தோழர் டெங் கோர்பசாவை முட்டாள் என்று வர்ணித்தார். அதென்னய்யா கிளாஸ்நஸ்ட், ஜனநாயகம் எல்லாம், போட்டுத் தள்ளிவிட்டு செய்யவேண்டியதை செய்வதுதானே, முந்தி பிந்தியெல்லாம் கிடையாதா என்று வாதிட்டார் அவர்.
தியனென்மென் சதுக்கத்திற்கு டாங்கிகளை அனுப்பி நூற்றுக்கணக்கில் மாணவர்களைக் கொன்றொழித்து மூன்று தசாப்தங்களாகிவிட்டது, இன்னும் அங்கே அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன. பொருளாதாரம் முன்னேறிக்கொண்டிருக்கிறது, அமெரிக்காவே பயப்படுகிறது, பேசாமல் ரொட்டித் துண்டுகளை பொறுக்கிக்கொண்டு போங்க என்று மிரட்டுகிறது சீனக் கம்யூனிஸ்ட் கட்சி.
ஜனநாயகத்தை முதலில் உறுதி செய்வோம் அதன் பின் பார தூர பொருளாதார மாற்றங்கள் என்ற கோர்பசாவ் குப்பைக்கூடையில். சோவியத் யூனியனும் சின்னாபின்னமாகிவிட்டது.
அப்படியானால் டெங் செய்ததுதான் சரியா? கோர்பசாவின் முயற்சிகளுக்கு பொருளே இல்லையா?
வில்லியம் டாப்மேன் என்ற குறிப்பிடத் தகுந்த அமெரிக்க அரசியல் விமர்சகர் எழுதிய கோர்பசேவ் வாழ்க்கை வரலாறு இப்பொது வெளியாகியிருக்கிறது. அது பல உண்மைகளை நமக்கு தெரியப்படுத்துகிறது.
பொதுவாக மார்க்சீயர்கள் தங்களை அறிவு ஜீவிகள் என்று காட்டிக்கொள்ள முயல்வார்கள். ஆனால் அவர்கள் வரலாற்றிலிருந்து எதையும் கற்றுக்கொள்வதில்லை என்பதில் உறுதியாக இருப்பார்கள். இத்தனை பின்னடைவு நிகழ்ந்தும், ஸ்டாலினீயமே நம்மை முட்டு சந்தில் கொண்டுநிறுத்தியிருக்கிறது எனும் புரிதல் அவர்களுக்கு வரவில்லை
எத்தனை பகடி செய்யுங்கள், ஆழமாக ஆராய்ந்து உண்மைகளை அவர்கள் முன் வீசுங்கள். கண்டுகொள்ளாமலே சென்றுவிடுவார்கள். அவர்கள் உலகத்திற்குள் வாழ்வது அவர்களுக்கு வசதி. கசப்பான யதார்த்தங்களை ஏற்றுக்கொண்டால் அதற்கேற்றாற்போல் தங்கள் அணுகுமுறைகளை மாற்றிக்கொ:ள்ளவேண்டுமே! அதற்கு அவர்கள் தயாரில்லை.
ஆனாலும் என்போன்ற அமைப்பு சாரா மார்க்சீயர்களுக்கு அவர்களிடம் ஒரு வழி உரையாடல் நடத்துவதைத் தவிர வேறு என்ன செய்யமுடியும்? டாப்மேன் கண்டறிந்தவற்றின் அடிப்படையில் சில செய்திகள் தோழர்களின் பார்வைக்கு இங்கே.
பெரும் வல்லரசாக, உலகப் போர் பேரிழப்புக்களுப் பிறகும் தன்னை தூக்கி நிறுத்திக்கொண்டுவிட்ட ஓர் நாடாக பார்க்கப்பட்டது ஸ்டாலினின் சோவியத் யூனியன். ஜனநாயகம் மறுக்கப்பட்டது ஆனாலும் மக்கள் நிம்மதியாகவே வாழ்கின்றனர் என்று பொதுவாகக் கருதப்பட்டது. உண்மையில் அங்கு ஏகப்பட்ட சிக்கல், குறிப்பாக விவசாயிகள் நிலை பரிதாபகரமானது.
கூட்டுப் பண்ணைகள் உருவான போதே சொல்லொணாக் கொடுமைகள். மனம்போன போக்கில் குலாக்குகள் அடையாளம் காணப்பட்டு அவர்களது உடைமைகள் பறிக்கப்பட்டன. வெளியேற்றப்பட்டனர். பனியில் உறைந்தவர் பலர். அக்கட்டத்தில் பட்டினியாலும் பல்வேறு வகை நோய்களுக்கும் பலியானவர்கள் 40 இலட்சத்திலிருந்து ஒரு கோடி வரை இருக்கலாம் என கணக்கிடப்பட்டிருக்கிறது.
கோர்பசாவின் மனைவி ரெய்சாவின் தாய்வழிப் பாட்டனார் கூட அப்போது இழுத்துச் செல்லப்பட்டவர்தான் திரும்பவே இல்லை.
