அதிர்ச்சி.. கோபம்.. எரிச்சல்.. ஆகிய உணர்வுகள் ஒரு சேர ஏற்பட்டன. ‘இந்த சிச்சுவேஷனை இன்னும் சரியாக கையாண்டிருக்கலாமோ ? நம் மீதுதான் தவறோ ? நம் மீது உள்ள கோபத்தில்தான் இப்படி செய்து விட்டாளோ.. இல்லை அவளுக்கு வேறு பிரச்சினைகள் காரணமாக இருக்குமோ ? எப்படி ஒரு இக்கட்டான நிலையில் இருந்தேன் ? இதைக் கூட புரிந்து கொள்ள மாட்டாளா ?’
மேசையில் இருந்த மணியை அடித்து ஜனனியை வரச்சொன்னேன். கதவைத் திறந்தவள் உள்ளே நுழைந்ததும் தலையைக் குனிந்து கொண்டாள்.
“உக்காருங்க ஜனனி.“
“பரவாயில்லை சார். சொல்லுங்க“
“உக்காருங்க ஜனனி… ப்ளீஸ். “
அமர்ந்தாள்.
“எதுக்கு ஹெட் ஆபீசுக்கு ட்ரான்ஸ்பர் கேக்கறீங்க ? என்ன ப்ராப்ளம் ? “
“லெட்டர்லேயே எழுதியிருக்கேனே சார் பர்சனல் ப்ராப்ளம்னு“
“ஜனனி. டோன்ட் ப்ளே கேம்ஸ். என்ன ரீசன்னு சொல்லுங்க. திடீர்னு ஏன் இப்படி ட்ரான்ஸ்பர் கேக்கறீங்க ? ஹெட் ஆபீஸ்ல இங்க இருக்கற மாதிரி ப்ரீயா இருக்க முடியாது. வேலை ரொம்ப கஷ்டம். அதை நீங்க சமாளிச்சுடுவீங்கன்னு தெரியும். பட் எதுக்கு இப்போ ட்ரான்ஸ்பர் கேக்கறீங்க.“
“சார் எங்கிட்ட எதுவும் கேக்காதீங்க. தயவு செய்து அதை ஃபார்வேர்ட் பண்ணுங்க. லெட் மி லிவ் இன் பீஸ் (peace).“
“நான் ஃபார்வேர்ட் பண்ணிட்றேன் ஜனனி. பட் வொய் டோன்ட் யூ (reconsider) என் மேல ஏதாவது கோபத்தால ட்ரான்ஸ்பர் கேட்டா அது நியாயம் இல்லை. ஐ வில் எக்ஸ்ப்ளெய்ன்.“
“சார். உங்க மேல கோபம்னு நான் சொல்லவேயில்லையே. தயவு செய்து லெட்டர ஃபார்வேர்ட் பண்ணுங்க. ப்ளீஸ். நீங்க எனக்கு ஏதாவது ஹெல்ப் பண்ணணும்னு நெனச்சீங்கன்னா, இந்த லெட்டர ஹெட் ஆபீசுக்கு அனுப்புங்க. “
“ஆல்ரைட் ஜனனி. இன்னைக்கே ஃபார்வேர்ட் பண்ணிட்றேன். இவ்ளோ தூரம் கேட்டும் எந்தக் காரணத்தையும் சொல்ல மாட்டேன்னு அடம்பிடிக்கறீங்கன்னா ஐ டோன்ட் நோ வாட் டு டூ (I don’t know what to do)“
குனிந்த தலையை நிமிராமல் இருந்தாள்.
