சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னால்தான் ஞாநி எனக்கு அறிமுகமாகினார். ஜானகி மகளிர் கல்லூரியில் அவர் அரங்கேற்றிய பலூன் நாடகத்தை காண்கையில்தான் ஞாநியின் அறிமுகம் கிடைத்தது. நான் இடதுசாரி அரசியலில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த காலகட்டத்தில்தான், ஆனந்த விகடன் இதழில், நக்சல் அமைப்பு குறித்து, ஞாநி எழுதிய தவிப்பு என்ற புதினம் தொடராக வந்தது. அந்த தொடர் என்னை வசீகரித்தது. அது முதல், ஞாநியின் எழுத்துக்களை தேடித் தேடி படித்தேன்.
மிகுந்த சிரமத்திற்கிடையே அவர் நடத்திய தீம்தரிகிட இதழை தவறாமல் படித்து வந்தேன். பந்நாட்டு வணிக நிறுவனங்களிடம் விளம்பரம் பெற மாட்டேன் என்று பிடிவாதமாக அந்த பத்திரிக்கையை வெறும் சந்தாவை மட்டுமே நம்பி நடத்தினார். விற்பனையாளர்கள் ஒருவரும் சொல்லியபடி பணத்தை தராததால், மிகுந்த மன வருத்தத்தோடு தீம்தரிகிட இதழை நிறுத்தினார் ஞாநி. உலகமயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கலை கடுமையாக எதிர்க்கும் சிபிஎம் கட்சி நடத்தும் செம்மலர் இதழில் கூட பெப்சி விளம்பரங்கள் வந்ததுண்டு. அச்சில் ஒரு பத்திரிக்கையை நடத்துவதன் சிரமம் அறிந்தவர்கள், இந்த சமரசத்தை புரிந்து கொள்ள முடியும். ஆனால், தீம்தரிகிட இதழே நின்று போனாலும் கூட, சமரசம் செய்ய மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தார் ஞாநி.
திரைத்துறை, நாடகத் துறை, இதழியல், இலக்கியம், கவிதை என்று ஞாநி தடம் பதிக்காத துறைகளே இல்லை எனலாம். ஒவ்வொரு துறையிலும், மக்கள் மற்றும் மக்கள் நலனை மட்டுமே ஞாநி முன்நிறுத்துவார். தன் வாழ்நாளின் இறுதிக் கட்டம் வரையில், எவ்வித சமரசங்களுக்கும் ஆட்படாதவர்.
பாலியல் கல்வி, கல்வி சீர்திருத்தம், குழந்தைகள் இலக்கியம் என்று அடுத்த தலைமுறை குறித்து மிகுந்த கவலையோடு சிந்தித்தவர். நம் வாழ்வின் ஒவ்வொரு அணுவிலும் அரசியல் உள்ளது. அரசியல் இல்லாத இடமே இல்லை என்று உறுதியாக நம்பியவர் ஞாநி. அந்த நம்பிக்கையோடே, தனது அத்தனை படைப்புகளிலும் அரசியல் மற்றும் அது குறித்த தரவுகள் இருப்பதை உறுதி செய்தார்.
இளைய சமுதாயத்தின் மீது தீராத நம்பிக்கையும் பற்றும் வைத்திருந்தார் ஞாநி. அவர்களை சரியாக தயார்ப்படுத்தினால், தமிழகத்தின் அரசியல் போக்கையே மாற்றக் கூடிய வலிமை படைத்தவர்கள் என்பதை உறுதியான நம்பினார்.
தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து மிக மிக விரிவாக எழுதியுள்ளார் ஞாநி. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அரசே நிதியளிப்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார் ஞாநி.
