கதிரொளி செய்தியைப் பார்த்ததும் ஏற்பட்ட உற்சாகம் பதற்றமாக மாறியது. என்ன ஆகியிருக்கும்.. ? வம்பில் மாட்டி விட்டு விட்டோமோ…. அவர் பாட்டுக்கு நிம்மதியா இருந்திருப்பாரே… உடனே பூதலூர் கிளம்பலாமா ? பற்பல எண்ணங்கள். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளவர்கள் யாரையாவது தொடர்பு கொண்டு போய்ப் பார்த்து வரச் சொல்லலாமா ? உடனே யாரால் செல்ல முடியும் ?
கல்யாண சுந்தரத்திடம் பேசலாமா ? போனில் பேச வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார். காலை ஏழு மணிதான் ஆகிறது. 10 மணிக்கு மேல் யோசிக்கலாம். பாலகிருஷ்ணனுக்கு ஒன்றும் நடந்திருக்காது. தேவையில்லாமல் பதற்றப்படுகிறோம். செய்தி வெளியாகி ஒரு மணி நேரம் கூட ஆகவில்லை. இதற்கு பாலகிருஷ்ணன்தான் காரணம் என்று எப்படிக் கண்டுபிடித்திருக்க முடியும் ?
எந்த வேலையும் ஓடவில்லை. பரபரப்பாக இருந்தது. மற்ற செய்திகளைப் புரட்டினால் கவனம் செலுத்த முடியவில்லை. எழுந்து வெளியே சென்று ஒரு சிகரெட் பிடித்து விட்டு, மீண்டும் திரும்பி வந்தேன். மணி ஒன்பது ஆகியிருந்தது.
டிவியைப் போட்டேன். ஆங்கிலச் செய்திச் சேனல்களை சர சரவென்று மாற்றினேன். ஒரு சேனலில் புதிதாக வந்திருக்கும் இன்னோவா காரை வாங்கச் சொல்லி வலியுறுத்திக் கொண்டிருந்தது விளம்பரம். அடுத்த சேனலை மாற்றினேன். லூப்தான்சா ஏர்லைன்ஸில் பயணிப்பது போன்ற சுகம் வேறு எதிலும் கிடைக்காது என்று அங்கே சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
ஒன்பது மணிக்கு செய்தி புல்லட்டின் தொடங்கியது. டைம்ஸ் நவ் சேனலை வைத்தேன். ட்ரபிள் ஃபார் சிங்காரவேலு என்று ஸ்க்ரோல் ஓடிக்கொண்டிருந்தது. செய்தி தொடங்கட்டும் என்று காத்திருந்தேன். யூனியன் மினிஸ்டர் ஃபார் ஃபினான்ஸ் சிங்காரவேலு அப்பியர்ஸ் டு பி இன் டீப் ட்ரபிள் (Union Minister for Finance Singaravelu appears to be in deep trouble) என்று தொடங்கி இயற்கையை மீறிய கருமையான முடியோடு இருந்த அந்தப் பெண் கண்கள் விரிய விரிய செய்தியைப் படித்துக் கொண்டிருந்தார். மத்திய நிதி அமைச்சர் சிங்காரவேலு பெரிய ஊழல் புகாரில் சிக்கியுள்ளார் என்றும், டெல்லியிலிருந்து வெளிவரும் இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கையும், தமிழகத்திலிருந்து வெளிவரும் கதிரொளி பத்திரிக்கையும் பிரத்யேகச் செய்திகளாக சிங்காரவேலு மீதான ஊழல் புகார்கள் குறித்து ஆதாரங்களோடு செய்தி வெளியிட்டிருப்பதாகவும், பாராளுமன்றம் நடந்து கொண்டிருப்பதால், இது அவையில் பெரிய புயலைக் கிளப்பும் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார். அந்தச் சேனலின் பொலிடிக்கல் எடிட்டர் நாவிகா குமார் இப்போது பேசுவார் என்று அறிவித்தனர். சற்றே குண்டாக இருந்தார் நாவிகா குமார். கணீரென்ற குரலில், மத்திய அமைச்சர் இது நாள் வரை பல புகார்களில் தப்பியுள்ளார். ஆனால் இம்முறை மிகப்பெரிய ஊழலுக்கான ஆதாரங்களை இந்துஸ்தான் நாளேடு வெளியிட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் அவர் தலையைக் காவு கேட்கத் தவறாது. அவர் பதவி தப்புவது கடினம் என்றும் கூறினார்.
