கதிரொளி அலுவலகத்துக்குள் நுழைந்தேன். எடிட்டரைப் பார்க்க வேண்டும் என்று சொல்லி விட்டு உள்ளே சென்றேன். எடிட்டர் உள்ளே வரச்சொன்னார்.
“வணக்கம் சார்“
“வாப்பா. வெங்கட். எப்படி இருக்க ?“
“நல்லா இருக்கேன் சார். சொல்லுப்பா என்ன விஷயம் ?“
“சார் அந்த சிங்காரவேலு மேட்டர்” என்று இழுத்தேன்.
“ஏம்ப்பா அவசரப்பட்ற ? என்கிட்ட குடுத்துட்டல்ல.. நான் பாத்துக்கறேன் விடு“
“இல்ல சார். ஒரு மாசம் ஆச்சே… இன்னும் வெளில வரலயேன்னுதான்.. “
“தம்பி.. எவ்வளவு பெரிய முக்கியமான செய்தியா இருந்தாலும், டைமிங்னு ஒன்னு இருக்கு. அந்த டைமிங்க புரிஞ்சுக்காம நியூஸ் ப்ரேக் பண்ணா அந்த நியூசுக்கே வேல்யூ இல்லாமப் போயிடும். ஜர்னலிசத்துல டைமிங் ரொம்ப ரொம்ப முக்கியம்”
புரிந்தது போலவும் இருந்தது, புரியாதது போலவும் இருந்தது. என் முகபாவனையை வைத்து புரிந்து கொண்டவர், தொடர்ந்தார்.
“ஒரு பெரிய ஸ்கேம் பத்தி எவிடென்ஸ் கெடச்சுருக்குன்னு வெச்சுக்கயேன். அது பப்ளிஷ் ஆகுது. அந்த நியூஸை எல்லாரும் கேரி பண்ணணும். அந்த நியூஸ் பப்ளிஷ் ஆனதுனால ஏதாவது ஒரு எஃபெக்ட் இருக்கனும். ரிசல்ட் வரணும். நானும் பப்ளிஷ் பண்றேன்னு அவசரப்பட்டு பண்ணிட்டா அதுக்கு வேல்யூ இல்லாமப் போயிடும்.“
“ஓ.கே சார்“ என்றேன்.
இவரிடம் என்ன பேசுவது ? கல்யாண சுந்தரம் இவரை அப்படி இப்படி என்று புகழ்ந்தார். கல்யாண சுந்தரத்தைத் தவிர ஊரில் எல்லோரும் அப்படித்தான் சொல்கிறார்கள். ஒரு உலகமகா அயோக்கியனைப் பற்றி அற்புதமான ஆதாரத்தை எடுத்துக் கொடுத்திருக்கிறேன். ஆனால், டைமிங் அது இதுவென்று ஏதேதோ சொல்லுகிறார்.
“சரி நான் கௌம்பறேன் சார்.“
“சரிப்பா. போயிட்டு வா. நான் உனக்கு ஏற்கனவே சொன்னதுதான். ஜாக்ரதையா இரு. ரொம்ப எமர்ஜென்சியா இருந்தாலே ஒழிய என்னைப் பாக்க வராத. இப்ப வரும்போது பைக்ல வந்தியா ?“
“ஆமாம் சார். “
“இனிமே என்னை எப்பயாவது பாக்க வந்தாலும், வண்டியை எங்கயாவது நிறுத்திட்டு நடந்து வா. கதிரொளி ஆபிஸ் வாசல்ல எப்பவும் இன்டெலிஜென்ஸ் ஆளுங்க இருப்பாங்க.“
“சரி சார்.“
வெளியே வந்ததும், அவர் மீது நம்பிக்கை இருப்பது போலவும் இருந்தது. இல்லாதது போலவும் இருந்தது. அவரை முழுமையாக சந்தேகப்படவும் மனது வரவில்லை. கல்யாண சுந்தரம் யாருக்கும் அப்படி நற்சான்றிதழ் வழங்கி விட மாட்டார். இன்னும் ஒரு வாரம் பத்து நாள் பார்க்கலாம். அப்போதும் வரவில்லையென்றால், கல்யாண சுந்தரத்திடம் சொல்ல வேண்டியதுதான். ஏன் ஒரு வாரம் காத்திக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு, உடனே கல்யாண சுந்தரத்தைப் பார்க்கக் கிளம்பினேன்.
