அந்த 20 தூக்க மாத்திரைகளை அந்த காகித உறையிலிருந்து எடுத்து மேசையின் மேல் வைத்தேன். இறப்பதற்கு இந்த 20 மாத்திரைகள் போதுமா ? உயிர் பிரிந்து விடுமா … அல்லது அரை குறையாக இழுத்துக் கொண்டு இருக்க நேருமா ? ஒரேயடியாக போய்விட்டால் பரவாயில்லை. உயிர்பிழைத்து விட்டால் அதன் பிறகு எதிர்கொள்ளும் கேள்விகள்…. அவமானங்கள்….. ஒரு முயற்சிதான் செய்து பார்ப்போமே… உயிர் போய்விட்டால் எவ்வளவு நிம்மதி… ? இந்த வலியோடு வாழ வேண்டாமே…
உயிரை அறுத்தது போலிருக்கிறதே… நெஞ்சே வெடித்துவிடும் போலிருக்கிறதே… எப்படி இது நடக்கும் ? தாங்க முடிய வில்லையே… இனி எதற்காக வாழ வேண்டும் ? என்ன இருக்கிறது இனி வாழ்வதற்கு ? துரோகத்தின் வலி என்பது இதுதானா ? எப்படி முடிந்தது அவளால் ? ஒரு வார்த்தை சொல்லியிருக்கக் கூடாதா ? பேஸ்புக்கைப் பார்த்து நான் தெரிந்து கொள்ள வேண்டுமா ? பேஸ்புக்கில் நுழைவதற்கு இரண்டு வினாடிகள் முன்பு கூட காதல் வரிகள் சொட்டச் சொட்ட அவள் செல்போனுக்கு எஸ்எம்எஸ் அனுப்பினேனே… ‘உன்னை மறக்க முடியவில்லை. மீண்டும் மீண்டும் நீ மட்டுமே என் நினைவில் இருக்கிறாய்.. நானும் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டுதான் இருக்கிறேன். ஆனால் எவ்வளவு முயற்சி செய்தாலும், உன் நினைவுகள் என்னை ஆக்ரமித்துக் கொண்டு அகல மறுக்கின்றன’ என்று எஸ்எம்எஸ் அனுப்பினேனே… அதைப் பார்த்து விட்டுக் கூட ஒரு பதில் அனுப்பவில்லையே அவள்… ? இனி எதற்காக வாழ வேண்டும். இறந்து விட்டால் இந்த வேதனையாவது மிஞ்சுமே. அவளை நினைத்து தினம் தினம் சாவதை விட, ஒரேயடியாகச் சாவது மேல்.
தண்ணீர் எடுப்பதற்காக ஃப்ரிட்ஜை திறக்கச் சென்றேன். தாய் உறங்கிக் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்ததும் இறப்பதற்கு முன் அவளருகில் சிறிது நேரம் இருந்துவிட்டு பிறகு சாகலாம் என்று தோன்றியது. அவள் படுத்திருந்த கட்டிலில் அமர்ந்தேன். நான் வந்தது தெரியாமலே, நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தாள். முதுமையின் காரணமாக முகத்தில் சுருக்கங்கள் விழுந்திருந்தன. அவளையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தேன் சிறிது நேரத்தில் இறக்கப்போகிறோம் என்று முடிவெடுத்த எனக்கு எதற்கு தாய்ப்பாசம் ? ஆனால், அவளை நன்றாகப் பார்த்துவிட்டுத்தான் சாக வேண்டும் என்று தோன்றியது.
‘இவளுக்கு என்ன சந்தோஷத்தைக் கொடுத்து விட்டேன் ?. என்னைப் பெற்று இத்தனை நாள் வளர்த்து, ஒரு தாய் அடையவேண்டிய எந்த சந்தோஷத்தையும் அவளுக்கு கொடுக்கவில்லையே… என்னால் அவள் அடைந்த சிரமங்கள் ஒன்றா இரண்டா ? ஏக்கம், விரக்தி, அவமானம், ஏமாற்றம் என்று எத்தனை சிரமங்களுக்கு அவளை ஆளாக்கி விட்டேன்…‘
தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் பிரதானக் கிளையில்தான் அவனுக்கு வேலை. கல்லூரியில் படிப்பு முடிந்து முதல் இன்டர்வ்யூவுக்கு தயாராகிக் கொண்டிருந்தபோது, தந்தை ஹார்ட் அட்டாக் வந்து இறந்து போனார். தந்தை பணியாற்றிய வங்கியிலேயே ஒரே மாதத்தில் வேலை கிடைத்தது அவனுக்கு.