தொலைபேசியில் பேசிய எதிர்க்கட்சி எம்.பி ஒருவர், இந்த ஊழல் புகாரைப் பற்றிக் கேட்டவுடன் நெஞ்சம் பதைபதைக்கிறது என்றார். சிங்காரவேலுவின் ராஜினாமா நிச்சயம் கோரப்படும் என்றும், இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் பேசினார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சிங்காரவேலுவின் கூட்டணிக் கட்சி எம்.பி ஒருவர், மிகக் கவனமாக, இவ்விஷயத்தில், முழுமையான விபரங்கள் தெரிய வரவில்லை என்றும், விபரங்கள் தெரிந்த பிறகு, அடுத்த கட்ட முடிவு என்ன என்பதை கட்சி கூடி முடிவெடுக்கும் என்றார்.
தமிழகத்தைச் சேர்ந்த சிங்காரவேலுவின் கூட்டணிக் கட்சி எம்.பி, பாராளுமன்றத்தில் கட்சியின் நிலைபாடு என்ன என்பது, பாராளுமன்றம் தொடங்கிய பிறகுதான் தெரிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.
ஆளுங்கட்சி அணியா, எதிர்க்கட்சி அணியா என்பதை சமயத்திற்கேற்றார் போல மாற்றும் உத்தரப்பிரதேசக் கட்சியைச் சேர்ந்த ஒரு எம்.பி, சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றார். நடந்தது என்ன என்பதை சிங்காரவேலு விளக்குவார் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.
‘ஒரு செய்திக்கு பல்வேறு அரசியல் கணக்குகள் காரணமாக எத்தனை விதமான அவதானிப்புகள் ? ஒரு அமைச்சர் ஊழல் புகாரில் சிக்கியிருக்கிறார். அதற்கான ஆதாரங்கள் வெளியாகியிருக்கின்றன. விசாரணை நடத்தப்பட வேண்டும். அந்த விசாரணை முடியும் வரை சம்பந்தப்பட்ட அமைச்சர் பதவி விலகியிருப்பதுதானே முறை ? ஆனால் ஆளாளுக்கு ஒவ்வொரு விதமான கருத்துக்களைத் தெரிவிப்பது வெறும் கருத்து பேதமா ? அல்லது கணக்கு பேதமா ?
சிங்காரவேலுவுக்கு சிக்கல் தொடங்கி விட்டதாகவே தோன்றியது. மணி 9.30. மீண்டும் ஒரு முறை பாலகிருஷ்ணனுக்கு முயற்சி செய்யலாம் என்று அவர் எண்ணுக்கு டயல் செய்தேன். இப்போது ரிங் போனது. சற்றே நிம்மதியாக இருந்தது. திடீரென்று செய்தி வெளியான அதே நாளில், இச்செய்தியில் சம்பந்தப்பட்ட இருவர் பேசுவது சரியாக இருக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. யோசித்துக் கொண்டிருக்கும்போதே பாலகிருஷ்ணன் போனை எடுத்து ஹலோ என்றார்.’ உடனே இணைப்பை துண்டித்தேன்.
அப்பாடி. நல்லபடி இருக்கிறார். நாம் பயந்தது போல எதுவும் இல்லை என்ற நிம்மதி ஏற்பட்டது.
செய்திச் சேனலில் சொல்லியது போலவே பாராளுமன்றம் ஸ்தம்பிக்த்தான் செய்தது. எதிர்க்கட்சி எம்.பிக்கள் சிங்காரவேலு ராஜினாமா செய் என்று தொடர்ந்து கோஷங்கள் எழுப்பியதால் அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. சிங்காரவேலு அன்று பாராளுமன்றத்துக்கு வரவில்லை.
கதிரொளி ஆசிரியர் லிங்கேஸ்வரனின் அனுபவத்தையும் சரியான நேரத்தில் இதை வெளியிட்டு, பாராளுமன்றத்தையே ஸ்தம்பிக்க வைத்த அவரது சாதுர்யமும் அவர் மீதான மரியாதையை பல மடங்கு கூட்டியது. தமிழகத்தில் கதிரொளியில் மட்டும் வெளிவந்தால், உரிய அதிர்வு ஏற்படாதோ என்று டெல்லியிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளிதழிலும், அதிலும் அதிக விற்பனையாகும் இந்துஸ்தான் டைம்ஸிலும் வெளிவரச் செய்த அவரது சமயோசிதமும் வியப்பைத் தந்தன. அனுபவம் அனுபவம்தானே !! டேப் விவகாரத்துக்கும் எப்படியும் ஒரு திட்டம் வைத்திருப்பார். நாம்தான் அவசரப்பட்டு விட்டோம்.
