இந்திய வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் உச்சநீதிமன்றத்தைச் சேர்ந்த உச்ச நீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள், பத்திரிக்கையாளர்களை சந்தித்து, அது பெரும் புயலை கிளப்பியுள்ளது. இந்த சர்ச்சைகள் அடங்க வெகு நாட்களாகலாம். இந்த நான்கு நீதிபளின் நடவடிக்கைகள் ஜனநாயகத்தை பாதுகாக்கும் ஒரு செயல் என்று ஒரு புறமும், நான்கு நீதிபதிகள் மரபை மீறி, ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்து விட்டார்கள் என்றும் வாதப் பிரதிவாதங்கள் நடைபெறுகின்றன.
இதில் உள்ள நியாயங்களை அலசுவதற்கு முன்னால் நாம் அடிப்படையாக ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். லார்ட்ஷிப் என்று என்னதான் நாம் அழைத்தாலும், அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்களே என்பதை நாம் மறந்து விடக் கூடாது. எல்லா மனிதர்களுக்கும் இருக்கக் கூடிய ஆசா பாசங்கள், அபிலாஷைகள், விருப்பு வெறுப்புகள், பேராசைகள் ஆகிய அனைத்தும் இந்த நீதிபதிகளுக்கும் இருக்கும்.
ஒரு முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் உள்ள சூழலை நாம் அலசிப் பார்த்தால், அரசியல், நிர்வாகம், ஊடகம், அதிகார மையம் என்று அனைத்து தரப்பிலும் நேர்மையானவர்களின் சதவிகிதம் அதிகமாக இருந்தது. ஊழல் பேர்வழிகள் சிறுபான்மையினராக, லஞ்சம் வாங்குவதை குற்ற உணர்ச்சியோடு செய்து கொண்டிருந்தார்கள். இன்று 2018ல் உள்ள சூழல் எப்படி உள்ளது என்பதை விளக்க வேண்டியது இல்லை.
இதே போலத்தான் நீதித்துறையும். சமூகத்தில் மற்ற பிரிவுகளில் ஏற்பட்ட சீரழிவு நீதித்துறையையும் பீடிக்கத்தான் செய்தது. இந்த சமூகத்திலிருந்துதானே நீதிபதிகளும் உருவாகிறார்கள் ?
அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள், ஏன் பத்திரிக்கையாளர்கள் ஊழலைக் கூட நம்மால் வெளியிட முடியும். அம்பலப்படுத்த முடியும். எழுத முடியும். எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நடத்த முடியும். விசாரணை கோரி புலனாய்வு அமைப்புகளிடம் மனுத் தாக்கல் செய்ய முடியும். நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியும்.
ஆனால் நீதிபதிகளின் ஊழல்களைக் குறித்து வாயே திறக்க முடியாமல், பேசக் கூட முடியாத ஒரு நிலைதான் இன்று உள்ளது. உயர்நீதிமன்றங்களிலும், உச்சநீதிமன்றங்களிலும் பணியாற்றும் வழக்கறிஞர்களிடம் பேசினால், நீதிபதிகளின் ஊழல்கள் குறித்து கதை கதையாய் சொல்வார்கள். ஆனால், அவர்களாலும் இது குறித்து பேசவோ எழுதவோ முடியாது.
சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கிய ஜெயலலிதாவை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விடுதலை செய்தவர் நீதிபதி குமாரசாமி. அந்த தீர்ப்பில் இருந்த கணக்குப் பிழைகளை சவுக்கு உட்பட அனைத்து ஊடகங்களும் அம்பலப்படுத்தின. அந்த வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்ய குமாரசாமி லஞ்சம் பெற்றாரா என்பது நமக்குத் தெரியாது. ஆனால் அது குறித்து விசாரணை நடத்தப்பட்டிருக்க வேண்டுமா இல்லையா ? ஆனால் எந்த விசாரணையும் நடைபெறவில்லை. குமாரசாமி நிம்மதியாக பணி ஒய்வு பெற்று சென்று விட்டார். இது போல பல நேர்வுகளை சுட்டிக் காட்ட முடியும்.
ஆனால் எந்த விசாரணைகளையும் நடத்துவதற்கு சட்டத்தில் இடமில்லை. நீதிபதிகளுக்கு அவ்வளவு பெரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதிபதிகளை பணி நீக்கம் செய்ய வேண்டுமென்றால், மாநிலங்களவையும் 75 எம்பிக்களுக்கு குறையாமல் கையெழுத்திட்ட மனுவை அளித்து, அதை மாநிலங்களை தலைவர் ஒப்புக் கொண்டு, அதை உச்சநீதிமன்றத்துக்கு அனுப்பி, அதன் பிறகு விசாரணை நடத்தி, இறுதியாக பாராளுமன்றத்தில் விசாரணை நடந்து, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையோடே ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய முடியும். இதெல்லாம் நடக்கும் காரியமா ? இதனால்தான் இந்திய வரலாற்றில், ராமசாமி, பிடி.தினகரன் மற்றும் சவுமித்ரா சென் என்ற மூன்றே மூன்று நீதிபதிகள் மீது மட்டுமே இது வரை பதவி நீக்க நடவடிக்கை பாராளுமன்றத்தால் எடுக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று நடவடிக்கைகளுமே தோல்வியில் முடிந்தன.
ராமசாமி மீதான நடவடிக்கை பெரும்பான்மை இல்லாமல் தோல்வியில் முடிந்தது. அவரும் ராஜினாமா செய்து விட்டார். மீதம் உள்ள இருவரும், பாதி நடவடிக்கை எடுக்கப்படுகையிலேயே ராஜினாமா செய்து விட்டனர்.
இந்த சூழலில்தான் இப்போது உச்சநீதிமன்றத்தில் பெரும் கலகம் வெடித்துள்ளது. இந்த கலகத்துக்கான மையப்புள்ளியாக இருப்பவர், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா. இவரைச் சுற்றித்தான் இன்று சூறாவளி வீசிக் கொண்டிருக்கிறது.