இன்று ஆர்கே நகரில் பிஜேபி என்ற தேசிய கட்சி, நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்று, அவமானப்படுவதற்கு, ஞாநி அவர்கள் நோட்டா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது ஒரு வலுவான காரணமாக இருக்கக் கூடும். உச்சநீதிமன்றம், நோட்டா பட்டனை வாக்கு இயந்திரத்தில் சேர்க்க வேண்டும் என்று உத்தரவிடுவதற்கு முன்னால், நோட்டாவுக்கு வாக்குச் சீட்டில் சின்னமோ, தனியாக பட்டனோ கிடையாது. யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்று நினைக்கும் ஒரு வாக்காளர், தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் அதற்கென்று விண்ணப்பம் அளித்து, தனியாக படிவம் பெற்று யாருக்கும் வாக்களிக்கவில்லை என்று அந்த படிவத்தை நிரப்ப வேண்டும். வன்முறை சூழ்ந்த தேர்தல் அரங்கில், அப்படி தனியாக சென்று படிவத்தை பெற்று பயன்படுத்த, பெரும்பாலான வாக்காளர்கள் தயங்கினார்கள்.
நோட்டா என்பது வலுவான ஆயுதம். அந்த நோட்டாவின் பயன்பாடு அதிகரித்தால், அரசியல்வாதிகள் அச்சம் கொண்டு, நல்ல வேட்பாளர்களை நிறுத்தும் வகையில் நெருக்கடிக்கு ஆளாவார்கள் என்பதை தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தார் ஞாநி. உச்சநீதிமன்றம், நோட்டா பட்டனை வாக்கு இயந்திரத்தில் சேர்த்து, அதன் ரகசியத் தன்மையை உறுதிப்படுத்திய பிறகு, இந்தியா முழுக்க நடந்த தேர்தல்களிலும், தமிழகத்தில் நடந்த தேர்தல்களிலும், நோட்டா பெற்ற வாக்குகள், அரசியல்வாதிகளை கலக்கம் கொள்ளச் செய்தன என்பது அப்பட்டமான உண்மை. பல அரசியல்வாதிகள் வெளிப்படையாகவே நோட்டாவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுப்பத் தொடங்கியுள்ளது நோட்டாவின் வீச்சுக்கு சான்று.
ஆனந்த விகடனில் வெளிவந்த ஞாநியின் ஓ பக்கங்கள் தொடர், வாரந்தோறும் அப்போதைய அரசியல் நிகழ்வுகளை கடுமையாக விமர்சித்தது. அந்த தொடருக்கு தீவிர ரசிகர்களாகி, அதற்காகவே ஆனந்த விகடன் இதழை படிக்கத் தொடங்கியவர்களில் நானும் ஒருவன். எந்த முக்கியமான நிகழ்வாக இருந்தாலும், அது குறித்த தனது பார்வைகளை சமரசமில்லாமல் சொல்பவர் ஞாநி.
நான் உட்பட பல எழுத்தாளர்களுக்கு ஆதர்சமாக, உற்சாகமும் ஊக்கம் அளித்தவர் ஞாநி. அவரின் எழுத்துக்களின் தாக்கம் என் மீது படிந்ததும், நமது கருத்துக்களை தெளிவாக, சமரசம் இல்லாமல் பளிச்சென்று சொல்ல வேண்டியதன் அவசியத்தை நான் ஞாநியிடம்தான் கற்றுக் கொண்டேன். பூசி மெழுகி, சிலரை சமாதானம் செய்ய வேண்டுமே, சிலரின் மனது நோகக் கூடாதே என்று மழுப்பலான கட்டுரைகளை எழுதுபவர்களிடையே ஞாநி ஒரு மாற்றுச் சிந்தனையாளன். அவர் எழுத்துக்களில், க்ரே ஏரியா என்பதே கிடையாது. ப்ளாக் அன்ட் வெயிட்தான். தெளிவான தீர்க்கமான பார்வையைக் கொண்டவர்.
ஆனந்த விகடனில், ஓ பக்கங்கள் தொடரில், நிர்வாகத்தோடு ஞாநிக்கு கருத்து முரண்பாடு ஏற்பட்டது. கட்டுரையை மாற்றச் சொன்னது விகடன் நிர்வாகம். உறுதியாக மறுத்தார் ஞாநி. ஓ பக்கங்கள் தொடர் நின்றது.
