
ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு கவர்னர் பதவியும் அவசியமில்லாதவை என்றார் அறிஞர் அண்ணா. அவரின் வாக்கை மீண்டும் விவாதத்துக்கு கொண்டு வரும் பணியை தமிழக ஆளுனர் பன்வாரிலால் செய்துள்ளார்.
தமிழகத்திற்கு நியமிக்கப்பட்ட முழுநேர ஆளுனர் பன்வாரிலால் புரோகித் செவ்வாயன்று, பல்கலைக்கழக நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்று அமைச்சர்கள் யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் நேரடியாக அதிகாரிகளை அழைத்து ஆய்வு நடத்தினார். ஆளுனரின் இந்த நடவடிக்கையை பாகுபாடு இல்லாமல் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே குரலில் கண்டித்துள்ளன.
புதன் கிழமை கோவையில் நடந்த ஒரு விழாவில் பேசிய பன்வாரிலால் புரோகித், ஆய்வு நடத்தினால்தான் அரசை பாராட்ட முடியும் என்றும், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆய்வு நடத்த உள்ளதாகவும் பேசினார். ஆளுனர் கோவையில் ஆய்வு நடத்திக் கொண்டிருந்தபோதே, அவசர அவசரமாக ஆய்வு நடக்கும் இடத்துக்கு விரைந்து சென்ற உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்பி.வேலுமணி, அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு வெளியே வந்த பிறகு, ஆளுனர் ஆய்வு செய்வதற்கு கோவை மாவட்டத்தை தேர்ந்தெடுத்தது பெருமையாக உள்ளது என்றும், இது மிக மிக ஆரோக்கியமான ஒரு நடவடிக்கை என்றும் கூறினார்.
உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன், ஆளுநர் ஆய்வு செய்வதால், மாநில சுயாட்சி பாதிக்கப்படாது என்றார். செல்லூர் ராஜு, ஆளுனர் ஆய்வு செய்ததில் எவ்வித தவறும் இல்லை என்றார். வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், டேக் இட் ஈசி என்று எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றார்.
ஒரு மூத்த பத்திரிக்கையாளர், அதிமுக குறித்து எப்போது பேசினாலும் அது ஒரு லும்பன்களின் கட்சி என்பார். திமுகவிலிருந்து எம்ஜிஆர் பிரிந்து போனபோது, கழிவுகள்தான் அதிமுகவுக்கு சென்றன என்றார். எம்ஜிஆர் காலத்திலாவது, எச்வி.ஹண்டே, பண்ருட்டி ராமச்சந்திரன் போன்ற சொல்லிக் கொள்ளும்படியான தலைவர்கள் இருந்தார்கள். ஜெயலலிதாவுக்கு வாய்த்ததெல்லாம் செல்லூர் ராஜுக்களும், திண்டுக்கல் சீனிவாசன்களும்தான்.
தொண்ணூறுகளில் காலஞ்சென்ற எழுத்தாளர் சு.சமுத்திரம் ஒரு சிறுகதை எழுதியிருப்பார். ஒரு 800 வருடங்கள் கழித்து, தமிழகத்தில் அகழ்வாய்வில் ஈடுபடும் அறிஞர்கள் பூமிக்கு அடியிலிருந்து கண்டெடுக்கப்படும் மனித எலும்புக் கூடுகள் எதிலும் முதுகெலும்பே இல்லை. விஞ்ஞானிகள் அனைவருக்கும் இது மிகவும் புதிராக இருக்கிறது. தமிழகத்தின் அகழ்வாய்வில்தான் இப்படிப்பட்ட எலும்புக் கூடுகள் கிடைக்கின்றன. இந்தப் புதிரை அவிழ்த்தே ஆக வேண்டும் என்று நினைக்கும் விஞ்ஞானிகளும், அறிஞர்களும், தீவிரமான ஆராய்ச்சியில் ஈடுபடுகின்றனர். அப்போதுதான் விஞ்ஞானிகள் அதற்கான காரணங்களை கண்டுபிடிக்கின்றனர்.
