சம்பத் முகத்தில் வியர்வைத் துளிகள். ”சார் அந்த பைலத்தான் தேடிக்கிட்டு இருக்கேன். ரெண்டு நாள்ல எடுத்துடுவேன் சார்”
”என்ன சம்பத் வெளையாட்றீங்களா… ? இதோட சீரியஸ்னெஸ் தெரியுமா உங்களுக்கு ? 1200 கோடி ரூபா லோன் குடுத்த பைல் எப்படி சார் காணாம போகும் ? இன்னைக்கு சாயங்காலத்துக்குள்ள அந்த பைல் என் டேபிளுக்கு வரணும். இல்லைன்னா, ஐ வில் சென்ட் ய ரிப்போர்ட்”
”எப்படியாவது எடுத்துட்றேன் சார்”
”போங்க சார்.. போய் தேடி எடுங்க… இங்க வந்து தலைய சொறிஞ்சுக்கிட்டு நிக்காதீங்க. ”
இவர்களெல்லாம் அரசு இயந்திரத்தின் முக்கிய உதிரி பாகங்கள். இவர்கள் இல்லாவிட்டால் அரசு இயந்திரம் இயங்காது. முக்கியமான பைலை காணாமல் போட்டு விட்டு வந்து தலையைச் சொரிந்து கொண்டு நிற்கும் சம்பத்தைப் பார்த்ததும் பரிதாபம் வரவில்லை. எரிச்சல்தான் வந்தது. ‘ ஏன் இப்படி இருக்கிறார்கள்… ? எ்னனதான் சங்கம், யூனியன் என்று கம்யூனிசம் பேசிக் கொண்டிருந்தாலும், வாங்கிய சம்பளத்துக்கு வேலை செய்யாமல், இப்படி சட்டம் பேசிக்கொண்டிருப்பவர்களை ஏன் வேலை நீக்கம் செய்யக் கூடாது ?’ என்ற எண்ணத்தைத் தவிர்க்க முடியவில்லை.
‘இவர்களெல்லாம் உரிமையைக் கேட்கும் அதே நேரம் கடமையைச் செய்ய வேண்டும் என்பதை ஏன் எண்ண மறுக்கிறார்கள் ? நானும்தானே சங்கத்தில் இருக்கிறேன்… என் வேலையைச் செய்ய என்றாவது தவறியிருக்கிறேனா ? சில சமயம் யோசிக்கும்போது, சங்க உரிமைகள் சோம்பேறித்தனத்தை வளர்க்கிறதோ என்றே தோன்றுகிறது. ஆனால், இதைப்பற்றி சங்கத்தில் பேசினால், என்ன தோழர் நீங்களே இப்படி… என்று எதிர்க் கேள்வி கேட்பார்கள்’
மேசையிலிருந்த மணியை அடித்து, ஜனனியை வரச்சொன்னான்.
“குட் ஈவ்னிங் சார்“
“குட் ஈவ்னிங். ராணா கார்ப்ரேஷன் அக்கவுன்ட் டீடெயில்ஸ் கேட்டேனே ரெடி பண்ணிட்டீங்களா ? “
“இல்ல சார்… சம்பத் சார் அக்கவுன்ட் டேலி பண்ணிக்கொடுக்கச் சொன்னார். அந்த வொர்க்தான் பாத்துக்கிட்டு இருக்கேன்“ என்று அவள் சொல்லியபோதே கோபம் என் தலைக்கு ஏறியது.
“என்ன நெனச்சுக்கிட்டு இருக்கீங்க… இங்க நான் மேனேஜரா.. சம்பத் மேனேஜரா…. ? நான் சொன்ன வொர்க் எவ்வளவு அர்ஜென்ட் தெரியுமா ?
ப்ரோபேஷன் கம்ப்ளீட் பண்ணணுமா வேணாமா ? ஐ வில் ப்ளேஸ் யூ அன்டர் சஸ்பென்ஷன் ஃபார் இன்சபார்டினேஷன்… (For insubordination)“
“சம்பத் சார் சொல்லும்போது தட்ட முடியலை சார்…“
“ஏதாவது எக்ஸ்க்யூஸ் சொல்லாதீங்க… உங்கள மாதிரி பொம்பளைங்கள என் ப்ரான்ச்சுல போட்டு ஏன் என் தாலிய அறுக்கறாங்களோ தெரியலை….”
அது வரை இறுக்கமான முகத்தோடு திட்டுவதைக் கேட்டுக் கொண்டிருந்தவள் கண்களில் கண்ணீர்..