காலையில் நடந்ததை விட, இரவில், தொலைக்காட்சியில் அனல் பறந்தது. எல்லா செய்திச் சேனல்களிலும் சிங்காரவேலுதான். தமிழ்ச் சேனல்களில் விவாதங்கள் இல்லையென்றாலும், இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழையும் கதிரொளி நாளிதழையும் காண்பித்து இச்செய்தியை திரும்பத் திரும்ப வெளியிட்டார்கள். ஆங்கிலச் சேனல்களின் விவாதங்களில், சிங்காரவேலு கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள், எப்படியெல்லாம் மழுப்ப முடியுமோ அப்படியெல்லாம் மழுப்பினார்கள். விசாரணைக்கு சிங்காரவேலு அஞ்சவில்லை என்றார்கள். சிபிஐ விசாரணைக்குத் தயாரா என்றால், எடுத்த எடுப்பில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது என்றார்கள். குற்றம் சொல்லும் எதிர்க்கட்சிகள் ஆட்சியில் கூட ஊழல் நடந்திருக்கிறது என்று சொன்னார்கள். எதிர்க்கட்சியினர் ஆட்சி நடத்திய சமயத்தில் ஒரு வங்கி திவாலானதை சுட்டிக் காட்டினார்கள்.
டைம்ஸ் நவ் எடிட்டர் அர்னப் கோஸ்வாமி வேர் ஆர் யு மிஸ்டர் சிங்காரவேலு ? இது போல இன்னும் எத்தனை ஊழல்கள் புரிந்துள்ளீர்கள் ?. மக்களுக்கு பதில் சொல்லுங்கள் என்று நேரடியாக சிங்காரவேலுவிடம் பேசுவது போலவே பேசினார். ஹெட்லைன்ஸ் டுடேவில் ராகுல் கன்வல், மைன்ட் பாக்லிங் ஸ்காம் (Mind boggling scam) என்றார். ஐபிஎன் தொலைக்காட்சியில் ராஜ்தீப் சர்தேசாய், ஹவ் மெனி மோர் ஸ்காம்ஸ் வில் தி நேஷன் விட்னஸ் (How many more scams will this nation witness ?). என்று கேள்வி எழுப்பினார். என்டிடிவியில் பர்கா தத், நடுநிலையாக இருப்பதாகக் காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காகவோ என்னமோ.. விசாரணை நடத்தாமலேயே ஒருவரை கழுவில் ஏற்றக் கூடாது என்றார். ஒரு நிதியமைச்சரின் மீது பொறுப்பில்லாமல் சொல்லப்படும் குற்றச்சாட்டு, நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை பாதிக்கும் என்றார்.
மறுநாள் அனைத்து செய்தித்தாள்களையும் சிங்காரவேலுவே ஆக்ரமித்துக் கொண்டிருந்தார். தமிழ் ஆங்கிலம், இந்தி, உருது, மலையாளம் என்று ஒட்டு மொத்த இந்தியா முழுவதும் சிங்காரவேலுவின் பெயரை உச்சரித்துக் கொண்டிருந்தன.
அன்றும் பாராளுமன்றத்தில் கூச்சல் குழப்பமே நிலவியது. இறுதியாக பிற்பகலில் நிதி அமைச்சர் பாராளுமன்றத்தில் அறிக்கை படிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. மதியம் சிங்காரவேலு அவையில் நுழைந்தார். நேரடி ஒளிபரப்பில் பார்க்கும்போதே சிங்காரவேலு முகத்தில் வழக்கம் போல இருக்கும் தெம்பு இல்லை என்பது நன்றாகத் தெரிந்தது. சிங்காரவேலு அறிக்கை படிக்க முயற்சித்தாலும், எதிர்க்கட்சிகள் அவரைப் படிக்கவிடவேயில்லை. தொடர்ந்து “சிங்காரவேலு சலே ஜாவோ” என்று தொடர்ந்து கோஷம் போட்டவண்ணம் இருந்தனர். முதல் நாளை விட, இன்றைக்கு கூச்சல் அதிகமாக இருந்தது.