அவர் ஊரில் இல்லை. கல்கத்தாவில் நடக்கும் தொழிற்சங்க மாநாட்டுக்கு கிளம்பிப் போயிருந்தார். வருவதற்கு நான்கு நாட்கள் ஆகும் என்றார்கள். வந்த பிறகு பார்க்கலாம்.
அடிக்கடி மேனேஜர் பாலகிருஷ்ணனின் நினைவு வந்து சென்றது. அவரைப் பற்றி நினைக்கும் போதெல்லாம், சிங்காரவேலுவை ஒரு வழி பண்ண வேண்டும் என்ற வெறி ஏற்பட்டது. பார்ப்போம் கதிரொளி ஆசிரியர் என்ன செய்கிறார் என்று.
ஒரு வாரம் கடந்தது. தினமும் காலையில் கதிரொளியைப் பார்த்துப் பார்த்து சலித்து விட்டது. சிங்காரவேலு என்று சிறிய செய்தி இருந்தாலும் சிங்காரவேலுவின் வீழ்ச்சியை எதிர்ப்பார்க்கும் மனது, இது அந்த செய்தியாகத்தான் இருக்குமோ என்று பரபரத்தது. ஆனால் வந்த செய்திகள், “வங்கி வட்டி விகிதங்கள் குறைக்கப்படும்-சிங்காரவேலு அறிவிப்பு. கட்சியில் கோஷ்டி பூசல்கள் அறவே இல்லை – சிங்காரவேலு பேட்டி. தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு – சிங்காரவேலு அறிவிப்பு என்று சிங்காவேலு புகழ்பாடும் செய்திகளாகவே இருந்தன. இன்றைய கதிரொளியிலும், சிங்காரவேலுவின் படத்தை பெரியதாகப் போட்டு “மழைக்காலக் கூட்டத்தொடரில் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும் – மத்திய நிதி அமைச்சர் சிங்காரவேலு அறிவிப்பு. இன்று தொடங்கவிருக்கும் பாராளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரில் மகளிருக்கான இட ஒதுக்கீட்டு மசோதா நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் சிங்காரவேலு அறிவித்தார். இது தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாகவும், எதிர்க்கட்சிகள் ஒத்துழைத்தால் இந்தக் கூட்டத்தொடரிலேயே இம்மசோதா நிறைவேற்றப்படும் என்றும் சிங்காரவேலு அறிவித்தார்” என்று கதிரொளி கூறியது.
அப்படியே யோசித்துக் கொண்டு மற்ற செய்திகளை ஆர்வக்குறைவோடு பார்த்து விட்டு அலுவலகம் கிளம்பினேன். அன்று சனிக்கிழமை என்பதால் மாலை சினிமாவுக்குச் செல்லலாம் என்று நண்பரிடம் பேசுவோம் என்று நினைத்துக் கொண்டேன். சிங்காரவேலுவைப் பற்றியே நினைத்து நினைத்து, என் மனது சிங்காரத்தையும் சிருங்காரத்தையும் இழந்து விட்டதாக உணர்ந்தேன்.
காலை வங்கி சென்றதும் வழக்கம் போலக் கோப்புகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது கண்ணாடி வழியே ஜனனி அலுவலகத்துக்கு வந்து யாருடனோ பேசிக்கொண்டிருந்தது தெரிந்தது.
ஜனனியைப் பார்த்ததுமே மனது சுறுசுறுப்படைந்தது. இத்தனை நாள் யோசித்து தான் செய்தது தவறு என்று உணர்ந்து நம்மிடம் பேசத்தான் வந்திருக்க வேண்டும். கண்ணாடியில் முகம் எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டுமென்றால் அவசரத்துக்கு கண்ணாடி இல்லை.. ச்சே… இந்தப் பெண்கள் மட்டும் எவ்வளவு கவனமாக ஹேன்ட்பேக்கிலேயே கண்ணாடியோடு சுற்றுகிறார்கள். சீப்பை எடுத்து குத்து மதிப்பாக தலையைச் சீவினேன். செல்போனை எடுத்து அதில் தெரிந்த பிம்பத்தில் பார்த்தேன். எப்போதும் போல அதே முகத்தின் சாயல்தான் தெரிந்தது. கர்சீப்பை எடுத்து முகத்தை துடைத்துக் கொண்டேன்.
காத்திருந்தேன். ஆனால் ஜனனி வரவில்லை.
