி நிறுவனங்கள் அனைத்தையும் அக்டோபர் 2015ல், சவுக்கு தளம், சிறை செல்லும் சீமாட்டி என்ற தொடர் கட்டுரைகளின் மூலம் அம்பலப்படுத்தியது. அக்டோபர் 2015 முதலே ஜெயலலிதாவின் பினாமி நிறுவனங்கள் குறித்த விபரங்கள் அனைத்தும் பொதுத் தளத்தில் உள்ளது. ஜெயலலிதா இறந்த பிறகு, சாவகாசமாக, இந்து நாளேடு, இந்த பினாமி நிறுவனங்கள் குறித்து விரிவான செய்தியை வெளியிட்டது.
இது குறித்து பேசிய காவல்துறை உயர் அதிகாரி, “நவம்பர், டிசம்பர் 2016ல், மன்னார்குடி குடும்பத்திடம் செல்லாத நோட்டுக்கள் 2200 கோடி இருந்தன என்றும், ஒவ்வொரு அமைச்சரிடமும் பணம் பிரித்துக் கொடுக்கப்பட்டு புதிய நோட்டுக்களாக வாங்கப்பட்டன என்று அதிகாரிகளில் பெரும்பாலானோர் பேசினர். சேகர் ரெட்டியும் இதற்காக பயன்படுத்தப்பட்டார். அப்போது நடத்தாத சோதனைகள் இப்போது ஏன் ?” என்றார்.
அப்போதெல்லாம் நடத்தப்படாத சோதனைகள் இப்போது ஏன் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. இந்த வருமான வரி சோதனைகள் இந்தியாவே பார்த்திராத மிகப் பெரிய ஊழலை வெளிக் கொணர்வதற்காக என்ற பிம்பம் தொடக்கம் முதலே கட்டமைக்கப்பட்டது. 1800 அதிகாரிகள் இந்தியா முழுக்க சோதனை என்ற தகவல் ஊடகங்களில் கசிய விடப்பட்டது. வருமான வரித் துறை அதிகாரிகள் ஸ்ரீனி வெட்ஸ் மகி என்ற லேபிள்களை காரில் ஒட்டிக் கொண்டு, திருமண கோஷ்டி போன்ற வேடத்தில் சோதனைக்கு வருகை தந்தனர் என்ற தகவல் ஊடகங்களில் கசிய விடப்பட்டது. சில வருமான வரித் துறை அதிகாரிகள் இதை உறுதிப்படுத்தியும் உள்ளனர். ஆனால் நேரம் செல்லச் செல்ல, சோதனைகள் நடக்கும் இடங்களின் விபரங்கள் வெளியாகத் தொடங்கியதும், சோதனைகளின் நோக்கம் என்ன என்பது தெளிவாகத் தொடங்கியது. சசிகலா குடும்பத்தை மட்டுமே குறி வைத்து இந்த சோதனைகள் என்பது தெள்ளத் தெளிவாகியது.
ஜெயா டிவியில் ஐந்து நாட்கள் வளைத்து வளைத்து சோதனை செய்யும் அதிகாரிகள், ஜெயா டிவியின் இயக்குநராக இருந்த வைகுண்டராஜனை ஏன் சோதனை செய்யவில்லை என்ற கேள்வியும் எழுந்தது. ஜெயா டிவியில் பங்கு வைத்திருப்பதற்காகவே வைகுண்டராஜன் பழி வாங்கப் படுகிறார் என்று ஜெயலலிதா அறிக்கையே விட்டிருக்கிறார். வைகுண்டராஜன் மீது திமுக அரசு நடவடிக்கை எடுத்தற்காக, சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பே செய்திருக்கிறது. இணைப்பு. மன்னார்குடி மாபியாவின் வீடுகளில் சல்லடை போட்டுத் தேடும் வருமான வரித் துறையினர் வைகுண்டராஜன் வீட்டில் சோதனை நடத்தியிருந்தால் கருப்புப் பணமோ கணக்கில் வராத சொத்துக்களோ கிடைத்திருக்குமா இல்லையா ? வைகுண்டராஜன் ஜெயா டிவியில் மட்டும் பங்குதாரர் அல்ல. மிடாஸ் மதுபான ஆலை உள்ளிட்ட மேலும் சில நிறுவனங்களில் இயக்குநராகவும், பங்குதாரராகவும் இருந்திருக்கிறார். ஜெயா டிவியில் பங்கு வைத்திருக்கும் ராஜ் சுரானா வீட்டில் சோதனை நடத்தும்போது, வைகுண்டராஜன் வீட்டில் ஏன் நடத்தவில்லை.
