நான் ஒரு எழுத்தாளனாக உருவெடுப்பேன் என்று ஒரு காலத்திலும் எண்ணியது கிடையாது. காலமும், சூழலும் என்னை உந்தித் தள்ளின. பலரின் சுயசரிதைகளை படித்திருக்கிறேன். அவற்றில் பல என்னை செழுமையாக்கியது. குறிப்பாக, காலஞ்சென்ற பத்திரிக்கையாளர் வினோத் மேத்தாவின், சுயசரிதையான லக்னோ பாய் என்னை மிகவும் பாதித்த ஒரு நூல். ஊடகம் எப்படி இருக்க வேண்டும், ஒரு ஊடகவியலாளன் எப்படி இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் அற்புதமான ஒரு நூல் அது.
அப்படிப்பட்ட அற்புதமான நூல்களையெல்லாம் படித்து விட்டு, எனது கதையை எழுத வாய்ப்பு கிடைக்கும் என்பதை நான் ஒரு நாளும் கற்பனை செய்தது கிடையாது. வழக்கிலிருந்து விடுதலையான பிறகு, நண்பர் நாகராஜன், என் கதையை எழுதுமாறு யோசனை கூறினார். மிகுந்த தயக்கத்துடனேதான், பத்ரியை சந்தித்தேன். அந்த நூலுக்கான தேவை என்ன என்பதை அவர் புரிய வைத்தார். வெளியில் இருப்பவர்களுக்கு அரசு இயந்திரம் என்பது தெரியும். ஆனால் அது எப்படி இயங்குகிறது, யார் இயக்குவிக்கிறார்கள், அதன் தன்மை என்ன என்பது தெரியாது. அதனுள்ளேயே பணியாற்றி, அதனை எதிர்த்தே போராடியிருக்கிறீர்கள். இது படிப்பவர்களுக்கு ஒரு விறுவிறுப்பான புதிய அனுபவமாக இருக்கும் என்று எழுதத் தூண்டினார்.
எழுதத் தொடங்கியதும்தான் எத்தனை நெருக்கடிகளை சந்தித்துள்ளேன் என்பது புரிந்தது. நெருக்கடிகளுக்குள்ளேயே வாழ்வை நடத்திக் கொண்டிருந்ததால், அதிலிருந்து வெளியேற வேண்டும், இந்த சிக்கலை தாண்ட வேண்டும் என்ற பரபரப்பில், அந்த சிக்கல்களை என்னால் உணர முடியவில்லை. ஒவ்வொரு அத்தியாயத்தை எழுதி முடித்ததும், நண்பன் நாசரிடம் அதை அனுப்புவேன். அவர் படித்த பின்னர், திருத்தங்களை சொல்லுவார். அவற்றை செய்து முடித்து அவருக்கு அனுப்புவேன். காவல்துறையின் சித்திரவதைக்கு ஆளான பகுதிகளை எழுதுகையில் என்னையே அறியாமல் ஒரு தயக்கத்தை உணர்ந்தேன். ஏதாவது ஒரு காரணத்தை கண்டுபிடித்து, அந்த அத்தியாயங்களில் திருத்தங்களை மேற்கொள்வதை தவிர்த்து வந்ததை மிக தாமதமாக உணர்ந்தேன். என்னையறியாமல் என்னுள் ஒரு மென்ட்டல் ப்ளாக் இருந்ததை உணர முடிந்தது.
நூல் முழுமையடைந்து வெளியானதும், அது வாசகர்களிடையே வரவேற்பை பெற்றதும், என்னுள் இருந்த அந்த மென்ட்டல் ப்ளாக் முழுமையாக அகன்றிருந்ததை உணர முடிகிறது. கடந்த வாரம், என்னை கைது செய்தபோது சித்திரவதை செய்த மூன்று அதிகாரிகளில் ஒருவரை சந்திக்க நேர்ந்தது. அவரிடம் உரையாடி விட்டு, பின்னர் வெளியே வந்து, சற்று நேரம் அமைதியாக யோசித்தேன். மனதுக்குள் அவர் மீது கோபத்தை வைத்துக் கொண்டு, சிரித்துப் பேசினேனா, அவர் மீது இன்னும் கோபம் இருக்கிறதா என்பதை யோசித்துப் பார்த்தேன். அவ்வாறு எந்த கோபமும் இல்லை என்பது புரிந்தது. அதற்கு முழுமையான காரணம் இந்த நூல். இப்படி ஒரு நூலை எழுதாமல் இருந்திருந்தால் என்னையுமறியாமல், அந்த சம்பவங்கள் என் மனதின் ஒரு மூலையில் மறைந்திருந்து, என் தன்மையையே ஒரு பாதிப்புக்கு உள்ளாக்கியிருந்திருக்கலாம் என்றே எனக்கு தோன்றுகிறது.
