மொத்த பைல்களையும் ஒன்றொன்றாகப் பார்த்தேன். எவிடென்ஸ் என்ற பெயரில் ஒரு போல்டர் மங்கலாக இருந்தது. அந்த போல்டரை திறந்தேன். மூன்று பைல்கள் இருந்தன. இரண்டு ஏஎம்ஆர் பார்மேட்டில் இருந்தன. ஒரு பைல் டெக்ஸ்ட் பைல். செல்பேசியில் உரையாடல்களை பதிவு செய்தால் ஏஎம்ஆர் பார்மேட்டில்தான் இருக்கும். ஏஎம்ஆர் பார்மேட்டில் உள்ள பைலை ப்ளே செய்வதற்கு ஒரு ப்ளேயரை டவுன்லோட் செய்தேன்.
முதல் பைலை திறந்தேன்.
“ஹலோ..“
“பேங்க் மேனேஜரா பேசறது ?“
“ஆமாங்க நான் மேனேஜர் பாலகிருஷ்ணன்தான் பேசறேன். நீங்க யாரு பேசறது ?“
“சார்.. ஆர்.கே என்டர்பிரைசஸ்க்கு லோன் கேட்டு ரெண்டு நாள் முன்னாடி வந்தேனே…“
“ஆமாம் சார். சொல்லுங்க“
“உங்க வீடு எங்க மேனேஜர் சார் ?“
“அதெல்லாம் உங்களுக்கு தேவையில்லாத விஷயம். உங்களுக்கு என்ன வேணுமோ அத மட்டும் சொல்லுங்க. தேவையில்லாத விஷயத்தையெல்லாம் கேக்காதீங்க..“
என்ன சார். ஒரு பேங்க் மேனேஜர் வாடகை வீட்டில இருக்கீங்களா, சொந்த வீட்டுல இருக்கீங்களான்னு நாங்க தெரிஞ்சுக்கிட்டு உங்களுக்கு உதவி பண்ணலாம்னு கேட்டோம். இதுக்குப் போயி இப்படி கோவப்பட்றீங்களே…
“மிஸ்டர்.நான் அதையெல்லாம் உங்ககிட்ட டிஸ்கஸ் பண்ணணும்னு அவசியம் இல்ல. உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க. என் டைமை வேஸ்ட் பண்ண முடியாது.”
“உங்க டைம் மாதிரியே எங்க டைமும் முக்கியம்தான் மேனேஜர் சார். டிலே பண்ணாம லோன் சாங்ஷன் பண்ணுவீங்கன்னு பாத்தா, எங்க பைலை லீகல் ஒபினியன்க்கு அனுப்பியிருக்கீங்களாமே.“
“ஆமாங்க… அது ரொட்டீன் ப்ரொசிஜர். லீகல் ஒபினியன் இல்லாம எப்படி லோன் குடுக்க முடியும் ?“
“என்ன சார். ஃபினான்ஸ் மினிஸ்டர் இன்ட்ரஸ்டட்னு சொல்றேன். அப்புறமும் ப்ரொசிஜர் பொடலங்கான்னு பேசிக்கிட்டிருக்கீங்க.. நாங்க பேசுனா செய்ய மாட்டீங்களா.. மினிஸ்டரையே பேசச் சொல்லவா ?“
“சார் நீங்க பேசுனாலும் சரி. மினிஸ்டர் பேசுனாலும் சரி.. ரூல்சை மீறி என்னால எதுவும் செய்ய முடியாது. இது மினிஸ்டருக்கே தெரியும்.“
“ரொம்ப சட்டம் பேசாதீங்க மேனேஜர் சார். எங்களுக்கும் சட்டம் தெரியும். நீங்க ஒழுங்கா சொன்னா வழிக்கு வர மாட்டீங்கன்னு நெனைக்கறேன். விடுங்க நான் மினிஸ்டர்கிட்ட பேசிக்கறேன்.“
இணைப்பைத் துண்டித்த ஒலியோடு அந்த உரையாடல் முடிந்தது.
அடுத்த பைலை திறந்தேன்.