ஆர்கே நகர் இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்ததற்கான காரணம், வருமான வரி சோதனைகளின்போது கண்டு பிடிக்கப்பட்ட வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததற்கான சான்றுகளே. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 89 கோடி ரூபாயை விநியோகம் செய்தது பட்டியலோடு கண்டுபிடிக்கப்பட்டது. அன்று யாருக்காக அந்த பணம் விநியோகிக்கப்பட்டது ? தொப்பி சின்னத்தில் தேர்தலில் போட்டியிட்ட டிடிவி தினகரனுக்காகத்தானே பண விநியோகம் நடந்தது ? டிடிவி தினகரனுக்காக பண விநியோகம் செய்தவர்கள் வீட்டிலும் சோதனை நடத்த வேண்டுமா இல்லையா ?
ஆனால் இந்த சோதனைகளுக்கான களத்தை அமைத்துக் கொடுத்ததே எடப்பாடியின் உளவுத்துறைதான். வருமான வரித் துறையினர் பல மாதங்களாக இந்த சோதனைகளுக்கான தயாரிப்பு வேலையில் ஈடுபட்டதாக ஊடகங்களில் தகவலை கசியவிட்டு மார்தட்டிக் கொண்டாலும் சோதனைக்கு வருமான வரித் துறையினர் சென்ற அனைத்து முகவரிகளையும் சேகரித்து கொடுத்தது மாநில உளவுத் துறையினரே. வருமான வரித் துறையினருக்கு ஜாஸ் சினிமாஸ் தெரியும். விவேக் வீடு தெரியும். கிருஷ்ணபிரியா வீடு தெரியும். திருவாரூரில் உள்ள திவாகரனின் உதவியாளர் வீடோ, அல்லது அவர் ஓட்டுனர் வீடோ எப்படி தெரியும் ? இதையெல்லாம் சேகரித்துக் கொடுத்தது தமிழக உளவுத் துறை. மன்னார்குடி மாபியாவோடு தொடர்புள்ள அத்தனை பேரின் விபரங்களையும் உளவுத்துறை சேகரித்து வருமான வரித் துறையிடம் அளித்ததன் அடிப்படையிலேயே இந்த சோதனைகள் நடந்துள்ளன.
இந்த விபரங்களையெல்லாம் சேகரித்துக் கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி என்ன பத்தரை மாற்றுத் தங்கமா ? எடப்பாடி அரசின் முடை நாற்றம் எடுக்கும் ஊழலை அனைவரும் அறிவார்கள். டிடிவி தினகரன் மீது மட்டும் ஏன் குறி என்பதுதான் கேள்வி.
முதலில் கருப்புப் பணத்தை கண்டுபிடிக்க என்று கூறப்பட்ட வருமான வரித் துறை சோதனைகள் அரசியல் உள்நோக்கத்தோடு நடத்தப் படுகின்றன என்ற விமர்சனம் வந்ததும் புதிய காரணம் கூறப்பட்டது. போலி நிறுவனங்களை கண்டுபிடிக்கவே இந்த சோதனைகள் என்று கூறப்பட்டது. போலி நிறுவனங்களை கண்டுபிடிக்க கம்பெனிகள் பதிவாளர் இணையதளத்துக்கு சென்றாலே தெரியப் போகிறது. மேலும் இந்த போலி நிறுவனங்களின் பட்டியல் ஊடகங்களில் வெளியான பிறகு கண்டுபிடிக்க என்ன இருக்கிறது ?
இந்த சோதனைகளை நடத்த வருமான வரித் துறை அதிகாரிகளிடம் போதுமான அதிகாரிகள் இல்லை. இதன் காரணமாக, பொதுத் துறை வங்கிகள், நாபார்டு வங்கிகள் போன்றவற்றில் பணியாற்றும் அதிகாரிகளும் சோதனைக்கு அனுப்பப் பட்டுள்ளனர்.
ஆனால், இவர்கள் சோதனைக்கு ஆர்வமாக எதைத் தேடிச் சென்றார்களோ அது கிடைக்கவில்லை. 150க்கும் மேற்பட்ட இடங்களில் 1800 அதிகாரிகள் தேடியும் எங்கேயும் பணக் குவியல் கிடைக்கவில்லை. எங்கேயும் வைரக் கட்டிகள் கிடைக்கவில்லை. ஜெயலலிதா எப்போது இறந்தாரோ அப்போதே மன்னார்குடி குடும்பத்துக்கு நம்மை பாதுகாக்க யாரும் இல்லை என்பது தெரியும். பன்னீர்செல்வம் முறுக்கிக் கொண்டு, ஆட்சியும் கைவிட்டுப் போனதும், சிக்கல் எப்போது வேண்டுமானாலும் வரும் என்பதை மன்னார்குடி கூட்டம் தெரிந்தே வைத்திருக்கிறது. பணக் கட்டுக்களை, படுக்கைக்கு அடியில் புதைத்து வைத்து மாட்டிக் கொள்ள அவர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை.