“ஏம்ப்பா வெங்கட்… உன்னை மெயின் ப்ரான்ச்ல ஹெவி ட்ரான்சாக்ஷன்ஸ் நடக்குற ப்ரான்ச்சுக்கு மாத்தியிருக்காங்கப்பா”
”சார் நான் இங்க நல்லாத்தானே சார் வேலை செய்றேன்.. ”
”இடியட்… உன்ன யாரு நல்லா வேலை செய்யலைன்னு சொன்னது. நல்லா வேலை செய்யறதுனாலத்தானே உன்ன அந்த ப்ரான்ச்சுக்கு மாத்திருக்காங்க… ?. இந்த ப்ரான்ச் மாதிரி, அங்க அக்கவுண்ட்ல ஐநூறு ரூபா வச்சுருக்கற கஸ்டமர் யாரும் வரமாட்டான். ஒன்லி க்ரோர்ஸ். மார்வாடியா வருவான்… நல்லா கேன்வாஸ் பண்ணி பிக்சட் டெபாசிட் புடிச்சன்னா, நெக்ஸ்ட் இயர் மேனேஜரா ஆயிடுவ, ஆனா அங்க போயி, இந்த யூனியன் கீனியன் வேலையெல்லாம் பாக்கக் கூடாது. நீ ஆபீஸ் வேலையை விட யூனியன் வேலை அதிகமா பாக்கறன்னுதான் உன்னை அங்க மாத்தறாங்க”
”ஓ.கே சார்.. நான் எப்போ சார் ரிலீவ் ஆகணும் ? ”
”நாளைக்கு நாள் நல்லா இருக்கு. நாளைக்கு ரிலீவ் ஆயிட்டு, நல்ல நேரம் பாத்து ஜாயின் பண்ணு. நல்ல நேரம் பாக்கச் சொன்னா, என்னைக் கிண்டல் பண்ணுவ. கம்யூனிசம் பேசுவ. நல்லபடியா ஜாயின்பண்ணி ஒழுங்கா வேலை பாரு. ஆல் த பெஸ்ட்”
”தேங்க்யூ சார்”
புதிய ப்ரான்ச்சில் வேலையில் சேர்ந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது. பழைய ப்ரான்ச் மேனேஜர் சொன்னது சரிதான். புதிய ப்ரான்ச்சில் வேலை பென்டு கழன்று விட்டது. 50 கோடி, 60 கோடி என்று பிக்சட் டெப்பாசிட்டுகளை தினந்தோறும் புதுப்பிப்பதும், புது டெப்பாசிட்டுகள் வாங்குவதும் என்று வேலை மூச்சு விடக்கூட நேரம் இல்லாமல் இருந்தது. இந்த நெருக்கடியில் எங்கே யூனியன் வேலை பார்ப்பது ?
வங்கிப்பணியில் சேர்ந்ததுமே யூனியன் மெம்பராகி விட்டான். இரண்டு முறை வேலை நிறுத்தத்திலும் கலந்து கொண்டுள்ளான். பணி நிரந்தரமாவதற்கு இரண்டு வருடம் ஆகும் என்றாலும், அதற்கு முன்பாகவே வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டதால் அவனுக்கு வங்கி ஊழியர் சங்கத்தில் நல்ல பெயர். இத்தனைக்கும் யூனியன் தலைவர்கள் அவனை கலந்து கொள்ள வேண்டாம் என்று சொன்னார்கள். ஆனால், அவன் கலந்துகொண்டே தீருவேன் என்று பிடித்த பிடிவாதத்தைப் பார்த்து விட்டு, சரி என்று தலையாட்டினார்கள்.
கல்லூரி நாட்களிலேயே மாணவர் சங்கத்தில் முக்கிய தலைவராகிவிட்டிருந்தான் அவன்.. வேலைக்குச் சேர்ந்ததும் மட்டும் கம்யூனிச சிந்தனைகள் விட்டு விலகி விடுமா என்ன ? 18 வயதில் நாத்தீகம் பேசாதவனும் 20 வயதில் கம்யூனிசம் பேசாதவனும் மனுசனே இல்லை என்று யாரோ சொல்லக் கேட்டிருக்கிறான்.
அப்படி சங்க நடவடிக்கைகளில் தீர்மானமாக இருந்தவன், திடீரென்று இரண்டு மாதங்களாக ஆளையே காணவில்லை என்றதும் அவன் யூனியன் தலைவர் அவன் செல்போனில் அழைத்தார்.