ஜனனியின் மகனுக்கான ஸ்காலர்ஷிப் தொடர்பான கோப்பை எடுத்து வந்ததார் உதவியாளர். அவள் மகன் பத்தாம் வகுப்பில் மாவட்டத்திலேயே முதல் மாணவனாக வந்திருந்தான். வங்கி ஊழியர்களின் பிள்ளைகள் மாவட்ட அளவிலோ மாநில அளவிலோ முதல் மூன்று இடங்களுக்குள் வந்தால், அடுத்த இரண்டாண்டுகளுக்கு அவர்களின் கல்விச் செலவை ஏற்றுக் கொள்ளும் திட்டத்துக்காக விண்ணப்பித்திருந்தாள். ஏற்கனவே வேலை பார்த்த ப்ரான்ச்சில் அவள் இந்த உதவியைப் பெறவில்லை என்பதற்கான சான்று கேட்கப்பட்டிருந்தது.
இந்தக் கோப்பில் நான் தான் கையெழுத்திடவேண்டும் என்பது அவளுக்குத் தெரியும். ஒரு முறை என்னை வந்து பார்த்தால் என்ன குடிமுழுகி விடும் ? கையெழுத்துப் போடமாட்டேன் என்று மறுத்து விடுவேனா ? இல்லை அவளை கடித்து விடுவேனா ?
ச்சை… இப்படி உதாசீனப்படுத்துகிறாளே… இந்த லிங்கேஸ்வரனை நம்ப முடியவில்லை. கல்யாண சுந்தரம் ஊரில் இல்லை. இந்த நேரத்தில் இவள் வேறு வந்து மனசைக் குழப்பி விட்டுப்போகிறாள் இவள் பங்குக்கு. எரிச்சல் எரிச்சலாக வந்தது.
யாரிடமாவது விவாதித்தால் நன்றாக இருக்கும் போலத் தோன்றியது.
நண்பருக்கு போன் அடித்தேன். ரிங் போனது.
நாசர் ஒரு பிரபல திரைப்பட இயக்குநரிடம் அசோசியேட்டாக பணியாற்றிக் கொண்டிருந்தார். நல்ல திரைப்படங்களை தேடித் தேடிப்பார்ப்பார். பல வருடப் பழக்கம். சினிமா இலக்கியம் அரசில் என்று மணிக் கணக்கில் விவாதிப்போம்.
“நாசர்.. வெங்கட் பேசறேன். ஈவ்னிங் ஃப்ரியா ? படத்துக்கு போலாமா ?“
“படத்துக்கா.. என்ன பிரச்சினை சொல்லுங்க… “
“ம்ம். பிரச்சினை ஒன்னும் இல்லை. ரொம்ப நாள் ஆச்சுல்ல.. அதான் சினிமாவுக்கு போகலாமேன்னு. நீங்க ஃப்ரீயா.. ?“
“முந்தாநாள்தான் பர்ஸ்ட் ஷெட்யூல் முடிச்சுட்டு வந்தோம். அடுத்த வெள்ளிக்கிழமை வரை எந்த வேலையும் இல்லை. போலாமே.. என்ன படம் ?“
“ஆடுகளம் போலாமா ? நான் இன்னும் பாக்கல.”
“ஓ எஸ். ஷுட்டிங்ல இருந்ததால நானும் பாக்கல. இன்டஸ்ட்ரியில எல்லாரும் நல்ல இருக்குன்னு சொல்றாங்க. சத்யம் வந்துட்ரியா ? “
“நாசர். உனக்குத் தெரியாதா.. இந்த சத்யம், ஐநாக்ஸ்னு மல்டிப்ளெக்ஸுக்கெல்லாம் நான் வரமாட்டேன்னு தெரியாதா ?“
“வெங்கட்.. உடனே அதெல்லாம் பூர்ஷ்வா தியேட்டர்னு ஆரம்பிக்காத. பூர்ஷ்வான்ற வழக்கொழிஞ்சு போன வார்த்தையை எனக்குத் தெரிஞ்சு நீ மட்டும்தான் யூஸ் பண்ற. இன்னும் கொஞ்ச நாள்ல மல்டிப்ளெக்ஸ் தவிர வேற தியேட்டரே இருக்காது வெங்கட். அப்புறம் என்ன பண்ணுவ ?“
“இல்ல நாசர். தேவில பாக்கலாம். மவுண்ட் ரோட் வந்துடுங்க. ஈவ்னிங் ஏழு மணிக்கு. நான் டிக்கட்ஸ் புக் பண்ணிட்றேன்”
திரைப்படம் தொடங்க இன்றும் ஒரு மணி நேரம் இருக்கையிலேயே இருவரும் வந்து விட்டோம். குழப்பத்தை சற்றே பகிர்ந்து கொள்ளலாம் என்று நாசரிடம் சொன்னேன்.