வேறு வழியின்றி அன்றும் பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது. மாலை நாலு மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்தார் சிங்காரவேலு. இறுக்கமான முகத்தோடு பேசினார். ஆர்.கே என்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கும், தனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்றார். தான் எழுதியதாக கூறப்படும் கடிதத்தை தான் எழுதவேயில்லை என்றார். தன் கையெழுத்தை யாரோ போர்ஜரி செய்திருக்கிறார்கள் என்றார். தனக்கு எதிராக எதிர்க்கட்சிகள் செய்யும் சதி என்றார். இந்த போர்ஜரி குறித்து டெல்லி காவல்துறையிடம் புகார் அனுப்பியுள்ளதாகத் தெரிவித்தார். புகாரின் நகலை பத்திரிக்கையாளர்களிடம் வழங்கினார். பல்வேறு முனைகளிலிருந்து அவரை நோக்கி வீசப்பட்ட கேள்விகளை திறமையாக சமாளித்தார். டெல்லி காவல்துறையினரின் விசாரணை நிலுவையில் இருப்பதால், அவர் எழுதியதாகக் கூறப்படும் கடிதம் ‘குறித்து எதுவும் கூற முடியாது என்று கூறினார். தன் நேர்மையின் மீது ஏற்படுத்தப்பட்டுள்ள சந்தேகம், தன் இதயத்தில் கத்தியைப் பாய்ச்சுவது போல உள்ளது என்றார். தான் பதவி விலகத் தயாராக இருந்ததாகவும், பிரதமர் பதவி விலக வேண்டாம் என்று கூறியதால், வேறு வழியின்றி பதவியில் தொடர்வதாகவும் தெரிவித்தார்.
‘எவ்வளவு திறமையான நடிகர் இவர் ? அரசியல்வாதி என்றால் அதற்கென தனித்திறமை வேண்டும்தானோ… ? எப்படி திறமையாகச் சமாளிக்கிறார்… -‘ என்று சிங்காரவேலு மீது வியப்பு ஏற்பட்டது.
இரண்டு நாட்கள் கழித்து பாராளுமன்றம் செயல்படத் தொடங்கியது. சிங்காரவேலுவின் மீதான ஊழல் புகார்கள், செய்தித் தாள்களின் முதல் பக்கத்திலிருந்து, மூன்றாவது பக்கத்துக்குப் போய், இரண்டு நாட்களில் காணாமல் போயின.
மூன்றாவது நாள் கதிரொளி “சிங்காரவேலுவுக்கு எதிராக ஆடியோ ஆதாரம். வங்கி மேலாளரை மிரட்டிப் பணிய வைத்தார்” என்று தலைப்புச் செய்தி வெளியிட்டது. இந்துஸ்தான் டைம்ஸிலும் அந்த உரையாடலின் ஆங்கில வடிவம் வெளியாகியிருந்தது. சிங்காரவேலு பேசியதாகக் கூறப்படும் ஒலிநாடாவில் உள்ள உரையாடல்களை முழுமையாக வெளியிட்டது கதிரொளி. அன்று காலை 10 மணிக்கு மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்த சிங்காரவேலு, அது போன்ற உரையாடல் நடைபெறவேயில்லை. கதிரொளி செய்தித்தாளின் மீது வழக்கு தொடுக்கப் போவதாக அறிவித்தார்.
அன்று இரவு ஆங்கில டிவி சேனல்களும், தமிழ் சேனல்களும் சிங்காரவேலு மற்றும் வங்கி மேனேஜர் பாலகிருஷ்ணனிடையே நடந்த உரையாடலை சப் டைட்டில்களோடு ஒலிபரப்பின. சிங்காரவேலு ராஜினாமா செய்யும் வரை பாராளுமன்றத்தை நடத்த விட மாட்டோம் என்று அறிவித்தது பிரதான எதிர்க்கட்சி. சிங்காரவேலுவின் கூட்டணிக் கட்சிகளும், அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கருத்து கூறின.
இரண்டு நாட்கள் கழித்து சிங்காரவேலுவின் ராஜினாமாவை பிரதமர் ஏற்றுக் கொண்டதாக அறிவித்தார். சிங்காரவேலு, அந்த ஆடியோ உரையாடல் போலியானது என்றும், தனக்கெதிராக ஒரு சதித்திட்டம் நடப்பதாகவும், அந்தச் சதித்திட்டத்தின் விளைவாகவே இந்த உரையாடல் வெளியானதாகவும் கூறினார். இருப்பினும், தான் மதித்து வரும் ஜனநாயக பண்புகளின் அடிப்படையில், விசாரணை முடியும் வரை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்தார்.