அதன் பின்னர் 1937ல் களையெடுப்பதாகச் சொல்லி அரசு மீண்டும் பல்லாயிரக்கணக்கில் மக்களை கொன்று குவித்தது அல்லது சிறையிலடைத்தது. இரண்டுகோடிப் பேர் சிறப்பு முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். அங்கே கடும் வேலை, ஆனால் கூலி இல்லை. கூடவே சித்திரவதை. கோர்பசாவின் தாய்வழிப் பாட்டனார் தன் பகுதியிலிருந்து விளைபொருள்களை அரசு கிடங்குகளுக்கு அனுப்பும் பொறுப்பில் இருந்தவர், அவர் மீதும் பொய்க் குற்றச்சாட்டுக்கள், முகாம்களுக்கனுப்பப்பட்டு 14 மாதங்களுக்குப் பின் திரும்பிவந்தார். ஆனால் தனது அனுபவங்களைப் பற்றி தன் குடும்பத்தாருடன் கூட அவர் பகிர்ந்துகொள்ளவே இல்லை.
கூட்டுப் பண்ணையின் போதும் சரி, களையெடுப்பின்போதும் சரி, மேலிடத்திலிருந்து உத்திரவு வருமாம் இப் பகுதியில் இவ்வளவு பேர் அகற்றப்படவேண்டும் என. அதையொட்டி பொறுப்பாளர்கள் தங்கள் மனம்போனபடி யாரை வேண்டுமானாலும் கைது செய்து வெளியேற்றுவார்கள். அவர்களுக்கான இலக்கை அடையாவிட்டால் அவர்களுக்கே அந்த கதி தானே. எனவே நல்லவர்கள் கூட தாங்கள் தப்பிக்கவேண்டி அப்பாவிகளையெல்லாம் கொலைக் களங்களுக்கு அனுப்பியவண்ணமிருந்தனர். ரேசா கோர்பசாவின் தாத்தா ட்ராட்ஸ்கி ஆதரவாளர் என்ற புகாரில்தான் இழுத்துச் செல்லப்பட்டார். அவருக்கோ ட்ராட்ஸ்கி என்றால் யாரென்றே தெரியாது.
எந்த அளவு வாழ்க்கை மோசமாக இருந்தது என்பதை இரு வேறு நிகழ்வுகள் மூலம் விளங்கிக்கொள்ளலாம்: 1937 களையெடுப்பின் போது அப்பாவி நிர்வாகிகள் பலர் இழுத்துச் செல்லப்பட்டபோது மக்கள் நல்லா வேணும்யா, எங்களை எவ்வளவு பாடுபடுத்தினே என்று ரசித்திருக்கிறார்கள்
இரண்டாவது உலகப்போரின்போது ஹிட்லர் வெற்றி பெறட்டும், இந்த பாழாய்ப்போன போல்ஷிவிக்குகள் ஒழியட்டும் என்று மக்கள் நினைத்திருக்கின்றனர்.
கூட்டுப்பண்ணை, களையெடுப்பு, பஞ்சம் என தொடர்ந்து பெரும் சோகமானது வாழ்க்கை.
இப்படியெல்லாம் கொடுமைகள் தொடர்ந்தால், வாழ்க்கை அநித்தியமானால் எப்படி விவசாயிகள் உழைப்பார்கள், விளைச்சல் எப்படிப் பெருகும்? விளைவு விவசாயம் சோவியத் யூனியனுக்கு தொடர்ந்து பெரும் தலைவலியாக இருந்தது. வெளிநாட்டிலிருந்து பெருமளவில் உணவு தானியங்களை இறக்குமதி செய்ய நேரிட்டது.
ஸ்டாலின் இருந்தவரை மிரட்டி, சவுக்கை வீசி, துப்பாக்கியைக் காட்டித் தான் ஏதோ ஓரளவிற்கு விளைச்சலை உறுதி செய்யமுடிந்தது. குருஷ்சாவ் பதவியேற்றபோது விளைபொருள் இருப்பும் கால்நடைகளின் எண்ணிக்கையும் ஜார் காலத்தில் இருந்ததைவிட குறைவு. இப்படியே தொடரமுடியாது என்றுணர்ந்த குருஷ்சாவ் பண்ணைகளின் விதி முறைகளில் சில மாற்றங்களைக் கொண்டுவந்தார்.
வரிகளையும், வலுக்கட்டாயமாக அரசுக்கு செலுத்தவேண்டியிருந்த அளவையும் குறைத்து, சந்தையில் நேரடியாக விற்று இலாபம் பெற உதவினால், விவசாயிகள் கூடுதலாக விளைவிப்பார்கள் என உணர்ந்து, குருஷ்சாவ் அதற்கேற்றாற்போல் உத்திரவுகளை பிறப்பித்தார்.