ஞாநியின் எழுத்துக்களுக்கு இருக்கும் வரவேற்பை நன்கு அறிந்த குமுதம் நிறுவனம் உடனடியாக அவரை சுவீகரித்தது. ஓ பக்கங்கள் குமுதத்தில் தொடர்ந்தது. 2010ம் ஆண்டு உளவுத்துறையின் தலைவராக இருந்த ஜாபர் சேட்டுக்கு, அவர் மகள் பெயரிலும், பின்னர் மனைவி பெயரிலும், தமிழக அரசால், சமூக சேவகர் என்ற ஒதுக்கீட்டு முறையின் கீழ், திருவான்மியூரில் வீட்டு மனை ஒதுக்கப்பட்டது தொடர்பான அரசாணைகள், ஆவணங்கள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு, சென்னையில் உள்ள முக்கிய தமிழ் ஆங்கிலப் பத்திரிக்கைகள் அனைத்தையும் அணுகினேன். ஜாபர் சேட்டின் மீது இருந்த அச்சத்தின் காரணமாக, ஒரு பத்திரிக்கையும் அந்த செய்தியை வெளியிட தயாராக இல்லை. வேறு வழியே இல்லாமல், சவுக்கு தளத்திலேயே அந்த ஆவணங்களை வெளியிட்டு கட்டுரை எழுதினேன்.
மறு நாள் காலையிலேயே, சாலையில் சென்ற ஒருவரோடு சண்டையிட்டு அவரை அடித்ததாக காவல்துறையால் கைது செய்யப்பட்டேன். அந்த சம்பவத்தை குறிப்பிட்டு, அதை கடுமையாக கண்டித்து ஓ பக்கங்களில், குமுதத்தில் கட்டுரை எழுதினார் ஞாநி. ஆனால் குமுதம் நிர்வாகம் ஜாபர் சேட்டுக்கு பயந்து அதை வெளியிட மறுத்தது. குமுதத்தில் ஓ பக்கங்கள் எழுதுவதை உடனடியாக நிறுத்தினார் ஞாநி. நான் மிக மிக சாதாரணமாக இணையத்தில் எழுதும் ஒரு ப்ளாக் எழுத்தாளன். எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் A NOBODY. ஆனால், ஞாநி, எனது கைது அதிகார துஷ்பிரயோகம், கருத்துச் சுதந்திரத்துக்கான ஆபத்து என்றே பார்த்தார். இந்த ஒரே காரணத்துக்காக அந்த கட்டுரைத் தொடர் நின்று போனது குறித்து ஞாநி எந்தக் கவலையும் படவில்லை.
ஆனந்த விகடனில் ஓ பக்கங்கள் தொடர் வந்து கொண்டிருந்தபோது, அதில், அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி ஓய்வு பெற வேண்டும், பொறுப்பு ஸ்டாலினிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஒரு கட்டுரை எழுதினார். ஸ்டாலினுக்கு தலைமை பொறுப்பு அளிக்கப்பட வேண்டும் என்று ஞாநி உறுதியாக நம்பினார்.
கட்டுரையை படித்த கருணாநிதி உடனடியாக கழகத்தினரை அழைத்து ஞாநிக்கு எதிராக கண்டனக் கூட்டம் போட உத்தரவிட்டார். 20 ஆகஸ்ட் 2007 அன்று, சென்னை வாணி மகாலில் அந்த கண்டனக் கூட்டம் நடைபெற்றது. அ.மார்க்ஸ், அரசு, பிரபஞ்சன், சி.மகேந்திரன், அறிவுமதி, மனுஷ்ய புத்திரன், இமையம், தமிழச்சி, சல்மா, ரவிக்குமார், டி.எஸ்.எஸ்.மணி, கரிகாலன் மற்றும் பத்திரிக்கையாளர் பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஞாநியை பார்ப்பான் என்று எவ்வளவு திட்ட முடியுமோ அவ்வளவு திட்டினார்கள். மிகவும் கடுமையான வார்த்தைப் பிரயோகங்கள்.