“என் ப்ரான்ச்சில ஜனனின்னு ஒரு லேடி வேலைப் பாத்தாங்க” நாசர் என்று தொடங்கி மொத்த கதையையும் சொன்னேன். ஜனனியைப் பார்க்க முடியாத அளவுக்கு ஏற்பட்ட நெருக்கடியையும் சொன்னேன்.
“வெங்கட். பெண்களும் ஆண்களும் வேற வேற. பெண்களின் பார்வை வேற. அவங்க சிந்தனைப் போக்கு வேற. அவங்க உலகமே வேற. ஜனனிக்கு உன் மேல காதல் வந்துருக்கு. என்னமோ கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆயிருக்கு. உன்னோட நடவடிக்கைகள், உனக்கும் அவங்க மேல காதல் இருக்குன்ற உணர்வை ஏற்படுத்தியிருக்கு.
அவங்களுக்கு ஒரு நெருக்கடி வந்தப்போ நீ உடனே வந்து பாக்கணும்னு அவங்க எதிர்ப்பார்த்துதான் உன்னைக் கூப்பிட்ருக்காங்க. உன்னோட நெருக்கடி அவங்களுக்குத் தெரியல.
சாதாரணமா திருமணமாகாம இருக்கற பெண்கள் காதலிக்கறதுக்கும், கல்யாணமாகி, கணவன் இல்லாம ஒரு பையனோட வாழ்ந்துக்கிட்டுருக்க பொண்ணு காதலிக்கறதுக்கும் பெரிய வித்யாசம் இருக்கு. மற்ற பொண்ணுங்க நீ வரலன்னா, நீ சொல்ற காரணத்தை ஏத்துக்குவாங்க. பட் ஜனனி மாதிரி பொண்ணுங்களுக்கு, நம்ப தகுதிக்கு மீறி ஆசைப்பட்றோமோ.. நம்பளை சீப்பா நெனச்சுடுவாங்களோன்ற ஜாக்கிரதை உணர்வு எப்பவும் இருக்கும். என்னதான் இருந்தாலும், நாம ஏற்கனவே திருமணம் ஆனவள்தானே ன்ற கழிவிறக்கம் அவங்க கிட்ட அதிகமா இருக்கும். நீ அன்னைக்கு போகாம இருந்ததும், அவங்களுக்கு நீ அவங்களை அவாய்ட் பண்ற, அவங்க பெரிய்ய தப்பு பண்ணிட்டாங்கன்னு எவ்வளவோ எண்ணங்கள் ஏற்பட்டிருக்கும். உன்னை தெனம் தெனம் பாக்கும்போது, அவங்க தான் தப்பு பண்ணிட்டதா ரொம்ப ஃபீல் பண்ணிருப்பாங்க. அதனாலதான் மே பி, அவங்க ட்ரான்ஸ்பர் கேட்டுட்டே போயிருப்பாங்க.”
“பட் என்னால ஒண்ணுமே பண்ண முடியாத சிச்சுவேஷன் நாசர்.. “
“ஐ அன்டர்ஸ்டேன்ட் வெங்கட். எனக்கு நல்லாப் புரியுது.. பட் யு ட்ரை டு அன்டர்ஸ்டேன்ட் ஹெர் அன்ட் ரெஸ்பெக்ட் ஹெர் டிசிஷன். (But you try to understand her and respect her decision) “
“அதனாலதான் ரெண்டு மூணு வாட்டி பேசிப் பாத்தேன். ஷி கம்ப்ளீட்லி அவாய்டட் மி. (She completely avoided me) அத்தோட விட்டுட்டேன். ஆஃப்டர் தட், நோ கால்ஸ், நோ மெசேஜஸ். கம்ப்ளீட்லி கட் ஆஃப். (After that no calls, no messages, completely cut off)“
“அவங்களை மறந்துட்டு வேற வேலையைப் பாரு வெங்கட். அது ஒரு அன்நெசஸ்சரி ஹேங் ஓவர். (Unnecessary hang over) இட் வில் ஸ்பாயில் யுவர் மூட். (It will spoil your mood) கஷ்டமா இருந்தாலும் கான்சன்ட்ரேட் இன் சம்திங் எல்ஸ். (Concentrate in something else)“
“இல்ல நாசர்.. நான் முயற்சி பண்ணியிருந்தாலும் என்னால ஜனனியைப் பத்தியே தொடர்ந்து நெனச்சுகிட்டு இருக்க முடியாத மாதிரி சில ப்ராப்ளம்ஸ். உன்னைப் பாத்ததும் உன் கிட்ட பேசனும்னு தோணுச்சு. தட்ஸ் ஆல்“
நாசரிடம் பேசியதும் ஜனனி விவகாரத்தில் நான் ஏதோ தப்பு செய்து விட்டேன் என்று இருந்த குற்ற உணர்வு விலகியது போல இருந்தது. திரைப்படம் பார்த்து விட்டு வீடு திரும்பினோம். ஜனனியின் நினைவுகளோடே உறங்கிப் போனேன்.