எல்லாவற்றும் மாஸ்கோவை எதிர்பாராமல் தாங்களாகவே முடிவெடுக்கும் சுதந்திரமும் கூட்டுப்பண்ணைகளுக்களிக்கப்பட்டது. தரிசாகக் கிடந்த நிலங்களில் பயிரிட என பெரும் திட்டம் ஒன்றும் உருவாக்கப்பட்டு ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் கிராமங்களுக்கு அனுப்பப்பட்டனர். விளைச்சலும் கணிசமாக உயர்ந்தது. ஆனால் இராணுவத்துக்கும் விண்வெளி ஆராய்ச்சிக்கும் குறைவான நிதிஒதுக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.
தவிரவும் அறுவடைகளை எடுத்துச் செல்ல போதுமான போக்குவரத்து வசதி இல்லை, தரிசல் நிலங்களில் பயிரிடும் முயற்சி மண் வறட்சி காரணமாக சிலபகுதிகளில் படு தோல்வியுற்றது, குருஷ்சேவ் புகார்களை செவிமடுக்க மறுத்தார் தான் சொன்னபடியே எல்லோரும் கேட்கவேண்டும் என வலியுறுத்தினார்.
அறுவடை உயர்ந்தும் பயனில்லை என்றாகி பஞ்சத்திலிருந்து மக்களைக் காக்க ஆஸ்திரேலியாவிலிருந்தும் அமெரிக்காவிலிருந்தும் இறக்குமதி செய்யநேரிட்டது.
பின்னர் பிரெஷ்னேவ் காலத்தில் பத்தாண்டு திட்டம். வல்லுநர்கள் கடுமையாக உழைத்து உருவாக்கப்பட்டது பெருமளவில் நிதி ஒதுக்கப்பட்டது, ஆனால் எல்லாம் வீண். ஏனெனில் அனைத்திற்கும் மாஸ்கோவிலிருந்து முன் அனுமதி வேண்டும். எந்த முடிவையும் பண்ணைகள் தாங்களாக எடுக்கமுடியாது.
இந்நிலையிலேயே கோர்பசாவ் பொதுச் செயலராகிறார். அவரும் ஒரு கிராமத்திலிருந்து வந்தவர்தான். கூட்டுப்பண்ணை சிக்கல்கள் நன்றாகவே தெரியும். அவர் பாட்டனார் எப்படியெல்லாம் கடுமையாக உழைக்கவேண்டியிருந்தது என்பதை நேரடியாகப் பார்த்தவர். .
பல்வேறு இடர்ப்பாடுகளை சந்தித்த பின்னரே பட்டப்படிப்பிற்காக மாஸ்கோ செல்கிறார். அங்கு மற்றவரைப் போல் இவரும் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து, தனது திறமைகளின் காரணமாக மேலிடத்திடம் நன் மதிப்புபெற்று கம்சோமால் நிர்வாகியாகி ஸ்டாவ்ரபல் பகுதிக்குச் செல்லும்போதுதான் பல உண்மைகள் அவருக்குத் தெரியவருகிறது.
மலைமீதிருந்து அடிவார கிராமமொன்றை பார்த்தபோது அவர் மிகவும் மனம் நொந்ததாக தன் சுயசரிதையில் கோர்பசாவ் எழுதுகிறார்: சாலைகள், சாலைகளா அவை, அவ்வளவு மோசம்…வெறிச்சோடிக்கிடந்தது…குடிசைகளிலிருந்து வெளியேறும் புகையை வைத்துக்கொண்டு உள்ளே மக்கள் இருக்கிறார்கள் என ஊகிக்கலாம்…மற்றபடி நடமாட்டம் ஏதுமே இல்லை…மயான அமைதி அவ்வப்போது எழும் நாய்களின் குரைப்பொலியைத் தவிர..ஏதோ பிளேக் வந்து ஒட்டுமொத்த கிராமத்தையும் வாரிக்கொண்டு சென்றுவிட்டதோ என்று எண்ணத்தோன்றிற்று. என்ன வாழ்க்கைடா இது…இப்படிப்பட்ட சூழலில் ஏன் இளைஞர்கள் கிராமங்களிலிருந்து எப்படியாவது தப்பி நகரங்களுக்குப் போய்விடவேண்டும் என்று நினைக்கமாட்டார்கள்? இந்தத் தனிமை, வறுமை, வாழ்நாள் முழுதும் இதிலேயே கழிப்பதென்றால், அப்படிப்பட்ட வாழ்க்கைதான் எதற்கு?
ஸ்டவ்ரபலில் இருந்தபோது கோர்பசாவ் கட்டுப்பாடு இயந்திரம் எப்படி இயங்கியது என்பதை நேரடியாகப் பார்த்தார். அவர்கள் உத்திரவு பிறப்பிக்கவில்லையெனில் மாடு கன்று போடாது, புல் கூட முளைக்காது என்று அவர்கள் நினைத்தார்கள் என்று மனம் வெதும்பிக் குறிப்பிடுகிறார் அவர்.