தொண்ணூறுகளில் தமிழகத்தில் ஆட்சி நடத்திய ஒரு அரசின் தலைவர், தனது அமைச்சர்கள், குடிமக்கள் அனைவரும் தன் காலில் விழு வேண்டும் என்ற கட்டாய உத்தரவை பிறப்பித்தார். அப்போது தொடங்கிய இந்த காலில் விழும் பழக்கம் தமிழகம் முழுக்க தொடர்ந்தது. இந்தப் பழக்கம் தொடர்ந்த காரணத்தால், நாளடைவில் இயற்கையின் பரிணாம வளர்ச்சி காரணமாக, தேவையில்லாமல் இருந்த அந்த முதுகெலும்பை இயற்கை நீக்கிவிட்டது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்தனர் என்று அந்த கதையை முடித்திருப்பார் சமுத்திரம். அன்று எழுத்தாளர் சமுத்திரம் எழுதியதில் துளியும் தவறில்லை என்பதையே அன்று முதல் இன்று வரை, அதிமுக அடிமைகளின் நடத்தை காட்டுகிறது.

1991 ஜெயலலிதா ஆட்சி தொடங்கிய புதிதில், ஆளுனராக இருந்தவர் பீஷ்ம நாராயண் சிங். அவருக்கென்று சில ‘பிரத்யேக தேவைகள்’ இருந்தன. அவற்றை ஆளுங்கட்சி கவனமாக பார்த்துக் கொண்டதால், அவர் வேறு எந்த விவகாரங்களிலும் தலையிடுவது இல்லை. அதன் பின்னர்தான் ஆந்திர முதல்வராக இருந்த சென்னா ரெட்டி ஆளுனராக நியமிக்கப்பட்டார். அவர் வந்தது முதலே ஏழாம் பொருத்தம்தான். ஜெயலலிதா மீது 1993 முதலே ஊழல் குற்றச் சாட்டகள் பெருக்கெடுக்கத் தொடங்கின. முதலில் சுப்ரமணியன் சுவாமி ஆளுனரிடம் புகாரளித்தார். பிறகு திமுக தொடங்கி எல்லா கட்சிகளுமே புகார் அளித்தன. ஆளுனர் இதற்கான விளக்கங்களை முதல்வரிடம் கேட்கத் தொடங்கினார். கடும் கோபமடைந்தார் ஜெயலலிதா. ஒரு பத்திரிக்கையாளர் இது குறித்து பேசியபோது, அப்போது இருந்த ஆட்சியர்களோ, காவல் கண்காணிப்பாளர்களோ, மாவட்டத்துக்கு வந்தால், மரியாதை நிமித்தமாகக் கூட சந்திக்கக் கூடாது என்று தெளிவான உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில், காலண்டர்களும் டைரிகளும் அச்சிடப்படும். அவற்றில் ஆளுனர் படம் மற்றும் முதல்வரின் படம் தவறாமல் இடம் பெற்றிருக்கும். 1994 என்று நினைவு. அந்த ஆண்டு ஜுலை மாதம் முதல் காலண்டரும் வரவில்லை, டைரியும் வரவில்லை. வழக்கம் போல டைரி தயாரிக்கப்பட்டு ஜெயலலிதா பார்வைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது, அதை பிரித்துப் பார்த்த ஜெயலலிதா, சென்னா ரெட்டியின் படத்தை கோபத்தோடு கிழித்து எறிந்தார். அப்போது தலைமைச் செயலாளராக இருந்த ஹரிபாஸ்கர் ஐஏஎஸ், அம்மாவின் மனதை புரிந்து, காலண்டர் மற்றும் டைரிகளை எந்த அரசு அலுவலகத்துக்கும் விநியோகிக்கவில்லை. ஜுலை மாதம், ஆளுனர் படம் இல்லாத காலண்டர்களும் டைரிகளும் விநியோகம் செய்யப்பட்டன.

