27 செப்டம்பர் 2014 அன்று பெங்களுரு சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு. ஜெயலலிதாவிடம், விசாரணை நீதிபதியிடம் பேசியாயிற்று. நீங்கள் விடுதலை செய்யப்படப் போகிறீர்கள் என்று கூறி, 16 பக்கம் கொண்ட தீர்ப்பு நகல் என்று ஒன்றை காண்பித்திருக்கிறார்கள். அதை அப்படியே நம்பி, ஒரு வேளை தண்டிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்ற எவ்விதமான தயாரிப்பு வேலையும் இல்லாமல் ஜெயலலிதா, படோடாபமாக, அதிமுக அடிமைகளை பரப்பன அக்ரஹாரா வட்டாரம் முழுக்க பேனர்களை வைக்கச் சொல்லி, ஆடம்பரமாக கையசைத்தபடி நீதிமன்றம் சென்றார்.
மற்ற அடிமைகளெல்லாம் உரிய நேரத்துக்கு வந்து விட, பன்னீர்செல்வம் மட்டும் தாமதமாக வந்தார். அவரை பெங்களுரு காவல்துறை உள்ளே அனுமதிக்கவில்லை. கூட வந்த அல்லக்கைகள் ஃபார்மர் சீப் மினிஸ்டர் என்று குரல் கொடுத்துக் கொண்டே இருக்கவும், காவல்துறை அவரை உள்ளே அனுப்பியது. 12 மணிக்கெல்லாம், ஜெயலலிதாவை குற்றவாளி என்று நீதிபதி குன்ஹா அறிவித்ததும், ஜெயலலிதாவுக்கான தண்டனை என்ன என்பதற்கான வாதத்துக்கு முன் ஜெயலலிதா தரப்பில் ப்ரேக் வேண்டும் என்று கேட்கப்பட்டது. அதையடுத்து அரை மணி நேரம் நீதிமன்றத்தை ஒத்தி வைத்தார் குன்ஹா.
அந்த இடைவெளியில் பன்னீர்செல்வத்தை அழைத்து, முதல்வராக இரண்டாவது முறையாக பதவியேற்றுக் கொள்ளச் சொன்னார் ஜெயலலிதா. அமைச்சரவையில் எந்த மாற்றமும் செய்யப்பட வேண்டாம் என்றும் கூறினார்.
29 செப்டம்பர் 2014 அன்று பதவியேற்பு நிகழ்ச்சி ஆளுனர் மாளிகையில். முதலமைச்சராக பதவியேற்றுக் கொள்ள ஓ.பன்னீர்செல்வத்தை ஆளுனர் அழைக்கிறார். ஓ.பன்னீர்செல்வம் என்னும் நான் என்று ஆளுனர் படித்ததும், அவர் பின்னால் உறுதிமொழியை படிக்க வேண்டிய பன்னீர்செல்வம், தலையை கவிழ்த்து, கண்ணீர் சிந்தி, பாக்கெட்டில் இருந்து வெண்ணிற கைக்குட்டையை எடுத்து, கண்களில் சிந்திய நீரை துடைத்துக் கொண்டார்.
பார்த்தவர்கள் உருகிப் போனார்கள். அம்மாவின் மீது இப்படி ஒரு விசுவாசமா என்று. இதே போல, ஜெயலலிதாவின் கார் டயர்களையெல்லாம் தொட்டு வணங்கி, இதர அதிமுக அடிமைகளுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்தவர் பன்னீர். ஆனால் இப்படிப்பட்ட பன்னீரை, 2016 மார்ச் முதல், ஜெயலலிதா ஓரங்கட்டி, அவர் குடும்பத்தினரையும் வழக்குகளில் சிக்கவைத்தார் என்று தகவல்கள் வெளியாகின.
பன்னீரை நன்கு அறிந்தவர்கள், அவரைப் போல அம்மா விசுவாசியை பார்க்கவே முடியாது என்பார்கள். அத்தனை விசுவாசம், பக்தி. அந்த விசுவாசத்துக்கும் பக்தியும், ஒரு கனமான முகமூடி என்பதையும், போலியாக நடித்து, எப்படி ஒரு ஊழல் சாம்ராஜ்யத்தை பன்னீர்செல்வம் கட்டியமைத்திருக்கிறார் என்பதையும் பார்ப்போம்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அமைந்திருப்பதுதான் ரோசி டீக்கடை. இந்த ரோசி டீக்கடையின் உரிமையாளர் பன்னீர்செல்வம் என்பவர், தமிழகத்துக்கு மூன்று முறை முதலமைச்சராக இருக்கப் போகிறார் என்பதை, ஆரம்ப காலத்தில் அந்த டீக்கடைக்கு வருகை தந்தவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.
பெரியகுளத்தில் உள்ள தென்கரை என்ற இடத்தில் அமைந்துள்ள 10 வீடுகளும் பன்னீர்செல்வத்துக்கு சொந்தமானவை. தெற்கு அக்ரஹாரத் தெருவில் உள்ள பெரிய வீட்டில்தான் பன்னீர்செல்வம் பெரியகுளம் வந்தால் தங்குவார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புதூர்தான் பன்னீர்செல்வம் குடும்பத்தின் பூர்வீகம். அவர்கள் தேனி மாவட்டத்துக்கு 30 ஆண்டுகளுக்கு முன்னால் குடிபெயர்ந்து வந்துள்ளார்கள். பன்னீர்செல்வத்தின் குலதெய்வக் கோவிலான பேச்சியம்மன் கோவில் ஸ்ரீவில்லிப்புதூரில்தான் உள்ளது. இன்றும், அமாவாசை பவுர்ணமி போன்ற தினங்களில் நடக்கும் பூஜைகளுக்கான செலவுகளை பன்னீர்செல்வம் குடும்பம்தான் இன்றும் ஏற்கிறது.
பன்னீர்செல்வத்தின் தந்தை ஓட்டக்காரத் தேவர், அந்தப் பகுதிக்கு வரும் லாரிகளின் ட்ரைவர்களுக்கு சிறிய அளவில் வட்டிக்கு பணம் விடும் தொழில் செய்து வந்தார். எண்பதுகளின் இறுதியில் டீக்கடை வைக்கும் முடிவில் இறங்கும் பன்னீர்செல்வத்துக்கு அதற்கு தேவையான சிறிய முதலீட்டை செய்யக் கூட வசதி இல்லை. அவரும், பன்னீரின் பால்ய காலத் தோழர் விஜயனும் சேர்ந்து டீக்கடை வைக்க முடிவு செய்கின்றனர். பெரியகுளத்தில் உள்ள சிட்டி யூனியன் வங்கியில் 20 ஆயிரம் கடன் பெறப்படுகிறது. பன்னீரின் தம்பி பாலமுருகன் பெயரில் கடன் பெறப்படுகிறது. பன்னீர்செல்வம் அந்த கடனுக்கு உத்தரவாத கையெழுத்து போடுகிறார்.