இந்த நூல் எனக்கு ஒரு அவுட்லெட்டாக இருந்துள்ளது என்பதை உணர முடிகிறது.
சென்னை புத்தகக் கண்காட்சி, அண்ணா சாலை, காயிதே மில்லத் பெண்கள் கல்லூரியில் நடந்தது முதல் சென்று வருகிறேன். அதே கண்காட்சியில் எனது நூலும் இடம் பெற்றது என்பது கனவு போலத்தான் இருக்கிறது.
புத்தகம் வெளிவருவதற்கு முதல் நாள், என் புத்தகத்தின் எடிட்டர் தோழர் மருதனிடம் என் பதற்றத்தை பகிர்ந்து கொண்டேன். என்னுடைய வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவங்களை, கஷ்டங்களை எழுதினால் அதை படிக்கும் மூன்றாவது நபருக்கு அது சலிப்பைதானே தரும் என்று கேட்டபோது அவர், நிச்சயம் இது வாசகர்களால் விரும்பப்படும் புத்தகமாக இருக்கும் என்று உறுதியாக கூறினார். நண்பர் என்பதற்காக, மிகையாக சொல்கிறார் என்றே நினைத்தேன். ஆனால், புத்தக கண்காட்சியில் அதிகம் விற்பனையான புத்தகங்களின் பட்டியலில் நான்காவது இடத்துக்கு இது வரும் என்பதை நான் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை.
புத்தகத்தை படித்தவர்கள் பலரும் சொல்லிய ஒரு விஷயம், புத்தகம் விறுவிறுப்பாக இருந்தது. கீழே வைக்க முடியவில்லை என்பதே. இதற்கு முழுமையான காரணம், இந்த புத்தகத்தை பல முறை படித்து, திருத்தி, சந்தேகங்களை எழுப்பி, பல அத்தியாயங்களை மீண்டும் எழுதச் சொல்லி, புத்தகத்தை ஒரு நல்ல வடிவத்துக்கு கொண்டு வந்த என் நண்பர் நாசர் மட்டுமே. திரைத் துறையில் உள்ள அவர்தான், ஒவ்வொரு அத்தியாயத்தையும், ஒரு வாசகன் எப்படி உள்வாங்குவான் என்ற கோணத்தில் அணுகி, இந்த நூலை செம்மைப்படுத்தியவர்.
புத்தகத்தின் நகல் கிடைத்ததும், முதல் நகலை, காவல் துறை அதிகாரி அருணிடம் அளித்தேன். இரண்டாவது நகல், என் தாய்க்கு. அதிகாரி அருணும் அவர் மனைவியும், அன்று இரவே அந்த புத்தகத்தை படித்து முடித்தார்கள் என்று அறிந்தபோது, மிகவும் பெருமிதமாக இருந்தது.
தொடர்ந்து புத்தகத்தை படித்த வாசகர்களின் கருத்துக்கள் ஊக்கம் தருவதாகவே அமைந்தன. சரி உருப்படியான ஒரு காரியத்தைத்தான் செய்திருக்கிறோம் என்ற நிறைவு ஏற்பட்டது.
அதிகாரிகளுக்கு புத்தகம் அளிப்பதற்காக லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகம் சென்றேன். அலுவலகம், ஆர்ஏ புரத்திலிருந்து, ஆலந்தூருக்கு சொந்த கட்டிடத்துக்கு மாறியிருந்தது. அலுவலகத்தின் உள்ளே நுழைந்தபோது, அந்நியனாவே உணர்ந்தேன். என்னை அரசு ஊழியனாக கருத முடியவில்லை. அரசுப் பணியிலிருந்து வெகு தூரத்துக்கு வந்த உணர்வே ஏற்பட்டது. 18 ஆண்டுகள் என்னோடு பணியாற்றிய ஊழியர்கள், என்னை மகிழ்ச்சியோடு வரவேற்றனர். 9 ஆண்டுகள் கழித்து அவர்களை பார்க்கையில் இந்த உறவை இழந்து விட்டோமே என்ற வருத்தம் தோன்றியதும் உண்மை.
நான் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர், என்னோடு பணியாற்றியர்கள் பெரும்பாலும் என்னோடு பேசுவதை நிறுத்தி விட்டனர். அவர்களின் பயத்தை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால், மூன்று பேர் மட்டும் நீண்ட கால நட்பின் காரணமாக, அவ்வப்போது விசாரிப்பார்கள். 2010ம் ஆண்டில் சவுக்கு தளத்தை தொடங்கி நடத்திக் கொண்டிருந்தேன். என்னுடைய செல்பேசிகள் இரண்டும் 24 மணி நேரமும் ஒட்டுக் கேட்பில் இருந்தது.
