7 பிப்ரவரி 2017. இரு நாட்களுக்கு முன்னால் சசிகலா அளித்த நெருக்கடியால் தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பன்னீர்செல்வம் இதே நாளில் ஒரு வருடத்துக்கு முன்பு, மாலை வேளையில், திடீரென்று, ஜெயலலிதாவின் நினைவிடத்தின் முன்பு அமர்ந்து ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டார்.
சமீப காலங்களில், தமிழகத்தின் அரசியல் சூழல் அத்தனை பரபரப்பை அடைந்தது கிடையாது. அதைத் தொடர்ந்து பன்னீரின் இல்லம் தமிழகத்தின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகும் என்ற களமாகவே தோற்றமளித்தது. ஒவ்வொது நாளும் பரபரப்பான காட்சிகள் அரங்கேறின. சசிகலா குடும்பத்தோடு இணைந்து பணியாற்ற முடியாமல், மனப் புழுக்கத்தில் இருந்த பல அதிமுகவின் முக்கிய தலைவர்கள் வரிசையாக பன்னீர் இல்லத்தை வந்து அடைந்தனர்.
தொலைக்காட்சி செய்தியாளர்களும், ஒளிப்பதிவாளர்களும், எந்த நேரத்தில், எந்த அதிமுக பிரமுகர், பன்னீரை சந்திக்க வருவார்களோ, எந்த நேரம் ப்ரேக்கிங் நியூஸ் போட வேண்டி வருமோ என்று 24 மணி நேரமும் பன்னீர் வீட்டிலேயே தவம் கிடந்தார்கள். 7 மற்றும் 8 பிப்ரவரி அன்று பணியில் இருந்த பத்திரிக்கையாளர் ஒருவர், இரு நாட்களும் இரவு முழுக்க பணியில் இருந்ததாக தெரிவித்தார்.
எப்படியாவது முதல்ராகி விடலாம் என்று தவமாய்த் தவமிருந்த சசிகலா மீது அப்போது வீசிய வெறுப்பு அலையினை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. வேலைக்காரி, பணிப் பெண், பேராசைப் பிடித்தவர் என்று கடுமையான வார்த்தைகளால் விமர்சிக்கப்பட்டார்.
கேபி.முனுசாமி, பிஎச்.பாண்டியன், மனோஜ் பாண்டியன், டாக்டர் மைத்ரேயன், என்று பல மூத்த தலைவர்கள் வரிசையாக வந்தார்கள். ஒரு கட்டத்தில், சசிகலா குடும்பம்தான் ஜெயலலிதாவை கொன்றது என்ற அளவிற்கு குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினர். அந்த வார நக்கீரனை படித்து விட்டு, ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்று இரவு, அவர் மாடியிலிருந்து தள்ளி விடப்பட்டார் என்றும், அதன் பிறகுதான் அப்போல்லோவில் அனுமதிக்கப்பட்டார் என்பது வரை புகார்கள் தயக்கமில்லாமல் வீசப்பட்டன. அம்மா கடித்த வேகவைத்த ஆப்பிள், அம்மா சாப்பிட்ட இட்டலிகள் ஆகியவற்றின் விபரங்களை கூறிய அதே கூட்டம்தான் இது என்பது மக்களுக்குத் தெரிந்தாலும், சசிகலா மீது இருந்த கோபத்தால் பன்னீரை மன்னித்து ஏற்றுக் கொள்ள மக்கள் தயாராக இருந்தார்கள். சசிகலா பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது தர்மயுத்தம் தொடங்கிய திடீர் புரட்சி வீரன் பன்னீர்செல்வத்தையும் ஒரு கட்டத்தில் மக்கள் ஏற்கத் தொடங்கினார்கள்.
படிப்படியாக மூத்த தலைவர்கள் பன்னீர் அணியில் இணைந்து கொண்டார்கள். ஏறக்குறைய பத்து நாட்களுக்கு இந்த பரபரப்பு நீடித்தது.
