கடந்த மூன்று தேர்தல்களாக தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்தாலும், எத்தகைய தோல்விகளையும் தாண்டி எழுந்து நிற்கக் கூடிய இயக்கம்தான் திமுக என்பதில் எனக்கு என்றுமே நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கையில்தான், உங்கள் உரைகளில் நீங்கள் எப்போதும் வலியுறுத்துவது போல, தோல்விகளைக் கண்டு துவளாமல் வீறுகொண்டு எழும் இயக்கம்தான் திமுக என்றே நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால் அந்த என் நம்பிக்கைகள் ஆட்டம் காணத் தொடங்கிய காரணத்தாலேயே இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாறு என்ன, அதன் பின்புலம் என்ன, எத்தனை தொண்டர்களின் தியாகத்தில் வளர்ந்த இயக்கம் இது என்ற விபரங்களையெல்லாம் நான் உங்களுக்கு விளக்கிச் சொல்ல வேண்டியதில்லை. அந்த வரலாறுகளையெல்லாம் படித்தே வளர்ந்தவர் நீங்கள்.
தேர்தல் தோல்வி என்பது எந்த கட்சியையும் அதன் தொண்டர்களையும் சோர்வடையவே வைக்கும். தேர்தல் வெற்றிதான் ஒரு கட்சியின் தொண்டனுக்கு பலத்தையும் உற்சாகத்தையும் அளிக்கும். என்னதான் திராவிட பாரம்பரியம், பகுத்தறிவு கொள்கை, தமிழ் உணர்வு என்று நாம் பேசினாலும், ஒரு நடிகரின் கட்சிக்கு இருந்த செல்வாக்கும், வாக்கு வங்கியும் நமக்கு இல்லை என்பது கசப்பான உண்மை. இதனால்தான் எம்ஜிஆர் உயிரோடு இருந்தவரை 13 ஆண்டுகள் நம் கட்சி ஆட்சியை பிடிக்க முடியாமல் இருந்தது. ஆனாலும், இந்த 13 ஆண்டுகளும் கட்சியை உயிர்ப்போடு வைத்திருந்தார் தலைவர் கலைஞர். எம்ஜிஆர் மறைந்த பிறகு, அதிமுகவின் வாக்கு வங்கி இரட்டை புறாவாகவும், சேவலாகவும் பிரிந்த பிறகுதான் திமுகவால் ஆட்சியை பிடிக்க முடிந்தது.
அதன் பிறகு, அதிமுகவை கைப்பற்றிய ஜெயலலிதா அதிமுகவின் வாக்கு வங்கியை ஒன்றிணைத்ததோடு, அதை அதிகரிக்கவும் செய்தார். ஜெயலலிதா 1991 பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியோடு இணைந்து, ராஜீவ் கொலைக்கு, நம் கழகம் மீது பழிபோட்டு பெற்ற வெற்றியை அதிருஷ்டம் என்று நாம் ஒதுக்கினாலும், 2001 தேர்தலில், அது எதேச்சையாக நிகழ்ந்த வெற்றியல்ல என்பதை நிரூபித்தார்.
எப்போதுமே அதிமுகவுக்கு நம்மை விட வாக்கு வங்கி இரண்டு சதவிகிதமாவது அதிகம் என்பதை தலைவர் கலைஞர் நன்றாகவே உணர்ந்திருந்த காரணத்தினால்தான் ஒவ்வொரு தேர்தலிலும், துண்டு துக்கடா, உதிரி கட்சிகளைக் கூட ஒன்றிணைத்து ஒரு மாபெரும் கூட்டணியை அமைத்து, பெரும் கூட்டணி என்ற பிம்பத்தை உருவாக்கிவது வழக்கம்.
ஆனால் அது போன்ற கூட்டணிகளை நீங்கள்தானே 2016 தேர்தலில் முன்னெடுத்திருக்க வேண்டும் ? அப்போது கூட்டணி விவகாரத்தில் நீங்கள் சற்று நீக்கு போக்காக நடந்து கொண்டிருந்தால், இன்று நீங்கள்தான் முதலமைச்சர். சட்டப்பேரவை தேர்தலில் 30க்கும் மேற்பட்ட தொகுதிகளில் 5000க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி வாய்ப்பை இழந்தோம். அந்த தேர்தலில் கூட்டணி முதல் வேட்பாளர் தேர்வு வரை அனைத்து முடிவுகளையும் நீங்கள்தான் எடுத்தீர்கள்.