அதிமுகவை வளைத்து, கைப்பிடிக்குள் கொண்டு வர வேண்டும் என்று நினைத்த பிஜேபிக்கு மிகப் பெரும் தடையாக இருப்பவர் டிடிவி தினகரன். டெல்லியை சேர்ந்த ஒரு பத்திரிக்கையாளர் இது குறித்து பேசுகையில் “கடந்த ஒரு ஆண்டாக பிஜேபி மொத்தமாக ஒரு ஓவர் பந்து வீசியிருக்கிறது. ஆனால் அனைத்து பந்துகளுமே வைட் பந்துகளாக அமைந்தன. ஓபிஎஸ்ஸை நம்பினார்கள். தோற்றார்கள். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை நம்பினார்கள். மண் குதிரை என்பதை தாமதமாக தெரிந்து கொண்டார்கள். எடப்பாடியை நம்பினார்கள். கரை சேர மாட்டோம் என்பதை புரிந்து கொண்டார்கள். இரட்டை இலை சின்னத்தை முடக்கினால் டிடிவி பணிவார் என்று நினைத்தார்கள். ஏமாந்தார்கள். டிடிவியை சிறையில் அடைத்தால் அதோடு அவர் கதை முடிந்தது என்று நினைத்தார்கள். அவர் சிறைவாசம் முடிந்த பிறகு வீறு கொண்டு எழுந்தார். இறுதியாக இந்த வருமான வரித் துறை சோதனை. இதுவும் அவர்களுக்கு தோல்வியையே தரும். பேட்டிங் செய்யாமலேயே டிடிவி தினகரனுக்கு ஆறு ரன்களை பிஜேபி கொடுத்தள்ளது.
தன்னை அரசியல் சாணக்கியராக கருதிக் கொள்ளும் சுப்ரமணிய சுவாமியால் மைலாப்பூர் அறிவு ஜீவி என்று வர்ணிக்கப்படும் குருமூர்த்தியின் திட்டங்கள் தோல்வியைத் தழுவுவதையே இது உணர்த்துகிறது. முக்கியமான அரசியல் சூதாட்டங்களுக்கு ஒரு ஆடிட்டரை நம்பினால் இதுதான் நடக்கும். தன்னை சோ ராமசாமியாக நினைத்துக் கொண்டு, குருமூர்த்தி சொல்லும் அத்தனை ஆலோசனைகளும் பிஜேபிக்கு பின்னடைவையே அளித்திருக்கின்றன.” என்றார்.
இவரைப் போலவே, இந்த வருமான வரி சோதனைகளின் உள்நோக்கம் குறித்துதான் பலரும் சந்தேகங்களை எழுப்புகிறார்கள்.
மூத்த பத்திரிக்கையாளர் ஆர்கே.ராதாகிருஷ்ணன் பேசுகையில், “வருமான வரித் துறை ஒரு சிலரை மட்டுமே குறி வைக்கிறது என்ற குற்றசாட்டு ஒரு புறம் இருந்தாலும், ஒரு குடும்பத்துக்கு இத்தனை சொத்துக்கள் எப்படி சேர்ந்தன என்பதற்கு அவர்கள் பதில் சொல்லத்தான் வேண்டும். ஊடகங்களில் 1430 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இவற்றுக்கான பின்னணி குறித்து விரிவான தகவல்களை வருமான வரித் துறை வெளியிட வேண்டும்.
இந்த சொத்துக்கள் வாங்கப்பட்டது ஒரு புறம் இருந்தாலும், கொடநாடு எஸ்டேட், கங்கை அமரனின் பங்களா போன்றவை மிரட்டி வாங்கப்பட்து பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது போல எத்தனை சொத்துக்கள் மிரட்டி வாங்கப்பட்டுள்ளன என்தும் விசாரிக்கப்பட வேண்டும்.
ஆனால் இவற்றையெல்லாம் விசாரிப்பதற்கு வருமான வரித் துறைக்கு அதிகாரம் கிடையாது. மாநில அரசின் லஞ்ச ஒழிப்புத் துறைதான் இதை விசாரிக்க வேண்டும். அந்த லஞ்ச ஒழிப்புத் துறை, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அவர்தான் இது குறித்து முடிவெடுக்க வேண்டும். ஆனால் இந்த விவகாரத்தில் முதல்வர் பழனிச்சாமியின் கனத்த மவுனம் புரியாத புதிராக உள்ளது” என்றார்.