இது ஒரு புறம் என்றால், மற்றொரு புறம், கூவாத்தூரில் நாடகம் தொடங்கியது. எம்எல்ஏக்களை பன்னீர்செல்வம் கடத்தி விடுவார் என்று கூவாத்தூரில் எம்எல்ஏக்களை கடத்தி வைத்தார் சசிகலா. கூவாத்தூரில் எம்எல்ஏக்களுக்கு, குடி, கூத்து, கும்மாளம் என்று அனைத்து விதமான உற்சாகங்களும் அளிக்கப்பட்டன. குடியும், உணவும் எத்தனை நாளைக்குத் தாங்கும் ? எங்கள் அணியோடு இருந்தால், ஒவ்வொரு எம்எல்ஏவுக்கும் தலா 5 கோடி ரூபாய் பணம் மற்றும் தங்கம் வழங்கப்படும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டது. கொள்ளையடித்த மகராசி அள்ளியும் கொடுக்கிறார் என்று அந்த எம்எல்ஏக்கள், சசிகலாவையே நம்பினர்.
பிப்ரவரி 14 அன்று சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனை குற்றவாளிகளே என்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், 4 வருட தண்டனையை உறுதி செய்தது. ஆட்சி கையை விட்டுப் போய் விடக் கூடாது என்று முடிவெடுத்த மாபியா கும்பல், நமக்கு ஏற்ற சிறந்த அடிமை எடப்பாடி பழனிச்சாமிதான் என்று, எடப்பாடியை முதலமைச்சராக்கியது. பன்னீர்செல்வம் பக்கம் மேலும் எம்எல்ஏக்கள் வருவார்கள், சசிகலா பின்னணியில் உள்ள அணி பலவீனமடையும் என்று மக்கள் எதிர்ப்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால் பன்னீரோடு இணைய 12 எம்எல்ஏக்களுக்கு மேல் ஒருவர் கூட தயாராக இல்லை.
பிப்ரவரி 18 அன்று, சசிகலா சிறைக்கு சென்ற பிறகு, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அதில் அடாவடியாக, சட்டப்பேரவை சபாநாயகரை வைத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார், எடப்பாடி பழனிச்சாமி. அன்று, பன்னீர்செல்வம் உள்ளிட்ட 13 எம்எல்ஏக்கள் எதிர்த்து வாக்களித்தனர்.
டிடிவி தினகரனின் ஆதரவோடு, ஆட்சி சிறப்பாகவே நடந்து வந்தது. ஆர்கே நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. பன்னீர் தரப்பு, தேர்தல் ஆணையத்தை அணுகி, இரட்டை இலை சின்னத்தை முடக்கியது. தேர்தலில் டிடிவி தினகரனே வேட்பாளராக களம் இறங்கினார். அவருக்கு தொப்பி சின்னமும், பன்னீர் செல்வம் சார்பாக போட்டியிட்ட மதுசூதனனுக்கு தெரு விளக்கு சின்னமும் ஒதுக்கப்பட்டது.
அதிமுக தேர்தலில் போட்டியிட்டால் எப்படி போட்டியிடுவார்கள் ? அதே பாணியை பின்பற்றி, அமைச்சர்கள் போட்டி போட்டுக் கொண்டு, பணத்தை விநியோகித்தார்கள். டிடிவி தினகரனுக்காக தொப்பி சின்னத்தில் அமைச்சர்கள் வீதி வீதியாக பணத்தை விநியோகித்தார்கள். வெற்றி எங்களுக்கே என்று கொக்கரித்தார்கள்.
திடீரென்று ஒரு நாள் வருமான வரித் துறை அதிகாரிகள், ஆர்கே நகர் தொகுதிக்கான பண விநியோகம், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில்தான் நடக்கிறது என்று சந்தேத்தின் பேரில், உடனடியாக சோதனைகள் நடத்தப்ட்டன. சோதனைகளின் முடிவில் 89.5 கோடி ரூபாயை ஆர்கே நகர் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்த தகவல் வெளியானது. இந்த சோதனைகளையொட்டி, வருமான வரித் துறை அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில், ஆர்கே நகர் இடைத்தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம்.