ஆனால் உரிய நேரத்துக்குள் கடன் திருப்பிச் செலுத்தப்படவில்லை. கடன் திருப்பிச் செலுத்தப் படாததை அடுத்து, வங்கி கடனை வசூல் செய்வதற்கான நடவடிக்கைகளை தொடங்குகிறது. பன்னீர் செல்வத்துக்கும் நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.
பன்னீர்செல்வத்தின் உண்மையான பெயர் பேச்சிமுத்து. வங்கி நடவடிக்கை எடுத்ததையொட்டி, பன்னீர்செல்வம் தன் அசல் பெயரான பேச்சிமுத்து என்ற பெயரை மாறி, பன்னீர்செல்வமாக அவதாரம் எடுக்கிறார். இந்தக் கடன், பன்னீர்செல்வம் முதலமைச்சரான பின்னர், 2003ம் ஆண்டு திருப்பிச் செலுத்தப்படுகிறது.
பேச்சிமுத்து என்ற பன்னீர்செல்வம், 20 ஆயிரம் கடனை திரும்ப செலுத்த முடியாமல், வங்கிக்கு அஞ்சி பெயர் மாற்றிக் கொண்டதற்கு வங்கி ஆவணங்கள் இன்னும் சான்றாக உள்ளன.
பிவி கேன்டீன் என்ற பெயரில் இருந்த அந்த டீக்கடையை, பன்னீர்செல்வத்தின் சகோதரர் ராஜா தற்போது நடத்தி வருகிறார். ராஜாவின் மகள் ரோசி திடீரென்று மரணமடையவும், பிவி கேன்டீன் ரோசி கேன்டீன் என்று பெயர் மாற்றம் பெறுகிறது.
டீக்கடையை நடத்திக் கொண்டே பன்னீர்செல்வம், ரியல் எஸ்டேட் ப்ரோக்கராகவும் உபரித் தொழிலில் இறங்குகிறார். அந்தப் பகுதியில் நீண்ட நாள் வாழ்ந்து வரும் ஒருவர், கவிஞர் வைரமுத்து, பெரியகுளம் புள்ளக்காபட்டியில் 12 ஏக்கர் தென்னந்தோப்பு வாங்கும் நில பேரத்தை முடித்துக் கொடுத்து, வைரமுத்துவிடம் கமிஷன் பெற்றார் பன்னீர் என்பதை நினைவு கூர்கிறார்.
ஒரு டீக்கடை உரிமையாளராகவும், ரியல் எஸ்டேட் ப்ரோக்கராகவும் இருந்த பன்னீர்செல்வத்தின் வாழ்க்கை பரமபத விளையாட்டைப் போல செங்குத்தாக உயரே சென்றது. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட பன்னீர்செல்வம், பெரியகுளம் நகராட்சியின் தலைவரானார். அவரை அந்தப் பதவியில் அமர்த்தியது, டிடிவி தினகரனுடனான அவரது அறிமுகம். 2001ல், ஜெயலலிதா டான்சி வழக்கில் தண்டிக்கப்பட்டபோது இடைக்கால முதல்ரான பன்னீர்செல்வத்தின் வளர்ச்சி, அண்ணாமலை திரைப்படத்தில் ரஜினிகாந்தின் வளர்ச்சியை விட விரைவானது.
பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுகையில் தனது சொத்தாக பன்னீர்செல்வம் மாநில தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்த சொத்துக்கள் ஒரு ஏக்கர் விவசாய நிலம். ஒரு டீக்கடை. 25 சவரன் தங்க நகை மற்றும் தன் மனைவி விஜயலட்சுமி பெயரில் உள்ள 7.61 லட்சம் மதிப்புள்ள வீடு.
2016 தேர்தலில் போட்டியிடுகையில் பன்னீர்செல்வம் வெளியிட்ட சொத்துக்கள். அசையும் சொத்துக்கள் 8.6 லட்சம். அசையா சொத்துக்கள் 33.20 லட்சம். கடன் 25 லட்சம். மனைவியின் சொத்துக்களாக 200 கிராம் தங்கம், 26.32 அசையும் சொத்துக்கள், 26,32 லட்சம். 27 ஏக்கர் விவசாய நிலங்கள் மற்றும் 2000 சதுர அடி வீடு ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.
2006ல் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், உத்தமர் பன்னீர்செல்வம் மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஜெயலலிதா கூட சொத்துக் குவிப்பு வழக்கில் தப்பிக்க முடியவில்லை. ஆனால் பன்னீர்செல்வம், சட்டத்தில் உள்ள நூதனமான ஓட்டைகளை பயன்படுத்தி லாவகமாக தப்பித்தார்.
லஞ்ச ஒழிப்புத் துறை, பன்னீர்செல்வம், அவர் மனைவி விஜயலட்சுமி, பன்னீர் மகன் ரவீந்திரநாத் குமார், அவர் சகோதரர் ஓ.ராஜா, ராஜாவின் மனைவி சசிகலாவதி, மற்றொரு சகோதரர் ஓ.பாலமுருகன் மற்றும் அவரது மனைவி லதா மகேஷ்வரி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தது. குற்றப் பத்திரிக்கையின்படி, வழக்கு காலமான 19.05.2001 அன்று உள்ளபடி, பன்னீர்செல்வத்தின் சொத்து 17,44,840. வழக்கு காலத்தில் அவரது வருமானம், 46,05,454. இந்த காலகட்டத்தில் செலவு 67,82,569.
வருமானம், செலவு ஆகியவற்றை கூட்டி கழித்துப் பார்த்தால், வழக்கு கால இறுதியில், பன்னீர்செல்வம், அவர் பெயரிலும் அவர் பினாமி பெயர்களிலும் 1,72,03,116 அதாவது ஒரு கோடியே 72 லட்சம் சொத்து சேர்த்ததாக குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கையே லஞ்ச ஒழிப்புத் துறை சரியாக புலன் விசாரணை செய்யவில்லை. சரியான முறையில் விசாரணையை மேற்கொண்டிருந்தால், பன்னீர்செல்வத்தின் சொத்து, 2006 காலகட்டத்திலேயே குறைந்தது 20 கோடியை தாண்டியிருக்கும்.