என்னிடம் நலம் விசாரித்த அந்த மூன்று நண்பர்களுடைய உரையாடல்களும் பதிவு செய்யப்பட்டுக் கொண்டுதான் இருந்தன. அவர்கள் மூன்று பேரும், எவ்விதமான அரசு ரகசியத்தையும் என்னிடம் கூறவில்லை என்பது உளவுத்துறை அதிகாரிகளுக்கு நன்றாகவே தெரியும். அப்போது லஞ்ச ஒழிப்புத் துறையின் இணை இயக்குநராக 1988ம் பேட்சை சேர்ந்த சுனில் குமார் இருந்தார். இவரை ஜாபர் சேட் தன்னுடைய முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். சுனில் குமாரின் மகன் ப்ளஸ் டூவில் சரியான மதிப்பெண் பெறவில்லை. ஜாபர் சேட், அண்ணா பல்கலைக்கழகத்தில், சுனில் குமாரின் மகனுக்கு பொறியியல் சீட் வாங்கிக் கொடுத்தார். இதனால் சுனில் குமார் முழுநேர ஜாபர் சேட்டின் அடிமையாகவே மாறிப் போனார்.
ஜாபர் சேட்டுக்கு பிடிக்காத அதிகாரிகளின் மீது லஞ்ச ஒழிப்புத் துறையை வைத்து வழக்கு பதிவு செய்தது அப்போது நடைபெற்றது. ராசாத்தி அம்மாளின் தலையீட்டை கேள்வி கேட்டார் என்பதற்காகவே, உமா சங்கர் ஐஏஎஸ் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு பதிவு செய்யப்பட்டதும் அப்போதுதான்.
திடீரென்று ஒரு நாள் லஞ்ச ஒழிப்புத் துறையில் இருந்த என் நண்பர்கள் மூவரும், திருச்சி, புதுக்கோட்டை, மற்றும் திருநெல்வேலிக்கு மாற்றப்பட்டனர். அவர்கள் அத்தனை பேரின் பிள்ளைகளும் பள்ளிகளில் படித்துக் கொண்டிருந்தனர். அவர்களில் இருவர் பெண்கள். கண்காணிப்பாளர் அந்தஸ்தில் இருந்த அவர்களை, இள நிலை உதவியாளர் பணியிடத்திற்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த மாறுதல் உத்தரவுக்கு தடை பெற நீதிமன்றத்தை அணுகியும் நிவாரணம் கிடைக்கவில்லை அத்தோடு அவர்களுடன் பேசுவதை நிறுத்தினேன்.
ஒரு வருடம் கழித்து, அவர்கள் மன்னிக்கப்பட்டு மீண்டும் சென்னைக்கு வரவழைக்கப்பட்டார்கள். அப்போது அவர்களில் ஒருவரிடம் சுனில் குமார் நேராகவே கேட்டார். உங்களை எதற்கு மாற்றினோம் என்று தெரிகிறதா என்று.
என்னால் என் நண்பர்களுக்கு இத்தனை சிரமங்கள் வருகிறது என்பது தெரிந்ததும், லஞ்ச ஒழிப்புத் துறையோடு என் தொடர்புகளை சுத்தமாக நிறுத்தினேன். 9 ஆண்டுகள் கழித்து அவர்களை சந்தித்தபோது, மகிழ்ச்சியாக உரையாடினார்கள்.
காவல் துறை அதிகாரிகள் புத்தகத்தை படித்து விட்டு மனதார பாராட்டினார்கள். ஒரு அதிகாரி, புத்தகத்தை படித்து விட்டு, இவ்வாறு செய்தி அனுப்பியிருந்தார்.
டெக்கான் க்ரானிக்கிளில் பணியாற்றி விட்டு, தற்போது டிட்டி நெக்ஸ்ட் ஆங்கில இதழில் பணியாற்றும், நண்பர் விபி.ரகு, என்னோடு சேர்ந்து விசாரணை ஆணையத்தில் அலைக்கழிக்கப்பட்டவர். அந்த உரையாடலை வெளியிட்டதற்காக, ஒரே நாளில் தமிழகம் முழுக்க கதாநாயகன் ஆனாலும், அந்த விசாரணை ஆணைய அலைக்கழிப்பு அவரை சங்கடப்படுத்தியிருந்தது என்பதை என்னால் உணர முடிந்தது. அவரோடு பேச வேண்டும், உரையாட வேண்டும் என்று அப்போது எனக்கு மிகுந்த ஆர்வம் இருந்தாலும், விசாரணை ஆணைய கண்காணிப்பு காரணமாக, பேசக் கூட முடியவில்லை. பின்னாளில் நண்பரானார். அவருக்கு என் புத்தகத்தை அவர் அலுவலகத்துக்கு சென்று அளித்தேன். படித்து விட்டு பாராட்டினார்.