தேர்தலுக்கு பிறகு, அன்று தனி அணியாக நின்ற, தேமுதிகவைத் தவிர்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் இன்று நம்மோடு நிற்கின்றன. பெருந்தன்மையாக, கூட்டணி கட்சிகளை அனுசரித்து, விட்டுக் கொடுத்து, வலுவான எதிர்க்கட்சியான அதிமுகவை எதிர்ப்பதுதானே சிறந்த போர்த் தந்திரமாக இருந்திருக்கும் ? ஆனால் உங்கள் பிடிவாதத்தால் நாம் வெற்றி வாய்ப்பை இழந்தோம் என்று இப்போது நம்மோடு உள்ள கூட்டணி கட்சியின் தொண்டர்கள் கேட்கிறார்கள்.
தமிழகம் இன்று சந்தித்து வரும் அவலச் சூழல், அதிமுக ஆட்சியில் இன்று அதிகாரத்தில் உள்ள அதிமுக நிர்வாகிகளுக்கு மட்டுமே உவப்பாக இருக்கிறது. ஆனால் தமிழக மக்கள் பெரும்பாலானோர், அவதிப்படுகின்றனர். என்னைப் போன்ற திமுக தொண்டன் குமுறுகின்றோம். ஆனால், கையறு நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
மூன்று தொடர் தோல்விகளை சந்தித்து, கட்சியும் என்னைப் போன்ற தொண்டர்களும் இன்று மிக மிக சோர்வாக இருக்கிறோம் என்பதை நீங்களும் மறுக்க மாட்டீர்கள். என்னதான் நாம் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினாலும், மக்களிடம் நமக்கான செல்வாக்கு வளர்ந்துள்ளது என்பதை நம்ப முடியவில்லை.
தலைவர் முழு செயல்பாட்டோடு இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா என்ற குரல்கள் உங்கள் காதுகளையும் வந்தடையாமல் இருந்திருக்காது. இப்படியான ஒப்பீடுகளை தவிர்க்கவே முடியாது. ஏனென்றால் தலைவரின் ஆளுமை அப்படி. அவரின் பேட்டிகளாலும், அறிக்கைகளாலும், உடன்பிறப்புக்கு எழுதும் கடிதங்களாலும் எத்தனையோ தோல்விகளை சந்தித்த போதும் கட்சியை உயிர்ப்போடு வைத்திருந்தார் என்பதை நீங்களும் மறுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
வெறும் 96 எம்எல்ஏக்களை வைத்துக் கொண்டு, 5 வருடம் முழுமையாக ஆட்சியை நடத்திக் காட்டியவர் அவர். வெளியிலிருந்து ஆதரவு அளித்த பாட்டாளி மக்கள் கட்சி காலில் குத்திய முள்ளாக தொடர்ந்து உறுத்திக் கொண்டிருந்தாலும், அவர்களையும் அரவணைத்தே ஆட்சி நடத்தினார் அவர். பாமகவுக்கு நேரெதிர் துருவத்தில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியையும் கூட்டணிக்குள் வைத்திருந்த திறமை படைத்தவர்தான் நம் தலைவர்.
பத்தாண்டுகளுக்கு முன்னால் திருவல்லிக்கேணியில் ஜகதீசன்ன்ற என்ற கவுன்சிலர் ஒருவர் இருந்தார். அவரை வியப்போடு பார்த்திருக்கிறேன். தினமும் காலையில் முரசொலியை படிப்பார். தலைவர் என்ன கூறியிருக்கிறார் என்பதை படிப்பார் அடுத்து தீக்கதிரை படித்து, எதிர்க்கட்சியினர் என்ன கூறுகிறார்கள் என்று தெரிந்து கொள்வார். அதன் பின், அவர் குடியிருக்கும் பகுதி முழுக்க நடந்து செல்வார். ஒரு இடத்தில் அமர்ந்து கொள்வார். அந்த பகுதியை சேர்ந்த மக்கள், அவரிடம், தண்ணீர் இணைப்பு, மின் இணைப்பு முதல், கல்லூரியில் சீட் வாங்குவது வரை அத்தனை பிரச்சினைகளையும் எடுத்து வருவார்கள். முகம் சுளிக்காமல் அத்தனை பேருக்கும் பதில் கூறுவார். முடிந்தவற்றை தீர்த்து வைப்பார். காவல்துறையினர் அந்தப் பகுதி மக்களை தேவையில்லாமல் கைது செய்தாலோ, அல்லது துன்புறுத்தினாலோ, நேரில் சென்று தலையிடுவார்.
