‘அதிர்ச்சி… பயம்…. இரண்டும் சேர்ந்தார்ப்போல ஏற்பட்டன. அடுத்தது என்ன என்ற பயம் எழுந்தது. ஆபத்து இருக்கிறது என்பதை புரிந்திருந்தாலும் அது பாலகிருஷ்ணனின் மரணத்தில் சென்று முடியும் என்பதை நான் நிச்சயம் எதிர்ப்பார்க்கவில்லை. பாலகிருஷ்ணனின் மரணம் என்னை உலுக்கி விட்டது. எங்கோ ஒரு ஊரில் பூதலூரில் இருக்கும் ஒருவரை இவ்வளவு எளிதாக காலிபண்ண முடிகிறதென்றால், சென்னையின் மையப்பகுதியில் இருக்கும் நான் எவ்வளவு எளிதான இலக்கு.
சிங்காரவேலு மோசமானவன்தான். ஆனால் இப்படிக் கொலை செய்யும் அளவுக்கு இறங்குவான் என்பது சற்றே அதிர்ச்சியாகத்தான் இருந்தது. மனது பதைபதைத்தது. என்ன பாவம் செய்தார் அவர் ? எப்படித் தாங்கிக்கொள்வார்கள் அவர் குடும்பத்தினர் ? இது சிங்காரவேலு வேலைதான் என்பதை எப்படி நிரூபிப்பது ? யார் நம்புவார்கள் ? அடுத்து அவன் என்னென்ன செய்யத் திட்டமிட்டிருக்கிறானோ…
உதவி மேலாளரை அழைத்து, நான் தஞ்சாவூர் செல்வதால் விடுப்பில் செல்கிறேன் என்று தகவல் தெரிவித்து விட்டு, லீவ் லெட்டர் எழுதி, ஹெட் ஆபிசுக்கு அனுப்பி விட்டு கிளம்பினேன். அம்மாவிடம், நண்பர் ஊரில் இறந்து விட்டார் என்ற தகவலைச் சொல்லிவிட்டு போக வேண்டும் என்று அப்படியே சொன்னேன். அம்மா பல நாள் பாலகிருஷ்ணனோடு பழகியவள் போலவே சோகமானாள். “என்ன வயசுடா அவருக்கு ? எத்தனை பசங்க ? ஹார்ட் அட்டாக்கா ? ரொம்ப நாள் சீக்கா இருந்தாரா ? ” என்று பல்வேறு கேள்விகளைக் கேட்டு விட்டு, சிகரெட்ட நிறுத்துடா. நெறய்ய பேருக்கு சிகரெட்டாலதான் ஹார்ட் அட்டாக் வருதாம். உன் நல்லதுக்குத்தான்டா சொல்றேன்.. ” என்று அவள் பங்குக்கு வருத்தப்பட்டாள்.
”சரிம்மா” என்று பொத்தாம் பொதுவாக சொல்லிவிட்டு, கோயம்பேட்டுக்குக் சென்று தஞ்சாவூர் வண்டி பிடித்தேன். இரவு ஏழரை மணிக்கு தஞ்சாவூர் சென்றேன். அங்கிருந்து மற்றொரு பஸ் பிடித்து, பூதலூர் சென்றடைந்தேன்.
வாசலில் பந்தல் போடப்பட்டிருந்தது. உடல் வீட்டுக்குள்ளே வைக்கப்பட்டிருந்தது. தஞ்சாவூர் பேருந்து நிலையத்தில் வாங்கிய மாலையை அவர் உடலுக்கு போட்டு விட்டு வெளியே வந்தேன். நான் பார்த்தேபோது இருந்தது போலவேதான் இருந்தார். வாயோடு சேர்த்து தலையில் கட்டு கட்டியிருந்தது. தலைமாட்டில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அவர் உடலருகே பெண்கள் அமர்ந்து மவுனமாக அழுது கொண்டிருந்தனர். பாலகிருஷ்ணனின் மனைவி தலைமாட்டில் அமர்ந்து அழுது கொண்டிருந்தார். அவர் தோள் மேல் சாய்ந்து அழுது கொண்டிருந்தது அவர் மகள்களாகத்தான் இருக்க வேண்டும். தலை கலைந்து முகத்தில் கண்ணீர் ஓடிய தடத்தோடு இருந்தனர்.