தீபக் மிஸ்ரா தலைமை நீதிபதியானபோதே சர்ச்சை எழுந்தது. ஒதிஷா மாநிலத்தில் தீவனப் பண்ணை வைப்பதற்காக 2 ஏக்கர் நிலம் வேண்டுமென்று 1979ம் ஆண்டு தீபக் மிஸ்ரா அரசிடம் விண்ணப்பிக்கிறார். அப்போது தனது பெயரில் எந்த நிலமும் இல்லை என்று தெரிவிக்கிறார். அவரது குடும்பத்தின் பெயரில் 10 ஏக்கர் நிலம் இருந்ததையும் மறைத்து விட்டார். பின்னாளில், 1985ம் ஆண்டு நடந்த விசாரணையில், தீபக் மிஸ்ரா தவறான தகவலை அளித்து நிலத்தை பெற்றது தெரிய வந்ததும், அந்த நில ஒதுக்கீடு ரத்து செய்யப்படுகிறது. ஆனால் ரத்து செய்யப்பட்ட இந்த ஒதுக்கீடு கணக்கிலேயே எடுத்துக் கொள்ளப்படவில்லை.
2009ம் ஆண்டு, இந்த நில விவகாரம் குறித்து பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படுகிறது. அந்த சிபிஐ விசாரணையில்தான் தவறான நில ஒதுக்கீடு நடந்தது உறுதி செய்யப்படுகிறது. இதையடுத்து, 2013ம் ஆண்டு, வருவாய்த் துறை நில ஒதுக்கீட்டை ரத்து செய்து உத்தரவிடுகிறது. அது வரை, ஏழைகளுக்காக ஒதுக்கப்பட வேண்டிய 2 ஏக்கர் நிலம், தீபக் மிஸ்ராவிடம்தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒதிஷா உயர்நீதிமன்றத்தைச் சேர்ந்த நீதிபதிகள் மொகாந்தி மற்றும் சங்கம் குமார் சாஹு ஆகியோருக்கு எதிராக அப்போதைய தலைமை நீதிபதி தாக்கூர் மூன்று நீதிபதிகள் விசாரணைக்கு உத்தரவிடுகிறார். அந்த விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது, தீபக் மிஸ்ரா உச்சநீதிமன்ற நீதிபதியாக இருப்பதும், அவர் நில ஒதுக்கீடு முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதும் தெரிய வருகிறது. உச்சநீதிமன்ற நீதிபதியின் பெயர் வந்ததும், அந்த விசாரணை அப்படியே கை விடப்படுகிறது. இணைப்பு
இதுதான் தீபக் மிஸ்ராவின் பின்புலம். இதன் பிறகும் தீபக் மிஸ்ராவின் மீது தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டுதான் இருந்தன. அருணாச்சல பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்த காலிக்கோ புல் என்பவரின் அரசு மத்திய அரசால் கலைக்கப்பட்டது. அந்த கலைப்பு சரியா இல்லையா என்ற வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருந்தது. காலிக்கோ புல், ஒரு 60 பக்க தற்கொலை கடிதத்தை எழுதி, ஒவ்வொரு பக்கத்திலும் கையெழுத்திட்டு, தற்கொலை செய்து கொண்டார். அந்த கடிதத்தில் அவருக்கு சாதகமாக தீர்ப்பளிக்க, அந்த வழக்கை விசாரிக்க உள்ள இரண்டு மூத்த நீதிபதிகளான, கேஹர் அவர்களின் மகன் வீரேந்திர கேஹர் பெயரைக் கூறி, 49 கோடியும், மற்றொரு நீதிபதியான தீபக் மிஸ்ராவின் சகோதரர் ஆதித்ய மிஸ்ரா பெயரைக் கூறி 37 கோடியும் லஞ்சம் கேட்டதாக அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. இணைப்பு. அது தொடர்பாக விசாரணை வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த காலிக்கோ புல்லின் மனைவி தங்விம்சாய் புல், என்ன காரணத்தாலோ அவர் மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டார்.
அதன் பிறகும் பல்வேறு வழக்குகளில் தீபக் மிஸ்ராவின் பெயர் தவறான முறையில் உச்சநீதிமன்றத்தில் அடிபட்டுக் கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில்தான் நான்கு கதாநாயகர்கள், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக கலகக் குரல் கொடுத்திருக்கிறார்கள்.
தறபோது வெளிப்படையாக பத்திரிக்கையாளர்களை சந்திப்பதற்கான காரணம் என்று நான்கு நீதிபதிகள் கூறியது, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, தன் விருப்பம் போல, வழக்குகளை, மரபுகளை மீறி, இளைய நீதிபதிகளிடம் ஒப்படைக்கிறார் என்பதே. எந்த வழக்கு உங்களை இப்படி பத்திரிக்கையாளர்களை சந்திக்கத் தூண்டியது, மர்மமான முறையில் இறந்து போன மராட்டிய மாநில மாவட்ட நீதிபதி லோயாவின் மரணம் குறித்து விசாரணை செய்ய வேண்டிய பொது நல வழக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது குறித்தே.
எல்லா வழக்குகளையும் என் இஷ்டத்துக்கு ஒதுக்கீடு செய்வேன் என்ற அதிகாரத்தை தானே எப்படி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா சுவீகரித்துக் கொண்டார் என்பதற்கும் பின்னணி உண்டு.
ஒதிஷா மாநிலத்தில் உள்ள பிரசாத் மெடிக்கல் ட்ரஸ்ட் நிறுவனத்துக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரியின் அனுமதியை மருத்துவக் கவுன்சில் ரத்து செய்ததற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றத்தில் தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. அப்போது உச்சநீதின்றத்தை சேர்ந்த நீதிபதிகள் மற்றும் ஒதிஷா உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு லஞ்சம் தர முயற்சித்த தகவல் சிபிஐக்கு தெரிய வர, சிபிஐ ஒரு பூர்வாங்க விசாரணையை பதிவு செய்கிறது. அந்த பூர்வாங்க விசாரணையில் ஒதிஷா உயர்நீதிமன்ற நீதிபதிகள் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்ததும், முதல் தகவல் அறிக்கையை சிபிஐ பதிவு செய்கிறது.
