‘சம்பத்தும் சீட்டில் இல்லை. யாரிடம் சொல்லிவிட்டுப் போவது ? என்ன எமர்ஜென்சியாக இருக்கும் ? மகனுக்கு உடம்பு சரியில்லாமல் போயிருக்குமா ? பணத்தேவையாக இருக்குமா ?’
கேஷியரைக் கூப்பிட்டு அவனது அக்கவுன்டில் இருந்து 10 ஆயிரம் ரூபாயை எடுப்பதற்கு வவுச்சர் எழுதிக் கொடுத்து உடனடியாக கொண்டு வருமாறு சொன்னேன். உதவி மேலாளர் சுப்ரமணியை அழைத்து, அதுவரையிலான அக்கவுன்ட்ஸ் பற்றிய விபரங்களை தெரிவித்து விட்டு, லாக்கர் அறையின் சாவியை ஒப்படைத்து விட்டு, அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லை என்று அவசரமாக லீவ் எழுதிக் கொடுத்து விட்டு கிளம்பினேன்.
அந்த நேரத்தில் லேன்ட்லைன் போன் அடித்தது. ‘எடுக்கலாமா வேண்டாமா ?’
போனை எடுத்து “ஹலோ“ என்றேன்.
“பேங்க் விஜிலென்ஸ் ஆபீசர் பேசறேன். மேனேஜரா ?“
“எஸ் சார். நான் மேனேஜர் வெங்கட்தான் பேசறேன் சார்.“
“உங்க ப்ரான்ச்ல ஆர்.கே.என்டர்பிரைசஸ் கம்பேனி 1200 க்ரோர்ஸ் லோன் வாங்கிருக்காங்கள்ல ? “
“எஸ் சார். ஃப்ரம் டே ஒன் டிஃபால்ட் சார். நோ ரீபேமென்ட்“
“அந்த டாகுமென்ட்செல்லாம் எடுத்துக்கிட்டு, உடனே விஜிலென்ஸ் ஆபீஸ் வாங்க. எங்க இருக்குன்னு தெரியும்ல ?“
“தெரியும் சார். பாரீஸ் கார்னர். நான் ஏற்கனவே வந்துருக்கேன் சார்.“
“ஆல்ரைட் தென். கம் க்விக்“
ஷிட் என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு, வெளியே சென்று சம்பத்தைத் தேடினான்.
சம்பத் ரொம்பத் தீவிரமாக ஏதோ ஒரு பைலைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
“சம்பத். கொஞ்சம் என் ரூமுக்கு வாங்க.“
சம்பத் தயங்கியபடியே என் அறைக்குள் நுழைந்தார்.
“சம்பத். அந்த ஆர்.கே. இன்டஸ்ட்ரீஸ் லோன் பைல் என்ன ஆச்சு ?“
“சார்.. இன்னைக்கு ஈவ்னிங்குள்ள எடுத்துட்றேன் சார். ரெண்டு நாளா தேடிக்கிட்டே இருக்கேன் சார்.“
“லுக் சம்பத். நீங்க ரொம்ப சீனியர். நான் உங்கள ஒரு அளவுக்கு மேல சத்தம் போட முடியாது. இப்போ ஹெட்க்வார்ட்டர்ஸ் விஜிலென்ஸ் ப்ரான்ச்லேர்ந்து அந்த பைலோட என்ன வரச்சொல்லிருக்காங்க. ஒன்னு நான் பைலோட போகணும். இல்லன்னா நீங்க பைல டெஸ்ட்ராய் பண்ணிட்டீங்கன்னு ரிப்போர்ட்டோட போகணும்.