உங்கள் வீட்டில் உள்ள 80 வயது பெரியவரை, உடல் நலிவுற்றவரை நீ வேலைக்கு போய் சம்பாதித்து வந்துதான் ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது கொடுமை இல்லையா. உடல் நலன் பாதிக்கப்பட்டு உள்ள கருணாநிதி ஓய்வெடுத்துக் கொண்டு, இலக்கியப் பணி ஆற்ற வேண்டும். தலைமைப் பதவிக்கு எல்லா வகையிலும் தகுதியுள்ள ஸ்டாலின் பொறுப்புக்கு வர வேண்டும் என்று எழுதினார்.
அதற்குத்தான் அத்தனை வசவுகளும். அவரின் கேள்வியில் இருந்த நியாயத்தை ஒருவருமே பேசவில்லை. மாறாக, நான்கு மணி நேரம் ஞாநியை திட்டினர். அந்த கூட்டத்தில் ஞாநி குறித்து இறையன்பன் குத்தூஸ் என்பவர் ஒரு கவிதை படித்தார்.
வடக்கே ஒரு பார்ப்பன வேதாந்தி கலைஞரின் தலை கேட்கிறான்
இங்கே ஒரு பார்ப்பன அஞ்ஞாநி நஞ்சைக் கக்குகிறான்
பார்ப்பானையும் பாம்பையும் கண்டால்
முதலில் பார்ப்பானை அடி என்றார் தந்தை பெரியார்
நம் சிந்தையெல்லாம் நிறைந்த தந்தை பெரியார்
தொண்டால் பொழுதளக்கும் தலைவரை
இங்கு கொச்சைப்படுத்துகிறான் ஒரு தறுதலை
பொறுமை கலைஞரின் பெருந்தன்மை
இது புரிந்திடுமா அஞ்ஞாநிக்குப் பேருண்மை
யாரை சந்தோஷப்படுத்த இவன் எழுதுகிறான்? இங்கே
யாரை சந்தோஷப்படுத்த இவன் எழுதுகிறான்?
பார்ப்பன அரசியலைப் புரிந்துகொள்ளடா
பார்ப்பன பத்திரிகை அரசியலைப் புரிந்துகொள்ளடா
இந்த நிகழ்வு முழுவதையும், கருணாநிதி வீடியோவில் பார்த்து அகமகிழ்ந்தார். அந்த கூட்டத்தில் மிக வலுவாக ஞாநியை வறுத்தெடுத் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு, அடுத்து நடந்த திமுக மகளிர் மாநாட்டில் கொடியேற்றும் பொறுப்பை கொடுத்து கவுரவித்தார் கருணாநிதி.
ஆனால் இது போன்ற வசவுகளைக் கண்டு அஞ்சி தனது கருத்துக்களை மாற்றிக் கொள்பவரல்ல ஞாநி. திமுகவின் எதிர்ப்பை பார்த்து, வருத்தமோ மன்னிப்போ தெரிவிக்கவேயில்லை ஞாநி. இதுதான் ஞாநி. ஞாநி ஒரு சுயமரியாதையுள்ள ஒரு அறிவுச் சுடர். பரிசில் பாடி பிழைக்கும் அரசவைக் கவிஞர் அல்ல.
ஞாநியை வெகு எளிதாக பார்ப்பான் என்று விமர்சித்தவர்கள், ஜெயேந்திரர் கைதானபோது, அதை வரவேற்று விரிவாக எழுதியவர் ஞாநி என்பதை வசதியாக மறந்து விட்டார்கள். ஜெயேந்திரரின் வழக்கு விசாரணை, இந்தியாவில் எந்த நீதிமன்றத்தில் நடந்தாலும், ஜெயேந்திரர் விடுதலையாகி விடுவார். சர்வதேச நீதிமன்றத்தில் அவ்வழக்கை நடத்தினால் மட்டுமே நியாயம் கிடைக்கும் என்று அப்போதே எழுதினார் ஞாநி. அவர் சொன்னதே இறுதியில் நடந்தது. ஜெயேந்திரர் மீதான வழக்கில் முழுமையான ஆதாரங்கள் சிக்கியிருந்தாலும், கருணாநிதி அவரை ஒரு நாளும் கைது செய்திருக்க மாட்டார் என்பதையும் ஞாநிக்கு எதிராக அறச்சீற்றம் காட்டியவர்கள் உணர்ந்ததில்லை.