இந்த விபரங்கள் ஊடகங்களில் வெளியானதும், மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணும், காமினி ஜெய்ஸ்வாலும், இரு வழக்குகளை உச்சநீதின்றத்தில் தாக்கல் செய்கின்றனர். பூஷண் வழக்கு ஒரு அமர்வில் இருக்கையில், மறு நாள் இரண்டாவது மூத்த நீதிபதி செல்லமேஷ்வர் முன்னிலையில் காமினி ஜெய்ஸ்வால் இந்த வழக்கை மென்ஷன் செய்கிறார். செல்லமேஷ்வர், உடனடியாக இந்த வழக்கை, உச்சநீதிமன்றத்தின் மூத்த ஐந்து நீதிபதிகள் விசாரிக்க வேண்டும் என்றும், இந்த வழக்கு நீதித்துறையின் எதிர்காலம் தொடர்பானது என்றும் உத்தரவிடுகிறார்.
இந்த உத்தரவு வெளியானதும், அது வரை வேறு வழக்கை விசாரித்துக் கொண்டிருந்த தீபக் மிஸ்ரா, உடனடியாக நீதிமன்றத்தை விட்டு எழுந்து சென்றார். பிற்பகல் மூன்று மணிக்கு மூத்த நீதிபதி தீபக் மிஸ்ரா, ஆர்கே.அகர்வால், அருண் மிஸ்ரா, அமித்தவ ராய், மற்றும் கன்வாலிக்கர் அடங்கிய அமர்வு அவசரமாக கூடியது. இந்த அமர்வில் அமர்ந்த மீதமுள்ள நான்கு நீதிபதிகளின் பெயர்களை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். தீபக் மிஸ்ரா ஒதுக்கும் எல்லா வழக்குகளும் இந்த நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்குத்தான் செல்லும்.
தீபக் மிஸ்ரா தலைமையிலான அந்த அமர்வு, எந்த வழக்கை யாருக்கு ஒதுக்க வேண்டும் என்று தீர்மானிக்கும் அதிகாரம், முழுக்க முழுக்க தலைமை நீதிபதிக்கு மட்டுமே. வேறு எந்த நீதிபதியும் அதை செய்ய முடியாது என்று தீர்ப்பளித்தது.
மறு நாள், ஆர்கே.அகர்வால், அருண் மிஸ்ரா, மற்றும கன்வாலிக்கர் அடங்கிய மூவர் அடங்கிய அமர்வு, மருத்துவக் கல்லூரி ஊழல் தொடர்பாக உச்சநீதிமன்ற மேற்பார்வையில் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற மனுவை தள்ளுபடி செய்தது. தள்ளுபடி செய்ததோடு அந்த அமர்வு நிற்கவில்லை. வழக்கு தொடர்ந்த பிரசாந்த் பூஷணின் அமைப்புக்கு 25 லட்சம் அபராதத்தையும் விதித்தது. வழக்கை தள்ளுபடி செய்வதை ஒரு புறம் விட்டு விடுவோம். 25 லட்சம் அபராதம் விதித்ததன் நோக்கம் என்ன ? இனி வேறு யாரும் இது போன்ற வழக்குகள் குறித்து பேசவும் கூடாது. எழுதவும் கூடாது என்பது மட்டும்தானே ?
ஆர்கே அகர்வால், அருண் மிஸ்ரா மற்றும் ஏஎம்.கன்வாலிக்கர் ஆகிய மூவரையும், உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் சம்ச்சா நீதிபதிகள் என்றே அழைக்கின்றனர்.
வழக்கமாக சமூக, அரசியல் மற்றும் அரசியல் சாசன முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை விசாரிக்கும் உச்சநீதிமன்ற அமர்வில், உச்சநீதிமன்றத்தின் முதல் மூத்த நீதிபதிகள் ஐவரில், ஒருவர் இரு நபர் அமர்வில் மூத்த நீதிபதியாக இருப்பார். இரண்டாவது நீதிபதியாக இளைய நீதிபதி ஒருவர் இருப்பார்.
உச்சநீதிமன்றம் அடுத்தடுத்து விசாரிக்க இருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளான, நீதிபதி லோயாவின் மர்ம மரணம் தொடர்பான வழக்கு, ஆதார் கட்டாயம் என்ற வழக்கு, பாப்ரி மசூதி தொடர்பான வழக்கு ஆகிய எதிலுமே தீபக் மிஸ்ராவைத் தவிர, அடுத்த நான்கு நீதிபதிகள் இல்லை.
ஒதிஷா மருத்துவக் கல்லூரி விவகாரத்தில் ஓய்வு பெற்ற மற்றும் பணியில் உள்ள நீதிபதிகள் சம்பந்தப்பட்டிருப்பதால், சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு, அந்த குழு உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் செயல்பட வேண்டும் என்று பிரசாந்த் பூஷணின் கோரிக்கையை நிராகரித்ததோடு, 25 லட்சம் அபராதத்தையும் விதித்தது, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவால் உருவாக்கப்பட்ட அமர்வு.
சரி. மருத்துவக் கல்லூரி அனுமதி விவகாரத்தில் ஊழல் நடைபெறவேயில்லையா ? அதில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் சம்பந்தப்படவில்லையா ? இது தொடர்பாக சிபிஐ பதிவு செய்த பூர்வாங்க விசாரணையில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ அமர்வில் தற்போது பணியில் உள்ள நீதிபதியான நாராயண சுக்லாவும், ஒதிஷா நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியான குத்தூசியும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை, விரிவான விசாரணை நடத்தி ஒரு அறிக்கையாக 8 செப்டம்பர் 2017 அன்று சிபிஐ தயார் செய்கிறது.
பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதியை விசாரணை செய்யவும், அவர் மீது வழக்கு பதிவு செய்யவும், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் அனுமதி இல்லாமல் செய்ய முடியாது. 6 செப்டம்பர் 2017 அன்று, சிபிஐ அதிகாரிகள், இந்த அறிக்கையை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிடம் அளித்து, வழக்கு பதிவு செய்வதற்கான அனுமதியை கோருகின்றனர்.