முன்னாள் தமிழக ஆளுனர் சென்னாரெட்டி
ஜெயலலிதா மீது ஊழல் வழக்கு தொடர்வதற்கு அனுமதி கோரி, சுப்ரமணிய சுவாமி, ஆளுனர் சென்னா ரெட்டியிடம் மனு அளித்தார். அதை ஒரு மாதம் பரிசீலித்த சென்னா ரெட்டி, சுப்ரமணிய சுவாமிக்கு வழக்கு தொடுக்க அனுமதி அளிக்க இருக்கிறார் என்ற தகவல் முன்னதாகவே ஜெயலலிதாவுக்கு கிடைத்தது.
திடீரென்று சட்டப்பேரவையில் எழுந்து உரையாற்றினார். “ஆளுனரை நான் ஏன் அடிக்கடி சந்தித்து நிர்வாக விவாதங்களை நடத்தவில்லை என்று பலர் கேட்கிறார்கள். நான் மரியாதை நிமித்தமாக ஆளுனரை ஒரு முறை சந்திக்க சென்றபோது, என்னிடம் தகாத முறையில் நடந்து கொள்ள ஆளுனர் முயற்சித்தார்” என்றார். அவருக்கு ஆளுனரோடு இருந்த வெறுப்பு அதன் பின், தமிழக நிர்வாகத்தில் மோசமாக பிரதிபலித்தது.
சென்னா ரெட்டிக்கு பின் தமிழகத்துக்கு வந்த ஆளுனர்கள், எவ்விதமான பரபரப்பான காரியங்களிலும் ஈடுபடவில்லை. இப்போது வந்துள்ள ஆளுனர்தான் புதிய பஞ்சாயத்தை தொடங்கி இருக்கிறார். ஆளுனரின் நோக்கம் என்ன என்பது குறித்து பார்ப்போம். அதற்கு முன்னதாக தமிழக அமைச்சர்கள் ஏன் இப்படி போட்டி போட்டுக் கொண்டு ஆளுனர் ஆய்வை வரவேற்கிறார்கள் என்று பார்ப்போம்.
ஜெயலலிதா இருந்தவரை, தமிழக அரசில் அனைத்து டெண்டர்களும் யாருக்கு கொடுக்கப்பட வேண்டும் என்பதை போயஸ் தோட்டம்தான் முடிவு செய்யும். இவர்கள் தேர்ந்தெடுக்கும் நிறுவனத்திடம் எவ்வளவு வாங்க வேண்டும் என்பதையும் சசிகலா மற்றும் ஜெயலலிதா முடிவு செய்வர். சம்பந்தப்பட்ட அமைச்சர், நிறுவனத்தின் பிரதிநிதிகள் அளிக்கும் தொகையை அப்படியே எடுத்து வந்து, கார்டனில் கொடுக்க வேண்டும். அல்லது சிறுதாவூர் பங்களா. அவர்கள் கொடுக்கும் தொகையில் 25 சதவிகிதம் மீண்டும் அந்த அமைச்சர்களிடமே கொடுக்கப்படும். இதுதான் 2001 முதல் அதிமுகவில் கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறை.