வருமான வரி சோதனைகள், மற்றும் அமைச்சர்களின் வசூல் விபரங்களை அறிந்து கொண்ட மத்திய உளவுத் துறை மற்றும் இதர மத்திய அரசுத் துறைகள் எந்த நேரத்தில் கைது செய்யுமோ என்று அமைச்சர்கள் அச்சத்தில் இருந்த நேரத்தில் அவர்களிடம் மோடி அமித் ஷா அணியால் அளிக்கப்பட்ட ஒரே வாய்ப்பு சசிகலா அணியை விலக்க விட்டு, ஆட்சியை நடத்தலாம், பன்னீர் செல்வத்தோடு இணைந்து பணியாற்றலாம், பிஜேபி அதிமுக ஆட்சிக்கு பின்புலமாக இருக்கும் என்ற வாக்குறுதியும் வழங்கப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் இடைத்தரகராக இருந்து செயல்பட்டவர் யாரென்றால், தன்னை ராஜகுருவாகவும், அரசியல் சாணக்கியராகவும் கருதிக் கொள்ளும் மைலாப்பூர் சித்த வைத்தியர் குருமூர்த்திதான். ஜெயலலிதாவுக்கு பிறகு மற்றொரு பார்ப்பனரை தலைவராக உருவாக்கலாம் என்று ஜெ.தீபாவை தலைவராக்க குருமூர்த்தி எடுத்த முயற்சிகள் பெரும் தோல்வியை சந்தித்ததை ஒட்டியே ப்ளான் பி க்கு போனார் குருமூர்த்தி.
எப்படி சசிகலா அணியிலிருந்து விலகுவது என்று அமைச்சர்கள் யோசித்துக் கொண்டிருந்தபோது, தமிழ் வருடப் பிறப்பு வருகிறது. 14 ஏப்ரல் 2017 அன்று, அமைச்சர்கள் பலரும் சேர்ந்து, டிடிவி தினகரன் வீட்டுக்கு சென்று வாழ்த்து தெரிவிக்கின்றனர். அப்போது அவர்களிடம் பேசிய டிடிவி தினகரன், ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு நியமனங்கள் நடைபெற உள்ளன. இந்த பணிகளுக்காக பரிந்துரைகளோடு கட்சிக்காரர்கள் வருவார்கள். அப்படி வரும் கட்சிக்காரர்களிடம், பணம் வசூலிக்காதீர்கள். கட்சி நிதிக்கு நாம் பணம் சம்பாதிக்க பல வழிகள் உள்ளன. கட்சிக்காரர்களிடம் நாம் இந்த நியமனங்களுக்காக பணம் வாங்கினால், நம்மை கட்சிக்காரர்கள் மதிக்க மாட்டார்கள் என்பது ஒரு புறம் இருக்க, பொதுமக்களிடையேயும் ஆட்சிக்கு மிகுந்த அவப்பெயர் ஏற்படும். ஆகையால் நியமனங்களில் பணம் வாங்காமல் உத்தரவிடுங்கள். கொஞ்ச காலம் நம் ஆட்சிக்கு ஏற்பட்ட கெட்ட பெயரை நீக்க முயற்சி செய்வோம் என்று கூறியுள்ளார்.
அடுத்த வினாடியே எழுந்த எஸ்பி.வேலுமணி, “அதைச் சொல்ல நீ யார் ? தேர்தல்ல ஜெயிக்க எத்தனை கோடி செலவு பண்ணியிருக்கோம் தெரியுமா ? ” என்று தொடங்கி, ஏக வசனத்தில், கன்னா பின்னாவென்று பேசியுள்ளார். அமைச்சர் தங்கமணியும் பேசினார் என்றே தகவல்.
இதன் பின்னர் அமைச்சர்கள் வெளியேறுகிறார்கள். சில நாட்கள் கனத்த அமைதி நிலவியது. இதை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த நினைத்த அமைச்சர்கள், மைலாப்பூர் சித்த வைத்தியரிடம் வைத்த கோரிக்கைதான், டிடிவி தினகரனை எப்படியாவது கைது செய்ய வேண்டும் என்பது. அப்படி கைது செய்து விட்டால், கட்சி முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும் என்றும், யாருக்காகவும் பயப்பட வேண்டியதில்லை என்றும் தெரிவிக்கிறார்கள்.
ஒரே வாரத்தில், டெல்லி காவல்துறை, இரட்டை இலை சின்னம் பெற, தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் தர முயற்சித்ததாக, சுகேஷ் என்பவரை கைது செய்கிறது. 26 ஏப்ரல் 2017 அன்று, டிடிவி தினகரன் கைது செய்யப்படுகிறார். அப்போது பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில், இன்று வரை, எந்த தேர்தல் ஆணைய அதிகாரிக்கு லஞ்சம் தர டிடிவி தினகரன் முயற்சித்தார் என்ற விபரத்தை டெல்லி காவல்துறை வெளியிடவில்லை. இன்னமும் கண்டுபிடிக்கக் கூட இல்லை.