“ஃபினான்ஸ் மினிஸ்டர் பேசனும்ன்றார்” என்று பாதியில் தொடங்கியது அந்த உரையாடல்.
“ஆமாங்க நான் பாலகிருஷ்ணன்தான் பேசறேன்.“
“என்ன பாலகிருஷ்ணன். நீங்கதான் இந்த ப்ரான்ச் மேனேஜரா ?“
சிங்காரவேலுவின் குரல். தமிழறிஞர் போல அழகான தமிழில் அரசியல் பேசும் அதே சிங்காரவேலுவின் குரல். தன்னையும் தன் கட்சியையும் தவிர உலகில் யாருமே யோக்கியர்கள் இல்லை என்று பொய்யுரை பேசும் அதே குரல். இவனைப்போல நல்லவன் உண்டா என்று கேட்போரை நம்பவைக்கும் குரல். தன் ஒருவனால்தான் இந்தியப் பொருளாதாரம் தூக்கி நிறுத்தப்படுகிறது என்று ஏமாற்றும் குரல்.
“ஆமாம் சார்.“
“அடுத்த மாசம் பொண்ணுக்கு கல்யாணம் வச்சுருக்கீங்க போலருக்கே”
சிங்காரவேலுவின் குரலில் எள்ளல் தொனி இருந்தது.
சற்றுத் தயக்கத்துடன். “ம்ம். ம்ம்.. ஆமாம் சார். “
“மாப்பிள்ளை நல்ல இடமாமே.. லெக்சரரா இருக்காராமே“
“…….“
“மண்டபத்துக்கெல்லாம் அட்வான்ஸ் குடுத்துருப்பீங்க. பத்திரிக்கை வச்சுக்கிட்டு இருப்பீங்க.“
“….“
“உங்க பொண்ணைப் பத்தி மாப்பிள்ளைக்கிட்ட எல்லாம் சொல்லிட்டீங்களா. “ சிங்காரவேலுவின் குரலில் கிண்டலோடு ஆணவமும் தொனித்தது.
“……….“
“பாலகிருஷ்ணன்….” என்று குரலை உயர்த்தினார் சிங்காரவேலு.
“நான் மினிஸ்டர் பேசறேன்றது தெரியுதா இல்லையா.. நான் பாட்டுக்கு பேசிக்கிட்டே இருக்கேன். எதுவும் பேசாம இருந்தா என்ன அர்த்தம் ? ம்ம்“
“………“
“யோவ் மிஸ்டர்… ஏதாவது பேசுய்யா… நான் இங்க ஒருத்தன் கத்திக்கிட்டு இருக்கேன். கம்முனு இருந்தா ….? நான் பாட்டுக்கு கத்திக்கிட்டு இருக்க பைத்தியக்காரனா ?”
சிங்காரவேலு உச்சபட்ச கோபத்தில் இருந்தது குரலில் தெரிந்தது. நான் ஒரு மத்திய மந்திரி. இந்தியாவின் நிதியாதாரத்தை நிர்வகிப்பவன். நான் பேசுகையில் ஒரு பவ்யமோ, பயமோ இன்றி அமைதியாக இருப்பதன் மூலம் அலட்சியப்படுத்த உனக்கு என்ன துணிச்சல் ?’ என்ற ஆணவம் தெரிந்தது.
“……………….”
“எங்க ஆளுங்க வந்து சி.டி. குடுத்தாங்களாய்யா.. ?”
”ம்ம்.. வந்து.. சார்…”
”என்ன சார்.. வந்து… குடுத்தாங்களா இல்லையா ?”
”ம்ம்… குடுத்தாங்க சார்.. ” பாலகிருஷ்ணன் குரலில் ஏராளமான தடுமாற்றம்.
சிங்காரவேலு தொடர்ந்தார். “இது மாதிரி இன்னும் எத்தனை சிடி இருக்கு தெரியுமா ? நீ கேட்ட சிடிய ஊரே கேக்கனுமா ? டிவில… இன்டெர்நெட்ல…ன்னு போட்டு நாறடிச்சுடுவேன்.. சந்தி சிரிக்க வெச்சுடுவேன்.. உன்னை… ”
பாலகிருஷ்ணன் பதிலேதும் பேசவில்லை. ஆற்றாமையிலும், வேதனையிலும் துடித்திருப்பார். அழுதிருப்பாரோ ?