2009ம் ஆண்டில் இந்த வழக்கு, தேனி தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. இந்த நீதிமன்றத்தில் பன்னீர்செல்வமும் அவர் குடும்பத்தினரும் தொடர்ந்து ஆஜராகி வருகின்றனர். ஆனால் வழக்கு விசாரணை தொடங்கவில்லை. ஒரு வழக்கிலிருந்து குற்றம் சாட்டப்பட்டவர் தன்னை விடுவிக்கக் கோரி, மனு தாக்கல் செய்ய உரிமை உண்டு. ஆனால் பன்னீர்செல்வம், விடுவிப்பு மனுவுக்கு பதிலாக, வழக்கை மேலும் புலனாய்வு செய்ய வேண்டும் என்று ஒரு மனுவை தாக்கல் செய்கிறார். அந்த மனுவை நீதிமன்றம் அனுமதிக்கிறது.
இதற்கிடையே லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழ் சிறப்பு நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டு, வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் தொடங்குகிறது. அங்கே தேனி நீதிமன்றம் வழக்கை மேலும் விசாரணை செய்ய உத்தரவிட்டிருப்பதாக பன்னீர் மனுத் தாக்கல் செய்கிறார். ஆனால் அந்த மனு நிராகரிக்கப்படுகிறது. மதுரைக் கிளை உயர்நீதிமன்றத்தில் சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணை செய்யக் கூடாது என்று மனுத் தாக்கல் செய்து, விசாரணையை சிவகங்கை நீதிமன்றத்துக்கு மாற்றுகிறார் பன்னீர்செல்வம். 2011ல் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு, லஞ்ச ஒழிப்புத் துறையும் பன்னீர்செல்வம் கட்டுப்பாட்டில் வருகிறது. அரசு வழக்கறிஞர்கள் அனைவரும் அதிமுகவினராக நியமிக்கப்படுகிறார்கள்.
2012ல், சிவகங்கை நீதிமன்றம், பன்னீர்செல்வம் மீது போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி அவரை விடுதலை செய்கிறது. இந்த வழக்கில் பன்னீர்செல்வம் சார்பில் ஆஜரானது அவரது மகள் வழி சம்பந்தி செல்லபாண்டியன். பின்னாளில் அவர் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞராக ஆனார்.
ஆனால் பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் உருவாக்கியுள்ள சாம்ராஜ்யம், பெரும் தொழிலதிபர்களையும் வெட்கம் கொள்ளச் செய்யக் கூடியது.
பன்னீர்செல்வத்தின் மகன்கள் முதலில் செய்த முதலீடு பல ஆண்டுகளுக்கு முன்னால் தொடங்கிய ஜெயவந்த் என்டர்பிரைசஸ். பழைய பொருட்களை மொத்தமாக வாங்கும் நிறுவனம் இது. தேனியை சேர்ந்த அதிமுக பிரமுகரான ராஜகுரு நாயுடுவின் அறிவுரையின் பேரில், திருப்பூரில் ஒரு நூற்பாலையில் முதலீடு செய்கின்றனர். திருப்பூரில் ஏற்கனவே நூற்பாலை தொழிலில் இருந்த ஹரிசந்திரன் மற்றும் ஞானசேகரன் என்பவர்களின் அறிமுகம் கிடைக்கிறது. அதன் பிறகு சுக்கிர திசைதான்.
வாணி பேப்ரிக்ஸ் என்ற நிறுவனத்தில் பன்னீரின் மகன்கள் ரவீந்திரநாத் குமார் மற்றும், ஜெயப்ரதீப் ஆகியோர் சேர்ந்து 12 கோடி முதலீட்டில், தொடங்குகின்றனர். 15 கோடி முதலீட்டில் வாணி ஸ்பின்னர்ஸ். 8 கோடி முதலீட்டில் வாணி டெக்ஸ்டைல்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஜவுளித் துறையில் மட்டும். இந்த நிறுவனங்கள், எண் 5, தட்டான் தோட்டம், இரண்டாவது குறுக்குத் தெரு, பல்லடம் சாலை, திருப்பூர் என்ற முகவரியில் இருந்து இயங்குகின்றன.
இதன் பிறகு பிரம்மாண்ட வளர்ச்சியை கண்ட மற்றொரு நிறுவனம் எக்செலன்ட் மெரைன்லைன் ப்ரைவேட் லிமிட்டெட் (Xllent Marine Line Private Limited). அண்ணா சாலையில் அமைந்துள்ள ரஹேஜா டவர்ஸில், இதன் அலுவலகம் அமைந்துள்ளது. 2016க்கு முன்பாக, கன்டெய்னர்களை வாடகைக்கு எடுத்து அதன் மூலம் லாஜிஸ்டிக்ஸ் தொழில் நடத்தி வைத்த இந்த நிறுவனம், 2016க்கு பிறகு, திடீர் வளர்ச்சியை அடைந்துள்ளது. தற்போது இந்த நிறுவனத்தின் இணையதளம் 80க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு எந்த பொருளை வேண்டுமானாலும் எடுத்துச் செல்லக் கூடிய மிகப் பெரும் நிறுவனம் என்று தன்னை விளம்பரப்படுத்திக் கொள்கிறது. பல நாடுகளில் இந்நிறுவனத்துக்கு அலுவலகம் உள்ளன.
இந்த நிறுவனத்தில் மொத்தம் 8 இயக்குநர்கள் உள்ளனர். 17 ஆகஸ்ட் 2016ல், பன்னீரின் மகன்கள் ரவீந்திரநாத் மற்றும் ஜெயபிரதீப் ஆகியோர் பங்குதாரர்களாக இணைகிறார்கள். இந்த நிறுவனத்தில் இயக்குநராக உள்ள ராஜேந்திரன் தரணி என்பவர் பன்னீர் மகன் ரவீந்திரநாத்தின் நெருக்கமான நண்பர். இந்த தரணியின் தொடர்பு காரணமாக மேலும் பல்வேறு புதிய நிறுவனங்களில் பன்னீர்செல்வத்தின் மகன்கள் முதலீடு செய்துள்ளனர்.
திருப்பூரில் இருந்து செயல்பட்டு வரும், எச்எஸ்வி கார்ப்பரேஷன் சோலார் என்ற நிறுவனம் 5 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டுள்ளது. பன்னீர் மகன்களின் நிறுவனங்களில் பங்குதாரராக உள்ள ஹரிசந்திரன் இதிலும் பங்குதாரராக உள்ளார். ரவீந்திரநாத் மற்றும் செந்தில்குமார் என்பவர் பங்குதாரராக உள்ள மற்றொரு நிறுவனம், பாண்டி பஜார், ரெயின்போ ஆர்கேடில் இருந்து இயங்கும் வில்லோ நெட். இந்த நிறுவனத்தில் முதலீடு 50 லட்சம். சென்னை,ராஜா அண்ணாமலை புரத்தில் இருந்து இயங்கும் மற்றொரு நிறுவனம் ஜெயவந்த் என்டர்பிரைசஸ். இதில் பன்னீர் மகன்களின் முதலீடு 50 லட்சம். மற்றொரு நிறுவனமான மேட்ரிக்ஸ் மீடியா டிசைன்ஸ் ப்ரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனம், குமார் கிருஷ்ணா, எண் 56, 2வது மெயின் ரோடு, ராஜா அண்ணாமலை புரம் என்ற முகவரியில் இருந்து இயங்குகிறது. இதில் இவர்களின் முதலீடு 75 லட்சம். இந்த நிறுவனம் திரைப்படம் மற்றும் தயாரிப்பு வேலைகளில் ஈடுபடும் ஒரு நிறுவனம்.