“ஐ எம் சாரி சார்.. சம்பத் சார் ரொம்ப சீனியர். அவர் சொன்னா எப்படி சார் தட்ட முடியும்“ என்று அவள் கண்களில் மழைக்கால நீரோடையாக கண்ணீர் கொட்டியது.
‘ச்சை அவசரப்பட்டு விட்டோமோ.. இவளை எப்படி சமாதானப்படுத்துவது ? என்னைப் பற்றி என்ன நினைத்திருப்பாள் ?’
“சிட் டவுன். “ என்றதும் “பரவாயில்லை சார்“ என்று சொல்லிவிட்டு, கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.
“உக்காருங்க… பரவாயில்லை“ என்று சொன்னதும் தயக்கத்தோடு சீட் நுனியில் உட்கார்ந்தாள். ‘சவுகரியம் இல்லாமல் சீட் நுனியில் உட்கார்ந்தால் அது பணிவு என்பதை யார் கற்றுக் கொடுத்தது… இது இந்தியாவில் மட்டும்தானா, உலகம் முழுவதுமா ? சீட் நுனியில் உட்கார்ந்தால், செய்த தவறு சரியாகிவிடுமா ? சீட் நுனியில் உட்கார்வது, கால் மேல் கால் போட்டால் மரியாதைக் குறைவு, நிமிர்ந்து பேசக்கூடாது என்று மரியாதைக்கான அளவுகோல்கள் எத்தனை இருக்கின்றன’ என்று நினைத்துக்கொண்டு, தலையைக் குனிந்து அழுது கொண்டிருந்தவளைப் பார்த்தான்.
“ஜனனி.. லுக் ஹியர். ஐ யம் சாரி… ஐ ஷுட் நாட் ஹேவ் ஷவுட்டட். அந்த அக்கவுண்ட்ஸ் அர்ஜென்ட் ஜனனி. பெரிய கஸ்டமர். நம்ம சர்வீஸ்ல குறை இருந்துச்சுன்னா, நாளைக்கே அக்கவுன்ட்ட க்ளோஸ் பண்ணிட்டு, வேற பேங்குக்கு போயிடுவான்.. நம்ப ப்ரான்சுக்கே கெட்ட பேர் வந்துடும்“
“ஐ யம் சாரி சார். உடனே டீடெயில்ஸ் எடுத்துட்டு வந்துட்றேன் சார்“.
‘இவளை இப்படியே அழுத கண்களோடு எப்படி அனுப்புவது ?’
“எங்க தங்கியிருக்கீங்க ஜனனி ? ஹாஸ்டலா… ? “
“இல்ல சார் பேமிலியோடதான் சார் இருக்கேன்…“
“ஹஸ்பென்ட் என்ன பண்றார் ? “ என்று கேட்டதும், அவள் கண்கள் தடுமாறின.
“ஹஸ்பென்ட்…. அவர்…“
“இட்ஸ் ஓகே… விடுங்க… நோ ப்ராப்ளம்“
“இல்ல சார்… ஐ யம் அலோன் வித் மை சன். என் ஹஸ்பென்ட் என் கூட இல்லை.“ என்று அவள் சொல்லியதும் அதிர்ச்சியும், பரிதாபமும் ஒரு சேர ஏற்பட்டன.
“சரி நீங்க போங்க ஜனனி. நாளைக்கு மார்னிங் அந்த டீடெயில்ஸ் குடுத்துடுங்க“
“ஓ.கே சார்.. ஐ யம் சாரி சார்“
“பரவாயில்லை விடுங்கம்மா…“
மாலையில் அலுவலகம் முடிந்து, பைக்கை எடுத்து கிளம்பியபோது, எங்கே போகலாம் என்று குழப்பமாக இருந்தது. வழக்கமாக, அலுவலகம் முடிந்ததும், சங்க அலுவலகத்துக்குச் சென்று சிறிது நேரம் அரசியல் பேசி விட்டு, உலகப்பொருளாதாரத்தை, ஒரு மணி நேரத்தில் சரி செய்து விடுவது போல விவாதித்து விட்டுத்தான் வீட்டுக்குப் போவான். ஆனால் இன்றைக்கு என்னமோ சங்கத்துக்குப் போக பிடிக்கவில்லை.
மனசு அழுத்தமாக இருப்பது போல இருந்தது. நேராக மெரினா பீச்சுக்கு போகலாமா.. என்று யோசித்தபடியே வண்டியை பீச் பக்கம் திருப்பினான். கிடைத்த ஒரு சந்தில் பைக்கை நிறுத்தி விட்டு, மணலில் இறங்கி நடந்தான்.