சசிகலா சிறை செல்லாமல் இருந்திருந்தாலும் இந்த நடைமுறைதான் கடைபிடிக்கப்பட்டு இருக்கும். ஆனால் சசிகலா சிறை சென்று விட்டார். ஜெயலலிதா இறந்து விட்டார். இப்போது எடப்பாடி ஆட்சியில் உள்ள அமைச்சர்கள் ஒவ்வொருவரும் குறுநில மன்னர்களாக உருவெடுத்து விட்டார்கள். தங்கள் துறை சம்பந்தப்பட்ட டெண்டர்கள், பணி நியமனங்கள் என எதிலும் அவர்கள் யாரையும் கலந்தாலோசிக்க வேண்டிய அவசியமே இல்லை. வரும் தொகையை யாருக்கும் பங்கு கொடுக்காமல் அவர்களே எடுத்துக் கொள்ளலாம். எடப்பாடிக்கு பங்கு கொடுக்க தேவையில்லை. இருப்பதிலேயே பணத்தை அள்ளி அள்ளித் தரும் பொதுப் பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறையை அவர் கைவசம் வைத்துள்ளார். தேர்தல் செலவு என்று வருகையில்தான் யார் செலவு செய்வது என்ற சிக்கல் ஏற்படும். சமீபத்தில் தேர்தல் எதுவும் இல்லை என்பதால் அவர்கள் எது குறித்தும் கவலைப்பட வேண்டியதில்லை. இந்த டெண்டரை இவருக்கு கொடு, அவருக்கு கொடு என்று உத்தரவிடவும் யாரும் இல்லை. அதனால் அமைச்சர்கள், நாள் தவறாமல் கோடிகளை குவித்து வருகிறார்கள். தங்கு தடையில்லாமல் கொள்ளையடித்து வருகிறார்கள்.

இத்தகைய கொள்ளையை தடுக்கவோ, நிறுத்தவோ அதிகாரம் யாரிடம் உள்ளது ? மத்திய அரசிடம் உள்ளது. மத்திய அரசின் மனம் கோணும் வகையில் ஏதாவது நடந்தால், அன்றாடம் வசூல் செய்யப்படும் கோடிகள் குறையும் அல்லது நின்று போகும் என்பதை அமைச்சர்கள் நன்றாகவே உணர்ந்துள்ளார்கள். இதனால்தான் ஆளுனர் ஆய்வு செய்ய வருகிறார் என்றால் சிவப்புக் கம்பளத்தோடு வாசலில் நிற்கிறார்கள்.
இது குறித்து பேசிய சென்னையைச் சேர்ந்த ஒரு மூத்த பத்திரிக்கையாளர், “தமிழக ஆளுனரின் செயலுக்கு இதற்கு முன்னர் முன்னுதாரணம் கிடையாது. உச்சநீதிமன்றத்தின் பொம்மை வழக்குக்கு பிறகு, ஒவ்வொரு ஆளுனரும் அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறாமல் நடந்து கொள்ள வேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் பிஜேபி அரசு, இந்த அதிகாரங்களை நீட்டித்துப் பார்க்க முயற்சி செய்கிறது. தமிழகத்தின் ஆளுனராக இருந்த ராம் மோகனராவை மாற்றி மத்திய அரசு உத்தரவிட்ட போது, அதை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றார் ஜெயலலிதா. உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், ஜெயலலிதாவோடு பேசிய உரையாடல்களின் விபரங்களை அப்படியே மனுவாக தாக்கல் செய்தார். இணைப்பு
மத்திய மாநில உறவுகள் குறித்து ஆய்வு செய்த சர்க்காரியா கமிஷன், ஆளுனரை நியமிக்கையில் கூட மாநில அரசை கலந்தாலோசிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
குடியரசுத் தலைவராவது, எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்களின் வாக்குகளை பெற்று தேர்வு செய்யப்படுகிறார். ஆனால் ஆளுனர் என்பவரை மத்திய அரசின் ஏஜென்ட் என்பதை தவிர்த்து வேறு உருவில் பார்க்க இயலாது.
தமிழக ஆளுனரின் திடீர் ஆய்வை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. இன்று ஆட்சியரோடு ஆய்வு நடத்தியவர், நாளை தலைமைச் செயலகம் செல்வார். அடுத்து ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி அதிகாரிகளோடு ஆய்வு நடத்துவார். இதற்கு எதுதான் எல்லை ?” என்றார்.
