2013ம் ஆண்டு, நிலக்கரி ஊழலை விசாரித்த நீதிபதி ஆர்எம்.லோதா தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு, இந்தியாவின் தலைமைப் புலனாய்வு நிறுவனமான மத்திய புலனாய்வுப் பிரிவை கூண்டுக்கிளி என்று வர்ணித்தது. ஆட்சியாளர்களின் கைப்பாவையாக செயல்படுகிறது என்று கடிந்து கொண்டது. ஆனால் தற்போது சிபிஐ கூண்டுக்கிளியாகக் கூட அல்ல. சில கருப்பு ஆடுகளால் சிறகொடிந்த கிளியாக மாறிப்போயுள்ளது என்பதே வேதனை தரும் உண்மை.
கடந்த வாரம், விஜிஎன் கட்டுமான நிறுவனத்தின் 112 கோடி ரூபாய் பெருமானமுள்ள சொத்துக்களை அமலாக்கப் பிரிவு இணைத்து, இணைப்பாணை வெளியிட்டுள்ளது. ஊழலே உன் விலை என்ன என்ற தலைப்பில் சவுக்கு தளத்தில் நாம் விஜிஎன் ஊழலை ஆவணங்களோடு அம்பலப்படுத்தி வெளியிட்ட நாள் 17 நவம்பர் 2014. இணைப்பு. மூன்றரை வருடங்கள் கடந்து விட்டன. அந்த வழக்கு சம்பந்தப்பட்ட அத்தனை ஆவணங்களும் நம் கட்டுரையில் வெளியிடப்பட்டிருந்தன. ஆனால் என்ன காரணத்துக்காகவோ சிபிஐ வழக்கு பதிவு செய்ய, இரண்டு வருடங்களை எடுத்துக் கொண்டது. சிபிஐ முதல் தகவல் அறிக்கை
இன்றைய இந்து நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் கிண்டியில் விஜிஎன் கட்டி வரும் சர்ச்சைக்குரிய நிலத்தில் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பில் மொத்தம் உள்ள 892 வீடுகளில் 50 சதவிகித வீடுகள் விற்று முடிக்கப்பட்டு விட்டதாக தகவல் கூறப்பட்டுள்ளது. சவுக்கு தளத்தில் இந்த ஊழல் வெளியான சமயத்தில், அந்த பகுதிக்கு சென்று கள ஆய்வு நடத்தியபோது, அடித்தளம் கூட அமைக்கப்படாமல், கட்டுமானம் தொடக்க நிலையைக் கூட எட்டவில்லை. ஆனால் இன்று கட்டிடம் நெடு நெடுவென்று உயர்ந்து வருகிறது. கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீடு வாங்க வேண்டும் என்று தொலைபேசியில் அந்நிறுவனத்தை அழைத்துப் பேசியபோது, குறைந்த சதுர அடியில் உள்ள ஒரு வீட்டின் தொடக்க விலையே 90 லட்சம் என்று கூறினார்கள். குறைந்த அளவு வீடே 90 லட்சம் என்றால், இதர வீடுகளின் விலையை ஊகித்துக் கொள்ளுங்கள்.
தற்போது 892 வீடுகளில் 50 சதவிகிதம் வியாபாரம் ஆகி விட்டது என்றால், எத்தனை கோடிகள் விஜிஎன் நிறுவனத்திடம் சேர்க்கப்பட்டிருக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். இந்த 50 சதவிகிதத்தில், உழைத்து சம்பாதித்தவர்களும் இருக்கலாம். கருப்புப் பண முதலைகளும் இருக்கலாம். ஆனால் சிக்கலில் உள்ள ஒரு நிலத்தில் முதலீடுகள் நடைபெறுவதை வேடிக்கை பார்த்த சிபிஐ மற்றும் அரசுத் துறைகள் இதில் குற்றவாளிகளா இல்லையா ?