வருமான வரித் துறையின் பணி வரி ஏய்ப்புகளை கண்டு பிடிப்பது. கணக்கில் வராத பணம் மற்றும் சொத்துக்களை கண்டு பிடிப்பது. அந்த பணம் மற்றும் சொத்துக்களுக்கு உரிய வரி செலுத்தாவிட்டால், அதற்கான வரியை அபராதத்தோடு வசூலிக்க வேண்டும். அந்த சொத்துக்கள் எப்படி வாங்கப்பட்டன என்ற கேள்வியை வருமான வரித் துறை எழுப்ப அதிகாரம் கிடையாது. வருமான வரித் துறை விதிக்கும் வரி மட்டும் அபராதத்தை செலுத்தத் தவறினால் மட்டுமே சொத்துக்களை அட்டாச் செய்ய முடியும்.
மேலும் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட பினாமி பரிவர்த்தனைகள் தடை சட்டம் 1 நவம்பர் 2016 முதல் நடைமுறைக்கு வந்தது. மன்னார்குடி மாபியா வாங்கிக் குவித்த சொத்துக்கள் அனைத்தும் இதற்கு பல ஆண்டுகள் முன்னதாக வாங்கப்பட்டவை. அந்த சட்டத்தை பின் தேதியிட்டு செயல்படுத்தவும் முடியாது.
ஆனால் ஜெயலலிதா உயிரோடு இருக்கையில் இந்த சோதனைகளை நடத்தியிருந்தால், பொது ஊழியரான அவர் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, விவேக் ஜெயராமன், டாக்டர் கே.எஸ்.சிவக்குமார் போன்றோர் இதர குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு, இந்த சொத்துக்கள் அனைத்தையும் அட்டாச் செய்திருக்க முடியும். அதற்கு பிறகு ஜெயலலிதா இறந்திருந்தால் கூட, இவர்கள் மீதான வழக்கு விசாரணையை தொடர்ந்து நடத்த சட்டத்தில் இடமுண்டு. அப்போது, மாநில லஞ்ச ஒழிப்புத் துறையோ, மத்திய புலனாய்வுத் துறையோ, விவேக் ஜெயராமனை பிடித்து உலுக்கி, ஜாஸ் சினிமாஸ் பெயரில் 11 தியேட்டர்களை வாங்க காலேஜ் படிக்கும் உனக்கு ஏது இவ்வளவு பணம் என்று கேள்வி எழுப்பியிருக்க முடியும். ஆனால் இப்போது வருமான வரித் துறையால், ஜாஸ் சினிமாஸ் வாங்கியதற்கான வரியை செலுத்து, அபராதத்தை செலுத்து என்பதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாது.
மேலும், வருமான வரித் துறை விதிக்கும் வரி மற்றும் அபராதத்தை எதிர்த்து வருமான வரி தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்யலாம். ஆகஸ்ட் 2017 அன்று உள்ளபடி, அந்த தீர்ப்பாயத்தின் முன் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 97,000. தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து, உயர்நீதிமன்றம் செல்லலாம். பிறகு உச்சநீதிமன்றம் செல்லாம். ஜெயலலிதா தவறான வருமான வரியை தாக்கல் செய்தார் என்று வருமான வரித் துறை தொடர்ந்த வழக்கு 20 வருடங்கள் கழித்து ஜெயலலிதா அபராதம் செலுத்தியதோடு முடிவுக்கு வந்தது என்பதை மறந்து விடக் கூடாது.
இந்த சோதனைகளால் ஜெயலலிதாவின் பினாமிகளாக இருந்து சட்டவிரோதமாக சேர்த்த சொத்துக்களுக்கு வரி கட்டி, அவற்றை சட்டபூர்வமான சொத்துக்களாக மாற்ற, மன்னார்குடி மாபியாவுக்கு வருமான வரித் துறை உதவியிருக்கிறது என்பதே இறுதி முடிவாக அமையும்.
இந்த சோதனைகளின் நோக்கம் கருப்புப் பண ஒழிப்பு, போலி நிறுவனங்களை கண்டறிதல், ஆகியவை என்று பிஜேபியினர் எவ்வளவுதான் உரக்கக் கூறினாலும், இந்த சோதனைகளின் நோக்கம் டிடிவி தினகரனை மிரட்டி ஒடுக்குவது என்பது மட்டுமே. அரசியலில் இருந்து விலகு. அல்லது விலக்கப்படுவாய் என்பது மட்டுமே இந்த வருமான வரி சோதனைகள் உணர்த்தும் செய்தி.
கூவாத்தூரில் எம்எல்ஏக்கள் சசிகலாவால் தங்க வைக்கப்பட்டு, எம்எல்ஏக்கள் விலைக்கு வாங்கப்பட்ட செய்தியை அன்று ஊரே பேசியது. இது வருமான வரித் துறை அதிகாரிகளின் காதுகளுக்கு செல்லாமல் இருந்திருக்காது. ஆனால், கூவாத்தூர் நாடகம் முழுமையாக நடந்து முடியும் வரை, கருப்புப் பண ஒழிப்புப் பற்றி உரக்க பேசுவோர் யாரும் அங்கே சோதனை நடத்த முன் வரவில்லை. உண்மையிலேயே ஊழல் ஒழிப்பும், கருப்புப் பண ஒழிப்பும் பிஜேபியின் நோக்கமாக இருந்திருந்தால், அன்று கூவாத்தூரில் சோதனைகள் நடைபெற்றிருக்க வேண்டும்.