இதுல எது நடக்கனும்னு நீங்கதான் முடிவு பண்ணணும். இன்னும் 8 வருஷம் சர்வீஸ் இருக்கு உங்களுக்கு. நான் ரிப்போர்ட் அனுப்பிச்சா உடனே சஸ்பென்ட் பண்ணிடுவாங்கன்னு உங்களுக்குத் தெரியும். என்ன சொல்றீங்க ? “
“சார்.. அந்த பைலை உங்களுக்கு முன்னாடி இருந்த மேனேஜர் பர்சனல் கஸ்டடில வச்சுருந்தார் சார். லோன் டாக்குமென்ட்ஸ் நான்தான் டீல் பண்ணாலும், அந்த பைல மட்டும் அவரே பர்சனல் கஸ்டடில வச்சுக்கிட்டார் சார்.“
“இத ஏங்க மொதல்லயே என்கிட்ட சொல்லல ? வாட் ஆர் யு ட்ரையிங் டு ஹைட் ? இத்தனை நாள் டைம் வேஸ்ட் ஆகாம இருந்துருக்கும் இல்ல ? ஓ.கே.. பழைய மேனேஜரோட பர்சனல் லாக்கர் எங்க இருக்கு ? “
“சார் அவருக்குன்னு இருந்த பீரோவில இருந்ததையெல்லாம் காலி பண்ணிட்டு போயிட்டாரு சார். அவருக்குன்னு நம்ப ப்ரான்ச்சிலேயே ஒரு பர்சனல் லாக்கர் இருக்கு. பட் அவர் பர்மிஷன் இல்லாம அதை ஓபன் பண்ண முடியாது சார். “
“அந்த லாக்கர்ல இந்த பைல் இருக்கும்ணு சந்தேகப்பட்றீங்களா ? “
“எனக்குத் தெரியல சார். பட் அந்த லாக்கர அவர் ஓபன் பண்ணும்போது, ரிஜிஸ்டர்ல என்ட்ரி போட வேணாம்னு சொல்லுவாரு.“
‘இப்போது என்ன செய்வது ? பைலை எடுத்து வரவில்லை என்றால் என்னை சஸ்பென்ட் செய்வார்கள். என் மீது சந்தேகப்படுவார்கள். பைல் சம்பத்திடம் இல்லை என்றால் சம்பத்தை சஸ்பென்ட் செய்யச் சொல்வார்கள். இந்த ஆள் இதில் தப்பு செய்திருக்கிறானா இல்லையா என்பது புரியமாட்டேன்கிறது. அதை உறுதி செய்து கொள்ளாமல், இந்த ஆளை சஸ்பென்ட் செய்து விட்டால், அவன் மட்டுமல்லாமல் அவன் குடும்பமும் பாதிக்கப்படும்.
சீனியர் மேனேஜர் என்ற வகையில் எனக்கு பழைய மேனேஜரின் வங்கி லாக்கரை திறக்க அதிகாரம் இருக்கிறது. ஆனால், என்ன காரணத்துக்காக திறந்தேன் என்ற கேள்வி எழும். பைல் இருக்கிறதா என்று பார்க்க என்றால் அது எடுபடுமா ? சிபிஐ லாக்கர்களை திறக்கும்போது கூட, அருகில் விட்னஸ் இல்லாமல் திறப்பதில்லை. நான் இந்த நேரத்தில் எந்த விட்னசைத் தேடுவது ?’
குழப்பம். குழப்பம். மேலும் குழப்பம்.
விஜிலென்ஸ் ஆபீசுக்கு போன் செய்தேன். “சார். ஒரு இம்பார்ட்ன்ட் கஸ்டமர் வந்துருக்காங்க. அவசரமா அட்டென்ட் பண்ணணும். ஐ வில் கம் தேர் பை ஈவ்னிங் அரவுன்ட் 4 பிஎம்“ என்றேன்.
“இட்ஸ் ஓ.கே.. பட் டோன்ட் டிலே“
என்ன ஆனாலும் சரி. லாக்கரை திறந்து பார்த்து விடுவோம். அதில் இருக்கிறதா இல்லையா என்பதை உறுதி செய்து கொண்டு, அடுத்து என்ன செய்வது என்று முடிவெடுப்போம்.