இந்த வழக்கு பதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருந்தால், ஏற்கனவே லஞ்சமாக வாங்கிய பணத்தை, உரிய உத்தரவு பிறப்பிக்க முடியாத காரணத்தால், திருப்பி அளிக்க இருந்த அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி நாராயண சுக்லா அவ்வாறு பணத்தை திருப்பி அளிக்கையில் கையும் களவுமாக பிடித்து, அவரை கைது செய்திருக்க முடியும்.
ஆனால் இதை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தடுத்தார். இதை நாங்ககேள விசாரித்துக் கொள்கிறோம் என்று சிபிஐ அதிகாரிகளிடம் தெரிவித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, அது போல எந்த விசாரணைக்கும் உத்தரவிடவில்லை.
வழக்குகளை புலனாய்வு செய்யவும், கைது நடவடிக்கைகளில் ஈடுபடவும், சோதனைகள் நடத்தவும், ஏராளமான அனுபவமும், ரிசோர்சஸும் உள்ள ஒரு அமைப்பு சிபிஐ. ஆனால் அந்த சிபிஐ விசாரிக்கக் கூடாது, டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றத்தில் உள்ள நான்கு நீதிபதிகள் சேர்ந்து விசாரித்துக் கொள்கிறோம் என்று தீபக் மிஸ்ரா முடிவெடுப்பது இந்த ஊழலை மூடி மறைக்கும் செயலா இல்லையா ?
மேலும், உச்சநீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்துவதையும் தடுத்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு, இந்த ஊழலில் பங்கு இல்லை என்று எப்படி உறுதியாக கூற முடியும் ?
நீதித்துறையில் அப்பட்டமாக நடந்துள்ள இந்த ஊழலை மூடி மறைக்கவும், விசாரணையை நடத்த விடாமல் தடுக்கவும் முயற்சி செய்யும் தீபக் மிஸ்ரா போன்ற ஒரு நீதிபதி இந்தியாவின் உச்சபட்ச நீதிபதியாகவும், தலைமை நீதிபதியாக இந்தியா முழுக்க உள்ள நீதித்துறையை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை பெற்றவராகவும் இருந்தால், இது ஜனநாயகத்துக்கு எப்படிப்பட்ட ஆபத்து ?
நான்கு நீதிபதிகள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தற்கு இதுவும் முக்கிய காரணமில்லை.
ஒவ்வொரு உயர்நீதிமன்றத்துக்கும் நீதிபதிகளாக நியமிக்கப்பட வழக்கறிஞர்களின் பெயர் பரிசீலிக்கப்பட்டு, இறுதியாக ஒரு பட்டியல் உச்சநீதிமன்றத்துக்கு அனுப்பப்படும். அந்தப் பட்டியலில் எப்படியும் சம்பந்தப்பட்ட மாநில அரசின் பரிந்துரையில் ஒன்றிரண்டு பெயர்கள் இருக்கும். இந்த பெயர்கள் போக, மீதம் உள்ள பெயர்களை, சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகள், பலரை கலந்தாலோசித்து, உரிய பரிசீலனைக்கு பின்னரே உச்சநீதிமன்றத்துக்கு அனுப்புவார்கள்.
அதில் ஒன்றிரண்டு பிழையாவதும் உண்டு. இருப்பினும் பெரும்பாலும், ஓரளவு சரியான பெயர்களாகவே இருக்கும். ஒவ்வொரு உயர்நீதிமன்றத்துக்கும் பிற மாநிலத்தைச் சேர்ந்த நீதிபதி ஒருவரை, தலைமை நீதிபதியாக நியமிப்பதற்கான பின்னணி இதுதான். அதாவது வேறு மாநிலத்தைச் சேர்ந்த நபர் தலைமை நீதிபதியாக இருந்தால், விருப்பு வெறுப்பின்றி, காய்த்தல் உவர்த்தலின்றி தேர்ந்தெடுப்பார்கள் என்ற நம்பிக்கையே இதற்கு காரணம்.
தீபக் மிஸ்ரா தலைமை நீதிபதியாக பதவியேற்ற ஆகஸ்ட் 2017க்கு பிறகு, ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி காலியிடங்களுக்கான பரிந்துரைகள் அனைத்தையும் செய்வது தீபக் மிஸ்ரா மட்டுமே. ஒவ்வொரு மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியையும் அழைத்து, அந்த உயர்நீதிமன்றங்களுக்கு காலியாக உள்ள இடங்களுக்கு நான் சொல்லும் பட்டியலை அனுப்புங்கள் என்று சொல்லி, அந்தப் பட்டியலே உச்சநீதிமன்ற கொலிஜியத்துக்கு வருகிறது.
இது மட்டுமல்ல. இந்த பட்டியலை தீபக் மிஸ்ராவிடம் அளிப்பது, மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் என்பதுதான் கூடுதல் தகவல்.
சற்றே நினைத்துப் பாருங்கள். இன்றும் பத்தாண்டுகளில், இந்தியாவில் உள்ள அனைத்து உயர்நீதிமன்றங்களிலும், உச்சநீதிமன்றத்திலும், ஆர்எஸ்எஸ் பின்புலம் உள்ள காவிகள் நீதிபதிகளாக நீக்கமற நிறைந்திருந்தால், இந்தியாவின் ஜனநாயகம் என்ன ஆகும் ?
இதுதான் நான்கு நீதிபதிகள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தற்கான உண்மையான பின்னணி. பத்திரிக்கையாளர்களை சந்தித்த நான்கு நீதிபதிகள் பேசியதன் உள்ளர்த்தத்தை கவனித்தால், இது நன்கு புரியும்.