‘என் கண்ணைப் பார்க்க அச்சப்படுகிறாளா. அல்லது பார்க்கவே விடிக்கவிலையா ? பெண்கள் மனதில் என்ன இருக்கிறது என்று உலகில் யாராவது ஒருவராவது கண்டுபிடித்திருக்கிறார்களா ? இவ்வளவு தூரம் கெஞ்சியும் முகத்தைக் கூட பார்க்காமல் இப்படி அமைதியா உட்கார்ந்திருக்கிறாளே. இவளுடைய உலகம் இவள் மட்டுமே. ஊரில், உலகத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி ஏன் யோசிக்க மாட்டேன்கிறாள் ? இவளைப் புறக்கணிப்பதற்காகவே நேற்று வரவில்லை என்று நினைத்துக் கொண்டுதானே இப்படிச் செய்கிறாள். நேற்று நான் இவளைப் பார்க்கச் சென்றிருந்தால் என்ன ஆகியிருக்கும் ? என் நிலைமையை யோசித்துப் பார்க்க முயலக்கூட மாட்டேன்கிறாளே’
“சரி கௌம்புங்க ஜனனி.“
“தேங்க்ஸ் சார்“
‘ஜனனி மீது எனக்கு இருந்தது காதலா ? அவளும் என்னைக் காதலித்திருப்பாளோ ? நான்தான் ஒரு வேளை எனக்கு வசதியாக இருப்பதால் காதலித்திருப்பாள் என்று நினைத்துக் கொள்கிறேனோ ? அவள் என்னைக் காதலித்திருப்பாள் என்று சொல்வதால், ஆண் என்கிற எனது திமிர் சந்தோஷமடைகிறதோ ? எவ்விதமான எண்ணமும் இல்லாமல் வெறும் உயர் அதிகாரி என்று மட்டுமா என்னை நினைத்திருப்பாள் ? வெறும் உயர் அதிகாரி என்று நினைத்தால் என் நான் அனுப்பிய எஸ்எம்எஸ்களுக்கு உடனுக்குடனே பதில் அனுப்பினாள் ?
பதில் அனுப்பாவிட்டால் உயர் அதிகாரியின் கோபத்துக்கு ஆளாக நேரிடுமே என்று கூட பயந்து கொண்டு அனுப்பியிருக்கலாமே ? ச்சே.. ச்சே… அவள் அனுப்பிய பதில்களில் அது போல இருந்ததற்கான அறிகுறியே இல்லை. தவிரவும் அப்படியெல்லாம் பயப்படுகிற பெண்ணா அவள் ? அப்படி பயப்படுகிற பெண்ணாக இருந்தால், ட்ரான்ஸ்பர் கோரிக்கையை வாபஸ் வாங்கு என்று நான் சொன்னவுடன் கேட்டிருக்க வேண்டுமே ?
அவளுக்கும் என் மீது ஒரு ஈர்ப்பு இருந்திருக்கத்தான் வேண்டும். ஈர்ப்பு இல்லாமல் எப்படி உரிமையோடு என்னை வீட்டுக்கு வரச்சொன்னாள் ? இந்த ப்ரான்ச்சிலேயே ஜொள்ளு வழிந்து கொண்டு எப்போது அவள் பேசுவாள் என்று அலையும் ஆட்களுக்கா பஞ்சம் ? அத்தனை பேரையும் விட்டு என்னை அவள் அழைத்ததே அவளுக்கு என் மீது உள்ள ஈர்ப்பின் காரணமாகத்தானே ?
அவள் அழைத்ததும் வீட்டுக்குப் போயிருந்தால் என்ன ஆயிருக்கும் ? நானும் அவளும் காதல் சிறகை காற்றினில் விரித்து வான வீதியில் பறந்திருப்போமோ ?’
பல்வேறு எண்ணங்கள் சுழன்றன.
நான்கு மாதங்கள் கழித்து ஜனனிக்கு மாறுதல் உத்தரவு வந்தது. இடைப்பட்ட காலத்தில், பல முறை ஜனனியிடம் பேச முயன்றும், அலுவல் ரீதியாக பேசினால் மட்டுமே பதில் சொல்லுவள். மற்ற எல்லாக் கேள்விகளுக்கும் மவுனம் மட்டுமே பதிலாக இருந்தது. என்னை அவள் வேண்டுமென்றே தவிர்த்தது தெரிந்தது. இனி நான் செய்வதற்கு ஒன்றும் இல்லை என்பது புரிந்தது. நானும் அவளோடு பேசுவதற்கான எனது முயற்சிகளை கைவிட்டேன்.