அது மட்டுமல்ல. ஏற்கனவே நமது முந்தைய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது போல, தமிழக அரசுக்கு, வணிக வரி உள்ளிட்ட இதர நிலுவைத் தொகைகள் இருந்தன. இது போக, இந்த நிலத்துக்கு அசல் உரிமையாளரான தமிழக அரசுக்கு, இந்த நிலை விற்பனையில் 10 சதவிகிதத்தை வழங்க வேண்டும் என்பதும் தமிழக அரசு வழங்கிய தடையில்லா சான்றிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், இந்த தடையில்லா சான்றை வழங்கிய இரண்டு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள், இந்தத் தொகையை வசூலிக்க எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது, இந்த தடையில்லா சான்றிதழை வழங்க வேண்டிய பொறுப்பு இரண்டு துறைகளைச் சேர்ந்தது. ஒன்று, சிறு தொழில் வளர்ச்சி நிறுவனமான சிட்கோ. இரண்டாவது, தமிழக அரசின், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை (Micro, Small and Medium Enterprises Department)
சிட்கோ நிறுவனத்தின் தலைவராக இருந்தவர், ஹன்ஸ்ராஜ் வர்மா. சிறு மற்றும் குறுந் தொழில்துறையின் தலைவராக இருந்தவர், தற்போது உள்துறை செயலாளராக உள்ள நிரஞ்சன் மார்டி ஐஏஎஸ்.
தமிழக அரசு, வர வேண்டிய நிலுவைத் தொகையை வசூல் செய்யாமல் எப்படி தடையில்லா சான்று வழங்குவது என்று தயங்கியபோது, உடனடியாக தடையில்லா சான்று வழங்குமாறு நெருக்கடி அளித்தது, ராம் மோகன ராவ் ஐஏஎஸ். ஜெயலலிதாவோடு அவருக்கு இருந்த நெருக்கம் காரணமாக அவரைக் கண்டு பயப்படாத ஐஏஎஸ் அதிகாரிகளே இல்லை. அவர் உத்தரவை ஏற்று, விஜிஎன் நிறுவனத்துக்கு தடையில்லா சான்று வழங்க ஹன்ஸ்ராஜ் வர்மா மற்றும் நிரஞ்சன் மார்டி ஆகிய இருவரும் ஒப்புக் கொண்டு அதற்கான கோப்புகளில் கையெழுத்திடுகின்றனர்.
இதில் நிரஞ்சன் மார்டி மற்றும் ஹன்ஸ்ராஜ் வர்மாவுக்கு தலா 5 கோடியும், ராம் மோகன ராவுக்கு 15 கோடியும் விஜிஎன் நிறுவனம் சார்பாக வழங்கப்பட்டதாக, ஐஏஎஸ் அதிகாரிகள் வட்டாரம் தெரிவிக்கிறது. இந்த தடையில்லா சான்று வழங்கும் கோப்பில், கையெழுத்திட மறுத்தவர், அன்றும், இன்றும் நிதித் துறை செயலாளராக இருக்கும் சண்முகம் ஐஏஎஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது. சண்முகம் கையெழுத்திட மறுத்ததும், ராம் மோகன ராவ் ஜெயலலிதாவிடம், இந்த நிலத்தை விற்பனை செய்ய தடையில்லா சான்றிதழ் வழங்கியே தீர வேண்டும் என்றும், இல்லையென்றால் உச்சநீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளாக வேண்டும் என்றும் கூறுகிறார். அதன் அடிப்படையில் அடுத்து நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவை இது குறித்து தீர்மானம் போடுகிறது. அதன் பிறகு தடையில்லா சான்று வழங்கப்படுகிறது.
இவை அனைத்தும், இது தொடர்பான தலைமைச் செயலக கோப்புகளில் பதிவுகளாக இருக்கின்றன. தற்போது விஜிஎன் தொடர்பாக விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் சிபிஐ, இந்த இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு இந்த ஊழலில் பங்கு என்ன என்பது குறித்து விசாரிக்குமா என்றால் சந்தேகமே. அதுவும், இந்த ஊழலில் ராம் மோகன ராவுக்கு தொடர்பு இருக்கிறது என்ற விபரம் தெரிந்தாலே, மொத்தமாக இந்த வழக்கையே குழிதோண்டிப் புதைக்க சிபிஐயின் இணை இயக்குநர் நாகேஸ்வர ராவ் தயங்க மாட்டார்.
ஆனால் சிபிஐ இது வரை விசாரணையையே தொடங்காத ஒரு பகுதி இருக்கிறது. சிபிஐ அமைப்பின் பலமே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த கையோடு நடத்தும் சோதனைகள்தான். இந்த சோதனைகள்தான், பின்னாளில் சிபிஐயின் விசாரணையில் மிகப் பெரும் ஆதாரமாக அமைகின்றன. 99 சதவிகித ஊழல் வழக்குகளில், சிபிஐ சோதனைகள் நடத்தத் தவறுவதே இல்லை.