“சம்பத்.. வாங்க. மாஸ்டர் கீஸ் எங்க இருக்கு.. லாக்கர் அசிஸ்டன்ட் மேனேஜர் கிட்ட இருக்கு சார். “
“ஓ.கே. கிருஷ்ணமூர்த்தியை வரச்சொல்லுங்க. நீங்களும் வாங்க. வேற யார் சீனியர் பீப்பிள் இருக்காங்க… ? “
“சார். சாகுல் ஹமீது இருக்கார் சார். “
“ஓ.கே.. அவரையும் வரச்சொல்லுங்க.
நான்குபேரும், லாக்கர் அறைக்குள் நுழைந்தனர். லாக்கரைத் திறக்கும் முன், அதற்கான பதிவேட்டில், விஜிலென்ஸ் அலுவலகத்தில், ஆர்.கே.இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு 1200 கோடி ரூபாய் கடன் கொடுத்தது தொடர்பான பைல் காணாமல் அலுவலகமெங்கும் தேடப்பட்டது என்றும், அது கிடைக்காததால், பழைய மேனேஜர் சொந்தமாக வைத்திருக்கும் லாக்கருக்குள் அது இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால், மூன்று வங்கி ஊழியர்கள்‘ முன்னிலையில், வங்கியின் மாஸ்டர்கீயை பயன்படுத்தி, வங்கி லாக்கர் திறக்கப்படுவதாக பதிவு செய்தேன்.
அந்த பதிவேட்டில், மூன்று பேரையும் கையெழுத்திடச் சொன்னேன். மறுப்பேதும் பேசாமல் கையெழுத்திட்டார்கள்.
அந்த லாக்கரைத் சம்பத்தையே திறக்கச் சொன்னேன். அந்த லாக்கருக்கள் ஒரே ஒரு பைல் மட்டும் இருந்தது. எடுத்துப் பிரித்துப் பார்த்தால், ஆர்.கே.என்டர்ப்ரைசஸ் நிறுவனத்துக்கு 1200 கோடி வழங்கியது தொடர்பான கோப்பு அது.
லாக்கர் ரிஜிஸ்டரில், மூன்று வங்கி ஊழியர் முன்னிலையில், ஆர்.கே.என்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு 1200 கோடி கடன் வழங்கிய கோப்பு, எனக்கு முந்தைய மேனேஜர் பாலகிருஷ்ணனுக்கு சொந்தமான லாக்கரிலிருந்து எடுக்கப்பட்டது என்பதை, பதிவு செய்து, மீண்டும் மூன்று பேரிடமும் கையெழுத்து வாங்கிக் கொண்டேன்.
பைலை எடுத்துக் கொண்டு, என் ரூமுக்கு வந்தேன்.
அப்போதுதான் ஜனனி ஞாபகம் வந்தது. உடனே ஜனனியின் செல்போனுக்கு அழைத்தேன்.
“ஹலோ… ஜனனி.. நான் வெங்கட் பேசறேன். “
“சொல்லுங்க சார்.“
“ஐ யம் எக்ஸ்ட்ரீம்லி சாரி ஜனனி.. திடீர்னு, பேங்க் விஜிலென்ஸ்ரேர்ந்து அர்ஜென்டா வரச் சொல்லிட்டாங்க… கம்ப்ளீட்டா மறந்துட்டேன். ஆர் யூ ஆல்ரைட் ? என்ன ப்ராப்ளம் ஜனனி… ? “
“நத்திங் சார்.. நானே மேனேஜ் பண்ணிட்டேன். “
அவள் குரலில் ஏமாற்றமும், ஆதங்கமும் தெரிந்தது.