தினகரன் சிறை சென்றதும் அமைச்சர் பெருமக்களுக்கு துணிச்சல் அதிகமானது. இத்தோடு ஒழிந்தான் தினகரன் என்றே முடிவெடுத்தனர். அமைச்சர்கள், மன்னார்குடி மாபியாவின் செல்வாக்கு பற்றி அளித்த தகவல்களை நம்பிய மைலாப்பூர் சித்த வைத்தியரும் டெல்லி மேலிடத்துக்கு, சசிகலா குடும்பத்தின் கதை இத்தோடு முடிந்தது என்றே தகவல் அளித்தார்.
ஆனால் டிடிவி தினகரன் சிறையிலிருந்து வெளியேறியதும், கொஞ்சம் கொஞ்சமாக அவர் பின்னால் எம்எல்ஏக்கள் செல்ல ஆரம்பித்தனர். தர்மயுத்தம் நடத்திய பன்னீரால் வெறும் 13 எம்எல்ஏக்களை மட்டுமே அழைக்க முடிந்தது என்றால், மிக மிக எளிதாக, டிடிவி தினகரனால் 18 எம்எல்ஏக்களை அவர் பக்கம் வளைக்க முடிந்தது. 18 எம்எல்ஏக்கள் டிடிவி பக்கம் சென்றதுமே மீண்டும் அரசியல் பரபரப்படைந்தது. 18 எம்எல்ஏக்களும், ஆளுனர் மாளிகைக்கு சென்று, ஆளுனரை சந்தித்து, முதலமைச்சர் எடப்பாடி மீது ஊழல் புகார் அளித்து, எடப்பாடியை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
பார்வையாளர்களுக்கு ஆளுனரை பார்த்து முதல்வரை மாற்ற மனு அளிக்கிறார்களே என்று கிறுக்குத்தனமாக தோன்றினாலும், டிடிவி தினகரன் 18 எம்எல்ஏக்களின் நடவடிக்கையின் மூலமாக எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒரு தெளிவான செய்தியை சொன்னார். முதல்வர் பதவியை விட்டுத் தந்தால் அரசு தொடரும். விட்டுத்தர மறுத்தால், கவிழ்ப்பேன் என்பதே அது.
அதைத் தொடர்ந்து, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், உடனடியாக சட்டப்பேரவையை கூட்டி, எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று வலுவாக குரல் எழுப்பின. அரசு செவி சாய்க்காது என்பதையும் அறிந்து ஆளுனரிடமும் மனு அளித்தனர். திமுக நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தது. நீதிமன்ற வழக்குகள் நடந்து கொண்டிருக்கும்போதே, சபாநாயகர் அவசர அவசரமாக, 18 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார். எடப்பாடி மற்றும் சபாநாயகர் தனபாலின் நோக்கம், சபையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைத்துவிட்டு, அதன் பிறகு, நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினால், வெற்றி பெற்று ஆட்சியை நீடித்து நடத்தலாம் என்பதே அவரது திட்டம்.
ஆனால் இந்த திட்டம் அவர் நினைத்தது போல நடக்கவில்லை. திமுக டிடிவி தினகரன் அணி ஆகிய இரு தரப்பும், மாற்றி மாற்றி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து, சபாநாயகரின் நடவடிக்கைகளை கேள்விக்குள்ளாக்கின. நம்பிக்கை வாக்கெடுப்புக்கும் தடை பெற்றன.
ஆட்சியும் வசூலும் ஒரு புறம் நடுக்கத்தோடு நடந்து கொண்டிருந்தாலும், பன்னீர் அணியோடு இணைய வேண்டும் என்று பிஜேபி தரப்பிலிருந்து எடப்பாடிக்கும் அழுத்தம் அதிகரித்துக் கொண்டே இருந்தது எடப்பாடிக்கு. மறுபுறம், பன்னீர் அணி மீதும் அழுத்தம் தந்து கொண்டிருந்தது பிஜேபி. வாரா வாரம் பன்னீர்செல்வத்தை டெல்லிக்கு வரவழைத்து பேசினார் மோடி. எப்படியாவது எடப்பாடியோடு இணையுமாறு கடுமையான நெருக்கடி கொடுத்தார்.