பன்னீர் மகன்கள் பங்குதாரர்களாக உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் பெயர் க்ளோபல் ஹோம் ரியாலிட்டீஸ். இது தேனி மாவட்டத்திலிருந்து இயங்குகிறது. இதில் இவர்களின் முதலீடு 10 கோடி.
இது வரை குறிப்பிட்ட நிறுவனங்களில் பன்னீரின் மகன்கள் கணக்கில் காட்டிய பணத்தை முதலீடு செய்தது மட்டுமே 70 கோடியை தாண்டுகிறது.
பன்னீரின் மகன்கள் ரவீந்திரநாத், மற்றும் ஜெயப்ரதீப் தவிர்த்து, பன்னீரின் மகள் கவிதா பானு ஆகியோர் முதலீடு செய்து நடத்தப்பட்டு வரும் நிறுவனம், விஜயந்த் டெவலப்பர்ஸ் ப்ரைவேட் லிமிட்டெட். இந்த நிறுவனம், ஃப்ளாட் எண் எஸ்.2, சல்மா க்ரீன் கேஸ்சில், 154, க்ரீன்வேஸ் சாலை, ராஜா அண்ணாமலை புரம், சென்னை 28 என்ற முகவரியில் இருந்து இயங்கி வருகிறது.
இந்த சல்மா க்ரீன் கேஸ்சில் அடுக்குமாடியில், பன்னீரின் மகன் ஜெயப்ரதீப் பெயரில் 2வது தளத்தில் வீடு உள்ளது. பன்னீர்செல்வம் மற்றும் அவர் மகள் கவிதா பானு பெயரில் 3வது தளத்தில் ஒரு வீடு உள்ளது.
இது தவிர, பசுமை வழிச்சாலையிலேயே, கேஜீஎஸ் என்ற பெயரில் ஒரு உயர் ரக சொகுசு மாடிக் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் மிகப் பெரிய வீடு ஒன்று, பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்தின் நண்பர் அஷ்வின் என்பவர் பெயரில் உள்ளது. இந்த வீட்டில்தான் தற்போது ரவீந்திரநாத் குடியிருந்து வருகிறார். அஷ்வினிடம் இருந்து வாடகைக்கு இந்த வீட்டில் இருப்பதாக ஒப்பந்தமெல்லாம் போடப்பட்டு உள்ளது. இந்த அஷ்வினின் தந்தை பாஷ்யம் என்ற கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். சென்னையின் முன்னணி கட்டுமான நிறுவனங்களில் இது ஒன்று. இந்த கட்டுமான நிறுவனத்தில்தான், பன்னீர்செல்வத்தின் கருப்புப் பணம் முதலீடு செய்யப்படுகிறது.
இந்த நிறுவனங்களில் பன்னீரின் மகன்கள் மற்றும் மகள் செய்துள்ள முதலீடுகள் அனைத்தும் வெள்ளையாக கணக்கு காண்பித்த பணம் மட்டுமே. பெரியகுளத்தில் உள்ள ஒரு பிரபலமான கோவில் பாலமுருகன் கோவில். இந்த கோவிலுக்கு ராஜகோபுரம் கட்டுவதற்காக தற்போது கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த கோவில் திருப்பணிக்காக ஒரே காசோலையில் பன்னீரின் மகன் 95 லட்ச ரூபாயை வழங்கியுள்ளார்.
இது போக ஓட்டக்காரத் தேவர் கல்வி அறக்கட்டளை என்று ஒரு ட்ரஸ்ட் உருவாக்கப்பட்டுள்ளது. பன்னீரின் தம்பி ராஜா, அவர் மனைவி சசிகலாவதி, மகன் அமர்நாத் மற்றும் பன்னீரின் சகோதரி ஒருவர் இதன் நிர்வாகிகளாக உள்ளனர். 15 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இந்த அறக்கட்டளை பெயரில் உள்ளன.
இப்படி கணக்கு காட்டும் பணத்தையே தண்ணீர் போல இரைக்கும் அளவுக்கு இவர்களிடம் பணம் கொட்டிக் கிடக்கிறதென்றால், கணக்கில் வராத கருப்புப் பணம் எவ்வளவு இருக்கும் என்பதை உங்கள் ஊகத்துக்கே விட்டு விடுகிறேன்.
பன்னீரும் ஏலக்காயும்.
போடிநாயக்கனூர், ஏலக்காய் வியாபாரத்துக்கு பெயர் போன ஊர். மூணாறு மற்றும் போடி பகுதியில் விளையும் ஏலக்காய்கள் அனைத்தும் போடியில்தான் ஏலம் விடப்படும். இந்த ஏலக்காய் வியாபாரத்தை முழுமையாக பன்னீர்செல்வமும் அவர் பினாமிகளுமே கட்டுப்படுத்துகிறார்கள். இந்தப் பகுதியில் உள்ள திமுகவினர் கூட, இந்த வியாபாரத்தில் பன்னீருக்கு உடந்தையாகவே உள்ளதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட பிறகு, பன்னீர் முதல்வராக இருந்தார். அந்த நேரத்தில், தமிழக அரசின் வணிக வரித் துறை ஏலக்காய் மீதான வணிக வரியை 5 சதவிகிதத்திலிருந்து 2 சதவிகிதமாக குறைத்து உத்தரவிட்டது. பன்னீர் செல்வம் முதல்வராக இருந்தாலும், முக்கிய கோப்புகள் அனைத்தும், போயஸ் தோட்டத்துக்கு அனுப்பப்பட்டு அதில் ஜெயலலிதா பென்சிலில் குறிப்புகள் எழுதிய பிறகே அரசாணைகள் வெளியிடப்படும்.
அவ்வாறு போயஸ் தோட்டத்துக்கு அந்த கால கட்டத்தில் அனுப்பப்பட்ட கோப்பு, மொபைல் போன்கள், நூலிழை மற்றும் ஏலக்காய்க்கான வரி குறைப்பு சம்பந்தமாக கோப்பு. அந்த கோப்பு போயஸ் தோட்டத்திலிருந்து திரும்ப வருகையில், ஜெயலலிதா, மொபைல் போன்களுக்கு மட்டுமே பென்சிலில் குறியீடு செய்திருந்தார்.