தேர்தல் நாளன்று, அவர் வந்து தேர்தல் பூத் வாசலில் நின்றால், வாக்களிக்க வரும் மக்கள், அவர் முகத்தைப் பார்த்ததும், நாளை நமக்கு எந்த பிரச்சினை என்றாலும் வரப்போவது, ஜகதீசன் மட்டுமே என்பதை உணர்ந்து, கண்ணை மூடிக் கொண்டு உதயசூரியனுக்கு வாக்களிப்பார்கள்.
இந்த ஜகதீசனைப் போன்ற தொண்டர்கள் இன்று திமுகவில் அருகி விட்டார்கள். பணம் சம்பாதிப்பது மட்டுமே லட்சியம் என்று அலைகிறார்கள். நான் அவர்களை குறை கூற மாட்டேன். திமுகவின் தலைமைப் பொறுப்பை 50 ஆண்டுகளுக்கு மேலாக வைத்திருக்கும் உன் தளபதியின் குடும்பம், வேறு யாருக்கு பொறுப்பை தந்திருக்கிறது. தொடர்ந்து அவர் குடும்பத்திடம்தானே இருக்கிறது என்ற அதிமுக தொண்டனின் கேள்வி, என் மனதிலும் தோன்றாமல் இல்லை. இருப்பினும் நான் கழக உடன்பிறப்பு அல்லவா. தலைமையை கேள்வி கேட்க எனக்கு அதிகாரமும் இல்லை. கேட்டால் எதுவும் நடக்கப்போவதுமில்லை.
2006 தேர்தலிலேயே ஒரு 15 சீட்டுகளை குறைவாக பெற்றிருந்தால், அன்றே எதிர்க்கட்சிதான். இத்தனைக்கும் ஜெயலலிதாவின் மோசமான கொடுங்கோல் ஆட்சியையும் மீறி, மக்கள் நமக்கு முழுப் பெரும்பான்மை அளிக்க மறுத்தார்கள். ஆனால் அந்த ஆட்சியில் உங்கள் குடும்பமும், உங்கள் உறவினர்களும் செய்த அராஜகங்களை மக்கள் 8 ஆண்டுகளைக் கடந்தும் இன்னும் மன்னிக்கத் தயாராக இல்லை. ஓட்டலில் காரை நிறுத்தக் கூடாது என்று சொன்ன வாட்ச்மேனை நோக்கி துப்பாக்கியை எடுத்து சுடுவதில் தொடங்கி, திரைத் துறையை முழுமையாக ஆக்ரமித்துக் கொண்டு, தியேட்டர் அதிபர்கள், தயாரிப்பாளர்களை மிரட்டுவது வரை, தமிழக மக்கள், முகம் சுளித்தார்கள். நெளிந்தார்கள். வெறுத்தார்கள். வேதனைப்பட்டார்கள். அந்த வேதனையை மக்கள் மறக்கவோ, மன்னிக்கவோ தயாராகவே இல்லை.
அதன் விளைவுதான், ஜெயலலிதாவின் படுமோசமான ஆட்சிக்குப் பிறகு கூட தொடர் தோல்விகளை சந்தித்துள்ளோம். எத்தனை மோசமான ஆட்சி நடத்தினாலும் பரவாயில்லை. புதிய தொழில் தொடங்காவிட்டாலும் பரவாயில்லை. பால் விலை, மின் கட்டணம் பேருந்துக் கட்டணத்தை உயர்த்தினாலும் பரவாயில்லை. தலைமைச் செயலகத்துக்கே போகாவிட்டாலும் பரவாயில்லை. வருடத்தில் நான்கு மாதம் கொடநாட்டிலே ஓய்வெடுத்தாலும் பரவாயில்லை. ஆனால் திமுக வேண்டாம் என்று மக்கள் முடிவெடுக்கும் அளவுக்கு உங்கள் தலைவரின் குடும்பத்தின் ஆதிக்கமும், அராஜகமும் தாங்க முடியாமல் இருந்தது என்று ஒரு இடதுசாரி நண்பன் கூறுவதை என்னால் முழுமனதோடு மறுக்க முடியவில்லை.
அதே தோழன், உங்கள் தளபதியின் மகன், தொண்ணூறுகளில் என்ன செய்து கொண்டிருந்தார் ? சென்னை வருமான வரித் துறை அலுவலகம் எதிரே உள்ள வணிக வளாகத்தில், சென்னையின் முதல் ஸ்னோபவுலிங் சென்டர் ஒன்றை 1999ல் தொடங்கி நடத்தினாரா இல்லையா ? அந்த தொழில் பெரிய அளவில் சோபிக்கவில்லை.