எங்கே பார்த்தாலும் காதல் ஜோடிகள் கை கோர்த்தபடி, அந்த உலகமே தங்களுக்காக படைக்கப்பட்டது போல பேசிக்கொண்டு இருந்தார்கள். ஒரு சில ஜோடிகள் அருகருகே அமர்ந்து பேசாமல் இறுக்கமாக இருந்தார்கள். சிலர் குழந்தைகளோடு வந்து, குழந்தைகளை விளையாட விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
புதிதாக திருமணமான சில பெண்கள், கல்யாண தினத்தன்று கட்டிய தாலிக் கயிறு அடர்த்தியாக மஞ்சளாக கழுத்தில் கிடப்பதை பெருமையோடு சிலிர்த்தபடி நடந்தார்கள். அந்த புதிய ஜோடிகளை பூ விற்கும் பெண் பூ வாங்கியே தீரும்படி வற்புறுத்தினாள். வாங்கிக் கொடுக்க வில்லையென்றால், விளைவுகள் இரவு தெரியும் என்ற அச்சத்தோடு புதுக் கணவர்கள் தாராளமாக பூ வாங்கித் தந்தார்கள். கணவரின் கையை விடாமல் பிடித்துக் கொண்டு, தோளில் சாய்ந்தபடி நடந்தார்கள்.
‘நானும் என் பங்குக்கு ஒரு சிகரெட்டை பற்றவைத்துக் கொண்டு, இவர்கள் அனைவரையும் வேடிக்கை பார்த்தேன். மென்மையாக வீசிய காற்று, சிகரெட்டை வேகமாக கரைத்தது. அப்படியே படுக்கலாமா என்று தோன்றியது.
‘ரொம்பத் திட்டி விட்டோமோ… இப்போதுதானே புதிதாக வேலைக்குச் சேர்ந்திருக்கிறாள். அதுவும் சம்பத் போன்ற நபர்கள் புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர்களை மிரட்டி வைப்பதில் அலாதி இன்பம் காண்பவர்கள். அவர்கள் வேலைக்குச் சேர்ந்தபோது யாரோ மிரட்டினார்கள் என்பதற்காக அவர்கள் முறை வரும்போது, அதை தவறாமல் பயன்படுத்திவிட வேண்டும் என்று நினைப்பவர்கள். தங்கள் மேதாவித்தனத்தை புதிய ஊழியர்களிடம் காண்பிப்பதில் நிபுணர்கள். நானே இதை அனுபவித்திருக்கிறேன். அவள் என்ன செய்வாள் பாவம்…
சம்பத் மீது இருந்த கோபத்தைத்தான் அவளிடம் காட்டி விட்டேன். அதற்கு என்ன செய்வது… அவள் செய்ததும் தவறுதானே… நான் ஒரு வேலையைச் சொன்னால், அதை முடிக்காமல் அவன் சொன்னான் இவன் சொன்னான் என்று வேலை செய்து கொண்டிருந்தால், அப்புறம் கோபப்படாமல் கொஞ்சவா செய்வார்கள்.
அதற்காக என் தாலியறுக்கிறார்கள் என்று சொல்லுவதா ? ஒரு பெண்ணிடம் பயன்படுத்தும் வார்த்தையா இது ?’
‘என்னதான் கம்யூனிசம் பெண் விடுதலை என்று பேசினாலும், தாலியறுக்கிறாங்க என்ற பிற்போக்குத்தனமான வார்த்தைகள் நம்மை அறியாமலேயே வந்து விழுந்து விடுகிறதே..’
‘இந்தப் பெண்களால் மட்டும் எப்படி சட் சட்டென்று அழ முடிகிறது ? இவர்கள் கண்ணீர் வரும் வேகத்தில், நதிகளில் நீர் ஓடினால் தண்ணீர் பிரச்சினையே இருக்காது. வெள்ளம் வந்தாலும் வரும் ’
‘கணவன் இல்லை என்கிறாளே… இறந்திருப்பானோ… ச்சே.. இறந்திருந்தால், விடோ என்றல்லவா சொல்லியிருப்பாள். விட்டு விட்டு ஓடியிருப்பானோ ? அல்லது வேறு பெண்ணோடு சென்றிருப்பானோ ?’
‘இந்த வயதில் கணவன் இல்லாமல் எப்படி இருப்பாள் அவள் ? இந்த பீச்சில் ஜோடி ஜோடியாக எத்தனை பேர் மகிழ்ச்சிகளையும், மனக்குமுறல்களையும், இந்த கடற்கரையில் கொட்டி விட்டுச் செல்கிறார்கள். கோர்த்த கையை விடாமல் கெட்டியாக பிடித்துக் கொண்டுதானே நடக்கிறார்கள் ? அவள் என்ன செய்வாள் ?’