‘இதில் இளைய மகள் யார் ? போனில் பேசி மாட்டியது யார்’ ச்சே. என்ன புத்தி எனக்கு ….. சாவு வீட்டில் வந்து இப்படி ஒரு எண்ணம் என்று என் மீதே எனக்கு எரிச்சல் வந்தது. யாராக இருந்தால் என்ன.. தெரிந்து என்ன செய்யப்போகிறேன் ?
வீட்டை விட்டு வெளியே வந்து பந்தலில் அமர்ந்தேன். மவுனமாக விதியை வெறித்துப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த ஒருவர், என்னைப் பார்த்ததும் நாற்காலியை அருகே போட்டுக் கொண்டு வந்து அமர்ந்தார்.
“நீங்க மாமாவோட வேலை பாக்கறீங்களா சார் ?” மருமகனாக இருக்க வேண்டும்.
“ஆமாம் சார்… நீங்க ?“ அவரோட பெரிய மருமகன் சார்.“
“எப்படி சார் இறந்தார் ?“
“ஆக்சிடென்டாத்தான் சார் இருக்கணும். காலையில வாக்கிங் போனவர் காலையில 9 மணி வரை திரும்பவேயில்லை. போனையும் எடுக்கலை. அத்தை பயந்து போயி என் வைஃப்புக்கு போன் பண்ணிருக்காங்க. அவளும் நானும் தொடர்ந்து மாமா போனுக்கு ட்ரை பண்ணிக்கிட்டே இருந்தோம். காலையில பத்தரை மணிக்கு யாரோ ஒருத்தர் எடுத்தார். யாரு சார் இது, இது எங்க மாமா போனாச்சேன்னு கேட்டப்போ, நான் போலீஸ் இன்ஸ்பெக்டர்னு சொன்னவர், எங்களை தஞ்சாவூர் ஜி.ஹெச்சுக்கு வரச்சொன்னார். என்ன ஆச்சு சார்னு கேட்டோம். ஆக்சிடென்ட்டுல மாமா இறந்துட்டதைச் சொன்னார். ஹிட் அன்ட் ரன்னுன்னு சொன்னார்.
அப்புறம் மார்ச்சுவரிக்கு போயி பாடியை வாங்கிக்கிட்டு வந்தோம்.”
“எந்த வண்டி இடிச்சுச்சுன்னு கண்டுபிடிச்சுட்டாங்களா சார் ?“ என்று எனக்கே நம்பிக்கை இல்லாமல்தான் கேட்டேன். அந்த ரோட்டுல நெறய்ய ஹிட் அன்ட் ரன் ஆக்சிடென்ட் நடக்கும்னு சொன்னார் இன்ஸ்பெக்டர். அதிகாலையில ஏகப்பட்ட ஸ்பீட்ல வருவாங்களாம் லாரிக்காரனுங்க. கண்டு பிடிக்கறது ரொம்ப கஷ்டம்னு சொல்லிட்டார்”.
“எங்க அடிபட்டிருந்துச்சு சார் ?”
“தலையில மட்டும்தான் சார் காயம். வேற எங்கயும் இல்ல. இன்ஸ்பெக்டர் என்ன சொன்னாருன்னா, லாரில ஏதாவது நீட்டிக்கிட்டு இருந்து தலையில அடிச்சுருக்கும்னு சொல்றார். லாரிகாரன் போன ஸ்பீடுல ஆளு அடிபட்டது கூட அவனுக்கு தெரிஞ்சுருக்காதுன்னு சொன்னார்.