தர்மயுத்தம் நடத்தியவரின் மிக முக்கியமான கோரிக்கைகள், சசிகலா குடும்பத்தை விலக்கி வைக்க வேண்டும் என்பதும், ஜெயலலிதா விசாரணை குறித்து, நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பதும்.
இரண்டையும் செய்தார் எடப்பாடி. ஒரு சுபமுகூர்த்த நாளில் இரு அணிகளின் இணைப்பு அறிவிக்கப்பட்டது. பன்னீர் செல்வம் துணை முதல்வராக பதவியேற்றார். பொதுச் செயலாளர் பதவி நீக்கப்பட்டது. சசிகலாவை கட்சியை விட்டு நீக்கினார்கள். தினகரனையும் நீக்கினார்கள்.
துணை முதல்வரான பன்னீர், மீண்டும் தேசியக் கொடி பொருத்திய காரில் வலம் வரத் தொடங்கினார். ஆனால் அதே நேரத்தில் அவருக்கான அதிகாரங்களை குறைத்து, அவரை சிறுமைப்படுத்தும் பல வேலைகளை புதுப் பணக்காரர் எடப்பாடி செய்தார். பன்னீரோடு தர்மயுத்தம் டீமில் இருந்தவர்கள் புழுங்கினார்கள். ஆனால் பன்னீர், அத்தனை சிறுமைகளையும் அமைதியாக ஏற்றுக் கொண்டார்.
நிதித் துறையோடு, வீட்டு வசதித் துறையும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஆகிய வளமான துறைகள் ஒதுக்கப்பட்டன. மானம், சுயமரியாதை, தர்மயுத்தம் என்று வீரவசனங்களை பேசிய பன்னீர்செல்வம், எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், விரக்தி ஏற்பட்டு, எடப்பாடி அரசாங்கத்தை ஊழல் மலிந்த அரசு என்று விமர்சித்த பன்னீர்செல்வம், எவ்விதமான அசூயையும் இன்றி, எடப்பாடியோடு இணைந்து இரட்டைக் குழல் துப்பாக்கியானார். எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தொடர்பாக, மதுரையில் ஒரு கொடிக்கம்பம் உருவாக்கப்பட்டு, அதில், பதிக்கப்பட்ட கல்வெட்டில் பன்னீர்செல்வம் பெயர் இல்லாமல் பதிக்கப்பட்டது. அப்போதும் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை மானஸ்தர் பன்னீர். பின்னர், தனியாக அவர் பெயர் பொறிக்கப்பட்டு கல்வெட்டு பதிக்கப்பட்டது.
ஆனால் பன்னீர்செல்வம் தானுண்டு, தன் வசூல் உண்டு என்பதிலேயே கவனமாக இருந்தார். பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தம் குறித்து பேசிய ஆங்கில ஊடகத்தை சேர்ந்த ஒரு பத்திரிக்கையாளர்
“தர்மயுத்தம் முடிந்து ஒரு ஆண்டு கடந்தபின்தான் தெரிகிறது, அது எப்படிப்பட்ட நாடகம் என்பது. அந்த தர்மயுத்தம் என்பது, பன்னீர்செல்வமும், அவரது குடும்பமும், மீண்டும் கொள்ளையடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தை மனதில் வைத்தே நடத்தப்பட்டது.
சசிகலாவுக்கு எதிரான இயல்பான எதிர்ப்புக் குரல் அல்ல அது. பிஜேபி பின்னாலிருந்து இயக்கியதால் எழும் செயற்கையான எதிர்ப்புக் குரல். பிஜேபியின நோக்கம் சசிகலா குடும்பத்தை அரசியலில் இருந்து நிரந்தரமாக ஒதுக்கி வைக்க வேண்டும் என்பதே. பிஜேபியும், குருமூர்த்தியும், தமிழகத்தில் பிஜேபி கால் பதிக்க வேண்டும் என்ற அவர்களின் கனவை நிறைவேற்றிக் கொள்ள பன்னீர்செல்வத்தை பயன்படுத்திக் கொண்டனர்.