அதாவது போல்ஷிவிக் புரட்சிக்கு நாற்பதாண்டுகளுக்குப் பின்னர் இப்படி ஓர் அவல நிலை என்றால் என்னதான் சாதித்தார்கள் புரட்சியாளர்கள்? ரெய்சா கோர்பசேவ் டாக்டர் பட்டம் பெறவென எழுதிய ஆய்வில், கூட்டுப்பண்ணைகளின் விளைவாய் சமத்துவம் வந்துவிடவில்லை பிரச்சினைகள் இருக்கின்றன என்கிறார். அதாவது நூலகங்கள், முதியோர் இல்லங்கள், குழந்தை காப்பகங்கள் இப்படியாக கிராம வாழ்க்கை வியத்தகு முன்னேற்றங்களைக் கண்டிருக்கிறது என்பதெல்லாம் வெற்றுப் பிரச்சாரம் – உலகை ஏமாற்ற, என்று ரெய்சா மறைமுகமாக குறிப்பிடுகிறார்.
இவ்வாறு கணவன், மனைவி இருவருமே கிராமப்புற நிலையினை தெளிவாக அறிந்திருந்தனர். கோர்பசாவின் க்ளாஸ் நஸ்ட் (வெளிப்படைத் தன்மை) பெரிஸ்ட்ராய்கா (சீரமைப்பு) உருவாவதற்கு அவர்கள் பின்புலங்களும் ஒரு முக்கிய காரணம்.
நுகர்வோர் பொருட்களுக்கு எப்போதுமே பற்றாக்குறைதான் சோவியத் யூனியனில். டூத் பிரஷ், காலணிகள் என அனைத்துவித அன்றாடத்தேவைகளை தயாரிக்கும் நிறுவனங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கின.
ஆயிரக்கணக்கில் அரசு நிர்வாகிகள் மேலிட உத்திரவு சரிவர நிறைவேற்றப்படுகிறதா என்பதை கண்கொத்திப்பாம்பாக கவனித்து வந்தனர். ஆனால் கீழ்மட்டத்திலுள்ள சிக்கல்களை மென்றுவிழுங்கியே மேலிடத்திற்கு தெரிவித்தனர்.
நாம் ஏதோ சொல்லப்போய் அது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு நம் வேலைக்கே ஆபத்துவந்துவிட்டால் என்ன செய்வது என்ற அச்சம். அனைவரும் உண்மை பேசுவதை தவிர்த்தனர். எல்லாம் சூப்பர் என்று சொல்லிவிட்டால் எவருக்கும் பிரச்சினை இல்லையே.
(நான் இண்டியன் எக்ஸ்பிரஸ் அலுவலகத்தில் ஒரு கட்டத்தில் செய்தியோடு விற்பனைப் பிரிவிற்கும் பொறுப்பாக இருந்தேன். ஏகப்பட்ட கோளாறுகள். மாதந்தோறும் சந்தாதாரர் எண்ணிக்கை கூடுவதாக அறிக்கை சமர்ப்பிப்பார்கள். ஆனால் விற்பனை கூடியிருக்காது. என்னவென்று ஆராய்ந்தால் ஏறிய அளவு பலர் நிறுத்திவிட்டதாக கணக்கு காண்பிப்பார்கள்.
இது டகல்பாஜி வேலை என்று நிர்வாகிகளைக் கண்டித்தபோது குழும விற்பனைப் பிரிவின் தலைவர் பக்கம் கைகாட்டினார்கள். அவரோ, “இப்டித்தான் சார் செஞ்சாகணும்..அடுத்த வருஷம் கூட்டிடுவோம்னு சொல்லணும். இல்லாட்டி எங்க வேலை என்னாகும்…நீங்க ஒண்ணும் கண்டுக்காதீங்க,” என்றார். அதையும் மீறி நிர்வாகத்திடம் சொல்ல முயன்றேன் எடுபடவில்லை. அப்பிரிவின் பொறுப்பு என் கைவிட்டுப் போயிற்று! தொடர்ந்து விற்பனை சரிந்தே வந்திருக்கிறது. இப்படி ஒரு நிலை ஒட்டு மொத்த சோவியத் யூனியனிலும் நடந்தால் என்னவாகும் என நீங்கள் கற்பனை செய்துகொள்ளலாம்.)
ஸ்டாலின் காலத்திலிருந்தே கன ரக தொழிற்சாலைகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்தது. பிரம்மாண்ட இயந்திரங்கள், மற்ற தொழிற்சாலைகளில் பயன்படுத்த, குறிப்பாக பாதுகாப்பு சாதனங்கள் உற்பத்தியில் இப்படியாக கன ரக ஆலைகளின் பயன்பாடு. பொதுமக்களின் அன்றாட உபயோகத்திற்கான பொருட்களை தயாரிக்கும் மற்றவகை தொழிற்சாலைகள் (light industry) அவை மாற்றாந்தாய் பிள்ளைகளாக நடத்தப்பட்டன.
மேலும் தரத்தைப் பற்றி கவலைப்படாமல் உற்பத்தியை அதிகரிப்பதிலேயே கவனம் செலுத்தப்பட்டது, விளைவு சந்தையில் எவருக்கும் பயனில்லாத பொருட்கள். எவரும் மேலிடத்திற்கு உண்மையைச் சொல்லுவதே இல்லை. நிரந்தர பற்றாக்குறை.