“இந்த அமைப்பு காப்பாற்றப் படாவிட்டால், நாட்டில் ஜனநாயகம் இருக்காது. மிகுந்த வேதனையோடே பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறோம். நிலைமை மோசமாக உள்ளது. தேவையான நடவடிக்கைகளை எடுத்து, இதை சீர்படுத்துங்கள் என்று தலைமை நீதிபதிக்கு நாங்கள் விடுத்த கோரிக்கை செவிமடுக்கப்படவில்லை. எங்கள் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
நாங்கள் நாலு பேரும், நாட்டில் ஜனநாயகம் கேள்விக்குள்ளாக்கப் பட்டுள்ளது என்பதில் உறுதியாக உள்ளோம். கடந்த சில காலமாக நடந்த சம்பவங்கள் கவலையளிக்கின்றன.
இந்த தேசத்துக்கு நாங்கள் ஆற்ற வேண்டிய கடமை உள்ளது. “ என்று அந்த நான்கு நீதிபதிகளும் வேதனையோடு தெரிவிப்பது இதுதான்.
வெளியியுலகுக்கு தெரியாத பல்வேறு தகவல்களும் இந்த நீதிபதிகளுக்கு தெரியும் என்பதுதான் அவர்களின் வேதனையின் பின்னணி.
கேஜி பாலகிருஷ்ணன் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றது முதலாகவே, உச்சநீதிமன்றத்தில் இடைத்தரகர்களின் தலையீடு அதிகமானது. அது வரை, சில வழக்கறிஞர்கள் செய்து கொண்டிருந்த பணியை, நீதித்துறைக்கு எந்த சம்பந்தமும் இல்லாத, இடைத்தரகர்கள் செய்யத் தொடங்கினர்.
பிஜேபி மத்திய அரசு பொறுப்பேற்றது முதல், இந்த இடைத்தரகர்களின் தலையீடு மிகவும் அதிகரித்தது.
இந்தியாவில் நீதித்துறைக்கும் பிஜேபி அரசுக்கும், குறிப்பாக அமித் ஷாவுக்கும் இணைப்புப் பாலமாக (ப்ரோக்கர் என்றும் சொல்லலாம்) இருந்து வருபவர் ஒரு தமிழர் என்பது நமக்கெல்லாம் கூடுதல் பெருமை.
அந்த தலைமை ப்ரோக்கரின் பெயர் கிருஷ்ணமூர்த்தி. நீதித்துறையின் முதன்மை ப்ரோக்கராக உருவாகி கோலோச்சுவதால், தற்போது இவரை ஜுடிஷியல் கிருஷ்ணமூர்த்தி என்றே அழைக்கிறார்கள்.
இவர் காஞ்சிபுரம் சங்கர மடத்தில் சாதாரணமாக சுற்றிக் கொண்டிருப்பார். அப்போது, ஜெயேந்திரரை பார்க்க, கண்ணன் என்பவர் வருகிறார். அந்த கண்ணன் யாரென்றால், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த கேஜி.பாலகிருஷ்ணனின் வீட்டில் பணியாற்றி வந்த ஒரு ப்யூன். அந்த கண்ணனின் மூலம், கேஜி பாலகிருஷ்ணனின் அறிமுகம் கிருஷ்ணமூர்த்திக்கு கிடைக்கிறது.
அதன் பிறகு, தலைமை நீதிபதியாக சதாசிவம் வந்த பிறகு, கிருஷ்ணமூர்த்திக்கு சுக்கிர திசைதான். சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த சதாசிவம், இந்தியா முழுக்க அவரை விட மூத்தவர்களாக இருந்த 20 நீதிபதிகளை ஓவர்டேக் செய்து, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகாமலேயே நேரடியாக உச்சநீதிமன்றம் சென்றார்.
குஜராத்தில் சோராபுதீன் சேக் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்ட விவகாரத்தில் அமித் ஷா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் நேரில் பார்த்த சாட்சியாக இருந்த துள்சிராம் பிரஜாபதி என்பவரும் மற்றொரு என்கவுண்டரில் கொல்லப்பட்டார். இதற்காக அமித் ஷா மீது புதிய வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது.
2013ம் ஆண்டில் சதாசிவம் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது அவர் மீதான இரண்டாவது எப்ஐஆரை ரத்து செய்ய வழக்கு தாக்கல் செய்யப்பட்டு சதாசிவத்திடமே விசாரணைக்கு வருகிறது. துள்சிராம் பிரஜாபதி கொலை செய்யப்பட்டது, ஏற்கனவே இருக்கும் வழக்கின் தொடர்ச்சிதான். அதனால் தனியாக எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டியதில்லை என்று வினோதமான ஒரு தீர்ப்பை வழங்கினார் சதாசிவம். சோராபுதீன் சேக்கும், துள்சிராம் பிரஜாபதியும் ஒரே நாளில் கொல்லப்படவில்லை.
சோராபுதீன் சேக், கொல்லப்பட்டது 26 நவம்பர் 2005. நேரில் பார்த்த சாட்சி துள்சிராம் பிரஜாபதி கொல்லப்பட்டது 28 டிசம்பர் 2006. இந்த இரு கொலைகளையும் எப்படி ஒரே எப்ஐஆரில் விசாரிக்க முடியும் ? ஏன் விசாரிக்க வேண்டும் ? குற்றவியல் நடைமுறைச் சட்டத்துக்கு நேர் முரணான தீர்ப்பல்லவா இது ? சதாசிவம் ஏன் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கினார் ?
சதாசிவத்தின் இந்த தீர்ப்பு, பல தீர்ப்புகளுக்கும், குற்றவியல் நடைமுறைச் சட்டத்துக்கும் நேரெதிரானது, முரணானது என்று கிரிமினல் சட்டம் தெரிந்த வழக்கறிஞர்கள் குரல் கொடுக்கலாம். அவர்களைப் பார்த்து ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன்.
நீங்களா கவர்னர் போஸ்ட் வாங்கிக் குடுப்பீங்க ?
இந்தத் தீர்ப்புக்கு பிறகு, அமித் ஷாவோடு ஜுடிஷியல் கிருஷ்ணமூர்த்தி மிகுந்த நெருக்கமாகி விடுகிறார். நீதித்துறை தொடர்பான அமித் ஷாவின் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுவதையே தனது தலையாய கடமையாக கருதி இன்று வரை செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். மும்பை நீதிமன்றத்தில், அமித் ஷா நீதிபதி லோயாவுக்கு பிறகு வந்த மற்றொரு நீதிபதியால் எவ்வித விசாரணையுமின்றி, விடுவிப்பு செய்யப்பட்டதன் பின்னணியிலும் இருப்பவர் ஜுடிஷியல் கிருஷ்ணமூர்த்தியே.