ஆனால் விஜிஎன் நிறுவனத்தின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த 28.12.2016 முதல், இன்று வரை எந்த சோதனையும் நடத்தப்படவில்லை. இது மிகுந்த விசித்திரமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பலத்த சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக தென் மண்டல சிபிஐயின் இணை இயக்குநராக இருப்பவர், எம்.நாகேஸ்வர ராவ், ஐபிஎஸ். ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட நாகேஷ்வர ராவ், ஒதிஷா கேடரைச் சேர்ந்தவர். இவர் சென்னைக்கு இணை இயக்குநராக வந்தது முதலாகவே இவர் மீது சர்ச்சைகள் இருந்து வந்தன. தினமலர் டீக்கடை பென்ச்சில் இரண்டு முறை இவர் குறித்து செய்திகள் வந்தன. இரண்டு செய்திகளுமே, மத்திய அரசுத் துறையின் மூத்த அதிகாரிகள் மீதான நான்கு வழக்குகளை இவர் குற்றவாளிகளுக்கு சாதகமாக முடிவெடுத்து, அவருக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகளுக்கு நெருக்கடி அளித்தார் என்பதே.
தமிழகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் குறித்து, அதிகார போட்டி மற்றும் காவல்துறை அரசியல் காரணமாக டீக்கடை பென்ச்சில் செய்திகள் வருவது வழக்கம். ஆனால் ஒதிஷா கேடரைச் சேர்ந்த ஒரு அதிகாரி பற்றி, தமிழகத்தில் டீக்கடை பென்ச்சில் எதற்கு செய்திகள் வருகிறது என்று அப்போதே குழப்பமாகத்தான் இருந்தது.
அப்போது இவரைப் பற்றி விசாரித்தபோது பெரிய அளவில் தகவல்கள் கிடைக்கவில்லை. ஆனால், நாளடைவில், இவர் சென்னையில் பணியாற்றும் தெலுங்கு அதிகாரிகளோடு மிகுந்த நெருக்கத்தோடு இருப்பதும், அவர்களிடம், சிபிஐ புலனாய்வு செய்யும் வழக்கு விபரங்களை வாட்சப் அழைப்புகள் மூலம் இவர் பகிர்ந்து கொள்ளும் தகவலும் தெரிய வந்தது.
மேலும், தமிழகத்தின் மிக மிக மோசமான ஊழல் பெருச்சாளியான ராம் மோகன ராவோடு இவர் மிக மிக நெருக்கம் என்ற தகவலும் கிடைத்தது.
விஜிஎன் போன்ற கட்டுமான நிறுவனம் என்பது, அரசு அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும், உள்ளுர் ரவுடிகளுக்கும் லஞ்சம் கொடுத்தே ஆக வேண்டும். அப்படி லஞ்சம் கொடுக்காவிட்டால் அவர்களால் தொழில் செய்யவே முடியாது. இது போன்ற பெரிய நிறுவனங்கள், அவர்கள் செய்யும் ஒவ்வொரு பைசா செலவையும், உரிய பதிவேடுகளில் பதிவு செய்வார்கள். அது அதிகாரிக்கு தரப்படும் லஞ்சமாக இருந்தாலும் சரி, மதிய உணவு செலவாக இருந்தாலும் சரி.
சிபிஐ போன்ற ஒரு புலனாய்வு அமைப்பு என்ன செய்திருக்க வேண்டும் ? விஜிஎன்னுக்கு எதிராக வழக்கு பதிவு செய்த அடுத்த நாளே அந்த அலுவலகத்தில் சோதனை நடத்தி, அவர்களின் பதிவேடுகளையும், கணினியையும் கைப்பற்றியிருக்க வேண்டுமா இல்லையா ?
அப்படி கைப்பற்றியிருந்தால், 2011ம் ஆண்டு முதல், 2014 தொடக்கம் முதல், அவர்கள் தமிழக அரசின் அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் மத்திய அரசு அதிகாரிகளுக்கு அளித்த லஞ்சப் பட்டியல் கிடைத்திருக்கும்.