மீண்டும் திமுக ஆட்சி வந்தவுடன், 2008ம் ஆண்டு உதயநிதி ரெட் ஜெயன்ட் பிக்சர்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். முதல் படமே விஜய்யை வைத்து பெரிய பட்ஜெட் படம். திமுக ஆட்சி 2011ல் முடிவடைவதற்குள் மேலும் நான்கு படங்கள். இந்த திரைப்படங்களை தயாரிக்கும் அளவுக்கு, நஷ்டமடைந்த ஸ்னோபவுலிங் சென்டர் நடத்தி வந்த உதயநிதிக்கு எங்கிருந்து நிதி வந்தது ? அவர் என்ன பரம்பரை தொழிலதிபரா என்று அந்த தோழன் கேட்பது நியாயம்தானே ?
தீவிர இடதுசாரி அமைப்பை சேர்ந்த மற்றொரு தோழனுக்கு நான் திமுக என்பது நன்றாகத் தெரியும். அவனுக்கு வேலையே என்னை கிண்டல் செய்வதுதான். ஏம்ப்பா, ஜெயலலிதா வருமான வரி செலுத்தலை, ஊழல் பண்ணிட்டாங்கன்னு சொல்றீங்க. உங்க தளபதியோட மகன், வரி ஏய்ப்பு செய்து வெளிநாட்டு கார் வாங்கினது எதுல சேத்தி ? அது நேர்மையான செயலா ? உங்களுக்கு ஜெயலலிதாவை கேள்வி கேக்கறதுக்கு என்ன உரிமை இருக்குன்னு கேட்டான். என்னால் அவனுக்கு பதில் சொல்ல முடியவில்லை தளபதி. உதயநிதி திரைப்பட கதாநாயகனாக நடித்து, பல திரைப்படங்களில் நடிப்பது அவரது உரிமை. அதை யாரும் கேள்வி கேட்க முடியாது. ஆனால் நடிப்பதற்கு முன்பாகவே, நான்கு பெரிய பட்ஜெட் படங்களை தயாரிக்க எங்கிருந்து நிதி வந்தது என்று இவர்கள் கேட்கும் கேள்வியையும் பூசி மெழுகிதான் சமாளிக்கிறேன்.
சரி. அதிமுக கம்யூனிஸ்டுகள்தான் இப்படி நம் வளர்ச்சி மீது பொறாமை கொண்டு பேசுகிறார்கள், அவர்கள் கேள்விகளில் நியாயம் இருக்கிறது என்று வைத்துக் கொண்டால், என்றால், நம்மை அழித்தே தீர வேண்டும் என்று நினைக்கிற பிஜேபியினர் எழுப்பும் கேள்வியும் நியாயமாகத்தான் இருக்கிறது. நீண்ட நாட்களாக ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இருக்கும் ஒருவர் எழுப்பும் கேள்விகளில் உள்ள நியாயத்தையும் என்னால் மறுக்க முடியவில்லை.
இந்து கடவுள்களை திட்டுகிறீர்கள். பார்ப்பனர்களை திட்டுகிறீர்கள். திராவிடம் ஒன்றே தீர்வு என்று கூறுகிறீர்கள். ஆனால், உங்கள் தளபதியின் மனைவி, கோவில் கோவிலாக சென்று வழிபடுகிறார். அந்த கோவில்களில் நீங்கள் 70 ஆண்டுகளாக திட்டி வந்த பார்ப்பனர்கள்தானே பூஜை செய்கிறார்கள் ? எதற்காக உங்கள் தளபதியின் மனைவி அதே பார்ப்பனர்களிடம் கைகூப்பி நிற்கிறார் என்று கேட்டார் அந்த பக்தர்.
தளபதி சமீபத்தில் அளித்த பேட்டியில், நான் பகுத்தறிவாளர், ஆனால் என் மனைவி கோவிலுக்கு செல்லும் உரிமையை நான் மதிக்கிறேன். அவர் உரிமையில் தலையிட மாட்டேன் என்று சொல்லியிருக்கிறாரே என்று சரியாக திருப்பி அடித்தேன்.