கணினியையும், சமூக வலைத்தளங்களையும் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை நன்கு அறிந்து, அதை முழுமையாக கற்றுக் கொண்டு, சமூக வலைத்தளங்களில் தன் அரசியல் விமர்சனங்களை வைத்து, அதிலும் தீவிரமான விவாதங்களில் ஈடுபட்டவர் ஞாநி. அவரின் தெளிவான பார்வையும் தீர்க்கமான சிந்தனையும், தொடர்ந்து அவரை கவனிக்க வைத்தது.
சமூகத்தை ஆழ்ந்து நேசிக்கும் ஒரு மனிதன் எப்படி வாழ்வான் என்பதற்கு சிறந்த உதாரணமாக வாழ்ந்து மறைந்துள்ளார் ஞாநி. ஒவ்வொரு மூச்சிலும், ஒவ்வொரு சிந்தனையிலும், மக்களை தீவிரமாக நேசித்தவர் ஞாநி.
டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் துணை ஆசிரியர் ஷபீர் அகமது, ஞாநி குறித்து “ நான் பத்திரிக்கை உலகில் காலடி எடுத்து வைக்கையில் ஞாநி பத்திரிக்கை உலகில் மிகப் பெரும் ஆளுமை. துளியும் சமரசம் செய்து கொள்ளாத துணிச்சலான பத்திரிக்கையாளர் என்று ஞாநி குறித்த பல கதைகளை கேள்விப் பட்டிருக்கிறேன். அவரோடு பழகுகையில் அந்தக் கதைகள் மிகைப்படுத்தப்பட்டவை அல்ல என்பதை உணர்ந்தேன்.
ஞாநியின் புத்தகங்களோ, நாடகங்களோ, ஓ பக்கங்கள் தொடரோ, ஒன்று விடாமல் வாசிக்கத் தொடங்கினேன். என்டிடிவி இந்து தொலைக்காட்சி சேனலில் 2008ம் ஆண்டு நான் பணிக்கு சேர்ந்தபோது, அது ஒரு சாதாரண, சிறிய சேனலாக இருந்தது. பலர் பேட்டியளிப்பதை தவிர்ப்பார்கள். ஆனால், எங்களை ஊக்கப்படுத்தி எப்போது கேட்டாலும் முகம் சுளிக்காமல் பேட்டியளிப்பார் ஞானி. எந்த விவகாரமாக இருந்தாலும் தயங்காமல் பேட்டியளித்து, எங்கள் செய்தியை முழுமையடையச் செய்வார் ஞாநி. வாரத்தில் நான்கு நாட்கள், ஞாநியின் கேகே நகர் வீட்டில் கேமராவோடு நிற்பேன்.
ஞாநியின் கேகே நகர் வீட்டை ஒரு அறிவுக் கூடம் என்றே சொல்லலாம். எப்போதும் அவரைச் சுற்றி ஐந்தாறு பேர் இருப்பார்கள். அரசியல் விவாதம், இலக்கிய விவாதம், திரைப்பட கதை விவாதம் என்று வீடு பரபரப்பாக இருக்கும். இப்படி அத்தனை விஷயங்களையும் விவாதித்து, அத்தனை பேரோடும் செலவு செய்ய இவருக்கு நேரம் எங்கே இருக்கிறது, இதற்கான சக்தி இவருக்கு எப்படி வருகிறது என்று பல முறை நினைத்து வியந்திருக்கிறேன். அவரின் திறனும் வீச்சும், ஒப்பிட முடியாதது.