மிகப்பெரிய வெற்றியை அடைந்ததாகத் தோன்றியது எனக்கு. ஒரு மலையை சிறிய உளி கொண்டு உடைத்து எறிந்ததாகத் தோன்றியது. பொங்கி வரும் ஊழிப் பெருவெள்ளத்தை தடுத்து நிறுத்தியது போல இருந்தது. உடனே என் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. எனக்கு நானே பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டு, நேராக கல்யாண சுந்தரத்தைப் பார்க்கச் சென்றேன்.
“வாப்பா வெங்கட்.”
“வணக்கம் தோழர். செய்தியெல்லாம் பாத்தீங்களா தோழர் ?“
“பாத்தேன்பா.. இது வரைக்கும் நல்லபடியாத்தான் நடந்துருக்கு.“
“நாமதான் ஜெயிச்சுட்டோமே தோழர். சிங்காரவேலுதான் பதவியை ராஜினாமா செய்துட்டாரே… இனிமே என்ன தோழர்… ?“
“உனக்கு அரசியல்வாதிகளைப் பத்தி இன்னும் புரியலைப்பா.. அதுவும் சிங்காரவேலு மாதிரி ஆளுங்களைப் பத்தி உனக்கு சரியாத் தெரியல…“
“பதவி போயிட்டா யாரு தோழர் மதிப்பா அந்த ஆளை ? இனிமே அந்த ஆளுக்கு என்ன அதிகாரம் இருக்கு ?“
“அப்படி தப்பா நெனைக்காத வெங்கட். அந்த கட்சியோட நிதிகளை இது வரை மேனேஜ் பண்ணுனது எல்லாமே சிங்காரவேலுதான். நிதியமைச்சரா இருக்கறதால, கட்சிக்கு மட்டுமில்லாம, அவர் கட்சித் தலைவருக்கும் ஏராளமான பணம் இந்த ஆளால போயிருக்கு. ஒவ்வொரு முறை பட்ஜெட் தாக்கல் செய்யும்போதும், எதுக்கு வரி போட்டா பெரிய கம்பெனிகள் தன்கிட்ட கதறிக்கிட்டு வரும்னு சிங்காரவேலுவுக்கு நல்லாத் தெரியும். பட்ஜெட்டுல வரி போட்டுட்டு, பட்ஜெட் விவாதத்தின்போது யாராவது ஒரு எம்.பியை விட்டு, அந்த வரியால மக்களுக்கு பாதிப்புன்னு பேச வைச்சு, அந்த வரியை குறைப்பார் அல்லது நீக்குவார். இந்த மாதிரி வரியை நீக்கறதுக்கும், குறைக்கறதுக்கும் பல நூறு கோடி கைமாறும். சாப்ட்வேர் கம்பேனிகள் ரொம்ப நாளா இந்த ஆளோடு கட்டுப்பாட்டல வரல. அந்த சாப்ட்வேர் கம்பெனிகளை தன் கட்டுப்பாட்டல கொண்டு வரணும்னுதான் போன பட்ஜெட்டுல, ஃப்ரின்ஜ் பெனிபிட் டாக்ஸ்னு (Fringe Benefit Tax) ஒரு புதிய வரியைப் போட்டார் ஞாபகம் இருக்கா ?”
“ஆமாம் தோழர். சாப்ட்வேர் கம்பெனிகள், தங்கள் தொழில் வளர்ச்சி குறையும்னு கூப்பாடு போட்டாங்க தோழர்.”