ஆளுனர் நடத்திய திடீர் ஆய்வை நாம் வெறும் அதிகார மீறலாக மட்டும் பார்க்க இயலாது. இது தமிழக மக்களுக்கு செய்யும் நேரடியான அவமானம். ஆளுனர் ஆய்வு நடத்துவார், அதிகாரிகளுக்கு உத்தரவிடுவார் என்றால் எதற்காக வாக்களித்து மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்தோம் ? தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் செல்லூர் ராஜுவாக இருந்தாலும் வேலுமணியாக இருந்தாலும் அவர்கள்தான் மக்கள் பிரதிநிதிகள். அவர்களுக்குத்தான் ஆட்சி நடத்த உரிமை உண்டு. மத்திய அரசின் ஏஜென்டான ஆளுனருக்கு சந்தேகங்கள் வரலாம். குழப்பங்கள் வரலாம். அவற்றை தீர்த்துக் கொள்ள அவர் செய்ய வேண்டியது மாநில முதல்வரை அணுகுவது மட்டுமே. தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம் இருக்கையில் நேரடியாக அதிகாரிகளை சந்தித்து ஆய்வு நடத்த அவருக்கு எவ்வித உரிமையும் இல்லை.

நன்றி @cartoonistbala /www.linesmedia.in
கூட்டாட்சித் தத்துவத்துக்கும், மாநில உரிமைகளுக்கும் பிஜேபி அரசு விடுக்கும் நேரடி சவால் இது. உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில், 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆக்சிஜன் இல்லாமல் இறந்து போயின. அப்போது உத்தரப் பிரதேச ஆளுனர் ஏன் மருத்துவமனையில் ஆய்வு செய்யவில்லை ? ஏன் சுகாதாரத் துறை அதிகாரிகளை அழைத்து விவாதிக்கவில்லை ? அதைவிட மோசமான நிலைமையா தமிழகத்தில் நிலவுகிறது ?
சென்னையைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் பேசுகையில், “ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, பிஜேபி தமிழகத்தை ஒரு சோதனைக் களமாக பார்க்கிறது. அதனால்தான் இங்கே புதிது புதிதான பரிசோதனைகளை மேற்கொள்கிறார்கள். பிராந்திய கட்சிகளை எப்படி உடைப்பது, எப்படி பலவீனமாக்குவது, ஒவ்வொரு சமயத்திலும் எப்படி சூழலை சிக்கலாக்கி அதில் பலனடைவது என்பதில் கவனமாக உள்ளார்கள்.
இப்படிப்பட்ட தந்திரங்களை கையாள்வதால், தமிழகத்தில் வலுவாக காலூன்றி, இதுவரை எட்டாக்கனியாக இருந்த தமிழகத்தை தன்வசப்படுத்த வேண்டும் என்பதில் பாஜக முனைப்பாக இருக்கிறது. இத்தகைய நடவடிக்கைகள், அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு எத்தகைய செயல்களையும் செய்ய பிஜேபி தயங்காது என்பதையே உணர்த்துகிறது.
ஆளுனரின் திடீர் ஆய்வு, திமுக தலைவர் கருணாநிதியை மோடி சந்தித்த பிறகு என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆளுனரை தன்னிச்சையாக செயல்பட வைத்ததன் மூலம், அதிகாரம் யாரிடம் என்பதை பிஜேபி மற்றவர்களுக்கு உணர்த்த விரும்புகிறதோ என்றே தோன்றுகிறது. அல்லது, மோடி தலைமையிலான புதிய இந்தியாவில், அரசியல் சாசன விதிகள் புறந்தள்ளப்பட்டு, வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்று இருக்கும் என்பதை பிஜேபி உணர்த்த முயல்கிறதா என்பது தெரியவில்லை.