மறுநாள் சோம்பலோடு எழுந்து, வாசலில் கிடந்த கதிரொளி பேப்பரை கையில் எடுத்தேன்.
“சிக்கலில் நிதி அமைச்சர் சிங்காரவேலு” பெரிய எழுத்தில் கதிரொளி தலைப்புச் செய்தி அலறியது. சிறிய தலைப்பாக 1200 கோடி ரூபாய் மோசடி. நடுவில் சிங்காரவேலு தலையில் கை வைத்து இருப்பது போல வண்ணப்படம். படத்துக்கு இருபுறமும் செய்திகள் வழிந்தன. செய்தி தொடங்கும் முன் சிவப்பு நிறத்தில் பட்டையடித்து “பிரத்யேகச் செய்தி” என்று இருந்தது. சென்னை. மத்திய நிதி அமைச்சராக இருந்து வருகிறார் பழனியப்பன் சிங்காரவேலு. இதற்கு முன் சிங்காரவேலு நிதித் துறையின் இணை அமைச்சராக இருந்தார்.
சென்னை மைலாப்பூரிலுள்ள இந்தியன் வங்கிக் கிளையில் ஆர்.கே என்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் 1200 கோடி ரூபாய் தொழிற் கடனாக பெற்றுள்ளது. இக்கடனுக்கான உத்தரவாதமாக இந்நிறுவனம் 50 கோடி ரூபாய் மதிப்பிலுள்ள நிலத்தின் பத்திரங்களை அளித்திருந்தது. இந்நிறுவனம் தொழிற் கடன் கேட்டு விண்ணப்பித்தபோது வங்கியின் சட்ட ஆலோசகர், இந்நிறுவனத்துக்கு கடன் வழங்கக் கூடாது என்று உறுதிபட கருத்து கூறியுள்ளார். சட்ட ஆலோசகர் தனது கடிதத்தில் 50 கோடி ரூபாய்க்கான நிலம் நீதிமன்ற வழக்கில் உள்ளது என்பதாலும், இந்நிறுவனத்தின் பங்குதாரர்கள் குறித்த விபரங்கள் மர்மமாக உள்ளதாலும், இந்நிறுவனத்துக்கு கடன் கொடுக்க வேண்டியதில்லை என்று கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதம் வந்த சில நாட்களிலேயே மத்திய நிதி அமைச்சர் சிங்காரவேலு வங்கி மேனேஜருக்கு எழுதிய கடிதத்தில், ஆர்.கே.என்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு “சிறப்பு நேர்வாக” கருதி 1200 கோடி ரூபாய் கடன் வழங்குமாறு குறிப்பிட்டுள்ளார். (கடித நகல் கதிரொளியிடம் உள்ளது.)
மத்திய அமைச்சரின் இந்தக் கடிதத்துக்குப் பிறகு ஆர்.கே.என்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு 1200 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. கடன் பெற்ற பிறகு அந்நிறுவனம் ஒரு தவணையைக் கூட திருப்பிச் செலுத்தவில்லை.
வருடந்தோறும் நடக்கும் ஆடிட் ஆய்வில் கூட, இந்த நிறுவனத்தைப் பற்றி எந்தக் குறையும் கூறப்படவில்லை. சட்ட ஆலோசகரின் கருத்துரையை மீறி இந்நிறுவனத்துக்கு கடன் கொடுக்கப்பட்டதும், வருடாந்திர ஆடிட்டில் இந்த விவகாரம் வெளிவராமல் மறைக்கப்பட்டதும், மத்திய நிதி அமைச்சர் சிங்காரவலு கொடுத்த நெருக்கடியின் காரணமாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.