ஆனால் அந்த பக்தர் சற்றும் சளைக்கவில்லை. அப்படியென்றால் பகுத்தறிவு பிரச்சாரம் யாருக்காக ? ஊரில் உள்ளவர்கள் கடவுளை திட்டி நிந்தனை செய்ய வேண்டும். இவரின் மனைவி, இவருக்காகவும், இவர் குடும்பத்துக்காகவும் கடவுளை வேண்டி, பிராத்தித்து, அர்ச்சனை செய்து, புண்ணியம் தேடிக் கொள்வாரா ? ஆத்தீகர்கள் அத்தனை பேருமே ஒப்புக் கொள்ளும் விஷயம், கடவுள் தூணிலும் இருக்கிறார், துரும்பிலும் இருக்கிறார் என்பது. கடவுளை தீவிரமாக நம்பும், உங்கள் தளபதியின் வீட்டில் உள்ள தூணில் கடவுள் இருக்க மாட்டாரா ? எதற்காக கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று கேட்டார். நான் எனக்கு அவசர வேலை இருக்கிறது என்று கூறி நகர்ந்து விட்டேன்.
இந்த கேள்விகளை மட்டும் இவர்கள் கேட்கவில்லை. ஆற்காடு வீராச்சாமிக்கு பிறகு, திமுகவில் வேறு தலைவர்களே இல்லையா ? செயல் தலைவரான பின்னரும் எதற்காக உங்கள் தளபதி பொருளாளர் பொறுப்பை இன்னும் தன் வசமே வைத்துக் கொண்டுள்ளார் என்று கேட்கின்றனர். என்னிடம் பதிலில்லை.
எத்தனையோ, தமிழறிஞர்களும், மொழியறிஞர்களும், மூத்த தலைவர்களும் இருக்கையில், கட்சிக்கு சொந்தமான முரசொலி நாளேட்டில் உதயநிதியை எதற்காக மேலாண் இயக்குநராக நியமித்தார் என்று கேட்கிறார்கள் என்னிடம் பதிலில்லை.
சொத்துப் பாதுகாப்புக் குழுவில், எத்தனையோ தலைவர்கள் இருக்கையில் உதயநிதியை எதற்காக உறுப்பினராக்கினார் என்று கேட்கிறார்கள் என்னிடம் பதிலில்லை.
முரசொலி அறக்கட்டளையில் உதயநிதி மூத்த திமுக தலைவர் என்பதற்காகவா உறுப்பினர் ஆக்கினார் என்று கேட்கிறார்கள், என்னிடம் பதிலில்லை.
நமக்கு நாமே என்ற பெயரே, உதயநிதியைப் பார்த்து கட்சி அவர்களுக்குத்தான் என்பதை சூசகமாக ஸ்டாலின் குறிப்பிட்டார் என்கிறார்கள், என்னிடம் பதிலில்லை.
பதிலே இல்லாவிட்டாலும், நானும் முரட்டுத்தனமாக அவர்களுக்கு எதையாவது சொல்லி சமாளித்துக் கொண்டுதான் இருந்தேன்.
ஆனால் எனக்குள்ளும் கேள்வி எழுகிறது.
திமுகவில் வாரிசு அரசியல். திமுக என்ன சங்கர மடமா ? கலைஞருக்கு பிறகு வேறு ஆள் இல்லையா ? தளபதி மட்டும்தான் தகுதியானவரா என்று கேள்விகள் எழுந்தபோதெல்லாம், நீங்கள் மிசாவில் சிறைபட்ட வரலாறு, திமுக போராட்டங்களில் கலந்து கொண்ட வரலாறு உள்ளிட்ட பல விஷயங்களை குறிப்பிட்டு பதில் கூறுவேன்.
ஆனால் இன்று உங்கள் மகன் உதயநிதியை நீங்கள் முன்னிறுத்துவதை என்னாலேயே ஏற்றுக் கொள்ள முடியவில்லை. உதயநிதி அரசியலில் இறங்குவதை என்ன சொல்லி என்னால் முட்டுக் கொடுக்க முடியும் ? அவர் மிகச் சிறந்த நடிகர் என்றா ? நயன்தாராவோடு ஜோடியாக படம் நடித்திருக்கிறார் என்றா ? அல்லது பல தோல்விப் படங்களில் நடித்த பெருமை உடையவன் என்றா ?
திமுக லட்சக்கணக்கான தொண்டர்களின் உழைப்பாலும், வியர்வையாலும், நன்கொடையாலும் வளர்ந்த இயக்கம். அது ஸ்டாலினுக்கும், அவர் மனைவி துர்காவுக்கும், மருமகன் சபரீசனுக்கும், மகன் உதயநிதிக்கும் மட்டுமா சொந்தம் என்ற கேள்விகள் சரியானவைதானா என்ற சந்தேகம் எனக்கும் வந்துள்ளது.