”நாளைக்குள்ள ஆர்.கே என்டர்பிரைசஸ் பைலை க்ளியர் பண்ணணும். டிலே பண்ணா இன்டெர்நெட் பூரா சந்தி சிரிச்சுடும். புரியுதா ?”
“ம்ம்… ம்…. புரியுது சார்”
“சரியான அழுத்தக்காரன்தான்யா நீ.. என்கிட்டயே இவ்வளவு அழுத்தமா இருக்கன்னா என் ஆளுங்ககிட்ட என்னென்ன பேசியிருப்ப. ? ஐஞ்சு நிமிஷம் ஆகாதுய்யா. உன்ன அஸ்ஸாமுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணிட்டு வேற ஆளை போட்டு இந்த வேலையை முடிக்க. ஆனா அப்பிடி என்ன திமிரு உனக்கு ? என் ஆளு போன் பண்ணும்போது திமிரா பேசிருக்க ? எனக்குக் கீழ வேலப் பாத்துக்கிட்டு, என்கிட்டயே இவ்ளோ திமிரா பேசுறன்னா நீ எப்படிப்பட்ட ஆளா இருப்ப…. ? நடுத்தெருவுக்கு கொண்டு வந்துருவேன். ஞாபகம் வச்சக்க…
நாளைக்கு ஆர்.கே.என்டர்பிரைசஸ் வேலை முடியணும். புரிஞ்சுதா… என்னைத் திரும்ப பேச வைக்காத..“
இரண்டாவது உரையாடல் முடிந்தது. சிங்காரவேலு கடுமையான கோபத்தோடு பேசினார். டிவியிலும் ரேடியோவிலும் தோன்றும் அவரது சாந்தமான முகம் அல்ல இது. இது அவரது மறுபக்கம். அரசியல்வாதிகளுக்கே உரிய கோரமான மறுபக்கம். பார்ப்பவர்களை மிரள வைக்கும் மறுபக்கம்.
டெக்ஸ்ட் பைலாக இருந்த மூன்றாவது பைலை திறந்தேன். இரண்டு உரையாடல்களும் எந்தத் தேதியில் எந்த எண்ணிலிருந்து எந்த எண்ணுக்கு வந்தது என்ற விபரங்கள் அடங்கியிருந்தது. பாலகிருஷ்ணனை நினைத்தால் மலைப்பாக இருந்தது. எப்படிப்பட்ட மனிதர் அவர் ? சிங்காரவேலு கொடுத்த அந்த நெருக்கடியிலும், எவ்வளவு கவனமாக உரையாடல் விபரங்களை டெக்ஸ்ட் பைலாகவும், மொத்த பைல்களை ஒளித்து வைத்தும், எப்படி ஒரு ஆதாரத்தை தயார் செய்துள்ளார் ? பார்த்தால் இவருக்கும் கணிப்பொறிக்கும் சம்பந்தமே இல்லை என்று தோன்றியது. இவருக்கா இப்படி ஒரு கம்ப்யூட்டர் அறிவு ? ஆளைப் பார்த்து யாரையுமே எடை போடக் கூடாது. இந்த வயதான மனிதருக்கு கம்ப்யூட்டரைப் பற்றி எதுவுமே தெரியாது என்ற எண்ணம், அவரை சந்தித்த பின்னர், என்னை அறியாமலேயே என் மனதில் குடியேறியிருந்தது ஏன் என்று புரிந்து கொள்ள முடியவில்லை.
மற்ற இரண்டு பைல்களும் சிஸ்டம் பைல்கள். அவசியம் இல்லாதவை.