எல்லா வகையான விவாதங்களுக்கும் எப்போதும் தயாராக இருப்பவர் ஞாநி. அவரின் கருத்துக்களை அவரது முகத்துக்கு நேராக மறுக்கும் உரிமையை அனைவருக்கும் அளித்தவர் ஞாநி. வயது, பாலினம் என்று எந்த மாறுபாடும் பார்க்காமல் அனைவரோடும் எளிமையாக விவாதிப்பவர் ஞாநி.
விகடனில் வெளியான ஞாநியின் கருணாநிதி குறித்த கட்டுரை பெரும் அரசியல் புயலை கிளப்பியது. கருணாநிதி உடல்நிலை காரணமாக ஓய்வெடுக்க வேண்டும் என்று கூறியது அக்கட்டுரை. ஞாநியை கண்டிக்க ஒரு கூட்டத்தை திமுக ஏற்பாடு செய்திருந்தது. திமுக பேச்சாளர்களும், திமுக ஆதரவு பத்திரிக்கையாளர்களும், ஞாநி மீது விஷத்தை கக்கினர். அவரின் நேர்மை, சாதி, நம்பிக்கைகள், நம்பகத்தன்மை என்று அனைத்தும் கேள்விக்குள்ளாக்கப்பட்டு விமர்சிக்கப்பட்டன. அந்த கூட்டத்தில் ஞாநி மீது வீசப்பட்ட விஷச் சொற்கள் இன்னும் நினைவில் உள்ளது. ஆனால், ஞாநி ஒரு நாளும் அதற்காக வருந்தவோ, மன்னிப்பு கேட்கவோ மறுத்து விட்டார். தான் எழுதியது சரியே என்று இறுதி வரை உறுதியாக இருந்தார். அதுதான் மற்றவர்களிடமிருந்து ஞாநியை வேறுபடுத்துகிறது.
ஊடக சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் வரும் சமயத்திலெல்லாம், போராட்டக் களத்தில் முன்னணியில் நிற்பார் ஞாநி. கருத்து சுதந்திரத்துக்கு ஆபத்து வரும்போதெல்லாம் அதை எதிர்க்கும் முதல் குரல் ஞாநியினுடையதாக இருக்கும்.
ஞாநியின் மரணம், பத்திரிக்கை உலகுக்கு ஈடு செய்ய முடியாத பெரும் இழப்பு. உள்ளதை உள்ளபடி உரைக்க வேண்டும் என்பதை உலகுக்கே உணர்த்தி என்னைப் போன்ற பல பத்திரிக்கையாளர்களுக்கு ஒரு உதாரணமாக திகழ்ந்தார் ஞானி.” என்றார் டைம்ஸ் நவ் உதவி ஆசிரியர் ஷபீர் அகமது.
நாட்டில் மதவாதம் தன் ஆக்டோபஸ் கரங்களை பரப்பிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஞாநியைப் போன்ற தீர்க்கமான பார்வையுடனும், தெளிவான சிந்தனை மற்றும் துணிச்சலுடனும் எழுத வேண்டிய எழுத்தாளர்களின் தேவை மிக அதிகமாக இருக்கிறது. இப்படிப்பட்ட நேரத்தில், ஞாநி மறைந்தது, தமிழ்ச் சமூகத்துக்கு ஏற்பட்ட மிகப் பெரும் இழப்பு. ஞாநி மறைந்தது வருத்தமாக இருந்தாலும், சிறுநீரகம் உள்ளிட்ட பல்வேறு உபாதைகளோடு அவர் அனுபவித்த அவஸ்தைகளை கேட்க அவ்வளவு வேதனையாக இருந்தது.