அன்பில் தர்மலிங்கமும் கலைஞரும் நண்பர்கள். தர்மலிங்கம் கட்சியில் பொறுப்பாளரானார். நீங்களும் தர்மலிங்கத்தின் மகன் பொய்யாமொழியும் நண்பர்கள். பொய்யாமொழி கழகப் பொறுப்பாளரானார். பொய்யாமொழியின் மகன் மகேஷ் பொய்யாமொழியும், உங்கள் மகன் உதயநிதியும் நண்பர்கள். மகேஷ் எம்எல்ஏ ஆகி விட்டார். அடுத்து உதயநிதியை பொறுப்புக்கு கொண்டு வர முயல்கிறீர்கள். இப்போது உதயநிதியின் திரைப்படங்களை ஓட வைப்பது முதல், அவரின் அரசியல் அறிமுகம் வரை, மகேஷ் பொய்யாமொழிதான், முன்னின்று செய்கிறார்.
பதின்பருவ வயது முறை நீங்கள் கழகத்தில் இருக்கிறீர்கள். கட்சிக்காக உழைத்திருக்கிறீர்கள். ஆனால் உங்களை மேயராக்கி அழகு பார்க்க வேண்டும் என்று தலைவருக்கு தோன்றியது உங்கள் 44வது வயதில்தான். எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர், ஆட்சிக்கு வந்த பிறகுதான் உங்களை மேயராக்கி அழகு பார்த்தார். அந்த பதவிக்கான தகுதியும், திறமையும் உங்களுக்கு உள்ளது என்பதை நீங்கள் நிரூபித்து காட்டி விட்டீர்கள். தலைவரின் தேர்வு சோடை போகாது என்பதையும் உலகுக்கு உணர்த்தி விட்டீர்கள். ஆனால் அதற்குள் உதயநிதிக்கு என்ன அவசரம் ?
வறுமை என்னால் என்ன, பசி என்றால் என்ன, சிறை என்றால் என்ன, காவல்துறை தடியடி என்றால் என்ன, போராட்டம் என்றால் என்ன என்று எதையுமே அறியாமல் திடீரென்று கட்சியில் நுழைகிறார் உதயநிதி. முன்னாள் மேயர் மா.சுப்ரமணியம், உதயநிதி சார் என்று அவரை அழைத்து, நாளைய எதிர்காலம் என்று வாழ்த்துகிறார். கழகத்தின் முன்னணி எம்எல்ஏவான ஜெ.அன்பழகன், உதயநிதி அரசியலுக்கு வந்தால் என்ன தவறு என்று கேட்கிறார். அவர்களுக்கு பதவி இருப்பதால் ஆதாயம் இருக்கிறது. கட்சிக்காக தொடர்ந்து போராட்டங்களில் கலந்து கொண்டு, கட்சியை நேசிக்கும் ஒரு கடைகோடி தொண்டனுக்கு ரத்தம் கொதிக்குமா கொதிக்காதா ? எந்தப் பதவியும் அடையாமல், திமுக கரை வேட்டி கட்டுவதையே பெருமையாக நினைத்து சுற்றிக் கொண்டிருக்கும் நான் எதற்காக உதயநிதியை வாழ்க என்று வாழ்த்த வேண்டும் தளபதி ?
பேருந்துக் கட்டணத்துக்காக மறியல் என்று கழகம் அழைப்பு விடுத்ததும், மறியலில் ஈடுபட்டு, கைதாகி, திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு, காவல்துறையினர் மதியம் வழங்கிய புளி சாதத்தை சாப்பிட்டு விட்டு என்னைப் போன்ற நூற்றுக்கணக்கான தொண்டர்கள் அமர்ந்திருக்கிறோம். திருநெல்வேலியில் சினிமா ஷூட்டிங்கில் கலந்து கொண்டு விட்டு, இரண்டரை கோடி ரூபாய் ஏசி காரில் திருமண மண்டபத்துக்கு வந்து, எங்களை பார்த்து விட்டு, பத்திரிக்கைக்கு பேட்டியளிக்கும் உதயநிதியைப் பார்த்து எனக்கு தளபதியின் மகன் என்பதையும் மீறி, எரிச்சலும் அருவருப்புமே வந்தது.
திமுகவின் அடிப்படை வாக்கு வங்கியிலேயே சரிவு ஏற்பட்டிருப்பதை நாம் கண்கூடாக பார்க்க முடிகிறது. திமுகவில் 24 ஆண்டு காலமாக இருக்கும் எனக்கே இப்படி எரிச்சல் ஏற்படுகிறதென்றால், வெளியிலிருந்து திமுகவை பார்ப்பவர்கள் எப்படி எரிச்சலடைவார்கள் என்பதை உங்களால் உணர முடிகிறதா தளபதி ?