அந்த இரண்டு உரையாடல்களையும் மீண்டும் ஒரு முறை கேட்டேன். உடம்பில் ரத்தம் வேகமாகப் பாய்வதாக உணர்ந்தேன். பரபரப்பு தொற்றிக் கொண்டது. மிகப்பெரிய ஆயுதம் கையில் கிடைத்திருப்பதாய் உணர்ந்தேன். ஒழித்துக் கட்டலாம் சிங்காரவேலுவை என்ற நம்பிக்கை பிறந்தது. உடனே கிளம்பி கல்யாண சுந்தரத்தை பார்க்க வேண்டும் என்ற பரபரப்பு தோன்றியது. ஆனால் இரண்டு நாட்களாக தேங்கிக் கிடந்த வேலைகளை முடிக்க வேண்டும் என்ற நெருக்கடியைத் தவிர்க்க முடியவில்லை.
‘வெங்கட் காம் டவுன்’ என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். பொறுமையாக நிலுவையில் இருந்த வேலைகளை முடித்தேன். அந்த சிடியை மற்றொரு நகல் எடுத்தேன். ஒரிஜினலை என்னோடு எடுத்துக் கொண்டு, நகலின் மேல், எம்.பி 3 சாங்ஸ் என்று எழுதினேன். அந்த பைலின் நகல்களை எடுத்துக் கொண்டேன். மாலையில் வங்கி வேலைகள் முடிந்த பிறகு, ஐந்து மணிக்கு கிளம்பி, நேராக கல்யாணசுந்தரத்தைப் பார்க்கச் சென்றேன். அவர் வேறு ஏதோ வேலையாக வெளியே சென்றிருந்தார்.
நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று, கதிரொளி அலுவலகம் சென்றேன். ரியல் எஸ்டேட் அதிபர் தொடங்கிய பத்திரிக்கை என்பது, அந்த அலுவலகத்தின் வடிவமைப்பிலேயே தெரிந்தது. பளபளவென்று இருந்தது கட்டிடம். ஐந்து மாடிக் கட்டிடம் அது. முதல் இரண்டு தளங்களில் ஒரு இன்ஷ்யூரன்ஸ் நிறுவனமும் ஒரு தனியார் அலுவலகமும் இயங்கிக் கொண்டிருந்தது. நான்கு மற்றும் ஐந்தாவது மாடியில் கதிரொளி அலுவலகம்.
வாசலில் இருந்த செக்யூரிட்டியிடம் ஆசிரியரை பார்க்க வேண்டும் என்று சொல்லியதும், உள்ளே அழைத்தார்.
“ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணுங்க. எடிட்டோரியல் முடிச்சுட்டு வந்துட்றேன்“ என்றார்.
லிங்கேஸ்வரன். கதிரொளியின் ஆசிரியர். ஐம்பது வயதுக்கும் மேல் இருக்கும். நெற்றியில் விபூதிப் பட்டை இருந்தது. கண்ணாடி அணிந்திருந்தார். அந்தக்காலத்து கட்டைப் பேனாவில் தன் முன்பு இருந்த தாளில் ஏதோ திருத்திக் கொண்டிருந்தார். வெளியே வந்து காத்திருக்கலாம் என்று அறையை விட்டு வெளியே வந்தேன்.
பெரிய ஹாலில் ஒரு பத்து எல்.சி.டி டிவிக்கள் பொருத்தப்பட்டிருந்தன. அனைத்து டிவிக்களிலும், ஆங்கில மற்றும் தமிழ் செய்திச் சேனல்கள் ஓசையின்றி ஓடிக்கொண்டிருந்தன. தனியார் மென்பொருள் அலுவலகத்தில் இருப்பது போல நீளமாக கேபின்கள் அமைக்கப்பட்டு. கணிப்பொறியின் முன்னால் பல்வேறு ஊழியர்கள் வேலையில் ஈடுபட்டிருந்தார்கள். ஒரு பக்கம் பெரிய ஜெராக்ஸ் இயந்திரம் போல் இருந்த ஒரு இயந்திரம் நாளைய செய்தித்தாளின் ஒரு பக்கத்தை அச்சிட்டு வெளியேற்றியது. அதை எடுத்துக் கொண்டு ஒருவர் ஆசிரியர் அறைக்குள் சென்றார்.