டெக்கான் க்ரானிக்கிள் ஆசிரியரும் மூத்த பத்திரிக்கையாளருமான பகவான் சிங் தொலைபேசியில் அழைத்து வாழ்த்தினார். நண்பர் புதிய தலைமுறை கார்த்திகை செல்வன், புத்தகக் கண்காட்சிக்கு வந்திருந்து, புத்தகத்தை வாங்கி கையெழுத்து பெற்றுக் கொண்டு வாழ்த்தினார். நண்பர் நியூஸ் 18 குணசேகரன் புத்தகத்தை வாங்கி கையெழுத்து போட்டுத் தருமாறு கேட்டு வாழ்த்தினார். டெக்கான் க்ரானிக்கிள் இதழின், அரசியல் ஆசிரியர் சிவப்பிரியன் புத்தகத்தை படித்து விட்டு தொலைபேசியில் அழைத்து, நான் உங்களை நீங்கள் ஆரம்பம் முதலே பத்திரிக்கையாளர் என்றே நினைத்திருந்தேன். நீங்கள் அரசு ஊழியர் என்பது உங்கள் புத்தகத்தை படித்த பிறகுதான் தெரிந்தது என்றார்.
முகநூலில், பல வாசகர்கள், மனமார, தாராளமாக வாழ்த்தினார்கள்.
புத்தக கண்காட்சிக்கு தாயை அழைத்துச் சென்றது மகிழ்ச்சியான ஒரு அனுபவம். நல்ல அரசு ஊழியனாக, நல்ல பிள்ளையாக, சாதாரணமாக இருந்திருக்கலாம். ஆனால் நான் இப்படி இருப்பதற்காக ஒரு நாளும் என் அம்மா வருந்தியதில்லை. கோபப்பட்டதில்லை. உனக்கு ஏன்டா இந்த வேலை என்று எப்போதும் கேட்டதில்லை. இப்படி ஒரு தறுதலை பிள்ளையை பெற்று வைத்திருக்கிறாயே என்று உறவினர்கள் பேசியபோது கூட அவர் என்னிடம் அது குறித்து கேட்டதில்லை. ஒரு கட்டத்தில் உறவினர்களை சந்திப்பதையே தவிர்த்தார். இப்போது இந்த நூல் வெளியிடப்பட்ட பின்னர், அம்மா முகத்தில் அத்தனை பூரிப்பு. பெருமிதம்.
கைதான நாள் முதலாக இன்று வரை, என் தாய் அனுபவித்த துயரங்களுக்கு சற்றும் குறையாமல் என் தங்கை சுஜாதாவும் அனுபவித்திருக்கிறாள். அம்மாவைப் போலவே, அன்றும், இன்றும் எனக்கு ஆதரவளித்து வருகிறாள்.
என் தங்கையின் கணவர் சசிகாந்த் செந்தில், வழக்கு நெருக்கிய சமயங்களிலெல்லாம், ஆதரவளித்ததோடு, வழக்கு குறித்து பல்வேறு ஆலோசனைகளை கூறினார். என் வழக்கின் குற்றப்பத்திரிக்கையை வாங்கி, ஆவணங்களை முழுமையாக படித்த பின்னர் அவர் அளித்த பல்வேறு அறிவுரைகள், சாட்சிகள் குறுக்கு விசாரணையின் போது, மிகவும் உதவியாக இருந்தது.
என் பயணம் ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதாக நான் கருதுகிறேன். மேற்கூறிய அனைத்து நபர்களின் பங்களிப்பை இந்த தருணத்தில் நான் நன்றியோடு நினைவு கூற விரும்புகிறேன்.
நான் எழுதிய ஊழல் உளவு அரசியல் என்ற நூல் வெளியான 2018 புத்தக கண்காட்சி அனுபவம் பிரமிக்கத்தக்கதாக இருந்தது.
சவுக்கு தளத்தில் அரசியல் மற்றும் புலனாய்வுக் கட்டுரைகள் எழுதுகிறேன். முகநூலில், செய்திகளை பதிவு செய்கிறேன். பலரை பகடி செய்கிறேன். சிலரை பாராட்டுகிறேன். இந்த கருத்துக்களை சிலர் விரும்பக் கூடும். சிலர் வெறுக்கக் கூடும். சிலர் கோபப்படக் கூடும். ஆனால், புத்தக கண்காட்சியில் மிகவும் அன்போடும், பாசத்தோடும், என்னை சந்தித்துப் பேசினார்கள். என் மீது இத்தனை பேர் வாஞ்சையோடு இருக்கிறார்கள் என்பது வியப்பையும், நெகழ்ச்சியையும் ஏற்படுத்தியது.