இன்று திமுகவில் இருக்கும் 98 சதவிகிதத்தினர், பகுத்தறிவு கொள்கைக்காவோ, திராவிட பாரம்பரியத்துக்காகவோ, தமிழ் வளர்ககும் குணத்துக்காகவோ, மாநில முன்னேற்றத்துக்காகவோ இல்லை என்பது உங்களுக்கும் தெரியும். அந்த மீதம் உள்ள 2 சதவிகிதம் யார் தெரியுமா ? இன்று செயல்பாடு இல்லாமல் இருக்கும் கட்சியின் மூத்த தலைவர்கள்.
நான் உட்பட இவர்கள் அத்தனை பேருக்கும் திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்ற நோக்கமே, சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே. எந்த பொறுப்பிலும் இல்லாத எனது நோக்கமும் அதுதான். திமுக ஆட்சிக்கு வர வேண்டும். நம்ப கட்சி ஆட்சி நடக்கிறது என்று காலரை தூக்கி விட்டுக் கொண்டு நடக்க வேண்டும். நான் ஆளுங்கட்சி பிரமுகர் என்பதால், ஏதாவது சிபாரிசு என்று என்னிடம் வருவார்கள். அப்படி சிபாரிசில் வருபவர்கள் செலவில், ஆட்டோவில் தலைமைச் செயலகம் சென்று, நம் அமைச்சர்களின் பிஏக்களை பார்த்து, அந்த மனுவை அளித்து விட்டு, வேலை ஒரு வாரத்துல முடிஞ்சிடும் என்று வெட்டி பந்தா காண்பித்து விட்டு பிழைப்பை ஓட்ட வேண்டும் என்பதுதான். சிக்கன் பிரியாணியும், சீதேவி படமும் என்ற பிரபஞ்சனின் சிறுகதையில் வரும் அரசியல்வாதிதான் நானும். ஆனால் அதையும் திமுகவில் மட்டும்தான் செய்வேன். அதிமுகவுக்கு சென்று அதிகாரம் தேடும் காகம் அல்ல நான்.
ஆனால் அதுவும் நடக்கும் என்ற நம்பிக்கை தேய்ந்து கொண்டே வருகிறது.
2016லேயே வெற்றியை நூலிழையில் தவற விட்டோம். அடுத்து வரக்கூடிய தேர்தலில், ரஜினி, கமல் என்ற புதிய கட்சிகள் களத்தில் இறங்க உள்ளது. இவர்களுக்கு அதிக வாக்கு வங்கி உள்ளது அல்லது உருவாகப் போகிறது என்று நான் நம்பவில்லை. ஆனால் இவர்களால் ஒரு தொகுதிக்கு 3000 முதல் 6000 வரை வாக்குகள் வாங்க முடியும்தானே ? இப்படி தலைக்கு 5000 வாக்குகளை வாங்கி இவர்கள் இரண்டு பேரும் 15,000 வாக்குகளை பிரிப்பார்கள்.
மூன்று தேர்தல்களாக தொடர்ந்து செலவு செய்து சோர்ந்து போயுள்ள, திமுக வேட்பாளர்களால், டிடிவி தினகரன் மற்றும் அதிமுக பிரமுகர்கள் அள்ளி வீசும் பணத்துக்கு நிச்சயம் ஈடு கொடுக்க முடியாது.
இது மட்டுமல்லாமல், உதயநிதியின் தலையீட்டால், என்னைப் போன்ற திமுக தொண்டர்களே மாற்றி வாக்களிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. என்னால் ஒரு காலமும் அதிமுகவுக்கு வாக்களிக்க முடியாது. ஆனால் நோட்டாவுக்கு போட முடியும்தானே ?
இப்படி நான் மட்டுமல்ல. பல திமுக தொண்டர்கள் நினைக்கிறார்கள்.
இறுதியாக எனக்கு நானே சமாதானம் சொல்லிக் கொண்டேன். ஒரு வேளை இது தளபதிக்கு தெரிந்திருக்காது என்று. ஆனால் இன்று உதயநிதியின் அரசியல் பிரவேசம் பற்றி பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு நீங்கள், “உதயநிதியிடமே கேளுங்கள்” என்று பதில் கூறினீர்கள்.
எனக்கு இருந்த கடைசி நம்பிக்கையும் போய் விட்டது.