”என்ன வெங்கட்… தொடர்பு எல்லைக்கு வெளியே போயிட்ட… ? ”
”இல்லை தோழர்… பாரீஸ் கார்னர் ப்ரான்ச்சுக்கு என்னை மாத்திட்டாங்க…. டெப்பாசிட் செக்ஷன்ல இருக்கேன். டெய்லி கஸ்டமர்ஸை மீட் பண்ண வெளியில போக வேண்டியதா இருக்கு. அதான் தோழர் வர முடியல.. ”
”வேலை பண்ணுப்பா… வேணாம்னு சொல்லல… ஆனா, சங்கத்தையும் மறந்துறாத.. ” என்ற கல்யாணசுந்தரம், அவன் பணியாற்றும் சங்கத்தின் மாநிலத்தலைவர். அவன் கல்லூரியின் படிக்கும் காலத்திலேயே அவரோடு அறிமுகம் உண்டு. மாணவர் சங்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்த சில கூட்டங்களில் வந்து பேசியிருக்கிறார். இந்தியாவுக்கு காந்தி மட்டுமே தனியாளாக சுதந்திரம் வாங்கித் தந்தார் என்ற எண்ணத்தில் இருந்த அவனுக்கு, சுதந்திரப் போராட்டம் என்பது எப்படி பரந்துபட்ட சமூகத்தில் உள்ள உழைப்பாளி மக்களால் வார்த்தெடுக்கப்பட்டது என்பதை புரியவைத்தவர் அவர். அவன் மனக்காட்டில் அவர் வைத்த அக்கினிக்குஞ்சு, அவன் நெஞ்சை வெந்து தணிய வைத்தது. அதன் பிறகு, நூலகம் நூலகமாக அவன் தேடிப் படித்து அறிந்து விஷயங்கள் அவனை கம்யூனிசத்தின் பக்கம் நிரந்தரமாக ஈர்த்தது. ஆனால், காந்தி என்ற நபர் சுதந்திரப் போராட்டத்தை ஒருங்கிணைக்கும் முகமாக இருந்தார் என்பதை அவன் உறுதியாக நம்பினான். அது குறித்து கல்யாண சுந்தரத்தோடு பல முறை விவாதித்திருக்கிறான்.
இரண்டே ஆண்டுகளில் மேனேஜர் பதவி உயர்வு வந்தபோது, உண்மையில் அவனுக்கு பெருமையாகத்தான் இருந்தது. அவனோடு வேலையில் சேர்ந்தவர்கள் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சியடையாமல் இருந்தபோதும், விரைவாகப் படித்து தேர்ச்சி பெற்று, எந்த ப்ரான்ச்சில் உதவி மேனேஜராக வேலை பார்த்துக் கொண்டிருந்தானோ, அதே ப்ரான்ச்சில் மேனேஜர்.
மொத்த அலுவலகமே கூடிப் பாராட்டியது. அந்தப் பாராட்டுக்களோடு, பொறாமையில் நனைத்த வார்த்தைகளும் வரத்தான் செய்தன.
”உங்க அப்பா வேலைதான் உனக்கு கெடச்சுருக்கு. என்னமோ நீ எக்ஸாம் எழுதி பாஸ் பண்ணதா நெனச்சுக்காதப்பா… அப்பாவ மனசுல நெனச்சுக்கிட்டு ஒழுங்கா வேலை பாரு” என்று இலவச ஆலோசனைகளை அள்ளித் தெளித்துவிட்டுச் செல்பவர்கள் அதிகம்.
அவன் மேனேஜரான அடுத்த மாதம் அந்த ப்ரான்ச்சுக்கு புதிய நியமனமாக ஜனனி வந்தாள். ஆறு மாதங்களுக்கு முன்பு நடந்த வங்கித் தேர்வில் தேர்ச்சியடைந்து, பயிற்சி முடித்து வந்து பணியில் சேர்ந்தாள்.
இந்தியப் பெண்களுக்கான சராசரி உயரம். அதிக மேக்கப் இல்லாத முகம். கழுத்தில் மெல்லிய சங்கிலி. குட்மார்னிங் சார் என்று சொல்லி அவள் அறிமுகப்படுத்திக் கொண்டபோது, அவள் அழகாக இருக்கிறாள் என்பதையும் தாண்டி, தான் மேனேஜர் என்பதும், அவளிடம் சிரித்துப் பேசினால், அவளிடம் வேலை வாங்க முடியாது என்பதும் அவன் இயல்புத் தன்மையை ஓரங்கட்டியது.