அவர் விதி அவ்வளவுதான் சார். போய்ச் சேந்துட்டார். வாக்கிங் போகும்போதெல்லாம் ஆக்சிடென்ட் நடக்கப் போகுதுன்னு யாருக்குத் தெரியும் ? மேல இருக்கறவனோட விளையாட்டு அப்படி சார். அவனுக்கு ரொம்ப புடிச்சவங்கள சீக்கிரமா கூப்பிட்டுக்குவான்.”
அவர் பேசியது எரிச்சலை ஏற்படுத்தியது. இந்த ஆள் தற்கொலை செய்து கொண்டு ஏன் கடவுளுக்கு பிடித்தவனாக மாறக் கூடாது… பேசுகிறான் பார் வெட்டியான் நியாயம். அவரைச் சொல்லி என்ன பயன். கடவுள் என்ற ஒன்று இருப்பதால்தானே வசதியாக அவன் பேரில் எல்லாப் பழிகளையும் சுமத்தி விட்டு நம்பிக்கையோடு வாழ்கிறார்கள். அந்த நம்பிக்கை இல்லாவிட்டால் மனிதன் காலம் தள்ளுவது கடினமோ ? நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருப்பவனுக்கு துடுப்பு போல உயிர் வாழ கடவுள் பலருக்கு ஆதாரமாக இருக்கிறார். அப்படியேதான் இருந்து விட்டுப் போகட்டுமே.
பாலகிருஷ்ணன் சிங்காரவேலு விவகாரத்தை அவர் மனைவி உட்பட யாரிடமும் விவாதிக்கவில்லை என்பது தெரிந்தது. என்ன வேலையைச் செய்திருந்தார், அவருக்கு எவ்வளவு ஆபத்து இருந்தது என்பதன் சிறு அறிகுறி கூட அவர் வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரியவில்லை. தெரியாததும் ஒரு வகையில் நல்லதுதானே. விபத்தில் இறந்தார் என்பதால், தங்களுக்குத் தாங்களே அவர் விதி முடிந்து விட்டது என்று சமாதானப்படுத்திக் கொள்கிறார்கள். இது கொலை என்று அறிவதால் ஏற்படும் தேவையற்ற சஞ்சலம் அவர்களுக்கு எதற்கு ?
காலை 10 மணிக்கு உடலை எடுப்பதாகச் சொன்னார்கள். சற்று நேரம் அந்த நாற்காலியிலேயே அமர்ந்தபடி உறங்கினேன். காலையில் உடலை எடுப்பதற்கு முன்பாகவே கிளம்பினேன். இவர்கள் யாருக்கும் பாலகிருஷ்ணனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகத் தோன்றவில்லை. அவர்களுக்கு என்ன விபரம் தெரியும் ? பஸ்ஸில் சென்னை திரும்பும்போது பல்வேறு எண்ணங்கள். அதிர்ச்சி, குழப்பம், பயம் மாறி மாறி வந்து மனதைக் கலைத்த வண்ணம் இருந்தன.
சென்னை திரும்பியதும் நேராக கல்யாண சுந்தரத்தைச் சந்தித்தேன். விபரத்தைச் சொன்னதும்
“இது நிச்சயமா சிங்காரவேலு வேலைதாம்ப்பா. எனக்குச் சந்தேகமே இல்லை. அவன் கொலைக்கு அஞ்சமாட்டாம்ப்பா. போன வாரம் ஒரு க்ரூப் சிங்காரவேலு மேல விசாரணை நடத்தனும்னு கேஸ் போட்றதுக்காக லிங்கேஸ்வரனைப் பாத்து எவிடென்சையெல்லாம் வாங்கிட்டுப் போயிருக்காங்க. அதுல சிங்காரவேலு மேல விசாரணை நடத்தனும்னு ஆர்டர் ஆயிடுச்சுன்னா பாலகிருஷ்ணன் முக்கியமான விட்னெஸ் இல்லையா ?