ஞாநி எப்படிப்பட்ட மனிதராக இருந்தார் என்பதற்கு ஒரு தீவிர இந்துத்துவா மற்றும் மோடி ஆதரவாளர் ஒருவர் கூறும் கருத்தே சான்று. ராஜமாணிக்கம் என்ற அந்த மோடி ஆதரவாளர், ஞாநி குறித்து, “மாற்று கருத்துக்களை அனுமதிப்பவர். இன்றைய கால கட்டத்தில் மாற்றுதரப்பை காது கொடுத்து கேட்கும் நபர்களே குறைவு தான். நான் என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன். என்னுடன் நில் அல்லது என் எதிரிடையாக நில் எனும் தரப்பு தான் ஓங்கி வருகிறது. ஞாநி நிச்சயம் அப்படி அல்ல. அவர் வீட்டில் இருந்திருக்கிறேன்.சாப்பிட்டு இருக்கிறேன். அவருடன் களத்தில் பணியாற்றி இருக்கிறேன். அவர் நேர்மையின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.” ஒரு தீவிர மோடி ஆதரவாளரின் இந்த கருத்தே ஞாநிக்கு கிடைக்கும் ஆகச் சிறந்த பெருமை.
சென்று வாருங்கள் ஞாநி. உங்களின் பணியை தொடர்ந்து செய்ய இளைய தலைமுறை காத்திருக்கிறது. அவர்கள் உங்களை கைவிட்டு விட மாட்டார்கள்.
கண்ணீர் அஞ்சலிகள்
கண்ணீர் அஞ்சலி.
Thanks for your insight article about our lovable writer ..
ஞானி, நல்ல பத்ரிகையாளர் எனும் வார்த்தைக்கு தக்க ஒரு சான்று..
மிகச்சரியான அஞ்சலி……….
மிகச்சரி…மிகச்சரி
உளவு-ஊழல்-அரசியல்னு நீங்க எழுதுனா மாதிரி, ஞானி எழுதியிருந்தா, ஊடகம்-ஊழல்-அரசியல்னு எழுதியிருப்பாரோன்னு எண்ணத்தோன்றுகிறது. எனக்கு ஞானியை படிக்கும் வாய்ப்பு கிடைத்ததில்லை. என்னுடைய ஞானி சங்கர் தான். ஞானிகள் என்றும் வாழ்வர். சென்று வாருங்கள் ஐயா!!
ஞானி ஜெயலலிதாவை பற்றி ஏதாவது விமரிசனம் செய்திருக்கிறாரா?
He would criticize Jaya with feather-lite approach and when it comes to MK he would use a sledge hammer. Difference is MK organised a meeting to condemn him Jaya would have Narcotics or drug possession case filed on him
ஞானி இந்த பெயருக்கு ஏற்ப பாகுபாடு அற்ற சிந்தனையாளர் ” All politics today is bad. It would be worse if you keep away from it ” அவர் கூறிய இந்த காெட்டேஷன் … தற்காலத்திற்கு ஏற்ற நமக்கான அறிவரை …. என்றும் நினைவில் இருப்பார் …!!
This article is highly appreciated one.
GNANI was a great writter …very lost to the tamilnadu
Shankar, you are rightly highlighting the wrongdoings of karunanidhi for using caste slurs on Gnani even though Gnani was right in his accusation. So, using casteist slur against a brahmin to hide one’s own mistake has been a easy way out in TN for a long time. You did the same mistake , I remember your post on Girija Viathyanathan. I don’t know if she did wrong or not, even if she did wrong, you were wrong to use caste slur against her. associating a person’s actions with caste is antithesis of “anti-casteism”.
நல்லவர்களுக்கு காலம் இல்லை, என்ற வாக்கியம் ஞானிக்கு அருமையாக பொருந்தும். அவருக்கு மாறாக யார்தான் இம்மண்ணில் பிறந்திருக்கிறார்களோ ?!
மிகச்சரியான அஞ்சலி.இம்மாதிரி மனிதர்களை அடையாளம் காட்டுங்கள்
ஞாநி குறித்த பதிவு அற்புதம்
Good Tribute to a Great & Fearless Human Being …R.I.P, Gnani Sir….
Thanks Sankar to know more about Gnani… May his soul rest in peace…