இரண்டு முறை சங்கத் தலைவர் கல்யாண சுந்தரத்தை சந்தித்துப் பேசினேன். இரண்டு முறையும் ஆர்.கே.என்டர்பிரைசஸ் தொடர்பாக பேசமுடியாத அளவுக்கு அவர் பிசியாக இருந்தார். இன்று வரச்சொல்லியிருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை என்பதால் மாலை சென்று பார்க்கலாம் என்று உத்தேசித்திருந்தேன்.
மாலை 4 மணிக்கு அவர் தங்கியிருக்கும் வங்கி ஊழியர் சங்க அலுவலகம் சென்றேன். கல்யாண சுந்தரத்தின் பெயரில் கல்யாணம் இருக்கிறதே தவிர, அவர் கல்யாணமே செய்து கொள்ளவில்லை. ஒரு சில நாட்கள் சங்க அலுவலகத்தில் தங்கியிருப்பார் அல்லது கட்சி அலுவலகத்தில் தங்கியிருப்பார். வங்கியின் தொழிற்சங்கத்தை எடுத்துக் கொண்டால் மிகப்பெரிய தலைவர் கல்யாணசுந்தரம்தான். கல்யாணசுந்தரம் பேசுகிறார் என்றால் சங்கத்தின் கொள்கைகளில் ஈடுபாடு இல்லாத ஊழியர்கள் கூட வந்து கேட்பார்கள். தொழிற்சங்க பிரச்சினைகளைத் தவிர்த்து, தங்கள் சொந்த பிரச்சினைகளையும் எடுத்து வந்து கல்யாண சுந்தரத்திடம் தீர்வு கேட்பார்கள். அனைவரது பிரச்சினைகளையும் காது கொடுத்து பொறுமையாக கேட்டு ஆலோசனை சொல்வார். ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கேட்டால், ‘நாந்தான் சங்கத்தையும் கட்சியையும் கல்யாணம் பண்ணிக்கிட்டேனே. எனக்கு எதுக்கு வேற கல்யாணம்’ என்று நகைச்சுவையாகச் சொல்வார்.
அவரை எனக்கு குரு என்று தாராளமாகச் சொல்லாம். ஒரு குருவிடம் உள்ள மரியாதையும் பக்தியும் அவரிடம் எனக்கு உண்டு. புதிதாக வங்கியில் வேலைக்குச் சேர்ந்த புதிதில், அவரது அறிமுகம் கிடைத்தபோது, பெரிய தலைவர் என்ற பயம் மட்டுமே இருந்தது. வங்கி வேலைக்கு வருவதற்கு முன்னால் ஊழியர் சங்கங்கள் என்றால், ஊதிய உயர்வு கேட்டுப் போராடுவார்கள் என்ற கருத்து எனக்கும் இருந்ததால், எனக்கும் பொதுவாக சங்க நடவடிக்கைகளில் பெரிய அளவில் பிடிப்பு இல்லை. இரண்டு நாட்கள் நடந்த ஒரு கருத்தரங்கத்தில் ஒரு நாள் கலந்து கொண்ட போது, இந்திய சுதந்திரப்போராட்டத்தில் கம்யூனிஸ்டுகளின் பங்கு குறித்து அவர் பேசியபோது அவரின் பேச்சு பிரமிப்பை ஏற்படுத்தியது. சுதந்திரப் போராட்டத்தில் மகாத்மா காந்தி மட்டுமே பெரிய பங்கை வகித்தார் என்றும், காந்தியால் மட்டுமே இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது என்றும் பலரைப்போல நானும் நினைத்துக் கொண்டிருந்தேன்.
1946ம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவின் கடற்படையில் பணிபுரிந்த இந்தியக் கடற்படையினர் திடீரென்று மேற்கொண்ட வேலை நிறுத்தத்தால் பிரிட்டிஷ் சாம்ராஜ்யமே நடுநடுங்கியது.