இத்தகைய சூழலில்தான் பெரிஸ்ட்ராய்கா எனப்படும் மறு சீரமைப்பினை அறிமுகப்படுத்தினார் கோர்பசாவ். விவசாயத்திலும் சரி தொழிற்சாலைகளிலும் சரி துப்பாக்கிகளைப் பயன்படுத்தாமல், மிரட்டாமல், ஊக்கத்தொகை அளித்தல், மற்றும் சுதந்திரம், தன்னாட்சி, இவ்வழியில் உற்பத்தியை அதிகப்படுத்தவும், தரமான பொருட்கள் போதிய அளவில் மக்களுக்குக் கிடைக்கச் செய்யவும் பல் வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டார்.
போதிய அளவு சுதந்திரம் கொடுக்கப்படவில்லை. பெரிஸ்ட்ராய்கா எப்படி செயல்படுகிறது என்பதை கண்காணிக்கவில்லை. மேலும் பெட்ரோலிய பொருட்களின் விலை கடும் வீழ்ச்சியடைந்தது. அந்நியச்செலாவணி ஈட்டி, உயர் ரக இயந்திரங்களை இறக்குமதி செய்து, மக்கள் தேவைக்கான பொருட்களை உற்பத்தி செய்யலாம் என்ற திட்டம் நொறுங்கியது.
பெரிஸ்ட்ராய்கா படு தோல்வி. நுகர்வோர் பொருட்கள் தளத்தில் இருந்த பற்றாக்குறை அத்தியாவசியப் பொருட்களையும் பீடித்தது. விவசாயம் மேலும் மேலும் அடி வாங்கியது.
ஆனால் எந்தச் சூழலிலும் மக்கள் முழுமனதுடன் செயல்படுவார்களேயானால், எதிர்காலத்தை முன்னிட்டு நிகழ்காலத்தை சில தியாகங்களை செய்ய முன்வந்தால் நிச்சயம் மேலே சொல்லப்பட்ட சிக்கல்களையும் தீர்த்திருக்கமுடியும். ஆனால் அத்தகைய நிலையினை எட்ட மக்களின் நம்பிக்கையினை அல்லவா முதலில் பெறவேண்டும்.
அரசு நமக்காக செயல்படுகி’றது. அதனை மீறிய பல்வேறு காரணிகளால்தான் நாம் அவதிப்படுகிறோம். நாம் கடுமையாக உழைத்தால் எதையும் சாதிக்கமுடியும் என்று மக்கள் நினைக்கவேண்டுமே.
அத்தகைய நம்பிக்கை உருவாகும் வகையில் கோர்பசாவ் செயல்படவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. அவர் ஏதோ மாபெரும் புரட்சியாளர்/சீர்திருத்தச் செம்மல் என்று சித்தரிக்க முயலும் மேற்கத்திய எழுத்தாளர்கள், நோக்கர்கள் இதைத்தான் புரிந்துகொள்ள மறுக்கின்றனர்.
தொடக்கத்தில் அவரது கிளாஸ்நஸ்டுக்கு பெரும் வரவேற்பிருந்தது. சுதந்திரக் காற்றை சுவாசிப்பதே புதிய அனுபவமாக இருந்தது., இலக்கியம் மற்றும் திரைத் துறையில் நினைத்ததை எழுதலாம், சொல்லலாம் என்ற நிலை உருவானதால் அனைவரும் ஆனந்தக்கூத்தாடினர். கட்சி மேல்மட்டத்தில் சில முணுமுணுப்புக்கள் இருந்தாலும், எல்லாம் கட்டுக்குள் இருக்கும், கைமீறிப்போகும்போது நாம் தலையிட்டு சரிசெய்துவிடலாம் என்ற நம்பிக்கை மற்றவர்களுக்கு இருந்ததால், கோர்பசாவ் மேலும் மேலும் ஸ்டாலினீயக் கட்டுமானத்தை தகர்க்கமுடிந்தது.
ஆனால் பல தளங்களிலும் அச்சம், அலட்சியம், மெத்தனம் போன்ற குணாதிசயங்கள் புரையோடிப்போயிருந்தன. ஏதாவது சொல்லப்போய் பின்னர் நமக்கு ஆபத்து வந்தால் என்ற மனநிலை பாரதூரமாற்றங்களை அனுமதிக்கவில்லை.
சரி வெளிநாட்டு உதவியாவது கிடைக்காதா என்று ஏங்கினார் கோர்பசாவ். ஆயுதக் குறைப்பு செய்துகொள்கிறேன், அணுஆயுதங்களைக் கூட ஒழித்துவிடலாம். கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மீதான கட்டுப்பாட்டையும் விலக்கிக்கொள்கிறேன், உங்களுக்கெதிராக எவ்வித சதி நடவடிக்கைகளிலும் ஈடுபடமாட்டேன், எனக்கு உதவுங்கள் என கெஞ்சினார்.