பிஜேபி ஆளும் மாநிலங்கள் உள்ளிட்ட எந்த மாநிலங்களிலும், அந்தந்த முதல்வர்கள், ஆளுனர்கள் இது போல தலையிடுவதை அனுமதிக்க மாடடார்கள். இது எடப்பாடி பழனிச்சாமிக்கு நேரடியாக விடும் சவாலா ? எது எப்படியோ. ஆளுனரின் இந்த நடவடிக்கை ஒரு விஷயத்தை தெளிவாக்கியிருக்கிறது. தமிழகத்தில் தலைமைப் பண்புள்ள ஒருவர் கூட அதிகாரத்தில் இல்லை என்பதும், மாநில அரசு எந்த அளவுக்கு பலவீனமாக இருக்கிறது என்பதையுமே இது உணர்த்துகிறது. மத்திய அரசின் காலடியில் விழ மாநில அரசு தயாராக இருக்கிறது என்பதையும் இது உணர்த்துகிறது. நெருக்கடி நிலையின்போது, ஊடகங்களின் நிலை குறித்து பேசிய எல்கே.அத்வானி, “ஊடகங்களை குனியச் சொன்னபோது, அவர்கள் தவழத் தயாராக இருந்தார்கள்” என்று கூறியது தமிழக அரசுக்கு முழுக்க பொருந்துகிறது” என்றார் அந்த பத்திரிக்கையாளர்.

ஆய்வுக் கூட்டத்தில் பன்வாரிலால் புரோகித்
செவ்வாயன்று பன்வாரிலால் புரோகித் நடத்திய ஆய்வுக் கூட்டத்தால், தமிழகத்தின் அல்லது, கோவை மாவட்டத்தின் நிர்வாகம் குறித்து முழுமையாக அறிந்து கொண்டாரா ? இல்லை ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆய்வுக் கூட்டம் நடத்துவதால் என்ன தெரிந்து கொள்ளப் போகிறார் ? உதாரணத்துக்கு பன்வாரிலால் ஆய்வு நடத்தும் ஒரு மாவட்டத்தில் பொதுமக்கள் ஒரு பொதுக் கழிப்பிடம் கட்ட வேண்டும் என்று மனு அளிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதற்கான நிதிக்கு ஆளுனர் எங்கே போவார் ? மாநில அரசைத்தானே கேட்க வேண்டும் ? மக்கள் பிரதிநிதிகளிடம்தானே கேட்க வேண்டும் ? சொந்தமாக எந்த விதமான நிதி அதிகாரங்களும் இல்லாத ஒரு ஆளுனர் இப்படி ஆய்வுகளை நடத்துவது அப்பட்டமான அரசியல் அராஜகம் என்பதைத் தாண்டி இதை வேறு எப்படி பார்க்க முடியும் ? கக்கூஸ் கட்ட உத்தரவிடக் கூட அதிகாரம் இல்லாத ஒரு ஆளுனர் எதற்காக ஆய்வு செய்கிறார் ?
1989-90 திமுக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டபோது, தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி. அப்போது பிசி.அலெக்சாண்டர் மாநில ஆளுனராக இருந்தார். ஆட்டோ சங்கரால் கொலை செய்யப்பட்ட ஒருவரின் மனைவி, தன் கணவரை கண்டு பிடித்துத் தருமாறு, காவல்துறையில் பல நாட்களாக புகார் அளித்து வந்தார். ஆனால் ஆட்டோ சங்கரிடம் மாமூல் வாங்கிய காவல்துறையினர் அந்தப் புகாரில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அப்போது பொதுமக்களிடம் நேரடியாக புகார்களை பெற்ற பிசி.அலெக்சாண்டரிடம் அந்தப் பெண் அளித்த புகாரில் நடத்திய விசாரணையில்தான் ஆட்டோ சங்கர் கைது செய்யப்பட்டு பின்னால் தூக்கிலிடப்பட்டார். அதுபோல இப்போது தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியா நடக்கிறது ?
மூத்த பத்திரிக்கையாளர் ஆர்.மணி இது குறித்து பேசுகையில் “ஆளுனரின் நடவடிக்கை மிகவும் ஆரோக்கியமற்ற மற்றும் ஆபத்தான போக்கு. கடந்த மூன்றரை ஆண்டு மோடி ஆட்சியில் இது போல பல காட்சிகளை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை மோடி, இது போன்ற நடவடிக்கைளில், தமிழகத்தில் ஈடுபட முயலவில்லை.