இதற்கு பிரதிபலனாக, அமித் ஷா பரிந்துரையில் திருப்பதி தேவஸ்தான நிர்வாகக் குழுவில், ட்ரஸ்ட் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார் ஜுடிஷியல் கிருஷ்ணமூர்த்தி.
இரு கொலை வழக்குகளில் இருந்து தன்னைக் காப்பாற்ற உதவி செய்த ஒரு நீதித்துறை ப்ரோக்கருக்கு அமித் ஷா செய்த கைமாறு இவ்வளவுதானா என்ற கேள்வி எழும்.
கும்பகோணத்தை சொந்த ஊராக கொண்ட, வைத்தியநாதன் கிருஷ்ணமூர்த்தி, சங்கர மடத்தில் எடுபிடியாளாக சுற்றிக் கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தி, 100 கோடி முதலீட்டில், ஏதெனா எம்ரா பவர் ப்ரைவேட் லிமிட்டெட் என்ற மின் உற்பத்தி நிறுவனத்தில் இயக்குநராக இணைகிறார். இந்த நிறுவனம் புதுதில்லியில் இருந்து செயல்பட்டு வருகிறது. இதில் பெரும்பான்மை பங்குதாராக இணைந்துள்ளார் ஜுடிஷியல் கிருஷ்ணமூர்த்தி.
சென்னை நீலாங்கரையில் மேலும் ஐந்து புதிய நிறுவனங்களையும் தொடங்குகிறார் ஜுடிஷியல் கிருஷ்ணமூர்த்தி.
1) ட்ரைபவர் என்டர்பிரைசஸ் லிமிட்டெட், 2/569, சான்டி நூக், சிங்காரவேலன், முதல் மெயின் தெரு, சின்ன நீலாங்கரை, சென்னை.115
2) ட்ரைபவர் எனர்ஜி ப்ரைவேட் லிமிட்டெட், 2/569, சான்டி நூக், சிங்காரவேலன், முதல் மெயின் தெரு, சின்ன நீலாங்கரை, சென்னை.115
3) ட்ரைபவர் டெக்னாலஜிஸ் ப்ரைவேட் லிமிட்டெட், 2/569, சான்டி நூக், சிங்காரவேலன், முதல் மெயின் தெரு, சின்ன நீலாங்கரை, சென்னை.115
4) ட்ரைபவர் இன்வெஸ்ட்மென்ட் ப்ரைவேட் லிமிட்டெட், 2/569, சான்டி நூக், சிங்காரவேலன், முதல் மெயின் தெரு, சின்ன நீலாங்கரை, சென்னை.115
4) ட்ரைபவர் ப்ராப்பர்டீஸ் ப்ரைவேட் லிமிட்டெட், 2/569, சான்டி நூக், சிங்காரவேலன், முதல் மெயின் தெரு, சின்ன நீலாங்கரை, சென்னை.115
இந்த மூன்று நிறுவனங்களிலும் இயக்குநர்கள் மூவர். 1) சுப்ரமணியன், 2) வெங்கடேசன் லட்சுமி நாராயணன், 3) குருசாமி மதுராம்பாள்.
ஜுடிஷியரி கிருஷ்ணமூர்த்தியின் மனைவி பெயர் அனுராதா சுப்ரமணியன். இவர் கனடா நாட்டின் குடிமகள்.
இவர் தந்தை பெயர் சுப்ரமணியன். தாயார், மதுராம்பாள். இவர்கள் இருவரும்தான் நான்கு நிறுவனங்களிலும் இயக்குநர்கள். மூன்றாவது இயக்குநர்வெங்கடேசன் லட்சுமி நாராயணன், கிருஷ்ணமூர்த்தியின் சகோதரி மங்களம் என்பவரின் மகன்.
மொத்தத்தில் இது ஒரு குடும்ப நிறுவனம் என்று வைத்துக் கொள்ளுங்களேன். சாதாரணமாக சங்கர மடத்தில் எடுபிடியாக இருந்த ஜுடிஷியல் கிருஷ்ணமூர்த்தி இன்று மிகப் பெரும் தொழிலதிபர். அமித் ஷாவின் மகன் எப்படி வளர்ச்சி பெற்றாரோ, அதைப் போலவே பிரம்மாண்டமான வளர்ச்சி.
இந்த நான்கு நிறுவனங்களின் மொத்த டர்ன் ஓவர், 100 கோடியைத் தாண்டியுள்ளது.
மதுரையைச் சேர்ந்த ருக்மணி மில்ஸ் என்ற நிறுவனம், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் கடன் வாங்கியிருந்தது. கடனை திருப்பிச் செலுத்தாததால் வட்டியோடு சேர்ந்து கடன் 68 கோடி ரூபாய் நிலுவையில் இருந்தபோது, அந்த நிறுவனத்துக்கு சொந்தமாக, சென்னை ஆபீசர்ஸ் ட்ரெயினிங் அக்காடமியின் அருகே உள்ள 6.8 ஏக்கர் நிலத்தை எஸ்பிஐ ஏலத்துக்கு விடுகிறது. முதலில் ஏலம் 2014ல் விடப்பட்டபோது, 90 கோடி விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அப்போது யாரும் ஏலத்துக்கு வரவில்லை என்ற காரணத்தால், 2015ம் ஆண்டில் 80 கோடிக்கு ஏலம் விடப்படுகிறது.
எந்த பெரிய நிறுவனமும் இந்த ஏலத்தில் பங்கெடுக்க முடியாத வகையில், ஜுடிஷியல் கிருஷ்ணமூர்த்தி வங்கி அதிகாரிகளோடு சேர்ந்து தடுத்ததாகவும் கூறப்படுகிறது. இறுதியாக, வங்கிக்கு வர வேண்டிய வெறும் 69 கோடிக்கு மட்டுமே இந்த நிலத்தை ஜுடிஷியல் கிருஷ்ணமூர்த்தி தனது ட்ரைபவர் என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பெயரில் வாங்குகிறார்.