குஜராத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட்டார். குஜராத்தின் காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி மாற்றி வாக்களிக்க வைக்க, அமித் ஷா நேரடியாகவே களத்தில் இறங்கி வேலை பார்த்தார். எம்எல்ஏக்களை காப்பாற்ற வேறு வழி தெரியாத காங்கிரஸ் கட்சி, எம்எல்ஏக்கள் அனைவரையும், காங்கிரஸ் ஆளும் மாநிலமான கர்நாடகாவுக்கு அழைத்து சென்று, ஒரு ரிசார்ட்டில் தங்க வைத்தது. இரண்டாவது நாளே அந்த ரிசார்டில் வருமான வரித் துறை சோதனை நடத்தியது. இந்த அவசரத்தை கூவாத்தூரில் ஏன் காண்பிக்கவில்லை என்பது நியாயமான கேள்வியா இல்லையா ?
1991 முதல் 1996 வரை, ஜெயலலிதாவும் சசிகலாவும் இணைந்து பல்வேறு நிறுவனங்களை தொடங்கி, லஞ்சமாக வாங்கிய பணத்தையெல்லாம் அந்த நிறுவனங்கள் பெயரில் சொத்துக்களாக மாற்றினார்கள். ஆனால் அப்போது அவர்கள் செய்த தவறு, அந்த நிறுவனங்களின் சார்பில், சொத்து வரியோ, விற்பனை வரியோ, வருமான வரியோ செலுத்தவில்லை. அந்த நிறுவனங்களில் வருமானம் இருப்பதாகவும் கணக்கு காட்டவில்லை. அதனால்தான் சொத்துக் குவிப்பு வழக்கு இறுதியில் தண்டனையில் முடிந்தது.
ஆனால் 1996ல் பாடம் கற்றுக் கொண்ட ஜெயலலிதா அதற்கு பின்னர், கவனமாக இருக்கத் தொடங்கினார். அதன் பின் தொடங்கப்பட்ட பெரும்பாலான நிறுவனங்களில் உரிய வருமானம் இருப்பதாக காண்பித்து, வருமான வரியும் செலுத்தப்பட்டது. மிக கவனமாக கணக்கு வழக்குகளை பராமரித்தனர். கொடநாடு எஸ்டேட்டை தவிர வேறு எந்த சொத்தும் தன் பெயரில் இல்லாத வகையில் ஜெயலலிதா பார்த்துக் கொண்டார்.
இவையெல்லாம் பிஜேபிக்கு நன்றாகவே தெரியும். ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு மேல் முறையீட்டுக்காக காத்திருந்த சமயத்திலேயே எவ்வித தயக்கமும் இன்றி, அருண் ஜெய்ட்லியை ஜெயலலிதா வீட்டுக்கு அனுப்பி அவர் ஆதரவை கேட்டவர் மோடி. ஆகையால் மோடி ஊழல் ஒழிப்பு, கருப்புப் பண ஒழிப்பு என்றெல்லாம் பேசுவது வெறும் பசப்பு வார்த்தை மட்டுமே.
அதிமுகவை முழுமையாக கைப்பற்றி கபளீகரம் செய்ய வேண்டும் என்பதே மோடி மற்றும் அமித் ஷாவின் இலக்கு. பன்னீர்செல்வமும், எடப்பாடியும் மோடியின் விசுவாசமான அடிமைகளாக மாறி விட்டார்கள். அப்படியொரு அடிமையாக டிடிவி தினகரனை மாற்ற வேண்டும் என்று மோடி அமித் ஷா ஜோடி எடுக்கும் அத்தனை முயற்சிகளும் தோற்று வருகின்றன. இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக லஞ்சம் பெற முயற்சித்தார் என்ற குற்றசாட்டில் டிடிவி தினகரனை கைது செய்தனர். தினகரன் மீது, கூட்டுச் சதி மற்றும் லஞ்ச ஒழிப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தினகரன் கைது செய்யப்பட்டார். திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
எந்த தேர்தல் ஆணைய அதிகாரிக்கு தினகரன் லஞ்சம் கொடுக்க முயற்சித்தார் என்ற விபரம் இன்று வரை, டெல்லி காவல்துறையினரால் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படவில்லை. இந்த காரணத்தினாலேயே, தினகரனை ஜாமீனில் சிபிஐ நீதிமன்றம் விடுதலை செய்தது. அதிகபட்சம், தற்போது சிறையில் உள்ள சுகேஷிடம் பணம் கொடுத்து ஏமாந்ததாக டிடிவி தினகரன் புகார் அளித்து வழக்கு பதிவு செய்தால்தான் உண்டு. தேர்தல் ஆணைய அதிகாரிகள் யாரும் அவ்வழக்கில் சம்பந்தப்பட்டிராத நிலையில், இந்த வழக்கில் டிடிவி தினகரனுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பதற்கான சாத்தியக் கூறுகள் மிக மிக குறைவு.