பம்பாயில் இருந்த கப்பலில் பணியில் இருந்த கடற்படையினர், உணவு சரியில்லை என்ற காரணத்தால் முதலில் வேலை நிறுத்தம் செய்யத் தொடங்கி, அது பிரிட்டிஷாருக்கு எதிரான வேலை நிறுத்தமாக மாறியது. பம்பாய் துறைமுகத்தில் அந்த வேலைநிறுத்தம் தொடங்கியது. வேலை நிறுத்தத்திற்கென ஒரு போராட்டக்குழு, எம்.எஸ்.கான் மற்றம் மதன் சிங் என்பவரால் உருவாக்கப்பட்டது. வேலை நிறுத்தம் முதலில் அக்பர் என்ற கப்பலில் தொடங்கியது. அதையடுத்து பகதூர் என்ற கப்பலும் வேலைநிறுத்தத்தில் இறங்கியது. சுபாஷ் சந்திர போஸின் வீர தீரச் செயல்கள் வானொலிச் செய்திகள் மூலமாகவும், கப்பலின் ஒயர்லெஸ் மூலமாகவும் பரவி, கடற்படையினரை கிளர்ந்தெழச் செய்தன. வேலை நிறுத்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரிட்டிஷாருக்கு ஆதரவு தெரிவித்த கடற்படை அதிகாரிகள் கப்பலிலிருந்து வெளியேற்றப்பட்டனர். கப்பலின் வயர்லெஸ் மூலம் கராச்சி, கொச்சின், விசாகப்பட்டினம் ஆகிய துறைமுகங்களுக்கு செய்தி பறந்ததும், அங்கேயும் வேலை நிறுத்தம் தொடங்கியது. பம்பாயில் இருந்த மில் தொழிலாளர்கள், அச்சுத் தொழிலாளர்கள், சுரங்கத் தொழிலாளர்கள் கடற்படையினருக்கு ஆதரவாக பம்பாய் நகர வீதிகளில் இறங்கிப் போராடினர். கப்பலில் இருந்து ஒரு சில பிரிட்டிஷ் அதிகாரிகள் தாக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டனர். கப்பலில் பறந்து கொண்டிருந்த பிரிட்டிஷ் கொடி இறக்கப்பட்டு காங்கிரஸ், முஸ்லீம் லீக் மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிகள் பறக்கவிடப்பட்டன. கராச்சி துறைமுகத்தில், வேலை நிறுத்தம் செய்யும் கடற்படையினரை நோக்கிச் சுடுமாறு பணிக்கப்பட்ட ராணுவத்தின் கூர்க்கா படையினர் பிரிட்டிஷ் அதிகாரிகளின் உத்தரவுக்கு கீழ்படிய மறுத்து துப்பாக்கிகளைக் கீழே போட்டனர். நாடு முழுவதும், இந்து முஸ்லீம் என்று பிளவுபட்டிருந்த போராட்டம், பம்பாய்க் கடற்படையில் பாகுபாடின்றி நடந்ததைப் பார்த்த பிரிட்டிஷார் கலங்கினர்.
இந்தியா மற்றும் அப்போது இணைந்திருந்த பாகிஸ்தான் மக்களும் ஒட்டுமொத்த ஆதரவை அளித்தும், காந்தியும், ஜின்னாவும் இந்த வேலைநிறுத்தத்தை ஆதரிக்கவில்லை. கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே ஆதரித்தது. பெரிய தலைவர்களின் ஆதரவு இல்லாததால், ஒரே வாரத்தில் அந்த வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த அத்தனை பேரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த வேலை நிறுத்தத்தையடுத்து, ஒரு நெருக்கடியான நேரத்தில் இந்திய ராணுவத்தையோ, கடற்படையையோ நம்பமுடியாது என்று பிரிட்டிஷ் அரசாங்கம் முடிவெடுத்தது.
இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த பிரிட்டிஷ் அரசு, நெருக்கடியான நேரத்தில் போராடும் இந்தியர்களை அடக்க, இந்தியர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ராணுவம் மற்றும் காவல்துறையையே நம்பியிருந்தது. அந்த நம்பிக்கை பொய்யானதாலேயே இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற பிரிட்டிஷ் எண்ணம் முழுமையடைந்தது. ஆனால், அப்படி ஒரு வீரம் செறிந்த போராட்டத்தில் ஈடுபட்ட கடற்படையினருக்கு, சுதந்திரத்துக்குப் பிறகு, இந்திய அரசும் வேலை தரவில்லை, பாகிஸ்தான் அரசும் வேலை தரவில்லை என்று கல்யாண சுந்தரம் பேசி முடித்தபோது, அந்த அரங்கில் இருந்த அனைவரது மனதும் கனத்தது. இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் இப்படி ஒரு மிகப்பெரிய விஷயம் மறைக்கப்பட்டு விட்டதே என்ற ஆதங்கமும் ஏற்பட்டது. அவர் அந்த விஷயத்தைப் பற்றிப் பேசியவுடன், இந்தியக் கப்பற்படைக் கலகம் தொடர்பான பல்வேறு நூல்களைப் படிக்கவும், மேலும் தெரிந்து கொள்ளவும் அவர் பேச்சு என்னைத் தூண்டியது.
அந்தக் கூட்டம் முதல் கல்யாண சுந்தரம் எந்தக் கூட்டத்தில் பேசினாலும் தவறாமல் ஆஜராகிவிடுவேன். அதன் பிறகு அவரைச் சந்திக்க சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் அரசியல் விவாதங்களில் ஈடுபட்டு அவரின் ஆழ்ந்த அறிவைக் கண்டு மலைத்துப் போயுள்ளேன். அவரைப்போலவே அரசியல் அறிவை விசாலப்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற காரணத்தால்தான் பல்வேறு புத்தகங்களைப் படிக்கும் பழக்கமே ஏற்பட்டது எனக்கு.
விவாதத்தில் பங்கெடுக்கும்போது எனக்கு உள்ள ஆர்வத்தைப் பார்த்து, ஒரு மகனைப்போன்ற வாஞ்சையோடு என்னை பார்த்துக் கொண்டார்.
நான் சென்ற போது அறையில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தார்.
“வாப்பா வெங்கட். நல்லா இருக்கியா ?”
“நல்லா இருக்கேன் தோழர். நீங்க எப்படி இருக்கீங்க ?“
“எனக்கென்னப்பா.. நல்லா இருக்கேன்.“
“என்ன விஷயம் சொல்லு. ரெண்டு வாட்டி நீ வந்தப்போவும் தோழர்கள் பேசிக்கிட்டிருந்தாங்க. நீ என்னமோ சொல்ல வந்துட்டு அப்படியே போயிட்ட. என்ன விஷயம் ?“
தோழர் என்று தொடங்கி ஆர்.கே.என்டர்பிரைசஸ் லோன் விபரங்களை முழுமையாகச் சொல்லி முடித்தேன்.