அதைக் கேள்விப்பட்டதும் எனக்கு பாலகிருஷ்ணன் ஞாபகம் வரலை. உன் ஞாபகம்தான் வந்துச்சு. உன்னை ஜாக்ரதையா இருக்கணும்னு சொல்லனும்னு நெனைச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா பாலகிருஷ்ணனை காலி பண்ணிட்டான்.”
”எனக்கும் ஏதாவது பிரச்சினை வருமா தோழர் ?”
”நீ இதுல இன்வால்வ்டுன்னு யாருக்குத் தெரியும் ? லிங்கேஸ்வரன் சொல்ல மாட்டாரு.”
”தோழர் பேங்க் விஜிலென்ஸ்ல போயி டாக்குமென்ட்ஸை நான்தானே குடுத்துட்டு வந்தேன்.”
”சிங்காரவேலுவுக்கு இருக்கற தொடர்புகளுக்கு அந்த விஷயத்தைக் கண்டுபிடிக்கறது ஒன்னும் பெரிய கஷ்டம் இல்லைப்பா. சாதாரணமான கண்டுபிடிச்சுடுவான். அவன் அமைச்சர் பதவியை ராஜினாமா பண்ணாலும், பார்ட்டியில நல்ல போஸ்டிங்க்லதானே இருக்கான். இந்த விஷயத்தை பார்ட்டி கையில எடுத்தா இஷ்யூ இன்னும் பொலிட்டிக்கலா ஆகும். நான் சென்ட்ரல் கமிட்டியில பேசறேன். ஆனா, நம்ப பார்ட்டியிலயே பல பேர், திரை மறைவுல பல பேரங்கள் பண்றவங்க. பட் நான் ட்ரை பண்றேன்.”
”ஆமாம் தோழர். நானும் சிங்காரவேலு மேல விசாரணை நடக்கும்னு எதிர்ப்பார்த்தேன். ஆனா அந்த ஆளு ராஜினாமா பண்ணதுக்குப் பிறகு எந்த விசாரணையும் நடக்கலை. எதிர்க்கட்சிகளும் இதை அப்படியே கண்டுக்காம விட்டுட்டாங்க.”
”எதிர்க்கட்சிகள் மட்டும் யோக்கியமாப்பா ? அவங்களும் இதே மாதிரி பண்றவங்கதானே.. அவங்களுக்கு அப்பப்போ ஒரு இஷ்யூ வேணும். சிங்காரவேலு ராஜினாமா பண்ணதும் மறந்துட்டாங்க.”
”இனிமே நாம டிஃபென்சீவா இருக்க முடியாது வெங்கட். கொலை பண்றதுக்குக் கூட அவன் துணிஞ்ச பிறகு, எது வேணாலும் பண்ணுவான். சிங்காரவேலு மேல வழக்கு பதிவு பண்ணனும்னு நானே பிஐஎல் போட்றேன். திருப்பி அடிச்சாத்தான் அவன் அடங்குவான். லிங்கேஸ்வரனையும் தொடர்ந்து எழுதச் சொல்றேன். நம்பக் கிட்ட இருக்கற டாக்குமென்ட்ஸை வைச்சு கேஸ் போட்றேன். நீ இதுல இன்வால்வ் ஆகாத.”
”சரி தோழர். நான் ஏதாவது ஹெல்ப் பண்ணணுமா தோழர் ?”
”நான் போன் பண்ணி பேசிட்றேன். நீ நம்ப பார்ட்டி அட்வகேட் வைகறைச் செல்வன் ஆபீசுக்குப் போயி, டாக்குமென்ட்ஸை குடுத்துட்டு வந்துடு. அந்த ஆடியோ சிடியையும் குடுத்துடு. காலையில 11.30 மணிக்குப் போ. அதுக்குள்ள நான் அவர் கிட்ட பேசிட்றேன்.”