பேசினார்கள். கை குலுக்கினார்கள். உரையாடினார்கள். புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். புத்தகத்தில் கையெழுத்து பெற்றார்கள். அந்த பாசத்துக்கும், நேசத்துக்கும் என்றென்றைக்கும் பாத்திரமாக, நிலைபாடு மாறாமல் இருப்பதும், தொடர்ந்து எழுதுவதுமே உங்களுக்கு என்னால் செய்யக் கூடிய கைமாறு.
இத்தனை பேரின் அன்புக்கான காரணத்தை, நான் என் புத்தகத்தின் கடைசி அத்தியாயத்தில் எழுதியிருக்கிறேன்.
சமுதாயத்தில் அனைவரும் நல்லவர்களே. நல்லவர்களாகவும், நல்ல மனிதராகவும் இருக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பம். நல்ல மனிதராக இருப்பதோடு அல்லாமல், அநியாயங்களை தட்டிக் கேட்க வேண்டும், அராஜகங்களை எதிர்க்க வேண்டும் என்ற விருப்பம் அனைத்து மனிதர்களுக்குமே உண்டு. ஆனால் அவர்களால் அப்படி செய்ய முடிவதில்லை. அவர்களின் சூழல், குடும்பம், பணியாற்றும் சூழல் போன்ற பல்வேறு காரணிகளால் அவர்கள் தங்கள் கண் முன்னால் நடக்கும் அநியாயங்களை கண்டும் காணாமல் போக வேண்டியிருக்கிறது. சில நேரங்களில் துணை போகவும் வேண்டியிருக்கிறது. அப்படிப்பட்ட நேரத்தில் இந்தத் தளைகளை உடைத்து, ஒரு அநியாயத்தை எதிர்ப்பவனை அரசு இயந்திரம் பழி வாங்குகையில் அவனுக்கு உதவுவது நமது கடமை என்று கருதுகிறார்கள். அவன் அழிந்து விடக் கூடாது என்று விரும்புகிறார்கள். அவனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று விரும்புகிறார்கள். இப்படி ஒவ்வொருவரும் ஒரு துரும்பை எடுத்துப் போட்டதால்தான் என்னால் முதலைகள் நிறைந்த ஒரு குளத்தில் நீந்திக் கரையேற முடிந்திருக்கிறது. எனக்கு உதவி செய்தவர்கள் அமைதியாக இருந்திருக்கலாம். அல்லது எனக்கு எதிராக செயல்பட்டவர்களுடன் துணை போயிருக்கலாம். எனக்கு உதவி செய்ததால் அவர்களுக்கு எந்தப் பயனும் ஏற்பட்டது கிடையாது. ஆனாலும் உதவினார்கள். அவர்கள் உதவியால் மட்டுமே நான் என் கதையை உங்களோடு பகிர்ந்து கொள்ள முடிகிறது. அவர்கள் உதவாவிட்டால், என் குரல் நசுக்கக்கப்பட்டிருக்கும்.
இதுதான் இத்தனை பேர் என் மீது செலுத்தும் அன்பின் பின்னணி.
2008ல் கைதானேன். பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டேன். இப்போது 2018. பத்தாண்டுகள் நிறைவடையப் போகிறது. அண்ணன் பாலபாரதி, ஒரு இணைப்பை அனுப்பியிருந்தார். 22 ஜுலை 2010 அன்று அவர் தனது இணைய பக்கத்தில் எழுதிய கட்டுரை.
“சங்கர் இந்த பெயர் கொஞ்ச மாதங்களுக்கு முன் பத்திரிக்கை உலகை கலக்கியது. தமிழகத்தையே உலுக்கிய டெலிபோன் ஒட்டுக் கேட்பு வழக்கில் திமுகவின் அமைச்சர் பூங்கோதை நடத்திய அதிகார துஷ்பிரயோகங்களுக்கு எதிரான ஆதாரங்களை வெளியிட்டார் என்று கைது செய்யப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் இந்த சங்கர். ஊழல் ஒழிப்புத் துறையின் உயரதிகாரியான உபாத்தியாயாவின் அலுவலகத்தில் வேலை செய்த சங்கர், அதிகார பீடங்களின் ஊழல்களின் குணத்தை போட்டுடைத்தவர்.
எக்மோரில் இருக்கும் கோர்ட்டுக்கு அவரை அழைத்து வந்தார்கள். தப்பு தப்பு இழுத்து வந்தார்கள் என்பது தான் சரி.. குழுமி இருந்த ஊடகவியலாளர்களுடன் நானும் நின்றிருந்தேன். சங்கரின் மேலுதடு வீங்கிப் போய் இருந்தது. காவலர்களின் கட்டுப்பாட்டையும் மீறி, அவரிடம் மைக்கை நீட்டினேன்.(னோம்)
‘நான் எந்த தப்பு செய்யவில்லை. தப்பு செய்தவங்களை அம்பலப்படுத்தியிருக்கேன். என்ன தண்டனை வேணும்னாலும் கொடுக்கட்டும். இது தப்புன்னா.. இதை நான் செஞ்சுகிட்டே இருப்பேன்’என்று அவர் முடிக்கும் முன்னரே தள்ளிக்கொண்டு போனது காவல்துறை.