“யாருக்கும் தெரியாம சம்பந்தப்பட்ட டாக்குமென்ட்ஸ எடுத்த சிபிஐகிட்ட குடுத்துட வேண்டியதுதானே ? சிபிஐல யாரயும் தெரியாதா உனக்கு“
“இல்ல தோழர். பேங்க் விஜிலென்ஸ்ல இந்த லோன் தொடர்பான அத்தனை பேப்பர்ஸையும் வாங்கிட்டாங்க. அந்த பேப்பர்ஸை பாக்கும்போதுதான் பினான்ஸ் மினிஸ்டர் சிங்காரவேலு ஆர்.கே.என்டர்பிரைசஸ் கம்பேனிக்கு லோன் குடுக்கறதுக்காக ரெக்கமென்ட் பண்ணி லெட்டர் குடுத்தருக்காருன்னு தெரிய வந்துச்சு. பட் எல்லா பேப்பர்ஸையும் நான் ஹேன்ட் ஓவர் பண்ணிட்டேன்.“
“பேங்க் விஜிலென்ஸ் இதை விசாரிக்கறதுக்குத்தானே வாங்கிருப்பாங்க. அவங்க விசாரிக்கலையா ?“
“இல்லை தோழர். அவங்ககிட்ட பேப்பர்ஸ் குடுத்து நாலு மாசம் ஆகுது. ரெண்டு வாட்டி போன் பண்ணிக் கேட்டேன். எங்ககிட்ட பேப்பர்ஸை ஹேன்ட் ஓவர் பண்ணிட்டீங்கள்ல ? நாங்க பாத்துக்கறோம். யூ டோன்ட் ஒர்ரின்னு சொல்லிட்டாங்க தோழர்“
“இது பெரிய்ய விவகாரம்பா. அந்த பேங்க் விஜிலென்ஸ்ல வேலை பாக்கறவனும் சிங்காரவேலுவுக்கு கீழேதானே வேலை பாக்கறான். அவன் நடவடிக்கை எடுப்பான்னு நாம எப்படி எதிர்ப்பார்க்க முடியும் ? சிங்காரவேலு எவ்ளோ பவர்புல்னு உனக்கு தெரியும்ல ? ப்ரைம் மினிஸ்டரையே மிரட்டறவன்பா அவன். இதை ஜாக்கரதையாத்தான் ஹேன்டில் பண்ணணும்.
எல்லா பேப்பர்சையும் விஜிலென்ஸ்ல குடுத்துட்டியே… நமக்குன்னு என்ன எவிடென்ஸ்பா இருக்கு ? சிங்காரவேலு ரோலை எப்படிப்பா ப்ரூவ் பண்றது ?“
“தோழர்.. விஜிலென்ஸ்ல குடுக்கறதுக்கு முன்னாடி, எல்லா பேப்பர்ஸையும் ஒரு காப்பி போட்டு வச்சுட்டேன். எங்கிட்ட பத்திரமா இருக்கு.“
“லோன் குடுத்தப்ப யாருப்பா மேனேஜரா இருந்தது. அவர்கிட்ட பேசினியா ? இல்ல அவரும் இதுல இன்வால்வ்டா ? “
“தோழர். அவருக்கு இதிலே இன்வால்வ்மென்ட் இருக்கற மாதிரித் தெரியல. சிங்காரவேலு லெட்டர் வந்ததுக்குப் பிறகு, அவர் பதில் அனுப்பியிருக்கார். இந்த கம்பேனிக்கு லோன் குடுக்க முடியாது. இன்எலிஜிபிள்னு (ineligible) க்ளீனா எழுதியிருக்கார். ஆனா, பத்து நாள் கழிச்சு அவரே லோன் சேங்ஷன் பண்ணிருக்கார். இப்ப அவரு ரிட்டையர் ஆயிட்டார். தஞ்சாவூர்ல செட்டில் ஆயிட்டார். நான் இன்னும் அவரை மீட் பண்ணல.“
“வேற யாருக்கு இந்த விஷயம் தெரியும் ?“
“வேற யாருக்கும் தெரியாது தோழர். நேரா உங்ககிட்ட மட்டும்தான் டிஸ்கஸ் பண்றேன். வேற யாரையும் நம்பி டிஸ்கஸ் பண்ண பயமா இருக்கு.”
”வேற யாருக்கிட்டயும் டிஸ்கஸ் பண்ண வேண்டாம். நீ தஞ்சாவூர் போயி உனக்கு முன்னாடி இருந்த மேனேஜரப் பாத்துட்டு வா. அவர்கிட்ட ஏன் அவர் லோன் சாங்ஷன் பண்ணாருன்னு கேளு. அவரைப் பாத்து டிஸ்கஸ் பண்ணிட்டு வா. அடுத்து என்ன பண்றதுன்னு முடிவு பண்ணலாம்.