’கம்யூனிச’ ஆட்சி ஒழிவதில் மேற்கத்திய அரசுகளுக்கு மகிழ்ச்சியே. அதுவும் ஒருவர் வலிய வந்து தானாகவே தற்கொலை செய்துகொள்கிறோம் என்றால் பேரின்பமே. அந்த அளவில் கோர்பசாவ் மிக அணுக்கமான நண்பரானார். ஊடகங்கள் கொண்டாடின. சொந்த நாட்டில் காரித் துப்பாத குறை, மேற்கிலோ வாரி அணைத்துக்கொண்டார்கள்.
ஆனாலும் அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் கோர்பசாவ் எதிர்பார்த்த அளவு நிதி உதவி செய்யத் தயாராக இல்லை. முதலில் ஜனநாயக நாடுகளில் அதிபர்கள், பிரதமர்கள் தான் தோன்றித்தனமாக முடிவெடுத்துவிடமுடியாது, நாடாளுமன்றம், எதிர்க்கட்சிகள், அந்நாடுகளே எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி எனப் பல்வேறு சிக்கல்கள். அடுத்து அப்படியே கோர்பசாவ் கோரிய அளவு பல கோடி டாலர்களை வழங்கினாலும் கூட அவ்வுதவியெல்லாம் முறையாகப் பயன்படுத்தப்படும் என்பதற்கு உறுதி ஏதும் உண்டா?
கோர்பசாவின் முன்முயற்சிகள் தொடர்ந்து தோல்வியுற்று வந்தன. கட்சியில் பிளவு. அதிகார இயந்திரம் மாறிவிடவில்லை. மக்கள் ஆங்காங்கே கொதித்தெழுந்தவண்ணமிருந்தனர். அதிகாரமே கோர்பசாவின் கரங்களிலிருந்து நழுவிக்கொண்டிருக்கிறதோ என்ற சந்தேகம். இத்தகைய சூழலில் மேற்குலகம் அவர் எதிர்பார்த்த அளவு உதவி செய்ய முன்வராததில் வியப்பென்ன?
கோர்பசாவைப் பொறுத்தவரை அவருடைய நோக்கங்கள் உன்னதமாயிருந்திருக்கலாம், ஆனால் அவற்றை அடைய உருப்படியான திட்டங்கள், அமல்படுத்தப்படக்கூடிய திட்டங்கள் எதுவுமில்லை. எல்லாம் நாளாவட்டத்தில் சரியாகிவிடும் என்ற ரீதியில்தான் அவர் நடந்துகொண்டிருந்தார்.
குற்றங்களும், பற்றாக்குறைகளும் எகிறிக்கொண்டிருந்தன. மேலும் மேலும் தாராளமயமாக்கல்தான் ஒரே வழி என்பது போலத் தோன்றினாலும் அப்படிச் செய்தால் மக்களின் பிரச்சினைகள் அதிகரிக்கவே செய்யும். பத்து பதினைந்தாண்டுகளுக்குப் பின் நிலை சீரடையலாம். அதுவரை மக்கள் காத்திருக்கவேண்டும், அரசை நம்பவேண்டும். இல்லையெனில் எதிர்ப்புகளே உக்கிரமாகும். அவற்றைத் தடுக்க தியனென்மென் வழிதான். ஆனால் அப்படிச் செய்ய கோர்பசாவ் தயாரில்லை. அதனால்தானோ என்னவோ டெங் அவரை முட்டாள் என்றார்.
இன்று ஒன்றும் சீனம் சுவர்க்கபுரியாகிவிடவில்லை. பொருளாதார ரீதியாக செழிக்கிறது என்பது உண்மை. ஆனால் அங்கே ஏற்றத்தாழ்வுகளும் அதிகரித்துக்கொண்டேயிருக்கின்றன. கிராமங்கள் நசித்துக்கொண்டிருக்கின்றன. வேலை தேடி நகரங்களுக்கு ஓடிக்கொண்டிருக்கின்றனர். அங்கு நம் பீஹாரிகளைவிடவும் மோசமான நிலையில்தான் வாழ்கின்றனர். ஆனால் எவரும் எதுவும் கேட்கமுடியாது. அத்தகைய கொடுமையான அடக்குமுறைகளைக் கையாள. கோர்பசாவ் தயாராக இல்லை. வீழ்ந்தார்.
விலையேற்றம், தட்டுப்பாடு இவற்றின் மத்தியிலும் அவ்வப்போது மக்களை சந்தித்து வந்தார் அவர். க்ளாஸ்நஸ்ட் காலத்தில் அவர் சென்ற இடங்களிலெல்லாம் பெரும் திரளான கூட்டம், தானா சேர்ந்த கூட்டம், கைகுலுக்குவார்கள், இயன்றால் கட்டியும் தழுவுவார்கள், எந்த ஒரு கம்யூனிஸ்ட் தலைவருக்கும் அவ்வளவு வரவேற்பிருந்ததில்லை. மகிழ்ந்துபோவார் கோர்பசாவ்.