அவர் பணி நீக்கம் செய்யப்பட்டதும்.., எல்லோரும் அவரை மறந்து போனோம். சென்னை உயர்நீதி மன்றத்தின் பக்கம் போகும் போதெல்லாம் வழக்குரைஞர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் சங்கரை பார்த்திருக்கிறேன். அவர் கேஸு போய்கிட்டு இருக்கு அதனால தான் இங்க அடிக்கடி வர்றார் என்றார் ஒரு நண்பர்.
இன்று சவுக்கு என்ற பெயரில் பதிவுகளை வலையேற்றியமைக்கு.., வழிப்பறி செய்ததாகவும், கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படிருப்பதாக அறிகிறேன். நல்ல விசயம்.
ஆதாரங்களை அள்ளிக்கொடுத்து, ஏமாற்றுகின்றவர்கள் மீது நடவடிக்கை எடு- என்று எழுதுகிறவன் தப்பு செய்கிறவன். அவனை அள்ளிக்கொண்டு போய் நையப்புடைப்பீர்கள். ஆனால்.. ஆதாரத்தில் சொல்லப்படிருக்கும் விசயங்களை எப்படி எளிதாக மறந்து போகிறீர்கள் என்று தெரியவில்லை.
உங்கள் மொழியில் சொல்வதென்றால்.. “ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்….” மீதியை நீங்களே முடித்துக்கொள்ளுங்கள் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே..! ”தீதும், நன்றும் பிறர் தர வாரா…” என்ற கணியனின் வார்த்தைகளுக்கு உங்களுக்கு பொருள் தெரிந்திருக்கும். தேர்தல் வேறு வருகிறது. வேறு என்ன நான் சொல்ல.
ஒரு மூத்த பத்திரிக்கையாளரின் ஆட்சியில் உண்மையை எழுதியதற்காக கொடுக்கப்படும் பரிசு கண்டு பூரித்துப் போய் இருக்கிறேன் நான்.” இணைப்பு
2010ல் என்னைப் பற்றி இப்படி எழுதியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இத்தனை ஆண்டுகளாக என்னைப் பார்க்கிறீர்கள். நான் மாறியிருக்கிறேனா என்று கேட்டேன். மாறாமல் இருப்பதால்தான் நம் நட்பு தொடர்கிறது. மாறியிருந்தால், எப்போதோ தெறித்து ஓடியிருப்பேன் என்றார்.
இதுதான் எனக்கு பெருமை. இப்படித்தான் இறுதி வரை வாழ வேண்டும். அது மட்டுமே எனக்கு இருக்கும் ஒரே குறிக்கோள்.
எனக்கு புதினம் எழுத வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசை உண்டு. ஆனால் ஜெயகாந்தன், சுஜாதா ஆகியோரின் புதினங்களை படித்து விட்டு, அதிகப்பிரசங்கித்தனம் என்று ஆசையை அடக்கிக் கொண்டேன். ஒரு கட்டத்தில் எழுதித்தான் பார்ப்போமே என்று, தனியாக ஒரு ப்ளாக் தொடங்கி ஒவ்வொரு அத்தியாயமாக எழுதினேன். எனக்கு ஏற்பட்ட ஒரு சில அனுபவங்களை வைத்து, கதையாக அதை உருவாக்கினேன். ஒரே ஒரு நண்பரிடம் படிக்க சொன்னேன். நன்றாக இருக்கிறது என்றார். பிறகு ஒரு சில நண்பர்களிடம் மட்டும் பகிர்ந்து கொண்டேன். பிறகு அதை முழுமையாக மறந்து விட்டேன்.
நம்ம அடையாளம் வார இதழில், ஒரு நாள் பதிப்பாளர் கோசல்ராமுடம் பேசிக் கொண்டிருந்தபோது, சார் இதை படித்துப் பாருங்கள் என்று கூறினேன். அன்று இரவு என்னை அழைத்து, சங்கர், பனங்கற்கண்டு சாப்பிட்டால், சாப்பிட்ட பிறகு கூட லேசான காரத்தோடு அதன் சுவை நாவிலேயே இருக்கும். அது போல இருந்தது என்றார். பிறகு ஆசிரியர் கதிர்வேல் சாரிடம் படிக்கச் சொன்னார். அவரும் படித்து பாராட்டியதோடு, அதை நம்ம அடையாளம் இதழில் தொடராக வெளியிட வைத்தார்.
தற்போது நம்ம அடையாளம் இதழ் நின்று விட்டது. வரும் திங்கள் முதல், வாரமிருமுறையாக அந்த தொடரை பதிவு செய்கிறேன். அது முழுக்க முழுக்க கற்பனையான கதை.
நூல் வெளியீட்டுக்கு காரணமாக இருந்த நண்பர்கள், நாகராஜன், பத்ரி, நாசர், மருதன் ஆகியோருக்கும், என் நூலை படித்து கருத்துக்களை தெரிவித்த நண்பர்களுக்கும், என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
நீங்கள் பேசியதைபார்த்தேன் மிக உண்ம
வாழ்த்துகள் Sir எனக்கும் புத்தகம் படிக்க ஆர்வமாக உள்ளேன் ஓசூர்யில் இருப்பதால் கண்காட்சிக்கு
வர முடியவில்லை எப்படி புத்தகத்தை பெறுவது
I was in chennai but I normally dont visit book fair as it is sponsored by Nalli. Had I known I would have sent my brother to buy that. Anyway it is so good and great to know that you have done it. With best wishes…..
வாழ்க வளமுடன் அந்த ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.
உங்கள் பொன்னான தொலைபேசி எண்ணை எனக்கு கொடுங்கள் எனக்கு பயன்படும்
Vazthukal Shankar but i cant understand why you blocked me in Facebook and the sad part is you have told TNG that i used abusive comment which i have never done in FB 🙁
எவ்வளவோ முயன்றும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை… வாழ்த்துக்கம் அண்ணன். நிச்சயம் ஒருநாள் சந்திப்போம்.
தங்களது செல்பேசி எண் பகிரலாமா என்னிடம்? சில காரியங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
கிதியோன் செல்வமுத்து
திருவொறறியூர் சென்னை
7092428604
என்னுடைய இருபது வயதில் ( சுமார் 30 வருடங்கள் முன்பு) க்ரைம் நாவல்களை கையில் வாங்கிய உடன் முழுக்க படித்து விட்டுத்தான் கீழே வைப்பேன் , காரணம் பக்கத்துக்குப் பக்கம் சஸ்பென்ஸ் , திருப்பம் நிறைந்த பட்டுக்கோட்டை பிரபாகர் ,ராஜேஸ்குமார் , ஆகியோரின் நாவல்கள் எப்படி இருக்குமோ அதை மிஞ்சும் வகையில் இருந்தது உங்கள் ஊழல், ஊழவு, அரசியல்,
நீங்கள் அடையாளம் இதழில் தொடர் எழுதிக் கொண்டு இருந்த வேளையில் கோசல் சாரிடம் ஒவ்வொரு வாரமும் உங்கள் எழுத்து நடையை சிலாகித்து சொல்லி இருக்கிறேன், அடையாளம் வார இதழ் என் கைகளுக்கு வந்த உடன் நான் அனுப்பிய செய்தி இருக்கிறதா என்று பக்கத்தை பார்த்து விட்டு , முதலில் உங்கள் தொடரைத்தான் படித்து முடிப்பேன்…
ஊழல் , ஊழவு, அரசியல் புத்தகம் படித்து முடித்தவுடன் எனக்கு முதலில் தோன்றிய எண்ணம் … இவ்வளவு விருவிறுப்பான சம்பவத்தை யார் திரைப்படமாக எடுக்கப் போகின்றார்கள் .. என்பது தான், இன்னும் சிலாகித்துச் சொல்லலாம் தான்…. ஒரு நாள் போதுமா…. என்று தெரியவில்லை
I too read the book thro kindle/amazon. really Intersting… you havesome skills in writing… thrilling subject matter. Keep writing. Hats Off.
உங்கள் தைரியம் ஆச்ரியம் அளிக்கிறது.
மனமார்ந்த வாழ்த்துக்கள் சங்கர். புத்தகத் திருவிழாவிற்கு வர இயலவில்லை. புத்தகம் ஆன்லைனில் கிடைக்கிறதா
super we are always support
I followed you from 2008. We are twins. My brother introduced your site to me. Many times, I wrote a comment/support to that Savukku blog. But, I never posting it. Because, the reason you have mentioned in the top “Social situations”. Am an NCC Cadet. An every time, when I read your words, automatically my BP raised. But, I can’t do anything.
Long time ago, I wished to help your site economically (what I can able to help). But, the same fear was stopped me.
I have been in inferiority about these cause. But, today your words compromise/convice me.
“அப்படிப்பட்ட நேரத்தில் இந்தத் தளைகளை உடைத்து, ஒரு அநியாயத்தை எதிர்ப்பவனை அரசு இயந்திரம் பழி வாங்குகையில் அவனுக்கு உதவுவது நமது கடமை என்று கருதுகிறார்கள். அவன் அழிந்து விடக் கூடாது என்று விரும்புகிறார்கள். அவனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று விரும்புகிறார்கள்.”
I wish to buy your book and I will. Congratulations and all the best for your immortal services.
you are so bold we are with you sir
your are an legend sir
உங்களது அறவுனர்வும் போராட்ட குணமும்……….