மற்றொருவர், நாற்காலியில் சாய்வாக அமர்ந்து கொண்டு அவர் முன் குவிக்கப்பட்டிருந்த கடிதங்களை ஒவ்வொன்றாக படித்துக் கொண்டிருந்தார்.
ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஆனது. சற்றே எரிச்சல் வந்தது. இன்னும் எவ்வளவு நேரம்தான் காத்திருப்பது என்று என் எரிச்சலை எப்படித் தணிப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே, உதவியாளர் ஒருவர் வந்து, “சார் கூப்புட்றார்“ என்றார். உள்ளே சென்றேன்.
“வாங்க. கல்யாண சுந்தரம் அனுப்புன ஆள் தானே நீங்க ? பேர் என்ன ? “ என்றார்.
“வெங்கட் சார்“ என்றேன்.
“ம்ம்… சாரி. கொஞ்சம் லேட் ஆயிடுச்சு. கல்யாண சுந்தரம் விபரம் சொன்னார். பேப்பர்ஸ் கொண்டு வந்துருக்கீங்களா ?“
“இருக்கு சார்“ என்று பைலை அப்படியே எடுத்துக் கொடுத்தேன்.
பைலை முழுவதுமாக புரட்டிப் பார்த்தார். “ம்ம்.. சிங்காரவேலு கையெழுத்தேதான். எப்படி இந்த மாதிரி ஒரு லெட்டர அனுப்புனான் ? ரொம்ப கவனமான ஆளாச்சே அவன். அவன் கட்சியில எத்தனை பேரை ஒழிச்சு கட்டிட்டு இந்த எடத்துக்கு வந்துருக்கான் தெரியுமா ?. பட் வெரி இன்ட்ரஸ்டிங். இதை வச்சு அந்த ஆளுக்கு தொந்தரவு குடுக்க முடியும். ஆனா அவன் அரசியல் வாழ்க்கையை முடிச்சுட முடியுமான்னு தெரியல. ரொம்ப ஈசியா என் கையெழுத்த யாரோ ஃபோர்ஜ் பண்ணிட்டாங்கன்னு சொல்லிடுவான். நான் இந்த மாதிரி ஒரு லெட்டர் எழுதவேயில்லைனு சொல்லிடுவான். .ம்ம்… பார்ப்போம்.“ என்று அந்த பைலை மீண்டும் ஒரு முறை பார்வையிட்டார்.
“சார்… இன்னொரு எவிடென்ஸ்.. “
“ம் சொல்லுங்க.. “
“சிங்காரவேலுவோட ஆடியோ ரெக்கார்டிங் இருக்கு சார்.. “
“ஆடியோ ரெக்கார்டிங்கா… யார்கிட்ட பேசுன ரெக்கார்டிங்..?“
“லோன் குடுக்க முடியாதுன்னு லெட்டர் எழுதியிருக்காரே சார் மேனேஜர். அவர் கூட பேசுன கான்வர்சேஷன் சார். “
“ஃபென்டாஸ்டிக்.. அத மொதல்ல குடுக்க வேண்டாமா ? என்ன வெங்கட் நீங்க.. கல்யாண சுந்தரம் கூட இதைப் பத்தி எதுவுமே சொல்லலையே… ? “
“சார் அவருக்கே தெரியாது சார். நானே இன்னைக்குத்தான் ஆக்சிடென்டலா கண்டுபிடிச்சேன்“ என்று சொல்லி விட்டு அந்த சிடியை எடுத்து அவரிடம் கொடுத்தேன். அதை வாங்கி அவர் டேபிள் அருகே இருந்த லேப்டாப்பில் அதைச் சொருகினார். லேப்டாப்பை எடுத்து மேசை மேல் வைத்துக் கொண்டு, அதில் ஹெட்போனை சொருகி சிடியில் உள்ள பைல்களைத் திறந்து அந்த உரையாடல்களை ஒவ்வொன்றாகக் கேட்டார்.“
சிங்காரவேலுவின் உரையாடலைக் கேட்ட போது அவர் முகத்தில் ஆழ்ந்த கவனம் தெரிந்தது. பிறகு, மீண்டும் ஒரு முறை அந்த உரையாடல்களை கேட்டார்.