ஆனால் அதற்கான அரசாணை வெளியிடப்பட்டபோது, ஏலக்காய், நூலிழை மற்றும் மொபைல் போன்களுக்கும் வரி குறைப்பு செய்யப்பட்டிருந்தது. ஏலக்காய் வரி குறைப்பினால் மட்டும், அரசுக்கு இரண்டு ஆண்டுகளில் 3000 கோடி ரூபாய் வரியிழப்பு ஏற்பட்டது என்றும் அந்த அதிகாரி கூறினார்.
கிணத்தை காணோம்
பன்னீர்செல்வம் தர்ம யுத்தம் நடத்திக் கொண்டிருந்த சமயத்தில் ஊர் மக்கள் பயன்பாட்டுக்காக தேவைப்படும் ஒரு கிணற்றை பன்னீர் குடும்பம் தராமல் மறுத்து வந்த தகவல் வெளியானது. அந்த நிலமும், கிணறும், பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி பெயரில் இருந்தது.
அந்த கிணற்றில் தண்ணீர் இல்லாவிட்டாலும், கிணற்றை சுற்றி போர் மோட்டார்கள் நீர் இறைத்துக் கொண்டிருக்கும். அந்த தண்ணீரின் மூலம் பன்னீர்செல்வத்தின் தோட்டம் மற்றும் வயல்களுக்கு நீர் பாய்ச்சப்படுகிறது. இதன் காரணமாக சுற்று வட்டாரத்தில் நிலத்தடி நீர் வெகுவாக குறைகிறது என்பது ஊர் மக்களின் புகார்.
ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து, அந்த கிணற்றையும் அதை சுற்றியுள்ள நிலத்தையும் பணம் கொடுத்து வாங்கிக் கொள்வதென முடிவெடுத்தனர். ஆனால் பன்னீர் குடும்பம், நிலத்தை விட்டுத் தர மறுத்தது. மக்கள் போராட்டத்தில் இறங்கினர்.
விவகாரம் பெரிதாகும்போதுதான் ஒரு விஷயம் வெளியே வந்தது. கிணறு தொடர்பாக பிரச்சினை பெரிதானதும், பன்னீரின் மனைவி விஜயலட்சுமி தன் பெயரில் இருந்த நிலத்தை, பன்னீரின் நெருங்கிய நண்பரான சுப்புராஜ் என்பவர் பெயருக்கு மாற்றியுள்ளார். தர்மயுத்தம் முடிவடைந்து, பன்னீர்செல்வம் துணை முதல்வரான நாளன்று, சுப்புராஜ் கிணற்றை ஊர் மக்களுக்கு தானமாக எழுதிக் கொடுத்தார்.
இந்த சுப்புராஜ் என்பவரே, பன்னீர்செல்வத்தின் பினாமிதான். இவருக்கும் பன்னீர்செல்வத்துக்கும் பல முறை நில விற்பனை நடந்துள்ளது. பெரியகுளம் பகுதியில், சுப்புராஜ் பாப்பா பில்டர்ஸ் என்ற ஒரு கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். டிசம்பர் 2010ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், ஒரு சில ஆண்டுகளிலேயே பல மடங்கு வளர்ந்துள்ளது.
சுப்புராஜின் பாப்பா பில்டர்ஸ் நிறுவனம் பெரும்பாலும் செய்யும் கட்டுமானப் பணிகள் நெடுஞ்சாலைத் துறை. 2011 முதல் 2016 வரை, பன்னீர்செல்வம் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பன்னீர்செல்வத்தின் மகன்கள், ரவீந்திரநாத், ஜெயபிரதீப் மற்றும் சுப்புராஜ் ஆகிய மூவரும் இணைந்து நடத்தும் நிறுவனம்தான் க்ளோபல் ஹோம் ரியாலிட்டீஸ் என்ற மற்றொரு கட்டுமான நிறுவனம். பன்னீரின் மகன்கள் இந்நிறுவனத்தில் 90 சதவிகித பங்குகளை வைத்துள்ளார்கள். இந்த க்ளோபல் நிறுவனம், பெரியகுளத்தில் 150 ஏக்கர்களை விலைக்கு வாங்கி, அதில் கட்டுமானம் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
போஜராஜன் ஜவுளி ஆலை.
தேனியில் அமைந்துள்ள ஒரு ஜவுளி ஆலைதான் போஜராஜன் ஜவுளி ஆலை. இந்த ஆலைக்கு அருகே 99 ஏக்கர் அரசு நிலம் உள்ளது. 1967ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஆலை சில ஆண்டுகளுக்கு முன் செயலிழந்தது. ஆலையின் அருகே இருந்த அரசு நிலத்தை 99 ஆண்டுகளுக்கு அரசு இந்த ஆலைக்கு குத்தகைக்கு அளித்திருந்தது. இந்த குத்தகை 2011-12ல் முடிந்தது. இந்த மில்லை நடத்தி வந்த வட இந்தியரை, மில் தொழிலாளிகளே 2011ம் ஆண்டு கொலை செய்து விட்டனர்.
அதன் பிறகு, இந்த ஆலையை, கோவிந்தராஜன் தாமோதரன், முத்து கோவிந்தன் ஆகியோர் வாங்கி விடுகின்றனர். இந்த மில் நிர்வாகத்தில் தற்போது இயக்குநர்களாக உள்ள ரங்கசாமி, முத்துகோவிந்தன், தாமோதரன், பழனிதாஸ், குருசாமி, ராஜகோபால் நாயுடு மற்றும் சுப்ரமணியம் ஆகிய அனைவருமே பன்னீர்செல்வத்தின் பினாமிகள் என்றே தேனி வட்டாரத்தில் கூறுகிறார்கள்.
2012ம் ஆண்டு, சந்தை மதிப்பில் 140 கோடி பெறுமானமுள்ள 99 ஏக்கர் அரசு நிலத்தை, வெறும் 60 கோடிக்கு விற்பனை செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது. சமீபத்தில் தேனியில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழா, இந்த ஆலையின் மைதானத்தில்தான் நடந்தது.
சேகர் ரெட்டியும் பன்னீர்செல்வமும்.
ஒரு பத்து நாட்களுக்கு முன், திமுக செயல் தலைவர் ஸ்டாலின், சேகர் ரெட்டி குறித்த விசாரணை என்ன ஆனது என்று கேள்வி எழுப்பியிருந்தார். ஒரு சில நாட்களிலேயே, ஸ்டாலினை விமர்சித்து முன்னாள் மேயர் சைதை துரைசாமி ஒரு பேட்டியளித்தார். அதில் ஸ்டாலினுக்கும் சேகர் ரெட்டிக்கும் தொடர்பு உள்ளது என்றார்.