ஆட்சியும், கட்சியும், ஒரே குடும்பத்தின் கைகளில் இருக்கக் கூடாது என்பதையே, தர்மயுத்தத்துக்கான முக்கிய காரணமாக பன்னீர்செல்வம் குறிப்பிட்டார். ஆனால் தர்மயுத்தத்தம் நடந்து ஒரு வருடத்துக்கு பிறகு, பன்னீர்செல்வத்தின் சார்பாக, வசூல் உள்ளிட்ட அனைத்து விவகாரங்களையும் கவனித்துக் கொள்வது, அவரது குடும்பமே. அவர் மகன் ரவீந்திரனாத், ஜெய்ப்ரதீப் மற்றும் மருமகன் காசிநாதன் ஆகிய மூவரும் அதிகார மையங்களாகவும், அரசியல் ப்ரோக்கர்களாகவும் மாறி விட்டனர்.
தோற்றங்கள் ஏமாற்றக் கூடியன என்ற வாசகத்துக்கான சிறந்த உதாரணம் பன்னீர்செல்வம். பொது இடங்களிலும் நேரிலும் பார்த்தால், பன்னீர்செல்வம் ஒரு தூய்மையான அரசியல்வாதி போல தோற்றமளிப்பார். ஆனால், யதார்த்தத்தில் பன்னீர்செல்வம், சசிகலாவை விட மோசமானவர். பன்னீர்செல்வத்தின் தொழில்களும், பணம் சேர்க்கும் நடவடிக்கையும், தொடர்ந்து விரிவாகிக் கொண்டே செல்கின்றன. அவை மேலும் விரிவாக, பன்னீர் பதவியில் இருப்பது அவசியம். தர்மயுத்தத்தை தொடங்குகையில், பன்னீர்செல்வம், அனைத்து எம்எல்ஏக்களும், சசிகலாவை விட்டு விட்டு, தன்னிடம் வந்து சேர்வார்கள் என்றே நினைத்தார். ஆனால் சசிகலாவின் கூவாத்தூர் பார்முலா, அவரது கனவை மட்டுமல்ல, பிஜேபியின் கனவுகளையும் சிதைத்தது-
வாரத்துக்கு ஒரு முறை பிரதமர் மோடியை சந்திக்கக் கூடி அளவுக்கு இருந்த பன்னீர்செல்வம் இன்று ஒரு கோமாளியாக மாறி விட்டார். எடப்பாடியோடு இணைந்தது அவர் செய்த மிகப் பெரிய தவறு. சசிகலாவுக்கு எதிராக குரல் கொடுத்தபோது, ஹீரோவாக புகழப்பட்ட பன்னீர்செல்வம், இன்று சமூக வலைத்தளங்களில் கோமாளியாக சித்தரிக்கப்படுகிறார். தமிழக மக்கள் மற்றும், அதிமுக தொண்டர்களை வைத்து, பன்னீர்செல்வம் நடத்திய மிக மிக மோசமான ஒரு நாடகம்தான் அவரின் தர்மயுத்தம்.
மூன்று முறை முதலமைச்சராக இருந்த ஒருவர், எவ்வித முணுமுணுப்போ, எதிர்ப்போ இன்றி, துணை முதலமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டதே, பன்னீர்செல்வம் யாரென்பதை நமக்கு உணர்த்துகிறது. பணம் சேர்க்க வேண்டும் என்ற அவரது வெளியும், பேராசையும், குடும்பத்துக்கு சொத்து சேர்க்க வேண்டும் என்ற அவாவும், ஜெயலலிதாவின் மரணத்துக்கு நீதி என்பது முதல், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கை வரை, அனைத்திலும் சமரசம் செய்து கொள்ள வைத்திருக்கிறது.
ஒரு ஆண்டுக்கு முன்னர், ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள், பல நிர்வாகிகள், மற்றும் தமிழக மக்களே அவர் பின்னால் திரண்டு நின்று, அவர் தர்மயுத்தத்துக்கு ஆதரவு அளித்தனர். இப்போது அதே மக்களே, இவரையா ஆதரித்தோம் என்ற அருவருப்பு உணர்வுக்கு ஆளாகியிருக்கிறார்கள். நெருக்கடியான காலகட்டத்தில் அவருக்கு ஆதரவாக இருந்து, மத்திய அரசின் அமைச்சர்கள் மற்றும் பிரதமர் அலுவலகத்தோடு அவருக்கு தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்து அவருக்கு கைகொடுத்த மைத்ரேயன் போன்றவர்களையே நட்டாற்றில் விட்டு விட்டார் பன்னீர்.