“ஃபேபுலஸ் (Fabulous) ஐ திங்க் வி கேன் நெய்ல் ஹிம். (I think we can nail him) குட் வொர்க் வெங்கட். நீங்க போங்க. நான் இதைப் பாத்துக்கறேன். இதைப் பத்தி வேற யார்கிட்டயும் டிஸ்கஸ் பண்ண வேண்டாம். கல்யாண சுந்தரத்துக்கிட்ட நீங்களே தகவல் சொல்லிடுங்க. ஐ வில் திங்க் ஹவ் அன்ட் வென் டு ப்ரேக் திஸ்.“ (I will think how and when to break this) என்றார்.
சரி சார் என்று அவரிடம் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினேன்.
அது வரை கதிரொளி பத்திரிக்கையை எப்போதாவதுதான் பார்ப்பேன். பத்திரிக்கை நன்றாகத்தான் இருக்கும் என்றாலும், வீட்டில் இரண்டு ஆங்கில நாளிதழ்கள் வாங்குவதால், கதிரொளி வாங்குவதில்லை.
லிங்கேஸ்வரனை சந்தித்து வந்த முதல் ஒரு வாரத்திற்கு காலை ஐந்து மணிக்கே எழுந்து சென்று, பேப்பர்களை பிரிக்கும் பாயிண்ட்டிலேயே சென்று வாங்கி வந்தேன். ஆனால், எனக்கே இது பைத்தியக்காரத்தனமாக இருந்தது. அதனால், வீட்டில் பேப்பர் போடும் பையனிடம் தினமும் கதிரொளி போடுமாறு சொல்லி விட்டேன். ஒரு வாரம், இரண்டு வாரம் என்று இருந்த காத்திருப்பு ஒரு மாதம் கடந்தவுடன் எல்லை மீறியது. ஒரு மாதமாக இப்படிப்பட்ட ஒரு ஆவணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்கிறார் லிங்கேஸ்வரன் ? சிங்காரவேலுவின் நீண்ட ஆக்டோபஸ் கரங்கள் லிங்கேஸ்வரனையும் வளைத்திருக்குமோ ?
லிங்கேஸ்வரனுக்கும் ஒரு விலை உண்டோ.. ? கல்யாண சுந்தரம் சொல்லியும் லிங்கேஸ்வரன் விலை போயிருப்பாரோ.. அவசரப்பட்டு விட்டோமோ ?
உலகத்தில் யாரையுமே நம்ப முடியாதா ? என் பொறுமை எல்லை கடந்து விட்டது. நேருக்கு நேர் கேட்டு விடுவது என்ற முடிவோடு கதிரொளி அலுவலகத்துக்கு கிளம்பினேன்.
தொடரும்.
தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்த ஆளே இப்படி ஊழல்களை செய்துள்ளார் என்கிற நிலையில் இந்த ஆளை விட மோசமான அருண் ஜெட்லி எவ்வளவு ஊழல் செய்வான், இவங்க ரெண்டு பேரும் கூட்டு சேர்ந்து கொள்ளை அடித்து மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
3 நாட்களை கடந்தும் அடுத்த பதிவு வரவில்லை, தினமும் பதிவை ஆவலொடு எதிர்பார்த்து காத்து கொண்டு உள்ளோம், இந்த ஊழல் செய்த கொடூரனை மக்கள் தண்டிப்பார்கள்.
சார், கொஞ்சம் கூட தான் வெளியிடுங்களேன்!! வெயிட் பன்றது ரொம்ப கஷ்டமா இருக்கு!
ஆர்வத்தை தூண்டுகிறது
ப.சிதம்பரத்தை இப்படி அம்பலப்படுத்தலாமா?
எணக்கும் அப்புடிதான் தோண்றுகிறது
This story depicts PNB scam , super sir waiting for next part
அருமையான த்திரில்லர் மூவ்..! கமல் கட்சி கட்சி கட்டுரை எப்ப வரும்…!!