இதையடுத்து சேகர் ரெட்டி சார்பில், நாளிதழ்களில் ஒரு விளம்பரம் வெளியிடப்பட்டது. அதில் சேகர் ரெட்டியையும் சில அரசியல்வாதிகளையும் தொடர்புபடுத்தி சிலர் பேசி வருவதில் எவ்விதமான உண்மையும் இல்லை என்றும், லாரிகளையும், பொக்லைன் இயந்திரங்களையும் வாடகைக்கு விட்டு, தொழில் நடத்தும் ஒரு நேர்மையான தொழிலதிபர்தான் சேகர் ரெட்டி என்றும் விளக்கம் கொடுக்கப்பட்டிருந்தது. மேலும், சேகர் ரெட்டியின் வீட்டில் நடந்த சோதனைகளில், வெறும் 12 லட்சம் மட்டுமே கைப்பற்றப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது.
வருமான வரித் துறை கடந்த ஆண்டு டிசம்பரில் நடத்திய சோதனைகளின்போது, 96.89 கோடி ரூபாய் பழைய நோட்டுகள், 9.63 கோடி ரூபாய் புதிய 2000 நோட்டுகள், 127 கிலோ தங்கம், 24 கோடி 2000 நோட்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
இந்த பணம் மற்றும் தங்கத்தோடு, சேகர் ரெட்டி அலுவலகத்திலிருந்து, அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு பணம் வழங்கிய கணக்கு எழுதப்பட்ட டைரியும் கைப்பற்றப்பட்டது. அந்த டைரிகளில், 2016ம் ஆண்டுக்கான கணக்கு எழுதப்பட்ட டைரிகளின் பக்கங்கள் நமக்கு கிடைத்தன. அதன் விபரங்களை பார்ப்போம்.
முதல் பக்கத்தின் தலைப்பிலேயே ஹெல்த் என்று போடப்பட்டு 2 மற்றும் 3 என்று மொத்தம் 5 கோடி காண்பிக்கப்பட்டுள்ளது. அது சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
அடுத்ததாக நமக்கு தெரிந்த பெயர் வன்னி அரசு. அவருக்கு வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ள தொகை 1 லட்சம். அதன் பின் பெரியவர் மற்றும் பெரியவர் / ரமேஷ் என்ற பெயருக்கு நேரே குறிப்பிடப்பட்டிருக்கும் தொகைகள் அனைத்தும் பன்னீர்செல்வத்துக்கு தரப்பட்டவை. ரமேஷ் என்பவர், பன்னீர்செல்வத்தின் பி.ஏ.
17.06.2016 என்ற தேதியில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர், மின் துறை அமைச்சர் தங்கமணி. தொகை 50 லட்சம். அதே தேதியில் குறிப்பிடப்பட்டுள்ள மற்றொரு பெயர் நெற்றிக்கண் ஆசிரியர். தொகை 2 லட்சம்.
21.06.2016 தேதியில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர் கிருஷ்ணசாமி. தொகை 5 லட்சம். 22.06.2016 அன்று குறிப்பிடப்பட்டுள்ளது, ரெவின்யூ பிஎஸ்ஓ. வருவாய் துறை அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி. தொகை 25 ஆயிரம்.
27.6.2016 ஹெல்த் – தொகை 1 கோடி. 28.06.2016. மன்னார்குடி மகாதேவன் தொகை 10 லட்சம். மன்னார்குடி மகாதேவன் சமீபத்தில் இறந்து போன மன்னார்குடி மாபியாவின் முக்கிய புள்ளி.
28.08.2016 கடலூர் கலெக்டர் தொகை 10 லட்சம். அதே நாளில் ஜுன், ஜுலை, ஆகஸ்ட், செப்டம்பர் என்று நான்கு மாதங்களுக்கு தலா 25 லட்சம் வீதம் 1 கோடி ரூபாய் போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 31.08.2016. வழக்கறிஞர் காசி. தொகை 1 கோடி. இவர் பன்னீர்செல்வத்தின் மருமகன் காசிராஜன்.
28.10.2016 விபி.கலைராஜன் (தி.நகர் எம்எல்ஏ) தொகை 5 லட்சம். அதன் பிறகு 28.10.2016 தேதிகளில் ஓபிஎஸ் ரமேஷ், ஓபிஎஸ் அட்வகேட் என்ற பெயருக்கு நேராக தலா 37 லட்சம் மற்றும், கார்டன் போனஸ் என்ற பெயருக்கு நேராக 3,85 லட்சமும், 31.10.2016 தேதிக்கு நேராக கார்டன் செலவு என்று 20 லட்சமும் குறிப்பிடப்பட்டுள்ளது.
31.10.2016 அன்று, கார்டன் செலவுக்கு என்று, பன்னீர்செல்வம் பிஏ ரமேஷ் 20 லட்சத்தையும், கார்டன் போனஸ் என்று 3.85 லட்சத்தையும் வாங்கியிருக்கிறார். பன்னீர்செல்வத்தின் பிஏ ரமேஷ் 31.10.2016 அன்று ஒரு கோடி பெற்றிருக்கிறார்.
டைரியின் முதல் பக்கத்தில் 23.11.2016 மற்றும் 28.11.2016 ஆகிய தேதிகளில் விஜயபாஸ்கர் (ஹெல்த் மினிஸ்டர்) என்ற பெயரில் 2 + 3 என்று 5 கோடிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. 22 செப்டம்பர் 2016 அன்று ஜெயலலிதா அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
31.10.2016 அன்றைய நாளிட்ட பதிவில், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் பெயருக்கு நேராக ஒன்றரை கோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார், நலமாக இருக்கிறார் என்று வெளியே கண்ணீர் உகுத்து விட்டு, இவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பது தெரிகிறதா ?
சேகர் ரெட்டி எப்படி ஒட்டுமொத்த அரசாங்கத்தையே நடத்தி வந்துள்ளார் என்பது இந்த பட்டியலை பார்த்தால் தெரியும். ஆனால் இதற்கு முன்பு இருந்தது போல, தற்போது சேகர் ரெட்டிக்கு பெரிய அளவில் செல்வாக்கு இல்லை.
சென்னையிலிருந்து கன்னியாக்குமரி வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், மதுரை பைபாஸ் அருகே இருக்கும் மாநகராட்சிக்கு உட்பட்ட 15 கிலோ மீட்டர் சாலை மட்டும் நான்கு வழி சாலை கிடையாது. இந்த சாலையை நான்கு வழி சாலையாக்குவதற்கான டெண்டர் ஒரு வருடத்துக்கு முன்பு வெளியிடப்பட்டது.
அந்த டெண்டரை, மதுரையில் எஸ்பிகே ஹோட்டலை நடத்தி வரும் அதன் உரிமையாளர் நாகராஜன், சேகர் ரெட்டி மற்றும் எடப்பாடி பழனிச்சாமியின் சம்பந்தி ஆகியோர் எடுத்துள்ளனர். டெண்டருக்கான மொத்த மதிப்பீடு 110 கோடி. சேகர் ரெட்டி கைது செய்யப்பட்டு சிறை சென்றதும், இந்தப் பணி அப்படியே நின்று போனது.
இதன்பின், தற்போது மீண்டும் டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த டெண்டரை தற்போது எடுத்துள்ள ஒப்பந்ததாரர்கள், எஸ்கேபி ஹோட்டல் உரிமையாளர் நாகராஜன், மற்றும் எடப்பாடி பழனிச்சாமியின் மகன். தற்போது டெண்டரின் மதிப்பு 200 கோடியாக உயர்ந்துள்ளது.
தற்போது இதையடுத்த வளர்ச்சி என்னவென்றால், மதுரை விமான நிலைய விரிவாக்கத்துக்காக நிலம் கையப்படுத்தப்பட உள்ளது. இதற்காக கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தில், புதிதாக உருவாக்கப்பட உள்ள நான்குவழிச் சாலையும் அடங்கும்.
தற்போது எடப்பாடியின் மகனும் எஸ்பிகே ஹோட்டல் நாகராஜனும் கூறுவது என்னவென்றால், விமான நிலைய நில கையப்படுத்தலை தாமதப்படுத்துங்கள், அதற்குள் நான்கு வழிச் சாலை அமைத்ததாக பில் போட்டு விடுவோம் என்பதுதான்.
விமான நிலைய ஆணைய அதிகாரிகள், என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தற்போது வழக்குகளில் சிக்கியுள்ளதால், சேகர் ரெட்டி பழைய செல்வாக்கு இல்லாமல் இருக்கிறார். விரைவில் வழக்கிலிருந்து விடுதலையாகி, பழைய செல்வாக்கை அடைந்ததும், எடப்பாடி பழனிச்சாமியையும் தன் வலைக்குள் வீழ்த்துவார் சேகர் ரெட்டி.
எடப்பாடி பழனிச்சாமி அரசாங்கத்தை ஊழல் அரசு என்று மக்கள் கூறுகிறார்கள் என்று தர்மயுத்தம் நடத்திக் கொண்டிருக்கையில், பன்னீர்செல்வம் கூறியது நினைவிருக்கலாம்.
இப்போது யார் பெரும் ஊழல்வாதி என்பது புரிகிறதா ? இதுதான் உத்தமர் பன்னீர்செல்வத்தின் ஊழல் சாம்ராஜ்யம். அணிகள் இணைந்த பிறகு, கடும் முரண்பாடுகள் இருந்தாலும் பன்னீர்செல்வம் எது குறித்தும் வாய் திறக்காமல் ஏன் இருக்கிறார் என்பது தெரியுமா ? ஒரு நாள் போனாலும் வசூல் பாதிக்கப்பட்டு விடக் கூடாதே என்பதுதான்.
ஒரு மாதத்துக்கு முன், பன்னீர்செல்வத்தின் மகன்கள், மலேசியாவில் உள்ள ஒரு தொழிலதிபரின் உதவியோடு ஒரு பெரும் கல்வி நிலையத்தை வாங்கியுள்ளனர். இந்தோனேசியாவில் முதலீடு செய்வதற்காக தொழில்களை தேடி வருகின்றனர். இவை எதுவும் பாதிக்கப்பட்டு விடக் கூடாதே என்பதுதான் பன்னீரின் ஒரே கவலை.
அரசியல்வாதிகள் என்றாலே அவர்கள் ஊழலின் மறுபிறவிதான் என்றாலும், பன்னீர்செல்வம் குவித்துள்ள இந்த கோடிக்கணக்கான சொத்துக்களும் உத்தமர் வேடமணிந்து அவர் நடத்தும் நாடகங்களும் வேறு வகையானவை. ஒரு சாதாரண ரியல் எஸ்டேட் ப்ரோக்கராக இருந்தவரை, பஞ்சாயத்து தலைவராக்கி, பின்னர் அமைச்சராக்கி, இறுதியில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டபோது, நம்பிக்கையானவராக கருதி, முதலமைச்சராகவும் ஆக்கியது மன்னார்குடி மாபியாவே.
ஊழல் செய்து சொத்துக்களை குவிக்காமல் இருந்திருந்தால், பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், சசிகலா குடும்பம் மட்டுமே ஊழல செய்தது போலவும், இவர் உத்தமர் காந்தி போலவும், ஜெயலலிதாவின் சமாதியில் அமர்ந்து தியானம் செய்ததும், அதன் பின்னர் ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்ததும் அயோக்கியத்தனத்தின் மொத்த வடிவம். உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைத்த படுபாதகர்தான் பன்னீர்செல்வம்.
மோடி இழுத்த இழுப்புக்கெல்லாம் பன்னீர் ஏன் செல்கிறார் என்பது இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும். 1800 அதிகாரிகளை அனுப்பி இந்தியா முழுக்க வருமான வரித் துறை சோதனைகளை நடத்த முடிந்த மத்திய அரசுக்கு, பன்னீரின் ஊழல் சாம்ராஜ்யம் தெரியாதா என்ன ? சாதாரண பத்திரிக்கையாளர்கள் புலனாய்வு செய்து கண்டுபிடிக்க முடிந்த பன்னீரின் சொத்துக்களை மத்திய அரசின் புலனாய்வு நிறுவனங்கள் கண்டுபிடிக்க எத்தனை நாட்கள் ஆகும் ? ஆனால், பன்னீரை வைத்து அதிமுகவை கைப்பற்றும் எண்ணத்தின் காரணமாக, இவர்கள் ஒரு நாளும் பன்னீர்செல்வத்தின் மீது சோதனைகள் நடத்தப் போவதில்லை. அவர் மீது ஊழல விசாரணையும் நடக்கப்போவதில்லை.
தங்குதடையில்லாமல் வசூல் நடைபெறும் வரையில், பன்னீர்செல்வமும் எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டார். அவரின் இந்த வசூல் என்று பாதிக்கப்படுகிறதோ, அன்று பன்னீர் மீண்டும் உத்தமர் வேடமணிந்து, தர்மயுத்தத்தை தொடங்குவார்.
நன்றி
இந்த கட்டுரைக்கு ஆதரவும் தரவுகளும் தந்து உதவிய, தி வீக் பத்திரிக்கை மற்றும் அதன் செய்தியாளர் லட்சுமி சுப்ரமணியம் ஆகியோருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
அருமை வாழ்த்துக்கள் இன்னும் எழுதுங்க சங்கர் ❤️❤️💐💐
Perfect 👌👌👌
Nice investigative article. Can we also get such article on seeman.
சார் நீங்க பத்திரமாக இருங்க!
நல்ல பதிவு, வாழ்த்துக்கள்.
எப்பொழுது தமிழ்நாட்டிற்கு விடிவு காலம் வருமோ தெரியவில்லை!!
Yarum utthamar illai. Analum ungalin ikkala pathivugal mannargudi sonthangaluku sombu thukkuvathin velipadey.
Konja Natkalagavey, Nadu nilaiyana koduthu kinda Savukku, Mannarkudi sonthangaluku sombu thukka arambithirupan pinnani…
அருமையான பதிவு சாட்டைய சுலட்டுங்க
Excellent.. Good work. Also expecting similar article about pulimoottai’s assets as well..
WAIT AND SEE, THINGS WILL BE CHANGED TAMILNADU PEOPLE NEVER ALLOW SAME SAME MINDED PEOPLE OF CURRUPTION ANDI TO IAS
சவுக்கு மீண்டும் ஒரு நல்ல கட்டுரையை கொடுத்ததற்கு பாராட்டுக்கள். தங்களை ஜாக்கிரதையாய் பார்த்து கொள்ளவும்.
pannerin muhatherai kelethathu super
ஆளைக்கண்டு மயங்காதே,,ஊதுகாமாலை ,,,என்ற பழமொழி ஞாபகத்துக்கு வருகிறதே,,,,
You can write it in English also. So, that the whole nation will come to know it.
எவ்வளவு சொல்லியும் என்ன பிரயோஜனம்? கோடி கோடியாய் கொள்ளை அடிக்கும் ஆட்களைதானே இந்த ஜனங்கள் விரும்புகிறார்கள். அவர்களுக்க்கு வேண்டிய இலவசங்கள் மற்றும் 1000 / 2000 ரூபாயை கொடுத்துவிட்டு நாட்டையே கொள்ளை அடித்தாலும் கேட்க போவதில்லை. ஜெயலலிதா தென்னாட்டின் Mrs Ferdinand Marcos என்றும் தெரிந்தும் ஒட்டு போட்டவர்கள்தானே!
எவ்வளவு சொல்லியும் என்ன பிரயோஜனம்? கோடி கோடியாய் கொள்ளை அடிக்கும் ஆட்களைதானே இந்த ஜனங்கள் விரும்புகிறார்கள். அவர்களுக்க்கு வேண்டிய இலவசங்கள் மற்றும் 1000 / 2000 ரூபாயை கொடுத்துவிட்டு நாட்டையே கொள்ளை அடித்தாலும் கேட்க போவதில்லை. ஜெயலலிதா தென்னாட்டின் Mrs Ferdinand Marcos என்றும் தெரிந்தும் ஒட்டு போட்டவர்கள்தானே!
மக்கள் புரிந்து கொள்ளட்டும்
Master mind. Lots of jobs created. Good.
Good work as always.. Please try this to come in any one of tamil newspaper also..So that many will know about this.. We know its not feasible. But please try anna…
Good upload about fake ministers (Uthamar O.Panner) from ADMK by Savukku. Savukku rocking always… please keep it up…
Wonderful investigation and best article of this year. Becareful sir.
Savukku is back.Great investigative journalism.
கட்டுரை அருமை.. உத்தமர் பன்னீரின் போலி முகத்திரையை கிழித்து எறிந்து விட்டீர்…
ஆடு வளர்ப்பவனைவிட அறுப்பவனை நம்பி
ஏமாற்றம் அடைய நேரம் வர போகுது
அய்யம் திரிபரக்கூறலாம் இது கலப்பின ஜந்து
தேனீ ஆனந்தம் சில்க்ஸ் , மதுரை ஆனந்தம் சில்க்ஸ், அன்புசெழியன் மற்றும் பல பினாமிகள் மூலமாக திரைப்பட தயாரிப்பு, சென்னை மற்றும் மதுரையில் பல பார்கள், சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் பப்புகள், ஆற்று மணல் காண்டிராக்டு. என்ன இல்லை பன்னீருசெல்வத்திடம்.
ஏசப்பா.. நீங்கள் சொல்வது போல இவர்கள் இப்படிதான் என்று தெரியும். இருந்தாலும் இந்த விவரங்கள் திக்குமுக்காட வைக்கிறது. பத்திரமாக இருங்கள் சவுக்கு சங்கர்
Savukku Back to form… Good Article…..
சங்கர் சார் மெர்சலாய்ட்டேன் இதை படிச்சவுடனே
தேனி மற்றும் மதுரையில் இயங்கிவரும் தேனி ஆனந்தம் சில்க்ஸ்கூட இவர்களின் முதலீடு உள்ளதாம்.பேசிகிட்டாங்க.
ஊழல் செய்ய வாய்ப்பு இல்லாதவர்கள், வாய்ப்பை இழந்தவர்கள் இவர்கள் எல்லோரும் பணம் சம்பாதிப்பவர்களைப் பார்த்து
ஊழல் வாதி என்று கூக்குரல் இடுகிறார்கள்.. திருடன் கையில் உள்ள சாவியை இன்னொரு திருடன் எடுக்கிறான்.
அவ்வளவுதான் !
This is one of the most excellent news reporting I have seen. Flooded with details and names. Really really good work. All the media channels should learn from you. Awesome. Have a excellent life ahead
Yes, I too felt the same
உத்தமர் பன்னீர் மகா திருடன் என்பது உலகம் அறிந்ததே. கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு. எனவே எந்த காவி பன்னீரை உத்தமராக காட்டி கொள்ள முயல்கிறதோ… அதே காவி கூட்டத்தினால் ஒருநாள் இந்த உத்தமர் பண்ணீரின் சாயம் வெளுத்து, தெருவில் நிறுத்தப் படுவார் என்பதே நிதர்சனம். ஆளாளப்பட்ட ஜெயலலிதாவிற்கு மன்னார்குடி கொள்ளை குடும்பத்திற்கு இந்த கத்தி எனில், இந்த பன்னீர் அரசியல் சதுரங்கத்தில் எம்மாத்திரம்!
காலம் வரும்.. நீதி வெல்லும்!
Lets hope for a better future without these corrupt selfish politicians
All corrupted culprits.!
முகத்திரையை கிழிக்கின்ற கட்டுரை