தற்போது, தன்னை முழுமையாக எடப்பாடி பழனிச்சாமியிடம் அர்ப்பணித்துக் கொண்டதற்காக, அதற்கான பணத்தையும், பலனையும், பன்னீர்செல்வமும் அவர் குடும்பத்தினரும் அனுபவித்து வருகின்றனர் என்பதே தகவல். பெயருக்குக் கூட முதுகெலும்பு இல்லாத கோழை என்தை கடந்த ஒரு ஆண்டு கால செயல்பாடுகள் மூலம் பன்னீர்செல்வம் நிரூபித்துள்ளார் “ என்றார் அந்த பத்திரிக்கையாளர்.
பன்னீரோடு நெருக்கடியான காலகட்டத்தில் உடனிருந்த கேபி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், பிஎச்.பாண்டியன், டாக்டர் மைத்ரேயன் போன்றோருக்கு எதுவுமே செய்யவில்லை பன்னீர்செல்வம். கட்சி இணைப்பின்போது உருவாக்கப்பட்ட இணைப்புக் குழு, இது வரை ஒரு முறை கூட கூடவில்லை.
இந்த மன வருத்தங்களையெல்லாம் தனது முகநூல் பதிவில் மனங்கள் இணைவில்லை என்று வெளியிட்ட, டாக்டர் மைத்ரேயன் பன்னீர்செல்வம் முன்பாகவே, அமைச்சர் சிவி.சண்முகம் போன்றோரால் அவதூறான வார்த்தைகளால் அவமானப்படுத்தப்பட்டார். ஆனால் ஒரு வார்த்தை கூட எதிர்த்துப் பேசாமல், அமைதி காத்தார் பன்னீர்செல்வம்.
எடப்பாடியோ, பன்னீர்செல்வமோ, இருவராலும், அதிமுகவை கட்டுக்கோப்பாக நடத்த முடியாது என்பதும், கட்சியும், தொண்டர்களும், டிடிவி தினகரன் பின்னால்தான் போவார்கள் என்பதை ஆர்கே நகர் தேர்தல் முடிவுகள் மூலம் மோடியும், அமித் ஷாவும் நன்றாகவே உணர்ந்து கொண்டார்கள். வாரா வாரம் மோடியை சந்தித்துக் கொண்டிருந்த பன்னீரால், துணை முதல்வரான பின்னர், அலுவல் ரீதியாகக் கூட அவரை சந்திக்க முடியவில்லை. பன்னீரோடு சேர்ந்து கவிழ்ந்த கப்பலான, குருமூர்த்தியையும் கைகழுவியது பிஜேபி.
நாடெங்கும் பிஜேபி வரும் தேர்தலில் சந்திக்க உள்ள பெரும் பிரச்சினைகளை கையாளவும், அடுத்தடுத்து வரும் பல மாநில தேர்தல்களை சந்திக்கவும் தன்னை தயார்ப்படுத்திக் கொண்டு வரும் பிஜேபிக்கு, அதிமுக மூலமாக, தமிழகத்தில் கால் பதிக்கும் தனது ஆசை நிறைவேறாது என்பதை உணர்ந்து, அரசு எப்போது கவிழுமோ, அப்போது ஆளுனர் மூலமாக மாநிலத்தை ஆண்டு கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டதாகவே தெரிகிறது.
பன்னீர்செல்வம் மற்றும் அவர் குடும்பத்தினர் வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த சொத்துக்களை நீண்ட புலனாய்வுக்கு பிறகு கண்டுபிடித்து, அவர் மணல் கடத்தல் மன்னன் சேகர் ரெட்டியிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கிய விவகாரத்தை அம்பலப்படுத்திய இணைப்பு தி வீக் பத்திரிக்கையின் தமிழக செய்தியாளர் லட்சுமி சுப்ரமணியன் (ட்விட்டரில் பின் தொடர @lakhinathan) இது குறித்து பேசுகையில்
“பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தம், அவரை மட்டுமல்ல, தமிழத்தையும், தமிழக மக்களையும் ஒரு நிலையில்லாத் தன்மையை நோக்கி தள்ளியது. ஒரு கட்டத்தில் அதிமுகவுக்கு தலைமையேற்று, பன்னீர்செல்வம் வலுவான போட்டியாக விளங்குவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், பன்னீர்செல்வம், தந்திரமாக தனது அணியை, எடப்பாடி அணியோடு இணைத்து, பசையுள்ள துறைகளை பெற்றுக் கொண்டு, மீண்டும் ஒரு முறை, அதிகாரமும், செல்வாக்குமே எல்லாவற்றையும் விட ஒரு அரசியல்வாதிக்கு முக்கயிமானவை என்பதை நிரூபித்துள்ளார். அவர் பின்னால் வந்த அந்த 11 எம்எல்ஏக்களோடு தனியாக இருந்து, இந்த அரசை எதிர்த்து தொடர்ந்து அரசியல் நடத்தியிருந்தால், அவரது தர்மயுத்தம் வெற்றி பெற்றதாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அவர் தனது நலனை மட்டுமே பெரிதாக கருதினார்.