விஜிஎன் நிறுவனத்தின் 2011 முதல் 2014 தொடக்கம் வரையில் உள்ள காலத்துக்கான வரவு செலவு கணக்குகள், நமக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே கிடைத்தன. அந்த விபரத்தை நாம் எளிதாக சவுக்கில் வெளியிட்டிருக்க முடியும். ஆனால், நாம் வெளியிட்ட பிறகு, இந்த விபரங்களை ஆவணமான நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய இயலாமல் போகலாம். அதன் காரணமாக இந்த வழக்கின் புலனாய்வில் எவ்வித தொய்வும் ஏற்பட நாம் காரணமாக இருக்கக் கூடாது என்ற காரணத்துக்காகவே அந்த ஆதாரத்தை நாம் வெளியிடவில்லை.
ஆனால், விஜிஎன் ஊழலில், பெரும் தொகையை பெற்றுள்ளதாக கூறப்படும், ராம் மோகன ராவை காப்பாற்றுவதற்காகவே சிபிஐ அமைப்பின் அடிப்படை நடைமுறையான சோதனைகளைக் கூட சிபிஐ மேற்கொள்ளவில்லை என்றால், அந்த ஆதாரத்தை இனியும் சேமித்து வைத்திருப்பதில் எந்தப் பொருளும் இல்லை. இத்தனை நாட்களாக, இந்த வழக்கு குறித்த ஆவணங்களை விஜிஎன் நிறுவனம் அழிக்காமல் அப்படியே வைத்திருக்குமா என்ன ?
நம்மிடம் கிடைத்துள்ள ஆவணத்தில், ஏராளமான பதிவுகள் உள்ளன. முக்கியமானவை சிலவற்றை மட்டும் பார்ப்போம். 05.09.2011 சிஎம்டிஏ டி.பி (டெப்புடி ப்ளானர்). இந்தப் பதவியில் உள்ளவர், தொடர்ந்து பணம் பெற்று வந்துள்ளார். 11.02.2012, TNHB NOC. 20,000 வீட்டு வசதி வாரியத்தில் என்ஓசி பெற 20 ஆயிரம். 17.02.2012 வில்லிவாக்கம் பிடிஓ 2,80,000. 20.02.2012 சிஎம்டிஏ டெப்புட்டி ப்ளான்னர் 2 லட்சம். 08.03.2012 Mini (அமைச்சர்) 2 கோடியே 55 லட்சத்து 28 ஆயிரத்து 710. அமைச்சரின் பிஏ 5 லட்சம். மீண்டும் 08.03.2012 Min (அமைச்சர்) 3 கோடியே 91 லட்சத்து, 52 ஆயிரம் ரூபாய். அமைச்சரின் பிஏ 4,61,2000. 17.03.2012 குன்றத்தூர் சேர்மேன் 3 லட்சம். 22.03.2012 எஸ்பி 10 லட்சம். 07.05.2012 சிஎம்டிஏ SP, DP, AP, PA. OA 15 லட்சம். 05.06.2012 சிஎம்டிஏ டிபி குமரேசன் 2 லட்சம். 22.06.2012 ஆவடி சேர்மேன் 50 லட்சம்.
புதிய தலைமுறை இந்நிறுவனத்தில் இருந்து வீடு வாங்க அட்வான்ஸ் அளித்துள்ளதாகவே தெரிகிறது. நான்கு தவணைகளில் இரண்டரை கோடிக்கும் மேலாக புதிய தலைமுறையிலிருந்து பணம் வந்ததாக வரவு வைத்துள்ளனர். 14.11.2012 ஆவடி எம்எல்ஏ 50 லட்சம். 10.03.2013 ஆவடி கமிஷனர் 12 லட்சம். 06.04.2013 மாசு கட்டுப்பாட்டுத் துறை 4 லட்சம். 29.06.2013 ஆலந்தூர் மற்றும் அம்பத்தூர் பத்திரப் பதிவுத் துறைக்கு முறையே 7.50 லடசம் மற்றும் 3.50 லட்சம். 06.09.2013 நுங்கம்பாக்கம் காவல் நிலையம் 1.25 லட்சம்.