நான் இருந்த காலம் வரை, திமுகவில் ஒரு சுயமரியாதையுள்ள தொண்டனாக இருந்தேன். அப்படியே விடை பெறுகிறேன்.
அன்புடன்.
முன்னாள் திமுக தொண்டன்.
எண்ணிக்குடா திமுக தனியா நின்னு ஜெயித்தது . கூட்ட சேர்ந்து , துரோகி தலைவர்களுக்கு துட்டு கொடுத்து ஆட்சில் அமர்ந்த கட்சி. நல்ல இருபபாவனை கண்டால் எரிச்சலடையும் வக்கிரத்தை தூண்டிவிட்டு ஜெயித்த கட்சி திமுக. .
This is family party.
ஏன் உதயநிதி மீது இவ்வளவு கோபம்
உங்களின் அப்பாவின் வேலை உங்களுக்கு கிடைத்ததை போல அவரின் எதிர்காலம்?
உண்மையான தொண்டனோ, இல்லையோ.. இவையெல்லாம் இல்லை என்று யாராலும் மறுக்க முடியாதே.. ஏன் இது ஒரு அதிமுக தொண்டனின் எழுத்தாகவே இருக்கட்டுமே.. நியாயம் தானே.. ம்ம்ம்.. நோட்டா தான்..
thamizhakaththil mathuvai arimukappaduththiyathu,kachchatheevai dhaarai vaarththathu,kaveri nathineer prachnaiyil thamizhakathhin urimaikalai vittukkoduthathu aakiya drokankal thi.muka. aatchiyin karaipatta azhikka mudiyaatha varalaaru!
உண்மையான திமுக தொன்டனின் குரல் அல்ல எந்த அல்லகை இதை எழுதியதோ அதர்கே சமர்ப்பணம்
ஊழல், குடும்ப அரசியல் மற்ற மாநிலத்தில் கட்சிகள் செய்யாததா? தி மு க செய்த எதை வேண்டுமானாலும் மன்னிப்பேன்…தமிழ் தமிழ் என்று சொல்லி பதவி சுகத்திற்காய் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை மரணக்குழியில் தள்ளியதை எந்த காலத்திலும் எந்த நிலையிலும் மன்னிக்கவே முடியாது….அழிந்து போகட்டும் தி மு க
அவசியமான பதிவு. திமுக சாராதவர்களுக்கும் இருக்க கூடிய இயல்பான கேள்வியும், ஏக்கமும் இதுதான். ஸ்டாலின் இதுபோன்ற தற்கொலை முடிவுகளை எதிர்பார்த்தது தான். திமுகவின் தொடர் தோல்விகளுக்கும், இனி வரவிருக்கும் தோல்விகளுக்கும் அடிப்படையாக இம்முடிவுகள் இருக்கும். விரைவில் “திமுக எனும் டைனோசர்” எனும் கட்டுரை கூட வரலாம்.
அருமையான பதிவு.
ஆனால், தி.மு.க வின் தொடர் தோல்விகளுககு காரணமாக
திகழும் மின் தட்டுப்பாடு, மற்றும் இலங்கை தமிழர்கள் பிரச்சனையில் நடத்திய நாடகம் இவற்றை நாசூக்காக தவிர்த்து விட்டீர்கள்.
அருமையான பதிவு. எப்போதும் கட்சியை மட்டுமே நம்பாமல் நிற்கும் வாக்காளர்களை பார்த்து ஓட்டளித்து வந்திருந்தால் இன்று தமிழகத்தில் ஏன் இந்தியாவில் கூட ஊழல் வாரிசு அரசியல் பெருகியிருக்காது. கட்சிகளும் நல்லது செய்தால் தான் ஆட்சி செய்யமுடியும் என்று சரியான வழியில் ஆட்சி செய்திருப்பார்கள். நான் எந்த கட்சியையும் சாராதவன். அனைத்து கட்சி மீது வெறுப்பே அதிகம். ஆனால் அனைத்து கட்சியிலும் சில நபர்கள் பிடிக்கும். கண்கெட்ட பிறகு நீங்கள் சூரிய நமஸ்காரம் இல்லை இல்லை கதிரவ வணக்கம் சொல்கிறீர்கள்.
அறநெறிவாளன் – டிவிட்டர் முகவரி
very correct ..congratulation
என்னுடைய மன நிலையை அப்படியே பிரதிபலித்திருக்கிறீர்கள். ஒவ்வொரு நாளும் நண்பர்களிடத்தில் ஆவேசமாக உரையாடும் எனக்கு இன்று பதிலில்லை. This is the last straw