மத்திய அரசில் மிக முக்கிய அமைச்சராக இருந்து வரும் சிங்காரவேலுவுக்கு இந்த ஊழல் புகார் கடும் நெருக்கடியை கொடுக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. பாராளுமன்றம் நடந்து வரும் வேளையில் எழுந்துள்ள இந்தக் குற்றச்சாட்டு பாராளுமன்றத்தில் புயலைக் கிளப்பும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை உதறித் தள்ளிய சிங்காரவேலு, ஆதாரத்தோடு வெளியாகியுள்ள இந்தக் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளதால் அவரது பதவி தப்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது.” என்று முடிந்தது அந்தச் செய்தி.
செய்தியின் நடுவே பாக்ஸ் செய்தியாக “ஆவணமும் போலி” என்று ஒரு செய்தி இருந்தது. அதில் “கடன் பெறுவதற்காக ஆர்.கே.என்டர்பிரைசஸ் நிறுவனம் உத்தரவதமாக கொடுத்திருந்த 50 கோடி மதிப்புள்ள நிலத்துக்கான ஆவணமே போலியான ஆவணம் என்று கதிரொளி விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்த ஆவணத்தில் உள்ள பதிவு எண்ணில் வேறு ஒரு சொத்து பதியப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.” என்று இருந்தது.
முகத்தில் ஜிவு ஜிவென்று ரத்தம் பரவியதாக உணர்ந்தேன். கதிரொளியின் முதல் பக்கத்தில் வந்த அந்த செய்திக்கு மூல காரணம் நான்தான் என்பதை நினைக்கும் போது, பெருமையாக இருந்தது. எதிர்க்கட்சிகள் இந்தப் பிரச்சினையை பாராளுமன்றத்தில் கிளப்புமோ கிளப்பாதோ, ஆனால் கிளப்பும் என்று இவர் எழுதியது லிங்கேஸ்வரனின் அனுபவத்தைக் காட்டியது. பேப்பரை எடுத்துக் கொண்டு ஆட வேண்டும் போல இருந்தது. உடனே கல்யாண சுந்தரத்துக்கு போன் போட்டுச் சொல்ல வேண்டும் போல இருந்தது. ஆனால், அவர் காலையிலேயே அனைத்துப் பேப்பர்களையும் படித்து விடுவார் என்பது உறைத்தது. ‘ஆஹா… எப்படிப்பட்ட சாதனை…’ என்னையே நான் மெச்சிக் கொண்டேன். ஒழிந்தான் சிங்காரவேலு என்று வாய்விட்டு சொல்லிப் பார்த்துக் கொண்டேன்.
கதிரொளி ஆசிரியரை அவசரப்பட்டு சந்தேகப்பட்டு விட்டோம். இந்த ஒரு மாதகாலத்தில் அவர் தனியாக ஒரு விசாரணை நடத்தியிருக்கிறார். ஆந்த ஆவணம் போலி என்ற விபரத்தை நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை. சிறப்பாகத்தான் வேலை பார்த்திருக்கிறார். அனுபவசாலி அனுபவசாலிதான். அதெல்லாம் சரிதான். அந்த டேப் பற்றி ஏன் எந்த செய்தியும் வரவில்லை ?
முதலில் பாலகிருஷ்ணனிடம் சொல்ல வேண்டும். அவர் செல்போனுக்கு அழைத்தேன்.
“நீங்கள் தொடர்பு கொள்ளும் செல்பேசி எண் அணைத்து வைக்கப்பட்டுள்ளது”
தொடரும்.
Do you want to continue as mega serial
அண்ணா, ராஜேந்திர பாலாஜி போன்ற சிறிய முதலைகளை பற்றி நீங்கள் ஏன் எழுதுவது இல்லை ?
கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து அவர் அதிகமாக சர்ச்சை பேச்சுக்களில் ஈடுபட்டு செய்திகளில் தொடர்ந்து நீடிக்கிறார்… எதை மறைக்க இவர் சர்ச்சைகளை கிளப்புகிறார் என்று தெரிவதில்லை..
ஐவரும் TTV -யின் ஸ்லீப்பர் செல் தானோ?
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=380422
நீங்கள் வெளிக்கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்.
I want to speak with you how to contact?
நான் படம் இயக்கினால் இந்த கதைதான் என் முதல் படமாக இருக்கும்…
எதிர்பார்ப்பு