ஆனால் கைது மற்றும் சிறைவாசத்துக்கு பிறகும், டிடிவி தினகரன் மோடி அமித் ஷா கூட்டணி எதிர்ப்பார்த்தது போல நடந்து கொள்ளவில்லை.
நாளுக்கு நாள் டிடிவி தினகரனுக்கு அதிமுக தொண்டர்கள் இடையே ஆதரவு பெருகி வருவதை கண்கூடாக பார்க்க முடியும். மேலும், நமது எம்ஜிஆர் நாளிதழ் மற்றும் ஜெயா டிவியை வைத்து வலுவானதொரு பிரச்சாரத்தை டிடிவி அணி முன்னெடுத்து வருகிறது. இதன் காரணமாகவே ஜெயா டிவியும் நமது எம்ஜிஆர் நாளேடும் குறிவைத்து சோதனை செய்யப்பட்டன. நமது எம்ஜிஆர் நாளேடு மற்றும் ஜெயா டிவி இப்போது தொடங்கப்பட்ட ஷெல் நிறுவனங்கள் அல்ல. ஜெயா டிவி 1996ல் தொடங்கப்பட்டது. நமது எம்ஜிஆர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கிலேயே சம்பந்தப்பட்டது. புதிதாக அதில் சோதனை நடத்த என்ன இருக்கிறது ?
தன்னுடைய அரசியல் எதிரிகளை மோடியும் அமித் ஷாவும் எப்படியெல்லாம் அழித்து ஒழித்து இருந்த தடம் தெரியாமல் செய்வார்கள் என்பதற்கு, குஜராத்தில் ஆர்எஸ்எஸ் நிர்வாகியாக இருந்த சுனில் ஜோஷி முதல் குஜராத்தில் உள் துறை அமைச்சராக இருந்த ஹரேண் பாண்டியா வரை பார்த்துக் கொண்டிருக்கிறோம். எதிரிகளை அழித்து மண்ணோடு மண்ணாக அழிக்க மோடி அமித் ஷா கூட்டணி துளியும் தயங்காது.
அப்படி ஒரு எதிரியாகவே டிடிவி தினகரனை அமித் ஷா, மோடி ஜோடி பார்க்கிறது. மன்னார்குடி மாபியா கூட்டத்தின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்பதும், அவர்கள் வழக்குகளை எதிர்கொள்ள வேண்டும் என்பதிலும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
ஆனால் இதை செய்யும் பிஜேபியின் நோக்கம் பழுது. முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கங்கள் கொண்டது. அரசியல் காரணங்களுக்காக, அரசு நிறுவனங்களை துஷ்பிரயோகம் செய்யப்படுவதை வெளிப்படையாக காண முடிகிறது. இது போல 1800 அதிகாரிகளை பயன்படுத்தி மோடி, அதானி குழுமத்தை சோதனை செய்ய உத்தரவிடுவாரா ? அதானி மற்றம் அம்பானி நிறுவனங்கள் பல கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதை மாற்று ஊடகங்களான இணையதளங்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. ஏன் அந்த வரி ஏய்ப்புகள் மோடி கண்களுக்கு தெரியவில்லை. ஒரே ஆண்டில் 16,000 சதவிகிதம் வளர்ச்சி அடைந்த அமித் ஷாவின் மகன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்த விதமான விசாரணையும் இல்லை.
காங்கிரஸ் கட்சி செய்த அதே தவறை பிஜேபி இன்று செய்து கொண்டிருக்கிறது. ஆந்திராவில் காங்கிரஸ் கட்சிக்கு நிதியளிக்கும் அட்சய பாத்திரமாக இருந்தவர், ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி. அவர் மகன் ஜெகன் மோகன் தன்னை முதல்வராக்க வேண்டும் என்று கோரியபோது, அதை மறுத்த காங்கிரஸ் கட்சி, ராஜசேகர் ரெட்டி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்து, அதற்கு உடந்தையாக இருந்ததாக ஜெகன்மோகன் ரெட்டியை கைது செய்து இரண்டு ஆண்டுகள் சிறையில் வைத்திருந்தது. இன்று ஜெகன் மோகன் ரெட்டி, ஆந்திராவில் ஒரு வலுவான அரசியல் சக்தி. அதே நிலைக்கு டிடிவி தினகரனை உயர்த்தும் பணியில்தான் இன்று பிஜேபி ஈடுபட்டிருக்கிறது.