பெரிஸ்ட்ராய்கா பின்னடைவுகளை சந்தித்துவந்த நேரத்திலும் கூட்டம், ஆனால் இப்போது பாராட்ட அல்ல, கரித்துக்கொட்ட, சாபமிட, சுதந்திரமிருந்ததோ இல்லையோ, ஏதோ ஓரிரு வேளை உணவாவது கிடைத்துவந்தது கெடுத்துவிட்டீர்களே என்று முகத்திற்கு நேரேயே சொல்லுவார்கள். அப்போது தனது கோபத்தை வெளிக்காட்டமாட்டார்.
ஆனால் அலுவலகம் திரும்பிய பிறகு நண்பர்களிடம் புலம்புவார்: “எனக்கு வீடு வேண்டும்…எனக்கு பென்ஷன், ஊதிய உயர்வு…இப்படி எல்லாவற்றுக்கும் என்னைப் போட்டு நச்சரிக்கின்றனர்.. இது நியாயமா..…நான் என்ன இறைத் தூதரா எல்லாவற்றையும் கேட்டவுடன் வழங்கிவிடுவதற்கு…நான் சாதாரண மனிதன்… மூன்றாண்டுகளாக என்னாலியன்றதை செய்துவந்திருக்கிறேன்…என்ன நடக்கிறது எனப் புரிந்துகொண்டு அவரவராய் கற்றுக்கொள்ளவேண்டியதுதான் முட்டி, மோதி…..எல்லாவற்றையும் அரசு கவனித்துக்கொள்ளும் காலம் மலையேறிவிட்டது…”
ஒரு வாதத்திற்கு அது சரி என்று ஏற்றுக்கொண்டாலும், பதவி விலகும் காலத்தில் கோர்பசாவ் என்ன செய்தார்? ஜென்மவைரியாகக் கருதிய யெல்ட்சின் அடுத்த ருஷ்ய அதிபர் என்று உறுதியாகிறது. பதவி விலகுவதைத் தவிர வேறு வழியில்லை. இவருக்கு ஆதரவு எந்தத் தரப்பிலும் இல்லை. அந்த நேரத்தில் யெல்ட்சினுடன் நீண்ட நேரம் மன்றாடுகிறார்:
இவருக்கான ஓய்வுதியம், வசிக்க வசதியான வீடு, ஓய்வெடுக்க கிராமப்புறத்தில் தச்சா எனப்படும் அனைத்து வசதிகளுடனான பங்களா, கார்கள், பணியாளர்கள், சமையற் கலைஞர்கள், இப்படி நீண்டதொரு பட்டியல். யெல்ட்சின் வஞ்சம் தீர்க்கும் வகையில் கோர்பசாவ் கோரியது ஒவ்வொன்றுக்கும் முரண்டுபிடித்து, போனால் போகிறது போ என, கேட்டதில் பத்துக்கு ஐந்து, என்ற ரீதியில் உடன்படுகிறார். கிடைத்தவரை லாபம் என்று வாங்கிக்கொண்டு போகிறார் கோர்பசாவ்.
அதாவது தான் வசதியாக வாழ்வது அவ்வளவு அவசியமாகப் பட்டிருக்கிறது. ஆனால் சராசரி குடிமகன் அடுத்த வேளை உணவுக்கு வழியில்லாமல் வாடுவதைப் பற்றி அவர் கவலைப்படவில்லை. எல்லாம் காலப்போக்கில் சரியாகும் என்று அலட்சியப்படுத்துகிறார் என்ன கம்யூனிஸ்ட் இவர்?
சோவியத் யூனியனில் அங்கிங்கெனாதபடி நிறைந்திருந்தது கம்யூனிஸ்ட் கட்சிதான். இலட்சக்கணக்கில் நிர்வாகிகள் திடீரென்று அவர்கள் எண்ணிக்கையை சரிபாதியாக குறைக்கப்போகிறேன் என்கிறார். எதற்கு வெட்டியாக அவ்வளவு பேர், கட்சியின் பங்குதான் கணிசமாகக் குறைந்துகொண்டிருக்கிறதே என்பது அவரது வாதம். நியாயமே. குறைக்கத்தான் வேண்டும். ஆனால் வெளியேற்றப்பட்டவர்கள் அடுத்த வேளை ரொட்டிக்கு என்ன செய்வார்கள், அவர் சிந்திக்கவே இல்லை. இப்படித்தான் எல்லாவற்றையும் அழித்தார் மாற்று இல்லாமலேயே.
இப்போது எல்லாம் முடிந்துவிட்டது எல்லோரும் அவரை வெறுக்கிறார்கள் அவரது குடும்பத்தைத் தவிர, நெருங்கிய நண்பர்களைத் தவிர அவரை மதிக்க ஆளில்லை, அன்பு செலுத்தவும் எவரும் இல்லை. பதவி இழந்த அடுத்த பத்தாண்டுகளில் அன்பு மனைவி ரெய்சாவும் மரிக்கிறார்.