‘சே… இருந்தாலும் கொஞ்சம் அதிகமாகத்தான் திட்டிவிட்டோம். கொஞ்சம் பொறுமையாக சொல்லியிருக்கலாம்.’
‘இவளுக்குள் இப்படி ஒரு சோகமா ? இவ்வளவு அழகாக இருக்கிறாள். பார்த்தால் 25 வயதுக்கு மேல் மதிக்க முடியாது. அதிகபட்சம் 28 வயது இருக்குமா ? மகன் எவ்வளவு பெரியவனாக இருப்பான்.. கை குழந்தையாக இருக்க வாய்ப்பில்லை.. பெரிய பையனாக இருப்பானோ ? இவள் தனியாக இந்த வங்கியில் எப்படி காலம் தள்ளப் போகிறாள்.. ? தனியாக இருக்கும் பெண் என்றால், இரையைக் கொத்தத் துடிக்கும் கழுகுகள் போல வட்டமிடுவார்களே.. அவர்களை எப்படிச் சமாளிக்கப்போகிறாள் ?’
‘இவ்வளவு சோகத்தை மனதில் தாங்கி இருப்பவளிடம் இப்படியா நடந்து கொள்வது ? என்ன மனிதன் நான்… ?’
‘சோ வாட்… நான் அதிகாரி.. இந்த ப்ரான்ச் மேனேஜர்.. எனக்குக் கீழே வேலை பாக்கறவங்கள வேலை வாங்காம சும்மாவா இருக்க முடியும். வேலை வாங்குவது என் வேலை. அதற்குத்தான் எனக்கு சம்பளம்’ என்ற எனது அதிகாரத் திமிர் என்னையறியாமல் தலைத் தூக்கியது.
கேள்விகளும் எதிர்க் கேள்விகளும், அவன் அதிகமாக பேசிவிட்டதை அவனுக்கு உணர்த்தின.
சாரி கேட்டு எஸ்எம்எஸ் அனுப்பலாம் என்று முடிவெடுத்து போனை எடுத்ததும் அவள் நம்பர் இல்லை என்பது உறைத்தது. அன்று காலையில்தான் எல்லா ஸ்டாஃப் நம்பர்களையும் அச்சடித்து தன்னிடம் கொடுத்தது ஞாபகம் வர, முதுகில் மாட்டியிருந்த பையை எடுத்து அதில் உள்ள ப்ரின்ட் அவுட்டில் அவள் பெயரைத் தேடினான்.
“ஐ யம் சாரி.. ரொம்ப சத்தம் போட்டுட்டேன்“ என்று அடித்தான். இது ‘போதுமா… அவள் புரிந்து கொள்வாளா….’ பரவாயில்லை. இதற்கு மேல் அனுப்பினால், ஓவராக அட்வான்டேஜ் எடுத்துக் கொள்கிறான் என்று நினைத்தாலும் நினைப்பாள். அனுப்பி விட்டு பைக்கை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு கிளம்பினான்.
டிவி பார்த்துக் கொண்டிருந்த அவன் அம்மாவிடம் “சாப்பாடு போடும்மா” என்று சொல்லி விட்டு, டிவி பார்த்துக் கொண்டே சாப்பிட்டு முடித்தான். நேற்று பாதியில் விட்டிருந்த புத்தகத்தை எடுத்து பிரித்து படிக்கத் தொடங்கியபோது, எஸ்எம்எஸ் வந்ததை அறிவித்தது செல்போன்.
‘அவளாக இருக்குமா ?’ என்று யோசித்தவாறே எடுத்து பார்த்தால், அவளேதான்… ”ஹூ ஈஸ் திஸ்” என்று அனுப்பியிருந்தாள்.
“வெங்கட் மேனேஜர்“ என்று பதில் அனுப்பினேன். பதில் அனுப்பிவிட்டு, மீண்டும் புத்தகத்தை திறந்தாலும், மனம் செல்போன் எப்போது ஒலிக்கும் என்ற கவனத்திலேயே இருந்தது.
மீண்டும் செல்போன் ஒலி கேட்டது.