இந்தியாவில் எதிர்க்கட்சிகளே இல்லாமல் முழுமையாக ஒழித்து விட வேண்டும் என்பதே மோடியின் நோக்கம். பிராந்திய கட்சிகளை தடம் தெரியாமல் அழித்து விட வேண்டும் என்பதே பிரதான இலக்கு. இப்படிப்பட்ட நோக்கம், ஜனநாயகத்தின் அடிப்படை கூறுகளுக்கு எதிரானது. எதிர்க்கட்சிகள் இருக்கையிலேயே நாட்டையும் நாட்டு மக்களையும், கடுமையான துன்பங்களுக்கு ஆளாக்கும் மோடி மற்றும் பிஜேபி, எதிர்க்கட்சிகளே இல்லாமல் போனால் என்ன செய்வார்கள் என்பதை கற்பனை செய்யக் கூட அச்சமாக இருக்கிறது.
பழுதான நோக்கத்துக்காக நடத்தப்படும் இந்த வருமான வரி சோதனை நாடகங்களை எதிர்க்கட்சிகள் கண்டித்திருப்பது முழுக்க முழுக்க சரியே. தன் ஏகபோகத்தை நாடெங்கும் நிறுவ முயலும் மோடியின் பேராசை மற்றும் அராஜகத்தையும் எதிர்க்கத்தான் வேண்டும்.
இப்படிப்பட்ட கெடுசெயல்களில் ஈடுபடும் மோடி என்ன ஆவார் என்பதை வள்ளுவர் அழகாக விளக்குகிறார்.
கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
நடுவுநிலைமை தவறிச் செயல்படலாம் என்று ஒரு நினைப்பு ஒருவனுக்கு வந்து விடுமானால்
அவன் கெட்டொழியப் போகிறான் என்று அவனுக்கே தெரியவேண்டும்.
story okay but end card says who u support ?
அப்படியே நம்ம கலைஞர் களவாணி கும்பலையும் கட்டம் கட்டினால்
கொஞ்சம் ஊர்மகிழும்!!!
ஷங்கர் ஜாபர்ஷேட் தெரியுமா????
யோவ் ‘பீ’ ஜேபி யின் காவி கூஜா பார்த்திபன், கார்த்திக் அவர்களே, ஒரு திருடனை பற்றி பேசினால் நீ ஏன் எனக்கு பிடிக்காத வேறுரு திருடைனை பற்றி பேசவில்லை, ஆகவே நீ யோக்கியனில்லை என்று கூறும் உங்களை போலோர் உள்ள வரை நாம் உருப்பட மாட்டோம்
தயவுசெய்து நீங்கள் திமுகவின் அல்லக்கை என்று ஒப்புக்கொள்ளுங்கள் 2 g வழக்கை எழுதுங்கள் . இப்படிக்கு பாதிக்கப்படும் பொதுமக்களில் ஒருவன்
During karuna regime you have supported jaya lalitha now you are supporting karuna…Why double standard… These both parties should be eliminated
Ttv jolra
மன்னார்குடி மாபியா கூட்டத்தினரது அபார வளர்ச்சி ஊரரிந்த விஷயம்…. இது பாேன்ற நடவடிக்கைகள் தேவைதான் … ஆனால் தற்பாேது நடக்கின்ற ரெய்டுகள் உள் நாேக்கம் காெண்டவையாக இருப்பதும் … ஒருவரை பயமுறுத்தி அடிப்பணிய வைக்க ஆயுதமாக பயன்படுத்துவது தான் .. தவறு என்பது அனைவரின் கருத்து … மத்தியில் ஆளுபவர்களின் அடாவடி நடவடிக்கை தான் இது பாேன்ற ..ரெய்டுகள் … .!
WHETHER RIGHT OR WRONG, DONE WITH ULTERIOR MOTIVE OR NOT DTV AND GANG DESERVES THIS. SIMILAR RIDE SHOULD TAKE PLACE THROUGHOUT INDIA IN ALL THE POLITICIANS AND THEIR BENAMIS HOUSES AND OFFICES, IF DONE GOVT. CAN FORGO INCOME TAX FOR TRUE CITIZENS.