”சரி தோழர்”
அவர் சொன்னபடியே காலை பதினொன்றரை மணிக்கு வழக்கறிஞர் அலுவலகம் சென்றேன். புரசைவாக்கத்தில் இருந்தது அவர் அலுவலகம். பெரிய அலுவலகமாக இருந்தது. இடது புறமும், வலது புறமுமாக இரண்டு அலுவலகங்கள் இருந்தன. இடது புறம் இருந்த அலுவலகத்தில் ஜுனியர் வழக்கறிஞர்கள் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். வலது புறம் இருந்த அறையில் வைகறைச் செல்வன் என்று பெரிய போர்டு வைக்கப்பட்டிருந்தது.
இடது புறம் உள்ள அறையில் நுழைந்து ”சாரைப் பாக்கணும். பார்ட்டியிலேர்ந்து கல்யாணசுந்தரம் அனுப்பிச்சார்.”
”உக்காருங்க சார். சார்கிட்ட கேட்டுட்டு வந்துட்றேன்” என்று சொல்லிவிட்டு சென்றார். அவரும் ஜுனியராகத்தான் இருக்க வேண்டும். இரண்டு பெண்கள் கருப்பு வெள்ளையில் சுடிதார் போட்டுக் கொண்டு அமர்ந்து ஏதோ படித்துக் கொண்டிருந்தார்கள்.
இரண்டு பெண்களும் என் குரல் கேட்டதும் தலையை நிமிர்த்தி என்னை அலட்சியமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, மீண்டும் புத்தகத்தில் ஆழ்ந்தனர். சுருட்டையான கேசம், முகத்துக்கேற்றார்ப் போன்ற கண்ணாடி, காதில் உற்றுப்பார்த்தால் மட்டுமே தெரியும்படியான காதணி. மெலிதாக ஒரு செயின். மாநிறத்துக்கும் கம்மியான நிறம். கருப்பு என்றே சொல்லலாம். இன்னொருத்தி, சிகப்பாக வெளிர் நிறத்தில் இருந்தாள். படிக்கும்போது கண்களை அடிக்கடி சுருக்கிக் கொண்டாள்.
இருவரையும் பார்த்தபடி அமர்ந்திருந்தாலும் இருவரும் என்னைச் சட்டை கூட செய்யாதது வருத்தமாக இருந்தது. நான் வந்த வேலை முக்கியமான வேலை. அதுவும், கல்யாணசுந்தரம் எனது உயிருக்கே ஆபத்து நேரலாம் என்று கூறியுள்ளார். ஆனால், இரண்டு இளம் பெண்கள் என்னை இரண்டாவது முறை பார்க்கவில்லையே என்ற வருத்தம் வந்தது வியப்பாக இருந்தது.
உள்ளே சென்ற அந்த ஜுனியர் வெளியே வந்து, வசந்தி மேடம் உங்களை சார் கூப்பிட்றார் என்று பொத்தாம் பொதுவாக சொன்னார்.
இதில் யார் வசந்தியாக இருக்கும் என்று ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தேன். கண்ணாடி அணிந்திருந்தவள் எழுந்து உள்ளே சென்றாள்.
சற்று நேரத்தில் வெளியே வந்தவள், ”சார் உங்களை கூப்பிட்றார்” என்று சொல்லிவிட்டு, மீண்டும் அந்தப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு அமர்ந்தாள்.
வைகறைச் செல்வனுக்கு அறுபது வயது இருக்கும்.
”உக்காருங்க” என்றார்.
”தேங்க்ஸ் சார்” என்று சொல்லிவிட்டு அமர்ந்தேன்.
”பேப்பர்ஸ் கொண்டு வந்துருக்கீங்களா ?”
ஆதாரங்களை எடுத்து அவரிடம் கொடுத்தேன். அவற்றை வாங்கி ஒவ்வொன்றாகப் பார்த்தவர், ”நீங்க கௌம்புங்க. ஆபீஸ்ல உங்க நம்பர் குடுத்துட்டுப் போங்க. தேவைப்பட்டா நான் கூப்புட்றேன்” என்று சொல்லி விட்டு தலையைக் குனிந்து கொண்டு அந்த ஆவணங்களை பார்வையிடத் தொடங்கினார்.