தற்போது பிஜேபி 18 மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. இந்த மாநிலங்களில் மாநில ஆளுனரை இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட பிஜேபி அனுமதிக்குமா ? ஒரு சதவிகிதம் சுயமரியாதை உள்ள ஏதாவதொரு முதலமைச்சர் இதை அனுமதிப்பாரா ?
உண்மையான சிக்கல், பிஜேபியும், ஆளுனரும் இது போன்று செய்வது அல்ல. உண்மையான சிக்கல், அதிமுக அமைச்சர்கள் இதை வரவேற்பதும், இதை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை, இதில் என்ன தவறு என்று பதில் கேள்வி எழுப்புவதும்தான்.
பிரச்சினை, எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கும், ஆளுனருக்கும் அல்ல. சரியாக சொல்ல வேண்டுமென்றால், பிரச்சினை தமிழகத்தின் ஏழு கோடி மக்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையேயானது. சுதந்திரத்துக்குப் பின், இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஒவ்வொரு அமைப்பையும், மரபுகளையும், கூறுகளையும், திட்டமிட்டு சிதைத்து வருகிறது மத்தியில் ஆளும் பிஜேபி அரசு.
ஆளுனரின் இந்த நடவடிக்கை, மாநிலத்தை தனது முழுமையான நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்கான முதல் முயற்சி.” என்றார் ஆர்.மணி.
அடிமை அமைச்சர்களும், ஒரு ஆளுனரும் என்று இந்த விவகாரத்தை நாம் எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. நெடுங்காலத்துக்கு பாரதூரமான பாதகங்களை இந்திய ஜனநாயகத்துக்கு உருவாக்கக் கூடிய ஒரு செயல்தான் ஆளுனரின் செயல். இன்று பிஜேபி இருக்கலாம். நாளை ஒரு வேளை, காங்கிரஸ் பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வந்தால், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் இதே போன்ற நடவடிக்கையை கையாளக் கூடும். குடியாட்சித் தத்துவத்தின் அடித்தளத்தையே ஆட்டம் காணச் செய்யும் ஒரு நடவடிக்கை இது.
ஆளுனர் எடுக்கும் தன்னிச்சையான நடவடிக்கையால், அதிமுக ஆட்சியை சீர்படுத்த பிஜேபி முயல்கிறது என்று மக்கள் எண்ணுவார்கள் என்று மோடி அமித் ஷா கூட்டணி நினைக்கலாம். ஆனால் பதவி வெறி பிடித்து பின்புறமாக ஆளுனரை வைத்து ஆட்சியை நடத்தும் ஒரு கட்சியாக மட்டுமே பிஜேபி பார்க்கப்படும். பிஜேபியின் இந்த நடவடிக்கைகள், தற்போது அவர்கள் வைத்திருக்கும் ஒன்றரை சதவிகித வாக்குகளையும் சரிவடைய மட்டுமே உதவும்.
உலகெங்கும் பல சர்வாதிகாரிகள், நாம் காலமெல்லாம் வாழப் போகிறோம், ஆளப் போகிறோம் என்றே கனவு கண்டு கொண்டிருந்தார்கள். ஆனால் காலம் அவர்களை சுழற்றி அடித்துள்ளது. வரலாற்றின் கருப்புப் பக்கங்களில் அவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளார்கள். மோடியும் இதற்கு விதிவிலக்கல்ல.
அடிமை காேமாளிகளுக்கு ஏற்ற ஒரு ஆய்வு ஆளுனர் …. ?
மாநிலத்திற்கு ஆளுநரே தேவையில்லை என்பது என் கருத்து.
இதிலென்ன சந்தேகம்
appothu ivvaaru aayvu seyyum urimai aatchiyil evvakaiyilum thodarpillaatha vatta maavattankalin ekapoka urimaipolum!kaaval nilaiyankal muthal ration kadaivarai ivarkalathu ahikaarankalum thandalkalumdhool parappuvathai makkal nanku arivar!