இந்த தொகையை செலுத்த வெள்ளையில் பணம் வேண்டுமல்லவா ? ட்ரைபவர் நிறுவனத்துக்கு கடன் அளித்து உதவி செய்த நிறுவனங்கள் மூன்று. இந்தியா முழுக்க அறியப்பட்ட நிறுவனங்கள்தான். ஜிஎம்ஆர், டிஎல்எப் மற்றும் அதானி நிறுவனங்கள் ட்ரைபவர் நிறுவனத்துக்கு கடன் வழங்கி உதவி செய்துள்ளன.
ஒரு தமிழன் வெறும் ப்ரோக்கர் வேலை செய்தே எப்படி உயர்ந்த பதவியை அடைந்தான் என்பது, ஒவ்வொரு தமிழனுக்கும் உத்வேகமாக இருக்க வேண்டும்.
நீதித்துறை ப்ரோக்கர் வேலையைத் தவிர்த்து, சதாசிவத்தின் மூலமாக, எடப்பாடி பழனிச்சாமியோடு நெருக்கமான தொடர்பில் இருக்கிறார் ஜுடிஷியல் கிருஷ்ணமூர்த்தி. நீதிபதியாக வேண்டும் என்று ஆசையுள்ள வழக்கறிஞர்கள் ஜுடிஷியல் கிருஷ்ணமூர்த்தியை அணுகினால் பெரும் உரிய கிடைக்கும்.
இந்த ப்ரோக்கரைப் பற்றி அறிந்தோ அறியாமலோ சென்னை உயர்நீதிமன்றத்தில் நேர்மையான நீதிபதி என்று பெயரெடுத்த ஒரு நீதிபதி, நீலாங்கரை, வெட்டுவாங்கேணியில் உள்ள தனது வீட்டை, ஜுடிஷியல் கிருஷ்ணமூர்த்தியின் ட்ரைபவர் நிறுவனத்துக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.
நேர்மையான நீதிபதியாயிற்றே, தெரியாமல் கிருஷ்ணமூர்த்தியின் வலையில் விழுந்திருப்பார் என்று நினைத்தால், அந்த வீட்டை, அந்த நீதிபதி, தனது சொத்துப் பட்டியலில் காட்டவேயில்லை. கிருஷ்ணமூர்த்தி, வாடகைக்கு இருக்கிறோம் என்ற பெயரில், அந்த வீட்டை புது வீடு போல புதுப்பித்து உள்ளார்.
அந்த நீதிபதி சதாசிவத்துக்கு நெருக்கம் என்பதுதான் அதிகபட்சமாக சொல்லக் கூடிய தகவல்.
இந்த நிலையில்தான் இந்தியாவில் நீதித்துறை இருக்கிறது. மிக மிக கவலையளிக்கக் கூடிய ஒரு சூழல். இந்தியாவின் உயர்நீதிமன்றங்களில் பெரும்பாலான நீதிபதிகள் ஆர்எஸ்எஸ் பின்புலம் உள்ள நீதிபதிகளால், சங் பரிவார் நீதிபதிகளால், காவி நீதிபதிகளால் நிரப்பப்படுவது இந்திய ஜனநாயகத்துக்கு எத்தகையதொரு ஆபத்து என்பதை எண்ணிப் பாருங்கள்.
இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும், வலிமையான இந்திய ஜனநாயகத்துக்கும் விடப்படும் சவால் அல்லவா அது ? இந்திய ஜனநாயகத்தின் அடித்தளத்தையே ஆட்டம் காணச் செய்யும் நடவடிக்கையல்லவா அது ?
இப்படிப்பட்ட ஆபத்தை தவிர்க்க மனசாட்சி உள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகள் என்ன செய்ய முடியும் ? பத்திரிக்கையாளர்களை சந்தித்து, மக்களிடம் நடப்பவற்றை வெளிப்படுத்துவதைத் தவிர அவர்களுக்கு வேறு என்ன வழி இருக்கிறது ?
நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட காலகட்டத்தில், இந்தியா முழுக்க, ஆயிரக்கணக்கானோர் சிறையில் விசாரணையின்றி அடைக்கப்பட்டனர். பலர் எங்கிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. அதற்கு எதிராக, பல்வேறு உயர்நீதிமன்றங்களில், ஹேபியஸ் கார்ப்பஸ் எனப்படும் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. சில உயர்நீதிமன்றங்கள், நெருக்கடி நிலையின்போது, அடிப்படை உரிமைகள் இல்லை என்று தீர்ப்பளித்தன. சில நீதிமன்றங்கள் அடிப்படை உரிமைகளை நெருக்கடி நிலையின்போது கூட ரத்து செய்ய முடியாது என்று தீர்ப்பளித்தன.
இந்த அத்தனை வழக்குகளின் மீதும் மேல் முறையீடு உச்சநீதிமன்றத்துக்கு சென்றது. நீதிபதிகள் பேக், சந்திரசூட், பகவதி, ஏஎன்.ரே மற்றும் எச்ஆர் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. பெரும்பான்மை தீர்ப்பின் அடிப்படையில், நெருக்கடி நிலை காலத்தில் அடிப்படை உரிமைகளை ரத்து செய்தது சரியே என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில் ஒரு நீதிபதியான பேக், அடிப்படை உரிமைகளை ரத்து செய்தது சரியே என்று எழுதிய தனது தீர்ப்பில் “சிறையில் அடைக்கப்பட்டவர்கள், நல்ல வசதிகளோடு, தரமான உணவு வழங்கப்பட்டு, ஒரு தாயின் அக்கறையோடு கவனித்துக் கொள்ளப்படுகிறார்கள்” என்று எழுதினார். தாயின் அக்கறையோடு என்ற அந்த வரி, இந்திரா காந்தியை மனதில் வைத்து எழுதியது என்பதை சொல்ல வேண்டியதில்லை.