நேரில் பார்த்திராத உங்களின் மீதான அக்கறை என்னை முழுமையாய் நிறைந்து நிற்கிறது… நன்றியும் அன்பும்.
Super sir. Like a Rajesh Kumar Novel. Great Courageous. You are not an ordinary one. And your writing style is impressive. I think it would be taken as cinema.
Congratulations and best wishes. Will buy the book through Amazon and read…Is Sasikanth Senthil that you mention an IAS officer who’s working in Karnataka?
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
You have forgotten to mention about your book publisher. where I can get? thro online? I remember the word of Sivakumar Actor “””ithuvum kadanth pom””.
வாழ்த்துக்கள் சங்கர்
Thi.MU.kA. AATCHIYINPOTHE ITHTHANAI THUYARANKALAI ANUPAVITHTHA THANKALIN PATHIVUKAL THI.MU.KAVIRKU ANUSARANAIYAAKAVE IRUPPATHU VIYAPPAI ALIKKIRATHU!
உங்களது அறவுனர்வும் போராட்ட குணமும் … அந்த ஓவ்வொரு வார்த்தையும் அதில் வாழும் உண்மையும்…
ஏதோ ஒரு மூலையில் வாழும் என்னை ஏதோ செய்கிறது…
நேரில் பார்த்திராத உங்களின் மீதான அக்கறை என்னை முழுமையாய் நிறைந்து நிற்கிறது… நன்றியும் அன்பும்..
நல்ல உண்மையான நூலை எழுதிய சவுக்கு சங்கர் அவர்களை வணங்குகிறேன். வாழ்த்துகிறேன். இப்படி நிறைய பேர் இருந்தால் நாடு நல்ல வகையில் இருக்கும்.
தங்கள் புத்தகம் “ஊழல்-உளவு-அரசியல்” பூராவும் படித்து முடித்து விட்டேன். பிரமிக்க வைக்கும் நிகழ்ச்சிகள் ! ஒரு சாதாரண மனிதரால் இவ்வளவு சாதிக்க முடியும் என்பதற்கு தங்கள் வாழ்க்கை ஒரு முன் உதாரணம் ! அநியாயம், அக்கிரமம் மற்றும் அதர்மத்தை எதிர்த்து தாங்கள் போராடிய விதம், நேர்மை, நிதானம் மற்றும் இவற்றை புத்த வடிவில் வெளியிடும் தங்கள் துணிச்ச்லை பாராட்டுகிறேன் !
திரு.சங்கர் அவர்களுக்கு,
வணக்கம்.
படுத்துக்கொண்டு படித்துக் கொண்டிருந்தவன் (இரவு 2.00 மணியளவில்) கடைசி இரண்டு அத்தியாயங்களைப் படிக்கும் போது எழுந்து உட்கார்ந்து கொண்டு படிக்கத் தொடங்கினேன். படித்து முடித்து விட்டேன். ஆனால் 2.46 மணி வரை தூக்கம் வரவில்லை. உங்கள் உலகத்தில் இருந்து என் உலகம் வருவதற்கு உடனே வர இயலாததால்…)
சாண்டில்யன், கல்கி, தி. ஜானகிராமன் ஆகியோர் கதைகளைப் படிக்கும்போது இவ்வாறு இரவு முழுக்க விழித்துப் படித்திருக்கிறேன். அதன்பின் இப்போதுதான்…
(என்) அப்பாவின் (ஆசிரியரான அவரைப் பள்ளியிலிருந்து நீக்கப் பட்டதற்கான) வழக்கு, எனது மகன் பெயரில் அவன் படித்துக்கொண்டிருந்த பள்ளி மேல் வழக்கு மற்றும் எனது வழக்கு (rent control & 138 section) – என்று வழக்கு நீதி மன்றம் என்று எனக்கு கொஞ்சம் அனுபவம் இருந்ததால் தங்களின் உண்மைக் கதை மிகுந்த விறுவிறுப்பைத் தந்தது.
எனது நண்பர்கள் வழக்கறிஞர்களாக உள்ளனர்…தங்களை வாய்ப்பு வரும் போது வந்து சந்திக்கிறேன்…
வாழ்வில் மேல் மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துகள்…
அன்புடன் பொன்னிவளவன்
சென்னை
https://www.facebook.com/anthaadhi
வியக்க வைக்கிறது உங்களது spirit.
how i get the book..inform e mail
Its available vin amazon
நானும்.கூட இன்றைக்கு காலையில் தான் படித்து விட்டு கீழே வைத்தேன். அதிகார வர்க்க அத்து மீறல்களை தோலுரித்து காட்டி இருக்கிரீர்கள்.. வாழ்த்துக்கள். உங்கள் பணி தொடரட்டும்