ஆளுநர் பதவியே தேவையில்லை என்று கூறிய தலைவர்கள் , பொறுப்பு ஆளுநர் இருந்த போது , தனி ஆளுநர் நியமிக்கபட வேண்டும் என பல முறை கோரிக்கை வைத்தனர். ஆனால் தனி ஆளுநர் ஆய்வு செய்வது தவறு என இப்போது கதறுகிறார்கள். உங்க பிரச்சனை தான் என்ன? எதற்காக தனி ஆளுநர் வேண்டும் என கேட்டார்கள்.?
ஜீவாநந்தம், ஊரில் ஒரு பெண் தன் மகன் பிறந்ததிலிருந்தே பேச வில்லையே என்று எல்லா சாமிகளிடமும் வேண்டிகொண்டாளாம். சாமிகள் வரம் கொடுத்து அந்த மகன் பேச ஆரம்பித்ததும் அவன் கேட்ட முதல் கேள்வி, “அம்மா நீ எப்ப தாலி அறுக்க போற?” என்றுதானாம். அது போலதான் இருக்கு உங்களை [போல ”அறிவு ஜீவி” இல்லாத எங்களை போல பாமரர்கள் முழு நேர கவர்னர் வேண்டுமென கேட்டுகொண்டதும் வந்த கவர்னர் அதிகாரத்தையே கை பற்றுவதும்
ஆளுநர் பதவியே தேவையில்லை என்று கூறிய தலைவர்கள் , பொறுப்பு ஆளுநர் இருந்த போது , தனி ஆளுநர் நியமிக்கபட வேண்டும் என பல முறை கோரிக்கை வைத்தனர். ஆனால் தனி ஆளுநர் ஆய்வு செய்வது தவறு என இப்போது கதறுகிறார்கள். உங்க பிரச்சனை தான் என்ன? எதற்காக தனி ஆளுநர் வேண்டும் என கேட்டார்கள்.?
ஜீவாநந்தம், ஊரில் ஒரு பெண் தன் மகன் பிறந்ததிலிருந்தே பேச வில்லையே என்று எல்லா சாமிகளிடமும் வேண்டிகொண்டாளாம். சாமிகள் வரம் கொடுத்து அந்த மகன் பேச ஆரம்பித்ததும் அவன் கேட்ட முதல் கேள்வி, “அம்மா நீ எப்ப தாலி அறுக்க போற?” என்றுதானாம். அது போலதான் இருக்கு உங்களை [போல ”அறிவு ஜீவி” இல்லாத எங்களை போல பாமரர்கள் முழு நேர கவர்னர் வேண்டுமென கேட்டுகொண்டதும் வந்த கவர்னர் அதிகாரத்தையே கை பற்றுவதும்
சவுக்கு புரியாமல் பேசுது . எங்கேயோ ஜால்றா தட்டறாப்புல தோனு து.
உங்களுடைய கட்டுரைகள் தான் எங்க ஆட்களுக்கு (காங்கிரஸ் ஊடக விவாதங்களுக்கு போகிறவர்கள்) பேருதவியாக இருக்கு. மேலும் பேச்சாளர்களுக்கும் உதவியாக உள்ளது.. உடனுக்குடன் அதை எடுத்து டாக்குமெண்ட் போட்டுவிடுவோம். அதை அவர்களுக்கு மெயில் பண்ணிவிடுவோம் படத்துடன்….
marintha jj Chenna reddy meethuevvaaru avathooru koorinaar enpathu oodakankalil sirippaai siriththathu ninaivirukkalam!
உலகெங்கும் பல சர்வாதிகாரிகள், நாம் காலமெல்லாம் வாழப் போகிறோம், ஆளப் போகிறோம் என்றே கனவு கண்டு கொண்டிருந்தார்கள். ஆனால் காலம் அவர்களை சுழற்றி அடித்துள்ளது. வரலாற்றின் கருப்புப் பக்கங்களில் அவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளார்கள். மோடியும் இதற்கு விதிவிலக்கல்ல///
நிதர்சனமான உண்மை
ஆனால் முடிவு மிக மிக கேவலமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை