நவம்பர் 14, 2008 அன்று, தமிழக சட்டப்பேரவையில், ஈழத்தமிழர்களின் இன்னலை துடைப்பதற்க பதவியை துறக்கவும் தயார் என்று கருணாநிதி பேசினார். அதற்குப் பிறகு என்ன நடந்தது, எத்தனை உயிர்கள் போயின என்பதை நாம் அறிவோம். இந்த தேர்தல் நேரத்தில், கருணாநிதியின் கபட நாடகத்தை நாம் நினைவு கூறுதல் அவசியம். இழந்தது ஒரு உயிர் இரண்டு உயிர்கள் அல்ல… லட்சக்கணக்கான உயிர்கள்…. கருணாநிதிக்கு தனது மகன், மகள்களைப் எவ்வளவு முக்கியமோ அப்படித் தானே, ஈழத் தமிழருக்கும் அவர்களது மகன்களும் மகள்களும்…. ? தறுதலைப் பிள்ளைகளுக்கே கருணாநிதி இப்படி உருகுகிறார் என்றால், போராளிகளைப் பெற்றவர்கள் ?
இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக பதவியை துறக்க தயார் என்று முதலமைச்சர் மு கருணாநிதி, ஆவேசமாக நவ-14 அன்று தமிழகச் சட்டப்பேரவையில் கூறியுள்ளார். இலங்கை அதிபர் ராஜபக்சேயின் கருத்தை ஏற்று இந்தியா ஏமாந்துவிடக் கூடாது என்றும் எச்சரித்தார்.
தமிழகச் சட்டப்பேரவையில் நவ-14 அன்று மீண்டும் இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்திற்கு பதிலளித்து முதல்வர் கருணாநிதி கூறியதாவது:
கடந்த 12ம் தேதி ஒருமனதாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி அனுப்பினோம். தீர்மானத்தை உளத் தூய்மையுடன் நிறைவேற்றி அனுப்பினோம்.
ஆனால், தமிழர்கள் எப்போதும் எப்படி இருப்பார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக நாம் 12-ம் தேதி காட்டிய ஒற்றுமைக்கு மாறாக இன்று (நவ-14 அன்று) மாறுபட்டு செயல்படுகிறோம். அதற்காக நான் வேதனைப்படுகிறேன்.
இந்தியாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே வந்து பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்தப் பிறகு வெளியிட்ட கருத்துக்கள் குறித்து இங்கே எதிர்க்கட்சித் தரப்பில் பேசியிருக்கிறீர்கள். இதற்கு உன்னுடைய பதில் என்ன என்று என்னை கேட்டிருக்கிறீர்கள்.
எப்படியோ என்னை தில்லியில் உள்ள ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளதாக பாவித்து, உன் பதில் என்ன என்று கேட்டதற்கு நன்றி.
என் உயரம் என்ன என்பதை அறிந்துள்ளதால் அதற்கு உட்பட்டே இங்கு பதில் சொல்ல விரும்புகிறேன்.
இலங்கை அதிபரின் கருத்துக்களை இந்தியா எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நாம் தொடர்ந்து வேண்டுகோள் விடுவது நமது கடமை.
அன்று (12ம் தேதி) வேகமாக பேசத் தவறிய ஓ.பன்னீர்செல்வம் இன்று வேகமாக பேசி, எப்போது ராஜினாமா? என்று கேட்டார். அந்த வேகத்தை பாராட்டுகிறேன்.
தமிழருக்கு தீங்கு ஏற்பட்டால் அதை சகித்துக் கொண்டு பதவியில் இருக்கக் கூடிய
அளவுக்கு எங்களுக்கு பதவி வெறி இல்லை.
அன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்ட தீர்மானத்தின்படி நாங்களும், பாமகவும் மட்டுமே தயாராக இருந்தோம். மற்ற கட்சிகள் தங்கள் தலைமையை கலந்து பேசிதான் ராஜினாமா செய்ய முடியும் என்று கூறிவிட்டன. அதன்பிறகு இலங்கையில் பல்வேறு பிரச்சனைகள் நடைபெற்றுவிட்டன.
தற்போது இலங்கை அதிபர் முடிந்த முடிவாக தீவிரவாதிகளான விடுதலைப் புலிகளை சரணடைய செய்வது அல்லது அடக்குவது ஒன்றுதான் முக்கிய நோக்கம்; குறிக்கோள் என்று அறிவித்துவிட்டார்.
தமிழர்களை காக்கும் பொறுப்பை நான் தட்டிக் கழிக்கமாட்டேன் என்றும் ராஜபக்சே சுவைபட சொல்லியிருக்கிறார். தமிழர்களை ஏமாற்ற முடியும் என்ற கருத்தில்தான் அவர் அப்படி சொல்லியுள்ளார்.
மத்திய அரசு இதனை தெளிவாக புரிந்துக் கொள்ள வேண்டும். இலங்கைப் பிரச்சனையை ராஜபக்சே இரண்டாக பிரித்துப் பார்க்கிறார். தமிழர்கள் மீது எங்கள் படை செல்லாது, குண்டு வீசாது. ஆனால் விடுதலைப் புலிகளுக்கு நாங்கள் ஆதரவு தரமுடியாது என்று அவர்கள் நடத்துகிற யுத்தத்தையே இரண்டாக பிரித்து சொல்கிறார்.
இதனை மிக எச்சரிக்கையாக கையாள வேண்டும் என்று பிரதமரையும், சோனியா காந்தியையும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் என்றால் எப்படி அதை அணுக வேண்டுமோ, அப்படி அவர்களை அணுக வேண்டும். முதலில் தமிழர்கள் மீது குண்டுமழை பொழிவதை நிறுத்த வேண்டும். தமிழர் பகுதிகளில் வீடுகள், ஆலயங்கள் எதுவுமே தாக்குதலுக்கு ஆளாகக் கூடாது. இதற்கு ராஜபக்சே உத்தரவாதம் தருவதற்கு தயாராக இல்லை.
விடுதலைப் புலிகள் மீது குண்டு வீசினால் இலங்கைத் தமிழர்கள் மீதும், இவர்கள் மீது குண்டு வீசினால் விடுதலைப் புலிகள் மீதும் நிச்சயம் விழும். இரு பிரிவினரையும் ஒரு சேர அழிக்க ராஜபக்சே யுத்தம் புரிகிறார்.
அவர் கெடு கேட்டதன் நோக்கம் புரிகிறது. இதில் பிரதமர் ஏமாந்துவிடக் கூடாது. இந்தியா உட்பட எல்லா நாடுகளிலுமே தீவிரவாதிகள் இருக்கிறார்கள். அவர்களை அழிப்பதற்காக அந்த நாட்டு மக்களின் மீது குண்டு மழை பொழிகிறார்களா?
இதை பிரதமர் இந்தியாவின் சார்பாக, இங்கே வேதனைப்படும் தமிழர்களின் சார்பாக இலங்கைக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அப்படி எடுத்துச் சொல்லியும் அவர்கள் கேட்காவிட்டால் பிறகு என்ன நடவடிக்கை என்பதை நாங்கள் யோசிப்போம் என்று பிரதமர் கூறவேண்டும். அதன் பிறகு நம்முடைய எண்ணங்கள் நிறைவேற நாம் என்ன செய்யலாம் என்று சிந்திப்போம்.
அறப்போர் மீது நமக்கு எப்போதுமே அக்கறை உள்ளது. காந்தி, பெரியார், அண்ணா காலம் முதல் அறப்போர் முறையை நாம் அறிந்துள்ளோம். அதில் வெற்றியும் பெற்றுள்ளோம். அந்த முறையில் தமிழர் நலன் காக்க பாடுபடுவோம். அந்த வழியில் ஓ.பன்னீர்செல்வம் கருத்துப்படி பதவியை துறக்க தயார் என்று முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்தார்
கருணாநிதியின் இந்த வாதத்தை படித்து விட்டீர்களா ? ஈழப் போரின் போது ஈழத்தில் நடந்த அழிவு தொடர்பான பிரத்யேகமான புகைப்படங்களை சவுக்கு வெளியிடுகிறது. இந்தப் புகைப்படங்கள், ஈழப் போர் உச்சத்தில் இருந்த சமயத்தில் ஊடகவியலாளர் ஒருவரால் எடுக்கப் பட்டது. இந்தப் புகைப்படத்தை எடுத்த அந்த ஊடகவியலாளர் குண்டு வீச்சில் இறந்து விட்டார். அவர் மனைவி, அவரின் கேமராவை பத்திரப் படுத்தி, இந்தப் புகைப்படங்களை பாதுகாத்துள்ளார்.