“ஜனனி… ஐ யம் ரியல்லி சாரி. வெரி வெரி இம்பார்ட்டன்ட். நான் நேரா வரும்போது எக்ஸ்ப்ளெய்ன் பண்றேன். யூ வில் அன்டர்ஸ்டான்ட். கொஞ்சம் காம்ப்ளிகேட்டட் விவகாரம். நானே இருந்துதான் டீல் பண்ணணும். இல்லன்னா பெரிய பிரச்சினை ஆயிடும். அதனாலத்தான் என்னால உடனே வர முடியல. என்ன ப்ராப்ளம்னு சொல்லுங்க. “
“ஒண்ணும் இல்ல சார். நானே சமாளிச்சுட்டேன் சார். ஏதாவது தேவை இருந்தா திருப்பி கூப்பிடறேன் சார். நீங்க உங்க வொர்க்க பாருங்க.. “
நீங்க உங்க வொர்க்க பாருங்க என்று அவள் சொன்னதில் ஒரு எள்ளல் தொனி இருந்தது.
இந்தப் பெண்கள், ஏன் இப்படி இருக்கிறார்கள் ? இல்லை பெண்கள் இப்படித்தானா ? ஒரு ஆணுக்கு அவர்கள் மட்டுமே உலகமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்களா ? ஆணுக்கு அந்தப் பெண்ணைத் தவிர வேறு உலகமே இருக்கக் கூடாதா ? அப்படி வேறு வேலையே இல்லாமல் சுற்றிச் சுற்றி வருபவன் என்ன ஆண் மகன்… ?
“சரி ஜனனி… டேக் கேர். நான் வொர்க்க முடிச்சுட்டு நைட் கால் பண்றேன்.“
‘அவள் பதிலேதும் பேசாமல் இணைப்பைத் துண்டித்தாள். அன்பு பொழிந்தால், திக்குமுக்காடும் அளவுக்கு பொழிகிறார்கள். உதாசீனப்படுத்தினாலும், எரிச்சலூட்டும் அளவுக்கு உதாசீனப்படுத்துகிறார்கள். பெண்களை கையாளுவது கடவுள் கூட அறிந்திருக்காத கலை. என்னால் முடியவில்லை. நீயாவது கையாண்டு எனக்கு விடை சொல் என்று யோசித்து பெண்ணைப் படைத்திருப்பானோ…. கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும், இது போல யோசிக்கும்போது, நம்மையும் அறியாமல், பழைய இடுக்குகளின் ஞாபகங்களிலிருந்து கடவுள் வந்துதான் விடுகிறார்.’
ஜனனியின் நினைவுகளை சற்று ஓரமாக வைக்கத்தான் வேண்டும். விஜிலென்ஸ் ஆபீசுக்கு நாலு மணிக்கு செல்லும்போது, ஜனனியின் நினைவுகள் நம்மைக் காப்பாற்றாது என்பதை புரிந்து கொண்டு, அந்த ஆர்.கே என்டர்பிரைஸின் லோன் பைலை பிரித்தேன்.
அப்ளிகேஷனெல்லாம் கரெக்டாகத்தான் பில் அப் பண்ணியிருக்கிறார்கள். கட்ட வேண்டிய பணத்தைத்தான் கட்ட மாட்டேன்கிறார்கள். 1200 கோடி ரூபாயை சாதாரணமாக ஒரு தொழில் நிறுவனத்துக்கு தூக்கிக் கொடுத்து விடுகிறோம். அவன் கட்டாமல் வங்கியையும் நாட்டையும் ஏமாற்றுகிறான். படிக்க வேண்டும் என்று கல்விக் கடன் கேட்டு வருபவர்கள் என்ன மாதிரி அலைக்கழிக்கப் படுகிறார்கள் ?