ச சிகலா-தினகரன் குடும்பத்தாரின் அநியாய செயல்களை சுட்டிக்காட்டியுள்ள அதேவேளையில், வருமானவரித் துறையின் நடவடிக்கை என்ற பெயரில் ஒரு பழுதான நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் தெளிவாக இக்கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது. இது எப்படி தவறாகும்? ச்சிகலா,தினகரன்குடும்பத்தை சாடும்போதுகொண்டாடுவதும், அதே சமயம் அடக்குமுறைநடவடிக்கையை சுட்டிக்காட்டினால் அவர்களுக்கு ஆதரவா என்று கேட்பதும் பைத்தியக்காரத்தனம். நேர்மையாளராக இருந்தால் சசி-தினகரனை எந்த அளவுக்கு குற்றம் சுமத்துகிறமோ அந்த அளவுக்கு இந்த வருமான வரி நடவடிக்கையின் நோக்கத்தையும் குற்றம் சுமத்தவேண்டும். நன்றாக கவனிக்கவும் நடவடிக்கையினை அல்ல, நோக்கத்தினை.
I understand from various public reports appearing in different sources that the BJP government is not against them keeping the loot (wrongfully gained by JJ or these gangs) but they are only against the Sasi’s gang coming into direct politics and thereby into ruling Tamilnadu, directly.
We already know that even when they were parasites (beings that suck energy from other living beings) of JJ, they indirectly ruled Tamilnadu, during JJ chief minister times.
What are the problems for the gang members of Sasi. They could have kept the lacs of crores of looted money and they could have gone into different business and indirectly ruled Tamilnadu.
No – they do not want to rule indirectly, as they did during the periods of JJ. Now they want to directly rule and loot more the people of Tamilnadu.
Remember, how Natarajan and his relatives without shame and without any concern for the intelligence of Tamilnadu people decalred “WE WILL DO FAMILY POLITICS” Such statements were made within a month after the death of JJ and none of them were at that time members of ADMK.
Even Mr. Muthuvel Karunanidhi would not have said that publicly, even though he was capable and indeed maneuvered DMK into such situation.
Why is this opposition to the raids in the citadels of Sasi and her relatives? In a larger scheme of things, this process can help the nation (I am aware there are a lot of assumptions in this declaration) – to eliminate wrong elements coming into power, since they can use their ill-gotten wealth to buy votes very easily and then rule and loot – and keep the vicious cycle going at ever-growing speed.
Except for the issue of caste, religion politics of BJP, all other economic policies are good, although their implementation is very poor.
It is pathetic that you write at this standard
You are totally wrong
Topic is wrong.
Jaya said TN is the Waterloo for SWAMY which went wrong.It became her waterloo. Modi too who uses blackmailing as weapon and distinguishes corruption as OURS vs THEIRS is to face TAMILNADU as his Waterloo. Instead of using the opportunity to grow as a viable alternative he tries all the crooked things and fails . HE IS AN UNTRUSTWORTHY to eradicate corruption . But there is no alternative as of now at all India level. In TN he can never win if he doesnt project SWAMY ,who got convictions one on jaya and another on the pipeline, AS THE CHAMPION OF CORRUPTION ERADICATION and does a positive politics to win the public confidence.
Savukku, I dont see your genuine touch or flow or sequence. Anyway, there were several articles with documentary evidence but no action was taken so far. ஒரு ஆடிட்டரும் ஒரு வக்கீலும் இருப்பார்கள் இவர்களை விடுவிக்க. பணம் பணத்தை விடிவுக்கும். WE will know how Pachaimuthu was released, Kala nidhi and Dayanidhi yet to be arrested, Kanimozhi and Raja yet to be convicted or even they may be acquitted. All Political justice and no Legal Justice . Savukku has been striving but it remains as text and article only.
Parties like Communist are condemning this act as vendetta. What justice will people get. Can anyone realise a 27 year old Vivek getting 1430 crores property officially. Unofficially no one can count. Is the Land REgulation, Banking system in our country so dum and deaf when India has got the best of the Banking software producing companies.
This is only tip of the iceberg and there are tons of mountains waiting underneath to be dug in. Why even DMK is silent on these , is a mystery. If we dig out Sasi and company, Tamilnadu will be superpower state in INdia, and also give land of atleast 700 sq.ft to every person who does not own land and can serve mineral water to all houses in chennai and atleast 3 more cities in Tamilnadu. With his, why Edapadi palaniswamy is asking relief from Center government , he can take it from them.
Good
Poda looosu
கலைஞர் மு.கருணாநிதி உரை
நடுவுநிலைமை தவறிச் செயல்படலாம் என்று ஒரு நினைப்பு ஒருவனுக்கு வந்து விடுமானால்
அவன் கெட்டொழியப் போகிறான் என்று அவனுக்கே தெரியவேண்டும்.
???
Nicely written..But are you supporting TTV now?
இந்தக் கட்டுரை பிரபலமான பத்திரிக்கை எதிலாவது பிரசுரிக்கப் படுவதற்கு சாத்தியமில்லையா? பிஜேபியின் குள்ளநரித் தனமும் ஜெயலலிதா என்னும் மோசடி மதல்வரின் முகமூடிகளும் அம்பலப் படுத்தப்பட வேண்டும்.