அது வரைக்கும் வேற யார்கிட்டயும் இது பத்திப் பேசாத. என்கிட்டயும் நேரா வந்து பேசு. போன்ல வேண்டாம்.
சிங்காரவேலு கையில வெறும் பைனான்ஸ் மினிஸ்ட்ரி இருக்குன்னு நெனைச்சுடாத. நிதித்துறை கீழதான் இன்கம் டாக்ஸ், ரெவின்யூ இன்டெலிஜென்ஸ், அமலாக்கப்பிரிவு, கஸ்டம்ஸ்னு பல துறைகள் வருது. இந்த எல்லா துறைகளும், தனித்தனியா புலனாய்வு அமைப்பு வச்சுருக்காங்க. யாருடைய போனை வேணாலும் ஒட்டுக் கேட்கலாம். யாரை வேணாலும் அரெஸ்ட் பண்ணலாம். எங்க வேணாலும் சோதனை போடலாம். பினான்ஸ் மினிஸ்ட்ரியோட பவரை குறைச்சு மதிச்சுடாதே.
இனிமே நீ ரொம்ப ரொம்ப ஜாக்ரதையா இரு. அம்மாகிட்ட கூட எந்த ஊருக்குப் போறேன்னு சொல்லாத. யார்கிட்டயாவது சாதாரணமா பேசும்போது போன் ரிப்பேர்னு சொல்லிட்டு, போனை வீட்டுலையே வச்சுட்டுப் போயிடு. டவர் லொகேஷன் வச்சு கண்டுபிடிச்சுடுவாங்க. நீ தஞ்சாவூர் போறது தெரிஞ்சா பழைய மேனேஜரத்தான் பாக்கப்போறன்னு அங்க வந்துடுவாங்க.
ரொம்ப ஜாக்ரதையா டீல் பண்ணும்பா. போயிட்டு வந்து என்னை நேராப்பாரு. அடுத்த என்ன பண்றதுன்னு யோசிப்போம்” என்றார்.
அவரிடம் விடைபெற்று விட்டு வீடு திரும்பினேன். மறுநாள், வங்கியில் பாலகிருஷ்ணனின் முகவரியை எடுத்து குறித்துக் கொண்டேன். இரண்டு நாள் விடுமுறை எடுத்து விட்டு, அன்று இரவே தஞ்சாவூர் கிளம்பினேன்.
தொடரும்
good going bro. Nicely written.
வேள்வி 6 ம் பாகம் தடைபட்டுள்ளது கவணிக்கவும்
I got mail for velvi 6 thodar. But is not found in your website. Please check ….
என் கண்ணைப் பார்க்க அச்சப்படுகிறாளா. அல்லது பார்க்கவே விடிக்கவிலையா ?
முடிந்தால் தட்டச்சு செய்தவுடன் ஒரு முறை அல்லது இரண்டு முறை வாசித்துப் பாருங்கள். உங்கள் நல்ல வேலையை நீங்கள் தொடர வேண்டும். வாழ்த்துக்கள்.
Please write daily
அரசு இயந்திரத்தை தோலுரித்துக்காட்டும் உங்களின் படைப்பு வரவேற்கப்படவேண்டியது. ஆர்வத்தை தூண்டுகிறது. அடுத்த அத்தியாயத்தை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம். வாழ்த்துகள் சார்.
பாவி,படுபாவி அயோக்கியன் சிதம்பரம் உடன் கூட்டு சேர்ந்து கொள்ளை அடித்து அப்பாவி தமிழர்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க வகையில் வாழ்வது,என்ன கொடுமை? இவன் சொத்துக்களை பறிமுதல் செய்யவேண்டும்.
ப.சிங்காரம் – கடலுக்கு அப்பால் , புத்தகத்தில் இந்திய கடற்படை மேற்கொண்ட வேலை நிறுத்தம் விரிவாக கூறப்பட்டிருக்கும் …
ஆர்வம் கூடுகிறது… அடுத்த பாகம் எப்போ…?