24.12.2013 For Minister (அமைச்சருக்கு (2,13,650 * 12) ஒரு கோடியே 6 லட்சத்து 82 ஆயிரத்து 500 ரூபாய்.
19.02.2014 அன்று, கிண்டியில் கட்டப்பட்டு வரும் விஜிஎன் ன் சர்ச்சைக்குள்ளான கட்டிடத்துக்கான அப்ரூவல் செலவு என்று அந்நிறுவனம் குறிப்பிடும் தொகை 5 கோடியே 41 லட்சத்து, 56 ஆயிரத்து 600 ரூபாய்.
நான் மேலே குறிப்பிட்டுள்ள தொகைகள், அனைத்தும் இந்தப் பட்டியலில் உள்ள பெரிய தொகைகள். சிறிய அளவில், விஜிஎன் நிறுவனத்திடம் லஞ்சம் வாங்காத அரசுத் துறைகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு லஞ்சம் தலைவிரித்து ஆடியுள்ளது. இதில் சென்னை மாநகர காவல் துறையின் சைபர் கிரைம் பிரிவில் இருந்து அவ்வப்போது 10 ஆயிரம் ரூபாய் வாங்கிச் சென்றுள்ளனர். இது எதற்கு என்பதுதான் புரியவேயில்லை.
இப்படிப்பட்ட ஒரு ஆதாரத்தை சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றி, இது குறித்து உரிய விசாரணையை மேற்கொண்டிருக்க வேண்டுமா இல்லையா ?
இந்த வழக்கில் சிபிஐ இது வரை ஒரே ஒரு கைது நடவடிக்கையைக் கூட மேற்கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்துஸ்தான் டெலிபிரின்டர்ஸ் நிறுவனத்திடம் இருந்து விஜிஎன் நிறுவனத்துக்கு நிலம் கைமாறியதும், இதற்கு உதவி செய்த எஸ்பிஐ வங்கி அதிகாரிகளுக்கு சேர வேண்டிய லஞ்சத்தை, விஜிஎன் நிறுவனம் கொடுத்தது. இதில் ஒரு பகுதி லஞ்சமான 2 கோடி ரூபாய் எச்.டி.எல் நிறுவனத்துக்கு அனுப்பப்படுகிறது. அதில் இருந்து கணேஷ்ராஜ் என்ற நபர், தன்னுடைய வங்கிக் கணக்குக்கு 80 லட்சத்தை மாற்றி, அதில் இருந்து, உதவி பொது மேலாளர் ராமதாஸ் மற்றும், துணைப் பொது மேலாளர் லியோன் தெராட்டில் ஆகியோருக்கு வழங்கினார். இந்த விபரங்களைக் கூட சிபிஐ இது வரையில் சேகரிக்கவில்லை. இவை அனைத்தும் வங்கி ஆவணங்களில் உள்ளது.
இன்று விஜிஎன் நிறுவனம் இந்த வழக்கில் அவர்கள் பக்கம் எந்த குற்றமும் இல்லை என்றும், தவறாக அமலாக்கத் துறை தங்கள் சொத்துக்களை அட்டாச் செய்துள்ளது என்றும் விளம்பரம் அளித்துள்ளது. மேலும், இந்த அட்டாச்மென்ட் உத்தரவுக்கு எப்படியும் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்று விடுவோம் என்றும் கூறி வருகிறது விஜிஎன்.
மற்றவர்கள் லஞ்சம் வாங்கினால் சிபிஐயில் புகார் சொல்லலாம். சிபிஐயின் இணை இயக்குநரே சந்தேகத்தின் நிழல் படிந்த நபராக இருந்தால் ? பல புகார்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் ஆளான நபராக இருந்தால் ?
சிபிஐ தற்போது கூண்டுக்கிளி அல்ல. நாகேஸ்வர ராவ் போன்ற அதிகாரிகளால் அது சிறகொடிந்த கிளியாகவே மாறிப் போயுள்ளது.
வாழ்க இந்தியா
சவுக்கு மிக பெரிய அளவில் இருக்கும் ஊழல்களை வெளிப்படுத்தியுள்ளார். நன்றி. இந்த நிலையில் இருக்கும் நாட்டை யார் காப்பாற்று வார்கள்.
வெட்கம் கெட்ட பசங்க..
ஒரே இரைச்சலாக இருக்கிறது எங்கு திரும்பினாலும்.இந்தக் கூட்டத்தில் ஒருவர் உண்மை பேசினால் காதில் கேட்பதில்லை.அல்லது இரைச்சல் வேண்டுமென்று உருவாக்கப்படுகிறதா?
Nothing to say.