இறுக்கமான முகத்தை வைத்துக் கொண்டு அவளை அமருமாறு சைகை காட்டினான். உயர் அதிகாரி முன்பு பணிவாக எப்படி அமருவது என்பதையெல்லாம் வேலைக்குச்சேர்ந்த முதல் நாளே எப்படிச் சொல்லிக் கொடுக்கிறார்கள்… ? பாதி சேரை விட்டு விட்டு, லேசான அதிர்ச்சி ஏற்பட்டால் நாற்காலியிலிருந்து விழுந்துவிடுவது போல அமர்ந்திருந்தாள். “உங்களை எடுத்தவுடனே ஏன் இந்த ப்ரான்ச்சில போட்ருக்காங்கன்னு தெரியலை… மத்த ப்ரான்ச்சஸை கம்பேர் பண்ணும்போது, இங்க வொர்க் கொஞ்சம் ஹெவியா இருக்கும். பட்.. நீங்க கெரியர் ஆரம்பத்துலேயே நல்லா வொர்க் பண்ணி பழகிட்டீங்கன்னா, இட் வில் பி வெரி ஈசி பார் யூ.” என்று சொன்னதற்கு, வெரி வெல் சார்… தேங்க்யூ சார் என்று பதில் கூறிவிட்டு, எப்போது போகச் சொல்வான் என்ற எண்ணம் முகத்தில் தெரியும் அளவுக்கு யோசித்துக் கொண்டிருந்தாள்.
”சரி நீங்க உங்க சீட்டுக்குப்போங்க.. கவுன்டர் வொர்க், டேலியிங் எல்லாத்தையும் ரங்கநாதன் சார் கிட்ட கத்துக்கங்க. எனி ஹெல்ப் யு வான்ட்.. டோன்ட் ஹெசிட்டேட் டு ஆஸ்க் மி” என்றான்.
மீண்டும் ஒரு தேங்க்யூவை உதிர்த்தாள்.
”உங்க சொந்த ஊரு எது ? ”
”விருதுநகர் சார்”
”இங்க எங்க தங்கியிருக்கீங்க… ஹாஸ்டலா ?”
”நோ சார்… பேமிலியோட இருக்கேன் சார். ”
இதற்கு மேல் கேள்வி கேட்டால், தனிப்பட்ட முறையில் அதிகம் பேசுவதாக எடுத்துக் கொள்வாளோ என்று அவளை அனுப்பி வைத்தான்.
ஹெட் ஆபீசுக்கு பதில் அனுப்பவேண்டிய கடிதத்தை எடுத்துப் பிரித்துப் பார்த்தான். 1200 கோடி ரூபாய் கடன் வாங்கிய நபர், முதல் தவணைக்குப் பிறகு, எதுவுமே செலுத்தாமல் இருந்தும், ஏன் வங்கி அவர் தாக்கல் செய்துள்ள சொத்துக்களை ஜப்தி செய்து, கடனை வசூல் செய்யவில்லை என்பது குறித்து அறிக்கை அனுப்புமாறு எழுதப்பட்டிருந்தது.
‘ஏற்கனவே இது சம்பந்தமாக வந்த லெட்டருக்கே இன்னும் பதில் போடலை.’ என்பது நினைவுக்கு வந்தது. சரி அது சம்பந்தப்பட்ட கோப்புகளை பார்க்கலாம் என்று, பெல்லடித்து, தன் உதவியாளரை வரச்சொன்னான்.
”லோன் செக்ஷன் அசிஸ்டன்ட் மேனேஜரை வரச்சொல்லுப்பா.. ” என்றதும் சரி சார் என்றுவிட்டு அவன் சென்ற ஐந்தாவது நிமிடத்தில் அவர் அறைக்கு வந்தார்.
”சார்.. இதோட ரெண்டாவது லெட்டர் வந்துருச்சு ஹெட் ஆபீஸ்லேர்ந்து… அந்த லோன் பைலை இப்பவாவது எடுத்துக் குடுங்க. திருப்பி ரிமைன்டர் வந்தா நல்லா இருக்காது” என்று அவன் சொன்னதும், எதிரே இருந்த அசிஸ்டன்ட் மேனேஜர் சம்பத்தின் முகம் மாறியது.
தொடரும்.
உங்கள் தமிழ் ரொம்ப அழகு அண்ணா.
nice one.. keep them coming..
Nice read.