நாடு சின்னாபின்னமான பின்பும் அரசியலில் ஓர் இடத்தைப் பிடிக்க படாது பாடு பட்டார் கோர்பசாவ். மனைவி ரெய்சா தடுத்தும் கேட்கவில்லை. ஒரு பொதுக்கூட்டத்தில் மனைவியர் சொல்லுவதையெல்லாம் காது கொடுத்து கேட்கவேண்டும், அப்புறம் அதற்கு நேர் எதிராக செயல்படவேண்டும் என மட்ட ரக ஜோக் அடிக்கிறார்.
உண்மையில் ரெய்சாவை ரொம்பவும் மதித்தார். ஆட்சிக்காலத்தில் அவர் சொன்னதையெல்லாம் கேட்பார். அவருக்கு அடங்கி நடந்ததாகக் கூட கிண்டல் செய்வார்கள்.
அப்படிப்பட்ட ரெய்சாவுக்கு தன் செயல்பாடுகள் எத்தகைய மன அழுத்தங்களைத் தரும் என்பதைப் பற்றி சற்றும் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. யெல்ட்சினை எதிர்த்து போட்டியிட்டு படுதோல்வியடைந்த பிறகே நம்மை சீந்துவாரில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறார். அடுத்த சில ஆண்டுகளிலேயே அவர் மிக நேசித்த மனைவி ரெய்சா ரத்த கான்சர் நோய்க்கு பலியாகிறார்.
இவரை கவனித்துக்கொண்டிருந்த மகள், தந்தையுடன் தானும் செய்திகளில் தொடர்ந்து இடம்பெற்றதால் எரிச்சலடைந்து, ஜெர்மனி சென்றுவிட்டார். தள்ளாத வயதில் மாஸ்கோவில் ஒரு பெரிய வீட்டில் உதவியாளர்களுடன் வாழ்கிறார் கோர்பசாவ்.
இன்னமும் தான் செய்தது எதையும் தவறு என்று ஒத்துக்கொள்ள மனதில்லை அவருக்கு. யெல்ட்சினை வசைபாடுவார், ஆனால் புடினைப் பற்றி அதிகம் பேசமாட்டார், எதற்கு வம்பு என்றுதான்.
ஓர் அறக்கட்டளையினை நடத்தி வருகிறார். வெளிநாடுகளில் அவருக்கு இன்னமும் ,மரியாதை இருக்கிறது. அவ்வப்போது பிபிசி, சி என் என், நியூயார்க்டைம்ஸ் எனப் பெரும் ஊடகங்களின் செய்தியாளர்கள் வந்து பேட்டியெடுப்பார்கள். நண்பர்கள் வந்து மது அருந்திவிட்டு அரட்டையடித்துவிட்டுப் போவார்கள்.
தேடிச்சோறு நிதந்தின்று காலம் ஓடுகிறது. இதற்காகவா அவர் மார்க்சீயம் பயின்றார்? இப்படிப்பட்டவர்கள் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்குகிறதென்றால் அது எப்படிப்பட்ட அமைப்பாய் இருக்கவேண்டும்?
ஸ்டாலினீயத்தை அவர் வெற்றி கொள்ளமுடியவில்லை. அவரல்ல எவராலும் வெற்றிகொண்டிருக்கமுடியாது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
ஒன்று ஒரேயடியாக குலைந்து போகவேண்டும் அல்லது சீனம்போல் அனைத்தும் துப்பாக்கி முனையில் இயங்கவேண்டும், அப்படித்தான் ஒரு கம்யூனிச அரசு இயங்கமுடியும் என்பதுதான் அவர்கள் வாதம். என்ன கொடுமை இது?
உண்மை மக்களரசை ஒரு கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கவே முடியாதா ?
மார்க்சீய வாதிகள் கற்பனை உலகில் இருந்து வர தயாராக இல்லை என்பது மட்டும் அல்ல , குலாக் போன்ற கொடுமைகளை அறவே புறம் தள்ளுகிறார்கள் . ஒரு பிரபலமான கம்ம்யூனிச இணையதில் குலாக் என்கிறன பதத்தோடு பதிவிட்டால் நெறியாளர் பிரசுரிக்க மாட்டார் .
மார்க்சிய கற்பனையில் இருக்கும் பக்தகோடிகள் கனவு களைந்துவிட்டு கூடாது அல்லவா
jegan sir super
jegan sir super
very good communists always adamonts, anti heros,
T.N. Gopalan போன்ற பார்ப்பன மூளைகளில் இருந்து இப்படிப்பட்ட பொய்மூட்டை கட்டுரைகள் வராமல் இருந்தால் தான் அதிசயம். நண்பர் சவுக்கு சங்கருக்கு இன்னும் இவர்கள் கூறும் கம்யூனிச கட்டுக்கதைகள் மீது நம்பிக்கை இருக்கிறது என்பது தான் வருத்தத்திற்குரியது.
So put your own version. Can you falsify the purges by Stalin ? Molotov Ribbentrop ? centralization of power ? and many more. Supplement negation by actual.