கம்யூனிஸ்ட் சங்கங்கள் வங்கிகளில் வலுவாக இருந்தும், இந்த நடைமுறையில் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியவில்லையே ? சிஸ்டத்தை எதிர்த்து யார்தான் என்ன செய்து விட முடியும் ? என்னதான் சங்கத்தில் இருந்தாலும், கடந்த 8 ஆண்டுகளாக நடந்த வேலை நிறுத்தங்கள் பெரும்பாலானவை ஊதிய உயர்வுக்காகத்தானே ! பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும், மாணவர்களுக்கும் எளிதாக கடன் கொடுக்க வேண்டும் என்று எத்தனை முறை போராட்டம் நடந்திருக்கிறது ? ஊதிய உயர்வுக்காக வேலை நிறுத்தம் நடக்கும்போது, கடைசி கோரிக்கையாக அல்லவா இது போன்ற விவகாரங்கள் சேர்க்கப்படுகின்றன … ? ஊதிய உயர்வுக்காக வேலை நிறுத்தம் செய்யும் இந்தச் சங்கங்களை பொதுமக்கள் திட்டாமல் எப்படி இருப்பார்கள் ?
‘இந்த வியாக்கியானமெல்லாம் வக்கணையா பேசு.. அவசரத்துக்கு ஒரு பொண்ணு உதவின்னு கேட்டா அதைச் செய்யாத என்று மனதின் மூலையில் சுருக்கென்றது.’
‘ஒரு எஸ்எம்எஸ் அனுப்பிடலாமா’ என்று யோசித்துக்கொண்டே அவன் கைகள் இயல்பாக “ஐ யம் சாரி. ஷல் ஐ கம் ஹோம் அட் 7 பி.எம்” என்று அடித்தேன். அடித்து விட்டு எதற்காக இப்படி இவளிடம் வளைந்து போக வேண்டும் என்றும் தோன்றியது. நான் என்ன வேண்டுமென்றே அவளைப் புறக்கணிக்க வேண்டும் என்றா இப்படிச் செய்தேன்… என்று சமாதானப்படுத்திக் கொண்டு, எஸ்எம்எஸ்ஐ அனுப்பாமல் அழித்தேன்.
லோன் பைலில் லீகல் ஒபினியன் இருந்தது. வங்கியின் சட்ட ஆலோசகர் ஆர்.கே.என்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு 1200 கோடி ரூபாய் கடன் கொடுப்பதில் ஏராளமான ரிஸ்க் இருக்கிறது என்று எழுதியிருந்தார். அந்த நிறுவனத்தின் பின்புலம் மர்மமானதாக இருக்கிறது என்றும், அதன் பங்குதாரர்களின் விபரங்களை வழங்காமல் அந்த நிறுவனம் இழுத்தடிக்கிறது என்றும், அனைத்து விபரங்களையும் பெற்ற பிறகே லோன் கொடுப்பது குறித்து இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்றும் எழுதியிருந்தார்….
என்ன இழவு இது ? இப்படி ஒரு தெளிவான லீகன் ஒபினியன் இருந்தும் லோன் எப்படிக் கொடுத்தார்கள்… என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே,
அந்தக் கடிதம் கண்ணில் பட்டது .
தொடரும்
உங்களுக்கு கடன் தேவையா ?, எங்களை தொடர்பு கொள்ளுங்கள்: (stefanjonesloanfirm (AT) gmail . com)
Interesting???
பல புதினங்களை படைத்த தேர்ந்த எழுத்தாளரைப் போல் மிக அழகிய நடையில் இத்தொடர்கதையினை எழுதி வருகிறீர்கள் தோழர்.இனிதாய் தொடரட்டும் உங்களின் எழுத்து வேள்வி. வாழ்த்துக்கள்.
You are making suspension I hope that this story ended at political involment
Very Interesting to read and waiting for the rest of the story…
சவுக்கு அவர்களே,
புதினமோ, தொடர்கதையோ… ஆசிரியர்கள் முதலில் சிறிது நேரம் எடுத்து முக்கிய கதாப்பாத்திரங்களை நிலை நிறுத்துவார்கள். அது போலில்லாமல், இந்த தொடர் ஜிவ்வென்று ஆரம்பித்து விட்டது. அருமை…