ஆனால் எச்ஆர் கன்னா என்ற ஒரே ஒரு நீதிபதி, அடிப்படை உரிமைகளை, நெருக்கடி நிலை காலகட்டத்திலும் ரத்து செய்ய உரிமை இல்லை. அடிப்படை உரிமைகள் அரசியல் சாசனத்தின் முதுகெலும்பு. அதை எந்த நிலையிலும் ரத்து செய்ய முடியாத என்று தீர்ப்பெழுதினார். அவர் தீர்ப்பை பாராட்டி தலையங்கம் எழுதிய நியுயார்க் டைம்ஸ் பத்திரிக்கை, “இந்தியா மீண்டும் என்றாவது ஒரு நாள் ஜனநாயகத்துக்கு திரும்பினால், அன்று நீதிபதி எச்.ஆர்.கன்னாவுக்கு சிலை வையுங்கள்” என்று எழுதியது.
இந்திரா காந்தியை தாய் போல சிறைக்கைதிகளை பார்த்துக் கொள்கிறார் என்று எழுதிய இதயதுல்ல பேக் நீதிபதியை இந்திரா காந்தி அவரை விட மூத்தவர் மற்றும் எதிர்த்து தீர்ப்பு எழுதியவரான எச்ஆர்.கன்னாவை ஓரங்கட்டி விட்டு, தலைமை நீதிபதியாக்கினார்.
ஓய்வுக்கு பிறகு, சிறுபான்மை நல ஆணையத் தலைவராக்கினார். ஆனால் இன்று 38 ஆண்டுகள் கழித்து, நீதிபதி எச்ஆர்.கன்னா உயர்ந்து நிற்கிறார். இன்றும் நாம் அவரைப் பற்றி பேசுகிறோம். இதயதுல்லா பேக், வரலாற்றின் கருப்புப் பக்கங்களுக்குள் மறைந்து போய் விட்டார்.
தீபக் மிஸ்ராவும், வரலாற்றின் கருப்புப் பக்கங்களில்தான் மறைந்து போக உள்ளார். அவருக்கு எதிராக கலகக் குரலை உயர்த்திய, செல்லமேஷ்வர், ரஞ்சன் கோகோய், மதன் பி லோக்கூர் மற்றும் குரியன் ஜோசப் ஆகியோர் இந்தியாவின் ஜனநாயகத்தை வாழ்விக்க வந்த பரமாத்மாக்கள். தேவதூதர்கள். இவர்களுக்கு இந்தியா என்றென்றும் கடமைப்பட்டுள்ளது.
அந்த நாலு பேருக்கு நன்றி.
Uchi kudumi neethi manram.
This is the sangh parivar agenda
India will win
This is 100% false news.
Fantastic article…. no chance…. keep rocking…
hello shankar
congrats n salute to you hardcore efforts n research..continue ur good work..
Rp
hello shankarcongrats n salute to you hardcore efforts n research..continue ur good work..
Rp
Very good article and hopefully it will create awareness about our judicial system. 4 Amazing supreme court judges.
பிணம் தின்னும் கழுகுகள்
சவுக்கு, விக்கிப்பீடியாவில் படித்தேன், பேக் கன்னா குறித்த தங்களது பதிவு சரியே. தொடர்ந்து இது போன்ற பதிவை பதிக்கவும்
Sadasivam is also the reason for tamilnadu’s present situation. Let’s hope all will end smooth
இந்தியாவின் எல்லா நீதி மன்றங்களையும், தேர்தல் கமிஷன்களையும், மற்றும் அணைத்து துறைகளையும் தங்கள் காவி கூட்டத்தை வைத்து நிரப்பி கைக்குள் வைத்துக்கொண்டு அணைத்து கட்சி ஊழல்வாதிகளையும் அடிபணிய வைத்து மொத்த இந்திய நட்டையும் முழுங்குவதே இந்த காவி கூட்டத்தின் அவசரமான நோக்கம்.
I terribly feared about our democracy’s
நீதி பரிபாலனம் — ? நமக்கு நாமே தீர்ப்பு — புரோக்கர்கள் ஆதிக்கம் மற்றும் ஆக்கிரமிப்பு — நாடு – நல்ல நாடு … !!!
எல்லாம் சரி.
அந்த நாலு பேரின் திருவிளையாடல்கள் பற்றி எழுதவில்லை.???
கடந்த பல வருடங்களாக நாங்கள் இதையே தான் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறோம். ராணுவமும் காவிமயமே..
Wonderful article.
அருமையான கட்டுரை.
super artical
super artical
i appriciate the exhaustve and informative work done by savkku.
Thankalathu katturaiyil neeththiyaralkalmeethaana oozhal kutrasaattukalai veliyittatharkaaka oyvu eruvatharku mun siraikku anuppapatta karnan patri ethuvum kurippidaathathu yeno?
Evlo information chance eh illa
மிகச் சிறந்த பணி, இந்நாட்டில் ஜனநாயகம் நிலைத்திருக்க போராட வேண்டிய காலகட்டம் இது. நன்றி.
Shocking. Good work sir.
Excellent article by you Shankar with facts , Take care of yourself . After reading this I am really worried about judicial system .
அத்தியாயம் அத்தியாயமாக ஊழல் நாறும் இந்த ஆட்சி உடனடியாக அகற்றப்பட வேண்டும்
Iam appreciate your continued work mr.sankar thank you
கொடுமையிலும் கொடுமை , அது உச்ச நீதிமன்ற அல்ல பண்டாரச்சேரி மடம். Favouritism down down, nepotism down down, cronyism down down…
P S வீரப்பா வசனம் தான் ஞாபகத்திற்கு வருகிறது (நாடும் நாட்டு மக்களும் நாசாமாக போகட்டும்)
படித்தபிறகு வருத்தமும் பயமுமே வருகிறது..
Absolutely
Your detailed report on the 4SC judge matter is amazing. Keep up the good work and soon start your own print/digital journal
ஒரு டுபாக்கூர் கிட்ட உச்ச நீதி …. விளங்கிரும் நாடு