இவையெல்லாவற்றையும் விட, சேகர் ரெட்டியிடம் கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கி அவர், ஊழலை எதிர்த்துப் பேச எந்தத் தகுதியும் இல்லாதவர் என்பதையும் நிரூபித்துள்ளார்” என்று கூறினார்.
அதிமுகவில், ஜெயலலிதாவின் காலில் விழுந்து, அவர் கார் டயரை தொட்டு கும்பிட்டு, அவர் வரும் ஹெலிகாப்டரை நோக்கி கும்பிட்டு, சசிகலா வந்தால் அவர் காலிலும் விழுந்து, அதன் மூலம் பதவிகளை அடைந்து, தங்கள் செல்வ வளங்களை பெருக்கிக் கொள்ளும் ஒரு மனிதன் எப்படி சுயமரியாதையுள்ளவனாக இருக்க முடியும் ? அவனிடம் நேர்மையை எப்படி எதிர்ப்பார்க்க முடியும் ? அப்படி அதிமுகவைச் சேர்ந்த மற்ற எல்லா அடிமைகளையும் போன்ற ஒரு சுயமரியாதை இல்லாத மற்றொரு அடிமைதான் ஓ.பன்னீர்செல்வம்.
மானம் மரியாதையை காற்றில் பறக்க விட்டாலும், வசூலை நின்று விடக் கூடாது. அடுத்த நான்காண்டுகளுக்கு வசூல் தங்குதடையில்லாமல் தொடர வேண்டும் என்றே பன்னீர் கனவு காண்கிறார்.
ஆனால், அவர் தர்மயுத்தம் தொடங்கிய கடந்த ஆண்டு இதே நாளில் இருந்து, கடந்த 365 நாட்களில் நடந்த தலைகீழ் மாற்றங்கள் எந்த நேரத்தில் எது நடக்கும் என்பது யாருக்குமே தெரியாது என்பதையும், எத்தனை நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது என்பதையுமே நிரூபித்துள்ளது.
கடந்த ஆண்டு தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வம், தர்மயுத்தத்தின் இரண்டாவது ஆண்டு நினைவு நாளன்று, ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தாலும் வியப்பதற்கில்லை.
காலம் இது போல பல ஆச்சர்யங்களை ஒளித்தே வைத்திருக்கிறது.
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில்.
குணத்தில் கயவராக இருப்பர். ஆனால், நல்லவரைப் போலக் காட்டிக் கொள்வார். மனிதர்களிடம் மட்டும்தான் இப்படி இருவகையான நிலைகளை ஒரே உருவத்தில் காண முடியும்.
According to the statement seized,the following details are available.The seized documents not only shows that ,huge amount released for election ,it also reveals howmuch they collected as bribe for transfers and postings,and through the Tamilnadu medical corporation as below.
1. 1.11.16-Transfers and postings- rs 2,38,75,000.
2.-9.11.16-MGR university OA posts-rs 32 ,00,000
3.-9.11.16-TNMSC…………………………….rs 67,00,000
4.ESI RRC…………………………………………….rs61,00,000
well written…Sasi is dangerous. BJP missed the opportunities with useless calculations and I feel they are part of the looting by ADMK. as they DID nothing to stop the looting. NO WAY BJP or guru,urthy can be part of TN politics as they are also brokers….. It is confusing and irritating but SASI gang only can bring some stability. OUR nationalism is NO way inferior to the cow dung belt BJP nationalism. Unless they realise this they HAVE NO FUTURE HERE….