“ஒரே மாசத்துல அந்த வரியை பத்தில ஒரு பங்கா குறைச்சுட்டார் தெரியுமா ? இது ஒரு சாம்பிள். இந்தியாவோடு ஒட்டுமொத்த சாப்ட்வேர் கம்பெனியும் ஆளுக்கு ஐஞ்சு கோடி கொடுத்தா எவ்வளவு வரும்னு கணக்கு போட்டுக்கோ. ஒவ்வொரு சாப்ட்வேர் கம்பெனியும் பல நூத்துக்கணக்கான கோடி லாபம் சம்பாதிக்குது. பல வருஷத்துக்கு வரி கட்டறக்கு பதிலா, இந்த ஆளுக்கு ஒரே ஒரு தடவை ஐஞ்சு கோடி குடுக்கறது பல மடங்கு லாபம்ன்றது அந்த நிறுவனங்களுக்கு நல்லா தெரியும்“
“தெரியாது தோழர்.“
“அமலாக்கத்துறை இந்த ஆளு கையில இருந்ததால, வெளிநாட்டு வங்கிகள்ல யாருக்கு எவ்வளவு பணம் இருக்குன்ற விபரம் இந்த ஆளுக்கு அத்துப்படி. இந்த ஆளை பகைச்சுக்கிட்டா பல ரகசியங்கள் வெளியில வரும்னு இந்த ஆளை ரொம்ப நாளைக்கு ஓரங்கட்டி வைக்க மாட்டாங்க. சிங்காரவேலு கொஞ்சம் பின்வாங்கியிருக்காரு. அவ்வளவுதான்.
இத்தனை நாள் இருந்தததை விட, இனிமேத்தான் நீ ரொம்ப ஜாக்ரதையா இருக்கணும்.“ என்றார்.
கல்யாண சுந்தரம் சொல்லிய தகவல்கள் புதிய கோணத்தில் சிங்காரவேலுவைப் பார்க்க வைத்தது. ஒட்டுமொத்த அரசியலும், அரசு நிர்வாகமும் இடியாப்பம் போல பின்னிப் பிணைந்திருப்பதைக் காண முடிந்தது. ஒரு வித பயம் ஏற்பட்டது. எப்படிச் சமாளிக்கப் போகிறோம் ? இது நம்மால்தான் என்று எப்படித் தெரியும் ? நாம் பாட்டுக்கு நமது வேலையைப் பார்த்துக் கொண்டிருப்போம். என்ன உயிரையா எடுத்துடுவாங்க ? என்று எனக்கு நானே தைரியம் சொல்லிக் கொண்டேன்.
சிங்காரவேலு ராஜினாமா செய்து மூன்று மாதங்கள் ஆகி விட்டன. ராஜினாமா செய்த ஒரே வாரத்தில் அவர் தமிழ்நாட்டின் கட்சித் தலைவராகவும், மேலும் இரண்டு மாநிலங்களுக்கு பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டார். கல்யாண சுந்தரம் சொல்லிய விஷயங்களின் தாக்கம் உறைத்தது.
நான் என் வாழ்வில் எந்த மாற்றமும் ஏற்படாதது போல என் பணியை செய்து கொண்டிருந்தேன். ‘சிங்காரவேலு ராஜினாமா செய்ததே பெரிய வெற்றி.. நம்மால் இதையாவது செய்ய முடிந்ததே.. ,இதுவும் நடக்காவிட்டால் சிங்காரவேலு இன்னும் யோக்கியன் வேஷமல்லவா போட்டுக் கொண்டிருப்பார். குறைந்தபட்சம் பொதுமக்கள் மத்தியில் அந்த ஆளுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டிருப்பதே பெரிய சாதனை அல்லவா ?’
அந்த மூன்று மாதங்களில் அடிக்கடி பாலகிருஷ்ணனுக்கு போன் செய்து விசாரித்துக் கொள்வேன். முதல் மாதத்தில் இருந்த பதற்றமும் ஜாக்கிரதை உணர்வும் கொஞ்ச கொஞ்சமாகக் குறைந்தது. வாரத்திற்கொரு முறை அவரிடம் பேசி நன்றாக இருக்கிறீர்களா என்று கேட்டுக் கொள்வேன்.. அவரில்லாவிட்டால் என்ன செய்திருக்க முடியும் ? அவர் மட்டும் தலையாட்டி பொம்மையாக இருந்திருந்தால்.. ?
அலுவலகத்துக்குச் சென்ற பிறகு அவரிடம் பேசுவதற்காக அவர் செல்பேசியை அழைத்தேன்.
ரிங் போனது. “ஹலோ..”
“ஹலோ சொல்லுங்க சார்… யார் பேசறீங்க ?“
பாலகிருஷ்ணனிற்குப் பதில் வேறு யாரோ பேசினார்கள்.
“சார் வணக்கம். நான் சென்னையிலேர்ந்து வெங்கட் பேசறேன். சார் இல்லையா நான் அவரோட ஃப்ரென்ட்.“
“சார் நான் அவரு மருமகன் பேசறேன். அவரு இன்னைக்கு காலையிலே இறந்துட்டாரு.“
தொடரும்.