வெளியே வந்து பார்த்தபோது வசந்தி இல்லை. ‘எங்கே போயிருப்பாள்.’ என்று யோசித்துக் கொண்டே என் மொபைல் எண்ணைக் கொடுத்து விட்டு கிளம்பினேன்.
அந்த வசந்தியிடம் ஒரு வசீகரம் இருந்தது. பார்த்தவுடன் திமிர் பிடித்தவள் என்று தோன்ற வைக்கும் தன்மை கொண்டிருந்தது அவள் முகம். அந்த திமிரே அவளுக்கு அழகு சேர்ப்பது போலவும் இருந்தது. உலகில் என்னை விடப் பெரிய ஆள் யாரும் இல்லை என்றும் எனக்கு எதைப்பற்றியும் கவலையில்லை என்ற அலட்சியத்தை கண் பார்வையிலேயே வெளிப்படுத்தினாள்.
‘அதிகம் படித்திருப்பாளோ ? அதனால் இந்தத் திமிர் வந்திருக்குமோ ? நம்மைச் சட்டைகூட செய்யவில்லையே. நாம் பார்ப்பதற்கு அழகாக இல்லையோ ? நான் பார்ப்பதற்கு அவ்வளவு மோசமும் இல்லையே…. திரும்பித் திரும்பி பார்க்க வைக்காவிட்டாலும், முகத்தைச் சுளிக்கவைக்கும் அளவுக்கு நம் தோற்றம் இல்லையே. அவள் வேறு யாரையாவது காதலித்துக் கொண்டிருப்பாளோ…’
‘என்ன எண்ணம் இது. எவ்வளவு பெரிய விஷயத்தை செய்து கொண்டிருக்கிறோம். இதில் ரொமான்ஸ் வேறு…’ ச்சை என்று என்னை நானே திட்டிக்கொண்டு, அடுத்த வேலையைப் பார்க்கலாம் என்று தீர்மானித்துக் கொண்டேன். என்னதான் ஒரு ஒரு மனிதன் இருந்தாலும் பெண் ஏற்படுத்தும் ஈர்ப்பு நீரூற்று போலல்லவா கட்டுப்படுத்த முடியாமல் வருகிறது ?
வைகறைச் செல்வன் அலுவலகத்தில் ஆவணங்களை கொடுத்து விட்டு வந்து ஒரு வாரம் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை. என்னையும் அவர்கள் அழைக்கவில்லை. வழக்கு தயார் செய்வதற்கு அதிக நேரம் பிடிக்கும் போலிருக்கிறது என்று எண்ணிக்கொண்டு என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன்.
இரவு 12 மணி இருக்கும். வீட்டு அழைப்பு மணியை அழுத்தினார்கள் யாரோ. லுங்கியோடு எழுந்து கதவைத் திறந்தேன். சபாரி அணிந்து இரண்டுபேரும், சாதாரண பேன்ட் சட்டையோடு ஐந்தாறு பேரும் இருந்தார்கள். வீடு மாறி வந்திருப்பார்கள்.
”யார் சார் வேணும் ?”
”பேங்க் மேனேஜர் மிஸ்டர் கோட்டைச்சாமி வெங்கட் ? ” வந்தவர்கள் காவல்துறையினர் என்பது அவர்கள் தோற்றத்தில் வெளிப்படையாகத் தெரிந்தது.
”நான்தான் சார். என்ன விஷயம்”
”உங்களை அரெஸ்ட் பண்றோம்.”
தொடரும்.
Hahaha
‘என்ன எண்ணம் இது. எவ்வளவு பெரிய விஷயத்தை செய்து கொண்டிருக்கிறோம். இதில் ரொமான்ஸ் வேறு…
– இந்த ரண காலத்திலும் ஒரு கிளு கிளுப்பு கேக்குது moment
finally செம twist
Emppa savkku oore periyar vivagarathula pathi eriuthu.. Nee battukku kadha ezhuthikittu irukka?
சூடு பிடிக்குது கதை…(நிஜம் கூட)