“பரவாயில்லை சார். என் தப்புதானே.. “
“நான் கொஞ்சம் அதிகம் சத்தம் போட்டுட்டேன்“
“நான் அதை அப்போவே மறந்துட்டேன் சார்“
“எனக்கு கில்டியா இருக்கு“
“அப்போ நாளைக்கு எனக்கு காபி வாங்கிக் கொடுங்க“
“டின்னரே வாங்கித் தர்றேன்.“
“அதுக்காக இன்னொரு வாட்டி திட்டாதீங்க…“
“திட்டாமலே வாங்கித் தர்றேன்“
“அப்டின்னா ஓகே. “
“குட் நைட் சார்“
“குட் நைட் ஜனனி“
போனை வைத்ததும், அதற்குள் குட்நைட் சொல்லி விட்டாளே என்று தோன்றியது. இன்னும் வேறு ஏதாவது எஸ்எம்எஸ் அனுப்பியிருக்கலாமோ… என்று யோசித்துக் கொண்டே உறங்கிப் போனான்.
காலையில் எழுந்ததும் முதல் வேலையாக “குட் மார்னிங்” என்று எஸ்எம்எஸ் அனுப்பினான். அவன் குட்மார்னிங் சொல்லாவிட்டால், அவளுக்கு பொழுது விடியாமலா போய் விடும் என்பது போன்ற லாஜிக்கெல்லாம் அவனுக்கு அப்போது தோன்றுமா என்ன ?
காலையில் ஹிந்து பேப்பரை படிக்கும் போது கூட, பதில் வந்திருக்கிறதா என்று ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை எடுத்துப் பார்த்துக் கொண்டே இருந்தான். அப்படி தன்னையறியாமல் செல்போனை அடிக்கடி எடுத்துப் பார்ப்பதையும் அவன் உணர்ந்ததாக தெரியவில்லை.
ஆனால் அவன் அலுவலகம் செல்லும் வரை எந்த பதிலும் வரவில்லை. ப்ரான்ச் உள்ளே நுழைந்ததும், அவள் வந்திருக்கிறாளா என்று தேடிக்கொண்டே அவன் அறைக்கு சென்றான்.
அவளைக் காணவில்லை. ஜனனி வரவில்லையா என்று யாரிடமும் கேட்பதற்குக் கூட தயக்கமாக இருந்தது. நேற்று வரை, இயல்பாக அவளை அழைத்தவனுக்கு இன்று அவனையறியாமல் ஒரு குறுகுறுப்பு ஏற்பட்டது. கேட்டால், யாராவது ‘என்ன மேனேஜர் அடிக்கடி ஜனனியைக் கூப்பிடுகிறார்’ என்று பேசத் தொடங்கி விடுவார்களோ என்ற எண்ணம் தடுத்தது.
வெளியே சென்று கேஷ் கவுன்டரில் உள்ளவரை சரி பார்ப்பது போல, ஜனனி வழக்கமான அமர்ந்திருக்கும் இடத்தைப் பார்த்து விட்டு, அவள் இல்லை என்பதை ஊர்ஜிதம் செய்து கொண்டான்.
‘என்ன ஆயிருக்கும் ? உடம்பு சரியில்லாமல் இருக்குமா ?’ என்று யோசித்துக் கொண்டே சீட்டுக்கு வந்து அமர்ந்தான். ஏதாவது தப்பாக எஸ்எம்எஸ் அனுப்பி விட்டோமோ என்று சென்ட் ஐடெம்ஸை எடுத்துப் பார்த்தான்.
‘அப்படி எதுவும் தப்பாக அனுப்பவில்லையே… கடைசியாக அவள் நல்ல மூடில்தானே குட்நைட் என்று அனுப்பியிருக்கிறாள் …. ‘
கம்ப்யூட்டரில் லாகின் செய்து, அன்றைய ட்ரான்சாக்சன்களை பார்த்துக் கொண்டிருந்தான். சம்பத் தரவேண்டிய பைலை இன்னும் தரவில்லை என்பது நினைவுக்கு வந்தது. நினைவுக்கு வந்தாலும், அந்த ஆளை அழைத்துப் பேசினாலே மூட் அவுட் ஆகி விடும் என்று, அதை தள்ளிப் போடலாம் என்று மற்ற வேலைகளில் ஆழ்ந்தான்.
12.40க்கு செல்போனில் எஸ்எம்எஸ் அலர்ட் வந்தது. எடுத்துப் பார்த்தால் ஜனனி.
“எமர்ஜென்சி.. நீங்கள் என் வீட்டுக்கு அவசரமாக வர முடியுமா ?”
தொடரும்.
அருமையாக தொடர்கிறது….. வாழ்த்துக்கள் நண்பரே.
வேள்வி – 1 link கிடைக்குமாங்க தோழர்.
Next?
Good twist.